Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊடக ஒழுங்குமுறைக்கான வழிமுறைகள், கருத்துச் சுதந்திரத்தையும் விமர்சனங்களையும் தடுப்பதாகவே அமையும்- ஹரினி அமரசூரிய

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஊடக ஒழுங்குமுறைக்கான வழிமுறைகள், கருத்துச் சுதந்திரத்தையும் விமர்சனங்களையும் தடுப்பதாகவே அமையும்- ஹரினி அமரசூரிய.

 November 27, 2020 8:20 am GMT    

http://athavannews.com/wp-content/uploads/2020/11/Harini-Amarasooriya-.jpg

அரசாங்கத்தின் ஊடக ஒழுங்குமுறைக்கான வழிமுறைகள் என்பது, ஒழுங்குபடுத்துவதல்ல, மாறாக கருத்துச் சுதந்திரத்தையும் விமர்சனங்களையும் தடுப்பதாகவே அமையும் – JVPயின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய 25.11.20 ஆற்றிய வரவு செலவுத்திட்ட உரை – தமிழில் நடராஜா குருபரன்.

“ஊடகத்திற்கான ஒழுங்குமுறை வழிமுறைகளை அறிமுகப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கை ஆழ்ந்த கவலைக்குரியது, ஏனென்றால் இலங்கையில் வரலாற்று ரீதியாக இந்த அரசாங்கத்தின் மற்றும் அரசாங்கங்களின் நடவடிக்கைகள், அதன் நோக்கங்களை ஒழுங்குபடுத்துவதல்ல, மாறாக முரண்பட்ட கருத்துகளையும், விமர்சனங்களையும் தணிக்கை செய்வதும், தங்கள் அரசியல் எதிரிகளைத் தாக்க தங்கள் சொந்த ஆதரவாளர்களுக்கு இலவசமாகக் கொடுக்கும் உரிமம் ஆகவுமே அமைகிறது.

ஒழுங்கு என்ற போர்வையில், அரசாங்கம் என்ன செய்ய முற்படுகிறது என்பது முக்கியமானது. உண்மையில் கருத்து வேறுபாட்டையும் விமர்சனத்தையும் அடக்குவதென்பதே எங்கள் அனுபவமாக இருக்கிறது. குறிப்பாக ஊடகங்களை ‘ஒழுங்குபடுத்த’ விரும்புவதாக அரசாங்கம் கூறும்போது. இந்த அரசாங்கத்தில் பல சக்திவாய்ந்த பதவிகளை வகிக்கிப்பவர்கள், காணாமல் போதல், அச்சுறுத்தல் மற்றும் ஊடகவியலாளர்களின் மரணங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற உண்மையை நாம் புறக்கணிக்க முடியாது” என கடந்த நவம்பர் 25ல், நாடாளுமன்றில் ஆற்றிய வரவு செலவுத் தட்ட உரையில் JVPயின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

வெகுஜன ஊடகங்கள் மக்களின் சமூக மற்றும் அரசியல் வாழ்க்கையில் ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளன. ஒவ்வொரு சமூகத்திலும் ஊடகங்களின் தரம் – சுதந்திரம் மற்றும் சுதந்திரத்தின் அளவு பெரும்பாலும் அந்த சமூகங்களின் ஜனநாயகத்தின் தரத்தின் குறிகாட்டிகளாக எடுத்துக்கொள்ளப்படுகின்றன.  இதேவேளை இந்த சூழலில், உண்மை, புறநிலை, சுயாதீனம் மற்றும் நெறிமுறை என்பவற்றின் அர்த்தம் என்ன? என நம்மை நாமே கேள்விக்கு உட்படுத்த வேண்டும். மிக முக்கியமாக, இந்த சூழலில் உண்மை, புறநிலை, சுயாதீனம் மற்றும் நெறிமுறை எது என்பதை நாம் எவ்வாறு மதிப்பிடுகிறோம்? இன்று எமக்கு கிடைக்கும் பெருமளவிலான பலதரப்பட்ட குரல்கள், கருத்துகள் மற்றும் முன்னோக்கிய பார்வைகளின் பெறுமதி என்ன? ஒருவரை பொறுப்புக்கூற வைத்தல் மற்றும் துஷ்பிரயோகம், கொடுமைப்படுத்துதல் ஆகியவற்றை எவ்வாறு வேறுபடுத்துகிறோம்? இவை உலகெங்கிலும் உள்ள சமூகங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளாக அமைகின்றன.

