Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொலிகண்டிப் பிரகடனம் : அடுத்தது என்ன? - நிலாந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பொலிகண்டிப் பிரகடனம் : அடுத்தது என்ன? - நிலாந்தன்

spacer.png

 

spacer.png

 

பொத்துவிலில் தொடங்கி பொலிகண்டி வரையிலும் மக்களை திரட்டி ஒரு பேரணியை நடத்தியாயிற்று;அதன் நினைவாக ஒன்று அல்லது இரண்டு நினைவுக் கற்களை வடமராட்சியில் நடுகை செய்தாயிற்று. அடுத்தது என்ன? ஒரு மக்கள் எழுச்சி இயக்கத்தை தொடங்கியிருப்பதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்திருக்கிறார்கள். இது அந்தப் பேரணியை அவர்கள் ஒரு தொடக்கமாக கருதுவதைக் காட்டுகிறதா?

அந்த ஆர்ப்பாட்டத்தை ஒழுங்குபடுத்திய சிவில் சமூகப் பிரதிநிதிகளில் ஒருவராகிய சிவகுரு ஆதீனத்தின் முதல்வர் ஐபிசிக்கு வழங்கிய ஒரு பேட்டியில் ஒரு குறுகிய காலத்தில் திட்டமிடப்பட்ட ஒரு போராட்டம் இதுவென்று கூறினார். எனவே அரசியல்வாதிகளின் ஒத்துழைப்பின்றி இதனை இவ்வளவு பிரமாண்டமாக செய்திருக்க முடியாது என்றும் கூறினார்.பேரணி இப்படி பிரம்மாண்டமாக வந்து முடியும் என்று தாங்கள் நினைத்துப் பார்த்திருக்கவில்லை என்றும் இது இவ்வளவு பிரம்மாண்டமாக வர அரசியல் கட்சிகளின் ஆதரவும் ஒரு காரணம் என்றும் கூறினார்.

அதாவது பேரணிக்கு ஆட்களைக் கொண்டு வந்து சேர்த்ததில் அரசியல் கட்சிகளுக்கும் குறிப்பிடத்தக்க அளவுக்கு பங்குண்டு என்பதே உண்மை. ஏனெனில் அரசியல் கட்சிகளிடம்தான் ஒப்பீட்டளவில் கிராம மட்டக் கட்டமைப்புக்கள் உண்டு. அவைகூட போதுமானவை அல்ல. தமிழ்நாட்டில் இருக்கும் கட்சிகள் வைத்திருப்பது  போன்ற அடிமட்ட கட்டமைப்புக்கள் எவையும் ஈழத்தமிழ் அரசியல் கட்சிகளிடம் இல்லை என்பது எனது தொடர்ச்சியான விமர்சனமாகும்.

கிழக்குப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த எனது நண்பரான ஒரு புலமையாளர் அடிக்கடி சொல்வார்…… ராணுவப் புலனாய்வுத் துறையிடம்தான் ஒப்பீட்டளவில் பலமான,விரிவான கிராம மட்ட வலையமைப்பு உண்டு. அந்த அளவுக்கு கட்சிகளிடமோ அல்லது செயற்பாட்டு இயக்கங்களிடமோ எதுவும் கிடையாது என்று. அதுதான் உண்மை.

தமிழ் பகுதிகளில் கிராமங்கள் தோறும் உள்ள இராணுவ புலனாய்வுக் கட்டமைப்பு மிகபலமானது. அது வினைத்திறனுடைய  அதிக சம்பளம் வழங்கும் ஒரு கட்டமைப்பு. அடுத்தது கட்சிகளின் கட்டமைப்பு. அது ஒப்பீட்டளவில் பலவீனமானது எனினும் உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்றி வைத்திருக்கும் கட்சிகள் ஒப்பீட்டளவில் அந்தக் கட்டமைப்பை ஓரளவுக்குப் பேணுகின்றன.

அடுத்தது, அரச சார்பற்ற நிறுவனங்கள். இவர்களிடமும் ஒரு கட்டமைப்பு உண்டு. எனினும் முன்னைய இரண்டோடும் ஒப்பிடுகையில் அது சிறியது. ஆனால்,இவ்வாறான கட்டமைப்புக்கள் எவையும்  தமிழ் சிவில் சமூகங்களிடம் இல்லை என்பதே இங்குள்ள பாரதூரமான வெற்றிடமாகும். கடந்த பத்தாண்டுகளில் எந்தவோர் சிவில் சமூகமும் இவ்வாறான பொருத்தமான செயற்பாட்டுக் கட்டமைப்புகளை உருவாக்கவில்லை.

