Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

லெப். கேணல் மறவன் மாஸ்ரர்

Sea-Tiger-Lieutenant-Colonel-Maravan.jpg

காலத்தின் உயிர் மூச்சாக ஓயாத புயலாக என்றும் கடற்புலி லெப். கேணல் மறவன் மாஸ்ரர்.

காலத்தின் உயிர் மூச்சாக ஓயாத புயலாக என்றும் கடற்புலி லெப். கேணல் மறவன் மாஸ்ரர்.தமிழீழத் தேசத்தின் விடுதலை வேள்வியில் விதையாகிப்போன ஆயிரமாயிரம் மாவீரர்களின் வரலாற்றுத் தடங்களில் கடற்புலிகளின் மூத்த உறுப்பினர் லெப். கேணல் மறவன்மாஸ்ரர் அவர்களின் வரலாற்றுப்பதிவும் தனித்துவமான அத்தியாயமாகப் பதிவாகியுள்ளது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வளர்ச்சியில் கடற்புலிகள் படையணி எத்தகைய முக்கியத்துவம் வகித்ததோ அதே போல் கடற்புலிகளின் வளர்ச்சியிலும் கடற்புலிகளின் அரசியல்த்துறையின் விரிவாக்கத்திலும் லெப். கேணல் மறவன் மாஸ்ரர் முதன்மையான பாத்திரம் வகித்தவர். அத்துடன் கடற்புலிகளுக்கும் மக்களுக்கும் இடையிலான நெருக்கமான உறவுப் பாலத்தைக் கட்டி வளர்ப்பதிலும் தமிழீழ விடுதலைப்போராட்டம் மக்கள் மயப்படுவதிலும் தனது போராட்ட வாழ்நாளின் இறுதிக்கணம் வரையிலும் அயராது உழைத்தவர்.

யாழ் மாவட்டத்தில் நெய்தல் நிலமான வடமராட்சிக் கிழக்குப் பிரதேசத்தில் அழகிய கத்தோலிக்கக் கிராமமான தாளையடி மண்ணைப் பிறப்பிடமாகக் கொண்ட மறவன் மாஸ்ரர் என்ற ஸ்ரனிஸ்லோஸ் அவர்கள் தனது இளமைக் காலக் கல்வியை யாழ் குடாநாட்டிலும் தென்னிலங்கையிலும் அமையப் பெற்றிருந்த முன்னிலையான கல்லூரிகளில் தொடர்ந்தார். இளமைக் காலத்திலேயே கலை ஆர்வம் கொண்டவராகத் திகழ்ந்தார். அத்துடன் உதைபந்தாட்டம் கரப்பந்தாட்டம் துடுப்பாட்டம் முதலான விளையாட்டுக்களிலும் ஈடுபாடு கொண்டவராகத் திகழ்ந்தார். தனது இளமைக் காலங்களில் பாடசாலைக் கல்வியில் சிறந்து விளங்கியதாலும் சாதுரியமான அறிவாற்றலாலும் பாடசாலை ஆசிரியராக நியமனம் பெற்றார். கண்டிமாவட்டம் உள்ளிட்ட தென்னிலங்கையின் பல்வேறு பாடசாலைகளிலும் தனது ஆசிரியர் சேவையை முன்னெடுத்திருந்தவர். அதன் பின்னரான காலங்களில் தனது சொந்தப் பிரதேசமான வடமராட்சிக்கிழக்குப் பிரதேசத்தில் உடுத்துறை மகாவித்தியாலயத்தில் ஆசிரியர் சேவையை மிகவும் சிறப்பாக முன்னெடுத்து மாணவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாகவும் பாடசாலையின் அனைத்து துறைகளின் வளர்ச்சியிலும் முன்னோடியாகத் திகழ்ந்தவர். தனது ஆசிரியக்காலங்களில் மாணவர்களின் கல்வி விளையாட்டு நன்நடத்தை ஆகிய அனைத்து விடயங்களிலும் கவனம் செலுத்தி அவர்கள் சமுதாயத்தில் நற்பிரைஜைகளாக வளர்வதில் சிறந்ததொரு ஆசானாகத் திகழ்ந்தார். தமிழ் மொழியுடன் ஆங்கிலம் சிங்களம் ஆகிய மொழிகளையும் சரளமாகப் பேசக்கூடிய ஆற்றல் கொண்டவர். இல்லற வாழ்க்கையில் இவருக்கு வாழ்க்கைத் துணையாக அமைந்தவரும் ஆசிரியையாக கடமையாற்றி பின்னய நாட்களில் தாளையடி றோமன் கத்தோலிக்க தமிழ்கலவன் பாடசாலையின் அதிபராகக் கடமையாற்றியவர். தற்போது கடமையிலிருந்து ஓயவுபெற்றுவிட்டார். மறவன் மாஸ்ரரும் அவரது துணைவியாரும் இருவருமே தாளையடிக் கிராமத்தை பிறப்பிடமாகக் கொண்டவர்கள் என்பதுவும் குறிப்பிடத்தக்கது. தமது இல்லற வாழ்க்கையின் பயனாக லங்கநாயகம் அமுதினி குமுதினி ஆகிய மூன்று பிள்ளைகளுக்கு நல்ல பெற்றோராகவும் விளங்கினார்கள்.

ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டம் ஆயுத வழியில் வீச்சுப்பெற்ற 1980களில் உடுத்துறை மகாவித்தியாலயத்தில் ஆசிரியராக கடமையாற்றிக் கொண்டிருந்த ஸ்ரனிஸ் மாஸ்ரரும் அதன்பால் ஈர்க்கப்பட்டார். அன்றைய நாட்களில் தமிழர்களின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தை பல இயக்கங்கள் முன்னெடுத்திருந்தன. ஆனாலும் அந்தக்காலச் சூழ்நிலையில் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை கொள்ளை வழுவாத இலட்சிய உறுதியுடனும் நேர்த்தியான பாதையிலும் முன்னெடுத்துச் செல்லக் கூடியவர்கள் தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையிலான தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தான் என்பதை அன்றைய நாட்களிலேயே ஐயமற நன்குணர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு தனது முழுமையான ஆதரவை நல்கினார்.

1984ம் ஆண்டு காலப் பகுதியில் யாழ். வடமராட்சிக் கோட்டப் பொறுப்பாளராக திரு சூசை அவர்கள் (பின்னய நாட்களில் கடற்புலிகளின் சிறப்புத்தளபதியாக பொறுப்பு வகித்தவர்) பொறுப்பேற்றதைத் தொடர்ந்து ஆசிரியரான ஸ்ரனிஸ்மாஸ்ரருடன் சூசைஅவர்கள் நெருக்கமான தொடர்புகளைப் பேணிவந்தார். அன்றைய நாட்களில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முக்கியத்துவத்தையும் அதற்கமைவாக ஆயுதப் போராட்டத்தின் இன்றியமையாத தேவையையும் பாடசாலை மாணவர்கள் மத்தியிலும் இளைஞர்கள் மத்தியிலும் எடுத்து விளக்கி கணிசமான இளைஞர்களையும் உயர்வகுப்பு மாணவர்களையும் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைத்து விடுதலைப் போராட்டத்தின் வளர்ச்சிக்கு அளப்பரிய செயலாற்றினார். அத்துடன் விடுதலைப் போராட்டம் தொடர்பான கருத்துக்களை மக்கள் மத்தியில் விதைத்து தமிழீழ விடுதலைப் போராட்டப்பாதையில் மக்கள் பலமும் ஒரே பாதையில் ஒன்றித்துப் பயணிக்கும் செயற்திட்டத்தை வடமராட்சிப் பொறுப்பாளர் சூசைஅவர்கள் ஸ்ரனிஸ் மாஸ்ரருக்கு ஊடாகவே நெறிப்படுத்தினார். அதாவது ஒருபுறம் பாடசாலை ஆசிரியராகவும் மறுபுறம் விடுதலைப் போராட்டத்தின் தீவிர ஆதரவாளராகவும் செயற்பட்டுக் கொண்டிருந்த ஸ்ரனிஸ் மாஸ்ரர் தானும் இயக்கத்தில் ஒரு முழு நேர உறுப்பினராகவே செயற்பட விரும்பினார். ஆனாலும் சூசை அவர்கள் ‘நீங்கள் இப்போதைக்கு ஆசிரியராக கடமையாற்றிக் கொண்டு பாடசாலை உயர் வகுப்புக்களிலிருந்தும் இளைஞர்கள் மத்தியிலிருந்தும் எமது போராட்டத்திற்குத் தேவையான ஆட்பலத்தை திரட்டித்தாருங்கள்’ என்று ஸ்ரனிஸ் மாஸ்ரரிடம் கேட்டுக்கொண்டார். அதற்கமைவாக மாஸ்ரரும் குறிப்பாக 1984 – 1985ம் ஆண்டு காலப்பகுதிகளில் கணிசமான புதிய போராளிகளை இணைத்து தமிழ்நாட்டிற்கு இராணுவப் பயிற்சி பெறுவதற்காக அனுப்பி வைத்திருந்தார். அத்துடன் வடமராட்சிக் கிழக்குப் பிரதேசத்தில் மாவிலங்கைக் காட்டுப் பகுதியில் தொடங்கப்பட்ட பயிற்சிப் பாசறைக்கும் தேவையான புதிய போராளிகளை இணைத்ததிலும் மாஸ்ரரின் பங்களிப்பு முக்கியமானது.

