Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உரத்துக் கேட்கும் மௌனம்: சக்கரவர்த்தி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உரத்துக் கேட்கும் மௌனம்: சக்கரவர்த்தி

Sirukathai_Chakrawarthi_Art2-1.jpg?resizஓவியம் எஸ். நளீம்

மெக்சிக்கோ வளைகுடாவில் உருவாகிய தாழ் அமுக்கம் மூன்று நாட்களுக்கு முன்பு அலபாமா பகுதிக்குள் பெரும் புயலாக மாறிக் கடும் சேதத்தை ஏற்படுத்தியிருந்தது. கரோலினா கரையோரமாக நகரும் டகோடா புயல், நியூயோர்க் மாநிலத்தைக் கடந்து, ஒன்டாரியோவில் எங்கள் பகுதியூடாகச் சற்று வலுவிழந்து வடபுலம் போகப் போகிறது. ரொறன்டோவில் பலத்த காற்றுடன் கூடிய பெருமழைப் பெய்யுமென எச்சரிக்கப்பட்டிருக்கிறோம்.

சிறிதான காற்றுடன் காலையில் இருந்தே தூறல் தூவிக் கொண்டிருக்கிறது. சிகப்பியை எண்ணித்தான் கவலையாக இருக்கிறது. நான்கு நாட்களுக்கு முன்புதான் கோதுடைத்துக் குஞ்சுகள் வெளிவந்தன. அவள் கூடு சிறு காற்றைத் தாங்கும். டகோடா போன்ற பெரும்புயலை எதிர்த்து நிற்குமா?

சிட்டுக்குருவியைப் பற்றிக் கவலையில்லை. பாதுகாப்பான மரக்கூடு. மூன்று நாட்களாகத்தான் தும்புகளை சேகரிக்கின்றார்கள். குருவிகளின் வருடாந்திர வரவு உள உற்சாகத்தை எவ்வளவு உண்டு பண்ணுகிறதோ,  அதே அளவுக்குப் பதட்டத்தையும் உண்டாக்கி விடுகின்றது. 

 

சிட்டுக்குருவியைப் போல் விட்டு விடுதலையாவது என்றால் எப்படி?  தனக்கான உயிரியல் விதிக்கு உட்பட்டு வாழ்தல் என்பது தவிர்க்க முடியாததுதானே. சின்னஞ்சிறிய தன் அலகுகளில் எவ்வளவு நேர்த்தியாகத் தும்புகளைச் சேகரிக்கின்றன. கணக்கிட்ட கால இடைவெளிக்குள் சேகரித்த தும்பைத் துளையிட்ட மரத்தாலான கூட்டுக்குள் கொண்டு வந்து கூடு கட்டுகின்றன. மூன்று நாட்களாயிற்று அவர்கள் கூடு கட்ட ஆரம்பித்து.

அவர்கள் எப்போதும் மார்ச் மாதத்தில்தான் வருவார்கள். இந்த வருடம் சுணக்கம். மூன்று மாதங்கள் பிந்தி விட்டது. வேட்டையாடப்பட்டு விட்டார்களோ என அச்சம் எழுந்தது. சிகப்பி சரியான பருவத்துக்கு வந்து விட்டாள். சிகப்பியின் குஞ்சுகள் இன்னும் மூன்று வாரத்தால் பறக்கக் கற்று விடும்.  கூடு கட்டிக் குஞ்சு பொரிக்க வரும் இவர்களின் வாழ்க்கை முறையைக் கவனிக்கும் போது மனிதர்களின் வாழ்வியல் முறையின் நிறைவுறாத தன்மையின் மேல் ஆற்றாமையே ஏற்படுகின்றது.

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு மரத்தால் செய்யப்பட்ட துளையிட்ட கூடு ஒன்றை எதார்த்தமாகத்தான் வீட்டின் முன் இருக்கும் பைன் மரத்தில் பொருத்தினேன். 

ஆண்டுகள் தோறும் குஞ்சு பொரிக்க வரும் குருவிக் குடும்பத்துக்கு என் கூடு வீடாகி விடுகிறது. மார்ச் மாதத்தில் தும்புகள் சேகரித்து புது வீடு தயாராகியதும், காதல் கொள்கின்றார்கள். என் முன்னாலேயே கலவி கொள்கின்றார்கள். சித்திரையில் முட்டையிட்டு வைகாசியில் அடைகாத்து, கடும் வெயில் ஆரம்பிக்கும் முன்னே இறக்கை முளைத்த குஞ்சுகளுக்கு பறக்கவும் இரை தேடவும் கற்றுக் கொடுத்து விட்டுப் பெற்றோர்கள் எங்கோ பறந்து போய் விடுகின்றார்கள். குஞ்சுகளும் தங்களுக்கான திசையில் பறந்து விடுகின்றார்கள். 

