Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாராளுமன்ற உறுப்பினராகியுள்ள பிள்ளையான் பிணையில் வெளிவருவது சாத்தியமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாராளுமன்ற உறுப்பினராகியுள்ள பிள்ளையான் பிணையில் வெளிவருவது சாத்தியமா?

BharatiSeptember 12, 2020
  • இரா.துரைரத்தினம்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராசசிங்கம் கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருக்கும் பிள்ளையான் என அழைக்கப்படும் ரி.எம்.வி.பி கட்சி தலைவர் எஸ். சந்திரகாந்தன் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டதும் அவர் பிணையில் விடுதலை செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்பு அவரின் கட்சி சார்ந்தவர்களிடம் காணப்பட்டது.

spacer.png

 

ஆனால் பயங்கரவாத தடைச்சட்டம் பற்றி அறிந்தவர்கள் அந்த நம்பிக்கையை கொண்டிருக்க மாட்டார்கள்.

 

ஏனெனில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்களுக்கு பிணை வழங்க முடியாது என அச்சட்டத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தகவல் கொடுக்க தவறினார் என்று குற்றம் சாட்டப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த மலையக மக்கள் முன்னணி தலைவர் சந்திரசேகரன் 1994ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் வெற்றி பெற்ற போது அவர் விடுதலை செய்யப்பட்டதை இங்கு சுட்டிக்காட்டி அப்படியானால் பிள்ளையான் ஏன் விடுதலை செய்யப்படவில்லை என யாரும் கேள்வி எழுப்பலாம்.

 

தேர்தல் பிரசார காலத்திலும், தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட பின்னரும் பிள்ளையான் விடுதலை செய்யப்படுவார் அல்லது பிணையில் விடுவிக்கப்படுவார் என்ற நம்பிக்கை மட்டக்களப்பு மக்கள் பலரிடம் காணப்பட்டது.

 

1994ஆம் ஆண்டு 112ஆசனங்களை பெற்ற சந்திரிக்கா பண்டாரநாயக்க தலைமையிலான பொதுஜன ஐக்கிய முன்னணி ஆட்சி அமைப்பதற்கு ஒரு ஆசனம் தேவைப்பட்ட நிலையில் மலையக மக்கள் முன்னணி தலைவர் சந்திரசேகரன் அந்த அரசுக்கான ஆதரவை வழங்கியிருந்தார்.

விடுதலைப்புலிகளின் தற்கொலைதாரி என சந்தேகிக்கப்பட்ட வரதன் என்பவரின் நடமாட்டம் தெரிந்தும் தகவல் கொடுக்க தவறினார் என பயங்கரவாத தடைச்சட்டத்தின் 5ஆம் பிரிவின் கீழ் சந்திரசேகரன் கைது செய்யப்பட்டு பாதுகாப்பு செயலாளரின் தடுப்பு காவல் உத்தரவில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். சிறையில் இருந்தவாறே தேர்தலில் போட்டியிட்டு சந்திரசேகரன் வெற்றி பெற்றார்.

 

சந்திரசேகரன் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தாரே ஒழிய அவர் மீது நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்படவில்லை. நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்படாத நிலையில் அவர் மீதான குற்றத்தை விலக்கி சட்டமா அதிபர் திணைக்களம் அவரை விடுதலை செய்தது.

ஆனால் ஜோசப் பரராசசிங்கம் கொலை வழக்கில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கைது செய்யப்பட்ட பிள்ளையான் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டு மாவட்ட நீதிமன்ற விசாரணை நிறைவடைந்து மேல் நீதிமன்றில் வழக்கு நடைபெற்று வருகிறது.

 

கடந்த பொதுத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பிள்ளையான் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட நிலையில் நாடாளுமன்றத்தின் முதல் அமர்வில் நீதிமன்ற அனுமதியுடன் கலந்து கொண்ட அவர் அங்கு உரையாற்றுகையில் கடந்த நல்லாட்சி அரசாங்கத்திற்கு ஆதரவளித்த தமிழ் பிரதிநிதிகளின் கதைகளுக்காக என்னை சிறைப்படுத்தி உள்ளார்கள். கடந்த ஐந்து வருடங்களாக நான் சிறையில் உள்ளேன். என்னை விடுதலை செய்ய சபாநாயகர் உதவ வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

தமது தலைவர் சிறையில் இருப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தான் காரணம் என அவரின் கட்சியை சார்ந்தவர்கள் தேர்தல் காலத்தில் குற்றம் சாட்டியிருந்தனர்.

 

அரசியல் பழிவாங்கலாக தமது தலைவர் பிள்ளையான் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கிறார் என்ற ரி.எம்.வி.பி கட்சியினரின் குற்றச்சாட்டில் நியாயம் இருக்கிறதா என பார்ப்பதற்கு முதல் இக்கொலை பற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும் என உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி பார்ப்பது பொருத்தமாக இருக்கும்.

