Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வீரத்தின் சிகரங்கள்

Veeraththin-Sikarangkal.jpg

இவைகள் ஒரு சாதாரண வீரனால் செய்யப்பட முடியாதவை. இதைச் செய்வதற்கென்றொரு ஆன்மீகப்பலம் தேவை. தன்னை அழித்துக்கொள்ள தயாரான மனோதிடம் தேவை.

தனது இறுதி நேரத்திலும் கூட பதற்றமின்றி, உறுதியுடன், குறிபிசகாது எதிரியைத் தேடியோடும் வீரம் தேவை. விரக்தி காரணமாகவோ, முட்டாள்தனமாகவோ தன்னை அழித்துக்கொள்ள முனையும் தற்கொலை முயற்சியை போலல்ல இது. அல்லது எதிரியின் கண்ணோட்டத்தின் படி கொடூரம் மிக்கதும் மானிட இனமாக இல்லாததுமான ஒரு பூதம் அல்ல இது: அடிமைப்பட்டுக் கிடக்கும் ஒரு தேசிய இயக்க சக்திக்கு உந்துவிசையாக விளங்கும் உயரிய போர்வடிவம் தான் எங்களது கரும்புலிகள்.

உலகின் எந்த ஆயுதங்களாலும் வெற்றி கொள்ளப்பட முடியாததும், உலகின் எந்தத் தொழில்நுட்பத்தாலும் தடுக்க முடியாததும், உலகின் எந்த அரச இயந்திரத்தாலும் அடக்க முடியாததும் தான் எங்களது கரும்புலிகளின் மனோபலம்.

இந்த மனோபலம் ஒரு வீர உணர்வை வெளிப்படுத்தும் ஒரு குறியீடு மட்டுமல்ல. எமது சமுதாய எண்ணவோட்டத்தில் பிரளயத்தை ஏற்படுத்தப்போகும் சக்திகொண்ட ஒரு மாபெரும் அரசியல் வடிவமுமாகும்.

ஒவ்வொரு கரும்புலியும் தனது உயிரைப் போக்கிக் கொள்ளும் போது நிகழும் பூகம்பம், தமிழீழ விடுதலைப் போராட்டச் சக்கரத்தை முன்னோக்கித் தள்ளிவிடுவதுடன், வீரம்மிக்க, யாருக்கும் அடிபணியாத, அடக்க நினைப்பவரை நடுங்க வைக்கும் ஆற்றல் கொண்ட, தமிழ்ச்சமூகத்திற்குத் தேவையான உணர்வையும் ஊட்டிவிடுகின்றது.

தேச பக்தியையும், வீர உணர்வையும் அடித்தளமாகக் கொண்ட இத்தகைய மனோபலம் எமது மக்களிடம் இருக்குமாக இருந்தால் உலகில் எவராலும் எம்மை எதுவும் செய்ய முடியாததுடன், சுதந்திரத்துடனும் கௌரவத்துடனும் வாழும் பலத்தையும் நாம் பெற்றுக்கொள்ள முடியும்.

Veeraththin-Sikarangkal-Black-Tiger-Mejo

“தாய்மை” கரும்புலி மேஜர் மலர்விழி: அது கரும்புலிகளின் பாசறை, பயிற்சிகளும் பம்பல்களுமாக கலகலப்பாக இருக்கும் அந்தப் பாசறையில் மலர்விழியுமிருந்தாள். சண்டைக்களங்களில் உறுதிமிக்க வீராங்கனையாகத் தோன்றும் அவள் முகாமிற்கு வந்துவிட்டால் ஒரு தாயைப்போல மாறிவிடுவாள்.

அவளின் அந்த இயல்பிற்கு ஒரு காரணமிருந்தது. குடும்பத்தின் மூத்த பிள்ளையாக அவள் பிறந்திருந்தாள். அவளுக்கு ஒரு தம்பியும் ஒரு தங்கையும் உறவாக இருந்தார்கள். சடுதியாக அன்னையவள் இடையில் பிரிந்துபோக குடும்பத்தில் அன்னையின் பொறுப்பை அவளே சுமந்து நின்றாள்.

தம்பியையும் தங்கையையும் தாயைப்போல அரவணைத்து அவர்களுக்கு எல்லாமுமாக இருந்து, அவர்களை வளர்த்துவிட்ட அவள் காலத்தின் தேவையறிந்து போராளியாகிப் பின்னர் சாதனைகளின் உச்சத்தைத் தொடுவதற்காகக் கரும்புலியாக மாறிக்கொண்டாள்.

அந்த முகாமில் பயிற்சி நேரம் தவிர்ந்த ஓய்வு நேரத்தில் யாரிற்கு உதவி தேவைப்படுகிறதோ அவர்களுக்காகவே தனது நேரத்தைச் செலவிடுவாள். யாராவது போராளிகள் கசங்கிய உடையோ அல்லது சற்றேனும் புழுதிபடிந்த உடையை அணிவதோ அவளுக்குப் பிடிக்காது. கசங்கிய உடைகளை அழுத்தி மடித்துக் கொடுத்து அதைப்போட வைத்து அதன் அழகை இரசிப்பதில் தான் அவளது மகிழ்ச்சியிருந்தது.

போராளிகளின் ஆடைகளைத் தோய்த்துக் கொடுக்கக்கூட அவள் தயங்கியதில்லை. அவர்களின் இந்தப் பாசறை ஒருநாள் சிங்களப் படையின் விமானத் தாக்குதலுக்குள்ளாகிறது. உயிர்களுக்குச் சேதமேற்படா விட்டாலும் காயம் ஏற்பட்டு போராளியொருவர் மருத்துவமனையிலிருந்தான். அவர்களின் தங்ககம் விமானத்தாக்குதலால் சிதைந்தது. உடைமைகள் யாவும் சிதறுண்டன.

காயம்பட்ட போராளிக்கு மாற்று உடையில்லை. அந்த விடுதியிலிருந்த எல்லோருக்கும் அதுவே நிலைமை. மலர்விழி மருத்துவமனைக்குச் சென்று அவனைப் பார்க்கிறாள். மாற்றுடையில்லாமல் அவன் அவதிப்படுவது தெரிந்தது. ஆனால், உடனடியாகப் புது உடை வாங்கக்கூடிய வசதி அவளிடம் இருக்கவில்லை.