இலங்கை – இந்திய உடன்படிக்கை 1987 யூலையில் கைச்சாத்தாகியதை அடுத்து அமைதி என்ற போர்வையில் இந்திய ஆக்கிரமிப்புப் படையினர் எமது தாயக மண்ணில் அகலக்கால் பதித்தார்கள். உடன்படிக்கை விதிகளுக்கு மாறாக இந்தியப் படையினரின் அராஜகச் செயல்களும் அட்டூளியங்களும் தாயகத்தில் தலைதூக்கியிருந்ததால் எமது மக்களைப் பாதுகாப்பதற்காக இந்தியப் படையினருக்கு எதிராக யுத்தம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் விடுதலைப்புலிகளுக்கு தவிர்க்க முடியாததொன்றாகியிருந்தது. அதற்கமைவாக 1987 ஆண்டு ஒக்டோபர் மாதம் 10ம் நாளன்று தாயகத்தில் விடுதலைப்புலிகளுக்கும் இந்தியப் படையினருக்கும் பெரும் யுத்தம் வெடித்தது. இதனையடுத்து விடுதலைப் புலிகளையும் விடுதலைப்புலிகளின் தீவிர ஆதரவாளர்களையும் தேடியழிக்கின்ற நடவடிக்கையில் இந்தியப்படையினர் தீவிரமாக இறங்கினர். ஆதலால் ஸ்ரனிஸ் மாஸ்ரரும் இந்தியப் படையினரின் தேடுதலுக்கு உள்ளாகியிருந்தார். இந்தச் சூழ்நிலையில் வடமராட்சி அணியில் அங்கம் வகித்த குறிப்பிட்ட போராளிகள் வடமராட்சிக் கிழக்குப் பிரதேசத்தின் எல்லைப் புறத்திலுள்ள போக்கறுப்பு வண்ணாங்குளம் சுண்டிக்குளம் ஆகிய இடங்களில் காட்டுப் பகுதிகளை அண்டியதாக மக்களின் மறைமுகமான ஆதரவுடன் தலைமறைவாக தங்கியிருந்து போராட்டச் செயற்பாடுகளை முன்னெடுத்துக் கொண்டிருந்தார்கள். எனவே இந்தியப் படையினரால் தீவிரமாக தேடப்பட்டுவந்த ஸ்ரனிஸ் மாஸ்ரரும் குறித்த இந்த போராளிகள் அணியுடன் இணைந்து கொண்டார். அன்றிலிருந்து சயனைட் வில்லையை கழுத்தில் அணிந்துகொண்டு தன்னை ஒரு முழு நேரப் போராளியாக இணைத்துக் கொண்டார். அப்போது அந்த அணியில் மாஸ்ரரின் மகனான லங்கநாயகமும் எடிசன் என்ற பெயருடன் போராளியாகச் செயற்பட்டுக் கொண்டிருந்தார். பின் நாளில் எடிசன் போராட்டத்திலிருந்து விலகிவிட்டார்.

இந்தியப் படையினரின் தொடர்ச்சியான ரோந்து நடவடிக்கைகள் பிரதான சந்திகளில் இந்தியப் படையினரின் காவல் நிலைகள் கட்டைக்காடு தாளையடி நாகர்கோவில் உள்ளிட்ட இன்னும்பல இடங்களில் இந்தியப் படையினரின் பிரதான படைத்தளங்கள் என இந்தியப் படையினரின் இறுக்கமான பிடிக்குள் வடமராட்சிக்கிழக்குப் பிரதேசம் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த சமயத்திலும் ஸ்ரனிஸ் மாஸ்ரர் மக்களுடன் நெருக்கமான தொடர்புகளைப் பேணி போராளிகளுக்கு தேவையான உணவுப் பார்சல்களை மக்களிடத்திலிருந்து பெற்றுக்கொள்ளல் மற்றும் போராட்டத்திற்கான புதிய போராளிகளை இணைத்து மணலாற்றுக் காட்டுப் பகுதிக்கு அனுப்பி வைத்தல் ஏனய போராளிகளை இராணுவச் சுற்றிவளைப்புக்களிலிருந்து பாதுகாத்தல் முதலான போராட்டத்திற்கு இன்றியமையாத பணிகளை தனது சாதுரியமான அறிவாற்றலால் மிகவும் நேர்த்தியாக நிறைவேற்றியிருந்தார். மாஸ்ரரால் இணைக்கப்பட்ட போராளிகள் பின்நாட்களில் அமைப்பில் துறைசார்ந்த பொறுப்பாளர்களாகவும் அணித் தலைவர்களாகவும் தளபதிகளாகவும் பொறுப்புக்கள் வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

