Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகளிர் தினம்: பெண்களின் உரிமைக்கு குரல் கொடுப்போம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மகளிர் தினம்: பெண்களின் உரிமைக்கு குரல் கொடுப்போம்

மகளிர் தினமானது பெண்களுக்கான சமத்துவம், உரிமைகளை வலியுறுத்துவதற்காகவும் கொண்டாடப்படுகிறது.

வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடந்த பெண்கள் தற்போது வானில் பறந்து கொண்டிருக்கின்றனர் என்றால் அதற்கு அவர்கள் வித்திட்ட பல்வேறு போராட்டங்களுக்கும், தியாகங்களுக்கும் கிடைத்த வெற்றியே இந்த மகளிர் தினமாகும்.

 
ஆணுக்கு சமமானவள் பெண் என்பதை நிரூபிக்கும் வகையில் பெண்கள் பல வெற்றிக்கனியை பறித்துக்கொண்டிருக்கிறார்கள். பெண் பிரதமர், பெண் ஜனாதிபதி, பெண் முதலமைச்சர்கள், பெண் விளையாட்டு வீரர்கள், விண்ணெளி வீராங்கனைகள் என்று உலகம் பெருமைப்படும் அளவிற்கு பெண்களின் சாதனைகளை  அடுக்கிக்கொண்டேபோகலாம்.

சேமிப்பு என்று வந்து விட்டால் அதிலும் பெண்கள் தான் சிறந்தவர்கள்.

பெற்றோர்களின் மீது அக்கறை செலுத்துவதில் பெண்கள் முதன்மையானவர்கள்.

எந்த விஷயத்தையும் பெண்கள் எளிதாக கற்றுக்கொள்வார்கள்.

தன்மானத்தை  காத்துகொள்வதில் பெண்கள் பெரும் பங்காற்றுவார்கள்.

எந்தவொரு விஷயத்திலும் பெண்கள் தெளிவு மற்றும் உறுதி கொண்டவர்களாக தோற்றம் அளிப்பார்கள்.

அதனால் தான் நாட்டை ஆட்சி செய்ய மன்னர் இருந்தாலும், ஒரு வீட்டை ஆட்சி செய்ய ஒரு பெண்ணால் தான் முடியும் என்பது எந்த காலத்திலும் மறுக்க முடியாத உண்மை என்பதை உணர்ந்து பெண்மையை  போற்றுவோம்.

 

https://www.maalaimalar.com/health/womensafety/2021/03/06143003/2417799/tamil-news-Womens-day-march-8th.vpf

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild

Bild

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குலமகள் தங்கம் தானே வேறென்ன செல்வம் வேண்டும் – மாரீசன்

 
Capture-1.jpg
 3 Views

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி இக்கவிதை பிரசுரமாகின்றது.

 

 

 

 

 

சட்டங்கள் கற்றுத்தேறிச் சாதிக்கும் திறமைவிஞ்ச

சான்றோரி னருகமர்ந்து சபையினில் வீற்றிருந்து

மட்டிலா வறிவினாற்றல் அனுபவ முதிர்ச்சியாலே

மக்களின் வழக்குக் கேட்டு உண்மைகள் ஆய்ந்து தேர்ந்து

வெட்டெனக் குற்றம் சுற்றம் நீக்கிநுண் மதியினாலே

வெளிப்படை யாகநீதி வழங்கிடும் பெண்ணைக் கொள்ளப்

பட்டொடு பக்கம் வந்து அமர்ந்திடும் காளையர்க்குத்

தட்சணை வைத்துத் தட்டம் ஏந்தியும் நிற்பதாமோ?

 

தலைவனைக் கண்ணிற் காணும் தெய்வமாய்த் தொழுது கொண்டு

தன்னலம் கருதிடாமல் இன்சொலா லீர்த்து நிற்பார்

விலையிலா வன்பால் பண்பால் ஆண்மையு மணுக வைப்பார்

வினைகளிற் கற்றுத் தேர்ந்த திறமைகள் விரியக் காட்டி

மலையெனத் தாக்கவல்ல வறுமையிற் கலக்கம் கொள்ளார்

மனத்தினி லுறுதிபூண்டு மலைத்திடா துழைக்கும் கொள்கை

குலமகள் தங்கம் தானே வேறென்ன செல்வம் வேண்டும்

குவலயம் சிறக்க வைப்பீர் சீதனம் விலக்கிக் கொள்வீர்

 

