Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தவறிய தருணம் - மாவீரர் நாள் நினைவுகூரல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

தவறிய தருணம் - மாவீரர் நாள் நினைவுகூரல்

-ஆர்.ராம்-
அன்று நவம்பர் 27ஆம் திகதி, மணி மாலை 6ஐ நெருங்கிக் கொண்டிருந்தது. வழமையாக கண்ணீரால் தோயும், கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம் இம்முறை சீருடைக்காரர்களால் நிறைந்திருந்தது. ஆட்சிமாற்றத்தின் போதே இந்த மாற்றமும் எதிர்பார்க்கப்பட்டது தான். 

மாவீரர்கள் நினைவுகூரலுக்கு நீதிமன்றங்கள் தடை உத்தரவுகளை பிறப்பித்திருந்தமையாலும், வழமைக்கு மாறான பாதுகாப்பு அதிகரிப்பாலும் ‘நிலைமை’ உணர்ந்த ஊடகவியலாளர்கள் சிலர், துயிலுமில்லத்தினை அண்மித்த பகுதியில் காத்திருந்தனர். அவர்களுக்கும், புகைப்படக் கருவியை வெளியில் எடுத்து விடக்கூடாது என்பதுள்ளிட்ட சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டிருந்தன.

அச்சமயத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞன் ஒருவன் துயிலுமில்லத்தை அண்மித்ததும் வேகத்தை குறைத்துக் கொள்கின்றான். சீருடைக்காரர்களை கண்டதால் வேகம் குறைந்தது என்றல்ல, உறவுகளை நினைவு கூர்ந்து அஞ்சலியை செலுத்துவதே அவனது ஒரே இலக்காக இருந்தது என்கிறார் அங்கிருந்த ஊடகவியலாளர்களில் ஒருவர்.  

ஏனென்றால், சீருடை தரித்தவர்கள் அங்கு நிலைகொண்டிருந்தமை, அதனால் அப்பகுதியில் காணப்பட்ட மயான அமைதி, அப்பகுதியில் ஏற்பட்டுள்ள நெருடிக்கடியான நிலைமைகள் எதனையும் அந்த இளைஞன் பொருட்டாக கொள்ளவில்லை என்றும் அந்த ஊடகவியலாளர் விபரிக்கின்றார்.

spacer.png

ஆனால் ஓரிரு நிமிடங்களிலேயே காக்கிச் சட்டை அதிகரியொருவர் அவனை அண்மித்துவிட்டார். அந்த இளைஞன் அவ்விடம் வந்தமைக்கான காரணத்தினை அவர் அறிந்திருந்தாலும், அவனின் உதட்டிலிருந்து காரணத்தினை வரவழைப்பதற்கான வினாக்களைத் இடைவெளியின்றி தொடுத்திருக்கின்றார்.

இளைஞனும், வெள்ளேந்தியாக தான் விடுதலைக்காக தனது குடும்பத்திலிருந்து வித்தாகியவர்களை ‘சுடரேற்றி’ அஞ்சலிப்பதற்காகவே அங்கு வந்ததாக கூறிவிடுகின்றான். அப்போது, அந்த அதிகாரி, ‘உன்னை சுடரேற்ற அனுமதிக்க முடியாது, இங்கிருந்து போய்விடு, இங்கேயே நின்றால் கைது செய்யப்பட்டு விடுவாய். நீதிமன்றமும் தடை விதித்திருக்கின்றது. கைது செய்யப்பட்டால் பின்னர் உன்னால் வெளியே வரவே முடியாது’ என்று எச்சரிக்கை விடுத்திருக்கின்றார். 

இளைஞனோ நகருவதா, இல்லையா என்ற இரட்டை மனதில் நின்றிருக்க, காக்கிச் சட்டை அதிகாரி, “நான் இப்போதே உன்னை பிடித்து உள்ளுக்குள் வைத்துவிட முடியும். உன்னுடைய வாழ்க்கையும், குடும்பமும் தான் பாதிக்கப்படும். உன்னைப் போன்றவர்களை உசுப்பேத்திவிடுகிற அரசியல்வாதிகள் யாராவது இங்கு வந்தார்களா? அவர்கள் ஒருபோதும் வரமாட்டார்கள். அவர்கள் பாராளுமன்றில் பேசுவதுடன் நிறுத்தி விடுவார்கள்” என்றும் கூறினார். 

