Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கமலாவோ விமலாவோ கையாள, கட்டமைப்பு வேண்டுமே? நிலாந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கமலாவோ விமலாவோ கையாள, கட்டமைப்பு வேண்டுமே? நிலாந்தன்…

November 15, 2020

kamala-harris-with-rohini-lakshmi-1024x6

கமலா ஹாரிஸ் அமெரிக்க துணை ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின் ஈழத் தமிழர்களில் ஒரு பகுதியினர் மத்தியில் உற்சாகம் மேலிட்டுள்ளது. அதிலும் சற்று கற்பனை கூடிய சிலர் கமலாவின் பூர்வீகத்தை இந்தியாவில் இருந்து பெயர்த்து எடுத்து மானிப்பாய் வரை கொண்டு வந்து சேர்த்து விட்டார்கள். வேறு சிலர் கமலா ஹாரிஸின் அலுவலகப் பிரதானியாக நியமிக்கப்பட்டிருக்கும் ஈழத் தமிழ் வேரைக் கொண்ட பெண்ணாகிய ரோகிணி லக்ஷ்மி கொஸோக்லு  குறித்தும் பெருமைப்படுவதாகத் தெரிகிறது.

இவ்வாறு கமலாவுக்கும் ரோகிணிக்கும் சொந்தம் கொண்டாடி கமலாவின் வருகையால் தமது அரசியல் வாழ்வில் ஏதும் நல்ல திருப்பங்கள் நடக்கும் என்று எதிர்பார்ப்போடு ஒரு பகுதி தமிழர்கள் உற்சாகமாகக் காணப்பட இன்னொரு பகுதியோ இவ்வாறு கமலாவின் வருகையைக் கொண்டாடும் தமது சமூகத்தைச் சேர்ந்தவர்களை கடுமையாகக் கிண்டலடித்து வருகிறது.

அமெரிக்கா போன்ற ஒரு பேரரசின் வெளியுறவுக் கொள்கைகளை அதன் அதிபராக இருக்கும் ஜோ பைடன் போன்றவர்களால் கூட நினைத்தபடி செங்குத்தாக திருப்பிவிட முடியாது. அதிலும் உப ஜனாதிபதியாக இருக்கும் கமலா ஹாரிஸ் அதில் எப்படிப்பட்ட நிர்ணய கரமான மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும்?

தனது தமிழ்ப் பூர்வீகம் காரணமாக அவர் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையில் தமிழ் மக்களுக்கு சாதகமான திருப்பங்களை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்ப்பது மிகவும் அப்பாவித்தனமானது. இது  ஈழத் தமிழர்களில் ஒரு பகுதியினர் மத்தியில் காணப்படும் வெளியாருக்காக காத்திருக்கும் அரசியலின் ஆகப் பிந்திய வெளிப்பாடு எனலாம்.

கமலா வந்தால் என்ன விமலா வந்தால் என்ன ஒரு பேரரசின் வெளியுறவுச் செயற்பாட்டில் மாற்றத்தை  ஏற்படுத்துவதில் அடிப்படையான வரையறைகள் உண்டு. இந்த உலகம் அதிகபட்சம் அரசுகளால் ஆனது அரசுக்கும்-அரசுக்கும் இடையிலான கட்டமைப்பு சார் உறவுகளின் ஊடாகவே வெளியுறவுக் கொள்கை பெருமளவுக்கு முன்னெடுக்கப்படும்.

ஓர் அரசைக் கையாள முடியாது போகும் போது வெளியரசுகள் அல்லது பேரரசுகள் அல்லது உலகப் பொது நிறுவனங்கள் அரசற்ற தரப்புக்களைக் கருவிகளாகக் கையாள்வது உண்டு.  மேற்காசியாவில் குர்திஸ் மக்கள் தென் ஆசியாவில் ஈழத் தமிழர்கள் போன்ற உதாரணங்களை இங்கு கூறலாம்.

