Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐநா கூட்டத் தொடரின் பின்னணியில் நிலம் பற்றிய உரையாடல்கள் - நிலாந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐநா கூட்டத் தொடரின் பின்னணியில் நிலம் பற்றிய உரையாடல்கள் பகுதி -1 – நிலாந்தன்.

March 27, 2021

TAMILS-LANDAP.jpg

கடந்த சில கிழமைகளுக்குள் நிலம் அதாவது தாயகம்தொடர்பாக இரண்டு முக்கிய நிகழ்வுகள் இடம்பெற்றன. முதலாவது இம்மாதம் ஒன்பதாம் திகதி யாழ்ஊடக அமையத்தில் நடந்த ஒரு மெய்நிகர் நிகழ்வு. இதில் அமெரிக்காவின் கலிபோர்னியாவை தளமாகக் கொண்டியங்கும் ஒக்லாண்ட் என்று அழைக்கப்படும் ஒரு சிந்தனைக் குழாம் முதல்நாள் எட்டாம் திகதிவெளியிட்ட ஓர் ஆவணத் தொகுப்பு தாயகத்தில் அறிமுகம் செய்துவைக்கப்பட்டது. முடிவற்ற யுத்தம் என்ற பெயரிலான இந்த ஆவணத் தொகுப்பு தமிழ்ப்பகுதிகளில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் நில ஆக்கிரமிப்பு பற்றிய தகவல்களைத் திரட்டித் தருகிறது. 2009க்கு பின் தமிழ் பகுதிகளில் நிலம் எவ்வாறு படைத்தரப்பால் திணைக்களங்களால் ஆக்கிரமிக்கப்படுகிறது என்பதனை விவரமாக தொகுத்துத் தருகிறது.


யாழ் ஊடக அமையத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த அறிமுக நிகழ்வில் ஓக்லாண்ட் நிறுவனத்தின் முக்கியஸ்தர்களும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரான விக்னேஸ்வரனும் நல்லை சிவகுரு ஆதீனத்தின் குருமுதல்வரும் நிலாந்தனும் உரையாற்றினார்கள்.

இந்தஆவணத்தைதொகுக்கும் வேலைகளில் ஒக்லண்ட் நிறுவனத்துக்கு பின்புலமாக இருந்தது விக்னேஸ்வரனுக்கு நெருக்கமான புலம்பெயர்ந்த தரப்புக்களே என்று தெரியவருகிறது. அவர்களுடைய ஒத்துழைப்பின் பின்னணியில்தான் மேற்படி சிந்தனைக் குழாம் இப்படி ஒரு ஆவணத்தை தொகுத்ததது. விக்னேஸ்வரன் அதை தனது கட்சியின் சாதனையாகக் காட்ட விரும்பவில்லை. இது தொடர்பாக யாழ்ஊடக அமையத்தில் நடந்த நிகழ்வை ஒரு கட்சி நிகழ்வாக அன்றி பொது நிகழ்வாகவே அவருடைய கட்சியினர் ஒழுங்குபடுத்தினார்கள்.

ஒரு மக்கள் கூட்டத்தின் தாய்நிலம் அபகரிக்கப்படுவது தொடர்பான ஆவணத் தொகுப்பை ஒரு கட்சியின் சாதனையாக வெளியிடாமல் உலக அங்கீகாரத்தை பெற்ற ஒரு சிந்தனை குழாத்தின் வெளியீடாக அறிமுகப்படுத்தியது விக்னேஸ்வரனின்வெற்றி என்றே குறிப்பிட வேண்டும்.

அது ஒரு இனத்துக்கான ஆவணம் அதை அவர் கட்சிக்குரியதாக காட்டவில்லை .இது கட்சிகளை நிர்மாணிப்பதை விடவும் தேசத்தை நிர்மாணிக்கும் ஓர் அரசியல் போக்கின் நல்ல முன்னுதாரணம் என்று கூறலாம்.

இந்த மெய்நிகர்நிகழ்வுக்கு சில வாரங்கள் கழித்து மற்றொரு மெய்நிகர் நிகழ்வை விக்னேஸ்வரனின் கட்சியினரே புலம்பெயர்ந்த தமிழர்களின் உதவியோடு ஒழுங்குபடுத்தினார்கள். அதுவும் நில ஆக்கிரமிப்பு தொடர்பான ஒரு அனைத்துலக கருத்தரங்கு ஆகும். அக்கருத்தரங்கில் தாயகத்திலும் புலம்பெயர்ந்த தமிழ்ப்பரப்பிளும் உள்ள சட்டச் செயற்பாட்டாளர்களும் புலமை யாளர்களும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் முன்னாள் ஆணையாளரான நவநீதம்பிள்ளை அம்மையாருமுட்பட வெளிநாட்டு துறைசார் நிபுணர்களும் உரை நிகழ்த்தினார்கள். ஏறக்குறைய ஒரு நாளின் நாலில் ஒரு பகுதி நேரம் அதாவது ஆறு மணித்தியாலங்கள் நடந்த அந்த மிக நீண்ட கருத்தரங்கில் முக்கியமான அம்சம் என்னவென்றால் புலம்பெயர்ந்த தமிழ் தரப்பில் உள்ள இளையவர்கள் குறிப்பாக புலமைசார்தகமை பெற்ற இளையோர் அதில் உரை நிகழ்த்தியமை ஆகும்.