மலர்விழி முகாம் வருகிறாள். விமானத் தாக்குதலால் சிதறிய விடுதியில் வந்து பார்க்கிறாள். அங்கே கிழிந்தபடி காயப்பட்டவனின் சேட் ஒன்று கிடந்தது. அதை எடுத்துக்கொண்டு போனாள். ஊசி நூல் எடுத்து குண்டுச் சிதறலால் ஏற்பட்ட கிழிசல்களைப் பொறுமையாக இருந்து தைத்தாள். பின்னர் அந்த ஆடையைத் தோய்த்து காய்ந்த பின்னர் அழுத்தி மடித்து மருத்துவமனையில் மாற்றுடையை எதிர்பார்த்திருக்கும் அந்தப் போராளியிடம் ஒப்படைத்தாள். அந்தக் கரும்புலி வீராங்கனையின் தாய்மையின் நேசம் எல்லோரையும் வியக்கவைத்தது.

மலர்விழி பல நடவடிக்கைகளுக்காக எதிரியின் முகாமுக்குள் ஊடுருவி வெற்றியுடன் திரும்பி வந்தாள். நடவடிக்கைக்காகச் செல்லும் ஒவ்வொரு தடவையும் வழியனுப்புவோரிடம் அவள் சொல்வது ~தம்பியும் தங்கையும் கவனம் என்பதை மட்டும் தான்.

இவள், வீழ்த்த முடியாத பெருந்தளமாக எதிரி இறுமாந்திருந்த ஆனையிறவுத் தளத்தினுள் மேஜர் ஆந்திரா, கப்டன் சத்தியா ஆகிய கரும்புலிகளோடு இணைந்து அதிரடியான ஊடுருவலொன்றின் மூலம் தாமரைக்குளத்திலிருந்த நான்கு ஆட்லறிகளை வெற்றிகரமாகத் தகர்த்தெறியப் பெருந்துணை புரிந்தாள். தம் பணியை வெற்றிகரமாக முடித்த திருப்தியுடன் தாம் திரும்பிக்கொண்டிருக்கும் போது எதிரியின் பலம்மிக்க கொமாண்டோ அணியொன்றின் சுற்றிவளைப்பிற்குள்ளாகினர்.

மூன்று பெண் கரும்புலிகளும் மிகவும் துணிச்சலோடு சண்டையிட்டு எதிரியின் கோட்டையாயிருந்த இயக்கச்சிப் பகுதியில் பன்னிரெண்டு கொமாண்டோக்களைக் கொன்று கொமாண்டோப் படையைக் கதிகலங்கவைத்து 31-03-2000 அன்று ஓயாத அலைகளின் வெற்றிவீரர்களாக வீரச்சாவை அணைத்துக்கொண்டார்கள்.

Veeraththin-Sikarangkal-Black-Tiger-Mejo

“கோடை” கரும்புலி மேஜர் ஆதித்தன்: 1992 ஆம் ஆண்டின் நாட்கள். சுதாகரன் வீட்டுக் கஸ்ரத்தைப் போக்குவதற்காகக் கொழும்பில் கடையொன்றில் வேலைசெய்து கொண்டிருந்தான். தினமும் கடைக்கதவு சாத்தப்பட்ட இரவுப்பொழுதில் கூடவிருப் போருடன் சேர்ந்து பம்பலடித்து நேரத்தைக் கழித்துவிட்டு உறக்கத்துக்குச் செல்வதுதான் வழமை.

ஆனால் அன்று மட்டும் எல்லோரும் வானொலியைச் சுற்றியிருந்து எதையோ ஆழமாகக் கேட்டபடியிருந்தார்கள். அன்றைய நாள் பி.பி.சி வானொலியில், பி.பி.சி செய்தியாளர் ஆனந்தி அவர்கள் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களைச் சந்தித்துப் பெற்ற நேர்காணல் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. சுதாகரனும் அவர்களுடன் சேர்ந்திருந்து தலைவரின் எண்ணங்களைச் செவிமடுத்தான்.

தலைவர் அவர்கள் உதிர்த்த வார்த்தைகள் அவனை மெய்சிலிர்க்க வைத்தன. அன்றுதான் தமிழர்களுக்கென்றொரு தலைமை இருப்பதும், ஒரு கட்டுக்கோப்பான விடுதலைப்போராட்டம் நடந்துகொண்டிருப்பதையும் அவன் அறிந்துகொண்டான். அவனது நெஞ்சில் புதிய உத்வேகம் உருவானது. தலைவர் மீதும் எமது விடுதலைப்போராட்டம் மீதும் இனம்புரியாத பற்று அவனுள் கருக்கொண்டது.

அன்றிலிருந்து அவனுள் மூண்ட விடுதலைத்தீ அவனை 1994 இல் எங்கள் தாயகம் நோக்கி நகர்த்தியது. பதுளையில் இருந்த அம்மாவிடம் ‘கொழும்பில் அடிக்கடி பிடிக்கிறாங்கள் நான் யாழ்ப்பாணம் போறன்” என்று சொல்லி அம்மாவைச் சமாளித்துவிட்டு யாழ்ப்பாணத்தில் வந்து இயக்கத்தில் இணைந்துகொண்டான்.

இந்தச் சுதாகரன் பின்னர் போராளியாகி களங்களிலே துணிச்சல் மிக்க ஒரு படைவீரனாக மாறினான். அது ஜெயசிக்குறு படை நடவடிக்கை மூலம் சிங்களப் படைகள் வன்னியை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த காலம்.

முன்னேறி வரும் சிங்களப் படையை வழிமறித்து மாங்குளத்தில் சண்டைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. ஆதித்தன் அந்தச் சண்டைக் களத்தில் 82அஅ எறிகணைச் செலுத்தி ஒன்றுடன் சிங்களப் படைக்கெதிராக சண்டையிட்டுக் கொண்டிருந்தான். அந்த மோட்டார் அணியில் பொறுப்பாளனும் அவனே. எத்தகைய நெருக்கடியான சூழல் ஏற்படினும், முடிவெடுத்துச் செயற்படுவது அவன் கையிலேயே தங்கியிருந்தது.