தந்தையும் தாயுமாவார் தலைவனின் துணையுமாவார்

தார்மீக நெறியில் நின்று ஆன்மீகம் காத்து வாழ்வார்

முந்தையோர் உரைத்த நீதி மூதுரை நெஞ்சில் தாங்கி

முன்னுணர் நுண்மதியால் நுணுக்கமாய்க் கருத்துரைப்பார்

சிந்தையிற் தெளிவுமோங்கும் செயலினிற் திறமை வீங்கும்

செழுமையு மீர்க்குமுள்ளம் கருணையும் சுரக்கும் பண்பில்

சொந்தங்கள் உறவுநாடிச் சோர்விலா துழைக்கும் பெண்ணை

நிந்தமாய்க் கொள்ளுவோர்க்கு வேறென்ன செல்வம் வேண்டும்

 

https://www.ilakku.org/?p=44009

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாற்றத்தை நோக்கிச் செல்வதே எமது இலக்கு… – வெற்றிச்செல்வி

 
1-12-1.jpg
 4 Views

உலகெங்கும் இன்றும் ஒடுக்கப்படும் இனங்கள் மற்றும் சமூகங்கள் தம்மை ஒடுக்குவோருக்கு எதிராகப்  பலவிதமான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. அதே போல் இப்போது உலகம் முழுவதும் கொண்டாடப்படும் சர்வதேசப் பெண்கள் தினம் கூட போராட்டத்திலே தான்  தொடங்கியது.

தமக்கு ஒதுக்கப்பட்ட வேலை நேரத்தை குறைக்கவும், தமக்குத் தரப்படும் வேதனத்தை உயர்த்துமாறு வலியுறுத்தியும் அதேவேளை தேர்தலில் வாக்களிக்கும் உரிமையைக் கோரியும் 15,000 உழைக்கும் பெண்கள் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் 1908ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் திகதி ஒரு  பேரணியை நடத்தினர். அடுத்த ஆண்டு இதே நாளைத் தேசிய பெண்கள் தினமாக அமெரிக்க குடியரசுக் கட்சி அறிவித்தது.

இதையடுத்து 1975ஆம் ஆண்டுதான் இந்த நாளைச் சர்வதேசப் பெண்கள் தினமாக ஐ.நா. அங்கீகரித்தது.

உலகம் முழுவதும் பெண்கள் நாள் கொண்டாடப்பட்டு வருகின்ற போதிலும், இன்றும் உலகளவில் பெண்கள் தங்கள் உரிமைகளுக்காக நாளுக்குநாள் போராட வேண்டிய நிலையில் தான் உள்ளனர்.  இலங்கையில்  2009 இல் முடிவுற்ற போருக்குப் பின்னர் பெண்கள் பல்வேறு விதமான நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றனர்.  போரில் அவயங்களை இழந்தவர்கள் அதிகமாகப் பாதிக்கப்பட்ட நிலையிலே வாழ்ந்து வருகின்றனர்.

இவ்வாறு போரில் அவயங்களை இழந்து மாற்றுத் திறனாளிகளாக வாழ்ந்து வருபவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக பல செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார் முன்னாள் போராளியும் எழுத்தாளருமான வெற்றிச்செல்வி அவர்கள். 

இந்நிலையில், உலக பெண்கள் தினத்தை முன்னிட்டு வெற்றிச்செல்வியுடன்  இலக்கு ஊடகம் ஒரு நேர்காணலை மேற்கொண்டது. அந்த நேர்காணலை எமது வாசகர்களுக்காக இங்கே தருகிறோம்.

கேள்வி – சர்வதேச மகளிர் நாள் ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்ற போதும், இன்னும் மகளிர் உரிமைகள் மறுக்கப்பட்டு வருவதை எவ்வாறு பார்க்கிறீர்கள்?

பதில் – சர்வதேச நாட்களை உணர்வுபூர்வமாகக் கடைப்பிடிப்பவர்கள் துறைசார் ஆர்வலர்கள் மட்டுமே. அவ்வாறே மார்ச் 8 பெண்கள் நாளும். இந்த ஆர்வலர்களாலும், தன்னார்வத் தொண்டர்களாலும் முன்னெடுக்கப்படும் விழிப்புணர்வுகளால் சிலர் மட்டும்தான் புரிதலுக்கு உட்படுகிறார்கள்.