குறிப்பாக தமிழ் மக்கள் பேரவை போன்ற அமைப்புக்களும் இதுபோன்ற கீழிருந்து மேல் நோக்கிய கட்டமைப்புக்களை உருவாக்கவில்லை. தமிழ் மக்கள் பேரவை ஒப்பீட்டளவில் ஓரரசியல் இயக்கமாக எழுச்சி பெற்றது. ஆனால் அது விக்னேஸ்வரன் தொடர்பான சர்ச்சைகளாலும் அந்த அமைப்புக்குள் அங்கத்தவர்களாக இருந்த இரண்டு பங்காளிக் கட்சிகள் தங்களுக்கிடையே மோதிக்கொள்ளத் தொடங்கிய பின்னும் குறிப்பாக கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின்பின்  ஏறக்குறைய  சோர்ந்து விட்டது. அதற்கு அடிப்படைக் காரணம் அது ஒரு பிரமுகர் மைய அமைப்பாக மேலிருந்து கீழ்நோக்கித் தொடக்கப்பட்டமைதான். கீழிருந்து மேல் நோக்கிய ஒரு மக்கள் மைய கட்டமைப்பு அந்த அமைப்பிடம் இருக்கவில்லை. அந்த அமைப்பு இப்போது தேங்கி நிற்க இது முக்கிய காரணம். இப்படிப்பட்ட ஒரு வெற்றிடத்தில்தான் வடக்கு கிழக்கு சிவில் சமூகங்கள் இணைந்து ஒரு பேரணியை நடத்தியிருக்கின்றன.

தமிழ்ப் பரப்பில் கடந்த சில தசாப்தங்களில் ஒப்பீட்டளவில் நீண்ட நாட்கள் நடந்த ஒரு பேரணி இது. ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்தபின் கடந்த பத்தாண்டுகளில் நடந்த பெரிய தொடர் பேரணி இது. வடக்கையும் கிழக்கையும் பிரிப்பதற்கு சமூகத்துக்கு உள்ளேயும் வெளியேயும் இருக்கும் சக்திகள் தீவிரமாக செயல்பட்டு வரும் ஒரு காலகட்டத்தில் வடக்கையும் கிழக்கையும் இணைத்து ஒரு பேரணி நடத்தப்பட்டிருக்கிறது. அதுவும் கிழக்கிலிருந்து தொடங்கி  வடக்கை நோக்கி வந்திருக்கிறது. எனவே இந்தப் பேரணி தமிழ் மக்களின் அரசியலில் கவனிப்புக்குரியது.

ஆனால் பிரச்சினை என்னவென்றால் அதை ஒழுங்குபடுத்திய சிவில் சமூகத்திடம் ஒரு பலமான கீழ்மட்டக் கட்டமைப்பு இருக்கவில்லை என்பது. உண்மையில் அப்படி ஒரு சிவில் சமூகம் அந்த பேரணிக்கு முன் இருக்கவேயில்லை. 2009லிருந்து தமிழ் சிவில் சமூக அமையம் என்ற ஒரு அமைப்பு இயங்கி வருகிறது. பெருமளவுக்கு அறிக்கை அமைப்பாகவே அது காணப்படுகிறது. எனினும் 2009க்கு பின் கூட்டுத்துக்கத்தாலும் கூட்டுக் காயத்தாலும் கூட்டு அவமானத்திலும் அமுங்கிப் போயிருந்த ஒரு மக்கள் கூட்டத்தின் மத்தியில்  ஒரே சிவில் குரலாக அது ஒலித்தது. ஆனால் அந்த சிவில் சமூக அமையத்திடமும் ஒரு பலமான கீழ்மட்ட கட்டமைப்பு இருக்கவில்லை. அது பெருமளவுக்கு புத்திஜீவிகள் செயற்பாட்டாளர்களைக் கொண்ட ஒரு கொள்கை உறுதி மிக்க கட்டிறுக்கமான அமைப்பத்தான். ஆனால் மக்கள் மயப்பட்ட சிவில் நடவடிக்கைகளில் அது பெருமளவுக்கு இறங்கவில்லை.

2015 இல் ஆட்சி மாற்றம் நிகழ்ந்த கையோடு யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக மாணவ அமைப்புடன் இணைந்து ஒரு பேரணியை அந்த அமைப்பு ஒழுங்குபடுத்தியது. நான்காயிரத்துக்கும் குறையாதவர்கள் பங்குபற்றிய அந்தப் பேரணி 2009க்குப் பின் நடந்த பெரிய பேரணிகளில் ஒன்று. எனினும் தமிழ் சிவில் சமூக அமையம் கீழ்மட்டக் கட்டமைப்பை கொண்ட ஒரு அமைப்பல்ல.