குருவிகளின் வாழ்க்கைக்காலம்  இரண்டு மூன்று ஆண்டுகள்தான் இருக்கும். பிள்ளைகளின் பிள்ளைகள் என்று பரம்பரை பரம்பரையாகத் தாங்கள் பிறந்த வீட்டில் தங்கள் பிள்ளைகளும் பிறக்கட்டும் என்று வருகிறார்கள். எல்லா உயிர்களுக்கும் தங்கள் பிறந்த இடத்தின் வாசம் மரபணுவில்  பின்னி விடுவது இயற்கையின் அதிசயம்.

 “அப்பா…”

முதுகுப் பின்னால் மிக மெலிதாய் குரல் கேட்டது. நான்கடி தள்ளி எழில் நின்றிருந்தான்.

“அவங்க வந்திட்டாங்களா?” குருவிக் கூட்டைப் பார்த்துக் கேட்டான்.

அவன் கண்களைப் பார்த்தேன். கலங்கி இருப்பது போன்று இருந்தது. சில வருடங்களுக்கு முன்பு வரை,

“அப்பா அவங்க வந்திட்டாங்க…”

 என எழில் எழுப்பும் உற்சாக ஓசையில் வீடு உற்சாகம் கொள்ளும். நான்கைந்து வருடங்களாக அவன் குருவிகள் உலகத்தை விட்டு விலத்தியிருந்தான். பிள்ளைகள் வளர்ந்து விட்டார்கள் என எதார்த்தமாக இருந்து விட்டேன். 

“I couldn’t sleep at all for few days.” 

அவன் குரல் கரகரப்பாக இருந்தது. கீச்சுக்குரலில் இருந்து தடித்த குரலுக்கு மாறும் போதே, மெல்ல அவன் என்னை விட்டு விலத்துகின்றானோ, என நினைத்த போதெல்லாம் நெருக்கமாகத்தானிருந்தான்.

ஏன் என்று கேட்காமல் அவன் காரணத்தைச் சொல்லட்டும் என அவன் கண்களைப் பார்த்தேன்.

“Have you ever killed anybody ?”

சத்தம் மிகச் சிறிதாக, ரகசியம் போல் கேட்டது. என் பிள்ளையிடம் இருந்து இப்படி ஒரு கேள்வியை நான் எதிர்பார்க்கவில்லை. அவன் கண்களில் இருந்து கண்ணீர் மெல்ல வழிந்தது. 

“Are you a war criminal ?” 

நான் துணுக்குற்றதை மறைத்தேன். இரண்டு கேள்விகளுக்கும் விடை ஒன்றுதான். ஆனாலும் எந்த விடையும் என்னிடமில்லை. சிறு  சொண்டில் வைத்திருந்த சிறு துரும்பை இறுக்கிக் கொண்டு பெட்டைக்குருவி பறக்க எத்தனித்தது. 

எனது பதில் அவனுக்குத் தேவையற்றதாக இருக்க வேண்டும். சில நிமிடங்கள் மௌனமாக நின்றவன், தொய்வாகத் திரும்பி வீட்டுக்குள் போனான்.

அவங்க வந்திட்டாங்க என பிள்ளைகள் உற்சாகக் குரல் எழுப்பியதும் என்னில் பதட்டம் தொற்றிக் கொள்கின்றது. மூன்று மாத காலமும் அந்த ஆண் குருவிக்குப் படப்படப்பும் அவஸ்த்தையும் இருக்கிறதோ இல்லையோ நான் அமைதி இழந்து விடுகின்றேன். கர்ப்பிணிப் பெண்ணை வீட்டில் வைத்திருக்கின்ற அவஸ்த்தை. 

“குருவிய வேடிக்கை பார்க்கிறத விட்டுட்டு வீட்டுள்ள கொஞ்சம் வர்றீகளா” என ராதிகா கூப்பிடும் தொனி கடுகடுப்பாக இருந்தது. 

“உங்க நல்ல நேரம், அம்மா வீடு மதுரையா போச்சு. குருவி காக்கா கூட பேசிட்டு இருக்கிற உங்ககூட மாசத்துக்கு மூணு தரமாவது சண்ட போட்டுட்டு அம்மா வீட்ல போய் இருந்திருப்பேன்.”

மாதத்துக்கு நாலு தரம், ‘அம்மா வீட்டுக்கு கோவித்துக் கொண்டு போய் விடுவேன்.’ என இருபது ஆண்டுகளாக மிரட்டல் இருந்தாலும் அப்படி எதுவும் இதுவரை நடந்து விடவில்லை.

சாப்பாட்டு மேசையில் தலையைச் சரித்து வைத்துக் கொண்டு எழில் அழுது கொண்டிருந்தான். ‘பிள்ளையை எதுக்கும் திட்டுனீங்களா’ என்பது போன்று ராதிகா என்னைப் பார்த்தாள். எழிலுக்கு அருகே போய் அவன் தலையில் மெதுவாகக் கையை வைத்தேன். நிராகரிப்பது போன்று தலையை அசைத்தான். 

“அப்பா ஒரு போர் குற்றவாளிங்கிறது உங்களுக்கு தெரியுமாம்மா?”