ஜோசப் பரராசசிங்கம் அவர்களின் கொலை வழக்கு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் விசாரணை செய்யப்படுவதற்கான காரணம் என்ன என்பது பற்றியும் பார்க்க வேண்டும்.

பிள்ளையான் கைது செய்யப்பட்டு 5 ஆண்டுகளாக ஏன் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார் என்ற ஆதங்கம் அவரின் கட்சியை சார்ந்தவர்களிடம் உண்டு. சாதாரண சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தால் குறிப்பிட்ட காலத்தில் பிணையில் விடுவிக்கப்பட்டிருப்பார்.

 

ஆனால் ஜோசப் பரராசசிங்கம் அவர்களின் கொலை வழக்கு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டிருப்பதால் பிணை வழங்குவதற்கு சட்டத்தில் இடமில்லை.

ஜோசப் பரராசசிங்கம் அவர்களின் வழக்கு சாதாரண சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படாது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டதேன் என்ற கேள்வி சிலருக்கு எழலாம்.

அதற்கு விடை காணவேண்டும் எனெனில் ஜோசப் பரராசசிங்கம் அவர்களின் கொலை நடந்த சூழல், அதன் பின் நடத்தப்பட்ட விசாரணைக்குழுக்களின் பரிந்துரைகளை பார்ப்பது அவசியமாகும்.

ஜோசப் பரராசசிங்கம் அவர்கள் 2005ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் திகதி மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் நற்கருணை ஆராதனையின் போது சுட்டுக்கொல்லப்பட்டார். அச்சம்பவத்தில் அவரின் மனைவி சுகுணம் ஜோசப், உட்பட அருட்சகோதரிகள் பொதுமக்கள் என எட்டுப்பேர் படுகாயமடைந்தனர்.

இக்கொலை சம்பவம் தொடர்பாக 10வருடங்களின் பின்னர் 2015ஆம் ஆண்டு ஒக்டோபர் 10ஆம் திகதி ரி.எம்.வி.பி கட்சியை சேர்ந்த முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பிரதீப் மாஸ்ரர் என்று அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஷ்ணானந்தராசா, கஜன் மாமா என அழைக்கப்படும் ரங்கநாயகம் கனகநாயகம் ஆகியோர் பயங்கரவாத தடுப்பு குற்றப்புலானய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டனர். அடுத்த நாள் 11ஆம் திகதி பிள்ளையான் என்று அழைக்கப்படும் எஸ்.சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டார்.

ஜோசப் பரராசசிங்கம் கொலை, திருகோணமலை ஐந்து மாணவர்களின் கொலை, மூதூரில் 17 தொண்டுநிறுவன பணியாளர்கள் படுகொலை உட்பட 2005ஆம் ஆண்டுக்கு பின்னர் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை நடத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் உட்பட சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் கோரிக்கை விடுத்து வந்தன.

இதனை தொடர்ந்து ஜனாதிபதி மகிந்த ராசபக்ச உடலகம தலைமையிலான விசாரணை ஆணைக்குழு ஒன்றை 2006ஆம் ஆண்டு இறுதிப்பகுதியில் நியமித்தார்.

2005 மற்றும் 2006ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற 16 சம்பவங்கள் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு இந்த ஆணைக்குழுவுக்கு பணிக்கப்பட்டிருந்தது.

அந்த ஆணைக்குழு விசாரணை நடத்துவதற்காக அடையாளப்படுத்தப்பட்ட 16 படுகொலை சம்பவங்கள் இவைதான்.

1. முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லட்சுமன் கதிர்காமர் படுகொலை.

2. மூதூரில் அக்சன் பாம் பணியாளர்கள் 17பேரின் படுகொலை.

3. மூதூர் வெலிக்கந்தைப்பகுதியில் 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் முஸ்லீம்கள் படுகொலை செய்யப்பட்டமை.

4. ஜோசப் பரராசசிங்கம் படுகொலை ( 25 டிசம்பர் 2005 )

5. திருகோணமலை நகரில் ஐந்து மாணவர்கள் படுகொலை ( 02.ஜனவரி 2006 )

6. இலங்கை சமாதான செயலகத்தின் பிரதிபணிப்பாளர் நாயகம் கேதீஸ் லோகநாதன் படுகொலை ( 12 ஓகஸ்ட் 2006 )

7. செஞ்சோலை 51 மாணவிகள் படுகொலை ( ஆகஸ்ட் 2006 )

8. அல்லைப்பிட்டி தேவாலய பங்குத்தந்தை நிஹால் ஜிம் பிரவுண் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் ( 28 ஒகஸ்ட் 2006 )