அதுபோலவே மற்றொரு அமைப்பு முல்லைத்தீவை மையமாகக் கொண்டு உருவாக்கபட்டது. தமிழ் மரபுரிமை அமைப்பு என்றழைக்கப்பட்ட அவ்வமைப்பும் தொடக்கத்தில் ஒப்பீட்டளவில் பெரிய ஆர்ப்பாட்டத்தை முல்லைத்தீவில் முன்னெடுத்தது. எனினும் அவ்வமைப்பும் துடிப்பாக தொடர்ந்து செயற்படுவதாகத் தெரியவில்லை.

இவ்வாறானதொரு பின்னணியில் கடந்த வாரம் திடுதிப்பென்று உருவாக்கப்பட்ட வடக்கு கிழக்கு சிவில் சமூகம் என்ற அமைப்பு இப்படி ஒரு பேரணியை நடத்தியது என்பது எதைக் காட்டுகிறது?
அந்த அமைப்பிடம் பலமான அடிமட்டக் கட்டமைப்பு இருக்கவில்லை. சில கிழமைகளுக்குள் அப்படி ஒரு கட்டமைப்பை கட்டியெழுப்ப  முடியாது.  ஆயின், அவ்வாறான கட்டமைப்புக்களெதுவும் இல்லாத ஒரு சிவில் அமைப்பு எப்படி திடீரென்று தோன்றிய உடனேயே ஒரு பேரணியை நடத்த முடிந்தது?

காரணங்கள் மிகவும் எளிமையானவை

முதலாவது காரணம்- மக்கள் போராடத் தயாராக இருக்கிறார்கள் என்பது. பொருத்தமான தருணத்தில் பொருத்தமான அறவழிப் பாதை திறக்கப்பட்டால் மக்கள் துணிந்து  வீதியில் இறங்குவார்கள். கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக அமுக்கப்பட்டிருக்கும் உணர்வுகளை வெளிக்காட்ட அவர்களுக்கு சந்தர்ப்பம் தேவை அந்த சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்த போது மக்கள் தெருவில் இறங்கினார்கள். எனவே மக்கள் போராட தயாராக இருந்தார்கள் என்பதே இந்த பேரணி பெற்ற வெற்றிக்கு முதல் காரணம்.

இரண்டாவது காரணம்-அரசியல் கட்சிகள் அந்தப் பேரணியில் பங்குபற்றியது. அதனால் அக்கட்சிகளின் ஆதரவாளர்களும் கட்டமைப்புக்களும் அந்தப் பேரணியை ஒழுங்கமைக்க உதவின.
குறிப்பாக பேரணியின் தொடக்கத்தில் சுமார் முப்பது பேர்களுடன் பேரணி புறப்பட்டபோது அதில் காணப்பட்ட மக்கள் பிரநிதிகளும் அரசியல்வாதிகளும் துணிந்து போலீஸ் தடையை உடைத்துக் கொண்டு   முன்னேறினார்கள். மழைக்கும் படைத்தரப்பின் அச்சுறுத்தலுக்கும் மத்தியில் பேரணி அட்டாளைச்சேனை வரை முன்னேறியதற்கு சாணக்கியனும் ஏனைய அரசியல்வாதிகளும் ஒரு காரணம் என்று அதில் கலந்துகொண்ட மதகுருக்கள் கூறுகிறார்கள்.

மூன்றாவது காரணம்-போலீசாரும் அரச படைகளும் ஒருகட்டத்திற்கு மேல் பேரணியை மூர்க்கமாகத் தடுக்க முற்படாமை. முதலில் போலீசார் பேரணியைத் தடுக்க முயற்சித்தனர். எனினும் ஒரு கட்டத்துக்கு மேல் பார்வையாளராக மாறிய பொலிஸ் தரப்பு நீதிமன்றத் தடையுத்தரவுகளை தன்பாட்டில் வாசித்துக் கொண்டிருந்தது. பேரணி தன்பாட்டில் வளர்ந்து கொண்டிருந்தது. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலும் சட்ட மறுப்பாக பேரணி முன்னெடுக்கப்பட்டது. எனவே இது விடயத்தில் பொலிஸாரோ நீதிமன்றமோ பொதுமக்களுக்கு எதிராக அல்லது செயற்பாட்டாளர்களுக்கு எதிராக கூர்மையான நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை. அதுமட்டுமல்ல படைத்தரப்பு பெருமளவுக்கு முகாம்களுக்குள் முடங்கியிருந்தது. பேரணி நகர்ந்த வழிநெடுக  படைத்தரப்பின் அதிகரித்த பிரசன்னத்தை பெரும்பாலும் காண முடியவில்லை. இது விடயத்தில் அரசாங்கம் புத்திசாலித்தனமாகவும் சமயோசிதமாகவும் நடந்திருக்கிறது என்று தோன்றுகிறது. ஜெனிவாவை நோக்கிச் செல்லும் இக்காலகட்டத்தில் இதுபோன்ற பேரணிகளைக் குழப்பி தன்னை மேலும் நெருக்கடிக்கு உள்ளாக்க அரசாங்கம் தயாரில்லை.  இதை மறுவளமாகச் சொன்னால் அரசாங்கம் ஜெனிவாவை எதிர்கொள்ள புத்திசாலித்தனமாக திட்டமிடுகிறது என்று பொருள்.