என்னைப்போல்தான் ராதிகாவும் இந்தக் கேள்வியை எதிர் பார்க்கவில்லை. தடுமாற்றம் தெரிந்தது. எழிலுக்கு பதில் சொல்லத் தெரியாமல் என்னையே பார்த்தாள். சரியாக முப்பது ஆண்டுகளாகி விட்டன இலங்கையை விட்டுக் கனடாவுக்கு ஓடி வந்து. போர் என்பது யாரையும் மகிழ்ச்சி கொள்ளச் செய்வதில்லை. இருபது வயதுப் யையனாக இருக்கும் போது கனடாவில் அரசியல் அகதியாகத் தஞ்சம் அடைந்தேன்.

“சொல்லுங்கம்மா. அப்பா போர் குற்றவாளின்னு தெரிஞ்சுதான் நீங்க இவர கல்யாணம் பண்ணீங்களா?” அவனது குரல் கொஞ்சம் கடினமானது போல் இருந்தது.

“ஐயா, நம்ம றீஜன்ல கோவிட் கூடிட்டே போகுது. செக்கண்ட் வேவ். நாம கொஞ்சம் முன்னய காட்டிலும் ஜாக்கிரதையாய் இருக்கணும்.” பேச்சைத்  திசை திருப்பச் சொன்னாலும் எழிலின் கேள்விக்கு ராதிகாவால் என்ன பதில்தான் சொல்ல முடியும்.

“கனடா கவர்மெண்டுக்கு நீங்க சொன்னீங்களா…, நீங்க அசைலம் கேக்கேக்க, ஸ்ரீ லங்கால நீங்க சண்டை போட்டத..?” விட்டு விட்டு பேசும் அவன் தொனி பதட்டமாக இருந்தது. அழுகையை நிறுத்தி இருந்தான்.

எனது நீண்ட மௌனம் அவனைக் காயப்படுத்துவதாக உணர்ந்தான் போலும். போர்ச் சூழலுக்கப்பால் வாழ்வோர்க்கு போருக்கான காரணத்தை நியாயம், அநியாயம் என்கின்ற இரண்டு நிலைகளுக்கப்பால் கொண்டுபோக முடிவதில்லை.

“ஆமாண்ணு சொல்லிடாதிங்க…”

“ம்.. நான் சொன்னேன்.”

“ட்றக்ல பாம் பொருத்தி, வெடிக்க வச்சு, 150 அப்பாவிப் பொதுமக்களை நீங்க கொலை செய்ததை… நீங்க சொன்னீங்களா?”

ஆமாம் நான் சொன்னேன் என்று சொல்லாமல் கண்ணாடி ஜன்னல் வழியே வெளியே கவனத்தை சிதைத்தேன். சாம்பல் நிறப் பூனை திருட்டு நடை போட்டுக்கொண்டு போனது. பின் வீட்டு போலந்துக்காரிக்குச் சொந்தமானது அந்த சாம்பல் வர்ணப் பூனை. இந்தப் பூனையிடம் இருந்து எனது குருவிகளைக் காப்பது பெரும் பாடு. அதனைத் துரத்துவதற்காககத்தான் வெளியே போக எத்தனித்தேன். ஆனாலும் அதை விரும்பாதவன் போல் எழில் என்னை நோக்கினான்.

“நீங்க சொல்லி இருக்க மாட்டீங்க அப்பா. நீங்க பாம் வச்சத அசைலம் கேக்கும் போது சொல்லி இருந்தீங்கன்னா, நாட்டுக்குள்ள உங்கள விட்டு இருக்க மாட்டாங்க.” 

இறுக்கமான மௌனம். வெளியே வீசும் காற்று வீட்டுக்குள் பேயோசையாய் கேட்டது.

“போர் அனுபவத்தோட கனடாக்குள்ள வர்ரவங்க யாருமே உண்மை சொல்றதில்லப்பா.”

வீடு அசாதாரண நிலைக்கு மாறிக் கொண்டிருந்தது. ஆனாலும் கண்மணி தன் அறையை விட்டு வெளியே வராமல் இருக்கிறாள். எழிலின் இந்தக் கேள்விகளுக்குப் பின்னால் அவளது ஊட்டம் இருக்கிறது என்பது எனக்குத் தெரியும் என்று அவளுக்குத் தெரியும்.

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு “மட்டக்களப்புக்குப் போய் அப்பம்மா கூட மூணு மாதம், இந்த சம்மர் வெக்கேசன்ல இருக்கட்டுமா?” என்று கண்மணி கேட்ட போது சந்தோசமாகச் சம்மதித்தேன். பதினைந்து வயதுப் பிள்ளையைத் தனியாக அனுப்புகிறோமே என்கின்ற அச்சம் ராதிகாவுக்கு. வேர்களை உணர இது சிறந்த பருவம் என நான் உணர்ந்தேன். போர் முடிந்து நான்கு ஆண்டுகள் முடிந்திருந்தது அப்போது. ஓரளவு பாதுகாப்பான காலம். தனியாகத்தான் கண்மணியை ஊருக்கு அனுப்பி வைத்தோம்.

