Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

லெப். கேணல் தர்சன்

Commander-Lieutenant-Colonel-Tharsan.jpg

களத்திலெங்கும் ஒலித்த குரல்:

கேணல் கிட்டு பீரங்கிப் படையணி பளை – நாகர்கோவில் ஒருங்கிணைப்புத் தளபதி லெப். கேணல் தர்சன்

இடைவிடாத எதிரியின் எறிகணை வீச்சுக்கும், காதைப் பிளக்கும் போர் விமானங்களின் குண்டு வீச்சுக்கும் வடமுனைப் போர் அரங்கு முகம் கொடுத்த வண்ணமிருந்தது.

அது நீண்ட பல நாட்களாக சிறிலங்கா படையின் பிடியிலிருந்த பளைப் பிரதேசம். ஓயாத அலைகள் – 03 என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க போர் நடவடிக்கை மூலம் ஆனையிறவுத்தளத்தை உடைத்தெறிந்த போது அதனை நாம் வெற்றிகரமாக மீட்டுக்கொண்டோம்.

ஓயாத அலைகள் தனது தேவை கருதி ஓய்வுக்குத் திரும்பிய காலம், சிறிலங்காப் படைகள் பளை நகரை கைப்பற்ற துளியும் அனுமதிக்கக்கூடாது என்ற உத்வேகம் பிறக்க, மிக விரைவிலேயே அப்பகுதி எம்மால் பலப்படுத்தப்பட்டு வந்தது. காப்பரண்கள் அமைக்கும் பணிகளில் போராளிகளுடன் சேர்ந்து எல்லைப் படையினரும்இ கிராமியப்படையினரும் வேகமெடுக்கத் தொடங்கினர்.

ஒவ்வொரு காப்பரணுக்குமாக எங்கள் தர்சன் ஏறி இறங்கினான். தனது குறிப்பேட்டில் ஏதேதோ எழுதி எடுத்துக் கொள்வான். அரண்களில் நின்றும், காய்த்துக் குலுங்கும் மாமரங்கள், நாவல்மரங்கள், ஆலமரங்கள் என கண்ணில் படுகின்ற மரங்களிலெல்லாம் ஏறுவான். ஓடிச்சென்று மணல்திட்டில் ஏறி நின்றுகொண்டு சுற்றியுள்ள பிரதேசங்களை அளவிடுவான்.

அவனது ஒவ்வொரு அசைவும் பெறுமதிமிக்க இலக்கு ஒன்றினை கருப்பொருளாகக் கொண்டிருந்ததை பின்னைய நாட்களில், அவன் முடிந்த பணிகளிலிருந்து போராளிகளால் அறிய முடிந்தது.

முன்னணி அரண்களுக்கும், மோட்டார் நிலைகளுக்குமான பொருத்தமான களச்சூழலை உருவாக்குவதில் மனமொன்றிப் பணியாற்றும் இவன்; ஆண், பெண் போராளிகளின் அரண்கள் யாவற்றிற்கும் நேரில் சென்று நிலைமைகளை ஆராய்வான். படையணிகளின் பொறுப்பாளர்கள், தளபதிகள் என நாளாந்தம் நடைபெறும் சந்திப்புக்களும், அடுத்தடுத்த நகர்வுகளை நோக்கிய நேர்த்தியான ஒழுங்கமைப்புக்களையும் சோராமல் செய்த வண்ணமே இருப்பான்.

கேணல் கிட்டுப் பீரங்கி படையணியின் பளை – நாகர்கோவில் பகுதித் தளபதியான லெப். கேணல் தர்சன் தனது கடமைகளின் கனதியை உணர்ந்தவனாக, காற்றாக விரைந்து காணுமிடமெல்லாம் தர்சன், வேண்டிய பொழுதெல்லாம் தர்சன், தேவைகள் உணரப்படுமிடத்தெல்லாம் தர்சன் என தன் போராளிகளின் மத்தியில் சுழன்றான்.