“ஊடகத்திற்கு இரண்டு செயல்பாடுகள் உள்ளன; ஒன்று கண்காணிப்பாளராக தொழிற்படல் – அரசியல் முடிவுகளை எடுக்கும் திறனை கொண்ட குடிமக்களுக்கு அரசியல் ரீதியான பொருத்தமான தகவல்களை வழங்குதல். இரண்டாவதாக அந்த சமூகத்தில் உள்ள கருத்துக்களின் பன்முகத்தன்மையைக் குறிக்கும் பொதுமன்றமாக சேவை செய்தல். அச்சு, வானொலி மற்றும் தொலைக்காட்சி என்பன பாரம்பரிய ஊடகங்களாக விளங்குகின்றன. ஆனால் இன்று, இணையம் மற்றும் டிஜிட்டல் மீடியா தளங்கள் ஒரு கண்காணிப்பு அமைப்புகளாவும், வேறு எந்த வகை ஊடகங்களையும்விட பொதுமன்றமாகவும் மிகவும் செல்வாக்கு செலுத்துகின்றன.

டிஜிட்டல் மீடியாவின் தோற்றம் என்பது ஊடகங்களின் கட்டமைப்பை மிகவும் ஜனநாயகமாகிவிட்டது எனக் கூறலாம். இன்று, ஒவ்வொரு குடிமகனுக்கும் ஒரு ஊடகவியலாளராக இருக்கும் திறன் உருவாகியுள்ளது. நாம் அனைவரும் செய்திகளை உருவாக்க, செய்திகளைப் பகிர, செய்திகள் குறித்து கருத்துத் தெரிவிக்க, விவாதங்களில் ஈடுபடமுடிகிறது, இவையாவும் மிகப் பெரியளவிலான பார்வையாளர்களை மிக விரைவாக சென்றடைகிறது. இதனால் அதிகாரத்தில் இருக்கும் பிரபல்யமானவர்கள் முன்பை விட அதிக ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

ஒரு கண்ணோட்டத்தில் இது மிகவும் சிறந்தது – இது பலவகைப்பட்ட குரல்களினதும், முன்னோக்கு பார்வைகளதும் விரிவாக்கத்தை வெளிப்படுத்த உதவுகிறது. இது எப்போதும் ஒரு நல்ல விடயமாகவும், விமர்சனங்களுக்கான பெரு வெளியை ஏற்படுத்துவதாகவும், பொது பொறுப்புக்கூறலுக்கான அம்சமாகவும் விளங்குகிறது.

இலங்கை குடிமக்கள் மிகவும் அரசியல் கல்வியறிவு பெற்றவர்கள். அவர்கள் அரசியல் கருத்துக்கள் குறித்து விவாதிக்க அவற்றில் ஈடுபடுவதற்கான சுதந்திரத்தைத் தடுக்க முயற்சிக்கும் எந்தவொரு ஒழுங்குமுறை பொறிமுறையும் நமது ஜனநாயக விழுமியங்களுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். இதேவேளை பாரம்பரிய ஊடகங்களை விடவும் ஆபத்தான டிஜிட்டல் மீடியா தளங்கள் எவ்வாறு தகவல்களை சிதைக்கின்றன, வெறுக்கத்தக்க பேச்சுக்களை பரப்புகின்றன என்பதில் நியாயமான அக்கறை இருந்தாலும், ஒழுங்குமுறை வழிமுறைகளை அறிமுகப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை ஆழ்ந்த கவலைக்குரியது, கருத்துச் சுதந்திரத்தை உறுதிப்படுத்துதல், தகவல் அறியும் உரிமையை பேணுதல், நாட்டின் குடிமக்களை தவறான தகவல்களிலிருந்து பாதுகாத்தல், ‘போலி செய்திகள்’ மற்றும் தகவல்களை வேண்டுமென்றே சிதைப்பது ஆகியவற்றுக்கு இடையிலான போராட்டம் தொடர்கிறது. சமூக ஊடக வலைத் தளங்கள் உள்ளிட்ட ஊடக நிறுவனங்கள் லாபக் கொள்கையில் செயல்படும்போது இது மிகவும் சவாலானதாகிவிட்டது என்பது இரகசியமல்ல. சமீபத்திய காலங்களில், உலகளவில் மற்றும் இலங்கையில், டிஜிட்டல் தளங்கள், குறிப்பாக சமூக ஊடகங்கள் தேர்தல் முடிவுகளில் எந்த அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்கு பல எடுத்துக்காட்டுகள் உள்ளன – எப்போதும் நல்ல வழிகளை கொண்டு இருப்பவை அல்ல. குறிப்பிட்ட நலன்களுக்கு சேவை செய்வதற்கும், வெறுப்பு மற்றும் வன்முறையை மிக விரைவாக அணிதிரட்டுவதற்கும் சமூக ஊடகங்களை எவ்வாறு கையாள முடியும் என்பதை நாங்கள் கவனித்திருக்கிறோம். உலகளவில், ஜனநாயக செயல்முறைகள் மற்றும் நிறுவனங்கள் மீது இவற்றின் தாக்கம் காரணமாக, பேஸ்புக் மற்றும் கூகிள் போன்ற சில நிறுவனங்கள் இணையத்தின் மீது ஏற்படுத்தி உள்ள செல்வாக்கை முறித்துக்கொள்வதற்கான அழைப்புக்கள் விடுக்கப்பட்டுள்ளன.