கண்மணி இலங்கைக்குப் போய் வந்து ஒரிரு மாதங்கள் இருக்கலாம். நான் வேலை முடிந்து வீட்டுக்கு வரும் போது வீட்டு வாசலில் திடகாத்திரமான இரண்டு ஆண்கள் கண்மணியுடன் பேசிக்கொண்டு நின்றார்கள். கறுப்பு நிற கோர்ட் சூட் அணிந்திருந்த அவர்கள், அதிகாரம் மிக்க வெள்ளைக்காரர்கள் என மனசு நம்பியது. 

அக்டோபர் மாதம். முன்னமே இருட்டி இருந்தது. உதிர்ந்து கொண்டிருக்கும் பழுப்பு இலைகளும் தூறல் மழையும் ஆரம்பக் குளிரும் வழமைக்கு மாறாகவே உடலைச் சுற்றி அச்சம் சூழ வைக்கும். உடலும் மனசும் படபடப்பானது. அவர்களை நெருங்கிப் போனேன். ‘கனேடிய உளவு நிறுவனம்’ (csis) என அடையாள அட்டையைக் காண்பித்தார்கள். எதுவுமே புரியவில்லை. பதட்டமாக கண்மணியைப் பார்த்தேன்.

“அன்வர் பற்றி விசாரிக்கின்றார்கள்.” என்றாள். இயல்புக்கு சற்று சறுக்கியது போல் இருந்தது கண்மணியின் குரல்.

“நான் இங்கு இருக்கலாமா? அன்வருக்கு என்னாகி விட்டது?” என்றதும்,

“சின்ன விசாரணைதான். உறுதிப்படுத்திக் கொண்டோம். நன்றி” என்று விட்டு அந்த அதிகாரிகள் கிளம்பி விட்டார்கள்.

வீட்டுக்குள் போன கண்மணியிடம், 

“அன்வருக்கு என்னாகி விட்டது” என்றேன்.

எனது பதட்டம் கண்மணியிடம் கொஞ்சமும் இல்லை. அன்வர் கண்மணியின் வயதை உடைய பதினைந்து வயது ஆப்கானிஸ்தான் பையன்.  

“அன்வர் ஓடிப் போயிட்டான்பா.”

“ஓடிப் போயிட்டானா, எங்க?”

“ஆப்கானிஸ்தானுக்கு.”

“ஆப்கானிஸ்தானா..? எதுக்கு?”

“தலிபான்.. ஐஎஸ்ஐஎஸ்.. ஏதோ. அவங்க கூட சேர்ரதுக்கு.”

என் உணர்வு நிலையை விபரிக்க முடியவில்லை. அன்வர் சிறுவன்.  போர் என்பது தர்மமா அதர்மமா என்கின்ற விவாததுக்கு அப்பால், அன்வர் போர் செய்வதற்கு உடலாலும் மனதாலும் தகுதி அற்றவன். அவன் குழந்தை.

அன்வரை அவனது எட்டு வயதில் இருந்து அறிவேன். சிகப்பியும் அன்வரும் ஒரே காலத்தில்தான் எனக்கு அறிமுகம்.

அந்த இளவேனில் நாள் ஒன்றில்தான் சிகப்பு இறக்கையில் நீல நிறப் புள்ளிகள் உள்ள குருவி ஒன்றைக் கூட்டிக் கொண்டு சிகப்பு நிறக் குருவி ஒன்று என் வீட்டுப் பகுதியிலேயே சுற்றிக் கொண்டு திரிந்தது. எங்கள் பகுதியில் இப்படியான குருவிகளை நான் பார்த்ததில்லை. இவை இந்த குளிர் பிரதேசத்துக்குச் சொந்தமான குருவிகள் இல்லை. தென்னமெரிக்காவின் வெப்ப வலயப் பகுதிகளில் இருந்து வந்த வலசைப் பறவைகளாக இருக்கலாம். இவை என்ன இனத்தைச் சேர்ந்தவை ? அவற்றின் பெயர் கூட அறிந்திலன். அழகான பறவைக்கு பேர் வேண்டுமா என்ன? பிள்ளைகள் ரெட்டிஷா என்றும் நான் சிகப்பி என்றும் கூப்பிடுவோம். காற்றின் அசைவில் ஒலி எழுப்பும் சீனத்து மணி கட்டி இருக்கும் புறூன் மரத்தின் கிளையில் கூடு வேறு கட்டிக் கொண்டன.  

பிள்ளைகளை விடவும் சிகப்பியின் கூட்டை நெருக்கத்தில் பார்க்க ஆசையாய் இருந்தேன். காலையில் இரை தேடச் செல்லும் நேரத்தைக் கணக்கிட்டு ஏணி வைத்து அவைகளின் கூட்டை நானும் பிள்ளைகளும் பார்த்தோம். களி மண்ணாலும் தும்புகளாலும் வட்ட வடிவில் முடிவுறாத களிமண் பாத்திரம் போல் இருந்தது. 

லேசான மழைத்தூறல். அந்தக் குருவிக் கூட்டுக்குள் சுருண்டு கொண்டு படுக்க வேண்டும் போல் உணர்வு ஏற்படுகின்றது என்று அன்றைய இரவு பிள்ளைகள் ஆசை வழிய வழியச் சொன்னார்கள்.  இத்தனை வயதாகியும் என்னாலையே இன்னும் குருவிக்கூட்டுக்குள் படுக்க முடியாமல் போன என் ஆசையை அவர்களுக்குப் புரிய வைக்க முடியாமல் போனது அன்றைய இரவு.