ரூ சிக்ஸ், ரூ சிக்ஸ் என்ற குறியீட்டு மொழியில் களமுனைப் போராளிகளாலும், தளபதிகள், மற்றும் கட்டளைத் தளபதிகளாலும் மாறிமாறி இடைவெளி இன்றி அழைக்கப்பட்ட மந்திரச் சொல்லாகவே அவனது நாமம் அமைந்தது.

கரகரத்த தர்சனின் குரல் ஆபத்தான களச்சூழலை தவிடு பொடியாக்கி வழி திறந்து விடும் வல்லமை பெற்றதாகவே போராளிகளால் உணரப்பட்டது.

பாதுகாப்புத் தாக்குதலாகட்டும், வலிந்த தாக்குதலாகட்டும் எதுவாயினும் களமுனைப் போராளிகள், படையணித் தளபதிகள் தமக்கு ஆதரவாக தமது மனங்களில் தேர்வுசெய்யும் மோட்டார் பற்றறிக் பகுதிக் கொமாண்டராக எங்கள் தர்சன் இருந்தமையானது அவனது மோட்டார் ஆதரவுச் சூட்டின் வலிமையை எடுத்துக் காட்டத் தகுந்த உதாரணமாகும்.
  

காற்றைக் கிழித்துக் கொண்டு படுவேகமாக மோட்டார் சைக்கிள் ஒன்று வருகிறது. ‘யார்ரா அவன்? நிச்சயமாக ரூ சிக்ஸ் ஆகத்தான் இருக்கும்.’

‘எவண்டா அவன்! இந்தப் பத்தைக்குள்ளால ரக்டரை உறுமிக் கொண்டு வாறது? ஆட தர்சன். நம்மட ரூ சிக்ஸ்’

இவ்வாறு எறிகணை புகை மூட்டங்களுக்கும் விமானக் குண்டு வீச்சுக்கு மத்தியிலும் சிரித்துக்கொண்டே அடிக்கடி பிரமிக்கத்தக்க வகையில் இவன் நடந்து கொள்வான்.

பூநகரிக் கூட்டுத்தளம் மீதான தவளை நடவடிக்கையின் போது கனரக இயந்திரத் துப்பாக்கியுடன் சமாராடியவன் அங்கு எம்மால் கைப்பற்றப்பட்ட ராங்கினை அதன் பின்னான நாட்களில் பொறுப்பேற்ற அணியுடன் இணைந்து ராங்கினை இயக்குவதிலும் பயிற்சி பெற்றான். அதனை செலுத்தக்கூடிய ஓட்டுனராகவும் இருந்தான் என்பது இன்னொரு பக்கம்.

இவனது ஆரம்ப பயிற்சியின் போது இவன் காட்டிய திறமையின் நிமித்தம் இவனுக்கு கனமான பணிகளே ஒப்படைக்கப்பட்டது. அத்தனையையும் ஏற்றுக்கொண்டு குறும்புக்காரனாகவும், குழப்படிக்காரனாகவும் திறமை மிக்கவனாவவும் செயற்பட்டான்.

மோட்டார் சைக்கிளைக் கொண்டு மரத்தோடு மோதிவிட்டு பொறுப்பாளரின் முன்னால் தலையைச் சொறிந்து கொண்டு தன் தவறை ஒப்புக் கொண்டு நிற்பான். வாகனங்களை கேட்காமலே எடுத்துக்கொண்டு எங்கையாவது முட்டிவிட்டு கராச்சிக்குப் போய் திருத்தம் செய்து கொண்டு வந்து பொறுப்பாளரிடம் உண்மையைச் சொல்லி தனக்குரிய தண்டணையையும் வாங்கிக் கொள்வான். ஆரம்ப நாட்களில் இவன் செய்த அன்புத் தொல்லைகளாகவே இவை அமைந்தன.