இவ்வாறு அரசதரப்பு சட்டத் தடைகளை கறாராக,கண்டிப்பாக அமல்படுத்தவில்லை என்பதும் பேரணி வளர ஒரு காரணம். அதேசமயம் பெருந்திரள் மக்கள் போராட்டமாக பேரணி வளரத் தொடங்கியபின் அரசு தரப்பால் அதைத் தடுத்து நிறுத்த முடியாமல் போயிற்று என்ற தர்க்கமும் உண்டு.

இந்த மூன்று காரணங்களினாலுந்தான் பேரணியானது ஏற்பாட்டாளர்கள் கற்பனை செய்திருக்காத அளவுக்கு வளர்ச்சி பெற்றது. எனவே இம்மூன்று காரணங்களில் இருந்தும் ஏற்பாட்டாளர்களும் கட்சிகளும் செயற்பாட்டாளர்களும்  கற்றுக்கொள்ள வேண்டும். இந்தப் பேரணி ஒரு தொடக்கமே. பேரணி செய்தோமா நினைவுக் கல்லை நட்டோமா ஊடகங்களில் தோன்றி சரி பிழை சொன்னோமா என்பதோடு முடிந்து போகிற ஒரு விடயம் அல்ல இது. பேரணியில் முன்வைக்கப்பட்ட பிரகடனத்தை நடைமுறைப்படுத்த உரிய செயல்பூர்வ ஏற்பாடுகள் வேண்டும். அதைக் குறித்த தீர்க்கதரிசனம் மிக்க ஒரு  வழி வரைபடம் வேண்டும். அதை முன்னெடுக்கத் தேவையான சிவில் தலைமைகள் வேண்டும். எல்லாவற்றுக்கும் முதலில் சிவில் அமைப்புக்கள்  தங்களுடைய கீழ்மட்டக் கட்டமைப்புகளைப் பலப்படுத்த வேண்டும். கீழிருந்து மேல் நோக்கிய கட்டமைப்பைக் கொண்ட ஒரு தமிழ்த் தேசிய மக்கள் இயக்கத்தை  உருவாக்கவில்லையென்றால் பொலிகண்டிப் பிரகடனம் பேப்பர் பிரகடனமாக மாறக்கூடிய ஆபத்தும் உண்டு.

 

http://www.nillanthan.com/4879/

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலும் சிவில் சமூகங்கள் கற்றுக்கொள்ள வேண்டியவை  - நிலாந்தன்

spacer.png

spacer.png

 

தமிழ் மக்கள் எப்பொழுதும் போராடத் தயாராக இருக்கிறார்கள்;பொருத்தமான போராட்ட வழிமுறைகள் திறக்கப்பட்டால் வீதியில் இறங்குவார்கள் போராடுவார்கள் என்பதைக் கடந்த வாரம் நிகழ்ந்த ஐந்துநாட் பேரணி உணர்த்தியிருக்கிறது.

அதே சமயம் தமிழ்ச் சிவில் சமூகங்களுக்கும் கட்சிகளுக்கும் இடையிலான உறவில் ஒரு பொருத்தமான பொறிமுறை இல்லையென்றால் கட்சிகளோ அல்லது நிதி வழங்குனர்களோ இந்தப் போராட்டங்களைத் தத்தெடுக்க கூடிய ஆபத்துக்கள் அதிகம் இருக்கும் என்பதனையும் இந்தப் போராட்டம் உணர்த்தியிருக்கிறது.

மட்டக்களப்பைச் சேர்ந்த சிவில் செயற்பாட்டாளர்கள் முதலில் இந்த போராட்டத்தை குறித்து சிந்தித்திருக்கிறார்கள். புலம்பெயர்ந்த தமிழ்த் தரப்புக்கள் அதற்கு பக்கபலமாக இருந்திருக்கின்றன. இப்போராட்டத்தை குறித்து முதலில் சிந்தித்த சிவில் சமூக பிரதிநிதிகள்  போராட்டத்திற்கு உதவி கேட்டு கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை அணுகியிருக்கிறார்கள். இது தொடர்பில் மட்டக்களப்பில் நடந்த சந்திப்பில் மக்கள் பிரநிதிகளும் பங்குபற்றியிருக்கிறார்கள். இதன் மூலம் போராட்டத்துக்குள் நுழைந்த சுமந்திரனும் சாணக்கியனும் போராட்டத்தை எப்படித் தத்தெடுக்கலாம் என்று சிந்தித்தார்கள் என்று ஒரு குற்றச்சாட்டு எழுந்தது.