அத்துடன் “அவர்களுக்கு நீதிமன்ற தடை உத்தரவு இந்த நாட்டுச் சட்டங்கள் என்று அனைத்தும் தெரியும். அத்துடன் தங்களுக்கு உள்ள சிறப்பு ‘உரிமைகளால்’ அவர்கள் தப்பித்தும் விடுவர்கள். அவர்களின் பேச்சைக் கேட்டு உன்னைப் போன்ற அப்பாவிகள் தான் பிரச்சினைக்குள் சிக்கி விடுகின்றீர்கள். நான் இப்போது கூட உன்னை கைது செய்ய முடியும். ஆனால் அவ்வாறு செய்யவில்லை. யதார்த்தத்தினை புரிந்து கொண்டு இங்கிருந்து அமைதியாக சென்றுவிடு” என்று அறிவுரை வழங்கினார். 

spacer.png

இதனையடுத்து அந்த இளைஞனும் அரைகுறை மனதுடன் அவ்விடத்திலிருந்து வெளியேறிவிடுகின்றான் என்று அந்த ஊடகவியலாளர் சம்பவத்தினை மேலும் விபரித்துக் கூறினார். இது கனகபுரம் துயிலுமில்லத்துக்கு அருகில் நடைபெற்ற ஒரு நிகழ்வாக இருக்கின்றது. தற்செயலாக அங்கு சில ஊடகவியலாளர்கள் கூடி நின்றமையால் இந்த நிகழ்வு பதிவாகியது. இதுபோன்று உணர்பூர்வமான சம்பவங்கள் வடக்கு கிழக்கில் உள்ள துயிலுமில்லங்கள் எத்தனையில் நிகழ்ந்தன என்பதற்கு எந்த சான்றாதாரங்களும் இல்லை. ஆனால் அவ்விதமான சம்பவங்கள் நிச்சயம் நிகழ்ந்திருக்கலாம். 

காரணம், விடுதலை பயணத்தில் உயிர்த் தியாகம் செய்தர்கள் எந்த நாளில் களப்பலியானார்கள் என்பதை அறிந்த அவர்களது உறவுகள் அந்தந்த நாட்களில் அவர்கள் விரும்பியவாறு அஞ்சலித்தே வருகின்றனர். ஆனால் எந்த நாளில் சாவடைந்தார்கள் என்பதை அறியாத எத்தனையோ உறவுகள் நவம்பர் 27 ஐயே, அவர்களுக்கான ஆத்ம அஞ்சலிகளை செய்கின்றார்கள். அதற்காகவே துயிலுமில்லங்களில் கல்லறைகள் இல்லாது விட்டாலும் அங்குள்ள கற்களுக்காகவாவது அஞ்சலிப்பதை விரும்புகின்றார்கள்.

ஆகவே அதற்கான சந்தர்ப்பம் இம்முறை முழுமையாக மறுதலிக்கப்பட்ட போது, எவ்வளவு தூரம் அங்கலாத்திருப்பார்கள் என்பதை விபரிப்பதற்கு வார்த்தைகளே இல்லை. ஆனால் அந்த அங்கலாப்பு மனித உணர்வுகளின் அதியுச்சமான ‘பிளம்பு’ என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். 

விடுதலைக்கான பயணத்தில் தமது உறவுகளை அர்ப்பணித்து விட்டவர்களை இவ்விதமாக அங்கலாய்ப்புக்குள் தள்ளி விட்டவர்களில் பிரதான பங்கினை கொண்டிருப்பவர்கள் தமிழ்த் தேசிய தரப்பு சட்டத்தரணிகளும், அரசியல்வாதிகளும் தான். கடந்த வாரம், தமிழ்த் தேசிய தரப்பு சட்டத்தரணிகள் ‘மாவீரர்கள் நாள் நினைவு கூரல்’ விடயத்தில் எவ்விதமாக நடந்து கொண்டனர் என்பதை பார்த்தாகி விட்ட நிலையில் அரசியல் தரப்பினர் தொடர்பில் இப்போது ஆழமாக நோக்க வேண்டியுள்ளது. 

