Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கல்வி எனும் மகத்துவம் மிக்க சொத்தின் காவலர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கல்வி எனும் மகத்துவம் மிக்க சொத்தின் காவலர்

http://static2.tamilmirror.lk/assets/uploads/image_449a36fa71.jpg

 

கலாநிதி பரீனா ருஸைக்

(சிரேஷ்ட விரிவுரையாளர்,

புவியியல் துறை,

கொழும்பு பல்கலைக்கழகம்)

 

உயர்கல்வி நிறுவனங்களுள் பல்கலைக்கழகங்கள் மிக முக்கியமானவை. இலங்கையில் கொழும்புப் பல்கலைக்கழகம் மிகப்பெரிய பல்கலைக்கழகமாகவும், நவீன உயர்கல்வியை வழங்கும் கல்வி நிறுவனங்களுள் முதன்மை கல்வியகமாகவும் திகழ்கின்ற பழைமை வாய்ந்த பல்கலைக்கழகமாகும். 

பிரித்தானிய கொலனித்துவத்தின் கீழ், இலண்டன் பல்கலைக்கழகத்தோடு இணைந்து, 1921 ஆம் ஆண்டு இலங்கையில்  ‘பல்கலைக்கழகக் கல்லூரி’ எனும் பெயரில், கொழும்புப் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது. எனினும், இப் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பாடசாலை, 1870 இல் ஆரம்பிக்கப்பட்டது. ஆகையால், அவ்வாண்டே, ஸ்தாபக ஆண்டாகக் கருதுவது பொருத்தமானது. பட்டம் வழங்கும் நிகழ்வு 1923 இல் ஆரம்பிக்கப்பட்டது.

1870 இல் ஆரம்பிக்கப்பட்ட மருத்துவப் பாடசாலை, தென்னாசியப் பிராந்தியத்தில் இரண்டாவது ஐரோப்பிய மருத்துவப் பாடசாலையாக விளங்கியது. 1880 களில் இம்மருத்துவப் பாடசாலை, மருத்துவக் கல்லூரியாகத் தரமுயர்த்தப்பட்டது. 1889 ஆம் ஆண்டு, ஐக்கிய இராச்சியத்தின் பொது மருத்துவச் சபையால், பிரித்தானியாவில் மருத்துவப் பயிற்சியைப் பெறுவதற்கான அங்கிகாரம் வழங்கப்பட்டது. 1942 இல் இலங்கைப் பல்கலைக்கழகக் கட்டளைச் சட்ட இலக்கம் 20 இன் பிரகாரம் இலங்கைப் பல்கலைக்கழகமாக உருவாக்கப்பட்டது. இப்பல்கலைக்கழகத்தில்  விஞ்ஞானப் பீடம் (1942,  சட்டப் பீடம் (1947, கல்விப் பீடம் (1949) கலைப் பீடம் (1963) ஆரம்பிக்கப்பட்டது. 

அரசாணைக்கேற்ப, ‘கொழும்பு இலங்கைப் பல்கலைக்கழகம்’ எனும் பெயரில் 1967 ஒக்டோபரில் இருந்து தனித்து இயங்க ஆரம்பித்தது. 5,000 மாணவர்களையும் 300 ஆளணியினரையும் கொண்டு கலை, சட்டம், விஞ்ஞானம், மருத்துவம் என்பவற்றைக் கற்பிக்கும் பல்கலைக்கழகமாக இது உருவெடுத்தது. 

பேராதனை இலங்கைப் பல்கலைக்கழகம், கொழும்பு இலங்கைப் பல்கலைக்கழகம், வித்யோதயா இலங்கைப்  பல்கலைக்கழகம்,  வித்யாலங்கார இலங்கைப் பல்கலைக்கழகம் எனும் நான்கு வளாகங்கள் 1972 இல் காணப்பட்டன. கொழும்புப் பல்கலைக்கழகத்துடன் கட்டுபொத்த தொழில்நுட்பக் கல்லூரியும் இணைந்து செயற்பட்டது. இப் பல்கலைக்கழகத்தின் தலைமையகமாக ‘செனட் இல்லம்' எனும் பெயரில் இன்றைய ‘கல்லூரி இல்லம்' காணப்படுகின்றது. இத்திட்டம் வெற்றியளிக்காமையால் 1998 இல் இவை மீண்டும் பிரிக்கப்பட்டு தனித்தனியே இயங்கின.

