Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

மேஜர் கனீபா

Commander-Mejor-Ganiba.jpg

சாதனைகளின் ஊற்றுக்கண் மேஜர் கனீபா

சாதிக்கவேண்டும் என்பதன்றி வேறு சிந்தனைகள் அவளிடம் இருக்கவில்லை. ஓயாத அலைகள் 02இன் போது தனக்குரிய பகுதியை நிச்சயமாகப் பிடிப்பேன். சண்டையில் இரண்டு அதிகாரிகளைப் பிடித்து போனமுறை (1998.02.01இல்) உள்ளே வந்து வீரச்சாவடைந்தவர்களை என்ன செய்தீர்கள் என்று கேட்பேன் என்று தான் சண்டை தொடங்கும் வரை சொல்லிக் கொண்டிருந்தாள்.

சண்டையின் போதான அவளின் அணியின் நகர்வு இலகுவாக இருக்கவில்லை ஒரு கட்டடக் காடாக இருந்த பெருந்தளத்தை நெருங்குவதற்காய் ஆங்காங்கே சில மரங்கள் கொண்ட நீண்ட வயல் வெளியை எதிரியின் கண்காணிப்பு நிலைகள், அவதானிப்புக் கோபுரங்கள் என்பவை அறியாதவாறு மிக்க கவனமாகக் கடந்து வரிசை வரிசையாக அமைக்கப்பட்டிருந்த முட்கம்பி வேலிகளை சுருள்கம்பிவலைகளை கண்ணிவெடிகளை அகற்றி சூடுகளை வழங்கியவாறு மண் அணைமீதிருந்த வேலியைப் பிரித்து அதன் பின்னிருந்த முட்கம்பி வேலிகளையும் வெட்டி அதன் வழியாக உள்நுழைந்து வலமும் இடமும் மிக நெருக்கமாக அமைக்கப்பட்டிருந்த காவலரண்களை அல்ல காவற்கோட்டைகளைக் கைப்பற்றிக் கொண்டுபோய் சண்டை மிகவும் உக்கிரமாகவே நடந்தது. கனீபாவால் கைப்பற்றப்பட்ட காவலரண்கள் கரடிப்போக்குச் சந்தியில் இருந்து உருத்திரபுரம் போகும் பிரதான சந்தியில் வீதியுடன் அமைந்திருந்ததால் நகரப் பகுதிக்குப் போகும் இராணுவப் பின்னடைவுகளைத் தவிர்க்கும் நோக்குடன் இழந்த காவலரண்களை மீளக்கைப்பற்றுவதில் படையினர் கடுமையாக முயன்றனர். கைப்பற்றிய பகுதியை தக்கவைக்க கனீபாவின் அணியும் உக்கிரமாகப் போராடியது. தமது தளத்தைப் பாதுகாப்பதற்காக ஏற்கனவே பலமான நிலைகளை அமைத்து ஆயுத ஆள்பலத்தை குவித்து வைத்திருந்த படையினருக்கும் குறிப்பிட்டளவு ஆயுத தளவாடங்களுடன் உட்புகுந்த கனீபா அணியினருக்குமிடையே நடந்த கடுமையான சண்டையில் கனீபாவின் அணி அதிக இழப்புக்களைச் சந்தித்தது. உதவிக்கெனப்போன சிறு அணியும் இழப்புக்களைச் சந்திக்க, படையினர் கடும் முயற்சியின் பின் தமது பழைய நிலைகளைப் பிடித்துக்கொள்ள, எஞ்சிய ஒரு சிலருடன் வீரச்சாவடைந்தவர்களின் உடல்கள் ஆயுதங்களுடனும் கனீபா எதிரியின் காவல்வேலிக்கு உள்ளே.