அதிகார மனோநிலையில் இருப்பவர்கள் இந்த நாட்களை எல்லாம் பத்தோடு பதினொன்றாய் கடந்து விடுகிறார்கள். தத்தமக்கென்று பிடிவாதங்களையும், அதிகாரங்களையும் வைத்திருக்கின்ற அல்லது வளர்த்துக் கொண்டிருக்கின்றவர்களை ஆண்டாண்டுக்கு வந்துபோகும் இந்தக் கலண்டர் நாட்களால் மாற்றிவிட முடியாது.

மார்ச் 8 ஐ ஒரு நிகழ்வாகவோ வெறும் விழாவாகவோ நடத்தி முடித்துவிட்டுப் போகின்ற பல அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களை பார்க்கிறேன். உண்மையான மன மாற்றத்திற்கான அல்லது ஆழமான புரிதலுக்கான நிகழ்வுகளாக அவை நடக்கின்றனவா என்றால் இல்லை என்றுதான் சொல்ல முடிகிறது.

அநேகமான மகளிருக்கு மட்டுமல்ல மகனாருக்கும் தமது உரிமைகள் எவை, கடமைகள் எவை என்று தெரிந்திருக்கவில்லை. மனிதர்களை மனிதர்கள் அணுகுவதில், நடத்துவதில் நிகழும் மனிதாபிமான வறுமைதான் உரிமைகள் மறுக்கப்படுவதற்குக் காரணமாகின்றது. பாகுபாடுகளையும், ஏற்றத்தாழ்வுகளையும் அடக்குமுறைச் சிந்தனைகளையும் கொண்டவர்கள் பெண்களுக்கு மட்டுமல்ல இயற்கைக்கும் முரணானவர்கள்.

மேலும் மனிதர்கள் தொடர்பாக நாம் ஒவ்வொருவரும் வைத்திருக்கின்ற பொதுப் புத்தியின்பால் சரிந்து விழுகிறோம். அதனைச் சமூகத்தின் மீது பொதுவாகத் தூக்கிவைத்துப் பேசிவிட்டுக் கடந்து போய்விடுகிறோம். பெண்ணுரிமைச் செயற்பாட்டாளர்கள் கூட சுதந்திரமாக தமது குரலை உயர்த்துவதில் தடைகள் இருக்கின்றன. ஏதோ ஒரு விதத்தில் அவர்களும் ஓரங்கட்டப் படுகிறார்கள்.

சாதாரண சமூக வாழ்வுக்கு எதிரானவர்களைப் போலவும் அல்லது அதீத திறமையுள்ளவர்களைப் போலவும் கருதப்படுகிறார்கள். எப்போது மக்கள் தமது சுதந்திரமான வாழ்க்கை முறைக்கான விழிப்புணர்வாக மனித உரிமைகளை புரிந்து கொள்கிறார்களோ அப்போது பெண்களுக்கான உரிமைகளும் மதிக்கப்படும். ஆனால் ஒரு சமூகத்தில் அனைத்தும் நூறு வீதம் சாத்தியமாவதில்லை என்பதே யதார்த்தமும் எனது கவலையும்.

கேள்வி – பெண் சமத்துவத்தை எட்டுவதில் எமது சமூகத்தில் ஆண், பெண் இரு பாலாரினதும் பங்கு எந்தளவு உள்ளதென கருதுகிறீர்கள்?

பதில் – மனித எண்ணங்களில் பாகுபடுத்தி வைத்திருக்கும் ஆண், பெண் மன நிலையை முதலில் நாம் விட்டொழிக்க வேண்டும். சாதி, சமய, இன, மத, நிற, அரச உத்தியோக, பொருளாதார அனைத்து நிலைகளிலும் மனிதாபிமானத்தைக் கடைப்பிடிக்கும் மனங்கள்தான் வேண்டும். மனிதர்களைத்தான் மதிக்க வேண்டும். மனிதர்களுக்குள் யாவரும் அடங்குவர்.

கேள்வி – இவ்வாண்டு ‘பெண் தலைமைத்துவமும் கோவிட் – 19 இன் பின்னான காலத்தில் பெண் சமத்துவத்தை எட்டுதல்’ எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படுகிறது. இவ்விலக்கை எட்ட மகளீர் அமைப்புக்கள் எவ்வாறான செயற்றிட்டங்களை முன்னெடுக்க வேண்டும்?

பதில் – ‘பெண் தலைமை தாங்கும் குடும்பங்கள்’ என்ற சொல்லின் வலிமையைப் புரியாமலேயே பயன்படுத்திக் கொண்டிருக்கும் பெண் தலைமை தாங்கும் குடும்பங்கள் அநேகமாக வாழும் நாட்டில் வசிக்கிறவர் என்ற வகையில் சொல்கிறேன்; யாரோ எழுதும் இலக்கை யாரோ நிறைவேற்ற முடியாது. நமக்கு எது தேவை என்று நாம் தீர்மானிக்கிறோமோ அதனை எட்டுவதற்காக மட்டுமே நாம் முயற்சிக்கலாம்.