தொடக்கத்தில் போராட்டம் சுமார் முப்பது பேர்களோடுதான் ஆரம்பமாகியது. மழை பெய்துகொண்டிருந்தது. பொலிசார் நீதிமன்ற தடை உத்தரவுகளை முன்வைத்து போராட்டத்தை நடத்தியவர்களை தடுக்க முற்பட்டிருக்கிறார்கள். அட்டாளைச்சேனை வரை அச்சுறுத்தலான நிலைமையே நிலவியது என்று ஒரு கிறீஸ்த்தவ மதகுரு கூறினார்.இதுவிடயத்தில் சாணக்கியனும் உட்பட அரசியல்வாதிகள் போலீசாரின் தடையை உடைத்துக்கொண்டு துணிந்து முன் சென்றிருக்கிறார்கள். போலீஸ் தடையை உடைக்கலாம் என்ற முன்னுதாரணத்தை அது ஏனைய அரசியல் தலைவர்களுக்குக் கொடுத்தது. ஆனால் கிழக்கில் பொதுமக்களுக்குத் தடை இருக்கவில்லை. ஒரு கட்டத்தில் போலீசார் பேரணியை தடுப்பதை நிறுத்திவிட்டு அது செல்லும் வழியெல்லாம் வீதி ஒழுங்கைப் பேணும் நடவடிக்கைகளில் இறங்கி விட்டார்கள்.

முதலில் அது ஒரு கவன ஈர்ப்பு நடைபயணம் என்றுதான் கூறப்பட்டது. ஆனால் கிழக்கில் முஸ்லிம்களின் கிராமங்களுக்குள் நுழைந்த பொழுது அது பெருந்திரள் பேரணியாக மாறியது. சாணக்கியனுக்கும் சுமந்திரனுக்கும் முஸ்லிம்கள் மத்தியில் காணப்படும் நல்லபிப்பிராயமும் இதற்கு ஒரு காரணம். பொலிகண்டியில் அது முடியும்போது பெருந்திரள் பேரணியாக காணப்பட்டது. அதாவது தமிழ் மக்கள் தெருவில் இறங்கிப் போராடத் தயார் ஆனால் தலைமை தாங்கத்தான் அமைப்புகளோ பொருத்தமான குடிமக்கள் சமூகத்தலைவர்களோ தயாரில்லை என்பதனை இப்போராட்டம் உணர்த்தியிருக்கிறது.

பொருத்தமான குடிமக்கள் சமூகத் தலைவர்கள் இல்லாத ஒரு வெற்றிடத்தில்தான் சமயத் தலைவர்களை முன்னிறுத்த வேண்டிய தேவை ஏற்படுகிறது.பேரணியில் பங்கு பற்றுவதற்கு எதிராக திருமலை ஆயருக்கு சட்டத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இலங்கைத் தீவில் ஒரு பொதுமக்கள் பேரணியில் பங்கு பற்றுவதற்கு எதிராக வேறு எந்த ஆயராவது இவ்வாறு தடுக்கப்பட்ட  முன்னுதாரணம் உண்டா? சமயத் தலைவர்கள் தாம் சார்ந்த சமய நிறுவனங்களுக்கு கட்டுப்பட்டவர்கள். சமய நிறுவனங்களுக்கும் அரசியல் உண்டு. எனினும் அவை அவற்றின் முதலாவது அர்த்தத்தில் சமய நிறுவனங்கள். அரசியல் பணிகளுக்குரியவை அல்ல. ஆனால் ஒரு சமூகத்தின் தேவைகளின் நிமித்தம் சமயத் தலைவர்கள் அரசியல் பணிக்கு வரமுடியும். இதற்கு உலகம் முழுவதும் உதாரணங்கள்  உண்டு.