ஆயினும்கூட, ஊடக ஒழுங்குமுறை மிகவும் சர்ச்சைக்குரிய விடயமாகும், ஏனெனில் இது கருத்துச் சுதந்திரம் மற்றும் தகவல் அறியும் உரிமையுடன் மிக நெருக்கமாக பிணைக்கப்பட்டுள்ளது. ஒழுங்குமுறைக்கான அரசாங்க முயற்சிகள் குறிப்பிட்ட சந்தேகத்துடன் பார்க்கப்படுகின்றன. இலங்கை அரசாங்கங்களுக்கு பொதுவாக ஊடகங்களைக் கையாள்வதில் நற்பெயர் இல்லை என்பது நிதர்சனம். உண்மையில், கடந்த பல தசாப்தங்களாக பல்வேறு கட்டங்களில் இந்த துறையில் பணிபுரிபவர்களுக்கு இலங்கை மிகவும் ஆபத்தான நாடாக கருதப்பட்டது. காணாமல் போன, கொல்லப்பட்ட, அச்சுறுத்தப்பட்ட, மிரட்டப்பட்ட மற்றும் நாட்டை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்ட ஊடக பணியாளர்களின் பட்டியல் மிக நீளமானது. இது குறித்து அடுத்தடுத்த அரசாங்கங்கள் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டள்ளன. இந்த வழக்குகளில் பெரும்பாலானவை தீர்க்கப்படாமலும், பெரும்பாலும் மறக்கப்பட்டவையாகவும் இருக்கின்றன. உதாரணமாக லசந்த விக்ரமதுங்கா போன்றவர்களின் நன்கு அறியப்பட்ட சில வழக்குகளை விசாரிக்கும் அதிகாரிகள் இன்று வேட்டையாடப்படுவதாக உணர்கிறார்கள். இதன் விளைவாக, இந்த வழக்குகள் இப்போது எந்த முன்னேற்றமும் இல்லாமல் சிக்கியுள்ளன. இத்தகைய நிலைமை ஒரு சுதந்திரமானதும், சுயாதீனமானதுமான ஊடகத்தைப் பாதுகாப்பதில் அரசாங்கத்தின் பங்கு குறித்த நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை.

துரதிர்ஷ்டவசமாக, அரசாங்கங்கள் ஊடகங்களை தங்கள் எதிரியாகக் கருதுகின்றன. அதனால் அவற்றை அச்சுறுத்தவும், கட்டுப்படுத்துவதற்கும் முனைகின்றன. அல்லது அவர்களின் பிரச்சார இயந்திரமாக கையாள முற்படுகின்றன.

இதேவேளை அரசுக்கு சொந்தமான அல்லது தனிப்பட்ட எங்கள் பாரம்பரிய ஊடகங்கள் குறிப்பிட்ட அரசியல் நிகழ்ச்சி நிரல்களை ஊக்குவிப்பதனை நோக்காக கொண்டு செயற்படுவதாக அறியப்படும் சூழ்நிலையையும் நாங்கள் கையாள வேண்டும்.