சண்டை கடுமையானதாயிருந்தது. ஓயாத அலைகள் – 02 என்ற பெருந்தாக்குதலை கிளிநொச்சிப் படைத்தளம் மீது எமது படையணிகள் மேற்கொண்டிருந்ததால், குறிப்பிட்ட அளவு போராளிகள் தான் அன்றைய சண்டையை எதிர்கொண்டனர்.

சண்டையின் ஒரு கட்டத்தில் எமது முன்னணி நிலைகளை ஊடறுத்து படைகள் எமது பகுதியை நோக்கி முன்னேறுகின்றன. தொலைத்தொடர்புக் கருவிமூலம் இராணுவம் நிற்கும் நிலைகளைக் கேட்டறிந்து மோட்டார் மூலம் எறிகணைகளை அவன் வீசிக்கொண்டிருந்தான்.

நீண்ட நேரமாகச் சண்டை தொடர்ந்தது. நேரம் செல்லச் செல்ல எறிகணையை வீசுவதற்கான தூரவீச்சு குறைந்துகொண்டே போனது. இந்தத் தரவின் மூலம் இராணுவம் எங்களை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கின்றதென்பதை ஆதித்தன் அறிந்துகொண்டான். அந்தக் களமுனையில் ஒரு நெருக்கடியான சூழல் உருவாகிக்கொண்டிருந்தது.

ஆனால் ஆதித்தன் பதட்டப் படாமல் கூடவிருந்த போராளிகளுக்குத் தெம்பூட்டி இடை விடாமல் தாக்குதலை நடத்திக் கொண்டிருந்தான். எறிகணை வீச்சுக்கான தூரம் தொடர்ந்தும் குறைந்தபடியிருந்தது.

இன்னும் கொஞ்ச நேரம் தொடர்ந்து தாக்குதல் நடத்தினால் அவனது மோட்டார் நிலை எதிரியால் முற்றுகையிடப்படும் என்று அவனால் கணிப்பிட முடிந்தது. அப்படி முடிவெடுத்தால் எறிகணைகளை எதிரியிடம் இழக்கவேண்டிய நிலை ஏற்படும். அந்தநேரம் ஆதித்தன் ஒரு அதிரடி முடிவை எடுத்துக்கொண்டான். கடைசியாக மோட்டாரை அழிப்பதற்கு ஒன்றும், தங்களை அழிப்பதற்கு ஒன்றுமாக இரண்டு எறிகணைகளை வைத்துவிட்டு, ஏனையவற்றை எதிரி முன்னேறும் பகுதி நோக்கி விரைவாக அடித்து முடிப்பதென்பதே அந்த முடிவு.

இப்போது எதிரியின் தாக்குதல் இவர்களை அண்மிக்கின்றது. எதிரியின் துப்பாக்கிச் சன்னங்கள் இவர்களின் நிலையை நோக்கியும் சரமாரியாக வரத்தொடங்கியது. 500அ 400அஇ 300அ என மிகக் கிட்டவாக எறிகணைகள் பறந்து வந்து கொண்டிருந்தன.

கடைசியாக 200அ வீச்செல்லைக்கும் அடிக்கும் கட்டளை கிடைத்தது. இராணுவம் துப்பாக்கிச் சண்டைக்கான வீச்செல்லைக்குள் வந்தாலும் அவர்கள் மோட்டார் சூடுகளை வழங்கிக் கொண்டிருந்தார்கள். இராணுவம் அவர்களைச் சூழ்ந்துகொள்ளும் கணங்கள் அண்மித்துக் கொண்டிருந்தன.

ஆனால், பதட்டமில்லாமல் ஆதித்தனின் சுடுகுழல் இயங்கிக் கொண்டிருந்தது.

இராணுவம் இப்போது இவர்களின் மோட்டார் நிலையைக் குறிவைத்து தாக்கத்தொடங்கியது. இத்தனை நெருக்கடிக்குள்ளும் ஆதித்தன் தான் முடிவெடுத்த நிலை வரும் வரை தாக்குதலைத் தொடர்ந்தான். இராணுவத்தின் முற்றுகை வலைக்குள் மோட்டார் நிலை உள்ளாகிக் கொண்டிருந்தது.

ஆதித்தன் நினைத்தபடி எறிகணைகள் அனைத்தும் சுடப்பட்டு விட்டது. இனி, மோட்டாரை தகர்ப்பதற்கான நேரம். அதைவிட மாற்றுவழிகள் இல்லை. நூற்றுக்கணக்கான எறிகணைகளைச் சுட்டதினால் தணல் போலப் பழுத்துப் போயிருக்கும் அந்த எறிகணைக் குழலைக் கொண்டு செல்வதென்பது சாத்தியமே இல்லாத ஒன்று. அத்தோடு எதிரியால் அவர்கள் சூழப்பட்டுக் கொண்டுமிருந்தார்கள்.

எனவே சுடுகுழலைத் தகர்த்து விட்டு பின்வாங்கு வதென்ற முடிவைத் தவிர மிச்சமாக எதுவுமில்லை. ஆயினும், ஆதித்தன் அப்படிச் செய்யவில்லை. கூட இருந்தோர் எதிர்பார்க்காத முடிவை அவன் எடுத்தான். இயக்கம் ஒரு எறிகணை செலுத்தியைப் பெறுவதற்கு எத்தகைய விலைகளைச் செலுத்துகின்றதென்பது அவனுக்கு நன்கு தெரியும். அதனால், அந்த எறிகணைச் செலுத்தியை அவன் இழக்க விரும்பவில்லை.
வெப்பத்தால் தகதகத்துக் கொண்டிருக்கும் அந்தச் சுடுகுழலை தனது தோளில் வைத்தபடி எதிரிக்கு எதையும் விட்டுவைக்காமல் முற்றுகையை உடைத்து வெளியேறினான் அவன்.

ஆதித்தன் மீண்டு வந்தபோது அவனது சுடுகுழல் பத்திரமாயிருந்தது. அவனது தோள்பட்டை மட்டும் வெந்து போய் பொக்களம் போட்டிருந்தது.