வாகனத்தை இனிமேல் தொடக்கூடாது என்று இவனுக்கு கட்டளை இடும் பொறுப்பாளரே “மச்சான் தர்சன், வாகனத்தைக் கொண்டு போய் சாமான்கள் கொஞ்சம் வந்துகிடக்கு கவனமாக ஏற்றிக்கொண்டுவா. எல்லாம் உடையும் சாமான்கள்” என்று கூறி பணியை ஒப்படைப்பார்கள். இவ்வாறான சந்தர்ப்பங்களில் பரஸ்பரம் நம்பிக்கைக்கு உயிர்கொடுக்கும் கள்ளம் கபடம் இல்லாப் போராளி எங்கள் தர்சன்.

பல்துறை சார் ஆற்றல் மிகுந்த இவன் கனரக ஆயுதங்களை இயக்குவதில் கைதேர்ந்தவனாகவும், ராங் ஓட்டுனராகவும், சிறந்த வேவு வீரனாகவும் அனுபவங்களைப் பெற்று கனரக மோட்டார் அணியுடன் இணைந்து செயற்படத் தொடங்கி பின்னர் கேணல் கிட்டு பீரங்கிப் படையணியின் முன்னணித் தளபதியாக வளர்ச்சி அடைந்தான்.

இவனுடைய அசாத்தியமான வேகம் எங்கேயாவது கொண்டு போய் விழுத்திவிடுமா? அதுவும் இல்லை. வேகத்திலும் அப்படியொரு நிதானத்தை வளர்த்துக் கொண்டவன்.

“ரூ சிக்ஸ்இ ரூ சிக்ஸ்” என்ற அழைப்பு வரும் போது, “வேகமாச் சொல்லுடா தம்பி, இந்தா இரண்டு அனுப்பியிருக்கிறன் கறைக்சன தா” (திருத்தத்தைத் தா) என்று தனது துரித செயல் திறனாலேயே பதில் அனுப்பிவிட்டு, ராங் ஒண்டில் எரியது அல்லது இழுத்துக் கொண்டு ஒடுது என்ற முடிவு தெரிந்தவனாக தன்னை அழைத்த போராளியின் பதிலுக்காகக் காத்திருப்பான்.

இங்கு முன்னணி காப்பரணில் நிற்கும் போராளி ஒருவன் தனது அரணுக்கு சற்று நெருக்கமாக எதிரியின் ‘ராங்’ ஒன்று வந்துநின்று அச்சுறுத்த முனையும் போது அதனை மோட்டார், ஆதரவுடன் விரட்டி அடிக்க நினைத்து அந்த நிலைமையினை தர்சனுக்குத் தெரிவிப்பதற்காகவே ‘ரூ சிக்ஸ்’ என அழைத்திருப்பான்.

ஆனால் தர்சனோ அந்தப் போராளியின் நிலைமையினையும் ராங் உறுமல் சத்தத்தினையும் அனுமானித்து தான் எடுக்க வேண்டிய உடனடிப் பதில் நடவடிக்கையாக கணப்பொழுதில் மோட்டாரை இணைத்துக் களமாடுவான்.

ஏனைய அரண்களில் நிற்கும் போராளிகள் நிலைமையினை உணர்ந்து தர்சனின் தொலைத் தொடர்பு அலை வரிசையின் எண்ணிற்கு சென்று தர்கனின் கட்டளை பிறப்பிக்கும் தன்மையை கேட்டுக் கொண்டு இருப்பர். உணர்ச்சி ததும்கும் நிலையில் தர்சன் வழங்கிக் கொண்டிருக்கும் கட்டளைகள் போராளிகளை பிரமிக்க வைக்கும்.

களமுனையில் அடிக்கடி வந்து சேட்டை புரியும் படையினருக்கு இவனது எறிகணைகள் தான் பாடம் புகட்டும். தனது மோட்டார் தொகுதிகளைக் கொண்டு மிகத்துல்லியமான எறிகணை சூட்டினை வழங்கி எதிரிக்குப் பேரிடியாய் இடித்தவன் எங்கள் தர்சன்.

