Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காக்க… காக்க…. கணையம் காக்க!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

காக்க… காக்க…. கணையம் காக்க!

 
 


 

-டாக்டர்  கு.கணேசன்

கல்லீரலைத் தெரிந்த அளவுக்குக் கணையம் (Pancreas) தெரிந்தவர்கள் ரொம்பவே குறைவு. இத்தனைக்கும் செரிமான மண்டலத்தின் ‘மூளை’ போல் இயங்குவது கணையம்தான். ஆல்கஹால் அடிமைகள்கூட ‘குடித்தால் கல்லீரல் கெட்டுப்போகும்’ என்பதைத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். அதே ஆல்கஹால் கணையத்தையும் கெடுத்து, உயிருக்கே உலைவைக்கும் என்பதை உணர்வதில்லை.
http://kungumam.co.in/kungumam_images/2017/20170120/13.jpg
கணையம் மிகவும் சாதுவான உறுப்பு. இது, இரைப்பைக்கு நேர் கீழாக, வயிற்றின் இடதுபுறத்தில், வாழை இலை வடிவத்தில் நீளவாக்கில் படுத்திருக்கிறது; 12 முதல் 15 செ.மீ. வரை நீளம் உடையது. இதன் எடை அதிகபட்சமாக 100 கிராம் இருக்கும். இது தலை, உடல், வால் என மூன்று பகுதிகளைக் கொண்டது. இதன் ஊசி வால் வயிற்றின் இடதுபுறம் இருக்கிறது; அகன்ற தலை வலதுபுறம் சிறுகுடலுக்கு அருகில்.

இதிலிருந்து கிளம்பும் கணைய நாளம், பித்தப்பையில் இருந்து வரும் பித்த நாளத்துடன் இணைந்து சிறுகுடலுடன் இணைகிறது. கணையம் ஓர் இரட்டைச் சுரப்பி. செரிமானத்தை இயக்கும் ‘நாளமுள்ள சுரப்பி’யாகவும், ஹார்மோன்களைச் சுரக்கும் ‘நாளமில்லாச் சுரப்பி’யாகவும் இயங்குகிறது. அது என்ன ‘நாளம் உள்ளது, நாளம் இல்லாதது?’ நம்மிடம் லேண்ட் லைன் போன், வயர்லெஸ் போன் இருக்கிற மாதிரி, உடலிலும் இரண்டு வகை சுரப்பிகள் இருக்கின்றன.
http://kungumam.co.in/kungumam_images/2017/20170120/13a.jpg
ஏதாவது ஒரு நாளம் வழியாக உடலின் ஓரிடத்தில் சுரக்கப்படும் நீரானது இன்னொரு இடத்துக்கு எடுத்துச் செல்லப்படுகிறது என்றால், அது நாளமுள்ளது. அதாவது, லேண்ட் லைன்! கிடைக்கிற சிக்னலுக்கு ஏற்ப நீர் சுரந்து, நாளம் எதுவும் இல்லாமல், ரத்தத்தில் நேரடியாகக் கலந்துவிடுகிறது என்றால், அது நாளம் இல்லாதது. இது வயர்லெஸ்!

இந்த இரண்டு வகைச் சுரப்பிகளும் ஒருங்கே இணைந்துள்ள ஓர் ஆச்சர்ய உறுப்பு கணையம் தவிர உடலில் வேறு எதுவுமில்லை. ஒரு தேனடையைப்போல் இருக்கிற கணையத்தின் ‘அசினார்’ செல்கள் செரிமான ஜூஸை சுரக்கின்றன. அந்த நீர் கணைய நாளம் வழியாக சிறுகுடலை அடைகிறது. ஆழ்கடலின் நடுவே பனிப்பாறைகள் மிதக்கிற மாதிரி கணையத்தின் நடுநடுவே ‘லாங்கர்ஹான்ஸ் திட்டுகள்’ தெரிகின்றன. அவற்றில் ஆல்ஃபா, பீட்டா, டெல்ட்டா எனும் செல்கள் இருக்கின்றன.

