Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

கடற்கரும்புலி மேஜர் கணேஸ்

Black-Sea-Tiger-Mejor-Kanesh.jpg

சாவுக்கு விலங்கிட்ட நெருப்பு மனிதர்கள் கடற்கரும்புலி மேஜர் கணேஸ் / குயிலன்.

கிளாலிக் கடலின் அலைகள் நனைத்துச் செல்லும் கால்களில், குருதிக் கறை பிசுபிசுத்த ஒவ்வொரு காலையின் போதும் பிணவாடையைக் காவிவரும் கடற்காற்றின், ஒவ்வொரு வீச்சின் போதும் –

அவர்களுக்குள் இனம்புரியாத ஒரு ஆவேசம் கொதித்த எழும்.

கிளாலிக் களத்தில் தளபதி சாள்ஸ் வீழ்ந்த போது, அது அவர்களுக்குத் தாங்க முடியாத பேரிழப்பாக ஆகிவிட்டது.

எல்லாவற்றுக்குமாகச் சேர்த்துப் பதிலடி கொடுக்க அவர்கள் துடித்துக்கொண்டிருந்தனர்.

வரதனுக்கும் மதனுக்கும் முந்திய 60 நாட்கள் –

அவர்கள் சக்கை வண்டிகளோடு பகைவனைத் துரத்துவதும், அவன் சண்டை பிடிக்காமலே தப்பி ஓடிவிடுவதும், பின்னர் ஏமாற்றத்தொடு இவர்கள் திரும்பிச் செல்வதுமாகக் கழிந்த அந்த இரவுகளில் –

அவர்களில் ஒருவருக்காக தன்னை அனுப்பிப் பார்க்குமாறு நச்சரித்துக் கொண்டிருப்பான் கணேஸ்.

‘டோறா’வை நொருக்குவதற்கான தாக்குதலின் திட்டம் தயாரிக்கப்பட்டபோது –

அந்தச் சாதனையின் சாதனையாளர்களுள் ஒருவனாகத் தான் போக வேண்டுமென்ற ஆதங்கம் அவனுக்கு.

பருத்தித்துறைக் கடலில் புவீந்திரனும், மணியரசனும் 15 நாட்களுக்கு மேல் காத்திருந்த காலத்திலும் அதே நச்சரிப்பு.

ஆனாலும், கணேஸ் இல்லாமலேயே அந்த இரண்டு தாக்குதல்களும் வெற்றிகரமாக முடிந்தபோதும் கூட, உற்சாகம் குன்றாமல் அடுத்த தாக்குதலுக்கான காத்திருப்புக்களில், வேட்கையோடு அவனது நாட்கள் நகர்ந்தன. கூடவே கோபியும் இன்னும் சில கரும்புலிகளும்.

ஏற்கெனவே இரண்டு விசைப்படகுகளை இழந்துவிட்ட எதிரி பின்வந்த நாட்களில் அதீத அவதானத்துடனேயே இயங்கினான்.

வரதன் – மதனுக்குப் போல, கண்டபின் தப்பி ஓடும் தந்திரத்தை அல்லாமல் – இவர்களின் கண்களில் தட்டுப்படுவதைத் தவிர்த்துவிடுவதையே தான், எதிரி தனது யுக்தியாகக் கையாண்டான்.

இப்படியாக – இலக்கை அடையாத துயரோடு இவர்கள் திரும்பி வருவதுகூட, பூநகரிக்குள் ‘தவளைகள்’ நுழையும்வரை தான் நீடித்தது.

கடலில் இரைதேடிவிட்டுக் கரையேறும் சமயங்களில், சக்கைவண்டிகளில் வரும் மற்றவர்கள், எங்கள் சண்டைப் படகுகளினூடு லாவகமாக வளைத்துத் திருப்பி அலை கிளம்ப ஓடிக் காட்டுகிற போது, கணேஸ் மட்டும் மெதுவாக ஓடி, ஓரமாக வந்து, அமைதியாகக் கரையேறுவான்.

“இந்த மாதிரி ஓட உன்னால ஏலாதா?” என்று யாராவது கேட்டால் “எதிர்பாராம ஏதாவது நடந்திட்டால்……” என இழுத்து, “அநியாயமாக எல்லோரும் சாகாமல் ஆக்கபூர்வமாக ஏதாவது செய்ய வேணும்” என்று தொடரும், அவன், “சம்பவம் ஆகக் கூடாது மச்சான், சரித்திரம் ஆகோணும்” என்று முடிப்பான்.