சிறப்பு நாட்களுக்காக இலக்குகளை வரையறுப்பதெல்லாம் ஒரு தூண்டலுக்கானது மட்டுமே. பெண்கள் தமது அறிவாலும், ஆற்றலாலும் தமக்கான சுயத்தை நிலைநாட்டி வாழ வேண்டும். சமத்துவம் கேட்டுப் பெறக்கூடியதல்ல. அது சுயத்தின்பாற்பட்டது. அந்தச் சுயத்தை பிடிவாதம், வரட்டு கௌரவம், சண்டை, அதிகாரம் என்பவற்றில் இருந்து வேறுபடுத்த மக்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்.

கேள்வி – மகளீர் மேம்பாட்டில் மாற்றம் கொண்டு வர ஆண்கள் என்ன செய்ய வேண்டும்?

பதில் – ஆண்கள் தனியாக என்ன செய்ய முடியும்? ஆண்களோ பெண்களோ முதலில் மனித மனங்களைப் புரிந்து கொள்ளுங்கள். ஆயிரத்தெட்டுச் சட்டங்களை எழுதியும் எழுதாமலும் வைத்துக்கொண்டு வாழ்வைச் சிக்கல்களுக்குள் முடக்காதீர்கள். உங்கள் பிள்ளைகளை பாரபட்சங்களோடு வளர்க்காதீர்கள்.

ஆண் என்பது அதிகாரமல்ல. அது பால். நேரும் மறையும் இல்லாமல் மின்சாரமில்லை. நேரும் மறையும் நூலளவு சறுக்கினாலும் இருட்டுக்குள்தான் கிடக்க வேண்டும். சறுக்காமல் வாழ உதவுவது சுதந்திமான வாழ்க்கையைக் கொண்டாடுவதே ஆகும். சுதந்திர உணர்வு என்பது உயிரின் உணர்வாகும். இதில் ஆண்-பெண் பிரிப்பு தேவையே இல்லை. வாழ்வை இலகுவாகவும் சுதந்திரமாகும் அறிவோடும் வாழப்பழகுதலே வாழ்வின் கலை. வாழ்வின் கலையை மக்கள் மதிக்க வேண்டும் கொண்டாட வேண்டும்.

பெண்களை வீட்டோடு வீட்டுச் சாதனங்களில் ஒன்றைப்போல பாவித்து வந்த பெரும்பான்மை மனோநிலை மாறி வருவதைக் காணமுடிகிறது. அதற்கு மனிதாபிமானத்தை வளர்க்கவும் மனித மாண்பைப் பெருக்கவுமான நுணுக்கங்கள்தான் தேவை. அவற்றைத்தான் சமூகம் கண்டடைய வேண்டும்.

(‘ஆணாதிக்கம்’ என்ற சொல் பொருத்தமானதா என்று தெரியவில்லை. ஆண் என்பதோடு ஆதிக்கம் சேர்வதால் இந்தச் சொல்லைப் பயன்படுத்துவதில் எனக்குத் தயக்கம் இருக்கிறது. பேராண்மை, முகவராண்மை போன்ற சொற்கள் ஆண் என்பதன் கலப்பல்ல. ஆனால் ஆணாதிக்கம் என்பதில் ஆண் நேரடியாக உள்ளது. அதனால் அச் சொல்லை இங்கே மேலாதிக்கம் என்று பயன்படுத்துகிறேன்.) மேலாதிக்கச் சிந்தனையுடைய அரசுகள் இதனை கவனத்தில் எடுப்பதும் அவசியமாகிறது. உதாரணமாக மக்களின் வாழ்வை ஒன்றோடொன்று இறுக்கமாக முடிச்சுப்போட்டு வைத்திருக்கும் குடும்பக் கட்டமைப்பு சார்ந்த அரச பதிவேடுகள் பெண்களை இரண்டாம் பிரஜைகளாகவே ஆக்கி இருப்பதை நாம் அறிவோம்.