ஆல்ஃபா, குளுக்ககானையும்; பீட்டா, இன்சுலினையும் சுரக்கின்றன. நேரடியாக ரத்தத்தில் கலந்துவிடுகின்றன. ஆரோக்கியமான கணையம், ஒரு நாளைக்கு ஒன்றரை லிட்டர் செரிமான ஜூஸை சுரக்கிறது. இதில் செரிமானத்துக்கு உதவும் என்சைம்களும் மினரல்களும் ஏராளமாக உள்ளன. என்சைம்களைச் சுரப்பதோடு கணையம் நின்றுவிடுவதில்லை; மிகச் சிறந்த சென்சாராகவும் செயல்படுகிறது என்பதுதான் ஆச்சரியத்தின் உச்சம்!

கணைய என்சைம்கள் எரிமலைக் குழம்புக்கு ஒப்பானவை. இவை அளவுக்கு அதிகமாகச் சுரந்தாலும் ஆபத்து; நிறைய நேரம் கணையத்தில் தேங்கினாலும் கெடுதல். எனவே, சாப்பிடும் உணவைப் பொறுத்து செரிமான ஜூஸை சுரக்கிறது; எவ்வளவு உணவு இரைப்பையில் இருந்து குடலுக்கு வருகிறது என்பதை மோப்பம் பிடித்து, அதற்குத் தேவையான என்சைம்களை அளந்து அனுப்புகிறது. உணவு எப்போது சிறுகுடலுக்கு வருகிறதோ, அந்த நேரத்தில் கணையச் சுரப்பும் அங்கு வந்துவிடுகிறது. புரோகிராம் செய்யப்பட்ட தேர்ந்த கம்ப்யூட்டர்கூட இதனிடம் தோற்கும் அளவுக்கு நேர்த்தி!

சாப்பிடுவது இட்லி, தோசை என்றால், கணையம் அதை சென்சார் செய்து ‘அமிலேஸ்’ என்சைமைச் சுரக்கும். பருப்புச்சோறு என்றால் ‘டிரிப்சின்’ என்சைமையும், மட்டன் என்றால் ‘லைப்பேஸ்’ என்சைமையும் தேர்ந்தெடுத்துச் சுரக்கும். மாவுச்சத்து குளுக்கோஸாகவும், புரதச்சத்து அமினோ அமிலமாகவும், கொழுப்புச்சத்து கொழுப்பு அமிலமாகவும் கல்லீரலுக்குப் போகும். அங்கே அவை உடலுக்குத் தேவையான சக்தியாக மாறும்.

கணையமானது செரிமானச் சேவகன் மட்டுமல்ல; குடலைப் பாதுகாப்புக்கும் ஃபயர் சர்வீஸும்தான்! சாப்பிட்ட உணவில் அமிலத் தன்மை அதிகம் என்றால், ‘பைகார்பனேட்’ அயனிகளை அள்ளிக்கொண்டு வந்து, அந்த அமிலத் தீயை அணைத்துவிடும். இதனால், சிறுகுடல் சுவர்கள் அழிவின் விளிம்பிலிருந்து தப்பித்துவிடும். கணையம் மட்டும் இந்த வேலையைச் செய்ய மறுத்தால், நீங்கள் குடிக்கும் நூறு மில்லி லெமன் ஜூஸ் மட்டுமே குடலில் பெரிய ஓட்டையைப் போட்டுவிடும்.

இன்சுலின் ரத்தத்தில் சர்க்கரையைக் கட்டுக்குள் வைத்திருக்கிறது. குளுக்ககான், ரத்தத்தில் சர்க்கரை குறையும்போது, ஏற்கனவே கல்லீரல் சேமித்துள்ள மாவுச்சத்து, கொழுப்புச்சத்து போன்றவற்றிலிருந்து குளுக்கோஸை எடுத்து வந்து ரத்தத்தில் சேர்க்கிறது. இந்த இரண்டு ஹார்மோன்களும் புதுத் தம்பதிபோல் ஒன்றுக்கு ஒன்று புரிந்து செயல்படுவதால், ரத்தச் சர்க்கரை சரியாக இருக்கிறது. ஏதாவது ஒரு காரணத்தால் கணையம் பாதிக்கப்படுகிறது என வைத்துக் கொள்வோம்.