மூன்றுதலைமுறைகளைச் சேர்ந்தவர்கள் அக்கருத்தரங்கில் பங்குபற்றினார்கள் என்பதையும் விக்னேஸ்வரன் மகிழ்ச்சியோடு சுட்டிக்காட்டினார். முதலாவது அவருடையதலைமுறை. இரண்டாவது- நடுத்தர வயதை சேர்ந்த செயற்பாட்டாளர்கள். மூன்றாவது- புலம்பெயர்ந்த தமிழ்ப்பரப்பில் மேலெழுந்து வரும் இளைய தலைமுறை. இவ்வாறு மூன்று தலைமுறைகளையும் நிலம் தொடர்பான ஒரு கருத்தரங்கில்ஒன்றிணைத்தமை ஒரு முன்னுதாரணம்.

இக்கருத்தரங்கையும் ஒரு கட்சி நிகழ்வாகவிக்னேஸ்வரனின் கட்சியினர் ஒழுங்குபடுத்தவில்லை. மாறாக நில ஆக்கிரமிப்பை புலமைக் கண்கொண்டு சட்டக்கண் கொண்டு அணுகும் அனைத்துலக புலமைசார் கருத்தரங்காகவே கட்டமைத்திருந்தார்கள்.இதுவும் கட்சிகளை நிர்மாணிப்பதற்கு பதிலாக தேசத்தை நிர்மாணிக்கும் ஓர் அரசியல் போக்கின் முக்கியமான ஒரு எடுத்துக்காட்டு ஆகும். அதிலும் குறிப்பாக இந்நிகழ்வில் விக்னேஸ்வரன் சிறப்புப் பேச்சாளராக சம்பந்தரை அழைத்திருந்தார்.தனது அரசியல் வைரியை ஓர் அனைத்துலக நிகழ்வில்அதிதியாக அழைத்தமை என்பது அரசியல் முதிர்ச்சியைக் காட்டுவது.

மேலும் கஜேந்திரகுமாருக்கும் விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்ததாகத்தெரிகிறது. ஆனால் பதில் கிடைக்கவில்லையாம்.
இக்கட்டுரை விக்னேஸ்வரனின் கட்சிக்கு காசில்லாத ஒரு விளம்பரம் அல்ல. மாறாக நல்லதை யார் செய்தாலும் அதை ஊக்குவிக்க வேண்டும். அதிலும் குறிப்பாக ஜெனிவா கூட்டத் தொடர் நடந்துகொண்டிருந்த ஒரு கால கட்டத்தில் இந்த இரு மெய்நிகர் நிகழ்வுகளும் ஒழுங்கு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. எனவே இவ்விருநிகழ்வுகளையும் ஒழுங்குபடுத்திய காலம் அதை ஒழுங்குபடுத்திய கட்சி திரைமறைவில் நின்றமை அரசியல் விரோதங்களை மறந்து ஒரு தேசத்தைக் கட்டியெழுப்புவது மக்களைத் திரளாக்குவது என்ற அடிப்படையில் சிந்தித்தமை போன்றவை நல்ல முன்னுதாரணங்கள் ஆகும். அதை எந்தக்கட்சி செய்தாலும் பாராட்ட வேண்டும்.

தமது தாய்நிலம் தொடர்பில் புலம்பெயர்ந்த தமிழ்த்தரப்பின் விழிப்பையும் அக்கறையையும் பங்கீடுபாட்டையும் இந்த இரு நிகழ்வுகளும் காட்டுகின்றன. எனவே தாயகத்துக்குவெளியேயும் ஒரு உளவியல் தாயகம் பலமாக காணப்படுகிறது என்ற உணர்வை இவ்விரு நிகழ்வுகளும் வெளிப்படுத்தின.

நிலம் தொடர்பான விழிப்புணர்வு என்பது நீதிக்காகப் போராடும் ஒரு மக்கள் கூட்டத்தை பொறுத்தவரை அத்தியாவசியமானது. அரசறிவியலின் ஆரம்பப் பாடங்களில் தேசம் எனப்படுவது ஒரு பெரிய மக்கள் திரள் என்று வரைவிலக்கணம் செய்யப்படுகிறது.ஒரு பெரிய மக்கள்திரளை தேசமாகவனையும் அம்சங்களாவன முதலாவது தாயகம்.அதுதான் பாரம்பரிய தாயகம் அல்லது நிலம். இரண்டாவது இனம். ஒரு இனமாக திரட்சியாக காணப்படுவது. மூன்றாவது மொழி ஒரு பொது மொழியைக் கொண்டிருப்பது. நாலாவது பொதுப் பண்பாடு. ஐந்தாவது பொதுப் பொருளாதாரம். இந்த ஐந்து அம்சங்களும் ஒரு மக்கள் திரளை தேசமாக கோர்த்துக் கட்டுகின்றன.