இலங்கையில் உள்ள பெரும்பாலான ஊடக நிறுவனங்கள் தனிநபர்கள் அல்லது பிரதான அரசியல் கட்சிகளுடன் நெருக்கமாக தொடர்புடைய குடும்பங்களுக்கு சொந்தமானவை. அதிகாரத்தில் உள்ள அரசாங்கங்கள் பொதுவாக அரசுக்கு சொந்தமான ஊடகங்களை தங்கள் பிரச்சார இயந்திரமாக கருதுகின்றன. தனியார் ஊடகங்கள் பிரதான அரசியல் கட்சிகளுடன் நெருக்கமாக இணைந்திருப்பதால், அதிகாரத்தில் உள்ள அரசாங்கங்களும் அவற்றின் சார்பாக பல தனியார் ஊடக அமைப்புகளைக் கொண்டுள்ளன. இதன் விளைவாக, இலங்கையில் உண்மையானதும், சுதந்திரமானதுமான பாரம்பரிய ஊடக நிறுவனங்கள் அதாவது அச்சு, வானொலி, தொலைக்காட்சிகள் மிகச் சிறிய அளவிலேயே காணப்படுகின்றன. அவை பிழைப்பதற்காக போராடுகின்றன. இதன் பொருள் என்னவென்றால், ஊடகங்கள் ஒரு கண்காணிப்பு அமைப்பாகவும், மாறுபட்ட கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கான ஒரு பொது மன்றமாகவும் செயற்படுவதற்கு கடுமையான சமரசங்களை செய்துகொள்கின்றன.

இதனால் ஊடகங்களில் பெரும் நம்பிக்கையீனம் ஏற்பட்டுள்ளது. – ஏனென்றால் ஒவ்வொரு நிறுவனமும் வணிக நலன்களுடன் பிணைக்கப்பட்ட ஓர் அரசியல் நிகழ்ச்சி நிரலுடன் மிகவும் அப்பட்டமாக இணைக்கப்பட்டுள்ளன. ஊடக அதிபதிகள் (Media moguls), அரசியல்வாதிகள் மீது அதிக அதிகாரம் செலுத்துகிறார்கள், இது ஜனநாயக செயல்முறைகளுக்கு நல்லதல்ல. இலங்கையில் இதை நாம் மிகத் தெளிவாகக் காண்கிறோம் – அங்கு வணிகமும் அரசியல் ஆர்வமும் மிக நெருக்கமாக பிணைக்கப்பட்டுள்ளன. அதிகாரத்தில் உள்ளவர்கள் உட்பட பல தற்போதைய பிரபலமான அரசியல் பிரமுகர்கள், ஊடகங்களால் கவனமாக உருவாக்கப்பட்டு வளர்க்கப்படுகிறார்கள்; அவர்களின் உருவங்கள் கட்டியமைக்கப்பட்டு, ஊக்குவிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன. பாரம்பரிய ஊடக நிறுவனங்கள் ஒரு முக்கியமான இடத்தை மக்கள் மற்றும் அவர்கள் ஊக்குவிக்கும் காரணங்களுடன் ஈடுபட அனுமதிக்காது. எனவே, சில வழிகளில், டிஜிட்டல் மீடியா தளங்கள், எவ்வளவு சர்ச்சைக்குரியவையாகவும், நான் முன்னர் குறிப்பிட்ட அனைத்து கவலைகளைக் கொண்டிருந்தபோதிலும், மாற்று மற்றும் விமர்சன முன்னோக்குகளை வழங்குவதில் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன.

http://athavannews.com/wp-content/uploads/2020/11/Harini-Amarasooriya1-428x241.jpg

இந்த சூழலில், நவம்பர் 21 ஆம் தேதி நடைபெற்ற வெகுஜன ஊடகங்களுக்கான ஆலோசனைக் குழுக்கூட்டத்தில் வெகுஜன ஊடகங்களுக்கான அமைச்சர் ஒரு வலைத்தள ஒழுங்குமுறை பொறிமுறை (regulatory mechanism) அடுத்த இரண்டு வாரங்களுக்குள் செயல்படுத்தப்படும் என அறிவித்ததாக, நாடாளுமன்ற இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை நாங்கள் தீவிரமாக பரிசீலிக்க வேண்டும்.

