Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விபரீதங்களோடு விளையாடும் விந்தை

Featured Replies

விபரீதங்களோடு விளையாடும் விந்தை

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

அறிவியலுக்கும் அபத்தத்துக்கும் இடையிலான பிரிகோடு, மிகவும் சிறியது. அறிவியலை விட, அபத்தத்துக்கு முக்கியத்துவம் அதிகமாகிப் போன உலகத்தில் நாம் வாழ்கிறோம். பயன் யாதெனில், கொரோனா வைரஸின் இரண்டாவது அலை, இப்போது ஆட்கொண்டுள்ளது. இது எதிர்பாராதது அல்ல; ஆனால், ‘முன்னே ஓடவிட்டுப் பின்னே துரத்தும்’ வித்தையை, இந்தப் பெருந்தொற்றை வைத்து, அரசியல்வாதிகள் ஆடிக்கொண்டிருக்கிறார்கள். 

இந்த ஆபத்தான விளையாட்டைப் பெரும்பாலான நாடுகள் விளையாடுகின்றன. அந்த நாடுகள், தமது சொந்த மக்களின் உயிரைப் பணயம் வைத்து, இந்த வித்தையை ஆடுகின்றன. இங்கே எழுகின்ற கேள்வி யாதெனில், இவ்வாறானதோர் ஆபத்துப் பற்றி, அறிவியலாளர்கள் தொடர்ச்சியாகச் சொல்லி வந்துள்ள போதும் அது, ‘செவிடன் காதில் ஊதிய சங்கு போல்’ ஆகியது. 

இது, ஏன் நடந்தது என்பதைக் கொஞ்சம் விரிவாகப் பார்க்க வேண்டியுள்ளது. இவ்வாண்டு மார்ச் மாதம் தொடக்கம், கொரோனா வைரஸின் தாக்கம், உலகளாவிய ரீதியில் அதிகரித்த வண்ணமே இருக்கின்றது. குறிப்பாக, நாளொன்றுக்குப் புதிதாகத் தொற்றுக்கு உள்ளாவோர் சாராசரியாக அதிகரித்தே வந்துள்ளது. ஆனால், தொற்றுக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை, புவியியல் ரீதியாக மாற்றமடைந்து கொண்டே சென்றமையால், அதிக கவனத்தை இது பெறவில்லை. குறிப்பாக, ஐரோப்பாவை மய்யங்கொண்டிருந்த இத்தொற்று, பின்னர் தென்அமெரிக்கா, ஆபிரிக்கா, ஆசியா என வேறுவேறு காலங்களில், வேறுவேறு கண்டங்களை மோசமாகப் பாதித்தது.

ஆனால், மேற்குலகில் இத்தொற்றுப் பரவும் வேகம் குறைவடைந்தமையை அடுத்து, உடனடியாக நிலைமை வழமைக்குக் கொண்டு வரப்பட்டது (வழமைக்குத் திரும்பவில்லை; கொண்டுவரப்பட்டது). பொருளாதாரப் பாதிப்புகளைக் காரணங்காட்டி, அரசுகள் சாதாரண நிலைமைக்குத் திரும்பின 

கொரோனா வைரஸின் முதலாவது அலையில் இருந்து, அரசுகள் கற்கத் தவறிய மிகப்பெரிய பாடம் யாதெனில், மக்கள் ஒரே நேரத்தில் வாழ்வாதாரம் சார்ந்த பொருளாதாரச் சவாலையும் நோய்த்தொற்றுச் சார்ந்த சுகாதாரச் சவாலையும் ஒருசேர எதிர்நோக்கினார்கள் என்பதையும் இவற்றால் விளைந்த பாதிப்புகளையும் ஆகும். இன்று, இரண்டாவது அலையிலும் இதே சவாலையே மக்கள் எதிர்நோக்குகிறார்கள். குறிப்பாக, தெற்காசியாவில் இதன் தாக்கம் மிகப்பெரிதாக இருக்கிறது.

http://static2.tamilmirror.lk/assets/uploads/image_491408e4b7.jpgஒக்டோபர் மாதம், தெற்காசியாவின் பொருளாதார நிலைவரம் குறித்த அறிக்கையொன்றை, உலக வங்கி வெளியிட்டிருந்தது. Beaten or Broken? Informality and COVID-19 என்று தலைப்பிடப்பட்ட இந்த அறிக்கை, சில முக்கியமான செய்திகளைச் சுட்டுகிறது. 