இணையராக நடத்தும் அரச ஆவணங்கள் ஏதுமில்லை. எப்போது பதிந்தாலும் தந்தையின் பெயருடனோ துணையின் பெயருடனோ இரண்டாம் நிலைதான் பெண்ணின் பெயருக்குண்டு. தந்தையின் பெயரைக்கூட முழுப்பெயராக ஏற்கலாம். இணையரின் பெயரை ஒரு பெண்ணின் முழுப்பெயராகப் பதிய வேண்டும் என்ற கட்டாயம் ஏற்படுவதெல்லாம் ஆதிக்கச் சிந்தனையின்பாற்பட்டது.

அவளை அவளின் பெயரால் அழைப்பதில் யாதொரு குறையும் இல்லை. ஒரு பெண் ஆசிரியையின் வரவுப் பதிவேட்டில், ஒரு பெண் உத்தியோகத்தரின் தகுதிச் சன்றிதழில் ஒரு பெண் அதிகாரியின் அலுவலக மேசையில் இருக்கும் பெயர்ப் பலகையில் அவளது பெயர் இருப்பதுதானே நியாயமாகும்.

பெண்ணே தன் இணையின் பெயரைத் தனக்கான இடத்தில் வைத்துக் கொள்ள முன்வந்தால் இங்கே அவளால் அவள் காணாமல்போகச் செய்யப்படுகிறாள். இதன் விழிப்புநிலை பெண்களுக்கும் வேண்டும். உன் அலுவலக மேசையில் என் பெயர் எதற்கு? உன் பெயரை வைத்துக்கொள்ளேன் என்று தம் திருமதிகளுக்குச் சொல்லக்கூடிய திருவாளர்களும் வேண்டும்.

 

https://www.ilakku.org/?p=44006

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலக மகளீர் நாளை முன்னிட்டு மூன்று கோரிக்கைகளை முன்நிறுத்தி பெண்கள் போராட்டம்

 
DSCN1232-1-696x353.jpg
 19 Views

உலக மகளீர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.

அந்தவகையில் சுயாதீன அபிவிருத்திக்கான பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு காந்திப் பூங்கா முன்றலில் பெண்கள் உரிமைகளை வலியறுத்தும் முகமாக மூன்று கோரிக்கைகளை முன்நிறுத்தி கவனயீர்ப்பு நிகழ்வொன்று இடம்பெற்றது.

DSCN1247.jpg

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மகளீர் அமைப்புகளில் உள்ள பெண்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அரசே பெண்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதில் உமது பங்கு என்ன?,மாகாணசபைகளில் பெண்களின் பிரதிநிதித்துவத்தினை அரசு உறுதிப்படுத்துமா? பெண்களின் மனித உரிமைகள் எங்கே,வீட்டினை ஆளும் பெண்கள் நாட்டினை ஆளமுடியாதா போன்ற சுலோக அட்டைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

DSCN1248.jpg

நாட்டில் 52 சதவீதம் பெண்கள் உள்ள நிலையில் பாராளுமன்றம் போன்ற உயர் தீர்மானங்களை மேற்கொள்ளும் சபையில் பெண்கள் பிரதிதித்துவம் வெறுமனே 5.3 வீதங்களே காணப்படுகின்ற நிலையில் அவை மாற்றப்பட்டு சட்டவாக்கல் சபையில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கச் செய்தல், தற்போது இராஜாங்க அமைச்சின் கீழுள்ள மகளிர் விவகார அமைச்சினை அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சாக உருவாக்கி பெண் அமைச்சரின் ஒருவரின் கீழ் கொண்டுவருதல், அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிட்டுள்ளவாறு பெண்களுக்கான உரிமைகள் பாதுகாகப்படல் வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்நிறுத்தி இன்றைய இந்த கவனயீர்ப்பு நிகழ்வு இடம்பெற்றது.

DSCN1244.jpg

அதனைத் தொடந்து கவனயீர்ப்பு நிகழ்வுக்கு வருகை தந்திருந்த உதவி அரசாங்க அதிபரிடம் மேற்குறித்த கோரிக்கைகள் அடங்கிய மகஜர் கையளிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

https://www.ilakku.org/?p=44063

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இறைவனால் படைக்கப்பட்ட உன்னதமான படைப்பினமே! பெண்கள்

 
IMG20210225133134-696x522.jpg
 7 Views

“பெண் இன்றிப் பெருமையும் இல்லை;  கண் இன்றி காட்சியும் இல்லை”  என்பது சான்றோர் முதுமொழி. அதாவது மனித உடம்பினில் கண்கள் எவ்வளவு முக்கியமாமோ அதே அளவு சமூகத்தில் பெண்களும் முக்கியமானவர்களே!