1990ம் ஆண்டு முற்பகுதியில் இந்தியப் படையினர் தமிழீழ மண்ணிலிருந்து முழுமையாக வெளியேறியதன் பிற்பாடு திரு சூசைஅவர்கள் மீண்டும் வடமராட்சிக் கோட்டப் பொறுப்பேற்றதையடுத்து ஸ்ரனிஸ் மாஸ்ரர் தனது உறுப்பினர் பெயராக மறவன் என்ற பெயரை தனதாக்கி மறவன் மாஸ்ரராக வடமராட்சி அணியில் வலம் வந்தார். சூசைஅவர்கள் வடமராட்சி அணியை விரிவாக்கம் செய்யும் செயற்திட்டத்தில் மறவன் மாஸ்ரர் அவருக்கு பக்கத் துணையாகச் செயற்பட்டவர். குறிப்பாக அரசியல்ச் செயற்பாடுகளிலும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் கொள்கைப் பரப்புரைகளை மக்கள் மத்தியில் முன்னெடுத்துச் செல்வதிலும் முன்னோடியாகத் திகழ்ந்தவர். அத்துடன் வடமராட்சி எல்லங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் உருவாக்கத்தின் போது அதன் கட்டுமானப் பணிகளையும் நெறிப்படுத்தியதுடன் மாவீரர் துயிலும் இல்லம் திறந்து வைக்கப்பட்ட தொடக்கநாட்களில் அதாவது அன்றைய நாட்களில் மாவீரர்களின் வித்துடல்கள் தகனம் செய்வதுதான் நடைமுறையாக இருந்தது. அதற்கமைவாக மாவீரர்களின் வித்துடல்களை பொதுமக்களின் வணக்கத்திற்காக வைத்து பின்னர் துயிலும் இல்லத்திற்கு கொண்டுவந்து முழுப்படைய மதிப்புக்களுடன் தகனம் செய்கின்ற புனிதமான பணிகளையும் விசுவாசமாகவும் நிறைவாகவும் செய்திருந்தார்.

அதுவரை காலமும் மட்டுப்படுத்தப்பட்டளவில் செயற்பட்டுக் கொண்டிருந்த கடற்புறா அணி 1991ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 19ம் நாளன்று விடுதலைப்புலிகளின் கடற்புலிகள் படையணியாக பரிணாமம் பெற்றபோது அதுவரை காலமும் வடமராட்சிக் கோட்டப் பொறுப்பாளராக பொறுப்புவகித்த திரு. சூசைஅவர்கள் கடற்புலிகளின் சிறப்புத் தளபதியாக பொறுப்பேற்றார். இதனையடுத்து மறவன் மாஸ்ரரும் வடமராட்சி அணியிலிருந்து கடற்புலிகள் படையணியில் இணைந்து கொண்டார். 1992ம் ஆண்டு கடற்புலிகளின் யாழ் மாவட்ட அரசியல்த்துறைப் பொறுப்பாளராக மறவன் மாஸ்ரர் பொறுப்பேற்றுக் கொண்டார். அவரது ஆளுமையுடன் கூடிய அரசியல்ப் பேச்சுக்கள் மக்களை பெரிதும் கவர்ந்தன. குறிப்பாக வடமராட்சி வடக்கு வடமராட்சிக் கிழக்கு மற்றும் பாசையூர், குருநகர், கொழும்புத்துறை, நாவாந்துறை, சின்னக்கடை, கொட்டடி பிரதேச வாழ் மக்களுடன் நெருக்கமான உறவு நிலையைப் பேணி சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரையிலும் நீங்கா இடத்தைப் படித்துக்கொண்டவர். அந்த வகையில் கடற்தொழிலாளர் கூட்டுறவுச்சங்கள் சமாசங்கள் மற்றும் கடற்றொழிலாளர் ஒன்றியங்கள் ஆகிய சமூகக்கட்டமைப்புக்களுக்கு ஊடாக சிங்களப் பேரினவாத அரசின் பொருளாதாரத் தடைகளாலும் கடல்வலயத் தடைச் சட்டத்தாலும் மீனவர்கள் மீதான கடற்படையினரின் கொலைவெறித்தாக்குதல்களாலும் சொல்லொணாத் துன்பங்களையும் துயரங்களையும் அனுபவித்துக் கொண்டிருந்த நெய்தல் நில மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதிலும் அந்த சமூகக் கட்டமைப்புக்களுக்கு ஊடாக விடுதலைப் போராட்டத்திற்கு இன்றியமையாததும் பக்க பலமானதுமான மக்கள் பலத்தை அணிதிரட்டி கடற்புலிகளின் வளர்ச்சியிலும் விரிவாக்கத்திலும் அயராது உழைத்தார். 1992ம் ஆண்டு நடுப்பகுதியில் மண்டைதீவுக் கடற்பரப்பில் நங்கூரமிட்டிருந்த சிறிலங்கா கடற்படையினரின் நீரூந்து விசைப்படகை கடற்புலிகள் மிகவும் லாவகமாக கைப்பற்றிக் கொண்டுவந்து அதனை குருநகரில் கரையேற்றியபோது மறவன் மாஸ்ரர் நின்ற உற்சாகத்தில்தான் குருநகர் பாசையூர் மக்கள் அனைவரும் வந்து அந்த நீரூந்து விசைப்படகை கரையேற்றுவதற்கு தோள் கொடுத்தார்கள். முதன் முதலில் கைப்பற்றப்பட்ட அந்த நீரூந்து விசைப்படகுதான் கடற்புலிகள் பின் நாளில் தமிழீழ கடற்படையாக வளர்ச்சி காணுவதற்கு வித்திட்டது. தொடர்ந்தும் கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசைஅவர்களுக்கு மறவன் மாஸ்ரர் பல வழிகளிலும் பக்கத் துணையாகச் செயற்பட்டார்.