9. பேசாலை கடற்கரையில் 5 மீனவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ( 17 யூன் 2006 )

10. ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவில் 17 பொதுமக்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் ( ( 13 மே 2006 )

11. பொத்துவில் பொலிஸ் பிரிவில் 10 முஸ்லீம்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் ( 17 செப்டம்பர் 2006 )

12. கெப்பிட்டிகொலவ பகுதியில் 68 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் ( 15 யூன் 2006 )

13. அவிசாவளையில் தலையில்லாத 5 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் ( 29 ஏப்ரல் 2006 )

14. வெலிக்கந்தையில் 13 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ( 29 மே 2005 )

15. சிகிரியா பகுதியில் 98 படையினர் கொல்லப்பட்ட சம்பவம் ( 16 ஒக்டோபர் 2006 )

16. நாடாளுமன்ற உறுப்பினர் நடராசா ரவிராஜ் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ( 10 நவம்பர் 2006 )

விசாரணை நடத்திய உடலகம விசாரணை ஆணைக்குழு இந்த 16 சம்பவங்களில் ஜோசப் பரராசசிங்கம், திருகோணமலை 5 மாணவர்கள் படுகொலை ரவிராஜ் படுகொலை உட்பட 7 படுகொலை சம்பவங்களை மட்டுமே விசாரணை நடத்தியிருந்தது. ஏனைய சம்பவங்கள் பற்றி சாட்சியமளிக்க யாரும் முன்வரவில்லை என்றும் அச்சம்பவங்கள் பற்றிய விபரங்களை சேகரிக்க முடியவில்லை என்றும் உடலகம ஆணைக்குழு அறிக்கையில் தெரிவித்திருந்தது.

உடலகம விசாரணை ஆணைக்குழு மே 2009ல் இறுதி அறிக்கையை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்திருந்தது. இந்த இறுதி அறிக்கையில் ஜோசப் பரராசசிங்கம் அவர்களின் படுகொலை சம்பவம் பயங்கரவாத செயல் என குறிப்பிட்டிருந்தது. தேவாலயம் ஒன்றில் பொதுமக்கள் கூடியிருந்த வேளையில் நடத்தப்பட்ட தாக்குதல் பயங்கரவாத செயல் என்றும் அருட்சகோதரி உட்பட 8 பொதுமக்கள் இதில் காயமடைந்திருந்தனர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதன் பின்னர் யுத்தம் முடிவடைந்த பின்னர் கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழு ஒன்றை ஜனாதிபதி 2010ஆம் ஆண்டு நியமித்தார்.

2002ஆம் ஆண்டு தொடக்கம் 2009 மே வரையான காலப்பகுதியில் நடந்த சம்பவங்கள் பற்றி இந்த ஆணைக்குழு விசாரணைகளை நடத்தியது. இந்த ஆணைக்குழு 2011 நவம்பர் 15ஆம் திகதி தனது இறுதி அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளித்தது. இந்த அறிக்கையிலும் தேவாலயம் ஒன்றில் வைத்து நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராசசிங்கம் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பற்றி நீதி விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் வொஷிங்டனுக்கு அனுப்பி வைத்த தகவலில் ஜோசப் பரராசசிங்கம் அவர்களை கருணா பிள்ளையான் குழுவே படுகொலை செய்ததாக தெரிவித்திருந்தது. இதனை விக்கிலீங்ஸ் வெளியிட்டிருந்தது. இதனை கொழும்பு ரெலிகிறாப் இணையத்தளமும் 2013 செப்டம்பர் 13ஆம் திகதி பிரசுரித்திருந்தது.

2014 மார்ச் மாதம் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான 25ஃ1 தீர்மானத்திற்கு அமைவாக இலங்கையில் நடந்த படுகொலைகள் மனித உரிமை மீறல்கள் ஆட்கடத்தல்கள் தொடர்பாக விசாரிப்பதற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை அவர்கள் மூவர் அடங்கிய நிபுணர் குழு ஒன்றை நியமித்தார்.

முன்னாள் பின்லாந்து ஜனாதிபதி மார்ட்டி அஷ்டிசாரி, நியுசிலாந்து முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி டாம் சில்வியா, முன்னாள் பாகிஸ்தான் மனித உரிமை ஆணைக்குழு தலைவர் அஷ்மா யஹான்கிர் ஆகியோர் அடங்கிய குழு விசாரணை நடத்தி 260 பக்கங்களை கொண்ட அறிக்கையை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரிடம் கையளித்திருந்தது. இந்த அறிக்கையை 2015 செப்டம்பர் 16ஆம் திகதி ஜெனிவா மனித உரிமை பேரவையில் பத்திரிகையாளர் முன்னிலையில் ஆணையாளர் வெளியிட்டு வைத்தார். இந்த அறிக்கையிலும் ஜோசப் பரராசசிங்கம் படுகொலை மற்றும் ரி.எம்.வி.பி என அழைக்கப்படும் பிள்ளையான் குழு மேற்கொண்ட படுகொலைகள் பற்றி விபரிக்கப்பட்டுள்ளது.