அத்தகைய முக்கியமானதும் அவசியமானதுமான ஒழுங்குமுறை பொறிமுறையை இரண்டு வாரங்களுக்குள் நிறுவ முடியுமா? குழுவில் கலந்துகொண்ட உறுப்பினர்கள் சமீபத்தில் சிங்கப்பூரில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தைப் பற்றிய குறிப்புகளையும் இலங்கையில் வலைத்தளங்கள் பின்பற்றக்கூடியவற்றிற்கு எடுத்துக்காட்டுகளாகக் குறிப்பிட்டுள்ளனர்.

இப்போது, இலங்கை பின்பற்றுவதற்கான ‘மொடலாக’ சிங்கப்பூர் காட்டப்படுவது மிகவும் பொதுவானதாகிவிட்டது. நாம் அவ்வற்றைப் பின்பற்றும்போது, மிகவும் கட்டுப்பாடுகளையும், இறுக்கங்களையும் கொண்ட நாடு என்ற உண்மையை நாம் அவதானிக்க வேண்டும். கருத்து வேறுபாடு மற்றும் எதிர்ப்புகளை வெளிப்படுத்துவதற்கான வெளிகள் ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானவை இவற்றைக் கட்டுப்படுத்துவதனை பொறுத்துக்கொள்ள முடியாது.

அண்மையில், ஒரு பொலிஸ் நிலையத்திற்கு வெளியே புன்னகை முகத்துடன் “சட்டவிரோத சட்டசபை’ (‘unlawful assembly’) என்ற ஒரு வாசகத்தை வைத்திருந்த ஒரு நபர் கைது செய்யப்பட்டதாக செய்தி வெளியாகியது. குறிப்பாக சிங்கப்பூரில் இணைய சுதந்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது மற்றும் அரசாங்கத்திற்கு தணிக்கை செய்வதற்கான உயர் அதிகாரங்கள் உள்ளன. இது விமர்சனங்களையும் எதிர்ப்புக் கருத்துக்களையும் தடுக்கப் பயன்படுகிறது. இதைத்தான் நாம் ஏற்படுத்த விரும்புகிறோமா? நான் அப்படி நினைக்கவில்லை – இலங்கை குடிமக்கள் மிகவும் அரசியல் கல்வியறிவு பெற்றவர்கள் மற்றும் அரசியல் கருத்துக்களுடன் விவாதிக்க மற்றும் ஈடுபடுவதற்கான சுதந்திரத்தைத் தடுக்க முயற்சிக்கும் எந்தவொரு ஒழுங்குமுறை பொறிமுறையும் நமது ஜனநாயக இடத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும்.

உதாரணமாக, நம்மில் பலர் சமூக ஊடக வலைத் தளங்களின் ‘போலி இடுகைகளுக்கு’ பலியாகியுள்ளோம். எனது சக ஊழியர்கள் பலர் இது தொடர்பாக சிஐடியிடம் முறைப்பாடுகள் அளித்துள்ளனர். ஏனெனில் ஜேவிபி மற்றும் என்.பி.பி உறுப்பினர்கள், தொடர்ந்து சமூக ஊடகங்களின் போலி இடுகைகளுக்கு இலக்காக்கப்பட்டுள்ளனர். இந்த முறைப்பாடுகள் எதுவும் திருப்திகரமாக விசாரிக்கப்படவில்லை. ஆயினும், சமூக ஊடக வர்ணனையாளர் ராம்ஸி ரசீக் ஐ.சி.சி.பி.ஆர் மற்றும் கணினி குற்றச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டார். அவர் அச்சுறுத்தல்களுக்கு இலக்காக இருந்தபோதிலும், பாதுகாப்புக் கோரி பொலீஸ் முறைப்பாடு அளித்தார். கடுமையான மருத்துவ சிக்கல்கள் இருந்தபோதிலும், 5 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

COVID-19 இன் முதலாவது வது சுழற்சியின்போது, பொலிஸ் தவறான அல்லது தீங்கிழைக்கும் தகவல்களை பரப்புவதற்கு எதிராக ஊடகங்களை எச்சரித்தது – இதில் அரசாங்க அதிகாரிகள் மீதான எந்தவொரு விமர்சனமும் அடங்கும். அரசாங்க அதிகாரிகளை விமர்சித்ததற்காக மக்கள் அல்லது அமைப்புகள் மீது வழக்குத் தொடர எந்த உண்மையான சட்ட அடிப்படையும் இல்லை என்பது உண்மை. இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை குறித்து மக்கள் தீவிரமாக கவனத்தில் எடுத்துக்கொண்டனர்.