தனக்கெனக் கொடுக்கப்பட் பிரதேசங்களில் ஒவ்வொரு அங்குல நிலத்தையும் அளந்து பெயரிட்டு, குறியீடு இட்டு, எப்பொழுதும் தயார் நிலையில் இருப்பதுடன், ஒவ்வொரு மூலையிலும் எதிரி இப்படித்தான் நகர்வான், இதுதான் நடக்கும் என்ற தெளிவான பார்வையுடனும், அதனை முறியடிக்கும் திட்டத்துடனும் களங்களில் மோட்டார் பீரங்கிகளின் தளபதி என்ற பெயரிற்கு வரைவிலக்கணமாய் எங்கள் தர்சன் நின்றான்.

எமது போராளிகளோ அல்லது அணிகளோ தற்செயலாக இக்கட்டில் மாட்டிக் கொண்டு விட்டால், அதில் இருந்து எவ்வாறு மீண்டுவர வேண்டும், அல்லது மீட்க வேண்டும் என்ற திட்டம் தர்சனின் உள்ளங்கையில் எப்போதும் இருக்கும்.

தன்னை நோக்கி அழைக்கும் குரலின் தன்மையைக் கொண்டு அந்தத் தேவை என்னவாக இருக்கும் தனக்குரிய பணி என்னவாக இருக்கும் தன்னிடம் எதிர்பார்ப்பது என்னவாக இருக்கும் என்ற பல விதமான கேள்விகளுக்கு மத்தியிலும் தேவையுணர்ந்தவனாக தேவையை ஊகித்துச் செயலாற்றுகின்ற அவனுக்குள் குடியிருந்து, இயக்கிய அவனது ஆற்றல் தான் என்ன!?

“மச்சான் தவசீலன் ஒன்றுக்கும் யோசிக்காத, கறைக்சன மட்டும் தா பிள்ளைகள கவனமா உன்னோட வச்சுக்கொள், நான் என்னை வெளியால எப்படியும் எடுப்பன்” என்று முற்றுகை ஒன்றினுள் சிக்கிக் கொண்ட எமது அணி ஒன்றை மீட்பபற்காகத் தனது மோட்டார்களை ஒன்றிணைத்து எதிரியின் முற்றுகை வேலியை உடைத்தெறிந்து அவ்வணியினை பத்திரமாக மீட்டவன் எங்கள் தர்சன்.

தனி ஒரு மோட்டாரைப் பயன்படுத்தியதிலிருந்து பல தொகுதி மோட்டார்களை இணைத்து சமர்க்களங்களை வழிநடத்தியது வரை பட்டறிவினால் பட்டை தீட்டப்பட்ட வைரமான தளபதி அவன்.

முல்லைத்தள தாக்குதலின் போது அம்முகாமினுள் சிக்கிக் கொண்ட படையினரை மீட்கவென கடல்வழித் தரையிறக்கம் ஒன்றினை வலிந்து மேற்கொண்டு, மீட்புப் படை ஒன்றை படைத்தலைமை அனுப்பி வைத்தபோது, தரையிறங்கு கடற்கலத்தின் மீது குறிதவறாது வீழ்த்தப்பட்ட எறிகணையினால், கடற்கலம் சேதமானதுடன் நாற்பதிற்கு மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டனர்.

அன்றைய நாளின் மோட்டார் அணிக் கதாநாயகர்கள் சிலருள் எங்கள் தர்சனும் ஒருவன். கனரக மோட்டார்களினது களப்பாவனையில் முன்னனுபவம் அற்ற நிலையில் களமிறங்கி எமது மோட்டார் அணி எடுத்துவைத்த முதல் அடியே பலமான அத்திவாரமாக எழுந்ததும், அதனை தொடர்ந்து நாம் சந்தித்த பெரும் சமர்களில் வெற்றிகரமாக நகர்த்தக்கூடிய தற்துணிவை எமக்கு ஏற்படுத்தியது. அத்தகைய துணிவும் விரைவும் ஒன்றுசேர நிகழ்த்திய சாதனை தான் ‘இடைக்காடான’ என்ற எங்கள் தர்சனை எமக்கு இனங்காட்டியது.