பழுப்பு நிறக் கண்களால் சிரித்துக்கொண்டு, தான்  அன்வர் என அறிமுகம் செய்து கொண்டு ஒரு எட்டு வயதுப் பையன் வாசலில் நின்றான். அன்று என் முற்றத்துத் தோட்டத்தில்  ரோஜாக்கள் அதிகமாகப் பூத்திருந்தன.

கண்மணியுடன் படிப்பதாகவும் அவள் தன் கூட்டாளி என்றும் ரெட்டிஷாவை அவளது வீட்டையும் பார்க்க மிகவும் ஆர்வமாக இருப்பதாகவும் சொன்னான். விடுமுறை நாள் என்பதால் பிள்ளைகள் இன்னமும் தூக்கத்தில் இருந்தார்கள்.

பின் வளவுக்குள் புறூன் மரக்கிளையில் இருக்கும் சிகப்பியின் கூட்டை அன்வருக்குக் காட்டினேன். அவனது கண்கள் விரிந்தன. அவனது பழுப்பு நிறக் கண்மணிகள் அங்குமிங்குமாக பரபரப்பாக இயங்கின.

“கண்மணியும் எழிலும் கிட்டத்தில் ஏணி வைத்து ஏறிப்பார்த்தார்களாமே…”

கேட்டுக் கொண்டே என்னை ஏக்கமாகப் பார்த்தான். சிகப்பி கூட்டுக்குள்  படுத்திருந்தாள். காதலன் வேலியோர மேப்பிள் கிளையில் இறக்கைகளைக் கோதிக் கொண்டு சிகப்பியையே பார்த்துக்கொண்டு இருந்தான். 

அவர்கள் இருவரும் உணவு தேடக் கிளம்பியதும் காட்டுகிறேன் என்றேன். ஒரு மணி நேரம் என்னை நோண்டிக் கொண்டே இருந்தான் அன்வர். குருவிகளின் உலகத்துக்குள்தான் குழந்தைகளும் உழல்கின்றார்கள். சமிக்ஞை ஒலியை ஒரே நேரத்தில் எழுப்பிய இருவரும் மேலே எழும்பிப் பறந்தனர். அன்வர் உற்சாகமானான்.

ஏணியை விரித்து, நிமிர்த்தி விட்டேன். மெல்ல ஏறிக் கூட்டைப் பார்த்தவன். என்னைப் பார்த்து இடது கையை உதறி உதறிச் சைகை செய்தான். நானும் ஏறிக் கூட்டைப் பார்த்தேன்.

மூன்று முட்டைகள். செம்மண் நிறத்தில் நீலப்புள்ளிகள்.  எழுந்த ஆசையை நான் அடக்கிக் கொண்டேன். அன்வர் சிகப்பியின் முட்டைகளைத் தடவிப் பார்த்தான்.

எழுந்த அழுகையை அடக்க முடியவில்லை. என் பிள்ளைகளில் ஒருவனாகத்தான் அன்வர் என்னிடம் நெருங்கினான். முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு,   பள்ளிக்கு போன தன் பதினைந்தே வயதான பிள்ளை வீட்டுக்கு திரும்பாததை இட்டு என் அப்பாவின் மனநிலை எப்படி இருந்திருக்கும். இயக்கத்துக்குப் போனவர்களின் அப்பாக்களின் மனப்பாரம் எல்லாம் அன்வராக மண்டைக்குள் அழுத்தியது.

என் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கின்ற ‘ஷாலிமார்’ குடியிருப்புக்குள் அவன் வீடு இருக்கிறது. முஸ்லீம் அகதிகளுக்கான குறைந்த விலைக் குடியிருப்பு அது. அவனது ஐந்து வயதில்  கனடாவுக்குள் அகதியாக அம்மா அக்காவுடன் அடைக்கலம் புகுந்திருந்தான்.

காபூல் பட்டணத்தில் இருந்து முன்னூற்றிஐம்பது கிலோ மீட்டர்கள் வடக்கே இருக்கும் குண்டூஸ் பகுதியில் இருக்கின்ற மலையடிக் கிராமம் அன்வருடையது. 

கல்யாணக் கொண்டாட்டத்தில் விமானம் வீசிய குண்டில் முப்பத்தைந்து பேர் உடல் சிதறிச் செத்துப் போனார்கள். அன்வரின் அப்பாவும் ஒரு அக்காவும் அந்தக் குண்டு வீச்சில் பலியானதாகக் கண்மணிதான் ஒரு நாள் சொன்னாள். அதன் பின்புதான் கவனித்தேன், அவன் பழுப்பு நிறக் கண்களுக்குள் தேங்கி நிற்கும் துயரத்தை.

மனப்பாரம் அளவு கடந்து அழுத்தியது. இயக்கத்துக்கு ஓடிப்போன என் துயரத்தால் அழுத என் அப்பாவுக்காக அழுது கொண்டே இருந்தேன்.