சுவிஸ் தூதரகத்தின் ஊழியர்களில் ஒருவர் கடத்தப்பட சம்பவத்துடன் தொடர்புபட்டதாக சண்டே ஒப்சர்வரின் முன்னாள் ஆசிரியர் தரிஷா பஸ்டியன்ஸ், பெரும் துன்புறுத்தல்களை எதிர்கொண்டார். ஒரு படத்தை பேஸ்புக்கில் பகிர்ந்ததற்காக, மிக சமீபத்தில் ஒருவர், சிஐடியால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்து முறைப்பாடுகள் அளிக்கும் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர். காடழிப்பு பிரச்சினை குறித்து முறையிட்டபோது முல்லைத்தீவில் இரண்டு ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டனர். அரசாங்கம் ஊடக பாஸ் வழங்கும்போது தேவையற்ற தகவல்கள் கேட்கப்படுவதாகவும், பாஸ் வழங்கும்போது கட்டுப்பாடுகள் குறித்து அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது என்றும் ஊடகர்கள் செய்தி வெளியிட்டுள்ளனர். அரசாங்கக் கொள்கையையோ அல்லது அதிகாரத்தில் இருப்பவர்களையோ விமர்சிப்பது துரோகச் செயல் என்றும், அத்தகைய நபர்கள் ‘பயங்கரவாதிகளுக்கு’ இணையானவர்கள் என்றும் வலியுறுத்துவது ஊடகவியலாளர்களை மோசமாக பாதிக்கும், தண்டனையற்ற கலாச்சாரத்தை உருவாக்குகிறது. ஒட்டுமொத்தமாக, அச்சம் மற்றும் மிரட்டல் சூழல் காரணமாக ஊடகவியலாளர்கள் சுய தணிக்கையை அதிகரிப்பதாக தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், ஊடக ஒழுங்குமுறைக்கு வரும்போது அரசாங்கம் இரட்டை நிலைப்பாட்டைப் பின்பற்றுகிறது – குறிப்பாக ‘போலி செய்திகள்’ பற்றிய விசாரணைகள். அதாவது அரசாங்கத்தின் மீதான போலியான விமர்சனங்கள், போலி செய்திகளை வெளியிடல், பிறழ்தல் மற்றும் தீமையை ஏற்படுத்தல் என விளக்கப்படுகின்றன. இவற்றுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

அதேசமயம் அரசாங்கத்தை விமர்சிப்பவர்களையும் எதிர்க்கட்சியினரைப்பற்றியும் அரசாங்க சார்பு ஊடகங்கள், என்ன வேண்டுமானாலும் சொல்லவோ செய்யவோ அனுமதிக்கப்படுகின்றன. ஆகவே, ஊடகங்கள் ‘ஒழுங்குபடுத்தப்பட வேண்டும்’ என்று அரசாங்கம் கூறுவதில் நியாயமான அச்சங்கள் உள்ளனவா என்பதனை நோக்க வேண்டும். ஏனெனில் எங்கள் அனுபவம் என்னவென்றால், ‘ஒழுங்குமுறை’ என்ற போர்வையில், அரசாங்கம் செய்ய முற்படுவது உண்மையில் கருத்து வேறுபாட்டையும் விமர்சனத்தையும் அடக்குவதாகும்.

எந்த நேரத்திலும் இந்த அரசாங்கம் விமர்சனத்தையும் எதிர்ப்பையும் சகித்துக்கொள்வதாகக் காட்டவில்லை – மாறாக விமர்சனத்தின் எதிர்வினையாக மிகுந்த தற்காப்பும் ஆக்ரோஷமும் வெளிப்படுகின்றன. அது கருத்துச்சுதந்திரத்திற்கு உகந்ததல்ல. நெறிமுறைகளில் சகிப்புத்தன்மையும் ஒன்றாகும் என்பது கவனிக்கத்தக்கது. எனவே இரண்டு வாரங்களுக்குள் வலைத்தளங்களுக்கான ஒழுங்குமுறை பொறிமுறையை நிறுவுவதற்கான அரசாங்கத்தின் நோக்கம் உண்மையிலேயே கவலை அளிக்கிறது. அத்தகைய நடவடிக்கை எதிர்பார்க்கப்பட்டால், குறைந்தபட்சம், சம்பந்தப்பட்ட அனைவரின் கருத்துக்களையும் பெற அரசாங்கம் ஓர் ஆலோசனை நடவடிக்கையில் ஈடுபடவேண்டும்