கிளிநொச்சியை சூழ பரவலாக நடந்த சண்டையில் ஏனைய பகுதிகள் எம்மால் கைப்பற்றப்பட்டு துடைத்து அழிக்கப்பட்டுக்கொண்டிருக்க, ஒரு சிறு பொறிக்குள் கனீபா தனித்துப்போராடினாள். ஒருபகுதியை உடைத்துக்கொண்டு எஞ்சியவர்களுடன் தப்பி வருமாறு அறிவிக்கப்பட்டபோது வீரச்சாவடைந்தவர்களையும் அவர்களது ஆயுதங்களையும் விட்டு வெளியேற மறுத்துவிட்டாள். காயப்பட்ட போராளிகளை வெளியேற்றியபின்னர், தன்னுடன் எஞ்சியிருந்த ஒரு சிலரையும் வெளியேறுமாறு பணித்தாள். அவர்கள் கனீபாவைத் தனித்துவிட்டு வெளியேற மறுக்க அவர்களை நெருங்கியவாறு நான்கு புறமும் இராணுவம் குவியத்தொடங்க, நிலைமையைக் கூறி இலக்குகளைக் குறிப்பிட்டு தங்களைப் பொருட்படுத்தாது எறிகணைகளை ஏவுமாறு அறிவித்தாள். வீரம் நிறைந்த அந்தச் சண்டையில் கனீபாவை நாங்கள் இழந்தோம்.

மட்டக்களப்பிலே எமது அமைப்புக்கு ஆதரவான குடும்பமொன்றிலே பிறந்த கனீபா 1990ன் ஆரம்பத்திலே அங்கிருந்து காடுமேடேல்லாம் கடந்து, இராணுவச் சுற்றிவளைப்புகளிலிருந்து தப்பி கால்நடையாக வன்னிக்கு வந்து 07 வது பயிற்சி முகாமிலே தன் பயிற்சியை ஆரம்பித்தபோது அவள் சின்னவள். பயிற்சி முகாம்களிலும் வேறு சந்தர்ப்பங்களிலும் தனக்கு விருப்பமான ‘காகங்களே காகங்களே காட்டுக்கு போவீர்களா’ அவள் ஆடும் நடனம் எல்லோருக்குமே விருப்பமானது. யார் மீதும் கோபப்படாத அவள் மீது யாரும் கோபப்படுவதில்லை.

சரியான பகிடிக்காரி ஒரு வால் முளைக்காத குறை என்றாள் அவளோடு நீண்டகாலம் ஒன்றாக நின்ற ஒருத்தி ஆனையிறவுப் பகுதியில் எதிரியின் பலவேகய 2 இற்கான எதிர் நடவடிக்கையின் போது எம்மவர்களால் எதிரியின் அவ்ரோ விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது வீழ்ந்துகொண்டிருந்த விமானத்தை தன்னுடைய அணி வீழ்த்தி விட்டதாக களத்தின் வேறொரு மூலையில் நின்ற தன் தோழிகளுக்கு தொலைத்தொடர்பு சாதனம் மூலம் அறிவிக்க எல்லோரும் நம்பியேவிட்டார்கள். பிறகுதான் உண்மை தெரிந்து தாங்கள் ஏமாந்தது புரிந்து சிரித்தார்கள். எந்தச் சண்டையின் போதுமே அவள் தனது பகிடிக்குணத்தை கைவிட்டதில்லை.

எட்டு வருடங்களின் முன் பலாலியைச் சூழவிருந்த காவலரண்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையானவற்றை மிகுந்த நம்பிக்கையோடு தலைவர் எமது படையணியிடம் தனித்துவமாகப் பொறுப்புக் கொடுத்திருந்த காலப்பகுதியில் தான், வழிமறித்துத் தாக்கும் எமது இப்போதய வளர்ச்சிநிலையின் அத்திவாரம் பலமாக அமைக்கப்பட்டது. அந்த நேரத்தில் வழிமறிப்புச் சண்டை அனுபவம் சிறிதுமற்ற ஆனால் மனஉறுதியில் நம்பிக்கைவைத்த நிலையில் தான் எமது படையணி இன்றைய சூழ்நிலையை எதிர்கொண்டது. ஆரம்பத்தில் மிகநெருக்கமாக அமைந்திருந்த கட்டடங்களிற்கிடையேயும் வாழைத்தோட்டங்களிடையேயும் விழி பிதுங்க காவற்கடமையில் நின்றதும், படையினரும் இவர்களின் பக்கமாகவே அதிக தொல்லைகள் கொடுத்ததும், குறிப்பிட்ட காலத்தின்பின் நிலைமை வேறுவிதமாகி படையினர் இவர்களின் பக்கம் தலையைக் காட்டத் தயங்கியதுவுமாக இன்றுவரை தக்க வைத்துக்கொள்வதையும் கனீபா இடையிடையில் தன் பழைய தோழியருடன் இரைமீட்டுக் கொள்வாள்.