2020ஆம் ஆண்டு, தெற்காசியப் பிராந்தியத்தின் பொருளாதாரம் 7.7 சதவீதத்தால் சுருங்கும் என்றும், குறிப்பாக, இந்தியாவின் பொருளாதாரம் 9.9 சதவீதத்தாலும் இலங்கைப் பொருளாதாரம் 6.8 சதவீதத்தாலும் சுருங்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்தாண்டு தனிநபர் வருமானமானது, 2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, ஆறு சதவீதம் குறைவாக இருக்கும் அதேவேளை, பொருள்களின் விலை, கணிசமாக அதிகரிக்கும் என, எதிர்வுகூறுகின்றது. உலகின் வேறெந்தப் பிராந்தியத்தையும் விட, மிக அதிகளவிலான ஏழைகள், தெற்காசியாவிலேயே உருவாவார்கள் என்று, இவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதன் பின்னணியிலேயே, இலங்கையை நோக்க வேண்டியுள்ளது. இலங்கையின் பொருளாதார மந்தநிலை, கொரோனா வைரஸின் இரண்டாவது அலையை அடுத்து, இன்னமும் மோசமாகும். இலங்கையின் தொழிற்றுறையில் 70 சதவீதமான தொழிலாளர்கள், முறைசாராத் தொழிலில் ஈடுபடுபவர்கள். அவர்களுக்குத் தொழிற்பாதுகாப்போ, சமூக நலன்களோ கிடையாது. அவர்களே, இந்தத் தொற்றால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்படுவார்கள். 

இன்று, இலங்கை மிகப்பாரிய இக்கட்டில் மாட்டிக் கொண்டுள்ளது. ஒன்றில், நாடு முழுவதையும் முழு முடக்கத்துக்குள் கொண்டுவந்து, கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த வேண்டும். அல்லது, முழுமுடக்கத்தை அமல்படுத்தாமல் பொருளாதாரத்தைக் காப்பாற்ற வேண்டும். இவற்றில், எந்தப் பாதையை இலங்கை தெரிவு செய்யப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டியுள்ளது. 

இந்தச் சவால், இன்று, எல்லா அரசுகளுக்கும் உரியது. இலாபமா, மனிதாபிமானமா என்ற வினா, எல்லோர் மனதிலும் உள்ளது. ஆனால், அரசுகள் எப்போதும் இலாபத்துக்கே முதன்மை இடத்தை வழங்குகின்றன. முதலாவது அலையின் போது, அரசுகள் முழு முடக்கத்தை அறிவிக்கத் தயங்கின. பின்னர், கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்தவுடன், எல்லைகளைத் திறந்து, சந்தைகளைக் காக்க முண்டியடித்தன. இப்போது, இரண்டாவது அலையை எதிர்வுகூறி, அறிவியலாளர்கள் முழுமுடக்கத்தைக் கோரியபோது, அதை ஏற்க மறுத்த அரசுகள், இன்று முழு முடக்கத்தை நோக்கி நகர்கின்றன. 

அரசுகள், ஒருபுறம் அறிவியலைக் கேலிக்கூத்தாக்குகின்றன. மறுபுறம், இலாபங்கள் குறைவுபடாமல் பார்த்துக் கொள்கின்றன. அரசுகள், கவனம் குவிப்போரின் பட்டியலில், குடிமக்கள் கடைசியிலேயே இருக்கிறார்கள். ‘அதிகாரம், இலாபம், பெருந்தொற்று’ (Power, Profits and the Pandemic) என்று தலைப்பிட்ட அறிக்கையொன்றை, 2020 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம், ‘ஒக்ஸ்பாம்’ நிறுவனம் வெளியிட்டது. இவ்வறிக்கை சொல்கின்ற விடயங்களைச் சுருக்கமாகப் பார்க்கலாம்: 

இப்பெருந்தொற்றால் 500 மில்லியன் மக்கள் வறுமைக்குள் தள்ளப்படுவார்கள். 
முதல் ஆறு மாதங்களில், உலகளாவிய ரீதியில் 400 மில்லியன் மக்கள், தங்கள் வேலைகளை இழந்துள்ளார்கள். 

இப்பெருந்தொற்று தொடங்கியது முதல், உலகின் முதல் 100 நிறுவனங்கள், தங்கள் சொத்துகளை மூன்று ட்ரிலியன் அமெரிக்க டொலர்களால் அதிகரித்துள்ளன. 

உலகின் முதலாவது பணக்காரரான அமேசன் நிறுவனத்தின் ஜெவ் பிசோஸ், தன்னிடம் வேலை செய்கின்ற 8,76,000 ஊழியர்களுக்கும் ஆளுக்குத் தலா 105,000 அமெரிக்க டொலர்களை போனஸ் கொடுப்பனவாகக் கொடுத்தாலும் பிசோஸ் இந்த நோய்த்தொற்று தொடங்கமுன்னர் வைத்திருந்த சொத்து மதிப்பை விட அதிகமான சொத்துக்களையே வைத்திருப்பார்.