பாசத்தால் வார்த்தெடுத்த உணர்ச்சிகளின் கலவையான பெண், அன்பு, ஆதரவு, அடக்கம் இவற்றுக்கு  அர்த்தமாய் மனித குலத்தில் இறைவனால் படைக்கப்பட்ட உன்னதமான படைப்பினமே!

ஒரு தாயாய், மகளாய், தாரமாய் , தோழியாய், நலன் விரும்பியாய், வழிகாட்டியாய் காலத்திற்கு காலம் எத்தனை பாத்திரங்கள்? நம் உறவின் அனைத்து பகுதிகளிலும் நிறைந்திருப்பவள் தான் பெண்!  பெண்ணின் மகத்துவத்தினை உணர்ந்த  நம் முன்னோர்கள் ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னால்  ஒரு பெண் நிச்சயம் இருப்பாள் என கூறியிருக்கின்றார்கள். இதனால் தானோ தெரியவில்லை ஆண்டு தோறும் மார்ச் மாதம் எட்டாம் திகதி மகளிரை போற்றும்படி ஓர் சிறப்பான நாளாக கொண்டாடப்படுகின்றது.

இவ் உலகில் உடலுறுதி கொண்ட ஆண்மகனைவிட  மன உறுதிகொண்டு, சவால்களை தகர்த்து சாதனைகள் பல படைக்க உறுதியான மனமும், உயர்வான எண்ணங்களும், வலிமையும் தன்னகத்தே கொண்டு அயராது உழைக்கும் பெண்கள் இன்று எத்தனை!

சுழல் வேகத்தில் பறந்து கொண்டிருக்கும் இன்றைய உலகில் ஆண்மகனைவிட பெண்கள் சளைத்தவர்களல்ல என்பதனை தொடர்ச்சியான பல போராட்டங்களுக்கு பின்னர் ‘பெண் ஆணிற்கு சமமானவள்’ என்ற உரிமையை சமூகம் ஏற்றுக்கொண்டுள்ளது. பெண் அடிமையானவள் அல்ல என்பதனை இன்று மண்முதல் விண் வரை சென்று பல சாதனைகள் படைத்து, உலகம் முழுவதும் பல பெண்கள் நிரூபித்திருக்கின்றார்கள். இருப்பினும் இலங்கையை பொறுத்தவரை பெண்களுக்கான உரிமை, பாதுகாப்பு என்பது தான் என்ன?

 இன்றைய காலகட்டத்தில் இலங்கையில்  பெண்களுக்கான உரிமைகள், பாதுகாப்பு எந்தளவிற்கு கொடுக்கப்பட்டுள்ளது என்பதை அறியும் நோக்கோடு வவுனியா காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் தொடர் போராட்டத்திற்கு தலைமை வகிக்கும் பெண் காசிப்பிள்ளை ஜெயவனிதாவிடம் என்னால் வினவப்பட்ட ஓர் நேர்காணல்.

கேள்வி : இலங்கையில் மகளிருக்கான உரிமைகளில் பெண்கள் வாழ்வுரிமையும், உறவுகளை பேணும் உரிமையும் கூட இன்று மறுக்கப்பட்டு வருவதை பார்க்க கூடியதாக உள்ளது. இது தொடர்பாக தங்கள் கருத்துக்கள் என்ன?

பதில் : இதுவும் கூட அரச பயங்கரவாதத்தின் ஒரு விளைவாகவே பார்க்கிறோம். போருக்குப் பின்னரான சூழலில் கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறை என்பது முழுவதுமாக சிதைவடைந்து விட்டது. குடும்பங்கள் தனித்தனி உதிரிகளாக்கப்பட்டு தனித்து விடப்படுகிறார்கள். யாரோ ஒரு பல்தேசிய கம்பனியின் இலாபத்துக்காக, அல்லது புவிசார் அரசுகளின் நலன்களுக்காக குடும்பங்களின் வாழ்வுரிமை பறிக்கப்படுகிறது. பூர்வீக நிலம் விட்டு குடும்பங்கள் பெயர்க்கப்படுகின்றன. இவை கல்வி உரிமை, தொழில் உரிமை என்று மட்டுமல்லாது, குடும்பங்களின் நல்லுறவு, வாழ்க்கைத்தர மேம்பாடு என்று சகலவற்றிலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. எகிறும்  விலைவாசி ஏற்றமும், அரசின் சீரற்ற பொருளாதார கொள்கை சார் நடவடிக்கைகளும், முறையற்ற கடன் சுமைகளும் குடும்பங்களின் மீது நேரடியாகவே அழுத்துவதால்; அதுவும் பெண் தலைமைத்துவ குடும்பங்களை அதிகம் கொண்டுள்ள தமிழர் தாயகத்தின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வசிக்கும் குடும்பங்களின் வாழ்வுரிமை என்பது பெருத்த அச்சுறுத்தலும், சவாலும் கொண்டதாகவே இருக்கின்றது.

