Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குறையொன்றுமில்லை - சுப. சோமசுந்தரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

                                                குறையொன்றுமில்லை

                                                                                                    -சுப. சோமசுந்தரம்                                 

 

சமூக  வலைதளத்தில்  முன்பு  ஒரு  கட்டுரை  எழுதியிருந்தேன். அதன் தலைப்பு  ‘ஓடிப்போவதெல்லாம்  உடன் போக்கல்ல’. அதில்  நான்  பதிவு  செய்த  கருத்து: ‘சிறகு முளைக்கும் முன்னர்  காதல்  வயப்படுவது  இயற்கையான ஒன்றுதான். ஆனால்  அப்போதே  காதலுக்காகப்  பெற்றோரையும்  உற்றோரையும்  பிரிந்து  சென்று  அல்லல்பட்டு  மீண்டும்  அப்பெற்றோரிடம்  தஞ்சம்  அடைவதோ  அல்லது  வேறு  முடிவெடுப்பதோ  காதலின்  புனிதத்திற்குக்  களங்கம்  கற்பிப்பது. தன்னையும்  தன்  இணையையும்  காக்கும்  திறன்  பெற்ற  பின்னர், காதலை  ஏற்றுக்  கொள்ளாத  பெற்றோரை  மீறிச்  செல்வது  ஏற்புடைத்து. அப்படித்தான்  சங்க  இலக்கியங்களில்  ‘உடன்போக்கு’ சுட்டப்  பெறுகிறது. தலைவியை  அழைத்துச்  செல்லும்  தலைவன்  கொடிய  விலங்குகளிடமிருந்து  அவளைக்  காக்கும்  வல்லமை  கொண்டவனாகக்  குறிஞ்சித்  திணையில்  சித்தரிக்கப்படுகிறான்; உழவு  முதலிய  அந்தந்த  நிலம்  சார்ந்த  தொழில்  மேற்கொண்டு  பொருள்  வலிமை  பெற்றும்  திகழ்கிறான்.’

            சரி.  இப்போது  கையிலெடுத்த தலைப்புக்கு  வருவோம்.  மேற்கூறிய  கட்டுரையை  வாசித்த  தோழர்  ஒருவர், “நீங்கள்  காதலுக்கு  எதிரியல்ல  என்று  எவ்வளவுதான் உரக்கக்  கூறினாலும், ‘ஓடிப்போதல்’  என்ற  சொல்லாடலே  காதலைக்  கொச்சைப்படுத்துவதாய்  உள்ளது”  என்று  விமர்சித்தார். மேலும், போக்குவரத்து  சாதனங்கள்  பெரிய  அளவில்  தோன்றாத  காலத்தில்  தோன்றிய  சொல்  ‘ஓடிப்போதல்’  என்றெல்லாம்  வாதிட்டார். எத்தனையோ  சொற்களுக்குப்  பெயர்க்கரணமும்  வேர்ச்சொற்களும்  பழங்காலத்து  வழக்கம்  சார்ந்தே  அமையும். அதற்காகப்  பெயர்  மாற்றம்  தேவையில்லை  என்று  அவர்  இரண்டாவதாக  வைத்த  வாதத்தைப்  புறந்தள்ளினேன். இனி  ‘ஓடிப்போதல்’ என்ற  சொல் காதலைக்  கொச்சைப் படுத்துகிறது  என்ற  வாதத்திற்கு  வருவோம். இது  சமூகம்  உருவாக்கிய  உளவியல்  சார்ந்த  விஷயம்  என்பது  என்  கருத்து.  ஓடிப்போய்- அதாவது, பெற்றோரையும்  உற்றோரையும்  எதிர்த்து- திருமணம்  செய்வது  தரக்குறைவானது  என்ற  உளவியலை  பிற்போக்குத்தனமான  சமூகம்  உருவாகியது. இது  தாழ்வானது  என்ற  கருத்து  ‘ஓடிப் போகிறவர்களின்’  ஆழ்மனதிலும்  அவர்கள்  அறியாமலே  பதிந்தது. இத்தாழ்வு  மனப்பான்மை, உள்ளத்திலிருந்து  ‘ஓடிப் போதல்’ என்ற  சொல்லுக்குத்  தாவியது. சொல்லை  மாற்றினால்  மட்டும்  அத்திருமணத்தின்  மீதுள்ள  குறையுணர்ச்சியோ  வெறுப்போ  கட்டுப்பெட்டிகளுக்கு  மாறிவிடப் போகிறதா, என்ன?  “தினமும்  காலையில்  ஐந்து  கிலோமீட்டர்  ஓடுகிறேன்”  என்று  நெஞ்சு  நிமிர்த்திச்  சொல்வது  போல  “நானும்  இவளும்  இருபத்தைந்து  வருடங்களுக்கு  முன்பே  ஓடிப்போய்  திருமணம்  செய்துகொண்டோம்”  என்று  பெருமிதத்தோடு  சொல்லிப்  பாருங்கள்.  அப்போது  ‘ஓடிப் போதலின்’ உயர்வு  தெரியும். அதை  விடுத்துச்  செயற்கையாக  ஒரு  புதிய  சொல்லை  உருவாக்கி  ஏற்கெனவே  உள்ள  சொல்லின்  கவித்துவத்தை  ஏன்  இழக்கிறீர்கள்?

