Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அசை | தேவதைகளின் நீதி – பீவேர்ட்டன் சம்பவம் குறித்த ஒரு புலம்பல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

அசை | தேவதைகளின் நீதி – பீவேர்ட்டன் சம்பவம் குறித்த ஒரு புலம்பல்

சிவதாசன்

கடந்த சில நாட்களாக ஒரு செய்தி சமூக வலைத் தளங்களில் பகிரப்படுகிறது. இது சரியா? இது தகுமா எனப பல சமூக தேவதைகள் சிறகுகளை அடித்து ஆர்ப்பரிக்கின்றன. இது ஒரு selective amnesia ரகமெனவே எனக்குப் படுகிறது.

செய்தி இதுதான்.

சமீபத்தில் நம்ம தமிழர் ஒருவர் ஏதோ சில காரணங்களுக்காக ரொறோண்டோவிலிருந்து வெகு தூரத்தில் பீவேர்ட்டன் வீடொன்றை வாங்கிக்கொண்டு ‘செட்டில்’ பண்ணியிருந்தார். கோவிட் காரணமென்று ‘வெள்ளைப் பத்திரிகைகள்’ இரங்கலுரை கூறினாலும் அதில் எனக்கு மனம் ஒப்புவது போலில்லை.

அவர் கால் பதித்த இடம் பீவேர்ட்டன் என்றொரு பெரும்பாலான விவசாய, கோடைகால வீடுகள், ஸ்காபரோவிலிருந்து குடியேறிகளால் துரத்தப்பட்ட பரம்பரை வெள்ளைகள் வாழும் இடமென அறியப்பட்ட ஒன்று. மலிவான விலையில் அமைதியான இடமென்று அவர் அங்கு வாழச் சென்றிருக்கலாம். அதில் தப்பில்லை.

இறுதியாகக் கிடைத்த வெள்ளைப் பத்திரிகைச் செய்திகளின்படி அவருக்கும் அவரது குடும்பத்துக்கும் அங்கு வாழும் வெள்ளை அயலவர்களால் நெருக்கடியாம், உயிர் அச்சுறுத்தலாம். அயலவர்கள் அவரது வீட்டு முற்றத்தில் வேண்டுமென்றே குப்பைகளைக் கொட்டுகிறார்களாம். பள்ளிக்கூடம் போகும் பிள்ளைகளோடு பேசக்கூடாதென்று வெள்ளை அயலவர்கள் தமது பிள்ளைகளுக்குக் கட்டளையிட்டுள்ளார்களாம். இதை அவர் சொன்னதாக அப் பத்திரிகைகள் கூறுகின்றன. அவருக்காக அப்பகுதி கவுன்சிலர், சில நல்ல மனம் கொண்ட அயலவர்கள் ஆதரவுக்கரம் நீட்டியுள்ளார்கள். அவரது தொடர் முறையீடுகளுக்குப் பொலிஸ் வழங்கிய சேவை “சீ.சீ.டி.வி’ கமெராக்களைப் பொருத்திவிடு” என்பதோடு நின்றுவிட்டது.

இனக்குரோதம் எங்களுக்குப் புதிதல்ல. வாள் வெட்டு, கத்திக்குத்து, தார் போட்டு எரிப்பு, சூறையாடல் என்பனவற்றைத் தந்த நாட்டிலிருந்து முற்றத்தில் குப்பை கொட்டும் நாட்டுக்கு வந்திருக்கிறோம். “ஒன்பது அங்குலம் ஆழமாகக் குத்திவிட்டு ஆறங்குலத்துக்குக் குறைத்துக்கொள்வது முன்னேற்றமாகாது” என்று மல்கம் எக்ஸ் சொன்னது போல, இதுவும் எங்களுக்கு ஒரு முன்னேற்றம்தான்.

1990 களின் ஆரம்பத்தில் தமிழர்கள் பலர் தமது கிராமமான ஸ்காபரோவிலிருந்து வசதி குறைந்தவர்கள் ஏஜாக்ஸ், விற்பி என்று கிழக்காகவும், வசதி பெருத்தவர்கள் றிச்மண்ட் ஹில், ஓக்வில் என்று வடக்கு, மேற்காகவும், புறநகர்ப் பகுதிகளை நோக்கி ஓடினார்கள். இவர்களின் ஓட்டத்திற்குக் காரணம் அவர்களது கிராமத்தில் முற்றிய பல தமிழ்ப் பையன்கள் காடைத்தனம் செய்கிறார்கள் என்றும் இதனால் தமது பிள்ளைகள் ‘பழுதாகப் போய்விடுவார்கள்’ என்று அஞ்சி அவர்களைப் பாதுகாக்க இப் புறநகர்களுக்குத் தமது கூடுகளை நகர்த்திக் கொண்டிருந்தார்கள் என்றும் கூறப்பட்டது. இப்படிச் சென்றவர்களில் ‘இந்த வே…மக்கள்’ ரகமும், ‘These buggers…’ ரகமும் என்ற வேறுபாடுகளைத் தவிர மற்றும்படி எல்லோரும் தமிழீழ ஆதரவாளர்கள் தான்.