இலங்கை அரசாங்கத்தினைப் பொறுத்தவரையில், தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழர்களுக்காக தனித்தேசம் கோரி போராடியவர்கள்.  நாட்டின் இறைமைக்கு எதிராக களமாடியவர்கள். தடைசெய்யப்பட்ட அமைப்பினர், பயங்கரவாத வகையறைக்குள் உட்படுத்தப்பட்டவர்கள். 

ஆகவே, இவ்விதமான அமைப்பின் சார்பில் உயிர்களை ஈகம் செய்தவர்களை நினைவு கூர இடமளிப்பது அரசியலமைப்புக்கு முரணானதாகும். அத்துடன் 2009இல் அவ்வமைப்பினரை வெற்றி கொண்ட அரச படைகளுக்குச் செய்கின்ற அகௌரவம் என்பதே அதன் வாதமும் நிலைப்பாடும் ஆகும்.

எனவே நினைவு கூரும் உரிமை, அடிப்படையானது, சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டது என்று எத்தனையோ வாதப்பிரதிவாதங்களை முன்வைத்து நீதிமன்றங்களின் படிகளில் ஏறினாலும் சாதகமான நிலைமைகள் கிடைப்பது என்பது கல்லில் நாருரிக்கும் நிலை தான். ஆனாலும் சட்ட விற்பன்னர்கள் அதற்குரிய தந்திரோபாயத்தையும் மூலோபாயத்தையும் வகுத்துச் செயற்பட்டிருக்க வேண்டும். துரதிஷ்டவசமாக அவர்கள் அவ்விதமாக செயற்படாது தமது சமூகப் பொறுப்பிலிருந்து தவறிவிட்டனர். 

சரி, சட்டவிற்பன்னர்கள் தவறிவிட்டார்கள் என்றால் தமிழ்த் தேசிய தளத்தில் உள்ள அரசியல் தரப்பினர் என்ன செய்தர்கள்? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை உள்ளிட்ட தரப்பினர் ‘நினை கூருவதற்கான உரிமை உள்ளது அதனை தடுக்கவே முடியாது’ என்றுரைத்து போதுமான அளவிற்கு ஊடக அறிக்கைகளை வாரி வழங்கினார்கள். 

கூட்டமைப்பு தமிழர்களின் முக்கிய விடயங்களை முறையாக கையாளத் தவறுகின்றது என்று குற்றம்சாட்டி தமிழ்த் தேசிய அரசியலை புதிய தளத்தில் கட்டியெழுப்புவதற்காகவும், தமிழர்களின் பிரச்சினைகள் சார்ந்து ஒன்றிணைந்து செயற்படுவதற்காகவும் ஒருங்கிணைந்த தரப்பினரும் இந்த விடயத்தில் ‘வேடிக்கையாகவே’ நடந்து கொண்டிருக்கின்றனர்.

நீதிமன்றில் பொலிஸார் தடை உத்தரவுக்கான மனுக்களை தாக்கல் செய்த பின்னரே இந்த தரப்பினர் சி.வி.கே.சிவஞானத்தின் இல்லத்தில் கூடினார்கள். பின்னர் நினைவுகூரல் நாளுக்கு இரண்டு தினங்கள் முன்னதாக இறுதி முடிவு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்ப்பை ஏற்படுத்தினார்கள். ஈற்றில் ‘வீடுகளிலிருந்தே நினைவு கூருங்கள்’ என்ற ஊடக அறிக்கையை மட்டும் வெளியிட்டார்கள். 

தமது உறவுகளை வீடுகளிலிருந்தே நினைவு கூருங்கள் என்றொரு அறிவிப்பை விடுவதற்கு இரண்டு தடவைகள் ஒன்றுகூடி கலந்துரையாட வேண்டியதன் அவசியம் தான் என்ன? இவ்விதமாக செயற்பட்டதனால் நினைவு கூரலுக்கான கூட்டுரிமையை எதிர்பார்த்திருந்த உறவுகளுக்கு ஏமாற்றமே எஞ்சியது. 