1990, 1991 இலே பலாலியைச் சூழவிருந்த காவலரண் பகுதியிலே அவ்வப்போது நடந்த சண்டைகள், ஆகாய கடல்வெளிச்சமர், பலவேகய 1, 11, கட்டைக்காடு மினிமுகாம் தகர்ப்பு, தொண்டைமனாற்றில் ஒருந்து ஒட்டகப்புலம் வரையிலான நூற்றைம்பது காவலரண்கள் அழிப்பு என்பவற்றில் பங்கு கொண்ட, பின் இராணுவ அதிகாரியாகப் பயிற்சி அளிக்கப் பட்டு சண்டைகளுக்கான பயிற்சி ஆசிரியராகக் கடமையாற்றினாள். இவளின் நுணுக்கமான ரசனைக்கும் கலையுணர்வுக்கும் எடுத்துக்காட்டாக அதிகாரிகள் பயிற்சியின் போதான நாடகம் ஒன்று இன்றும் நெஞ்சில் நிழலாடுவதைக் குறிப்பிடலாம்.

கலை நிகழ்வன்று கல்லூரியே களைகட்டிவிடும், பெண் போராளிகளும் ஆண் போராளிகளும் போட்டியாக நிகழ்ச்சி தயாரிப்பார்கள் தொடர் வகுப்புக்களுக்கும் பயிற்சிகளுக்கும் இடையில் கிடைக்கும் சிறு ஓய்வின் போது அவசர அவசரமாக தயாரித்து சிலவேளைகளில் கடைசி ஒத்திகை கூடச் செய்யாமல் மேடையேறி, ஆனால் தரம் குறையாமல் சமாளித்து அசத்திவிடுவார்கள்.

அன்று அப்படித்தான் நாடகம் அரங்கேறியது சும்மா ஒருமுறை செய்து பார்த்துவிட்டு மேடையேறும் போது தான் அவரவர் கற்பனைக்கு ஏற்றவாறு ஒப்பனை செய்து கொண்டனர் அவர்களின் திட்டப்படி ஒரு கள்ளுக்கடையை முதலாளி திறக்கும் காட்சியுடன் நாடகம் ஆரம்பமாகும். கனீபாதான் முதலாளி மேடையிலே திரைவிலகியது மேசையொன்றிலே வெள்ளைத்திரவம் நிரப்பப்பட்ட போத்தல்களைக்கண்டு நாடகக்கோஸ்டியே திகைத்துப்போனது. கனீபா உண்மையாக கள்ளை நிரப்பினாளோ, சவர்க்காரத்தை கரைத்து நிரப்பினாளோ என்ற அச்சத்திலேயே குடிப்பதுபோல் நடிக்க வேண்டியவர்களுக்கு வயிறு பகீரென்றது. திரை விலகிய பின்னும் கனீபாவை மேடையில் காணவில்லை. பார்வையாளருக்கு நடுவே இருந்து கனீபாவின் சின்ன உருவம் பட்டுடையுடனும் திருநீற்றுப் பூச்சுடனும் மடித்த சறக்கட்டுடனும் கையில் கொழுத்தப்பட்ட சாம்பிறாணிக் குச்சியுடன் வந்து தாவி மேடையேறியது போத்தல்களைச் சுற்றிசுற்றி சாம்பிறாணிப் புகை காட்டிய கனீபா மேசையின் ஓரத்தில் அவற்றைக் குத்தி நிறுத்திவிட்டு, இரண்டு கைகளாலும் நெற்றியில் குட்டி தோப்புக்கரணமும் போட்டுவிட்டு கல்லாப் பெட்டியில் குந்தினாள். எல்லோருக்குமே சிரிப்பை அடக்கமுடியாமல் போய்விட்டது. நாடகம் தொடர்ந்து நடந்தது கள்ளுக் குடிப்பவர்களாக நடிப்பவர்கள் வெள்ளைத்திரவத்தை மிக அருகில் பார்த்து அது அந்த மாதம் முடியும் வரையில் குடிக்கவேண்டிய தேநீருக்குரிய லக்ஸ்பிறே என்பதை இனம் கண்டு வயிறெரிந்ததும் அவர்களை கனீபா ஒருவாறு சமாளித்தும் எஞ்சியிருக்கும் ஒருசிலரின் நெஞ்சில் இன்றும் பசுமையாக இருக்கின்றது.