இந்த ஐந்து அம்சங்களுக்கும் எதிரான தாக்குதலே இன ஒடுக்குமுறை எனப்படுகிறது. இந்த ஐந்து அம்சங்களையும் அழிப்பதே இனப் படுகொலை எனப்படுகிறது. ஒரு மக்கள் கூட்டத்தின் தேசிய இருப்பைபௌதீக மற்றும் உளவியல் ரீதியாக அழிப்பது அல்லது நீண்டகால நோக்கில் நீர்த்துப்போகச் செய்வது எல்லாவற்றையும் இனப் படுகொலையின் வெவ்வேறு வடிவங்களாகவே பார்க்கவேண்டும். இது மேற்சொன்ன மெய்நிகர் கருத்தரங்கில் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மத்தியில் உள்ள இளம் தலைமுறையினரால் கூர்மையாக சுட்டிக்காட்டப்பட்டது.

தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரளவிடாமல் தடுக்கும் உத்திகள் இலங்கைத்தீவு கொலனியாதிக்கத்தில் இருந்து விடுதலை பெற்ற கையோடு தொடங்கப்பட்டன. இலங்கைத்தீவின் முதலாவது பிரதமர் டிஎஸ்சேனநாயக்கவின் காலத்தில் 1949இல் திட்டமிட்ட அரசின் ஆதரவுடனானகுடியேற்றங்களின் மூலம் நில ஆக்கிரமிப்பு தொடக்கப்பட்டது. நில ஆக்கிரமிப்பு தமிழ் மக்களைப் பொறுத்தவரை தாயகத்தைஅபகரிப்பது அல்லது சிதைப்பது.சிங்களமக்களைப் பொறுத்தவரை அதுசிங்களபௌத்த விரிவாக்கம். இதன் தந்தையாகக் கருதகூடிய .எஸ்.சேனநாயக்கவிலிருந்து தொடங்கி இப்பொழுது மட்டக்களப்பில் மயிலத்தனை மடுமேய்ச்சல் தரை வரையிலும் தாய் நிலம் தொடர்ச்சியாக அபகரிக்கப்படுகிறது.இவ்வாறு நிலத்தை அபகரித்து அரசின் அனுசரணையுடனான குடியேற்றங்களின் மூலம் தமிழ்மக்களின் குடித்தொகை அடர்த்தியை நீர்த்துப்போகச் செய்யும் நடவடிக்கைகளில் தொடர்ச்சியாக வந்த சிங்கள அரசாங்கங்கள் அம்பாறை மாவட்டத்தில் வெற்றி பெற்றுவிட்டன.

திருகோணமலை மாவட்டத்திலும் அவர்கள் வெற்றியை நெருங்கிவிட்டார்கள். அடுத்தது முல்லைத்தீவு மாவட்டம். இலங்கைத் தீவிலேயே சன அடர்த்தி குறைந்த ஒரு மாவட்டம் அது. அதோடு அங்கே தமிழ்மக்களின் பாவனையில் இருக்கும் மொத்த காணிகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 19 விகிதம் என்று கற்றுக் கொண்ட பாடங்களுக்கான ஆணைக்குழுவின் பின்னிணைப்பில் காணப்படுகிறது. அந்த 19 விகிதத்தையும் கூட இப்பொழுது அரசு திணைக்களங்கள் அபகரிக்க முற்படுவதை ஒக்லாண்ட் நிறுவனத்தின் ஆவணம் கூர்மையாக வெளிப்படுத்துகின்றது. இவ்வாறு நிலத்தை அபகரிப்பதன் மூலம் தமிழ் மக்களின் தாயகத்தை சிறுக்கச் செய்யலாம். நில அபகரிப்பு என்பதனை அல்லது தமிழர்தாயகத்தைச் சிதைத்தல் என்பதனை இலங்கை அரசாங்கங்கள் பல தசாப்தங்களாக நீண்ட கால நோக்கில் திட்டமிட்டு மேற்கொண்டு வருகின்றன.

அரசின் அனுசரணையுடனானகுடியேற்றத் திட்டங்கள் மூலம் ஒருபுறம் நிலம் அபகரிக்கப்டுக்கப்படுகிறது. இன்னொருபுறம் தாயகத்தின்நிலத் தொடர்ச்சி அறுக்கக்கப்படுகிறது.அதன் விளைவாக மணலாறு மாவட்டத்தில்சில பத்து ஆண்டுகளுக்கு முன் அங்கு சில ஆயிரங்களாக குடியமர்த்தப்பட்ட மக்கள் இப்பொழுது ஒரு தேர்தல் தொகுதிக்குரிய வளர்ச்சியை நெருங்கி வருகிறார்கள். கடந்த பொதுத் தேர்தலின்போது தாமரை மொட்டுக்கு அதிகம் வாக்குகள் கிடைத்த பிரதேசங்களுக்கு நிறம் தீட்டிப் பார்த்தால் இது தெரியவரும். தாமரை மொட்டு நிறம் வடக்குக்கும்கிழக்குக்கும் இடையே ஒரு பகுதியில் செறிவாககாணப்படுகிறது. அதுதான் மணலாறு. அதாவது பௌதீக ரீதியாகவடக்கையும் கிழக்கையும் பிரிக்கும் ஒரு நிகழ்ச்சி நிரலை அவர்கள் வெற்றிகரமாக முன்னெடுத்து வருகிறார்கள்.