அப்போது இந்தச் சீரான இயக்கம் தடுமாறுகிறது; சர்க்கரை நோய் பிரசவமாகிறது. சர்க்கரை நோயைக்கூட சமாளித்துவிடலாம். ‘கணைய அழற்சி’ (Pancreatitis) எனும் கொடூரமான நோய் ஒன்று தாக்கும்போதுதான் ‘சாது மிரண்டால் காடு கொள்ளாது’ என்பதை உணர்வோம். கணைய அழற்சிக்கு முக்கியக் காரணம், மது. ஈரமான இரும்பில் ஈஸியாகத்  துருப்பிடிப்பதைப் போல் கணைய நாளத்தை மதுவானது எளிதில் அரித்துவிடுகிறது.

அந்த இடங்களில், தண்ணீர்க் குழாயில் உப்பு சேர்வதைப்போல, புரத என்சைம்கள் படிகட்ட அது அடைத்துக்கொள்கிறது. அப்போது கணைய நீரானது குடலுக்குப் போக முடியாமல், கணையத்திலேயே தேங்கிவிடுகிறது. அதுதான் ஆபத்தாகிறது. ஏற்கனவே சொன்ன ‘என்சைம் எரிமலை’ செல்களைத் தின்றுவிடுகிறது. அதனால் கணையம் வீங்கி அழிகிறது. இதுதான் கணைய அழற்சி. சமயங்களில் பித்த நாளத்தைப் பித்தப்பைக் கல்/கட்டி அடைத்துக்கொள்வதுண்டு. அப்போதும் இதே நிலைமைதான். கூடவே காமாலையும் கூட்டுச் சேர ஆரோக்கியம் ஆட்டம் காண்கிறது.

‘திடீர் கணைய அழற்சி’ (Acute Pancreatitis) மிக மிக மோசமான வலியைத் தரும். வாந்தி மிரள வைக்கும். மேல் வயிற்றில் ஆரம்பிக்கும் வலி அப்படியே முதுகுப் பக்கம் பரவும். குனிந்து உட்கார்ந்தால் வலி சிறிதளவு குறையும். படுத்தால் வலி அகோரமாகிவிடும். சில பேர் வலி தாங்க முடியாமல், தரையில் உருளுவார்கள். மாரடைப்பு வந்ததுபோல் அலறுவார்கள். இந்த வலியால் அவதிப்படுபவர்களை அடுத்தவர்கள் பார்த்தால், அதன் பிறகு குடிப்பதையே மறந்துவிடுவார்கள்.

வயிற்றை அல்ட்ரா சவுண்ட், சி.டி./எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்தால் கணைய பாதிப்பு தெரியும். அமிலேஸ், லைப்பேஸ் என்சைம்களை ரத்த டெஸ்டுகளில் அளந்து, நோயின் தீவிரத்தை அறியலாம். கொடுக்கப்படும் சிகிச்சைக்கு நோய் கட்டுப்படுகிறதா என்பதை ‘சிஆர்பி’ (CRP) டெஸ்ட் மூலம் தெரிந்து, அதற்கேற்ப மருத்துவமுறைகளை மாற்றிக்கொள்ளலாம். இந்த நோயை ஆரம்பத்தில் கவனித்துவிட்டால் ஒருவார சிகிச்சையில் குணப்படுத்திவிடலாம்.

தாமதப்படுத்தினால், சர்ஜரியில் கொண்டுபோய் விட்டுவிடும். இந்த நோய்க்கு மதுவை மறக்க வேண்டியது முக்கியம். இல்லையென்றால், இது ‘நாட்பட்ட கணைய அழற்சி’யாக (Chronic Pancreatitis) மாறிவிடும். ஒருவர் 5 வருடங்கள் தொடர்ந்து குடிப்பவராக இருந்தால், நாட்பட்ட கணைய அழற்சி அவரை ஆட்டிப்படைக்கத் தயாராகிவிட்டது என்று அர்த்தம். இது மெல்ல மெல்ல ஆளைக் கொல்லும் வியாதி.