இப்போது –

‘ஒப்பறேசன் தவளை’ வரலாற்றுச் சமரில், நாகதேவன் துறை கடற்படைத்தளம் மீதான தாக்குதலில் முக்கிய பங்கேற்று, அந்த வீரமகன் சரித்திரமாகி விட்டான்!

அன்றைய காலம் –

இந்திய விஸ்தரிப்புவாதிகளின் படைகளை எதிர்த்து தமிழீழம் போர்க்கோலம் பூண்டிருந்த எழுச்சி நாட்கள்.

அப்போது அவனுக்கு வயது பதின்நான்கு தான்.

சாற மடிப்பிற்குள் சேட்டை மறைத்துக் கட்டிக்கொண்டு, அம்மாவுக்கு போக்குக் காட்டி விட்டு வெளியேறுகின்றவனைப்பற்றி “தம்பி சந்தியில போஸ்டர் ஒட்டிக் கொண்டு நிற்கிறான்” என்றோ, “கடையில சாப்பாட்டுப் பார்சலுகள் கட்டிக் கொண்டு அந்தப் பக்கமா போறான்” என்றோ யாராவது சொல்லுவார்கள்.

அம்மாவின் இதயம் வேகமாகத் துடிக்கும்.

அம்மாவுக்கும், நாகநாதி அய்யாவிற்கும் வாரிசாக, 21 வருடங்களுக்கு முன்னர் பெப்ரவரி 13 ஆம் நாளில் பிறந்தவன் ஜீவநேசன்.

இத்தனை வருடங்களாக பாசத்தைக் கொட்டி வளர்தெடுத்த தாயல்லவா…… அவள் துடித்துப் போனாள். அவள்தான் துடித்தாளே தவிர அவன் ஓய்ந்ததில்லை.

திடீரென ஒரு காலை, அவசர அவசரமாக ஓடிவந்த அயல்வீட்டுக்காரர் ஒருவர்இ கடையில் சாப்பாட்டுப் பொதிகள் வாங்கிய ஜீவனை யாரோ காட்டிக்கொடுத்து, இந்தியர்கள் இழுத்துச் செல்கின்றார்கள் என்ற செய்தியைச் சொன்ன போது, அம்மா இடிந்து போனாள். அந்த வீடு சாவீடு போலாகிவிட்டது. அழுகுரல் நவக்கிரி கிராமத்தை நிறைத்தது.

காங்கேசன்துறை இந்தியப்படைச் சிறையில் அடுத்த ஒரு வருடம் கழிந்தது. பார்க்கப் போகின்ற அப்பாவிடம் ஊர்ப்புதினங்களைத் தான் விசாரித்தானேயல்லாமல், வீட்டுப் புதினங்களையல்ல. மிகவும் அமைதியானவனான அந்தச் சிறுவன் உள்ளத்தில், ஆவேசப் புயலொன்று அப்போததான் மையங்கொண்டது.

இந்தியர்கள் வெளியேற்றப்பட்ட போது, அவர்கள் விடுவித்து விட்டுப்போன கணேஸ், ஐந்தாறு நாட்கள் அம்மாவோடு இருந்தவிட்டு, முழுமையாகவே இயக்கத்திற்குப் போய் விட்டான்.

அம்மா துயரத்தோடு கடவுளை நேர்ந்துகொண்டிருக்க, அந்த விடுதலைப் புலி துப்பாக்கியோடு ‘போர் உலா’ வந்தான்.

வட தமிழீழப்போர் அரங்கின் அநேகமான எல்லா முனைகளிலும், அவனுடைய துப்பாக்கி கனன்றிருக்கின்றன.