இவ்வாறு அரசதரப்புக்களாக உள்ள சிறிய தேசிய இனங்களை பெரிய அரசுகள் கையாள முற்படும் பொழுது அந்தப் பேரரசுகளால் கையாளப்படுவதற்குப் பதிலாக பேரரசுகளை தாங்கள் எப்படி கெட்டித்தனமாகக் கையாளலாம்? என்று சிறிய தேசிய இனங்கள் சிந்திக்க வேண்டும்.

இவ்வாறு சிந்திப்பதில் அடிப்படையான வரையறைகள் உண்டு என்பதை இக்கட்டுரை ஏற்றுக் கொள்கிறது. முதலாவது வரையறை-அரசுக்கும் அரசுக்கும் இடையிலான உறவுகள் கட்டமைப்பு சார்ந்தவை என்பது. அரசற்ற தரப்பாக உள்ள  சிறிய தேசிய இனங்களைப் பொறுத்தவரை அவ்வாறான கட்டமைப்பு சார் உறவுகள் இருக்காது. இது ஒரு முக்கியமான அடிப்படைப் பலவீனமாக இருக்கும்.

இரண்டாவது- அச்சிறிய தேசிய இனத்தின் அமைவிடம் எது என்பது.அந்த அமைவிடமே அச்சிறிய தேசிய இனத்தின் தலை விதியைத் தீர்மானிக்கும்.

 மூன்றாவது-அச்சிறிய தேசிய இனமானது சிதறடிக்கப்பட் டிருந்தால் ; அங்கே ஒருமித்த கருத்தும் ஒன்றிணைந்த செயற்பாடும் இல்லையென்றால் அதாவது ஒரு தேசமாகச் சிந்திக்கவில்லை என்றால்  அதுவும் நிலைமையைச் சிக்கலானதாக மாற்றிவிடும்.

எனவே ஈழத்தமிழர்கள் வெளி அரசுகளை கையாள்வதற்கு முதலில் புத்தி பூர்வமான விஞ்ஞானபூர்வமான ஒன்றிணைந்த ஒரு கட்டமைப்பை உருவாக்க வேண்டும். அப்படியொரு கட்டமைப்பு இல்லையென்றால் கமலா வந்தாலும் விமலா வந்தாலும் எதுவும் நடக்கப் போவதில்லை.

முப்பத்தி எட்டு ஆண்டுகால ஆயுதப் போராட்டத்தின் போதும் அதற்குப் பின்னரான கடந்த பத்து ஆண்டுகளிலும் ஈழத் தமிழர்களிடம் அப்படி ஒரு பொருத்தமான வெளி விவகாரக் கட்டமைப்பு இருக்கவில்லை. ஆயுதப் போராட்ட காலகட்டத்தில் ஒவ்வொரு இயக்கமும் தனக்குள் இருந்த புத்திஜீவிகளை வைத்துக் கொண்டு சில கையாளுதல்களைச் செய்தது. ஆனால் அவை நிறுவனமயப்பட்ட துறைசார் நிபுணத்துவம் மிக்க கட்டமைப்புக்கள் அல்ல.

ஆயுதப் போராட்ட இயக்கங்களில் அதிக காலம் களத்தில் நின்று பிடித்த;ஒரு கருநிலை அரசைக் கட்டியெழுப்பிய விடுதலைப் புலிகள் இயக்கம் கூட அப்படியொரு கட்டமைப்பை உருவாக்கவில்லை. அன்ரன் பாலசிங்கம்  ஒரு தனி ஆள் வெளியுறவுக் கட்டமைப்பை வெற்றிகரமாக முன்னெடுத்தார். ஆனால் அது ஒரு முழு நிறைவான நிறுவனமயப்பட்ட கட்டமைப்பாக இருக்கவில்லை. அதனால்தான் அவருக்குப் பின் அது தொடர்ந்தும் இயங்கக் கூடியதாக இல்லை.