அதனை உடனடுத்து சிங்களப் படைதொடுத்த; சத்ஜெய’வை எதிர்த்துக் களமிறங்கிய முன்னணிப் படையணிகளுக்கு ஆதரவுப் பலமாக மோட்டார் அணிகளும் இணைக்கப்பட்டன. அத்தகைய மோட்டார் அணிகளின் ஒரு தொகுதிக்கு பொறுப்பாளனாக தர்சன் நின்று செயற்பட்டான். தன்னிடம் இருந்த கணித அறிவினை இணைத்து துல்லியமாக மோட்டார்களை செயற்படுத்துவதில் வெற்றிகண்டான்.

புதியதோர் அறிவியல் போருக்குள் பிரவேசிக்கும் ஆரம்ப முயற்சிகளில் தர்சனிடம் இருந்த இனங்காண முடியாத ஆர்வம், கடின உழைப்பு, துரிதவேகம், தேடற்பண்பு அவனது அணியைச் சார்ந்த ஏனைய போராளிகளுக்கம் ஊக்க மாத்திரையாகவே அமைந்திருந்தது.

சிறுரக மோட்டார்களைக் கொண்டு மரபுவழிச் சமரை எதிர்கொண்ட எமது படையணிகளுக்கு கனரக மோட்டார்கள், பீரங்கிகளை இணைத்துப் போரிடும் ஆற்றல் பல மடங்கு அதிகரித்தது. இன்று ஆற்றல் மிகு மோட்டார் பீரங்கிப் படையணிகளாக வளர்ந்து பாரிய வெற்றிகளைக் குவித்து நிற்கும் எமது இயக்கத்தின் போரிடும் ஆற்றலில் மோட்டார் பீரங்கிகளின் பயன்பாடு என்பது மூலவேராக இருக்கிறது.

இத்தகைய போராற்றல் பெறுவதில் இருந்த ஆரம்ப இடர்பாடுகளைத் தமது கடின உழைப்பால் தகர்த்து வழிசமைத்துத் தந்த அணிகளில் தர்சனின் பங்கு போற்றற்கரியது.

எதிரியின் ‘சத்ஜெய’ நடவடிக்கையின் பின்னான காலங்களில் மோட்டார்கள் அனைத்தும் ஒழுங்கமைக்கப்பட்டும், அதற்குரிய அணிகள் ஒழுங்குபடுத்தப்பட்டு புதிய படையணி ஒன்றும் உருவாக்கம் பெற்றது.

கனரக மோட்டார் பயிற்சியின் ஆரம்ப கட்டங்களில் ஏற்பட்ட அனுபவங்கள் வித்தியாசமானவை, கனரக போராயுதம் ஒன்றைக் கையாளும் போது போராளிகளுக்கு இருக்கக்கூடிய உடல்வலு, மோட்டாரின் தொழில்நுட்பம் சார்ந்து எழக்கூடிய சவால்கள், போரில் சிறுரக ஆயுதங்களுடன் இணைந்து அதனைப் பயன்படுத்தும் முறைகள், கணித வரைபட அறிவை உட்புகுத்தி போரில் உச்சப் பயன்பாட்டைப் பெற வேண்டும் என்ற துடிப்புஇ மோட்டாருக்கான அதிநவீன துணைக்கருவிகளின் பயன்பாட்டு முறைகள் என அனைத்துமே புதுமையானதாகவும் புதினமானதாகவும் இருந்தது.