இப்பொழுது வவுனியா மாவட்டத்திற்கும் திருகோணமலை மாவட்டத்திற்கும் இடையில்உள்ள நிலத்தொடர்பையும்அறுப்பதற்கு முயற்சிகள் நடக்கின்றன. நிர்வாக நடைமுறைகளின் ஊடாக செய்யப்படக்கூடிய மாற்றங்களின் மூலம் பொருளாதார அபிவிருத்தி வலையங்களை உருவாக்குவதன் மூலம் தமிழ் மாவட்டங்கள் சிங்கள மக்கள் செறிந்து வாழும் நிர்வாக அலகுகளிற்குள் கொண்டு வரப்படுகின்றன. இதுவும் ஆக்கிரமிப்பின் ஒரு பகுதிதான். மகாவலி அபிவிருத்தித் திட்டங்களும் அந்த நோக்கிலானவைதான். நீரைத் தருவதாகக் கூறி நிலத்தைப்பிடிப்பது.

பண்டைய சிங்கள்பௌத்த நாகரீகத்தின் மகத்தான சாதனைகளில் ஒன்று நீர்பாசனத் திட்டங்களாகும். அந்த மகிமைக்குரிய நீர்ப்பாசன நாகரீகத்தின் நவீன தொடர்ச்சியான மகாவலிஅபிவிருத்தித் திட்டம் தமிழர்களைப் பொறுத்தவரை நில ஆக்கிரமிப்பாக மாறிவிட்டது.
நில ஆக்கிரமிப்பு எனப்படுவது இலங்கைத் தீவை பொறுத்தவரை டி.எஸ்சேனநாயக்கவின் காலத்திலிருந்து தொடங்கி கிட்டத்தட்ட 70 ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இது விடயத்தில் சேனநாயக்கவும் சரி ராஜபக்சக்களும்சரி தொடர்ச்சியாக ஒரே விதமாகத்தான் சிந்திக்கின்றார்கள். தாயகக் கோட்பாட்டை சிதைத்தால் தமிழ் மக்களின் போராட்டம் படுத்துவிடும் என்று ஒருமுறை ஜெனரல் சிறில்ரணதுங்க கூறியிருந்தார். அவர் ஜெயவர்த்தனாவின் காலத்தில் பாதுகாப்புத்துறை செயலராக இருந்தார். அக்காலகட்டத்தில்தான் மணலாற்றில் குடியேற்றங்கள் திட்டமிட்டு உருவாக்கப்பட்டன.

எனவே தாயகத்தைசிதைக்கும் சுமார் 70 ஆண்டுகால அரசியலின் பின்னணியில் தாயகத்தை பாதுகாக்கும் நடவடிக்கைகள் என்ற அடிப்படையில் பார்த்தால் கடந்த சில கிழமைகளுக்குள் நிகழ்ந்த இரண்டு மெய்நிகர் நிகழ்வுகளும் முக்கியமானவை. தமிழ் மக்களை ஒரு தேசமாக கட்டியெழுப்பும் நோக்கிலானவை. குறிப்பாக ஜெனிவாத் தீர்மானம் மீண்டும் ஒரு தடவை தமிழ் மக்கள் வெற்றி பெறவில்லை என்பதை நிரூபித்திருக்கும் ஒரு பின்னணியில் தமிழ் மக்கள் தங்களை ஒரு தேசமாககட்டி யெழுப்புவதற்குரிய தற்காப்பு நடவடிக்கைகளை தங்களால் இயன்ற அளவுக்கு முன்னெடுக்க வேண்டும். குறிப்பாக புலம்பெயர்ந்த தமிழர்களின் உதவியோடு தமிழ் மக்கள் தமது சொந்த பாதுகாப்பு கவசங்களைக் கட்டி எழுப்பலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்திய இரண்டு நிகழ்வுகள் இவை.
 

 

https://globaltamilnews.net/2021/158635/

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜெனிவா கூட்டத் தொடரின் பின்னணியில் நிலம் பற்றிய உரையாடல்கள்! பகுதி-2 – நிலாந்தன்!