1995ம் ஆண்டு பிற்பகுதியில் அரச படையினர் யாழ் குடாநாட்டின் மீது முன்னெடுத்த சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கையின் போது குடாநாட்டிலிருந்து இலட்சக் கணக்கான மக்களும் வன்னிப் பெருநிலப்பரப்பிற்கு இடம் பெயர்ந்திருந்தனர். 1996ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19ம் நாளன்று யாழ் குடாநாடு முழுமையாக அரச படையினரின் ஆக்கிரமிப்பிற்கு உள்ளாகியதையடுத்து விடுதலைப் புலிகளின் அனைத்து கட்டமைப்புக்களும் படையணிகளும் வன்னிப் பெருநிலப்பரப்பிற்கு நகர்த்தப்பட்டு வன்னியை தளமாகக் கொண்டு செயற்பட்டன. ஆனாலும் யாழ் குடாநாடு அரச படையினரின் ஆக்கிரமிப்பிற்கு உள்ளானமையானது மறவன் மாஸ்ரரின் மனதை ஆழமாகப்பாதித்தது. அன்றிலிருந்து அவர் ஒரு சபதம் எடுத்துக்கொண்டார். அதாவது தான் மீண்டும் யாழ்ப்பாணத்தில் கால் பதிக்கும் வரையிலும் ரவுசர் அணிந்து கொள்ளமாட்டேன். இதுவே அந்தச் சபதமாகும். அன்றிலிருந்து சாதாரண வெள்ளைச் சாரமும் சேட்டும் அணிந்து கொள்வதையே வழக்கமாக்கிக் கொண்டார். வன்னியில் கடற்புலிகளின் ஆளுகைக் குட்பட்டிருந்த முல்லைத்தீவு மாவட்டம் மன்னார் மாவட்டம் ஆகிய இடங்களில் அமையப்பெற்றிருந்த கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சமாசங்களின் மேலாளராக மறவன் மாஸ்ரர் பொறுப்பேற்றுக் கொண்டு கிராமிய கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களையும் அவற்றை நிர்வகிக்கின்ற சமாசங்களையும் சீரமைத்து புதுப்பொலிவுடன் செயற்பட வழிவகுத்ததோடு மறவன் மாஸ்ரரின் ஆலோசனைகளுக்கும் வழிகாட்டலுக்கும் அமைவாகவே கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களும் சமாசங்களும் தத்தமது செயற்பாடுகளை முன்னெடுத்தன. அப்போது வடமராட்சியிலிருந்து இடம்பெயர்ந்த பெரும்பாலான கடற்தொழிலாளர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோரக் கிராமங்களிலேயே குடியிருந்தார்கள். எனவே இவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்குடன் மறவன் மாஸ்ரரின் ஆலோசனைக்கு அமைவாக வடமராட்சி கடற்தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தி வடமராட்சி இடம்பெயர்ந்தோர் கடற்தொழிலாளர் கூட்டுறவுச்சங்கம் என்ற கட்டமைப்பை உருவாக்கி அதனூடாக இடம்பெயர்ந்த கடற்தொழிலாளர்களின் அன்றாடப்பிரச்சினைகளுக்கு தீர்வு கிட்டியது.