அடுத்து, தமிழ்த் தேசியக் கொள்கைப் பற்றுறுதியுடன் இருக்கும் தரப்பு என்று தம்மை கூறும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரும், பாராளுமன்றத்திற்குள்ளேயும், நீதிமன்றத்திற்குள்ளேயும் தான் நினைவு கூரும் உரிமையை பெற்றுக்கொடுப்பதற்கான தமது ‘வீரப்பிரஸ்தாபத்தைச்’ செய்திருந்தனர். 

தமிழ்த் தேசியத் தளத்தில் உள்ள  அரசியல் தரப்புக்கள் அனைத்திற்கும் அண்மையில் நடந்தேறிய திலீபனின் நினைவேந்தல் அனுபவம் நன்றாகவே உள்ளது. திலீபனின் நினைவேந்தலுக்கு தடைகள் விதிக்கப்பட்ட நிலையில் அதற்கான உரித்தைப் பெறுவதற்காக ஜனாதிபதி, பிரதமருக்கு கூட்டாக கடிதமும் எழுதினார்கள். பதில் கிடைக்காதபோது வடக்கு கிழக்கு பூராகவும் எதிர்ப்பினை வெளியிட்டார்கள். ஆனால் ‘மாவீரர்கள் நாள் நினைவு கூரல்’ விடயத்தில் அவ்விதமான எந்தவொரு சிறு முயற்சிகளைக் கூட அத்தரப்புக்கள் முன்னெடுத்திருக்கவில்லை. 

தற்போதைய தமிழ்த் தேசியத் தளத்தல் உள்ள அஹிம்சை வழியில் வந்த கரைவேட்டிக்காரர்களும் சரி, ஆயுதமேந்தி ஜனநாயக வழிக்குத் திரும்பிய நீளக்காற்சட்டைக்காரர்களும் சரி அரசியல் ரீதியாக ‘தசாப்த’ கணக்கில் அனுபவங்களைக் கொண்டிருக்கின்றார்கள்.

அவ்விதமானவர்கள், நினைவு கூரல் விடயத்தினை ‘அரசியல் மூலோபாய’ ரீதியாக ஏன் அணுகியிருக்கவில்லை. தமிழ்த் தேசிய அரசியலின் ‘அச்சாணிகளாக’ காட்டிக்கொள்ளும் இத்தரப்பினர் தமது மக்களின் வாழ்வியல் உணர்வுகளுடன் சம்பந்தப்பட்ட விடயத்தில் ஏன் இவ்வளவு தூரம் ‘பிற்போக்குத்தனமாக’ நடந்து கொண்டிருக்கின்றார்கள். 

1956 ஜுன் 5ஆம் திகதி அப்போது பிரதமராயிருந்த பண்டாரநாயக்காவினால் நாட்டின் அரச கரும மொழி சிங்களம் மட்டும் என்று பிரகடனப்படுத்தப்பட்டபோது தந்தை செல்வா தலைமையில் காலி முகத்திடலில் சத்தியாக்கிரக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.  1957இல் சிங்கள ‘ஸ்ரீ’ எதிர்ப்பு பேராட்டம் நடைபெற்றது. சிங்கள தேசியவாதத்திற்கு எதிராக 1961,1963 இல் வடக்கு, கிழக்கு முழுமையாக முடக்கி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதன் பின்னர் 2006இல் கொழும்பில் உள்ள ஐ.நா.வதிவிட அலுவலகத்தின் முன்னால்  வடக்கிற்கான பொருளாதார தடையை நீக்க கோரி கூட்டமைப்பால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

தமிழர் தாயகத்தில் கடந்த ஏழு தசாப்தமாக பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ள போதும் இவை சர்வதேசத்தின் கவனத்தினை ஈர்த்தவை. இன்று வரையில் பேசுபொருளாக இருப்பவை. பரம்பரை ரீதியாக முன்னுதாரணங்களாக காணப்படுபவை.