கொழும்புப் பல்கலைக்கழகம் எனும் நாமத்தில் மருத்துவம், கலை, விஞ்ஞானம்,  சட்டம் ஆகிய பீடங்கள் 1980 இல் உருவாக்கப்பட்டன. அவற்றுடன், 1979இல் உருவாக்கப்பட்ட முகாமைத்துவ நிதிப் பீடமும் இணைந்து செயற்பட்டு வந்தது. 1978 இல் பல்கலைக்கழகச் சட்ட இலக்கம் 16 கீழ் இலங்கைப் பல்கலைக்கழகம், ஆறு தனிச் சுதந்திர பல்கலைக்கழகங்களாக உருவெடுத்தது. 

கொழும்புப் பல்கலைக்கழகத்தில் 1987 இல் பட்டதாரி கற்கைகள் பீடமும் உருவாக்கப்பட்டது. 1996 இல் வர்த்தமானி அறிவித்தலுக்கமைய ஸ்ரீபாளி வளாகம் உருவாக்கப்பட்டது. 1997 இல் மருத்துவ முதுமாணி கல்வியகமும் சுதேசிய மருத்துவ நிர்வாகமும் கொழும்புப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டன. 1987 இல் உருவாக்கப்பட்ட கணினித் தொழில்நுட்பக் கல்வியகம், 2002 ஆம் ஆண்டு கணினிப் பாடசாலையாக மாற்றியமைக்கப்பட்டது. 

கொழும்புப் பல்கலைக்கழகத்தில், 2017இல் தாதியர் சேவை பீடம், தொழில்நுட்பப் பீடம் ஆகிய இரு புதிய பீடங்கள் உருவாக்கப்பட்டன.  இப்பல்கலைக்கழகத்தின் மகுட வாசகம், சமஸ்கிருத மொழியில் உருவாக்கப்பட்டதாகும். அது ‘அறிவு எங்கும் விளங்குக’ எனும் பொருளைக் கொண்ட, ‘புத்திஸர்வத பிரதே’ என்ற வாசகத்தை, குறிக்கோளாகக் கொண்டு செயற்படுகின்றது. 

http://static2.tamilmirror.lk/assets/uploads/image_43f96ea96d.jpg

11 பீடங்களையும் 41 துறைகளையும், எட்டு வேறு நிறுவனங்களையும் கொண்டு இயங்குகின்றது. இப்பல்கலைக்கழகத்தின் வேந்தர், உபவேந்தர் ஆகியோர் ஜனாதிபதியால் நியமிக்கப்படுகின்றனர். வேந்தர் பெரும்பாலும் நிர்வாகப் பொறுப்புகளை மேற்கொள்ளாவிடினும், பட்டமளிப்பின் போது, அவைக்குத்  தலைமைத் தாங்குகின்றார். உபவேந்தர், பல்கலைக்கழக முகாமையாளராக விளங்குகின்றார். கொழும்புப் பல்கலைக்கழகத்தின் முதல் உபவேந்தரான ரொபர்ட் மார்ஸ் என்பவர், 1922 தொடக்கம் 1939 வரை பதவி வகித்தார். 

கொழும்புப் பல்கலைக்கழகத்துக்கான  பிரதான நூலகம், கலைப்பீட வளாகத்தில் இயங்குகின்றது. இந்நூலகத்தின் இரு கிளைகள் விஞ்ஞானம், மருத்துவம் ஆகிய பீடங்களில் இயங்குகின்றன. மருத்துவ பீட நூலகம், 1870 இல் நிறுவப்பட்டது. நான்கு இலட்சத்துக்கு மேலான நூல்கள் இங்கு காணப்படுகின்றன. பல அரிய தொகுப்புகளும் ‘இலங்கை தொகுப்புகள்’ எனும் தலைப்பின் கீழ், ஓலைச்சுவடிகளும் பிரதான நூலகத்தில் சேகரிக்கப்பட்டுள்ளன. 

2020 ஆம் ஆண்டு காலப்பகுதியில், கொழும்புப் பல்கலைக்கழகத்தில் 11,604 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். இவர்களுள் 9,100 பேர் இளமாணி பட்டப்படிப்பைத் தொடர்பவர்களாகவும் 2,504 பேர் முதுமாணி பட்டப்படிப்பைத் தொடர்பவர்களாகவும் காணப்படுகின்றனர். கல்விசார் ஊழியர்கள் 240 பேரும், கல்விசாரா ஊழியர்கள் 1,600 பேரும் பணிபுரிகின்றனர். கொழும்புப் பல்கலைக்கழகத்தின் இன்றைய (2020) வேந்தராக டொக்டர் ஓஸ்வால்ட் கோமிஸ் திகழ்கின்றார். உபவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் சந்திரிகா என். விஜேரத்ன பதவி வகிக்கின்றார். ஊதா, மஞ்சள் ஆகிய நிறங்கள் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் பிரதான பிரதிபலிப்பு நிறங்களாகும்.