சாப்பிடவே பிடிக்காது. குமட்டும். அப்படியே சாப்பிட்டாலும் வாந்தி கொட்டும். மலம் கொழுப்புக் கொழுப்பாகப்போகும். என்சைம்கள் சரியாக உணவில் சேராததால் அஜீரணம் ஆக்ரமிக்கும்; ஊட்டச்சத்துக் குறைபாடு உண்டாகும். உடல் மெலியும். இந்த நோயைக் குணப்படுத்த வழியில்லை. இதன் தீவிரத்தைக் கட்டுப்படுத்தலாம். அதற்குத் தொடர் சிகிச்சை தேவைப்படும். நாட்பட்ட கணைய அழற்சியில் வயிற்றுவலி எப்போதும் இருக்காது. கார்ப்பரேசன் தண்ணீர் லாரி மாதிரி எப்போதாவது வந்துபோகும்.

பலரும் இதை அல்சர் என தப்பாகப் புரிந்துகொண்டு, கடைகளில் அல்சர் ஜெல்களைப் பாட்டில் பாட்டில்களாக வாங்கிக் குடிப்பார்கள். வலி குறையாது. நாளாக நாளாக வயிறு உப்பி மூச்சுவிட முடியாது. பிறகென்ன, தேன் பாட்டிலைத் தேடியவருக்கு தேள் கொட்டிய கதையாகிவிடும். அப்போது டாக்டரிடம் ஓடுவார்கள். ERCP மூலம் பரிசோதித்தால், எதிர்க்கட்சிகள் முழுநேரம் ‘பந்த்’ நடத்துவதுபோல், பித்தநீர் துளிகூட குடலுக்குச் செல்ல முடியாமல் பித்தநாளம் அடைத்திருக்கும்.

உடனே அதை விரித்து, அடைப்பை அகற்றி, ‘ஸ்டென்ட்’டைப் பொருத்துவார்கள். அவசர ஆபரேஷன், உயிர் ஆபத்து என எல்லாவற்றையும் கடந்துவர வேண்டும். இவர்களில் பத்தில் ஒருவர் இறப்பைச் சந்திக்கிறார் என்பதுதான் பெருந்துயரம். கணையத்தின் குணத்தை இப்போது புரிந்திருப்பீர்கள். ஆரோக்கியமாக இருக்கும்போது அது ஒரு மண்புழு. மது உள்ளிட்ட விஷயங்களால் அதைச் சீண்டினால், அது நாகப் பாம்பு. உங்கள் கணையம் எந்த ரகம்? மண்புழுவா? நாகப் பாம்பா? தீர்மானிப்பது நீங்கள்தான்.
 

 


கணையம் காக்க 6 கட்டளைகள்

* மது, புகையை மறக்க வேண்டும்.
* கொழுப்பு மிகுந்த உணவுகளைக் குறைக்கவும்.
* அம்மைநோய்களுக்குத் தடுப்பூசி போட்டுக்கொள்ளவும்.
* பித்தப்பைப் பிரச்னைகளை உடனுக்குடன் கவனித்துவிடுங்கள்.
* சுய மருத்துவம் வேண்டாம்.
* வயிற்றில் அடிபடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

அமிலேஸ் டெஸ்ட் அலர்ட்

‘கணைய அழற்சி’ நோயின்போது கணையத்தின் செயல்பாட்டை அறிய ‘அமிலேஸ் என்சைம்’ பரிசோதனை செய்யப்படுகிறது. இதைத் தேவையில்லாமல் செய்யக்கூடாது. சிலர் தாங்களாகவே மாஸ்டர் ஹெல்த் செக்கப் செய்துகொள்ளும்போது இந்தப் பரிசோதனையும் செய்யப்படுவதுண்டு. அந்த ரிப்போர்ட்டில் ‘அமிலேஸ் அதிகம்’ என்று ஒரு ‘ஸ்டார்’ போட்டிருப்பார்கள்.

உடனே பயந்து பல மருத்துவமனைகளுக்குப் படி ஏறுவார்கள். பொதுவாக, வயிற்றில் எந்த ஓர் அழற்சிப் பிரச்னை என்றாலும் அமிலேஸ் அளவு சிறிது அதிகரிக்கவே செய்யும். இது குறித்துக் கவலைப்படத் தேவையில்லை. இதன் அளவு 1000 யூனிட்டுகளுக்கு மேல் இருந்தால் உடனே கவனிக்க வேண்டும்.