April 3, 2021

Land.jpg

பல மாதங்களுக்கு முன்பு யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்ட சைவ அறக்கட்டளை ஒன்றின் நிறுவனர் என்னோடு உரையாடினார். வலிகாமம் பகுதியில் படையினரால் விடுவிக்கப்பட்ட காணிகள் தொடர்பில் யாழ்கட்டளைத் தளபதி தெரிவித்த ஒரு விடயத்தை அவர் சுட்டிக்காட்டினார். பலாலி முகாமை அண்டிய பகுதிகளில் படையினரால்  விடுவிக்கப்பட்ட காணிகளில் ஒரு பகுதியில் தமிழ்மக்கள் இன்னமும் மீளக்குடியமரவில்லை என்பதை சுட்டிக்காட்டிப் பேசிய மேற்படி படை அதிகாரி தமிழ் மக்கள் காணிகளை விடுவிக்குமாறு கோரி ஒருபுறம் போராடுகிறார்கள். இன்னொருபுறம் விடுவிக்கப்பட்ட காணிகளில் குடியமரவில்லை என்ற தொனிப்பட உரையாற்றியிருக்கிறார். இதைச்சுட்டிக் காட்டிய மேற்சொன்ன சமயப் பெரியார் இக்காணிகளில் பெரும்பாலானவை புலம்பெயர்ந்த தமிழ் மக்களுக்குரியவை என்றும் அதனால்தான் அங்கே மீளக்குடியேற்றம் நடக்கவில்லை என்றும் கூறினார்.

அப்பொழுது அவரிடம் நான் சொன்னேன் “ஒருபுறம் யாழ்ப்பாணத்தில் குறிப்பிடத்தக்க அளவுக்கு காணியற்ற மக்கள் இருக்கிறார்கள். சாதி ஒடுக்குமுறைக்கும் நில உடமைக்கும் தொடர்பு உண்டு. தாயகத்தை அரசாங்கம் ஆக்கிரமிக்கிறது என்று கூறும் தமிழ்தேசிய தரப்புக்கள் அதாவது நில ஆக்கிரமிப்பு குறித்து பேசும் தமிழ் தேசியதரப்புகள் தமது சமூகத்திற்குள்ளேயே நிலமற்ற மக்களைக் குறித்து பெரியளவில் உரையாடுவது இல்லை. குறிப்பாக மக்கள் மீளக்குடியேறாத பெரும்பாலான காணித் துண்டுகள் புலம்பெயர்ந்த தமிழ் மக்களுக்குரியவை. இந்த நிலத் துண்டுகளை அவர்கள் தாமாக விரும்பி நிலமற்ற ஏழைகளுக்கு வழங்கலாம். உதாரணமாக இந்திய சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில் வினோபா உருவாக்கியது போன்ற பூமிதான இயக்கம் ஒன்றை உருவாக்கி இது தொடர்பில்செயற்படலாம்தானே? என்று.

இது நடந்து சில மாதங்களின் பின் உலகப்புகழ் பெற்ற ஆங்கில எழுத்தாளரான மைக்கல் ஒண்டாச்சி யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தார். அவரை அழைத்துக் கொண்டு என்னிடம் வந்த யாழ்.பல்கலைக்கழக நுண்கலைத்துறையைச் சேர்ந்த கலாநிதி சனாதனன் என்னிடம் கேட்டார் “ஊர்காவற்றுறையை சுற்றி பார்க்க விரும்புகிறார் நீங்களும் வாருங்கள்” என்று. மூவரும் ஊர்காவற்றுறைக்கு போனோம் இலங்கைத் தீவிலேயே ஆட்களற்ற வீடுகளை அதிகமாகக்கொண்ட ஒரு பகுதியாக தீவுப்பகுதியைக் கூறலாம்.

குறிப்பாக ஊர்காவற்றுறையில் மேல் நடுத்தர வர்க்கம் மற்றும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பெரும்பாலான வீடுகள் ஆட்கள் இன்றி புதர்மண்டி காணப்படுகின்றன. அந்த வீடுகளை சுட்டிக்காட்டி மைக்கல் ஒண்டாச்சி என்னிடம் கேட்டார் “இந்த வீடுகளின் உரிமையாளர்கள் எங்கே” என்று. நான் சொன்னேன் “இது ஆதித் தமிழ்க்கத் தோலிக்கம் அதிகம் செழிப்பாக காணப்பட்ட ஒரு பிரதேசம். ஒரு காலம் இப்பகுதி அதாவது ஊர்காவற்றுறை தேவாலயங்களின் நகரம் என்று அழைக்கப்பட்டது. ஆனால் இப்பொழுது அது ஆட்களற்ற வீடுகளின் நகரமாக மாறிவிட்டது. இந்த வீடுகளின் சொந்தக்காரர்கள் புலம் பெயர்ந்து விட்டார்கள் அல்லது தொழில் மற்றும் கல்வி வாய்ப்புக்களைத்த் தேடி யாழ் நகரை நோக்கி இடம் பெயர்ந்து விட்டார்கள்” என்று.