            இனி  சிந்தனை  சங்கிலித்  தொடராகிறது.

சுமார்  முப்பது  வருடத்திற்கு  முந்தைய  நிகழ்வு. அலுவலக  உதவியாளர்  ஒருவரிடம்  ஒரு  குறிப்பிட்ட  துறையில்  பியூன்  யாரென்று  கேட்டேன். அக்கேள்வி  அவர்  மனதைக்  காயப்படுத்தியதோ  என்னவோ, அவர் பதில்  சொன்னார், ”நாங்களெல்லாம்  O.A. (Office Assistant)  சார். Peon என்று  இப்போது  யாரும்  கிடையாது.” அரசாங்கத்தில்  இப்பெயர்  மாற்றம்  நிகழ்ந்திருப்பது  குறித்து  நான்  அறியாததற்கு  முதலில்  வெட்கப்பட்டேன். வகிக்கும்  பொறுப்பின்/பதவியின்  பெயர்  என்னவோ, அவ்வாறே  குறிப்பிடுவது  என்  கடமை. மேலும்  அவர்  எப்படி  விரும்புகிறாரோ  அப்படி  நாம்  குறிப்பிடுவதே  விவேகம். ஆனால்  இது  குறித்த  சிந்தனைப்  பகிர்வில்  தவறேதும்  இல்லை. இப்பெயர்  மாற்றத்திற்கான  காரணம்  அல்லது  பழைய  பெயர்  குறிப்பிட்டதை  அந்த  ஊழியர்  விரும்பாததற்குக்  காரணம்  பற்றி  யோசித்துப்  பார்க்கிறேன். மீண்டும்  இச்சமூகமே  காரணம்  என்று  தோன்றுகிறது. ஒரு  பியூனின்  மகன்  கலெக்டர்  ஆகிவிட்டான்  என்று  செய்தித்தாளில்  எழுதிக்  கொண்டாடும்  சமூகம், “அப்போ  ஒரு  பியூனின்  சேவை  கொண்டாடப்பட  வேண்டாமா?” என்றெல்லாம்  சிந்திப்பதில்லை. “அவர்  படித்த  படிப்பு  கலெக்டர்  பணிக்கானது; அப்பணியை  விரும்பி  ஏற்றார்”  என்று  சமநிலை  நோக்கோடு  சமூகம்  கடந்து  செல்வதில்லை. “எனது  பல்கலைக்கழகத்தின்  தலைவரானாலும்  துப்புரவுத்  தொழிலாளியானலும்  எல்லோரிடமும்  ஒரே (மரியாதையான) தொனியில்  தான் பேசுவேன்”  என்ற  ஆல்பர்ட்  ஐன்ஸ்டீனின்  முதிர்ச்சியை  இச்சமூகம்  பெறவேண்டும். நேர்மையான  எத்தொழில்  ஆனாலும்  அதன்மீது  சமூகத்திற்கு  மரியாதை  ஏற்பட  வேண்டும்; அத்தொழில்  முனைவோருக்கும்  ஏற்பட  வேண்டும். அதுவரை  பெயர்  மாற்றம்  எந்த  நல்ல  விளைவையும்  ஏற்படுத்தப் போவதில்லை. “அவன்  வெறும்  பியூன்தான்யா”  என்பதற்குப்  பதிலாக  “அவன்  வெறும்  O.A. தான்யா”  என்பது  தொடர்கதையாகும். இன்னும்  சிறிது  காலம்  கழித்து  O.A. என்பதற்குப்  பதிலாக  வேறு  புதுப்பெயரைத்  தேடிய  பிறகும்  அக்கதை  முற்றுப்பெறாது.