இவ்விதமான வரலாற்று பட்டறிவுகளைக் கொண்டிருக்கும் தமிழ் தேசிய அரசியல் தரப்பினர் 2009இற்கு பின்னரான காலத்தில் அவ்விதமான முயற்சிகளை திடமாக முன்னெடுப்பதில் தயக்கம் காட்டியே வருகின்றனர். ‘வெகுஜனப்’ போராட்டங்களில் கூட மக்களை முன் தள்ளிவிடுகின்ற போக்கே அதிகமாக காணப்படுகின்றமை துரதிஷ்டமாகும்.  அரசியல் தலைவர்கள், தம் இனக்குழுக்களை வழிநடாத்திச் செல்பவர்களே தவிர இனத்தின் மீது சவாரி செய்பவர்கள் அல்லர் என்பதை தமிழ்த் தேசியத்தில் ‘பழம் தின்று கொட்டை போட்டவர்கள்’ அறியாமலில்லை. 

இந்நிலையில், எதிர்காலத்தில் வரவுள்ள அனைத்து நினைவு கூரல்களுக்கும் என்ன நடக்கப்போகின்றது என்பது இப்போதே தெரிந்தாகிவிட்டது.  தமிழ்த் தேசியத் தரப்பில் உள்ள அரசியல் தரப்பினர் இந்த நினைவு கூரல் விடயத்தினை அரசியல் ரீதியாக முறையாக திட்டமிட்டு உள்நாட்டிலோ அல்லது சர்வதேச ரீதியாகவோ கையாண்டிருந்தால் எதிர்கால ‘தலைவலிகளை’ நீக்கியிருக்கலாம். 

ஆகக்குறைந்தது நினைவு கூரலுக்கான நிரந்தர தீர்வொன்றை பெறுவதற்கான முயற்சியின் முதற்படியில் கூடஅடியெடுத்து வைத்திருக்கலாம். ஆனால் அதற்கான சந்தர்ப்பத்தை தவற விட்டுவிட்டனர். இனிவரும் காலம் அவ்விதமான முயற்சிகளுக்காகவாவது இடமிருக்குமா என்பது கேள்விக்குறி தான்.  

இதேவேளை, இம்முறை மாவீரர்கள் நாள் நினைவு கூரல் வாரத்தின் ஆரம்ப நாளில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த போராளிகளில் ஒருவரான ப.ரவீந்திரன் என்ற இயற்பெயரைக் கொண்ட கப்டன் பண்டிதரின் வல்வெட்டித்துறை கம்பர்மலையில் உள்ள இல்லத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் சென்று அஞ்சலி செலுத்தினார். தமிழ்த் தேசிய அரசியலில் அவருக்கு இது நேர்மறை விமர்சனங்களை ஏற்படுத்தியது. 

பின்னர் பாராளுமன்றில் அமைச்சர் சரத்வீரசேகர அதுதொடர்பில் வினவியபோது சுமந்திரன் அளித்த பதில் ‘தமிழ்த் தேசிய அரசியலில் புலி நீக்கம் செய்கின்றார் சுமந்திரன்’ என்ற விமர்சனத்தினை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது. எவ்வாறாயினும், அவரது கொள்கைக்காக, அவருக்கு ஆணைக்கு வழங்கியோரை ‘சுக துக்கங்களை’ பகிர்ந்து கொள்ளுமாறு விட்டுவிடலாம். 

ஆனால் சுமந்திரன் பற்கேற்ற நினைவு கூரல் நிகழ்வின் போது அவதானிக்கப்பட்ட ஒரு விடயம் தான் கப்டன் பண்டிதரின் தயாரான சின்னத்துரை மகேஸ்வரி தங்கியிருந்த குடிசை. மகேஸ்வரியும் அவருடைய ஏனைய இரண்டு புதல்வர்களும் கம்பர்மலையில் உள்ள வீடொன்றில் வசித்து வந்தனர். அதில் ஒரு புதல்வர் 2006இல் சுட்டுக்கொல்லப்பட்டார். 