2015 செப்டம்பர் மாதத்தில் நடந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 30ஆவது கூட்டத்தொடரில் ஜோசப் பரராசசிங்கம் படுகொலை, திருகோணமலை 5 மாணவர்கள் படுகொலை உட்பட 5 படுகொலை சம்பவங்கள் பற்றி நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என அமெரிக்கா தலைமையிலான நாடுகள் வலியுறுத்தியிருந்தன. இதற்கு பதிலளித்த இலங்கை வெளிவிவகார அமைச்சர் இந்த 5 சம்பங்கள் பற்றி விசாரணை முன்னெடுக்கப்படும் என்று உறுதியளித்திருந்தார்.

ஜோசப் பரராசசிங்கம் அவர்களின் கொலை தொடர்பாக விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி ஆணைக்குழுக்கள் பரிந்துரைத்தது மட்டுமன்றி ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையம், உட்பட சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும், சர்வதேச இராஜதந்திரிகளும் தொடர்ச்சியாக சிறிலங்கா அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து வந்த நிலையிலேயே 10 வருடங்கள் கடந்த நிலையில் 2015ஆம் ஆண்டு காலப்பகுதியில் பயங்கரவாத தடுப்பு குற்றப்புலானய்வு பிரிவினர் விசாரணைகளை துரிதப்படுத்தி பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தனர்.

கிரிமினல் குற்ற வழக்கு ஒன்று சாதாரண சட்டத்தின் கீழ் நீதிமன்றில் விசாரிக்கப்படும் போது சம்பவத்தை நிரூபிக்க கூடிய சாட்சிகள், மற்றும் கிரிமினல் குற்றம் நடந்ததற்கான சான்றுப்பொருட்கள் என்பன நீதிமன்றில் சமர்ப்பிக்க வேண்டும்.

ஆனால் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சந்தேக நபர்கள் உதவி பொலிஸ் அத்தியட்கருக்கு மேற்பட்ட தரத்தில் உள்ளவருக்கு வழங்கும் குற்ற ஒப்புதல் வாக்கு மூலமே வழக்கின் பிரதான சான்று பொருள். குற்ற ஒப்புதல் வாக்கு மூலத்தை பெற்ற அதிகாரியே பிரதான சாட்சி. ஜோசப் பரராசசிங்கம் கொலை வழக்கில் மரணவிசாரணை நடத்திய நீதிபதியும் ஒரு சாட்சியாகும். சந்தேக நபர்களின் குற்ற ஒப்புதல் வாக்கு மூலம் இவர் முன்னிலையில் பதியப்பட்டது. கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்கள் மற்றும் தடயப்பொருட்கள் எதனையும் நீதிமன்றில் சமர்ப்பிக்க வேண்டியதில்லை. கண்கண்ட சாட்சிகள் கூட அவசியமில்லை. சந்தேக நபர்களின் குற்ற ஒப்புதல் வாக்கு மூலமே போதுமானது. ஜோசப் பரராசசிங்கம் கொலை வழக்கில் சந்தேக நபர் ஒருவர் சாட்சியாக மாறியிருக்கிறார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மேல் நீதிமன்றில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டிருக்கும் ஒருவருக்கு பிணை வழங்குவதற்கு சட்டத்தில் இடமில்லை என பயங்கரவாத தடைச்சட்ட வழக்குகளில் ஆஜராகி வரும் சட்டத்தரணிகள் தெரிவிக்கின்றனர்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பிள்ளையான் பிணையில் விடுவிக்கப்பட்டால் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கும் அத்தனை கைதிகளுக்கும் பிணை வழங்க வேண்டிய நிலை ஏற்படும்.

நீதிமன்ற தீர்ப்பு ஒன்றை அல்லது நீதிமன்ற உத்தரவை முன் உதாரணமாக ஏனைய வழக்குகளிலும் சமர்ப்பிக்க முடியும். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் ஒருவருக்கு பிணை வழங்கப்பட்டால் 10 அல்லது 20 வருடங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் விளக்கமறியல் கைதிகளையும் பிணையில் விடுவிக்குமாறு அத்தீர்ப்பை முன் உதாரணமாக கொண்டு நீதிமன்றில் பிணை மனுவை முன் வைக்க முடியும்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் தமிழ் கைதிகள் அனைவருக்கும் பிணை வழங்க வேண்டிய நெருக்கடிக்குள் சிக்கி கொள்ள அரசாங்கம் ஒரு போதும் விரும்பாது.

 

 

http://thinakkural.lk/article/67852

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.