இச்சந்தர்ப்பத்தில் அனுபவ ஆசானாக நின்ற தர்சன் அனைத்து அணிகளைச் சார்ந்த போராளிகளையும் பயிற்சிக் களத்தின் மையத்தில் சந்தித்தான். அவர்களுக்குப் புத்தூக்கியாகச் செயற்பட்டான். போராளிகள், பொறுப்பாளர்கள், தளபதிகள் ஆகியோருடன் இரண்டறக் கலந்து அணிகளுக்குப் புது வேகம் ஊட்டினான்.

Lieutenant-Colonel-Tharsan.jpg

வியர்வையில் குளித்து, உடல் சோர்ந்து போகும் வேளை மோட்டார் அணியினது தனியொரு போராளியின் இயலாமையானது, அவ் அணியைப் பாதிக்கும். எனவே ஒருமித்த போராளிகளின் செயற்பாடு இங்கு மிக அவசியமானது.

கை நழுவினால் கால் சிதையும், கால் இடறினால் கை சுளுக்கும் கூடவே மோட்டாரின் ‘லொக்’ உடையும். இவ்வாறு மோட்டாரின் கனமான பகுதிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதை சொல்லும் வாழ்வாகவே பயிற்சிக் காலம் தொடர்ந்தது.

இத்தகைய கதைகளை பொருத்தமான இடங்களில் சொல்லிச் சொல்லி அணிகளை ஆற்றுப்படுத்தி சவால்களை எதிர்கொள்ளும் இலகு வித்தைகளைக் கற்றுக் கொடுத்த தர்சனுக்கு அனைத்துப் போராளிகளிடமும் மரியாதைக்குரிய ஆசான் என்ற நிலையினையும் பெற்றுக்கொடுத்தது.

அக்காலப்பகுதியில் எதிரியால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட ‘ஜெயசிக்குறு’ என்ற வரலாற்றுப் படைநடவடிக்கை வன்னி மணி மீது கட்டவிழ்த்து விடப்பட்ட போது எமது தலைவர் அவர்களால் கேணல் கிட்டுப் பீரங்கிப்படையணி என்ற பெயர்சூட்டி புதிய வரலாறு படைக்க, புதிய மூச்சுடன் மோட்டார் படையணிகள் களமிறங்கின.

‘ஜெயசிக்குறு’ நகர்வை அதன் தொடக்க வாயிலில் இருந்து இடைநடுவில் கைவிட்டுச் செல்லும் வரை புலிகளின் எதிர்ச்சமர் போரியல் வரலாற்றில் புதிய பதிவொன்றை ஏற்படுத்தியதை காலம் எமக்கு நினைவூட்டும். அதை மோட்டாரினால் சாதித்தவர்களில் ஒருவன் தர்சன்.

வரலாற்றுச் சமரை எதிர்கொண்ட காலங்களில் எமது படையணிகள் சந்தித்த சவால்கள் ஒவ்வொன்றும் இலகுவாக விளக்க முடியாதவை. மோட்டார் அணிகளைப் பொறுத்த வரை மோட்டார் ஒன்றினை நகர்த்தி உரிய இடத்தில் நிலைப்படுத்தி விட்டு எந்நேரமும் தயாராக இருக்க வேண்டும்.

“வேகமாக நிலைப்படுத்திப் போட்டு ‘ஓக்கே’ பண்ணுங்கோ” என்ற கட்டளை கிடைக்கும். அடுத்த கணம் சூடுபறக்க வேலைகள் நடக்கும் போதே “உங்கட மோட்டாரை அல்பா பகுதிக்கு நகர்த்தி வேகமா நிலைப்படுத்திப் போட்டு ஓக்கே பண்ணுங்கோ” சண்டையின் போக்கிற்கு ஏற்ப பறந்து வரும் மாற்றுக்கட்டளை.

‘முந்துபவன் வெல்வான்’ என்பது போரில் கடைப்பிடிக்க வேண்டிய விதிகளில் ஒன்று. எங்கள் பிரியத்திற்குரிய தர்சனிடம் இருந்த சலியாத வேகம் எமது அணிகளை துரிதமாக நகர்த்திச் சென்றது.