மேஜர் மதனா, மேஜர் தாரணி இருவருமே கனீபாவின் சகபயிற்சி ஆசிரியர்கள். அப்போது சண்டைக்கான மாதிரிப் பயிற்சி ஒன்று நடந்து கொண்டிருந்தது நடந்த இடம் ஒரு பெரிய இராணுவத்தளத்தின் அயல். பகலில் தொடங்கும் பயிற்சி நள்ளிரவு வரையும் தொடரும் அதன் பின்னர்தான் எல்லோரும் நீண்ட தொலைவில் உள்ள தங்குமிடத்துக்கு நடந்து வந்து சேர்ந்து ஆயுதம் துப்பரவு செய்து குளித்துவிட்டுப் படுப்பார்கள். அன்றிரவு பயிற்சி முடியத் தாமதமாகிவிட்டது பயிற்சியாளர்கள் வந்துவிட்டார்கள் இவர்கள் மூவரையும் காணோம் பயிற்சி நடக்கும் வெளியோன்றிலேயே படுத்து உறங்கிவிட்டு காலையில் தங்குமிடத்துக்கு திரும்பிய மூவரையும் கொட்டில் தேவையில்லை என்று தானே வெட்டையில் போய்ப் படுத்த நீங்கள் இனி இஞ்ச இருக்கவேண்டாம் உடமைகளை தூக்கிக்கொண்டு வெட்டையிலேயே இருங்கோ என்று பொறுப்பாளர் துரத்திவிட்டார். ‘சரியக்கா’ என்றவாறு மூவரும் மறுபேச்சுப் பேசாமல் எல்லாவற்றையும் தூக்கிக்கொண்டு போய்விட்டார்கள் போனவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்ப்பதற்காக மாலையில் பொறுப்பாளர் தேடிப்போனார் அங்கே இலை, குழை, ஓலைகளால் ஒரு வட்டக்குடில் அமைக்கப்பட்டு உள்ளே வெண்மணல் பரப்பப்பட்டு, பொருட்கள் எல்லாம் தட்டி ஒன்றிலே ஒழுங்காக அடுக்கப்பட்டு வாசலில் நல்வரவு எழுதப்பட்டு வாங்கோ அக்கா என்று வரவேற்பு அளிக்கப்பட்டு தேநீர் கொடுத்து உபசரிக்கப்பட்டு ஒன்றுமே நடக்காதது போல கனீபா உரையாடலைத் தொடர்ந்தாள் சவால்களைக் கூட இயல்பாக சமாளிக்கும் வல்லமை அவளிடம் இயல்பாகவே இருந்தது.

கனீபாவின் வளர்ச்சியில் மேஜர் துளசிக்கு முக்கிய பங்குண்டு கனீபா சிறுத்தைப் படையணிக்கு பயிற்சி ஆசிரியராக இருந்த காலத்தில் ஒரு தவறு செய்துவிட்டு தண்டனையில் சமைத்துக்கொண்டிருந்தாள். இவளோடு ஒன்றாகவே அடிப்படைப் பயிற்சி எடுத்த துளசி அறிவு முதிர்ச்சியுள்ள நிதானமான போராளி அவருக்கு குடுகுடு என ஓடித்திரியும் கனீபாவில் நல்லநேசம் தண்டனையில் சமைத்துக் கொண்டிருந்த கனீபாவை தான் ஒரு நல்ல நிலைக்கு கொண்டுவருவதாக பொறுப்பாளரிடம் அனுமதி கேட்டு அவளைத் தண்டனையில் இருந்து எடுத்து தன்னுடன் வைத்திருந்தார்.