இப்படி களங்களில் பல சாதனைகளை நிகழ்த்திய வீரன் பின்னர் கரும்புலியாகி விடுதலைப் போருக்குப் பெரும் பலம் சேர்த்து வீழ்த்த முடியாத பெருங்கோட்டையென எதிரி மார்தட்டிய ஆனையிறவை மீட்கும் சமரொன்றிற்கு வலுச்சேர்த்து 25.12.1999 அன்று பாவப்பட்ட மக்களை மீட்கவந்த இயேசுநாதர் பிறந்ததாகச் சொல்லப்படும் நத்தார் நாளில், அடிமைப்பட்ட தன் இனத்தின் மீட்சிக்காகத் தன்னையே கொடையாக்கினான்.

Veeraththin-Sikarangkal-Black-Tiger-Mejo

“உபசரிப்பு” கரும்புலி மேஜர் ஆந்திரா: இவள் இப்போது தான் இயக்கத்துக்கு வந்திருந்தாள். பயிற்சிகள் இன்னமும் ஆரம்பிக்கப்படவில்லை. பொறுப்பாளர் எல்லோரையும் ஒன்று கூட்டிக் கதைத்தார். தனது கதையின் ஒரு கட்டத்தில் ‘இதுக்குள்ள ஆர் கரும்புலி?” என்ற வினாவைத் தொடுத்தார். கேள்வி முடிந்த சில கணங்களுக்குள் ஒரு சிறிய உருவம் எழுந்துநின்று ‘நான்தான்” என்று கூறியது. சுதர்சினியின் தோற்றத்தைப் பார்த்து இவளா கரும்புலியாகப்போகிறாள் என்று நக்கலாகச் சிரித்தார்கள்.

அவள் நினைத்ததைச் சாதித்துக்கொண்டாள். கரும்புலிகளின் பயிற்சித் தளத்தில் ஆந்திராவாக அவள் உலாவிக் கொண்டிருந்தாள். அந்தச் சிறிய உருவத்துள் நிறைய குறும்புத்தனம் இருந்தது. அந்தக் குறும்புத்தனங்களால் முகாமே கலகலப்பாகவிருக்கும். யாராவது எதற்காவது ஆசைப்பட்டால் போதும் அதை அவர்களுக்குச் செய்துகொடுத்துவிடவேண்டுமென்று துடிப்பவள்.

ஒருநாள் மாமரத்தின் கீழ் பயிற்சி நடந்தது. மரத்தில் மாங்காய்கள் இருந்தன. கூட இருந்த போராளி ஒருவர் சொன்னார் ‘மாங்காயில கறி வைச்சா நல்லாயிருக்கும்” இந்த வார்த்தைகள் ஆந்திராவுக்கு கேட்டிருந்தது. அன்று பயிற்சி நாள் என்பதால் அவள் பொறுத்துக்கொண்டாள்.

ஓய்வு நாளும் வந்தது. அன்று ஆந்திராவிடமிருந்து அழைப்பு வந்தது. ‘இண்டைக்கு மதியம் கட்டாயம் வரட்டாம்” ஆந்திராவின் அழைப்பைத் தட்டிக் கழிக்க முடியாது மாங்காய்க்கறி கேட்டவள் இன்னொரு போராளியை அழைத்துக்கொண்டு போனாள். போனவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மாங்காயில் குழம்பு, மாங்காயில் சொதி, மாங்காயில் பொரியல், தட்டுமுழுவதும் மாங்காய்மயம். சென்றவர்களுக்கு விழி பிதுங்கியது. நன்றாக மாட்டி விட்;டார்கள்.

ஆளையாளைப் பார்த்தபடி மெதுவாக வாயில் வைத்து சுவைத்துப் பார்த்தார்கள். பச்சைப்புளி வாயில் வைக்கவே வயிற்றைக் குமட்டியது. ‘ஒண்டும் சொல்லாத பேசாம சாப்பிடுவம் இல்லாட்டி அவள் அழுது கொண்டிருப்பாள்” ஆந்திராவின் அன்பைப் புறக்கணிக்க முடியாமல் கஸ்ரப்பட்டு சாப்பிட்டார்கள். இவர்களின் துன்பத்தை அறியாதவள் இரண்டாவது தடவையும் மாங்காய்க்கறி பரிமாறினாள். ஆந்திராவின் அன்பிலும் குறும்பிலும் சிக்கியவர்கள் இரவு விடுதியில் வாந்தி எடுத்த கதையும் அதன்பின் இருந்தது.

இந்தக் குறும்புக்காரி கொக்குத்தொடுவாயில் தன் தோழிகள் பலரை ஒன்றாக இழந்த சோகத்தில் இருந்தாள். அதற்காக எதிரிக்கு பழி தீர்க்கத் துடித்துக் கொண்டிருந்தாள். அவள் காய்ச்சலாக இருந்தாலென்ன? வேறு வருத்தமென்றாலென்ன? விடாமல் பயிற்சிசெய்தாள். ‘என்ர கையால சார்ஜ் கட்டி நான் ஆட்டியைக் கட்டிப்பிடித்தபடி ஆட்டியை வெடிக்கவைக்க வேணும்” என்று அடிக்கடிச் சொல்லிக் கொண்டிருந்தாள்.

அவள் விரும்பியபடியே 31.03.2000 அன்று ஆனையிறவுத் தளத்தை மீட்கும் சமரிற்கு வலுச்சேர்ப்பதற்காய் தாமரைக்குளப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த ஆட்லறித் தளத்தினுள் நான்கு ஆட்லறிகளைத் தகர்த்தெறிவதற்கு வழியமைத்துத்திரும்புகையில் நினைத்ததை சாதித்தவளாய் வீரச்சாவைத்தழுவிக் கொண்டாள்.

Veeraththin-Sikarangkal-Black-Tiger-Capt

“உறுதி” கரும்புலி கப்டன் சத்தியா: சத்தியா. அவள் சின்னப்பிள்ளையல்ல. ஆனால் உருவத்தில் சிறியவள். மிகவும் கலகலப்பானவள். எல்லோரிலும் அன்பானவள். சின்னப் பிரச்சினையென்றாலும் சண்டைபோட்டு தன்கருத்தில் விடாப்பிடியாக நின்றாலும் அவளின் அந்தத் துடிதுடிப்பு எல்லோருக்கும் பிடிக்கும்.