தனித்து ஒரு போராளியால் கையாள முடியாத பாரிய சுமை கொண்ட உடற்பாகங்களைத் தாங்கிய ஒரு மோட்டாரினை களற்றுவதும், மீண்டும் பொருத்துவதும் என்பது விரைந்து வரும் வெற்றிச் செய்தியைப் போலல்ல.

ஏற்று, இறக்கு, பொருத்து, நிலைப்படுத்து, மீண்டும் கழட்டு, தூக்கு, கொழுவு, பொருத்து என்ற சொற்களால் அடிக்கடி கட்டுண்டவர்களாக எமது பணிகள் தொடரும் போது கூட நின்று வழிகாட்டி தோள் கொடுக்கும் சுமைதாங்கியாகவும் தர்சன் செயற்படுவான்.

‘களைப்பாய்க் கிடக்கு, பிளேண்ரீத் தண்ணி ஒன்று குடிப்பம்’ என்ற ஆசை எழும் போது நின்ற இடத்திலேயே அது தயாராகும். “தர்சண்ண வழங்கல் சீனி துடிஞ்சி போச்சி”, “சரி மச்சான் தண்ணிய அடுப்பில வை, சீனி கொண்டு வாறன்” இப்படிச் சொல்லும் தர்சன், சுழன்று அடித்துக் கொண்டு சீனி, லக்ஸ்பிறே என்று கொண்டு வந்து சேர்ப்பான்.

‘மோட்டார் நிலைக்கு சைக்கிள் ஒன்று வேணும் தர்சண்ணையைக் கேப்பம்’, ‘வரைபட வேலைக்கு பென்சில், மாக்கர், திபெக்ஸ் வேணும் தர்சண்ணணை கேப்பம்’, ‘ரக்டர் பெட்டி உடைஞ்சு போச்சு தர்சண்ணையிட்ட மாறிக்கேப்பம்’

‘வோக்கி சொக்கற் பழுது, குறொசும் அறுந்திட்டுது தர்சண்ணைக்கு அறிவியுங்கோ.’ ‘இன்னும் ஒரு கிலோமீற்றருக்கு ‘லைன்’ தகடுகள் போட வேணும், தகடும், பெயின்ரும் கொண்டுவாறன் எண்டு தர்சண்ணன் சொன்னவர்.’

‘இது தர்சண்ணன் வாங்கித் தந்த சேர்ட். இந்த ஜூன்ஸ் தர்சண்ணன் தச்சுத் தந்தவர்.’

இப்படி, இப்படி எல்லோர் மனங்களிலும் நிலைத்து நிற்கக்கூடிய முத்திரையைப் பதித்து விட்டவன் எப்படி எங்களைப் பிரிந்து போக முடியும்?

“திறினைன்இ திறினைன்….” இது எங்கள் தளபதி சேகரை அழைக்கும் குறியீட்டுப் பெயர். “உங்கட பக்கத்தால ராங் ஒன்று அடிச்சுக்கொண்டு வருகுது நான் அத நிப்பாட்டுறன் நீங்க மற்றதுகள கவனியுங்கோ.”

“ரூசிக்ஸ் நானும் அத சொல்ல நினைச்சன் நீங்களும் அதை கவனிச்சுப் போட்டியள்” என்ற தளபதி சேகரின் நம்பிக்கையும், நன்றியும் கலந்த உரையாடலுடன் களம் வெற்றியை நோக்கி நகரும்.