கேள்வி : வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டம் பெண் தலைமைத்துவத்தின் கீழ் இடம்பெறுவதை எவ்வாறு நோக்குகிறீர்கள்?

குடும்பச் சுமை, புத்திரச் சோகம், நீண்ட காத்திருப்புக்கான ஏக்கம், மகவுகளின் பிரிவுத் துயர், கடந்த கால சம்பவங்களின் நினைவுகள் தரும் வலி என்று மென்மையான மனித உணர்வுகளை தம்முள் பொத்தி வைத்துக் கொண்டு, மறுவளமாக சமரசம் இல்லாமல் ஒற்றைக் கோரிக்கையோடு ஓர்மமாகப் போராடும் தாய்மார்களின் மன உறுதி பாராட்டுக்குரியது. அதுவும் முதுமைக் கால நோய்களோடு, இரவு பகல், மழை வெயில், புயல் குளிர் என்று பாராது இன்று வீதி ஓரங்களில் குந்தி இருந்து கொண்டு தொய்வுறாமல் போராடும் தாய்மார்கள் சிந்தும் நீதிக்கான கண்ணீர், ஆட்சியாளர்களின் அரியணைகளை ஓர்நாள் வீழ்த்தும். ஆகவே அந்தக் கண்ணீருக்கு வலிமையும் உண்டு. வாய்மையும் உண்டு.

கேள்வி : இப்போராட்டத்தில் இளம் பெண்களதும், ஆண்களதும் பங்களிப்பு பற்றி என்ன கூற விரும்புகிறீர்கள்?

பதில் : திருப்திப்பட்டு கொள்ளக்கூடிய அளவில் போதுமானதாக இல்லை. கண் கண்ட சாட்சியங்களான முதிய தாய், தந்தையர்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள். இளைய தலைமுறை பிள்ளைகள் சாட்சியங்களை ஆவணப்படுத்தும் ஓர் நடவடிக்கையிலாவது ஈடுபட வேண்டும். இது சாட்சியங்கள் உயிரோடு இல்லாத காலத்திலும் கூட பேசாமல் பேசும் ஓர் இனவழிப்பு ஆவணமாக நீண்ட கால வரலாற்றை நோக்கமாக கொண்டதாக இருக்க வேண்டும். காணாமல் ஆக்கப்படுதல் என்பது தேசிய இனப்பிரச்சினையோடு தொடர்புடையது. ஆகவே இதனை ஒரு துருப்புச் சீட்டாக இறுக்கிப் பற்றிப் பிடித்துக் கொண்டு, தனித் தேச அங்கீகாரத்துக்கான வலுவான காரணியாக இனத்துவ ரீதியாக அடையாளப்படுத்தப்பட்டு திட்டமிடப்பட்டு நடந்தேறிய ஆட்கடத்தல் – காணாமல் ஆக்கப்படுதல் சம்பவங்களை  முன்வைத்து இளைய தலைமுறைப் பிள்ளைகள் பரிகார நீதிக்கான போராட்டத்தை பெறுப்பேற்று நடத்த வேண்டும்.

கேள்வி :  இப்போராட்டத்தில் ஏனைய உள்நாட்டு மகளிர் அமைப்புக்கள் பன்னாட்டு மகளிர் அமைப்புக்களின் பங்களிப்பை கோர நடவடிக்கைகள் எடுத்துள்ளீர்களா?