            சிந்தனைச்  சங்கிலி  தொடர்கிறது.

            சாதி  என்ற  ஒழிக்கப்பட  வேண்டிய  இழிவு  தொடரும்  போது  சாதிப்  பெயர்களும்  தொடரத்தானே  செய்யும்!  ‘உயர்சாதிகள்’  என்னும்  நாசக்காரக்  கும்பல்களால்  விலக்கப்பட்ட  அல்லது  படிம நிலைகளில்  குறைக்கப்பட்ட  சாதியினர்,  தாழ்வு  மனப்பான்மையினாலோ, நியாயமான  கோபத்தினாலோ  தம்  சாதிப்  பெயரை  மாற்றிக்  கொள்வது  இங்கு  நினைவு  கூரத்தக்கது. சூழ்நிலையால்  எனக்கு  அதிக  நண்பர்கள்  வாய்த்த  கோனார்  சமூகத்தை  மேற்கோளுக்கு  எடுக்க  நினைக்கிறேன். பொதுவாக  சாதிப்  பெயர்கள்  சமூகத்தில்  அந்தந்த  சாதிகளின்  தலைமைப்  பண்பை  நிலைநிறுத்துவதாய்  அமையும். அது  உயர்வு  மனப்பான்மை  அல்லது  தாழ்வு  மனப்பான்மையின்  வெளிப்பாடாக  இருக்கலாம். பிரம்மத்தில்  தோன்றியோர்  என்பதைக்  குறிக்க  பிராமணர்  என்றனர். முதன்மையானோர்  என்பதற்கு  முதலியார்  என்றனர். இதுபோலவே  தேவர், மறவர், மூப்பனார்  போன்ற  பெயர்களைக்  காணலாம். கோன்  என்றால்  தலைவன்; எனவே  கோனார். பெரும்பாலான  கோனார்க்குக்  காரணம்  புரியாமல், ‘உயர் சாதியினர்’ தந்த  தாழ்ச்சியுடன்  அச்சாதிப்  பெயரைப்  பார்க்கலாயினர். சாதிக் குறை  மனதில்  தான்  உண்டு  என்பதறியாமல், எங்கிருந்தோ  வந்த ‘யாதவர்’ என்ற  பெயரைத்  தமக்குச்  சூட்டி  மகிழ்ந்தனர். இம்மாற்றத்தால் ‘தலைமைப்’ பொருள்  போனது; தமிழ்  போனது; இன  அடையாளம்  போனது. ஆனால்  குலத்  தாழ்ச்சி  உயர்ச்சி  சொல்லல்  சமூகத்தில்  போகவில்லை. இத்தருணத்தில்  நான்  கோனார்  சமூகத்தில்  பிறக்கவில்லையே  என்ற  ஆதங்கம்  என்னுள்  ஏற்படுகிறது. என் பெயர்  அச்சமூகத்தில்  பொதுவாக  வழங்குவதில்லை  என்பதால், தற்காலிகமாக  என்  பெயர்  செல்வராஜ்  என்று  வைத்துக் கொள்வோமே! அழைப்பிதழ்  ஒன்றை  அச்சமூகத்தில்  யாராவது  ‘செல்வராஜ்  யாதவ்’  என்று  முகவரியிட்டு  எனக்குக்  கொடுக்கும்போது, “சாதிப்  பெயரில்லாமல்  கொடுங்கள். அல்லது  செல்வராசுக்  கோனார்  என்றாவது  எழுதுங்கள்” என்று  சொல்ல  ஒரு  வாய்ப்பாவது  அமைந்திருக்கும். இவ்வேடிக்கைக்  குறிப்பு  அனைத்துச்  சாதிகள்  குறித்தும்  பொருந்தும்.