“உங்களுக்கு ஒரு நியாயமான காரணம் இருந்ததைப் போல, அன்வருக்கும் ஒரு நியாயமான காரணம் இருக்குத்தானே.”  எனும் கண்மணியை

வழியும் கண்ணீருடன்  பார்த்தேன்.

“அன்வர், நீங்கள் எல்லோரும் ஹீரோக்கள் அப்பா.” 

“நான் ஸ்ரீலங்கால போய் இருந்தேனா. அப்பம்மா வீட்டுக்கு வர்ரவங்க எல்லாம் உங்களை பெருமையாக பேசிக் கொண்டே இருந்தாங்க. எதிரிகளுடன் போர் செய்வது வீரம்.” 

விட்டுவிட்டு கண்மணி பேசிக் கொண்டே இருந்தாள். நான் எதுவும் பேச வேண்டும் என அவள் விரும்பியதாகத் தெரியவில்லை. மனம் லயிப்பில்லாமல் கேட்டுக் கொண்டே இருந்தேன்.

“நானும் ஸ்ரீலங்கால உங்க வயசில இருந்தேன்னா என்னோட மக்களுக்காக  சண்டை போட்டு இருப்பேன்.”

“ட்றக்ல பாம் கொண்டு போய் அன்வரும் நூற்றி ஐம்பது பேரைக் கொலை செய்யக் கூடும் இல்லை அப்பா!” இப்போது அவள் எனக்கு முன் நின்று என் கண்களைப் பார்த்தாள். கர்வமான குரலில் இப்போது தளர்வு தெரிந்தது.

மக்கள் கூட்டம். பெரு வெள்ளம் போல் மக்கள் கூடும் காபூல் நகரின் பெரும் சந்தை. குண்டுகள் பொருத்தப்பட்ட ட்றக் வண்டியை நிறுத்தி விட்டுப் பதினைந்தே வயதான அன்வர் நகர்ந்து போகிறான். அது இன்னும் சில கணங்களில் வெடிக்கக் கூடும்.

நூறு பேர்.. இல்லை ஆயிரம்பேர் கூட சாகக் கூடும். திராட்சை பழம் விற்க வந்தவர்கள். பொப்பி விதைகளை வாங்க வந்தவர்கள், கம்பளிப் போர்வை நெய்பவர்கள், தொழுகை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருப்பவர்கள், பள்ளிப் பிள்ளைகள், அன்வரின் அப்பாவையும் அக்காவையும் இன்னும் அவன் அயலவர்களையும் விமானத்தில் இருந்து குண்டு போட்டுக் கொன்ற அவனது எதிரிகளும் கூட சாவு எண்ணிக்கையில் இருக்க கூடும். ஆனாலும்  போரோடு சம்பந்தப்படாத, எண்ணிக்கையில் அதிகமானோரே சாவார்கள்.

எனக்குத் தெரியும், அன்வர் எப்படித் தயார் செய்யப்பட்டிருப்பான் என்று. அவனது மூளையை சலவை செய்யப் பயன்படும் லாகிரி வஸ்துக்களை முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்பாக நுகர்ந்தவன் நான். இனம், மொழி, மதம். இந்த மூன்று வஸ்த்துக்களே போதுமானது மூளையை வெளிறச் செய்வதற்கு. தன் பிள்ளையைக் காக்க முடியாமல் போன என் அப்பாவின் கையேறு நிலையை இட்டு இப்போது நான் துயருகிறேன். 

‘அன்வர் .. வேண்டாம் மகனே  வந்து விடு. வஞ்சிக்கப்பட்ட நமது பிரார்த்தனையே போதும். நமது எதிரிகளை அது அச்சம்  கொள்ளச் செய்யும்.’ எனது பிரார்த்தனையும் வேண்டுதலும் பலிக்கவில்லை.  அன்வர் வரவே இல்லை. 

சிகப்பி அடைகாக்கத் தொடங்கி ஏழு நாட்களாகி விட்டன. பள்ளிக்கூடம் விட்டதும் என் பிள்ளைகளுடனேயே அன்வரும் வீட்டுக்கு வரத் தொடங்கி விட்டான். அவனது சிந்தனை முழுவதும் சிகப்பியின் கூட்டைச் சுற்றியே இருந்தது. அவங்க என்ன சாப்பிடுவாங்க? முட்டைக்குள் குஞ்சுகள் என்ன செய்யும்? அவங்களுக்கு குளிராதா? என் பிள்ளைகளின் கேள்விகளில் ஒன்றில் அன்வரின் கேள்வியும் இருந்தது.

சிகப்பி அடைகாக்கத் தொடங்கி ஏழாம் நாளில் இருந்துதான் கவனித்தேன், அவளது காதலனைக் காணவில்லை. சிகப்பி அடைகாக்கும் நேரத்தில் எல்லாம் காவலன் போல் எதிர்த்த மேப்பிள் மரக்கிளையில் நகராமல் இறகு கோதிக் கொண்டிருப்பான். இரண்டு நாட்கள் அவன் அங்கு இல்லையாம். அன்வர் கவனித்துச் சொன்ன பின்தான் நானும் கவனித்தேன். இயல்புக்கு மாறாகச் சிகப்பி படபடப்பாக இறக்கை அடித்து மேலே மேலே பறந்து வினோதமாகக் கீச்சிட்டது. 

