Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் இந்தியா: சீமான் பேட்டி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் இந்தியா: சீமான் பேட்டி

seeman-interview  

நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் வீட்டின் மாடியில் உள்ள அவருடைய அலுவலகமானது நூலகத்தின் ஒரு பகுதியாக அமைக்கப்பட்டிருக்கிறது. பிரச்சாரத்துக்குச் சென்றிருந்த சீமான், வீடு திரும்புவதற்காகக் காத்திருந்த நேரத்தில் நூலகத்தைப் பார்வையிட முடிந்தது. சங்கத் தமிழ் இலக்கியங்கள், பண்டைத் தமிழர் வரலாற்று நூல்கள் தொடங்கி நவீன இலக்கியங்கள், சூழலியல் நூல்கள் வரை விரிவான தொகுப்புகள் அடுக்கப்பட்டிருக்கின்றன. அண்ணாவின் வரலாற்றைப் பேசும் ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல் ஓரிடத்தில் தென்பட்டபோது, எடுத்துப் பிரித்துப் பார்த்தேன். குறிப்புகள் நிமித்தம் பக்கங்களின் ஓரங்கள் ஆங்காங்கே மடிக்கப்பட்டிருக்கின்றன. நம்மாழ்வார் நூல்களைப் பிரித்தபோது நிறைய அடிக்குறிப்புகளைக் காண முடிந்தது. ப.சிங்காரம் எழுதிய ‘புயலிலே ஒரு தோணி’ வாசிப்பில் இருக்கும் அறிகுறிகளுடன் வைக்கப்பட்டிருந்தது. மேஜையில் உள்ள ‘ஜென் கதைகள்’ நூலில் மடிக்கப்பட்டிருந்த பக்கத்திலுள்ள கதையை சீமானுடைய ஒரு பேச்சில் கேட்டது நினைவுக்கு வருகிறது. சீமான் வந்துவிட்டார்.

ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் வாசிப்பீர்கள்?

 

சாதாரண நாட்கள்ல காலையில் இரண்டு மணி நேரம் வாசிப்பேன். வாசிப்பைத் தவறவிடக் கூடாதுங்கிறதுக்காகவே மாலையில்தான் உடற்பயிற்சின்னு வெச்சுக்கிட்டேன். வருஷத்தில் சில நாட்கள் முழுக்க உட்கார்ந்துடுவேன். கணக்கு வழக்கில்லாமல் அப்போ வாசிப்பேன்.

இப்போது யாரை அதிகம் வாசிக்கிறீர்கள்?

அதிகம் எஸ்.ராமகிருஷ்ணன் புத்தகங்களை வாசிக்கிறேன். அவர் எங்க ஊர் பக்கம்கிறதாலோ என்னவோ ரொம்ப நெருக்கமா அவரோட எழுத்துகள் இருக்குது. அம்பேத்கர், நம்மாழ்வார் எழுத்துகளை அடிக்கடி எடுத்து வாசிப்பேன். என்னோட பழக்கம் என்னன்னா, இந்தப் புத்தகத்துல பத்துப் பக்கம், அந்தப் புத்தகத்துல பத்துப் பக்கம் அப்படின்னு வாசிப்பேன்; ஒரே புத்தகத்தோடு முழுசா உட்காருவது கிடையாது. நமக்கு ஒண்ணும் தெரியலைங்கிறதுதான் படிக்கப் படிக்கத் தோணுது. யாருக்கும் குறைவில்லாம நம்மாளுங்க சிந்திச்சுருக்காங்க, எழுதியிருக்காங்க. ஆனா, இந்த இனம் இப்படி அதிகாரம் அற்று இருக்குங்கிறதுதான் வரலாற்று முரணா இருக்கு.