ஆனாலும் அவளின் சிறிய உருவம் அவளது கரும்புலிப்பணிக்குத் தடையாயிருந்தது. அவளுடன் கூட இருந்த பல கரும்புலிகள் ஆனையிறவிற்கான கரும்புலித் தாக்குதலுக்குச் செல்லும்போது சத்தியாவின் சந்தர்ப்பம் தட்டுப்பட்டுக்கொண்டே போனது.

ஆனையிறவுக்குச் செல்வதென்றால் ஆனையிறவு உப்பேரியின் தண்ணீரைத் தாண்டவேண்டும். உயரமான போராளிகளிற்கே நெஞ்சளவு தண்ணீர் இருந்தது. ஆயுத வெடிபொருட்களுடன் நகர்வது அவர்களிற்கே சிரமமானதால் சத்தியா செல்வதென்பது சாத்தியம் குறைந்ததென்பதால் அவளை அனுப்ப பொறுப்பாளர் சம்மதிக்கவில்லை.

இப்படி இரண்டு மூன்று தடவை அவளது சந்தர்ப்பம் விலகிப்போக அவள் அழத்தொடங்கி விட்டாள். கூட இருந்த கரும்புலி வீரர்கள் அவளை வலிந்து சண்டைக் கிழுத்துச் சீண்டுவதாக அவளைப் பார்;த்து கேலி செய்வார்கள். அன்புச் சண்டை தொடரும்.

இந்தப் பகிடிகள் தொடர இன்னொரு நாளில் கூடவிருந்து கிண்டலடித்தவர்களும் உண்மையாகவே பிரியும் போது அவளது அழுகை கனத்ததாக மாறியது. ‘நாங்கள் சாகப் போகேல்லை. சாதிக்கப்போறம்” என்று சொல்லி அவளைத் தேற்றிவிட்டுப் போனார்கள்.

காலங்கள் கழிந்து கொண்டிருந்தாலும், சத்தியா ‘நானொரு கரும்புலித் தாக்குதலைக் கட்டாயம் செய்து முடிப்பன்.” என்ற நம்பிக்கையில் உறுதியாகவிருந்தாள். யாழ்ப்பாண ஆக்கிரமிப்பிற்காக எதிரி மேற்கொண்ட சூரியக்கதிர் நடவடிக்கையை எதிர்கொண்ட போது சண்டைச்சூழலால் மாற்றுடையின்றி போட்டிருந்த உடையுடனேயே நிற்கவேண்டிய சூழல்.

உடுப்பைத் தோய்த்தால் காயவிட முடியாதென்பதால் நெருப்பு மூட்டி அந்தப் புகையில் அரைகுறையாகக் காயவிட்டுப் போட்டிருந்தாள். ஆனால், அதுவும் பின்னர் பயனளிக்கவில்லை. இவர்கள் மூட்டிய நெருப்பின் புகைக்கு எதிரி செல் அடிக்க கடைசியாக எதுவும் செய்ய முடியாமல் கொஞ்ச நாட்கள் குளிக்காமலிருந்ததையும் அடிக்கடி நினைவுகூருவாள். நீண்ட காலம்
பொறுமையாக, நிதானமாக, உறுதியாக காத்திருந்த அந்தச் சிறிய உருவத்தையுடைய சத்தியாவிற்கு அவள் எதிர்பார்த்திருந்த சந்தர்ப்பம் கைக்குக் கிட்டியது. அந்தச் சின்ன உருவம் கரும்புலித் தாக்குதலுக்குச் செல்வது உறுதியாகிவிட்டது.

ஆனையிறவுத் தாக்குதலுக்கு இப்போது நீரேரி கடக்காமல் இன்னொரு பாதையால் போகும் அணியுடன் செல்ல அவளிற்கும் சந்தர்ப்பம் வாய்த்தது. சத்தியா மகிழ்ச்சியின் எல்லையைத் தொட்டுநின்றாள். ‘ஆனையிறவுக்குப் போகாட்டி பலாலியில போயெண்டாலும் நான் அடிப்பன்.” என்று சொல்லிக்கொண்டிருந்தவளுக்கு ஆனையிறவிலேயே இலக்குக் கிடைத்ததால் அந்த மகிழ்ச்சி.

ஆனையிறவுத்தளம் எப்போதும் அசைக்கப்பட முடியாதென வெள்ளைக்காரர்களும் வந்து சவால் விட்டுச்சென்ற தளம். தேசியத்தலைவரின் மதிநுட்ப திட்டமிடலில் ஆனையிறவுத்தளம் பொசுங்கிக் கொண்டிருந்த காலம். முன்னணியில் சண்டையிடும் போராளிகளுக்கு அழிவை ஏற்படுத்தக்கூடிய ஆட்லறிகளை அவற்றின் இருப்பிடத்தில் வைத்தே அழிக்கும் தலைவரின் சிந்தனையைச் செயலாக்க அவள் புறப்பட்டாள்.

ஆட்லறிகள் உடைக்கப்படும்போது சிங்களத்தின் சூட்டுவலு மட்டுமல்ல, ஆனையிறவுப் படைகளின் மனோபலமும் உடைந்தழியும். தலைவர் நினைத்ததைச் செயலாக்கினாள்.

31.03.2000 அன்று தன் நீண்டகாலக் கனவை நிறைவேற்றி நான்கு ஆட்லறிகள் தகர்க்கப்பட்ட மகிழ்வோடு எங்கள் தேசத்தின் கற்களில் அழியாதபடி தனது பெயரையும் பொறித்துக்கொண்டாள்.