“ரூ சிக்ஸ்இ ரூ சிக்ஸ்… போர் சிக்ஸ்…”, “சொல்லுங்கோ அண்ண…” “உன்னட்ட இருக்கிற ‘முடியரசன்’ வரைபடத்தை ஒருக்கா பார்…”, “சொல்லுங்கோ அண்ண”, “அதில விடிவெள்ளி என்ற சந்தி இருக்கு பார்…” “விளங்கிட்டு சொல்லுங்க அண்ண” “அதில கவனமா பார் அந்த முக்கோணத் துண்டில கொஞ்சப் பேர் வந்து ஒதுங்குறாங்கள். பவள்ள கொண்டு வந்து இறக்குறான். அத துடைச்சு அழிக்கோணும் உடன செற்பண்ணு” என கட்டளைத் தளபதி கேணல் பானு சொல்லி முடிக்கவும் தர்சன் ஓ.கே பண்ணவும் மின்னல் வெட்டி மறையும் இடைவெளிக்குள் துடைப்பு அழிப்பு அரங்கேறும்.

இவ்வாறே தனது வரைபட அறிவாலும், கணித அறிவாலும் பரந்த பகுதியில் திக்கொன்றாக நடந்து கொண்டிருக்கும் உக்கிர மோதல்களில், களநிலையை துல்லியமாகக் கணக்கிட்டு தளபதிகளின் கட்டளைகளை நிறைவேற்றவும் அணிகளுக்கு ஆதரவு வழங்கவும் தர்சன் முண்டியடிப்பான்.

சிறிய ஆளணியையும், மிக அரிதான வளங்களையும் பயன்படுத்தி குறுகிய காலத்தில் செய்து முடிக்க வேண்டுமென்று திட்டமிட்டுக் கொடுக்கப்படும் பணிகளை மிகுந்த பொறுப்புணர்ச்சியுடனும், கவனத்துடனும் செய்து முடித்து விட்டு கட்டளைத் தளபதியின் எதிர்பார்ப்பக்களை நிறைவேற்றவே காத்திருப்பான்.

“தர்சனிட்ட கொடுக்கிற எந்த வேலைத்திட்டங்களையும் திருப்பி ஒருக்கா பார்க்க வேண்டிய தேவையில்லை அந்தளவு அவன்ர வேலையில நம்பிக்கை இருக்குது” இப்படி மூத்த தளபதி கேணல் பானு தர்சனைப் பற்றிய கருத்தைப் பகிர்ந்து கொண்டார்.

“எமது தாக்குதல்களில் நாம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தன்னால் எவ்வளவு செய்ய முடியுமோ அத்தனையையும் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் தர்சனிடம் இருந்தது. பல தாக்குதல்ல தர்சன் அதை செய்தும் காட்டியுள்ளான்” இவ்வாறு வடபோர் முனைக் கட்டளைத் தளபதியான கேணல் தீபன் தனது மனதிலுள்ளதைப் பகிர்ந்துள்ளார்.

“எங்களுக்கெண்டு சண்டையில் ஒரு பகுதி தரப்பட்டா அதற்கு மோட்டார் சப்போட்டா தர்சண்ண வரமாட்டாரா? என்று எங்களுக்குள்ள கதைப்பம்” என்று இளநிலைத் தளபதிகள் பலரும் தர்சனை நினைவு கூர்கிறார்கள்.

போர்க்களங்களில் தனது துணிவு, அறிவு, ஆற்றல்களை ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் நிறைவாக பயன்படுத்திய இவன் 04.11.2000 அன்று காவலரண் பகுதி ஒன்றினூடாக களநிலைகளை அவதானித்துக் கொண்டு வரும் போது எதிரியினாற் குறிபார்த்துச் சுடப்பட்ட குண்டை மார்பிலேந்திச் சரிந்த தர்சனை அறிந்த அத்தனை போராளிகளின் மனங்களிலும் இப்போதும் குமுறிக்கொண்டு தான் இருக்கிறது.

நினைவுப் பகிர்வு: அ.அமுதன்.
நன்றி – விடுதலைப்புலிகள் இதழ் (புரட்டாசி, ஐப்பசி 2003).

 

https://thesakkatru.com/commander-lieutenant-colonel-tharsan/

  • கருத்துக்கள உறவுகள்

வீரவணக்கம் 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.