தொலைந்த இணையைத் தேடும் துயரம் வர்ணனையில் சொல்ல முடியாதது.

இந்தக் குளிர் தேசத்துக்குச் சொந்தமில்லாத இந்தக் குருவிகள் திசைமாறி வந்ததாகக் கூட இருக்கலாம். இல்லை அடைக்கலம் தேடி வந்தவையாகவும் இருக்கலாம். வந்த இடத்தில்  கூடு கட்டிக் கொஞ்ச காலம் வாழ்ந்து, குஞ்சுகளைப் பெற்று, வளர்த்தெடுத்துக்  கொண்டு திரும்பவும் தங்கள் சொந்த இடத்துக்கு திரும்புதல் கூடும். 

வந்த இடத்தில் துணையைப் பிரிந்து எங்கு போனான் இந்தச் சிகப்பியின் காதலன். பின் வீட்டுக்காறியின் சாம்பல் நிறப் பூனையின் வாயில் இறக்கை ஒட்டிக் கொண்டிருப்பது போல் தோற்றம் நிழல் போல் ஆடியது. சில வேளை வந்த புதிய இடம் பிடிக்காமல் சிகப்பியிடமும் சொல்லாமல் கொள்ளாமல் தனது சொந்தக் காட்டுக்குப் பறந்து விட்டானோ என்னமோ? சிகப்பியைக் காட்டிலும் நான்தான் பதட்டமடைகிறேனோ?

சிகப்பியின் காதலன் காணாமல் போய் நான்கு நாட்களாகியிருந்தது. வேலியோர சீடார் செடிப் புதருக்குள் வழமைக்கு மாறாக எறும்புகள் அதிகமாக மொய்பது போன்றும் ஈக்கள் இரையும் சத்தமும் ஏதோ அசம்பாவிதம் நிகழ்ந்து விட்டதற்கான அறிகுறியாக இருந்தன. புதரை விலத்திப் பார்த்தேன். எறும்புகளும் ஈக்களும் மொய்க்க சிகப்பியின் காதலன் இறந்து கிடந்தான். 

பிள்ளைகளும் அன்வரும் பள்ளிக்கூடம் விட்டு வரவில்லை. ஆனாலும் சிகப்பி கூட்டுக்குள் அடை காத்துக் கொண்டிருந்தாள். காத்திருந்தேன். சிகப்பி இரை தேட நெடு நேரம் கடந்து கிளம்பினாள். செத்துப் போன அவளது காதலனைப் பிள்ளைகளின் பாற் பற்கள் புதைத்து வைத்திருக்கும் செர்ரி மரத்தடியில் புதைத்து விட்டேன். பிள்ளைகளும் பார்க்கவில்லை. அன்வருக்கும் தெரியாது. முக்கியமாகப் சிகப்பி பார்க்கவில்லை. அவர்களைப் பொறுத்தவரை அவன் காணாமல் போனவனாகவே இருக்கட்டும்.

அன்வர் காணாமல் போய் ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. அவன் நினைவுக்கு வராத நாட்கள் குறைவாகவே இருந்தன. சிகப்பி தவறுவதே இல்லை. கோடை காலம் ஆரம்பிக்கும் முன் வருகிறாள். முட்டையிட்டுக் குஞ்சு பொரித்து,  குஞ்சுகள் பறக்கக் கற்றுக்கொண்டதும் பறந்து போய் விடுகின்றார்கள். அவளுக்கு வேறு காதலன் கிடைத்திருக்க வேண்டும்.  ஆனாலும் குஞ்சு பொரிக்க இங்கு வரும் போது இப்போதவள் தனியாகத்தான் வருகிறாள். 

இப்போதெல்லாம் பிள்ளைகள் குருவிகளிடம் இருந்து அந்நியப்பட்டுப் போனார்கள். அவர்கள் வளர்ந்து விட்டார்கள் என்பதைத் தவிர வேறென்ன சொல்ல முடியும். அன்வர் கூட இயக்கத்துக்கு போகாமல் இங்கிருந்திருந்தால்,  குருவிகளின் உலகத்தை விட்டு விலத்தித்தான் இருந்திருப்பானோ?

காற்று பலமாக வீச தொடங்கிற்று. மழையும் வீச்சமாக இருந்தது. அசாதாரண நிலையில் இருந்து வீடு மீள்வதற்கான சாத்தியத்தை எப்படி உண்டாக்கலாம் என எண்ணம் ஓடிக்கொண்டே இருந்தது.

“என்னோட அப்பா ஒரு போர் குற்றவாளி. என்னால நம்ப முடியல்லம்மா. அப்பாவ தெரிஞ்சு கொண்டு எப்படிம்மா அவர கல்யாணம் பண்ணீங்க?” திரும்பவும் ராதிகாவை எதிர் நோக்கினான் எழில். அவள் ஏழ்மையாக எனைப் பார்த்தாள்.