இப்பல்கலைக்கழகத்தில் அனைத்துப் பீடங்களையும் உள்ளடக்கிய வகையில், 29 விளையாட்டு அணிகள் காணப்படுகின்றன. போட்டிகளில் கொழும்புப் பல்கலைக்கழகம் வெற்றியாளராகத் திகழ்கின்றது. 1980களில் இருந்து, 10 சாம்பியன் விளையாட்டுகளில் எட்டுப் போட்டிகளில்  சாதித்து வருகிறது. மாணவர்களால் 40 கழகங்கள், சங்கங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அவற்றுள் பீடங்கள் ரீதியான மாணவர் ஒன்றியங்கள், மதம், கலாசாரம், கருத்தியல், பண்புகள் ஆகியவற்றை வெளிப்படுத்தும் ஒருங்கமைப்புகள், பொதுநல நோக்கைக் கொண்டு உருவாக்கப்பட்ட அமைப்புகள் என்பன உள்ளடங்குகின்றன.

கொழும்புப் பல்கலைக்கழகம், கல்விசார் வெளியீடுகளை வெளியிட்டு வருகின்றது. அந்தவகையில், University of Colombo Review, The Ceylon Journal of Medical Science, Sri Lanka Journal of International Law, International Journal on Advances  in ICT for Emerging Regions, Sri Lanka Journal of Bio-Medical information and Sri Lanka Journal of Critical care ஆகிய வெளியீடுகள் வெளியிடப்படுகின்றன. 

நூற்றாண்டுகளாகக்  கல்வி எனும் மகத்துவம்மிக்க சொத்தை வழங்கிவரும்  கலை, விஞ்ஞானம் ஆகிய பீடங்கள், உட்கட்டமைப்பும் மனிதவள விருத்தி ஆகியவற்றில், நேர்கணிய வளர்ச்சியைக் காட்டி வருகின்றன. 

மானிடவியல், சமூக விஞ்ஞானம் ஆகிய கற்கைகளின் கீழ் கல்வி, ஆய்வுகளை கலைப்பீடம் மேற்கொண்டு வருகின்றது. கலை ஒரு பாட அலகாக இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரியில் 1921 முதல் கற்பிக்கப்பட்டு வந்தது. இது 1942 இல் கலைப் பீடமாக மாற்றப்பட்டது. புதிய கலை பீடமாக 1963 இல் பரிணமித்தது. கலை பீடத்தின் முதல் பீடாதிபதியாக பேராசிரியர் ஹேம் ரே விளங்கினார். 

கலைப் பீடத்தில், ஏனைய பிரிவுகளுக்கு அப்பால், ஊடகவியல், இஸ்லாமியக் கற்கை போன்ற கற்கைப் பிரிவுகளும் மொழித்திறன் விருத்தி, சர்வதேசத் தொடர்புகள் காரணமாக சீன மொழியைக் கற்பிக்கும் கொன்பியூசியஸ் பிரிவும் இயங்கி வருகின்றன. மேலும், கலைப் பீடத்தில் இயங்கிவரும் துறைகள் மூலம், பெறுமதிமிக்க சான்றிதழ் பயிற்சி நெறிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அத்துடன் மாற்றுத்திறனாளிகளுக்கான (ஊனமுற்ற மாணவர்களுக்கான) இளங்கலை மையமும் உள்ளது.

மாணவர்களின் இலக்கியத் திறமைகளை ஊக்குவிக்கும் வண்ணம் பீடாதிபதி விருதுகள் (Dean Awards) நிகழ்ச்சித் திட்டங்களும் கலைப் பீடத்தில் மேற்கொள்ளப்படுகின்றன. கலை, கலாசார திறமைகளை ஊக்குவிக்கும் நிகழ்ச்சித் திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த அடிப்படையில் கலைப்பீடம் மென்மேலும் விருத்திபெற்ற வண்ணமே, செயற்பட்டு வருகின்றது என்பதில் ஐயமில்லை.

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/கல்வி-எனும்-மகத்துவம்-மிக்க-சொத்தின்-காவலர்/91-263891

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.