Veeraththin-Sikarangkal-Black-Tiger-Capt

“பாதுகாப்பு” கரும்புலி கப்டன் நாகராணி: அந்தக் காப்பரண் வரிசை மிகவும் விழிப்பாக இருந்தது. இராணுவம் எந்தக் கணத்திலும் முன்னேறக்கூடும். அப்படி ஒரு முன்னேற்றத்திற்கு அவர்கள் முற்பட்டால் அதை முன்னணியிலேயே வைத்து முடக்க வேண்டும். ஜெயசிக்குறு சண்டையின் புளியங்குளக் களமுனை அது.

புளியங்குளமென்பது சாதாரண ஒரு குளத்தின் பெயராகவோ அன்றி, ஒரு ஊரின் பெயராகவோ இல்லாமல் சிங்களப்படைகளின் அடி நரம்புகளையே அதிரவைக்கும் களமாக மாறியிருந்தது.

முன்னேறுவதற்காக புறப்படும் ஒவ்வொரு சிங்களச் சிப்பாயும் பயப்பீதியால் நடுங்கிய களமுனை அது.

புளியங்குளமென்பது புலிகளின் புரட்சிக் குளமென்பதை நடைபெற்ற சண்டைகள் மூலம் விடுதலைப் புலிகளின் படையணிகள் வெளிப்படுத்தி நின்றன.

எத்தகைய சூழல் ஏற்படினும் அந்த இடத்தை இராணுவம் அடித்துப்பிடிக்க விடுவதில்லையென்ற உறுதி எல்லோரிடமும் இருந்தது. அதே உறுதியோடு தான் நாகராணியுமிருந்தாள்.

அவளொரு R.P.G சூட்டாளர். புளியங்குளத்தில் சிங்களப்படைகளின் மனோபலமென்பது அவர்களின் டாங்கிகளில்தான் தங்கியிருந்தது. டாங்கிகள் வெடித்துச் சிதறும் போது கூடவே முன்னேறி வரும் படைகளின் மனோபலமும் வெடித்துச் சிதறிவிடும். அதன் பின் களத்திலே சிங்களப்படைகளைக் காணமுடியாது.

அன்றைய நாளும் அப்படித்தான் எதிரியால் எந்த நேரமும் தாக்கப்படக்கூடிய அந்தப்பகுதிக்குள் அவள் எதிரியின் அசைவை எதிர்பார்த்தபடியிருந்தாள். ஆனால், இன்று எதிரி வருவதாக இல்லை. ஆனால், வந்தது புதிதாயொரு பிரச்சினை. அது இயற்கையால் வந்த சிக்கல்.

வானம் கறுத்து மழைக்கான அறிகுறி தென்பட்ட கொஞ்ச நேரத்தில் மெல்லியதாகத் தொடங்கிய மழை. செல்லச்செல்ல அதிகமாகிக் கொண்டே போனது. மழை பெய்தால் வெள்ளம் தாராளமாக ஓடக்கூடியதும், நிற்கக்கூடியதுமான பிரதேசமது.

மழை நீர் சிறிது சிறிதாக உட்புகத் தொடங்கு கிறது. உட்புகுந்த நீர் ஆரம்பத்தில் நாகராணியின் பாதங்களை நனைக்கின்றன. அவள் தான் நனைவதைப் பற்றிக் கவலைப்படாமல் R.P.G உந்துகணைச் செலுத்தியைப் பாதுகாத்துக்கொண்டாள். மழை விடுவதாக இல்லை. நீர்மட்டம் குறைந்து கொண்டே போனது. பாதத்தை நனைத்த நீர் முழங்கால் மட்டத்தைக் கடந்து இடுப்பு வரை சென்று கொண்டிருந்தது.

ஆனால், இதைச் சாட்டாக வைத்து காப்பரணை விட்டுப் பின்வாங்க முடியாது. ஏனெனில் எதிரிகளின் டாங்கிகள் அதிகம் முன்னேறக்கூடிய பகுதி அது. மழையைத் துணையாக வைத்து எதிரிப்படைகளின் கவசங்கள் முன்னேறக்கூடும். அதனால், தண்ணீரைப் பற்றிக் கவலைப்படாமல் அவள் விழிப்பாயிருந்தாள். மழையும் அவளைப் பற்றிக் கவலைப்படாமல் தன்பாட்டில் பொழிந்து கொண்டிருந்தது.

மழை நீர் இப்போது அவளின் இடுப்பைக் கடந்து மேல்நோக்கிச் செல்கிறது. அவளின் கைகள் சோரத் தொடங்குகின்றன. கைகளை ஆற்றுவதற்கு கீழே விட்டால் R.P.G நனைந்துவிடும். அந்தவேளையில் அவளுக்கு உதவி செய்யக்கூடிய நிலையில் கூடவிருந்தவர்களுமில்லை.

ஏனைய பொருட்களைப் பாதுகாப்பதில் அவர்கள் ஈடுபட்டிருந்தார்கள். அதிகரித்த நீர்மட்டம் இப்போது நெஞ்சைத் தாண்டி நின்றது. R.P.G யைக் கொஞ்சமும் கீழிறக்க முடியாது. பேசாமல் தலையில் தூக்கி வைத்தபடியிருந்தாள். தனக்கு எந்தச்சேதம் வந்தாலும் R.P.G க்கு எதுவும் நடந்து விடக்கூடாதென்பதில் அவள் உறுதியாயிருந்தாள்.

உடற்சோர்வு அவளது தாங்கு சக்தியைக் கடந்து விட்டபோதும் அது நனைந்து விட்டால் தனது செயற்திறனை இழந்துவிடும். அதனால் ஏற்படக்கூடிய நெருக்கடியைப் புரிந்தவளாய் அன்றைய நாளில் இயற்கையின் சவாலைவென்று தன் ஆயுதத்தைப் பாதுகாத்தாள்.

இந்த மனோதிடத்துடனும், அசையாத உறுதியுடனும் தன் தேசத்தின் மீது வைத்திருந்த ஆழமான நேசத்தின் காரணமாய் அவள் கரும்புலியானாள். அவளின் கரும்புலி வாழ்க்கையென்பது சிங்களத்தின் குகைக்குள் இருந்தது. கரும்புலியாகி சிங்களத்தின் இருப்புக்களை உடைப்பதற்கு பெரும் பலம் சேர்த்த அவள் 25.12.1999 அன்று ஆனையிறவு பெருந்தளத்தினுள் ஓயாத அலைகள் மூன்றின் வெற்றிக்கு அடிக்கல்லாகி வரலாறாகினாள்.