Q&A

கணைய பாதிப்பு மது அருந்துபவர்களுக்கு மட்டும்தான் ஏற்படுமா?
- ம. சந்திரிகா, தர்மபுரி.

பெரும்பாலும் மது குடிப்பவர்களுக்குத்தான் கணையம் பாதிக்கப்படும். என்றாலும், பித்தப்பையில் கல் உள்ளவர்கள், கட்டி, அழற்சி உள்ளவர்கள், புகைபிடிப்பவர்கள், பரம்பரையில் யாருக்காவது கணையம் பாதிக்கப்பட்டவர்கள், ரத்தத்தில் ‘டிரைகிளிசரைடு’ அல்லது ‘கால்சியம்’ அதிக அளவு உள்ளவர்கள், தட்டம்மையால் பாதிக்கப்பட்டவர்கள், விபத்தில் அடிபட்டவர்கள், சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டவர்கள் ஆகியோர் கணைய பாதிப்புக்கு உள்ளாகலாம். தவிரவும், பித்தப்பையில் சர்ஜரி செய்யப்படும்போது ஏற்படும் தவறுகள், சில மாத்திரை மருந்துகளின் பக்கவிளைவுகள் காரணமாகவும் இந்தப் பாதிப்பு மிக அரிதாக ஏற்படுவது உண்டு.

கணையப் புற்றுநோய் எப்படி வருகிறது? என்னென்ன அறிகுறிகள் தெரியும்? சிகிச்சை உள்ளதா?
- நவீன்குமார், உடுமலைப்பேட்டை.

பரம்பரை காரணமாக கணையப் புற்றுநோய் வருவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. புகைப் பழக்கமும் மதுப்பழக்கமும் உள்ளவர்களுக்கு இந்தப் பாதிப்பு வருகிறது. 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இது ஏற்படுவது வழக்கம். இதன் முக்கிய அறிகுறி மஞ்சள்காமாலை. பசி குறையும். வாந்தி வரும். வயிற்று வலி சிலருக்கு இருக்கும்; சிலருக்கு இருக்காது. மலம் பழுப்பு நிறத்தில் போகும். தோலில் கடுமையான அரிப்பு ஏற்படும். திடீரென ரத்தச்சர்க்கரை தாறுமாறாக எகிறும். உடல் எடை ரொம்பவே குறைந்து நெஞ்சுக்கூடு வெளியில் தெரியும். ஆரம்பத்திலேயே இதற்கு சிகிச்சை பெற்றால் 10 முதல் 15 ஆண்டுகள் வரை உயிர்வாழலாம். ‘விப்பில் ஆபரேஷன்’ (Whipple operation) என்ற சிகிச்சை இதற்குப் பிரபலம்.

குடலிலும் காசநோய் (TB) வருமா? இதைக் குணப்படுத்த முடியுமா?
- ஆர். குமாரசாமி, கோவில்பட்டி.

காசநோயைப் பொறுத்தவரையில் உடலில் எந்தப் பகுதியிலும் அது வரலாம். குடலிலும் அது வருவதுண்டு. அப்போது குடலில் புண் உண்டாகும். குடலில் அடைப்பு ஏற்படலாம். குடல் சுவர் தடித்து, அதன் இயக்கம் குறையலாம். அடிக்கடி ஏற்படுகிற வயிற்று வலி, வாந்தி, பேதி ஆகியவை முக்கிய அறிகுறிகள். மாலை நேரத்தில் காய்ச்சல் வருவது, உடல் எடை கொஞ்சம் கொஞ்சமாக குறைவது, எந்நேரமும் களைப்பாக இருப்பது போன்றவை இதன் துணை அறிகுறிகள். இதற்கு இப்போது நல்ல சிகிச்சைகள் உள்ளன. 100 சதவீதம் குணப்படுத்திவிடலாம்.

http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=11625&id1=132&issue=20170113

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.