ஒவ்வொரு இனமும் காலம் நெடுகிலும் மாறிவரும் அரசியல் சூழல்களுக்கு ஏற்ப தன்னுடைய சிந்தனைகளையும் போக்குகளையும் புதுப்பித்துக்கொண்டே வருகிறது. தமிழ்த் தேசிய அரசியலுக்கு இங்கே குறைந்தது நூறாண்டு அரசியல் வரலாறு இருக்கிறது. ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்று பேசிய பெரியாரும், அண்ணாவும் பிற்பாடு ‘திராவிட நாடு’என்று பேசலானதும், பின்னர் இந்தியக் கூட்டாட்சியில் மாநில சுயாட்சியை முன்னிறுத்திப் பேசலானதும் சமரசங்கள் மட்டும் அல்ல; அடுத்தடுத்த கட்டப் பரிணாமங்கள். உங்களுடைய ‘நாம் தமிழர் கட்சி’யின் இலக்கு என்ன? கடைசியாக அண்ணா விட்டுச்சென்ற கூட்டாட்சி எனும் புள்ளியின் தொடர்ச்சியா அல்லது தமிழ்த் தேசிய அரசியலின் தொடக்கப் புள்ளியான தனிநாடு கனவா?

தனி நாடு அல்லது கூட்டாட்சி அதுஇதுன்லாம் நான் பேசப்போறதில்லை. என் இனத்துக்குத் தேவை அதிகாரம். பல்லாயிரம் ஆண்டுகளா இது தமிழ்த் தேசம்தான்; இந்தியாங்கிற நாடு எழுபது ஆண்டுகளுக்கு முன்பு எழுந்து உருவாவதற்கு முன்னாடியும் இது தமிழ்த் தேசம்தான்; இப்போதும் தமிழ்த் தேசம்தான். ஆட்சியாளர்கள் யாருங்கிறதை விடுங்க. இந்தியாங்கிறதே பல நாடுகளோடு ஒன்றியம்தானே! ‘யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் அமெரிக்கா’ மாதிரி ‘யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் இந்தியா’. அப்படிச் செய்வோம்! ‘மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் தன்னாட்சி’ என்பது அண்ணா முன்வைத்த முழக்கம். எல்லா தேசிய இனங்களுக்கும் அதுதான் சரி. இப்போதுள்ள ஆட்சிமுறையில மாநில உரிமைகள் பறிபோய்க்கிட்டே இருக்கு. வட இந்தியர்கள்தான் நாட்டின் முதன்மை அமைச்சர்களாக ஆக முடியும்ங்கிற சூழல் போதாதா, இங்குள்ள அக்கிரமச் சூழலைச் சொல்ல? இந்த நிலை மாற்றப்படணும். என் மக்களுக்கும் அதிகாரம் வேணும். இதைத்தான் நான் பேசுறேன்.

சரி, நீங்கள் முன்னெடுக்கும் ‘நாம் தமிழர்’அரசியலிலுள்ள ‘தமிழர்கள்’யார்?

தமிழைத் தாய்மொழியாகவும் வாய்மொழியாகவும் கொண்டு வாழ்கிறவன் எவனோ அவன்தான் தமிழன். என் நிலத்தை நான் ஆள்வேன். தகப்பன் என்னைப் பெத்தவனாக இருக்கணும்; தலைவன் என் ரத்தவனாக இருக்கணும். என் மொழி புரியாதவன் எனக்கு இறைவனா இருக்க முடியாது; என் வலி உணராதவன் எனக்குத் தலைவனா இருக்க முடியாது. இதுதான் எங்க வரையறை.

தன் வாழ்வையே சமகாலத் தமிழுக்கு அர்ப்பணித்து, ஓர் அகராதியை உருவாக்கிய க்ரியா எஸ்.ராமகிருஷ்ணன் பூர்வீகத்தால் ஒரு தெலுங்கு பிராமணர். இப்படி இந்த மண்ணுக்கு வந்து தமிழோடும், தமிழ்ச் சமூகத்தோடும் கரைத்துக்கொண்டவர்களை நாம் எப்படி வரையறுக்கப்போகிறோம்?