            இக்கட்டுரைக்கான  சங்கிலியில்  இறுதிக்  கண்ணி.

ஆங்கிலத்தில்  Physically  handicapped, Physically disabled, Physically challenged  என்று  தொடர்ந்து  இப்போது Differently abled  என்று  வந்து  நிற்கிறது. தமிழில்  உடல்  ஊனமுற்றோர்  எனத்  தொடங்கி  மாற்றுத்  திறனாளிகள்  என  நிற்கிறது. நான்  இப்போது  எடுத்த  பொருள்  யாதென்பது  உள்ளங்கை  நெல்லிக்கனி. ஒவ்வொரு  நிலையிலும்  எழுந்த  மாற்றுக்  கருத்தின்  காரணமாக  இப்பெயர்  மாற்றங்கள்  நிகழ்ந்திருக்க  வேண்டும். இம்மாற்றங்களைத்  தாண்டி  அவர்களை  இச்சமூகம்  முழுமையாக  ஏற்றுக்  கொள்வதும்  அவர்களுக்கான  வாய்ப்புகளை  அமைத்துத்  தருவதுமே  முதன்மையானது என்று  புரிதல்  வேண்டும். இனி, மாற்றுத்  திறனாளி  என்ற  சொல்லுக்கும்  மாற்றுத்  திறனாளியான தோழர்  ஒருவரின்  மாற்றுப்  பார்வையைப்  பதிவு  செய்யலாம்  என  நினைக்கிறேன். அவரது  வாக்கில், “என்னைத்  தூக்கிப் பிடிக்க  இச்சொல்லாடலுக்காக  சமூகம்  மெனக்கிட்டிருப்பது  மகிழ்ச்சி. ஊனம்  என்பது  உடலில்  ஏற்பட்ட  குறைதான். குறையைத்  தந்த  வாழ்க்கையே  அதனை  ஏற்று  வாழவும்  கற்றுத்  தந்திருக்கிறது. எனக்கு  மாற்றுத்  திறன் ஏதும்  இருந்தால்தான்  சமூகம்  ஏற்றுக்  கொள்ளுமா? என்  குறையோடு  என்னை  ஏற்றுக்  கொள்ளாதா, என்ன?”  இந்தத்  தன்னம்பிக்கையை  அளிப்பதே  சமூகத்தின்  தலையாய  கடமை. மற்றபடி  பெயரில்  பெரிதாய்  என்ன  இருக்கிறது? இவ்விஷயத்தில்  இக்கருத்துப்  பதிவோடு  நிறுத்திக்  கொள்ளுதல்  பொருந்தி  அமையும்.

            நிறைவாக, சமூகத்தின்  மூலமாக  ஒவ்வொரு  தரப்பினரும்  நம்பிக்கை  பெற்று  வாழ்ந்தால், குறையொன்றுமில்லை. பெயரெல்லாம்  பெயரளவுக்குத்தான். What’s in a name?

 

                                                                                   -சுப. சோமசுந்தரம்                                  

பொட்டில் அடித்தாற்போல் பதில். ஊனம் மனதில் இருந்தால், எப்பெயரும் ஊனம்தான். அருமை!

  • கருத்துக்கள உறவுகள்
On 29/9/2020 at 06:48, சுப.சோமசுந்தரம் said:

நானும்  இவளும்  இருபத்தைந்து  வருடங்களுக்கு  முன்பே  ஓடிப்போய்  திருமணம்  செய்துகொண்டோம்”  என்று  பெருமிதத்தோடு  சொல்லிப்  பாருங்கள்

இப்படி பெருமிதமாகச் சொல்லும் நிலைமை வந்தால் ஓடிப்போதல் என்ற சொல்லே தேவையில்லை

அது வழக்கொழிந்து போய்விடும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஓடிப்போதலை எப்படியும் நியாயப்படுத்தலாம்.
ஆனால்
ஓடிப் போனவர்களால் ஊரே இரண்டுபட்ட காட்சிகள் தான் அனேகம்.
ஏதோ ஒரு முறை தவறிய திருமணத்துக்காகவே ஓடிப் போகிறார்கள்.
நகரங்களில் சாதாரணமாக இருந்தாலும் கிராமங்களில் இன்னமும் புடுங்குப்பாடு தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.