“ஐயா.. அவங்க நாட்டோட நிலமை அப்படி. போர் செய்துதான் ஆகணும்.”

டகோட புயல் காற்று ஊருக்குள் நுளைந்து விட்டது. ஊ…ஊ…வென்ற பேரிரைச்சல். பேய் மழையின் சத்தம் அச்சமாக இருந்தது.

“அப்பா கொண்டு போய் விட்ட ட்றக் பாம் வெடிச்சு 150 பேர் செத்திருக்காங்க அம்மா. அவங்க எல்லாருமே அப்பாவோட எனிமீஸ்சா?”

மரங்கள் பயங்கரமாக ஆடிக் கொண்டிருந்தன. சிகப்பியின் குஞ்சுகள் இருக்கும் புறூன் மரத்தைப் 

பின்பக்க கண்ணாடி ஜன்னல் வழியாக பார்தேன். அச்சம் மேலிட்டது.

“எழில் உங்களுக்கு புரியாதய்யா. அந்த சம்பவம் நடக்கையில அப்பா பதினாறு வயசில இருந்தாங்க.”

மழுக்….கென இழுபட்டு  சரசரத்த ஓசை, வீட்டின் பின்பக்கமிருந்து புயலின் சத்தத்தையையும் கடந்து கேட்டது. அது கிளையொன்று மரம் விட்டு கழரும் துயரத்தின் சத்தம்.

“அதனால?”

“அப்பா மேல குற்றத்தைப் போடாதை. எனக்கு என்னோட அப்பா ஹீரோ.” கண்மணியின் கோபமான குரல் பூட்டிய அறைக்குள் இருந்து வந்தது.

முறிந்து விழுந்த கிளை  சிகப்பியின் குஞ்சுகள் இருக்கும் புறூன் மரக்கிளையாக இருக்கக் கூடாது. இப்போதெல்லாம் நம்பிக்கை இல்லாது போனாலும் பிரார்த்தனையில் மனம் ஈடுபட்டு விடுகிறது. இன்னமும் கண் விடுக்காத மூன்று குஞ்சுகள் கூட்டுக்குள் இருக்கின்றன.

“போர் அனுபவங்களோட கனடா வர்ரவங்களுக்கு ஒரு பக்க நியாயம் மட்டும்தான் இருக்கு. நம்ம அப்பாவுக்கும் அப்படித்தான்.” கண்மணியா, எழிலா சொன்னார்கள்? சத்தம் மட்டும்தான் கேட்டது.

“போர் குற்றவாளிக்கு மகன் நான். இதை நான் நம்பித்தானே ஆக வேண்டும்.” எழில் பேசுவதைக் கேட்க என் மனசு நிலையாக இல்லை. கவனத்தில் பாதி சிகப்பியின் கூட்டின் மேல் இருந்தது. 

“I can’t live in this house anymore.” என்று எழில் சொன்ன போது, சிகப்பியின் கூடு இருக்கும் புறூன் மரக்கிளை தரையில் கிடப்பது தெரிந்தது. டகோடா புயல் இரக்கமின்றி கடந்து கொண்டிருந்தது. 

சிகப்பியின் களிமண் கூடு தரையில் உடைந்து கரைந்து கொண்டிருந்தது. இறக்கைகள்  முளைக்காத செட்டைகளை மெல்ல மெல்ல அசைக்கின்றன மூன்று குஞ்சுகளும். அவைகளால் முடியவில்லை. மூச்செடுக்க முடியாது நெருக்கிக் கொட்டுகிறது மழை. தலைகள்  புற்றரையில் செருகிக் கிடக்கின்றன. சிகப்பி எங்கே போனாள்? சுழற்றி எறிந்து விட்டதா இந்தப் புயல் அவளை? குஞ்சுகளுக்கு இரை தேடப் போன இடத்தில்  திசை தொலைந்து போனாளா? புயல் ஓய்ந்ததும் திரும்பி வந்து குஞ்சுகளையும் கூட்டையும் தேடுவாளோ? என்ன ஆயிற்று  என் குஞ்சுகளுக்கு என்று பதறி அழுபவளுக்கு என்ன சொல்வேன்?

என் உணர்வின் எல்லை கடந்து துயரம் வழிந்தது. சாபமிடுவதற்கு ஒரு உருவத்தைத் தேடினேன். இயற்கையின் கட்டற்ற நியதியைத் தவிர, சபிப்பதற்கு வேறொன்றும் தெரியவில்லை.

 

சக்கரவர்த்தி 

 

சக்கரவர்த்தி கனடாவில் புலம்பெயர்ந்து வாழ்ந்துவரும் எழுத்தாளர். இவரின் ‘யுத்தசன்யாசம்’ என்ற கவிதை நூலும், ‘யுத்தத்தின் இரண்டாம் பாகம்’ என்ற சிறுகதைத் தொகுப்பும் இதுவரை வெளியாகியுள்ளன.
 

https://akazhonline.com/?p=2994

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி இணைப்புக்கு .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.