சில வருடங்களுக்குப் பிறகு இந்த இரண்டு ரகங்களும் ஏதோ ஒரு வகையில் தத்தம் அளவுகளில் தமது நகர்வுகளிற்கான பரிசுகளைக் கொடுத்திருந்தார்கள். டார்வினின் மொடெல்களான தப்பிப் பிழைத்த சிலருமுண்டு.

இப்படிப் போன பலர் தமது நகர்வுகளுக்காகக் கவலைப்பட்ட ஒரு பொதுவான விடயம், அவர்கள் எதிர்கொண்ட இனவாதம். அதில் மிக மோசமான விளைவு அவர்களது பிள்ளைகளின் கல்வி, உளவியல் பாதிப்பு எனப் பல பரிமாணங்களில் வெளிப்பட்டிருந்தனத. அவ்வப்போது ஸ்காபரோ தமிழ்க் கடைகளுக்கு வரும் காலங்களில் அவர்கள் தமது உள்ளங்களை அள்ளிக்கொட்டினார்கள். “மகன் பள்ளிக்குப் போகா மாட்டனெண்டிறான். மகள் தன்ர வின்ரர் கோட் மணக்கிதெண்டு சொல்லி தன்னை டீச்சர் பின் வரிசையிலை தனியா இருத்திவிட்டா என்கிறாள்” என்பன பரவலாகக் கொட்டப்பட்ட கவலைகள். இப்படியான பல பெற்றோர்கள், பெட்டிகளைக் கட்டிக்கொண்டு ஸ்காபரோவுக்குத் திரும்பி வந்தவர்களுமுண்டு.

வடக்குக்கும், மேற்குக்கும் நகர்ந்தவர்களில் பலர் தமது பிள்ளைகளின் பண்பாட்டு இழப்புகளைப் பல்லைக் கடித்துக்கொண்டு அனுபவிக்கவேண்டி ஏற்பட்ட தருணங்களுமுண்டு. சிறுபள்ளிகள் முதல் தமது பிள்ளைகளுடன் வீட்டுக்கு வந்து விளையாடி, sleep over செய்த வெள்ளைப் பிள்ளைகள் உயர் பள்ளி சென்றதும் தமது பிள்ளைகளை உதறிவிட்டு வெள்ளைகளோடு நட்பைப் பேணும் போது மனமுடைந்த பிள்ளைகளும், பெற்றோரும் ஏராளம்.

இதில் bottomline என்னெவென்றால், நமது பயணத்தை நாமேதான் தீர்மானிக்கிறோம் என்பதே. தமது விருப்பு வெறுப்புக்களையும், அபிப்பிராயங்களையும் சொல்லப் பயந்த, சொல்ல அதிகாரமற்ற, சொல்ல அனுமதி வழங்கப்படாத மனைவி / கணவன் (politically correct?), பிள்ளைகளது பாதிப்புக்களுக்கு யார் பொறுப்பேற்பது? வீட்டின் ஆளுனர் வாகனத்தை எடுத்துக்கொண்டு ஓடிப்போய் “அப்பா நான் ஸ்காபரோவில் நிற்கிறேன், வரக் கொஞ்சம் சுணங்கும்’ என்பதோடு எஞ்சியோரை வீட்டுக்குள் கட்டிப் போடுவதன் விளைவுகளுக்கு யார் பொறுப்பேற்பது?

நமது பீவேர்ட்டன் நண்பர் அங்கு வசிக்கச் செல்வதற்கு முன்னர் யாரை மனதில் வைத்திருந்தார் எனபது தெரியாது. பிள்ளைகளை அவர்களின் நண்பர்களிடமிருந்து பிரித்து விரும்பாத நட்புகளைப் பலவந்தமாக ஏற்படுத்த ஏன் முயற்சிக்கிறார் எனபது புரியவில்லை. மனைவி தன் நட்புகளோடு நாலு வார்த்தைகளைச் சிணுங்குவதற்கு முடியாமல் தத்திருக்கமாட்டார் எனக் கூற முடியுமா?