இந்நிலையில் அவர்கள் வசித்த வீடு விடுதலைப்புலிகளினால் கட்டாயத்தின் பேரில் பறிக்கப்பட்டதாக கூறி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. கடந்த மார்சில் ‘உரிமைகயாளர்களிடத்தில் வீட்டை ஒப்படைக்குமாறு’ அந்த வழக்கின் தீர்ப்பு வெளியானது. வீட்டு உரிமையாளர்களும், பொலிஸாரும் இணைந்து அன்றையதினத்தில் இரவோடு இரவாக பண்டிதரின் தயார், சகோதரன் உள்ளிட்டவர்களையும் உடைமைகளையும் வெளியேற்றினர். 

இன விடுதலைக்காக தன்னை அர்ப்பணித்த ஒருவரின் குடும்பம் அதே இனத்தால் ஒரு நொடியில் நடுத்தெருவிற்கு அனுப்பப்பட்டது. சட்டத்தரணி மணிவண்ணன் குழுவினரே அவர்களுக்கு தற்காலிக குடிசையொன்றை அமைத்துக் கொடுத்தனர். அடிப்பவர்களும், அடிவாங்குபவர்களும், அரவணைப்பவர்களும் இருக்குமொரு வேடிக்கையான தேசிய இனம் தான் தமிழினம். 

அவ்வாறிருக்க, அந்தக்குடிசையிலேயே அவர்கள் தற்போதும் உள்ளனர். கப்டன் பண்டிதர் 1985இல் வீரச்சாவடைந்த ஒருவர். அவருடைய குடும்பத்தின் நிலையை அந்தக்குடிசையே வெளிப்படுத்தி நிற்கின்றது. 35வருடங்களுக்கு முன்னால் மாவீரராகியவரின் குடும்பத்தின் நிலையே இப்பயிருக்கின்றது என்றால் இறுதிப்போரில் வித்தாகியவர்களின் குடும்பங்களின் நிலைமைகள் எவ்வாறு இருக்கும் என்பது கற்பனைக்கும் அப்பாற்பட்டது. ஆனால் சீர்தூக்கி பார்க்கப்பட வேண்டியது.

போர் முடிந்த கையோடு 13ஆயிரம் போராளிகளை விடுவித்துவிட்டதாக மார்பு தட்டுகிறது ராஜபக்ஷ அரசாங்கம். அந்தப் போராளிகளை தமிழ் அரசியல் தரப்புக்களும் சரி, சிவில் அமைப்புக்களும் சரி முறையாக கட்டமைக்கவில்லை. அவர்களின் எதிர்காலம் சார்ந்து பொறிமுறைகளை வகுத்திருக்கவில்லை. மாறாக, முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி போடப்பட்டது என்ற விடயமே பூதாகாரமாகக்கப்பட்டது. தற்போது அந்த விடயம் காணமாலாகியுமுள்ளது. 

அதனால் ஏற்பட்ட விளைவுகள் இன்னமும் சமூகத்தில் நீடிக்கின்றன. இதனை பூதகாரமாக்கியவர்கள் உணர்ந்தார்களோ அல்லது உணர்வார்களோ தெரியவில்லை. 

வன்னிப் பெருநிலப்பரப்பில் மாவீரர்கள், போராளிகள், களமாடி மாற்றுத்திறனாளிகளானவர்கள் என்று ஆயிரக்கணக்கானவர்கள் இருக்கின்றார்கள். இவர்களில் பலர் வறுமையின் கோரமுகங்களாக இருக்கின்றனர். சிலர் வயிற்றுப்பிழைப்புக்காய் திசை மாறியுமுள்ளனர். 

ஆகவே நினைவுகூரும் உரிமையை பெற்றுக்கொடுக்கத் தவறியவர்கள் போர் நிறைவடைந்து தசாப்தம் கடந்தாகிவிட்ட நிலையிலும் இனத்திற்காக தம்மை அர்ப்பணித்தவர்களின் உறவுகளுக்கும், அர்ப்பணிக்க தயாரானவர்களுக்கும் காத்திரமான அன்றாட வாழ்வுரிமையை பெற்றுக்கொடுக்க இனியாவது விளைவார்களா?

 

 

https://www.virakesari.lk/article/96030

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.