கோட்டையை முற்றுகையிட்டிருந்த போது, அதை முறியடிக்க வந்தவர்களை மண்டைதீவில் எதிர்கொண்டபோது, மாங்குளத்தில் படை முகாமை அழித்த போது, ‘வன்னி விக்கிரம’ என்று படையெடுத்தவர்களைத் தோல்வியுறச் செய்தபோது, தாயகத்தின் இதயத்தைப் பாதுகாத்து மணலாற்றில் ‘மின்னலை’ தெறிக்கச்செய்த போது, ஆனையிறவில் ‘பலவேகய’ வில் புறப்பட்டவர்களை ‘ஆமைவேகய’ வில் நகரச் செய்த போது, மன்னாரில் படையெடுத்தவர்களுக்குப் பாடையெடுத்த பதுங்கித் தாக்குதலின் போது – இப்படியாக எங்கும் எல்லாச் சமர்களிலும் கணேஸ் சுவடு பதித்தான்.

அந்தக் காலத்திலேயே, ஒரு கரும்புலித் தாக்குதலுக்கான கனவு அவனது இதயத் துடிப்பொடு கலந்துதானிருந்தது.

இப்படியிருக்கையில் ஒரு நாள் –

அது, கடந்த வருடத்தின் இறுதி. பலாலியிலிருந்து தெல்லிப்பளை நோக்கி முன்னேறிய ‘ஒப்பறேசன் பூமியதிர்ச்சி’யை நிறுத்த நடந்த சண்டையின் போது – இடது முழங்காலுக்கு கீழே துளைத்த ரவை முக்கிய நரம்பொன்றை அறுத்துச் சென்று விட்டது.

சண்டைமுனையில் மருத்துவ வசதியின்மையால் – பெருமளவு இரத்தம் வெளியேறிவிடஇ மயக்கமுற்று எடுத்துச் செல்லப்பட்ட கணேஸ்.

இரண்டு நாட்களுக்குப்பிறகு, யாழ்ப்பாண மருத்துவமனையின் கட்டிலொன்றில், வெடிபட்ட இடத்திற்குக் கீழே அந்தக் கால் அகற்றப்பட்டுவிட்ட நிலையில், அடக்கிக்கொள்ள முடியாத அழுகையோடு படுத்திருந்தான்.

போராட்டத்தில் காலை இழந்தமைக்காக அவன் கண்ணீரைச் சிந்தவில்லை. அருகில் நின்ற நண்பனின் கையைப்பற்றி அவன் விம்மினான், “இனி எப்படியடா நான் சண்டைக்குப் போறது…….

கணேஸ்!

எவ்வளவு மென்மையானவனாக அவன் வாழ்ந்தான்! எவரோடும் சச்சரவுக்குப் போகாமல், எல்லோரையும் சமாளித்துக் கொள்வானே! என்னதான் பிரச்சினையென்றாலும், விட்டுக்கொடுத்துவிட்டு விலகிக்கொண்டானே தவிர, அவன் சண்டை பிடித்துப் பெரிதாக்கியிருக்க மாட்டான். அவன் எவ்வளவோ பொறுமைசாலியாக இருந்தான்; எல்லா விடயங்களிலுமே.

அவனை மேலோட்டமாகப் பார்க்கிற எவரும், எதுவும் தெரியாத அப்பாவி என ஒரு கணிப்பீட்டை வைப்பார்கள்.

விசயம் தெரியாத நாலுபேரை இருத்திவிட்டு, எல்லாம் தெரிந்த மேதாவிகளைப் போல புழுகித்தள்ளும் நண்பர்களை தன்னிடம் வசமாகச் சிக்கவைத்து – “தேவையில்லாம வாயைக்குடுத்து மாட்டிக் கொண்டோமே” என்று தலையைப் பிய்த்துக் கொண்டு எழுந்துபோகிற அளவுக்கு அவன் கொண்டுபோய்விடுவான்.

இருப்பினும், தனக்குத் தெரியாத – அது தொடர்பான பூரண அறிவு இல்லாத – எந்த விடயங்களைப் பற்றியும் அவன் வாய் திறக்கவே மாட்டான். வெட்கப்படாமல் – விசயம் தெரிந்தவர்களிடமிருந்து விசயங்களைத் தெரிந்து கொள்வதில் தான் அவனுக்கு ஆர்வம் அதிகம்.

தான் செய்ய நினைக்கும் காரியங்களைச் செய்து முடிக்கும் வரை முயற்சி எடுப்பதும், காலிழந்தவன் என்று கருணைகாட்டி மற்றவர்கள் உதவ முன்வந்தாலும் புன்சிரிப்போடு மறுத்து விட்டு, தானே எல்லாவற்றையும் செய்து முடிப்பதும், ஒரு கால் இல்லாமலும் கூட முகாமிலிருக்கும் முழு மனிதர்கள் செய்யும் வேலைகளிலெல்லாம் தன்னையும் ஈடுபடுத்த எத்தனிப்பதும் அவனது சிறப்பான அம்சங்கள். அவை நாங்கள் அவனிடம் படிக்க வேண்டிய பாடங்கள்.