மேலும் மறவன் மாஸ்ரர் சிறந்த நாடக எழுத்தாளர். சிறந்த கலைஞர். அத்துடன் பாரம்பரிய கலைவடிவங்களில் ஒன்றான கரகாட்டம் ஆடுவதிலும் அதனை நெறியாள்கை செய்து அரங்கேற்றுவதிலும் அத்துடன் பாடல்களுக்கேற்ற அபிநயநடனத்தை நெறியாள்கை செய்து அரங்கேற்றுவதிலும் அவருக்கு நிகர் அவர்தான். ‘இன்னும் ஐந்து மணித்துளியில் எதிரியின் போர்க்கப்பல் வெடிக்கும் தமிழ் ஈழம் என் வெற்றிச்செய்தி படிக்கும்…..’ என்ற பாடலுக்கும் ‘அடடா பகையே வாடாவாடா புலியா நீயா பார்க்கலாம்…..’ என்றபாடலுக்கும் அவரால் நெறியாள்கை செய்து அரங்கேற்றப்பட்ட அபிநய நடனங்கள் தேசியத்தலைவரின் பாராட்டுதல்களை பெற்றிருந்தது.

1999ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11ம் நாளன்று ஓயாத அலைகள் – 03 நடவடிக்கையின் நான்காவது கட்டமாக வெற்றிலைக்கேணி – கட்டைக்காடு படைத்தளங்கள் விடுதலைப்புலிகளால் தாக்கியழிக்கப்பட்டன. இந்த நடவடிக்கைக்காக சிறப்புத்தளபதி சூசை அவர்களால் மறவன் மாஸ்ரரிடம் மிக முக்கியத்துவமானதும் சவால் நிறைந்ததுமான பாரியபணி ஒன்று ஒப்படைக்கப்பட்டிருந்தது. அதாவது வெற்றிலைக்கேணி – கட்டைக்காடு படைத்தளங்கள் வெற்றி கொள்ளப்படும் வரையிலும் சுண்டிக்குளம் – சேற்றுத்தொடுவாய் உடைப்பெடுக்கவிடாமல் தடுக்கவேண்டும். குறித்த தாக்குதல் நடவடிக்கை நடந்த காலப்பகுதி மாரிகாலம் என்பதால் களமுனைக்கான விநியோகம் படகுகள்மூலமாக சுண்டிக்குள நீரேரி ஊடாகவே மேற்கொள்ள வேண்டியிருந்தது. அவ்வாறு சேற்றுத்தொடுவாய் உடைப்பெடுக்கும்பட்சத்தில் சுண்டிக்குளம் நீரேரி தண்ணீர் கடலுக்குள் சென்றுவிடும். சதுப்புநிலத்தில் படகுகளை செலுத்தமுடியாது. இதனால் களத்தில் வீரச்சாவடைந்தவர்கள், விழுப்புண்ணடைந்தவர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட படைக்கலத் தளபாடங்கள் ஆகியவற்றை நகர்த்த முடியாது போய்விடும். ஏற்கனவே 1997ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஆனையிறவு – பரந்தன் படைத்தளங்கள் மீது விடுதலைப்புலிகள் மேற்கொண்ட வலிந்ததாக்குதலில் பதினொரு ஆட்லறிப்பீரங்கிகள் விடுதலைப்புலிகளால் கைப்பற்றப்பட்டபோதிலும் அந்தச் சந்தர்ப்பத்தில் சுண்டிக்குளம் – நல்ல தண்ணீர்த் தொடுவாய் உடைப்பெடுத்ததால் கைக்கெட்டியது வாய்க்கெட்டாமல்ப்போனது என்றதற்கமைவாக கைப்பற்றப்பட்ட பதினொரு ஆட்லறிப் பீரங்கிகளையும் நகர்த்த முடியாமல் அங்கேயே தகர்த்தழிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை யேற்பட்டது. இந்த படிப்பினையையும் அனுபவத்தையும்கொண்டுதான் சூசை அவர்கள் மறவன் மாஸ்ரரிடம் கண்டிப்பான உத்தரவுடன் கூடிய இந்தப்பணியை ஒப்படைத்திருந்தார். மாரி மழையும் கடுமையாகப் பொழிந்தது. எந்த நேரத்திலும் சேற்றுத்தொடுவாய் உடைப்பெடுக்கும் அபாயச் சூழ்நிலை நிலவியது. மறவன் மாஸ்ரர் நாட்டுப்பற்றாளர் ஜோண் பொஸ்கோவையும் கூட்டிச்சென்று அர்த்த சாமத்தில் கொட்டும் மழைக்கு மத்தியிலும் தொடுவாய் முகத்துவாரத்திற்கு மண்சாக்குகளை அடுக்கி தொடுவாய் உடைப்பை தடுத்து இயற்கையை வெற்றிகொண்டதோடு வெற்றிலைக்கேணி – கட்டைக்காடு படைத்தளங்களின் வெற்றிக்கும் வலுச்சேர்த்திருந்தார்.