இந்தியாவில் சுதந்திரப் போராட்டத்தில் ஆன்மீகவாதிகளின் ஈடுபாடு மிக அதிகமாக இருந்தது. அது ஆன்மீகவாதிககளால் வழிநடத்தப்பட்ட ஒரு போராட்டம் என்று ஈழத்தமிழ் சிந்தனையாளர் மு. தளையசிங்கம் கூறுவார். சுதந்திரப் போராட்டத்துக்கான கூட்டு உளவியலைத் தயாரித்ததில்  ராமகிருஷ்ண மிஷனுக்குப் பெரும் பங்குண்டு என்ற பொருள்பட தளையசிங்கம்  கூறுகிறார். எப்படி என்றால் அன்னியர் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி ஆங்கில மோகம் கொண்டிருந்த இந்திய படித்த நடுத்தர வர்க்கம் மேற்கத்தியக் கல்வி,மேற்கத்திய சிந்தனை,மேற்கத்திய தத்துவம் போன்றவற்றை பெருமையோடு பின்பற்றிக் கொண்டிருந்த ஒரு பின்னணியில் தனது சொந்தப் பண்பாடு; மதம் விழுமியங்களை குறித்து ஒருவித தாழ்வு மனப்பான்மையோடு காணப்பட்டது. ஆனால் விவேகானந்தரின் மேற்கத்திய விஜயமும் சிக்காக்கொவில் அவர் ஆற்றிய உரைக்குக்  கிடைத்த ஆதரவும் அங்கீகாரமும் அந்த மனக்கூனலை நீக்கியது. இதன் விளைவாக இந்திய நடுத்தர வர்க்கம் மேற்கத்தியக் கல்வி குறித்தும் மேற்கத்தைய மேலாண்மை குறித்தும் கொண்டிருந்த பிரமைகள் உடைந்து அதன் கூன் நிமிர்ந்தது என்றும் கருதப்படுகிறது. இந்திய படித்த நடுத்தர வர்க்கத்தின் தாழ்வுச் சிக்கல் நீங்கியதும் அது போராடத் தொடங்கியது என்று தளையசிங்கம் கூறுகிறார்

தென்னாபிரிக்காவில் ஆயர் டெஸ்மன் டூட்டு, கிழக்குத் தீமூரில்  சமாதானத்திற்கான நோபல் பரிசை பகிர்ந்து கொண்ட ஆயர் பெலோ (Ximenes Belo),லத்தீன் அமெரிக்காவின் விடுதலை இறையியலை முன்னெடுத்து அதனாலேயே கொல்லப்பட்ட கிறிஸ்தவ மதகுருக்கள் என்று  பரவலாக உதாரணங்கள் உண்டு.தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்திலும் தமது அரசியல் பங்களிப்புக்களுக்காக கொல்லபட்ட ஆல்லது காணாமல் ஆக்கப்பட்ட கிறீஸ்தவ மதகுருக்கள் உண்டு.

அதேசமயம் இலங்கைதீவில் ஒரு கெட்ட முன்னுதாணமும் உண்டு. அரசியலில் மாசங்கத்தின் செல்வாக்கு இச்சிறிய தீவை  எங்கே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது?

எனவே ஒரு சுதந்திரப் போராட்டத்தில் அல்லது ஒரு மக்கள் திரளின்  மனித உரிமைகளுக்கான போராட்டத்தில் ஆன்மீக நிறுவனங்கள் சமய நிறுவனங்கள் உன்னதமான பங்களிப்பைச் செய்ய முடியும்.போராடும் மக்களின் ஆன்ம பலத்தைக் கட்டியெழுப்புவதற்கும் போராட்டத்துக்கான  நீதியின் இதயமாக நின்று போராட்டத்தை வழிநடத்துவதற்கும் ஆன்மீகத் தலைவர்களும் சமயத் தலைவர்களும் பொருத்தமான பங்களிப்பைச் செய்ய முடியும்.எனவே மத நிறுவனங்கள் அரசியலில் ஈடுபடக் கூடாது என்பதல்ல. ஆனால் பிரச்சினை என்னவென்றால் சிவில் அமைப்புக்களின் கட்டமைப்புக்குள் மத நிறுவனங்களையும் உள்வாங்கி சிவில் தலைவர்கள் அதை முன்னெடுப்பதே அதிகம் பொருத்தமானதாக இருக்கும்.

தமிழ் மக்களின் வரலாற்றில் அரசியல் தலைவர்கள் உருவாகியிருக்கிறார்கள். ஆயுதப் போராட்ட காலகட்டத்தில் தளபதிகள் உருவாகியிருக்கிறார்கள். ஆனால் சிவில் தலைவர்கள்  என்று கருதப்படுவோர் பெருமளவுக்கு உருவாகியிருக்கவில்லை. ஆயுதப் போராட்டத்திற்கு முந்திய மிதவாத அரசியலிலும் சரி ஆயுதப் போராட்டத்திற்குப் பிந்திய மிதவாத அரசியலிலும் சரி அவ்வாறான சிவில் தலைமைகள் பெருமளவுக்கு  மேலெழவில்லை.