“அவர்களில் அநேகர் வசதியானவர்கள். கொழும்பிலும் யாழ். நகரப்பகுதியிலும் அல்லது உலகின் பல பாகங்களிலும் அவர்களுக்கு வசிப்பிடங்கள் உண்டு. எனவே அவர்கள் பெரும்பாலும் திரும்பி வர வாய்ப்புகள் இல்லை”என்று. இது தீவுப்பகுதியில் இருக்கக்கூடிய பெரும்பாலான தீவுகளுக்கு பொருந்தும்.

இது நடந்து சில மாதங்களின் பின் நோர்வேயில் வசிக்கும் நண்பர் ஒருவரின் தந்தையார் இறந்தபொழுது நான் சாவீட்டுக்குப் போயிருந்தேன். நண்பர் ஊர்காவல்துறையில் உள்ள மெலிஞ்சிமுனை கிராமத்தைச் சேர்ந்தவர். தந்தையின் சாவு வீட்டுக்கு அவரும் வந்திருந்தார். சாவு வீடு கரம்பன் பகுதியில் பிரதான சாலைக்கு அருகே உள்ள ஒரு வீட்டில் இடம்பெற்றது. மெலிஞ்சிமுனை கிராமம் பெருமளவுக்கு இடம்பெயர்ந்து கரம்பன் பகுதிக்கு வந்து விட்டது. அங்கே நண்பர்களோடு உரையாடிக் கொண்டிருந்த பொழுது இப்பொழுது புலம்பெயர்ந்து வாழும் மற்றொரு மெலிஞ்சிமுனை கிராமத்தைச் சேர்ந்தவர் கூறினார்…

கரம்பன் பகுதியில் உள்ள வீடுகளை காணிகளை நாங்கள் வாங்க முயற்சிக்கிறோம். ஆனால் வீட்டின் உரிமையாளர்கள் அவற்றை விற்க தயாரில்லை. சாதி ஒரு காரணம். காணி உறுதிகளை பங்கு தந்தையிடம் அல்லது திருச்சபையைச் சேர்ந்தவர்களிடம் ஒப்படைத்து விட்டார்கள். ஆனால் திருச்சபை அந்த காணிகளை பெரும்பாலும் பராமரிப்பதில்லை. புதர் மண்டி கிடக்கும் இந்தக் காணிகளை பராமரிப்பதற்கும் அக்காணிகளில் தற்காலிகமாகத் தங்கி இருக்கும் வெளிக் கிராமங்களைச் சேர்ந்த மக்களை அனுமதிக்கும் வீட்டு உரிமையாளர்கள் காணிகளையும் வீடுகளையும் அந்த ஏழைகளுக்கு விற்பதற்கு தயாரில்லை” என்று சொன்னார்.

இதே பிரச்சினை புங்குடுதீவிலும் உண்டு. ஒரு காலம் சாதிரீதியாக தாழ்த்தப்பட்ட மக்கள் இப்பொழுது மேற்படி ஆட்களற்ற வீடுகளில் தற்காலிகமாக வசித்து வருகிறார்கள். ஆனால் அந்த வீடுகளை அவற்றின் உரிமையாளர்கள் விற்பதற்கு தயாரில்லை. யாரையாவது வாடகைக்கு இருத்தி அல்லது தற்காலிகமாக இருத்தி காணிகளையும் வீடுகளையும் பராமரிக்க நினைக்கிறார்கள். ஆனால் அவற்றை மேற்படி தற்காலிக குடியிருப்பாளர்களுக்கு விற்கத் தயார் இல்லை. தற்காலிக குடியிருப்பாளர்களுக்கும் அவற்றை வாங்கும் நிதிப்பலம் இல்லை. யாழ்ப்பாணத்தில் மொத்தம் 4600 குடும்பங்களுக்கு சொந்தக் காணி இல்லை. வடபகுதி முழுவதும் மொத்தம் 10000 குடும்பங்களுக்கு சொந்தக் காணிஇல்லை.

ஒரு புறம் தமிழ்மக்கள் நில ஆக்கிரமிப்பு பற்றிப் பேசுகிறார்கள். அனைத்துலக மெய்நிகர் சந்திப்புக்களை நிகழ்த்துகிறார்கள். ஆனால் தேசிய விடுதலை என்பது சமூக விடுதலையையும் உள்ளடக்கியது தான் என்ற அடிப்படையில் சிந்தித்து நிலமற்ற மக்களுக்கு நிலத்தையும் வீடற்ற மக்களுக்கு வீடுகளையும் வழங்குவதற்கு எத்தனை பேர்தயார்?

இது தொடர்பில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களை ஊக்குவித்து காணிகளையும் வீடுகளையும் தேவைப்படும் மக்களுக்கு வாங்கி கொடுப்பதற்கு உரிய ஒரு நிறுவனக் கட்டமைப்பு தமிழ் மக்கள் மத்தியில் கிடையாது. நிலத்துக்காகபோராடும் தமிழ் மக்கள் தனது சமூகத்திற்கு உள்ளேயே வாழும் நிலமற்ற மக்கள் குறித்தும் சிந்திக்க வேண்டும். இல்லையென்றால் நிலத்துக்கான போராட்டம் அதன் ஆன்மாவை இழந்துவிடும்.