அதுமட்டுமல்ல, 2009ஆம் ஆண்டு போரில் விடுதலைப் புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்ட பொழுது அத்தோல்வியானது ராணுவ ரீதியானது மட்டுமல்ல ராஜீய ரீதியிலானதும்தான். அது அந்த இயக்கத்தின் வெளியுறவுக் கொள்கைக்கு கிடைத்த ஒரு தோல்வியும் தான்.

இப்பொழுது கமலா ஹாரிசைக் கையாள்வது என்று சொன்னால் அதற்கு ஒரு கட்டமைப்பு வேண்டும். அவர் ஒரு தமிழர் என்பதனால் அவர் தமிழ் மக்களின் விடயத்தில் இரக்கமாக இருப்பார் என்று உணர்ச்சிகரமாக சிந்தித்தால் மட்டும் போதாது. ராஜீய அரங்கில் ஆசாபாசங்களை விட, அன்பை விட, காதலை விட, இன உணர்வை விட, அதிகம் வேலை செய்வது பொருளாதார நலன்களும் ராணுவ நலன்களும்தான். இதில் இன உணர்வுகளையும் அற உணர்வுகளையும் தனிப்பட்ட நட்புகளையும் பயன்படுத்தி எவ்வாறான மாற்றங்களைச் செய்யலாம் என்று பரிசோதிப்பதற்கு ஒரு கட்டமைப்பு சார்ந்த சிந்தனை வேண்டும். விஞ்ஞானபூர்வமான அணுகுமுறை வேண்டும். இல்லையென்றால் தனிப்பட்ட உறவுகளை மட்டும் நம்பி; தனிப்பட்ட நெருக்கத்தை மட்டும் நம்பி இன அடையாளத்தை மட்டும் நம்பி வெளியுறவு விவகாரங்களை கையாள முடியாது.

ஈழப்போரில் அதற்கு மிகவும் கூர்மையான ஓர் உதாரணம் உண்டு. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவருக்கும் அமரர் எம்.ஜி.ஆருக்கும் இடையே பாசப்பிணைப்பான மதிப்பான ஒர் உறவு இருந்தது. அந்த உறவின் காரணமாக எம்ஜிஆர் அந்த இயக்கத்துக்கு அதிகரித்த உதவிகளைச் செய்தார். எம்ஜிஆரின் அரசியல் பகைவரான கருணாநிதி புலிகள் இயக்கத்தை நெருங்கிச் செல்வதில் அடிப்படையான சில வரையறைகளை ஏற்படுத்தியதில் மேற்படி உறவும் ஒரு பகுதிக் காரணம் தான். எனினும் எம்ஜிஆருக்கும் புலிகள் இயக்கத்தின் தலைமைக்கும் இடையிலான நெருக்கம் எனப்படுவது தனிப்பட்ட ஓர் உறவாகவே இருந்தது. அது ஒரு நிறுவன மயப்பட்ட ராஜீய உறவாக குறைந்தபட்சம் ராஜீய ஈடாட்டமாக, ராஜீய பங்கீடுபாடாக வளரவில்லை.  இதை  அக் காலகட்டத்திலேயே மு.திருநாவுக்கரசு சுட்டிக்காட்டியிருக்கிறார்.

எம்ஜிஆருக்கும் புலிகள் இயக்கத்துக்கும் இடையிலான உறவு கட்டமைப்பு சார்ந்த ஒன்றாக அறிவு பூர்வமானதாக மாற்றப்படாத ஒரு பின்னணியில் எம்ஜிஆருக்குப் பின் அவருடைய கட்சியே அவரைப் போன்று விடுதலைப் புலிகள் இயக்கத்தை அணுகவில்லை. அதுமட்டுமல்ல 2009க்கு பின் இனப்படுகொலைக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றிய எம்ஜிஆரின் வாரிசாகிய ஜெயலலிதா கடைசிக் கட்டப் போரின் போது என்ன சொன்னார்? போர் என்றால் இப்படிப்பட்ட அழிவுகள் இருக்கும் என்று தானே சொன்னார்?