காயம் மாறி – ஜெய்ப்பூர் காலோடு துயரத்தையும் சுமந்து – மருத்துவமனையிலிருந்து வந்தவனுக்கு, யாழ் மாவட்ட தாக்குதற் படைப்பிரிவில் நிதி வேலை கொடுக்கப்பட்ட போது சண்டைக்குப் போக வேண்டுமென தளபதியோடு சண்டைபிடித்து ஆனையிறவுக்குப் போனதும் –

அகன்ற பாத்திரத்தில் சோறு குழைத்து, ஐந்தாறு பேர் சேர்ந்து நாங்கள் சாப்பிடும் போது – வெறுமையாகும் பாத்திரத்தை நிரப்பிவர வேறொருவரையும் பாராமல் தானே தூக்கிக்கொண்டு எழுவதும் –

‘ஜெயராஜ்’ முகாமிலிருந்த ‘அருகிருக்கை’ பொருத்திய டீ.ளு.யு. மோட்டார் சைக்கிளில் அவனை இருத்தி நாங்கள் தள்ளி விளையாடுகையில் – வளைத்துத் திருப்பி ஓட வீடு வசதி காணாதென்று முற்றத்துக்கிறக்கி, பின் முற்றமும் வசதி காணாதென்று வீதிக்கெடுத்த போது, தளபதியைக் கண்டு நாங்கள் தடுமாற, வேலியோடு மோதி வண்டி கவிழ, தலையில் நல்ல அடிபட்ட அவன் எழுந்து பிடரியைச் சொரிந்து கொண்டு நின்றதும் – தண்டனை தந்த போது கும்மாளமிட்டபடி அவனும் சேர்ந்து செய்ததும் –

கிளாலியில் எம்மவர்களை வேட்டையாட வரும் எதிரியை நாங்கள் வேட்டையாடும் கடற்சண்டைகளில், ‘நேவி’யைக் கலைத்து விரட்டும் புலிகளின் விசைப்படகுகளிற்கு அவன் ஓட்டியாய் இருந்துததும் –

ஐந்துநாள் ஓய்வு தந்து வீட்டுக்கனுப்ப – ‘இன்று படகுச்சேவை’ என்று நாளேட்டின் செய்தியைப் பார்த்து விட்டு – பாதுகாப்புப் பணியிலீடுபட இரண்டாம் நாளே புறப்பட்டு அவன் கிளாலிக்கு வந்ததும் –

அப்போதெல்லாம் கரும்புலித் தாக்குதல் ஒன்று செய்யவேண்டுமென்ற வேட்கையை, தனது மனக்குகையினுள் அவன் சுமந்து கொண்டு திரிந்ததும் –

நாங்கள் அடிக்கடி அவனைப்பற்றிப் பேசிக்கொள்ள எங்களுக்குள் உயிர்வாழும் அவனது நினைவுகள்.

அவனது வீரம்; அவனது தியாகம்; அவனது முயற்சி; அவனது விட்டுக்கொடுப்பு; அவனது முன்மாதிரி; ஒட்டுமொத்தமாக அவனே எப்போதும் நினைவுகொள்ள வேண்டிய எடுத்துக் காட்டுக்கள்.

கணேஸா!

உனது வீட்டுக்கு நீ போய் வந்த அந்த இறுதிப் பயணம்.

அதை நினைக்கும் போதெல்லாம் உன் அம்மாவின் விழி ஓரங்களில் நீரின் கசிவு.

“பழஞ்சோறு குழைச்சுத் தீத்தி விடணை” என்று சாப்பிட்டாயாம்.

ஒருநாளுமில்லாதது போல, அப்பாவையும் அம்மாவையும் கொண்டு நீர் அள்ளிக் குளித்தாயாம்.

“தலையெல்லாம் காஞ்சுபோய்க் கிடக்குதேடா…… கொஞ்சம் எண்ணை வையன்ரா……” என்று ஆதரவாகக் கேட்ட அம்மாவிடம், “நாளைக்கு கடல் தின்னப்போற தலைதானேயணை……” என்றும் சிரித்தபடி சொன்னாயாம்.