இக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்ட பலாலிபடைத்தளத்தின் அதிகாரி கூறிய அந்த விடயத்துக்கு திரும்ப வரலாம். அப்பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் பல தசாப்தகாலமாக வலிகாமத்திலும் வடமராட்சியிலும் உள்ள நலன்புரிநிலையங்களில் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களில் ஒரு பகுதியினர் மீளக் குடியமர்த்தப்பட்டு விட்டார்கள். 1200 குடும்பங்கள் இன்னமும் மீளக்குடியமரவில்லை. இதில் 300 குடும்பங்களுக்கு சொந்தமாக நிலம் இல்லை. அதாவது நாலில் ஒரு பகுதியினர்.அவர்கள் இடப்பெயர்வுக்கு முன்பு யாருடையதோ காணிகளில் கூலி உழைப்பாளிகளாக வாழ்ந்தார்கள். இடப்பெயர்வின் பின் இப்பொழுது முகாம்களை அண்டிய பகுதிகளில் தமது தொழில் துறைகளை விருத்தி செய்து கொண்டு விட்டார்கள்.

தவிர அவர்களுடைய பிள்ளைகள் வளர்ந்து படித்து அப்பகுதிகளிலேயே தொழில் தேடிக்கொண்டுவிட்டன. திருமணம் செய்துவிட்டன. எனவே தாம் வேர் விடாத ஒரு நிலப்பகுதிக்கு திரும்பிச் செல்ல இந்த மக்கள் தயாரில்லை. தாம் பல தசாப்தங்களுக்கு முன்பு வாழ்ந்த நிலத்துண்டுகளை தமது பூர்வீக பிரதேசம் என்றோபாரம்பரிய தாயகம் என்றோகூறுமளவுக்கு அவர்களுக்கு அது சொந்தமாகவும்இல்லை. அது குறித்து வேரோடிய நினைவுகளும் இல்லை. இந்நிலையில் தங்களுக்கென்று ஒரு துண்டுக்காணியும் இல்லாத ஓர் இடத்துக்கு அவர்கள் ஏன் திரும்பி போக வேண்டும்?

இதனால்தான் அந்த மக்கள் மீளக்குடியமர விருப்பமின்றி தற்காலிக முகாம்களில் தொடர்ந்தும் இருக்கிறார்கள். அரசாங்கம் காணிகளை வாங்குவதற்கென்று நாலு லட்சம் ரூபாய்களை உதவியாக கொடுக்கிறது. ஆனால் ஆகக் குறைந்தது எட்டு லட்சம் ரூபாய் அதற்கு தேவை என்று ஒரு கணிப்பு உண்டு.

இதுவிடயத்தில் குறைந்தபட்சம் நிதிரீதியாக அந்த மக்களை பலப்படுத்தி மீளக் குடியமர்த்தும் திட்டங்கள் எவையும் தமிழ்த்தரப்பிடம் கிடையாது. இது குறித்து சிந்தித்து செயல்படும் தொண்டு நிறுவனங்களோ அல்லது அரசு சார்பற்ற நிறுவனங்களோ செயற்பாட்டு நிறுவனங்களோ தமிழ் மக்கள் மத்தியில் கிடையாது.

வவுனியாவை மையமாகக் கொண்டியங்கும் மாற்றம் நிறுவனம் 2015ஆம் ஆண்டு ஆங்கிலத்திலும் தமிழிலும் வெளியிட்ட நிலமும் நாமும் என்ற ஆவணநூலில் இது தொடர்பில் அறிக்கையிட்டிருகிறது. சிலகிழமைகளுக்கு முன்பு ஓக்லாண்ட் நிறுவனம் வெளியிட்ட ஆவணத்துக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தாயகத்தில் வெளியிடப்பட்ட ஆவணத் தொகுப்பு அது. மதநிறுவனங்களிடம் உள்ள காணிகளை காணியற்ற மக்களுக்கு வழங்கலாம் என்றும் அதில் கூறப்பட்டிருகிறது. அந்தநூலையும் விக்னேஸ்வரனே வெளியிட்டுவைத்தார். அதைப்பற்றி தினக்குரலில் 2015 டிசம்பரில் நான் ஒரு கட்டுரையும் எழுதியிருந்தேன்.

மேற்கண்டவற்றை தொகுத்துப்பார்த்தால் ஒரு தெளிவான சித்திரம் கிடைக்கிறது. தாயகம் குறித்தும் நிலம் குறித்தும் நில அபகரிப்பு குறித்தும் பேசும் தமிழ்தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட தரப்புக்களிடம் சமூக விடுதலை குறித்து பொருத்தமான செயல் பூர்வதரிசனங்கள் இல்லை என்பதே அது. தேசியம் என்பது ஒரு மக்கள் கூட்டத்தை பெரிய திரளாக கூட்டிக்கட்டுவது. எந்த அடிப்படையில் அவ்வாறு மக்களைத் திரள்ஆக்குவது?