கடந்த நூற்றாண்டின் முற்கூறில் யாழ்ப்பாணம் வாலிபர் காங்கிரசை ஹண்டி பேரின்பநாயகம் உருவாக்கினார். கிழக்கில் மட்டக்களப்பில் கல்விச் செயற்பாட்டாளரான நல்லையா இலவசக்கல்வியின் முன்னோடியாகக் காணப்பட்டார். கண்டி பெரியநாயகம். நல்லையா போன்றவர்களைத்  தவிர்த்துப் பார்த்தால் கடந்த சுமார் ஒரு நூற்றாண்டு காலப் பரப்பில் தமிழ்ச்சமூகத்தில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய சிவில் சமூகத் தலைமைகள் மிக அரிதாகவே மேலெழுந்திருக்கின்றன. மதம் சார்ந்த நிறுவன உருவாக்கிகள் தோன்றியியிருக்கிறார்கள்; இப்போதும் தோன்றுகிறார்கள்.ஆனால் சிவில் சமூகத் தலைவர்கள் என்று சொல்லத்தக்க ஆளுமைகள் போதிய அளவுக்கு உருவாகவில்லை.

ஆயுதப்போராட்டத்துக்கு முன்னரான மிதவாத அரசியலிலும் ஆயுதப் போராட்டத்தின் போதும் சிவில் சமூகங்கள் பலமான வளர்ச்சியைப் பெற்றிருக்கவில்லை. ஆயுதப் போராட்ட காலகட்டத்தில் பல சிவில் சமூகத் தலைவர்கள் ஒன்றில் ஆயுதப் போராட்டத்தில் இணைந்தார்கள் அல்லது ஆயுதப்போராட்டத்தோடு தொடர்புடையவர்கள் என்ற காரணத்தால் கொல்லப்பட்டார்கள் அல்லது புலம் பெயர்ந்தார்கள்.

போருக்குப் பின்னரான சூழலில் சிவில் சமூகத் தலைவர்கள் எழுச்சி பெறாமல் போனதற்கு மற்றொரு காரணமும் கூறப்படுகிறது. என்.ஜியோக்கள் ஐ.என்,ஜியோக்கள் மற்றும் புலம் பெயர்ந்த தமிழ் தரப்புக்கள் போன்றன சமூகத்தில் துருத்திக் கொண்டு மேலெழும் செயற்பாட்டாளர்களை நிதி உதவிகள் மூலம் அடுத்தடுத்த கட்டங்களுக்கு தன்னியல்பாக வளராமல் செய்து விடுகின்றன என்றும் ஒரு விமர்சனம் உண்டு. நிதி உதவிகள் சிவில் சமூகத் தலைவர்களை உருவாக்குமா? என்ற கேள்வி இங்கு முக்கியம். கடந்த பத்தாண்டு காலத்தையும் எடுத்துப் பார்த்தால் தமிழ் பரப்பில் நிதி உதவி என்ற அம்சம் பல செயற்பாட்டாளர்களை ப்ரொஜெக்ரிவிஸ்ட் ஆக மாற்றியிருக்கிறது. இதுவும் உள்ளூர் சிவில் சமூகத் தலைவர்கள் எழுச்சி பெறுவதற்கு சவாலாகக் காணப்படுகிறது. ஆபிரிக்க புலமைச் செயற்பாட்டாளர் ஒருவர் “நிதி உதவி மாற்றத்தை ஏற்படுத்தாது” என்ற தலைப்பில் ஒரு நூல் எழுதியிருக்கிறார்.

spacer.png

கடந்த பத்தாண்டு கால தொகுக்கப்பட்ட அனுபவங்களின் அடிப்படையில் பார்த்தால் தமிழ் மக்கள் பேரவையோ அல்லது அதையொத்த வேறு எந்த அமைப்போ சிவில் சமூகத் தலைவர்களை என்று குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஆளுமைகளை உருவாக்கத் தவறிவிட்டன.இதை இன்னும் கூர்மையாகச் சொன்னால் தமிழ் மக்கள் மத்தியில் சிவில் சமூகத் தலைமைகள் என்று கூறத்தக்க ஒரு பாரம்பரியம் மிகவும் பலவீனமாகவே இன்றுவரை காணப்படுகிறது. விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் பேரவைக்குள் எழுச்சி பெற்று வந்த காலகட்டத்தில் மூத்த சிவில் அதிகாரியும் சமூக அரசியற் செயற்பாட்டாளரும் ஆகிய எனது நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டார். “விக்னேஸ்வரன் ஒரு புதிய கட்சியைத் தொடங்குவதை விடவும் ஒரு மக்கள் இயக்கத்துக்கு தலைமை தாங்கினால் நன்றாக இருக்குமே? ” என்று. ஆனால் அது நடக்கவில்லை.அவ்வாறு தலைமை தாங்கத் தேவையான அரசியல் தரிசனமும் வாழ்க்கை ஒழுக்கமும் விக்னேஸ்வரனிடம் இல்லை. எனவே அவர் ஒரு கட்சியை தொடங்கினார். அந்த வெற்றிடம் இன்றுவரை உள்ளது. அந்த வெற்றிடத்தில்தான் சமயத் தலைவர்களும் மதகுருக்களும் முன்னே வருகிறார்கள்.