முன்னர் யாரோ சொன்னது நினைவுக்குவர, இப்போது சாதுவாக சந்தேகமும் எழ, ஆச்சரியத்தோடும் அச்சத்தோடும், “நீ கரும்புலியாய் போகப்போறியாம் தம்பி…… உண்மையாவோடா……? என்று பரிதாபமாகக் கேட்ட அம்மாவை, சிரித்துக்கொண்டு வந்து கட்டிப்பிடித்துக் கொஞ்சி,இ “உன்னை விட்டிட்டுப் போவனோணை அம்மா!” என்று சொல்லிவிட்டுப் போனாயாம்.

இப்போது –

கண்ணீரோடு அந்தத் தாய் தன் வீரமகனின் படத்திற்குப் பூப்போட்டுக்கொண்டிருக்கின்றாள்.

‘ஒப்பறேசன் தவளை’க்கான உற்சாகமான முன்னேற்பாடுகள்.

உறக்கமற்ற இரவுகள்; ஓய்வற்ற நாட்கள்;

கடற்புலி வீரர்களின் கடுமையான கடற்பயிற்சி.

வெடிமருந்துப் படகினை எதிரியின் தளத்தோடும் மோதும் செயல்முறையை, கணேஸ் சலிப்பின்றிக், களைப்பின்றிப் பயின்றான்.

அந்த நாள் வந்தது –

சர்வதேச செய்தி நிறுவனங்களின் அலைவரிசைகளில் புலிகள் இயக்கத்தை முதன்மைப்படுத்திய நாள் அது.

சாமம் கழிந்த நள்ளிரா வேளை.

சமர் ஆரம்பித்துவிட்டது; பூநகரியில் புயல் வீசத் தொடங்கிவிட்டது.

நாகதேவன்துறை கடற்படைத் தளத்தைச் சூழ்ந்த புலிகளின் கடல் – தரை வழிகளிலான ஆக்ரோசமான பாய்ச்சல்.

அங்கிருந்தஇ ‘றாடர்’ கோபுரமும் தகவல் பரிவர்த்தனை நிலையமும் தான் கணேசின் இலக்கு.

உரிய நேரம் வந்தது. உத்தரவுக்காக காத்திருந்தவன், இதுதான் உரிய தருணம் என்பதைத் தானாகவே தீர்மானித்தான்; புறப்பட்டான்.

கடலில் – தனது தளத்தைச் சுற்றி – எதிரி அமைத்திருந்த முட்கம்பி வேலிகளை எகிறிக் கடந்து பாய்ந்தது கணேசின் வெடிமருந்துப் படகு.

இலக்குப் பிசகாத தாக்குதல். தொடரும் வெடியோசைகளுக்கு நடுவே கடலதிரும் குண்டோசை. கண்ணிமைப்பொழுதில் பிரகாசித்த ஒளிப்பிழம்பு.

யாழ்ப்பாணக் கடல்நீரேரியில், தமிழர்களின் பிணங்களை மிதக்கச் செய்தவர்களை, அதே கடல் நீரேரியிலேயே பிணங்களாக மிதக்கச் செய்து விட்டு, உப்பு நீராக உறுமாறிப் போனான் அந்த வீரன்!

“மனித தியாகத்தின் இமயத்தைத் தொட்டுவிட்ட இந்த இனிமையானவர்களை நான் அறிவேன். அவர்களது நெஞ்சத்தின் பசுமையில் ஊற்றெடுத்த உணர்வுகளையும் நான் புரிவேன். ஏதோ ஒன்று, மனித விடிவை நோக்கி நகரும் உந்து சக்தியாக அவர்களை ஆட்கொண்டிருந்தது. அந்த விடுதலையின் தாகத்தைத் தீர்ப்பதற்கு, எதையும் செய்ய அவர்கள் தயாராக இருந்தார்கள்” – தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள்.

நன்றி: விடுதலைப்புலிகள் இதழ் (மார்கழி – தை, 1994).

https://thesakkatru.com/black-sea-tiger-mejor-kanesh-kuyilan/

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கரும்புலி வீரனுக்கு வீரவணக்கம்



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.