2000ம் ஆண்டு ஓயாத அலைகள் – 03 நடவடிக்கையின் தொடர்நடவடிக்கையாக விடுதலைப்புலிகளால் தாளையடி படைத்தளம் தாக்கியழிக்கப்பட்டு செம்பியன்பற்று மாமுனை ஆகிய பகுதிகளை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்த வேளையில் தாளையடிக்குச் சென்ற சிறப்புத் தளபதி சூசைஅவர்களுடன் கூடச்சென்ற மறவன் மாஸ்ரர் தனது சொந்தவீடு அண்மித்ததும் “அண்ண ஒரு நிமிசம் அண்ண ஒருநிமிசம்” என்று கூறிவிட்டு ஓடிச்சென்று தனது வீட்டில் ஒருபிடி மண்ணை எடுத்து முத்தமிட்டு அதனை தனது சேட்பொக்கற்றினுள் போட்டுக்கொண்டு வந்திருந்தார். இது அவர் தான் பிறந்த மண்ணின் மீது கொண்ட ஆழமான காதலை வெளிக்காட்டி நிற்கின்றது. மேலும் கடலில் வீரச்சாவடைந்த கடற்புலி மாவீரர்களையும், கடற்கரும்புலி மாவீரர்களையும் நினைவுகூர்ந்து ஆண்டுதோறும் மாவீரர்நாளில் கடலில் நினைவுச்சுடர் ஏற்றப்பட வேண்டும் என்ற ஆலோசனையை மறவன் மாஸ்ரர் சிறப்புத் தளபதி சூசை அர்களுக்கு கூறியதற்கமைவாகவே 2000ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டுவரையிலும் மாவீரர் நாளில் கடலில் வீரச்சாவடைந்த மாவீரர்களை நினைவுகூர்ந்து முல்லைத்தீவுக் கடலில் பொதுச்சுடர் ஏற்றப்படுவது வழக்கமான நடைமுறையாக கடைப்பிடிக்கப்பட்டுவந்தது.

2002ம் ஆண்டு நோர்வே நாட்டின் அனுசரணையுடன் சிறிலங்கா அரசாங்கத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு அமைவாக நடைமுறைக்குவந்த போர் நிறுத்தத்தைத் தொடர்ந்து மறவன் மாஸ்ரர் யாழ் குடா நாட்டிற்குச் சென்று அதுவரை காலமும் மந்தகதியில் செயற்பட்டுக் கொண்டிருந்த தீவகம் வலிகாமம் வடமராட்சி ஆகிய பிரதேசங்களின் கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்கள் சமாசங்கள் மற்றும் யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் சம்மேளனம் ஆகியவற்றை மறுசீரமைத்து அந்த சமூகக்கட்டமைப்புக்கள் புதுப்பொலிவுடன் வளர்ச்சிப் பாதையில் பயணிக்க அளப்பரிய சேவையாற்றியவர். அத்துடன் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மற்றும் வடமராட்சிக்கிழக்குப் பிரதேசங்களின் புனர்நிர்மாணம் மீள்கட்டுமானம் போன்ற செயற்திட்டங்களில் அவ்வவ்போது வேண்டிய ஆலோசனைகளை வழங்கி அபிவிருத்திப்பணிகளை சீரியமுறையில் நெறிப்படுத்தினார்.

2002ம் ஆண்டு வடமராட்சிக்கிழக்குப் பிரதேசத்தில் உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லம் உருவாக்கப்பட்ட பொழுது அதன் உருவாக்கத்திலும் வளர்ச்சியிலும் பெரிதும் பங்காற்றினார். தான் மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு சென்றதையடுத்து 2002ம் ஆண்டு யூலை மாதம் நடபெற்ற கடற்புலிகளின் பத்தாவது ஆண்டு நிறைவு நாளுடன் தனது சபதத்தை முடித்துக்கொண்டார். அதாவது வெள்ளைச்சாரம் அணிவதை விடுத்து மீண்டும் ரவுசர் அணிவதை நடைமுறையாகக் கொண்டார். பத்தாம் ஆண்டு நிறைவு விழாவில் போராளிக்கலைஞர்களை உள்ளடக்கி மாஸ்ரரால் நெறியாள்கை செய்து அரங்கேற்றப்பட்ட நாடகமும் நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்துகொண்டிருந்த தேசியத்தலைவரின் கவனத்தை வெகுவாகக் கவர்ந்திருந்தது. 2003ம் ஆண்டில் மாவீரர் எழுச்சி நாட்களை முன்னிட்டு வடக்கு மாகாணத்தில் ஐந்து மாவட்டங்களிலும் போராளிக் கலைஞர்களை உள்ளடக்கி கரகாட்டம் அரங்கேற்றப்பட வேண்டும் என்ற சிறப்புத் தளபதி சூசைஅவர்களின் பணிப்புரைக்கு அமைவாக ஐந்து மாவட்டங்களிலும் தனது நெறியாள்கையில் கரகாட்டத்தை அரங்கேற்றி மக்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பைப் பெற்றிருந்தார். அத்துடன் இயக்கத்தின் பல்வேறு நிகழ்வுகளிலும் அவரது நெறியாள்கையில் அரங்கேற்றப்பட்ட கரகாட்டம் போராளிகள் மத்தியிலும் தனித்துவமான இடத்தைப் பிடித்துக்கொண்டது. கரகாட்டம் என்றால் மறவன்மாஸ்ரர் என்று சொல்லுகின்ற அளவுக்கு அவரது கரகாட்டம் பெயர்பெற்றிருந்தது.