2009க்குப்பின் முன்னாள் மன்னார் ஆயரைப் போன்றவர்கள் மேலெழுந்தார்கள். எனினும்   அரசியல் தலைவர்களின் மீது செல்வாக்கைப் பிரயோகிக்கும் ஒரு வளர்ச்சியை அவர்கள் முழுமையாக அடையவில்லை.
இப்படிப்பட்ட மிகப் பலவீனமான ஒரு பாரம்பரியத்தின் பின்னணியில்தான் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலுமான பேரணியில் மதத் தலைவர்களை முன்னிறுத்த வேண்டிய ஒரு காலச்சூழல் ஏற்பட்டதா?

பேரணியின் தொடக்கத்திலிருந்து முடிவு வரை அதாவது பொத்துவிலில் தொடக்கி பொலிகண்டி வரை அரசியல்வாதிகள் பேரணியை  ஹைஜாக் பண்ண முயன்றதாகக் குற்றச்சாட்டுக்கள் உண்டு. இதன் விளைவாகவே பேரணியை எங்கே முடிப்பது என்பதில் குழப்பம் ஏற்பட்டது. இப்பிணக்கானது பேரணி திருகோணமலையை அடைந்தபோது பகிரங்கமாகவும் கூர்மையாகவும் வெளிப்பட்டது. திருகோணமலையில் மதத் தலைவர்களும் அரசியல் தலைவர்களும் முரண்பட்டுக் கொண்டார்கள். அரசியல் தலைவர்கள் பேரணியின் மீது செல்வாக்குச் செலுத்துவதை ஏற்பாட்டுக் குழு இயன்றளவுக்கு தவிர்க்க முயற்சித்தது. சமயத் தலைவர்களையே பேரணியில் முன்னுக்கு நிறுத்துவது என்று ஏற்பாட்டுக் குழு முடிவெடுத்தது.ஆனாலும் அதை முழுமையாக நடைமுறைபடுத்தும் சக்தி ஏற்பாட்டு குழுவுக்கு இருக்கவில்லை. ஏனெனில் பேரணியின் தொடக்கத்தில் போலீஸ் தடைகளை உடைத்தமைக்கும் பேரணி எதிர்பாராத வெற்றியைப் பெற்றதிற்கும் அரசியல் கட்சிகளின் பங்களிப்பும் ஒரு காரணம்.

எதுவாயினும் எல்லா விமர்சனங்களுக்கும் அப்பால் இது ஒரு நம்பிக்கையூட்டும் தொடக்கம். பொருத்தமான தருணம் பொருத்தமான அறவழி போராட்ட வழிமுறைகள் திறக்கப்பட்டால்  தமிழ் மக்கள் போராடுவார்கள் என்ற செய்தியை பேரணி உணர்த்தியிருக்கிறது.சிவில் சமூகங்கள் தங்களைப் பொருத்தமான விதத்தில் ஒன்றிணைத்து எந்தவொரு வெளித் தரப்பினாலும் கையாளப்பட முடியாத சுயாதீனமான வளர்ச்சியை அடைவதன் மூலம் சிவில் சமூகங்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் இடையிலான ஒரு பொருத்தமான சமநிலையைப் பேணலாம். ஈழத் தமிழர்கள் மிகச் சிறிய ஒரு மக்கள் கூட்டம். அரசியல்வாதிகளையும் புலம் பெயர்ந்த தமிழர்களையும் தமிழகத்தையும் நீக்கிவிட்டு சிவில் சமூகங்கள் தனியாகப் போராட முடியாது. சிங்கள மக்கள் மத்தியிலும் நிலைமை அதுதான். 2015ல் ஆட்சி மாற்றத்தின் பொது சிவில் அமைப்புக்களும் அரசியல் கட்சிகளும் ஒன்றாக நின்றே ஆட்சியை மாற்றின. எனவே தொகுத்துக் கூறின் தமிழ் மக்களுக்கு இப்பொழுது தேவைப்படுவது ஒருதமிழ்த் தேசிய இயக்கந்தான்.

http://www.nillanthan.com/4873/

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.