மேலும், பொறுப்பான, நெறிமுறையின்பாற்பட்ட ஊடக நடைமுறையை ஊக்குவிப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என்றால் – அது ஊடக அமைப்புகளின் சுதந்திரத்தை செயல்படுத்துவதில் ஆரம்பிக்க வேண்டும். தனியாருக்குச் சொந்தமான ஊடக அமைப்புகளுக்கு அவ்வாறு செய்ய முடியாவிட்டாலும் – அது அரசுக்கு சொந்தமான ஊடகங்களின் தரத்தை உருவாக்க முடியும்.

ஊடகவியலாளர்களின் தொழில் மேம்பாட்டுக்கான இராஜாங்க அமைச்சும் உள்ளது. நிச்சயமாக, இது தபால் சேவைகளுக்கான அமைச்சுடன் இணைந்ததாகும். எனவே பத்திரிகையாளர்களின் தொழில் வளர்ச்சிக்கு பட்ஜெட் ஒதுக்கீட்டின் எந்த பகுதி செலவிடப்படும் என்பது தெளிவாக இல்லை, அல்லது ஊடகவியலாளர்களிடையே நிபுணத்துவத்தை வலுப்படுத்த என்ன திட்டங்கள் உள்ளன என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆயினும்கூட, இது ஒரு மிக முக்கியமான பகுதி மற்றும் ஊடகத்தின் தரத்தை மேம்படுத்துவதில் தீவிரமாக இருந்தால் அரசாங்கத்தால் செய்யக்கூடியது அதிகம். பத்திரிகை மற்றும் ஊடகங்களில் ஆர்வமுள்ள பல இளைஞர்கள் உள்ளனர். ஆனால் பல்வேறு காரணங்களால் அவர்கள் இதனை ஒரு தீவிரமான வாழ்க்கைப் பாதையாகப் பார்க்கவில்லை – இந்தத் துறையில் தொழில் வாய்ப்பு குறைவும் பாதுகாப்பின்மையும் காணப்படுகின்றன. இலங்கையின் ஊடகவியலாளர்கள் அச்சம் மற்றும் மிரட்டல் கலாச்சாரத்துடன் போராட வேண்டியவர்களாகவும், அவற்றுடன் இணைந்திருப்பதாலும், எத்தனை பேர் இதை ஒரு சாத்தியமான வாழ்க்கையாக கருதுவார்கள்?

முடிவில், சிக்கலான ஊடக வெளியில், ஊடக நெறிமுறைகள் மற்றும் தொழில்முறை குறித்த பாரிய அளவிலான, வலுவான உரையாடல் அவசரமாகத் தேவைப்படுகிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இன்று நாம் காண்பது ஊடகங்களின் தரத்தை மேம்படுத்துவதற்கான உண்மையான விருப்பத்தை அல்ல. அல்லது ஊடக தளங்களில் மாற்றங்களின் விளைவாக வெளிவரும் உண்மையான பிரச்சினைகளைக் கையாள்வது பற்றி அல்ல. மாறாக, கருத்து சுதந்திரத்தை குறைப்பதற்கான முயற்சிகள், அரசாங்க சார்பு ஊடக நிறுவனங்கள் மற்றும் நபர்களின் பாதுகாப்பு மற்றும் விமர்சனக் குரல்களை அச்சுறுத்தும் மற்றும் துன்புறுத்தும் சூழல், ஆகியவற்றையே நாம் காண்கிறோம். அதன் பிரபலமான ஆணையைப் பற்றி தொடர்ந்து பேசும் அரசாங்கத்தில் இது ஆச்சரியமாக இருக்கிறது – ஏனென்றால் உண்மையில் அதன் புகழ் மற்றும் நியாயத்தன்மை, குறித்த பாதுகாப்பின்மை பற்றிய ஆழமான உணர்வையே பிரதிபலிக்கிறது.

– தமிழில் நடராஜா குருபரன். –

ஊடக ஒழுங்குமுறைக்கான வழிமுறைகள், கருத்துச் சுதந்திரத்தையும் விமர்சனங்களையும் தடுப்பதாகவே அமையும்- ஹரினி அமரசூரிய. | Athavan News

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.