மார்ச் முதல் ஓகஸ்ட் வரையான ஐந்து மாதங்களில், ஜெவ் பிசோஸின் சொத்து 92 மில்லியன் அமெரிக்க டொலர்களால் அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் இறைச்சி பொதியிடும் பணியில் ஈடுபட்டுள்ள ஒன்பதில் ஒருவர், கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளார். (மொத்தம் 27,000 பேர்). ஆனால், தொழிற்சாலைகள் தொடர்ந்து இயங்கிய வண்ணமே உள்ளன. 

உலகின் முக்கியமாகப் பத்து ஆடை உற்பத்தி நிறுவனங்கள், தங்கள் பங்குதாரருக்கு இலாபத்தின் பங்காக வழங்கிய தொகை 21 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும். ஆனால், இந்த ஆடைகளை உற்பத்தி செய்யும் மூன்றாமுலக நாடுகளில் வாழும் தொழிலாளர்கள், அடிப்படைச் சம்பளமோ, தொழில் பாதுகாப்போ இன்றிப் பணியாற்றுகிறார்கள். இந்தத் தரவுகள் சொல்லும் செய்தி யாதெனில், அரசுகள் மக்கள் நலன் சார்ந்தவையல்ல என்பதாகும். உலகம் இயங்கிவரும் பொருளாதார முறைமை குறித்த அடிப்படையான வினாக்களை இவை எழுப்புகின்றன. ‘சந்தையே அனைத்தையும் தீர்மானிக்கும்; அரசாங்கம் எல்லா விடயயங்களிலும் தலையிடக் கூடாது. அதன் மூலம்தான் உலகப் பொருளாதாரத்தை, புதிய பாய்ச்சலில் கொண்டு செல்ல முடியும்’ என்ற வாதம், கடந்த பல தசாப்தங்களாக முன்வைக்கப்பட்ட ஒன்று. இன்று சந்தையே அரசிடம் தலையிட்டு, சந்தையைக் காப்பாற்றக் கோருகின்றது.

தனியார்மயமாக்கலின் விளைவால், பல நாடுகளின் பொதுச்சுகாதாரம், மருத்துவம், பொதுக்கல்வி ஆகியவற்றைக் கொடுப்பது, அரசுகளின் கடமை இல்லை. அனைத்தையும் சந்தையே பார்த்துக் கொள்ளட்டும் என்ற, புதிய தாராளவாதக் கொள்கையின் விளைவால், மக்கள் சேவைகள், தனியாரின் கைகளுக்குக் சென்றன. இதனால், சாதாரண மக்களுக்கு இவையனைத்தும் எட்டாக் கனியாகின்றன. இன்று, பெருந்தொற்று அனைத்தையும் ஆட்டங்காண வைத்துவிட நிலையில், அரசுகளே அனைத்தையும் பார்க்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 

இந்தப் பொருளாதாரச் சிக்கலைக் கொஞ்சம் ஆழமாகப் பார்த்தால், 2008ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியில் இருந்து, இன்னமும் உலகம் விடுபடவில்லை. அந்த நெருக்கடி பல்வேறு மட்டங்களில் ஏற்படுத்திய தாக்கம், இன்று சமூக நெருக்கடியாக மாறியுள்ளது. இந்தச் சமூக நெருக்கடியைக் கையாள இயலாத நிலையில், தீவிரவலதுசாரிப் பாசிசத்தை அரசின் பகுதியாக முதலாளித்துவம் கட்டமைக்கிறது. 

அதன் இன்னொரு பாதுகாப்பான வடிவமாகத் தேசியவாதமும் மதமும் கிளறி விடப்படுகின்றன. இந்தத் தீவிர வலதுசாரி ஆட்சிகள், கொரோனாவையும் அது தொடர்பான அறிவியலையும் புறந்தள்ளுகிறார்கள். கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதை விட்டு, புதிய சிக்கல்களை உருவாக்கி, மக்களைத் திசை திருப்புகிறார்கள். இன்று அரசுகள், மக்களின் உயிர்களோடு விளையாடுகின்றன. இந்தப் பெருந்தொற்றை கேவலப்படுத்துகிறார்கள்; கேலிக்கூத்தாக்குகிறார்கள். 

இன்னொருபுறம், ‘கொரோனாவுக்கான தடுப்புஊசி கண்டுபிடிக்கப்பட்ட பிறகு....’ என்ற சொல், அரசியல்வாதிகளின், கொள்கை வகுப்பாளர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது. அவ்வாறு, தடுப்புஊசி கண்டுபிடிக்கப்பட்டாலும் அதன் பயன் சாதாரண மக்களைச் சேராது. அது, இன்னொரு வகையான அசமத்துவத்தையே உருவாக்கும். மொத்தத்தில், இங்கு நடப்பது யாதெனில், ‘பூனைக்கு விளையாட்டு; எலிக்கு சீவன்போகிறது’ கதைதான். 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/விபரீதங்களோடு-விளையாடும்-விந்தை/91-258367

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.