எம்ஜிஆரின் விடயத்தில் மட்டுமல்ல தமிழக கட்சிகளையும் அரசியற் செயற்பாட்டாளர்களையும் அணுகுவதில் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் எல்லாரையும் சம தூரத்தில் வைத்து அணுகும் ஒரு அறிவுபூர்வமான பொறிமுறையும் அதற்கு வேண்டிய கட்டமைப்பும் தமிழ் இயக்கங்களிடம் இருக்கவில்லை. இந்தக் குறை இன்று வரையும் உள்ளது.

அதேசமயம் தனிப்பட்ட உறவுகள் ராஜிய அரங்கில் எப்படிப்பட்ட தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதற்கு சிங்களத் தரப்பில் ஒர் உதாரணத்தை சுட்டிக்காட்டலாம். இப்பொழுது இந்தியாவுக்கான இலங்கை தூதராக இருக்கும் மிலிந்த மொரகொட ஓர் அமெரிக்கப் பெண்ணை திருமணம் செய்தவர். அவருக்கு அமெரிக்காவில் நெருக்கமான நண்பர்கள் உண்டு. குறிப்பாக நோர்வேயின் அனுசரணையுடன் கூடிய சமாதான முயற்சிகளின் போது அவர் ரணில் விக்கிரமசிங்கவின்  அரசாங்கத்தில் ஒரு முக்கிய பொறுப்பை வகித்தார். அக்காலகட்டத்தில் அமெரிக்கா சார்பில் சமாதான முயற்சிகளைக் கையாண்ட அமெரிக்கத் துணை வெளி விவகார அமைச்சராகிய ரிச்சர்ட் ஆமிரேச்சுக்கும்  மிலிந்த மொரகொடவிற்கும் இடையில் மிக நெருக்கமான நட்பு இருந்தது. இந்த நட்பும் அக்காலகட்டத்தில் ஒரு செல்வாக்குச் செலுத்தும் காரணியாக விளங்கியது.

இப்பொழுது அதே மிலிந்த மொறகொட இலங்கைக்கான இந்தியத் தூதுவராக நியமிக்கப்பட்டிருக்கிறார். அதுவும் ஒர் அமைச்சருக்கு உரிய அந்தஸ்தோடு, அதிகாரத்தோடு புதுடில்லிக்கு அனுப்பப்பட்டிருக்கிறார். ஒரு அமெரிக்க விசுவாசியை வைத்து இந்தியாவைக் கையாள்வது என்பது நுட்பமானது ; தந்திரமானது. இந்தியாவும் அமெரிக்காவும் பூகோளப்  பங்காளிகளாக மாறியிருக்கும் உலகச் சூழலில் அமெரிக்காவுக்கு நெருக்கமான ஒருவரை கோட்டபாய இந்தியாவுக்கான தூதராக நியமித்திருக்கிறார்.

ஓர் அரசுடைய தரப்பாக இருப்பதனால் அவர்கள் தனிப்பட்ட உறவுகளையும் ராஜீய விவகாரங்களில் செல்வாக்குச் செலுத்தும் ஒரு காரணியாக மாற்றக்கூடிய வசதி வாய்ப்புக்களைக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அரசற்ற தரப்பாகிய ஈழத் தமிழர்கள் அவ்வாறு தங்களுக்குக் கிடைத்திருக்கும் நண்பர்களை வெற்றிகரமாக கையாள்வதற்கு தேவையான கட்டமைப்புகளையும் பொறி முறைகளையும் சிந்திக்காதவர்களாக காணப்படுகிறார்கள். இந்த வெற்றிடம் உள்ளவரை  ஈழத்தமிழர்கள் வெளியாரைக் கையாள்வதற்குப் பதிலாக வெளியாரை நோக்கிப்  பரிதாபகரமான, அப்பாவித்தனமான, தோல்விகரமான விதங்களில் காத்திருக்கப் போகிறார்களா ?
 

 

https://globaltamilnews.net/2020/153035/

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.