‘இஞ்ச வா கனீபா உனக்கு நான் விளையாட்டு ஒன்று சொல்லித்தாறன்’ என்று அவளைத் தன்னருகே இருத்தி கணினியின் செயற்பாடுகளைச் செய்து காண்பிக்க கனீபாவுக்கு அது ஆச்சரியமான புதுமையான விளையாட்டாக இருக்கவே ஆர்வத்துடன் ஈடுபட்டாள். தான் கணினி கற்பிக்கப்படுவது அறியாமலே அதில் தேர்ச்சி பெற்றுவிட்டாள். அவளுக்கு தன்னையே நம்பமுடியவில்லை தன்னை விளையாட்டாக நல்ல நிலைமைக்கு கொண்டுவந்த துளசியில் அவளுக்குச் சரியான மதிப்பும் பாசமும் எப்போதுமே உண்டு இரண்டு பேருமே ஒன்றாக களத்தில் நின்றபோது கனீபாவின் ஒன்று விட்ட சகோதரியான லெப்.மதனா மட்டு-புளுகுணாவை அதிரடிப்படை தளத் தகர்ப்பில் வீரச்சாவடைய இயக்கத்தில் இணைந்த ஏழு ஆண்டுகளின் பின் அப்போது தான் முதல் முதலாக விடுமுறையில் மட்டக்களப்பிலிருந்த தன் குடும்பத்திடம் போனாள்.

விடுமுறை முடிந்த ஒரு மாதத்தின் பின் வன்னி திரும்பியவளுக்கு மேஜர் துளசியின் வீரச்சாவு செய்தி அதிர்ச்சியைத் தந்தது. அந்த அதிர்ச்சியுடனேயே ஜயசிக்குறுய் களத்திற்கு திரும்பிவிட்டாள்.

தன் அணியிலிருந்த போராளிகள் யாரையுமே அவள் கடிந்து கொண்டதில்லை. நெருக்கடியான நேரங்களில் வேலைகள் நடந்து முடிந்திராவிட்டால் நிலைமையின் அவசரத்தை விளக்குவாளே தவிர யாரையும் சினந்ததில்லை. யார் மனதையும் நோகப்பண்ணியதில்லை யாருடைய வாழ்நாள் எவ்வளவு காலம் நீடிக்கும் என்று யாருக்குமே தெரியாததால் எல்லோருக்கும் தனதன்பைக் கொடுத்தாள். எல்லோருக்குமே உதவி செய்யவிரும்பினாள்.

சண்டைக்குப் புறப்படும் கடைசிநேரத்தில் மறிப்புத் தாக்குதல் அணியை வழிநடத்தப் போகும் லெப். கேணல் செல்வியிடம் ஓடிச்சென்று கவனம் உங்களுக்கு ஏதும் பிரச்சினையெண்டால் எனக்கு அறிவியுங்கோ நான் என்ர வேலையை முடிச்சுட்டு சப்போட்டுக்கு வருவன் என்றாள்.

கனீபா விருப்பப்பட்ட மாதிரியே பெண் போராளிகள் ஏராளம் படையினரைக் கொன்றனர்.

தெருவெங்கும் குருதிவடிய சிதறிக்கிடந்த படையினரின் உடலங்களிடையே நாம் நடந்தபோது படையினர் தப்பயோடிய வழியெங்கும் அவர்கள் வீசி எறிந்த ஆயுதங்கள், ஆவணங்கள், உடமைகள், இராணுவப் பட்டிகள், பாதணிகள் இன்ன பிறவெல்லாம் இறைந்து கிடந்தபோது, நிலைகளில் இருந்து பிடுங்கி ஏற்றப்பட்ட பலரக மோட்டார் பீரங்கிகளுடன் இராணுவ வாகனங்கள் நின்றபோது வெற்றிக் கொடியை தளபதி விதுசா அவர்கள் ஏற்றிவைத்தபோது பார்த்து அமைதியுற கனீபா இருக்கவில்லை.

நினைவுப்பகிர்வு: மலைமகள்
நன்றி – களத்தில் இதழ் (22.04.1999).

 

https://thesakkatru.com/mejor-ganiba/

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வீரவணக்கம் 



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.