Veeraththin-Sikarangkal-Black-Tiger-Mejo

“நினைவுகள்”: கரும்புலி மேஐர் அருளன் தாக்குதலுக்காக விடைபெறும் கடைசி மணித்துளிகள் இந்தக்கணம் வரை அவனுக்கென்றிருந்த எல்லாவற்றையும் மற்றவருக்குப் பிரித்துக் கொடுக்கிறான். ‘இது நிவேதண்ணா தந்த லைற்றர் இது நீதண்ணா போட்ட சேட்டு இது ஆசாக்கா தந்த ஓட்டோகிராவ்” என ஒவ்வொன்றாய் எடுத்து மற்றவர்களுக்குக் கொடுக்கிறான்.

கடைசியாக அவனது பையிலிருந்து வெளிவருகிறது இரண்டு கற்கள். அந்தக் கற்களிலொன்றில் இந்துவென்றும் மற்றையதில் nஐயராணி என்றும் எழுதப்பட்டிருந்தது. கூட இருந்தவர்களுக்கு ஆச்சரியம். அப்படி என்னதான் இந்தக் கற்களில் இருக்கின்றதென்ற ஏக்கம் அவர்களிடம். அவர்களின் பார்வை அவனுக்குப் புரிகிறது. அவன் அதற்கான காரணத்தைச் சொல்லுகிறான்.

இதுவெறும் கற்களல்ல ஆனையிறவுத் தாக்குதலுக்காகச் சென்ற கரும்புலிகள் பயிற்சியின் போது குண்டெறிதலுக்குப் பதிலாக கற்களையே எறிவார்கள். ஒவ்வொரு கரும்புலி வீரனும் கற்களைச் சேகரித்து வைத்து விட்டு இலக்கு நோக்கி ஒவ்வொன்றாய் எறிவார்கள். ஒரு மழைநாளில் பயிற்சி வேளைக்கு முடிந்ததால் மிஞ்சிய கற்கள் தானிவை. அவர்கள் எறிந்து விட்டுப்போய் விட்டார்கள். அந்த முகாமை விட்டல்ல இந்தத் தேசத்திலிருந்தும் தான்.

அருளன் முகாம் வருகின்றான். கரும்புலிகள் பயிற்சி எடுத்த இடத்தைப் பார்க்கின்றான். எல்லோரது முகங்களும் அவனது மனதில் வந்து போயின. அப்போது தான் அவதானிக்கிறான் இந்துவும் nஐயராணியும் எறிந்த கற்கள் மிச்சமாயிருந்தன. இப்போது அது வெறும் கற்களல்ல கரும்புலிகள் கைபட்ட கற்கள். அவற்றிலிருந்து ஒவ்வொரு கல்லை பத்திரமாக எடுத்த அருளன் அதைப் பத்திரப்படுத்த அந்தக் கரும்புலிகளின்; நினைவுகளை அந்தக் கற்களிலே சுமந்தபடி பேணி வந்தான்;.

கரும்புலிகளுக்குப் பயிற்சி ஆசிரியனாக இருந்த அவன் கரும்புலிகளின் உணர்வைத் தாங்கியபடி தான் கரும்புலி ஆகவேண்டுமென்று அடிக்கடி தலைவருக்குக் கடிதம் போட்டு விடாப்பிடியாக நின்று கரும்புலியாய் மாறினான்.

அருளனின் வயிற்றில் களத்திலே தாங்கிய விழுப்புண்ணின் வலியிருந்தது. அவனால் சாதாரண நேரங்களில் நிமிர்ந்து நிற்பதே சிரமமானது. ஆனாலும் அவன் பயிற்சி ஆசிரியன் என்பதால் பயிற்சித் திடலில் தனது உடலின் வலியைக் காட்டமாட்டான். பயிற்சித் திடலில் நிமிர்ந்த தோற்றத்தோடு எடுப்பான அருளனையே உங்களால் காணமுடியும். பயிற்சி முடிந்ததும் தனது விடுதியில் வந்து அப்படியே படுத்துவிடுவான். சிறிய ஓய்வின்பின்தான் அவனால் திரும்ப இயங்கமுடியும்.

அந்த வீரன் இன்று தான் சுமந்த நினைவுகளை மற்றவர்களுக்குக் கொடுத்து விட்டுதான் பயிற்சி கொடுத்துப்போன வீரர்களைத் தொடர்ந்து கையசைத்துவிட்டு விடைபெற்ற அவன் ஓயாத அலைகள் மூன்றிற்காய் எங்கள் தேசம் கொடுத்த விலைகளில் ஓர் விலையாய் காற்றோடு கலந்து கொண்டான்.

Veeraththin-Sikarangkal-Black-Tiger-Mejo

“கனவு” கரும்புலி மேஜர் செங்கதிர்வாணன்: யாழ்ப்பாணத்தின் தீவுகளில் ஒன்று அது. சாதாரண மனிதர்கள் வாழாத சூனியப் பிரதேசமாய் அது இருந்தது. எங்களுக்குச் சொந்தமான அந்த மண்ணில் இப்போது அந்நியப் பாதங்களின் ஆட்சி. செங்கதிர்வாணன் எதிரியின் இருப்பை வேவு பார்ப்பதற்காக வந்திருந்தான்.

மக்கள் துரத்தப்பட்ட அந்த ஊரில் எதிரியின் கண்களுக்குத் தென்பட்டு விட்டால் தப்புவதற்குச் சந்தர்ப்பமே கிடைக்காது. உடைந்த கட்டடங்களும், கடற்கரையோரத்தில் காணப்படும் பள்ளங்களும் தான் அவர்களுக்குப் பாதுகாப்பு. தங்களை மறைத்தபடி இராணுவத்தின் கோட்டைக்குள் புகுந்து தரவுகளைத் திரட்டிக் கொண்டிருந்தார்கள்.