இனத்தின் பெயராலோ மொழியின் பெயராலோ ஒடுக்குமுறயின் பெயராலோ மட்டுமல்ல பாரம்பரிய தாயகத்தின் பெயரால் ஒரு மக்கள் கூட்டத்தை திரட்டிக்கட்டுவது என்றால் அந்த தாயகத்தில் அந்த நிலத்தில் அவர்களுக்கு வேர் இருக்க வேண்டும். சொந்தக் காணி இருக்க வேண்டும். பாரம்பரிய தாயகம் என்பது நிலத்தில் வேரோடிய கூட்டு நினைவுதான். அதை தமிழ்த்தேசிய தரப்புக்கள் உறுதிப்படுத்த வேண்டும். தாயகம் என்று சொல்லிக்கொண்டு ஒரு துண்டு நிலம் கூட இல்லாத ஒரு தொகை மக்களை நலன்புரிநிலையங்களில் வைத்துக் கொண்டு நில அபகரிப்பு பற்றிப்பேசுவதில் அர்த்தமில்லை.

எனவே புலம்பெயர்ந்த தமிழ் மக்களையும் ஒன்றிணைத்து ஆளற்ற வீடுகளையும் பூதம் காக்கும் காணிகளையும் நிலமற்ற மக்களுக்கு வழங்க உடனடியாக ஒரு திட்டம் உருவாக்கப்பட வேண்டும்.

இக்கட்டுரையின் முதலாவது பகுதியில் நிலம் தொடர்பான உரையாடல்களில் புலம் பெயர்ந்த தமிழ் மக்களின் பங்களிப்பு குறித்து பார்த்தோம். இப்பொழுது இரண்டாவது பகுதியில் பேசப்படும் தாயகத்தில் நிலமற்ற மக்கள் விடயத்திலும் புலம் பெயர்ந்த தமிழ்த்தரப்பு அதிகரித்த பங்களிப்பை செய்ய வேண்டியிருக்கும். என்றால் அவர்களுடைய காணிகளும் வீடுகளும்தான் புதர் மண்டிக்கிடக்கின்றன. ஆளற்ற தீவுகளில் ஆலயங்களை கட்டுவதற்கும் புனரமைப்பதற்கும் கோடிக்கணக்கான ரூபாய்களை கொட்டும் புலம் பெயர்ந்த தமிழ்மக்கள் தாயகத்தை உயிருள்ள விதத்தில் கட்டியெழுப்ப நிலமற்ற மக்களுக்கு நிலத்தையும் வீடுகளையும் வழங்க முன்வரவேண்டும்.

தீவுப்பகுதியில் மட்டுமில்லை யாழ்ப்பாணத்தின் பல குக்கிராமங்களில் ஆளற்ற வீடுகளையும் உரிமையாளர் இல்லாத காணிகளையும் காணமுடியும். இது தொடர்பில் சரியான புள்ளிவிபரங்கள எவையும் தமிழ் தொண்டு நிறுவனங்களிடம் இல்லை. ஏன் அதிகம் சொல்வான் ஒன்றிணைக்கப்பட்ட ஒரு பலமான தமிழ் தொண்டு நிறுவனமே தமிழ் மக்கள் மத்தியில் கிடையாது.

ஆயுதப்போராட்டத்தின் தொடக்க காலகட்டங்களில் தமிழ் அகதிகள் புனர்வாழ்வு கழகம் இருந்தது. காந்தியம் இருந்தது. காந்தியத்துக்கும் ஆயுதப் போராட்டத்திற்கும் இடையிலான துரதிர்ஷ்டவசமான தொடர்பு காரணமாக அந்த இயக்கம் பின்னர் அழிக்கப்பட்டுவிட்டது. ஆனால் வவுனியா மாவட்டத்தில் குறிப்பாக எல்லையோரங்களில் காந்தியம் முன்னெடுத்த குடியேற்ற முயற்சிகள் மகத்தானவை. வவுனியாவை ஒரு தமிழ் தேர்தல் தொகுதியாக பலமாக பேணுவதற்கு காந்தியம் முன்னெடுத்தகுடியேற்ற முயற்சிகளும் ஒரு காரணமே. எனவே காந்தியத்தை போன்ற நிறுவனங்களை மீள உயிர்ப்பித்து வினோபா சிந்தித்ததை போலவோ அல்லது புதிய நிலைமைகளுக்கு ஏற்ப புதிதாக சிந்தித்தோ நிலமற்ற தமிழர்களுக்கு நிலத்தையும் வீடுகளையும் வழங்கும் ஒரு நிறுவனமயப்பட்ட சிந்தனை அவசியம். தேசத்தைக் கட்டியெழுப்புவது என்பது பிரயோகத்தில் அதுதான்.
 

https://globaltamilnews.net/2021/158879/

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.