இனக் குரோதங்களுக்குப் பல வடிவங்களுண்டு. இவற்றில் பெரும்பாலானவை ‘Fear of the Unknown’ , ஒருவகை phobia, பரிச்சயமில்லாமையினால் ஏற்படும் அச்சம். இதைத் தீர்க்கப் பல வழிகளுண்டு. அவற்றிலொன்று இரு பகுதியினலிருக்கும் பொதுமைகளை முதன்மைப்படுத்தி இணைப்பை ஏற்படுத்திக் கொள்வது. இது பெரும்பாலான தருணங்களில் கலாச்சாரம் சார்ந்தது.

மேற்கு நாடுகளில், புதிய இடங்களுக்குக் குடிபெயரும்போது கேக், பிஸ்கட்ஸ் போன்ற பொருட்களை வீட்டில் தயாரித்து அயலவர்களுக்குக் கொடுத்து தம்மை அறிமுகப்படுத்திக் கொள்வது. போலிச் சிரிப்புடனெனினும் “oooh.. that smells nice” எனக்கூறி வரவேற்கும் பண்பு பல வெள்ளைகளிடமுண்டு. (அதற்காக எடுத்த உடனே வடையச் சுட்டுக் கொடுத்து உறவை ஆரம்பத்திலேயே முறித்துக்கொள்ளக்கூடாது! ). பிள்ளைகளையும் அழைத்துப்போய் அவரவர்களது toy களைப் பகிர்ந்து கொள்வது, இன்னுமொன்று. பெரும்பாலான தருணங்களில் அயலவர்களே முதலில் தமது உணவுப் பொருட்களுடன் வந்து வரவேற்பார்கள்.

இரண்டாவது முக்கிய விடயம், வீட்டை, குறைந்தது வெளிப்புறத்தை, சுத்தமாக வைத்திருப்பது; அயலவர்களின் தரத்தைப் பேணுவது. பல தடவைகளில் அயலவர்கள் அச்சப்படுவது எமது வரவால் தமது சொத்துக்களின் பெறுமதி குறைந்துவிடுமென்று. அவர்களது அச்சத்தைப் போக்கும் வல்லமை எம்மிடமே இருக்கவேண்டும். சிலரில் காணப்படும் outgoing personality எனப்படும் சுபாவம் இதற்கு மிகவும் உதவி செய்கிறது.

ஒரு தடவை நண்பரொருவர் மார்க்கத்தில் வீட்டை வாங்கிக்கொண்டு குடியேறியிருந்தார். குடியேறி மறுநாள் விடுப்புப் பார்த்த இத்தாலிய அயலவர் நண்பரைக் கண்டதும் முகத்தைச் சுழித்துக்கொண்டு கதவை அடித்துச் சாத்திக்கொண்டு உள்ளே போய்விட்டார். வசந்த காலம் வந்ததும் நமது நண்பர் தனது தோட்டத்தை மிக அழகாக்குவதற்காகப் பலத்த முயற்சியில் ஈடுபடுவதைப் பார்த்த இத்தாலியர் தானே முன்வந்து நண்பருக்குத் தனது உதவிகளைச் செய்து கொடுத்தார். அந்த வருடம் இருவரும் மரக்கறிகளைப் பரிமாறிக் கொண்டார்கள். அந்த வருடம் நண்பரது ட்றைவ்வேயில் வந்து நின்ற BMW வுடன் அவர்களது நட்பு மேலும் இறுகிப்போனது.

பீவேர்ட்டன் வாசி விடயத்தில் அவரது ஆதங்கத்தையும், எரிச்சல், நமைச்சல்களைப் புரிந்துகொள்ள முடிகிறது. அவரது அயலவர்களின் நடவடிக்கைகள் நியாயப்படுத்தக்கூடியன அல்ல ஆனால் அது போன்ற விடங்களைக் காண நாம் பீவேர்ட்டன் போகவேண்டுமென்பதில்லை. ஸ்காபரோவில் எப்போதுமே நடக்கலாம். அதே வேளை அவரது பிள்ளைகளின் உளவியல் ரீதியான பாதிப்புக்களை இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்ள முடிகிறது. இவ் விடயத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அவர்கள் தான். அவர்களுக்கான தேர்வு இங்கு வழங்கப்பட்டிருக்க வாய்ப்பில்லை.

இவற்றையெல்லாம் பார்க்காது, இங்கு காட்டப்பட்ட இனக்குரோத, காழ்ப்புணர்வுகளை மட்டும் பதாகையிட்டு நீதி கேட்டுப் போராடுவதில் அர்த்தமில்லை. தேவதைகளுக்கென்றொரு நீதியுமிருக்கிறது!

https://marumoli.com/அசை-தேவதைகளின்-நீதி-பீவே/?fbclid=IwAR3P-Wu0Hny7vAUqqQUPAEJ0k8dKe5VBRXZjsDDc7-wRT8c8PiqaLVahiZk

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.