Lieutenant-Colonel-Maravan-Master.jpg

தேசியத்தலைவரின் எண்ணங்களுக்கும் சிந்தனைகளுக்கும் ஏற்றவகையிலும் சிறப்புத் தளபதி சூசைஅவர்களின் எதிர்பார்ப்புக்களுக்கு அமைவாகவும் தனது பணிகளை முன்னெடுத்தவர். தேசியத் தலைவரினதும் சிறப்புத் தளபதியினதும் மதிப்பிற்கும் விருப்பத்திற்கும் பாத்திரமானவர். சிறப்புத் தளபதி சூசை அவர்கள் நெருக்கடிகளை சந்திக்கின்ற சந்தர்ப்பங்களிலெல்லாம் தேவையான ஆலோசனைகளை வழங்கி சகலவழிகளிலும் பக்கத் துணையாகவிருந்து வழிகாட்டிய ஒரு சிறந்த ஆசான். ஆனாலும் தான் எடுத்த முடிவில் சிறிதும் வழுவாத ஒரு பிடிவாதக்காரன்.

மறவன் மாஸ்ரர் தொடர்பாக சிறப்புத்தளபதி சூசை அவர்கள் குறிப்பிடுகையில்…..

‘அவர் ஒரு பிடிவாதக்காரன் நான் பொறுப்பாளராக இருந்துகூட அவரது பிடிவாதத்தை என்னால் மாற்ற முடியாது போய்விட்டது’ என்றார். வயதால் முதுமை தட்டியபோதும் இயற்கையான நோய்கள் அவரை வாட்டியபோதும் அவற்றையெல்லாம் வெளிக்காட்டாது தமிழீழ விடுதலைக்காக ஓய்வின்றி உழைத்தவர். ஓரிரு சந்தர்ப்பங்களில் கடுமையாக நோய்வாய்ப்பட்டு மரணத்தின் வாசலுக்குச் சென்ற பொழுதும் கூட அவற்றையெல்லாம் துணிவுடன் வெற்றிகொண்ட மறவன்மாஸ்ரரால் இந்தத்தடைவ தனக்கு எதிராக வந்த காலனை வெற்றிகொள்ள முடியவில்லை.

2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11ம் நாளன்று இரவு 7.30 மணியளவில் மறவன்மாஸ்ரர் மாரடைப்பு ஏற்பட்டு சாவைத் தழுவிக்கொண்டார். அவரது வித்துடல் யாழ் குடாநாடு மற்றும் மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கும் மக்களின் இறுதி வணக்கத்திற்காக கொண்டுசெல்லப்பட்டபோது அலை அலையாக திரண்டுவந்த மக்கள் அவரது வித்துடலுக்கு கண்ணீருடன் இறுதி வணக்கம் செலுத்தியதுவும் டிசம்பர் மாதம் 17ம் நாளன்று உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்தில் அவரது வித்துடல் விதைக்கப்பட்டபோதும் அலை கடலெனத் திரண்டுவந்த மக்கள் கண்ணீருடனும் கனத்த இதயங்களுடனும் அவரது வித்துடலுக்கு இறுதிவிடைகொடுத்ததுவும் மக்கள் அவர்மீது கொண்டிருந்த ஆழமான அன்பையும் மதிப்பையும் வெளிக்காட்டி நிற்கின்றது.

லெப். கேணல் மறவன் மாஸ்ரர் எம்மை விட்டுப் பிரிந்து பத்து ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும் காலத்தின் உயிர்மூச்சாக ஓயாத புயலாக அவர் என்றென்றும் எம்மவர் இதயக் கோவில்களில் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்.

‘கடலிலே காவியம் படைப்போம்’

நினைவுப்பகிர்வு:- செங்கோ.

 

https://thesakkatru.com/sea-tigers-lieutenant-colonel-maravan-master/

  • 11 months later...
  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.