ஒருநாள் வேவுக்காக நகர்ந்து கொண்டிருந்த அவர்கள் சடுதியாக இராணுவத்தை சந்தித்துக்கொண்டார்கள். சண்டையைத் தவிர்க்க சந்தர்ப்பம் இல்லை. தப்ப வேண்டுமாயின் சண்டை பிடித்தாக வேண்டிய சூழல். சுற்றிவர எதிரியால் சூழப்பட்ட அந்தச் சூழலுக்குள் சண்டை தொடங்கியது.

உள்ளுக்குள்ளே சண்டை தொடங்கியதால் முன்னணி அரண்கள் யாவும் விழிப்பாயிருக்கும். உடனடியாக வெளியேறுவது என்பது சாத்தியமற்றுப்போக எதிரியின் பகுதிக்குள்ளேயே மறைப்புத் தேட வேண்டியதாயிற்று.

இப்போது புதிதாய் இன்னொரு நெருக்கடி கூட வந்தவர்களில் ஒருவர் காலில் குண்டுபட்டு விழ அவரைச் சுமந்தபடி இராணுவப் பகுதிக்குள் இராணுவத்தைச் சுழித்துக்கொண்டு மறைப்பிடம் தேடினார்கள்.

இராணுவத்தின் தேடல் தொடர்ந்ததால் இடைவிடாது இடம்மாறிக் கொண்டிருந்தார்கள். இடம் மாறிமாறி நீண்டதூர நடை நாவறண்டு தண்ணீருக்காக காத்துக் கிடந்தது. பசிவேறு வயிற்றைக் குடைந்தது. எதுவும் உடனடியாக கிடைப்பதற்கான சாத்தியமேயில்லை.

செங்கதிர்வாணன் காயப்பட்ட வீரனை பாதுகாப்பான இடத்தில் விட்டுவிட்டு தண்ணீருக்காக அலைந்து திரிந்தான். நீண்ட நடையும், நேரமும் கடந்து கொண்டிருந்ததுதான் மிச்சமாய்ப்போய் களைத்துப்போன தருணத்தில் கிணறு ஒன்று அவர்களின் கண்களுக்குப் பட்டது. கிணற்றைக் கண்டதுமே தண்ணீர்த் தாகம் தீர்ந்தது போன்ற உணர்வு. வாளியில்லாத அந்தக் கிணற்றில் வேறு வழியில்லாமல் உள்ளிறங்கி ஆனந்தத்தோடு தண்ணீரை வாயில் வைத்த போது மிஞ்சியது ஏமாற்றம். அது உப்பு நீர்.

உடல் சோர்ந்த போது காயப்பட்டவன் தண்ணீருக்காக தவமிருப்பது நினைவிற்கு வந்தது. உடற்களைப்பை புறந்தள்ளிவிட்டு மீண்டும் நடந்தான். அவனது முயற்சிக்குப் பலன் கிடைத்தது. எங்கோ தொலைவில் ஒரு வீடு இருந்தது. அங்கிருந்தவர்கள் அரட்டை அடிப்பதில் மூழ்கியிருந்தனர்.

சத்தமில்லாமல் அவர்களின் வீட்டுக்குடத்திலிருந்து தண்ணீர் எடுத்து நிரப்பிக் கொண்டான். இன்னோரிடத்தில் பற்றிக்கரியும் தேங்காய் நெய்யும் எடுத்துக்கொண்டு மறைவிடம் நோக்கி நடந்தான்.

செங்கதிர் வாணனின் இடைவிடாத முயற்சியால் விழுப்புண்பட்டவனிற்கும் கூடவிருந்தோருக்கும் தண்ணீர் கிடைத்தது. விழுப்புண் பட்டவனின் விழுப்புண்ணிற்கு பற்றிக்கரியும் தேங்காய் நெய்யும் கலந்த கைமருந்து வைத்தியமும் அவனால் நடந்தது.

பின்னர் உதவியணி வந்து அவர்களும் அடிவாங்கி விழுப்புண்பட்டோரின் எண்ணிக்கையும் கூடி, வெளியேறுவதற்கு பலமுறை முயன்று எதிரியிடம் அடிவாங்கிக் கடைசியாய் ஓர் நாள் சேற்றுக்குள்ளால் நடந்து ஒருவாறு வெளியேறினார்கள். இத்தனை துன்பங்களும் துயரங்களும் அவர்களை வாட்டிச்சல்லடையாக்கிய போதும் ஒன்று மட்டும் பத்திரமாய் எந்தச் சேதமுமில்லாமல் வந்து சேர்ந்தது. அது அவர்கள் திரட்டிய வேவுத் தகவல்கள் தான்.

இந்தச் செங்கதிர்வாணன் பின்னர் தேசத்தின் வெற்றிக்காகக் கரும்புலியாக மாறினான். வயதில் மூத்தவனான இவன் மற்றப் போராளிகளை மகிழ்வாய் வைத்திருப்பான். பயிற்சியின் போது கிடைக்கும் தேநீர் வேளை கூட போராளிகளை மகிழ்வாக்க நொடி கேட்பது இவன் வழக்கம். இதனால் நொடி மாஸ்ரர் என்ற பட்டப்பெயரும் இவனுக்கிருந்தது.

இந்தச் செங்கதிரிடம் ஒரு ஆசையிருந்தது. ஆட்லறி ஒன்றிற்கு தனது கையால் குண்டு கட்டி அதை வெடிக்க வைக்க வேண்டுமென்று. அந்தக் கனவோடு மணலாற்றுப் பகுதிக்குள் வேவுக்காகச் சென்று திரும்பும் வழியில் 29.10.1999 அன்று அவன் வீரச்சாவடைய நேர்ந்தது. நிறைவேறாத அந்த வீரனின் ஆசையைப் பின்னாளில் பல ஆட்லறிகளை உடைத்து கூடவிருந்த கரும்புலிகள் நிறைவேற்றி வைத்தார்கள்.

நினைவுப்பகிர்வு: போராளி துளசிச்செல்வன்.
நன்றி – விடுதலைப் புலிகள் இதழ் (04 புரட்டாசி 2008).

https://thesakkatru.com/veeraththin-sigarangal/

  • கருத்துக்கள உறவுகள்

வீர  வணக்கங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கரும்புலி வீரனுக்கு வீரவணக்கம்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.