பதில் : பாரிய அளவில் ஆதரவை திரட்ட முடியவில்லை. அதற்கு பலவிதமான அகப்புற காரணங்கள் உண்டு. இங்கு தமிழ் அரசியல் கட்சிகள் போராடும் மக்களை இரண்டுக்கும் மேற்பட்ட குழுக்களாக உடைத்து வைத்துள்ளன. இது தேசிய இன விடுதலைக்கு நிச்சயம் பலன் தராது. வேண்டுமாயின் அவர்களின் தேர்தல் அரசியலுக்கு மட்டுமே கை கொடுக்கலாம். அதேபோல புலம்பெயர் தேசங்களிலும் தமிழ் அமைப்புகள் ஒன்றுக்கு ஒன்று போட்டியான மனநிலையில் தாயக நிலைவரங்களை கண்காணித்து எதிர்வினையாற்றுவதால் சில விசயங்களில் ஒருங்கிணைந்தும், சில விசயங்களில் உடன்பாடு இல்லாமலும் பயணிக்கும் ஒரு துர்ப்பாக்கிய நிலைமையும் உண்டு. ஒரு தரப்போடு எம்மை அடையாளப்படுத்திக் கொண்டு விட்டால், மறுதரப்பு நம்மை அணுக பின்னடிக்கும், அல்லது சந்தேகிக்கும் துன்பியல் கசப்பான அனுபவங்களையும் கண்டுள்ளோம். இந்த குருட்டுத்தனமான நிலைமைகளில் புரட்சிகர மாற்றங்கள் நிகழ வேண்டும். அதுவரை எமது சக்தி, ஆளுமைக்கு உட்பட்ட விதத்தில் சகல தரப்புகளிடமும் சகல விதமான பங்களிப்பு ஆதரவுகளையும் வெளிப்படையாக கோரியே வந்திருக்கிறோம்.

கேள்வி : பன்னாட்டு மன்றங்களில் மகளிர் தலைமைத்துவம் அதிகரித்து வரும் நிலையில் அதனை எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள்?

பதில் : ஆயிரத்து நானூறு நாட்களை கடந்தும் தொய்வுறாமல் நடைபெற்றுவரும் எமது தொடர் சுழற்சிமுறை உணவு தவிர்ப்பு போராட்டம் தான் அவர்களுக்கான எமது செய்தி. எம்மோடு இணைந்து பயணிக்கும் பன்நாட்டு புலம்பெயர் அமைப்புகள், செயற்பாட்டாளர்கள், ஊடகவிய லாளர்கள் ஊடாக, சிறீலங்கா அரசை பொறுப்புக் கூற வைக்கும் ஒரு பொறிமுறையை நோக்கி இழுத்துச் செல்லவும், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு பரிகார நீதி கிடைக்கவும் தேவையான நடவடிக்கைகளை செய்யத் தூண்டும் காத்திரமான  செயல் முனைப்புகளுக்கோ, அல்லது இராஜிய நெருக்குதலுக்கோ சம்பந்தப்பட்ட தரப்புகள்  பதில் கூறக்கூடிய வகையில் பல நாடுகளில் இருக்கும் மகளீர் அமைப்புக்கள் எமக்கு ஆதரவாக குரல் கொடுத்துக் கொண்டு இருக்கின்றார்கள். தொடர்ந்தும் எமக்கு நீதி கிடைக்கும் வரை அவர்களின் ஆதரவை எதிர்பார்க்கின்றோம்.

பாலநாதன் சதீஸ்

வவுனியா ஊடகவியலாளர்.

 

https://www.ilakku.org/?p=44090

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலக பெண்கள் நாள்- யாழில் விழிப்புணர்வு சுவரோவியங்கள் வரையும் செயற்திட்டம்

 
PHOTO-2021-03-09-16-37-30-1-1-696x322.jp
 20 Views

உலக பெண்கள் நாளை முன்னிட்டு பெண்களுக்கு எதிரான வன்முறைகளை சித்தரிக்கும்  விழிப்புணர்வு சுவரோவியங்கள் வரையும் செயற்திட்டம் இன்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

PHOTO-2021-03-09-16-37-30-4.jpg

சட்டத்துக்கும் மனித உரிமைகளுக்குமான  நிலையத்தின் ஏற்பாட்டிலும் குறித்த நிலையத்தின் திட்ட முகாமையாளர் எஸ் ஜெயதிலீபனின் வழிகாட்டுதலில் இந்த நிகழ்வு யாழ்ப்பாணம் பிரதான வீதி, டேவிட் வீதியில் இடம்பெற்றது.

PHOTO-2021-03-09-16-37-30-2.jpg

பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வகையில் இந்த ஓவியங்கள் வரையப்பட்டுள்ளதாகவும் நாளை குறித்த ஓவியங்களை வரையும் பணிகள் நிறைவடையும் எனவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

PHOTO-2021-03-09-16-37-30-3.jpg

இந்த ஆரம்ப நிகழ்வில் மதகுருக்கள்.சட்டத்துக்கும் மனித உரிமைகளுக்குமான  நிலையத்தின் பணிப்பாளர் ரி. சுபாஜினி, சட்டத்தரணி கார்த்திகா, மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள்  மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

https://www.ilakku.org/?p=44172

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.