ஐயாவுடைய பணி வணக்கத்துக்குரியது. வணங்குவோம். ஆனா, ஏன் அவரை நீங்க இனம் மாத்துணும்னு ஆசைப்படுறீங்க? ஜி.யு.போப் இங்கே வந்து தேவாரத்தை, திருக்குறளை மொழிபெயர்த்தார். அதுக்கு அவரை மதிக்கலாம், சரி; ஏன் நம் நாட்டையே ஆளக்கொடுக்கணும்? ஒரு தோப்பு இருக்கு; நூத்துக்கணக்கான மாமரங்களைக் கொண்ட மாந்தோப்பு. அங்கே பத்து பலாமரமும் இருக்கு. ரொம்பக் காலமா அந்தத் தோப்பிலேயே இருக்கிறதால அந்தப் பலா மரங்களுக்கெல்லாம் பேரு மாமரம்னு மாத்திடுவீங்களா? யாராவது இந்தச் சமூகத்துக்கு வந்து சேவை செய்றாங்கன்னா மதமாற்றம் செய்ய மாட்டோம்தானே; ஏன் இனமாற்றம் செய்யணும்? உலகத்துல தமிழர்கள் இல்லாத நாடு இல்லை; அதனால, அங்கே அவங்க இனம் மாறிடுதா, இல்லை எல்லா நாடுகள்லேயும் ஆட்சித் தலைமையை அவங்க கையில ஒப்படைச்சுடுறாங்களா? எல்லா இன மக்களும் இங்கே மகிழ்ச்சியா வாழட்டும்; ஆனா, நம் தமிழ் இனத்தைத் தமிழர்கள்தான் ஆளணும். ஒருத்தர் மலையாளி, தெலுங்கர், கன்னடர் யாராகவும் இருக்கட்டும்; அவங்க அடையாளம், கலை, பண்பாட்டோடு வாழட்டும்; நமக்கு அவங்க சகோதர இனம்; பொண்ணு கொடுத்துப் பொண்ணுகூட எடுத்துப்போம். ஆனா, நம்ம இனத்தைத் தமிழர்கள்தான் ஆளணும். உலகம் முழுக்க இப்படித்தானே இருக்கு தம்பி? இங்கே தமிழ்நாட்டை மட்டும் ஏன் வெளியாட்களுக்கு எழுதிக்கொடுக்கணும்னு நெனைக்கிறீங்க? இதைக் கேட்டா, ‘சீமான் ஒரு பாஸிஸ்ட், சீமான் ஒரு சாவனிஸ்ட்!’ என்னை விடுங்க. ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் இப்போ முழிச்சுகிடுச்சு. இனியும் அதை ஏமாத்தவே முடியாது!

உங்கள் மேஜையில் இருந்த உங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையைப் பார்த்தேன். நீங்கள் முதல்வரானால் என்று கூறப்பட்டுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றும் அதிகாரம் அமெரிக்க அதிபர் பதவியில் அமருபவருக்குக்கூட இருப்பதாகத் தெரியவில்லை. உங்களுக்குத் தெரியும், கடந்த கால வரலாற்றைவிடவும் சமகாலப் பொருளாதாரமே அதிகம் அரசியலைத் தீர்மானிக்கும் வல்லமை பெற்றது. உலகமயமாக்கலும் தாராளமயமாக்கலும் உலக நாடுகளில் ‘அரசு’ எனும் அமைப்பின் எல்லையையே சுருக்கிவிட்டிருக்கும் காலகட்டத்தில் வாழ்கிறோம். இது உலகளாவிய எதார்த்தம்.சமகால நிதர்சனங்கள், நமக்குள்ள சாத்தியங்கள், வரையறைகள் இவற்றையெல்லாம் உணர்ந்துதான் பேசுகிறீர்களா? ஒரு தலைமுறையையே எதார்த்தத்துக்கு அப்பாற்பட்ட திசை நோக்கி இழுக்கிறீர்களா?

எது ஒண்ணுமே சாத்தியத்திலிருந்து பிறப்பது கிடையாது, தேவையிலிருந்துதான் பிறக்குது. என்னுடைய அரசியலும் அப்படித்தான். இது தமிழ் மக்களின் தேவையிலிருந்து பிறப்பது. சீமான் பிறந்தது காலத்தின் தேவை. நான் புரட்சியாளன். அடிப்படை மாற்றம், அமைப்பு மாற்றம், அரசியல் மாற்றம்னு பேசுறேன். அப்படின்னா எல்லாத்தையும் புரட்டிப்போடுறதுதான். பொருளாதாரம்தான் அரசியலை உந்தித்தள்ளுங்கிறது எனக்கும் தெரியும். ஆனா, இன்னைக்கு நாம ஏத்துக்கிட்டிருக்கிற பொருளாதாரக் கொள்கை சரியானதா? ஒரு நாட்டையே சந்தையாக்குறது எப்படிச் சரியாகும்? சந்தையில் வாழ்க்கை நடக்குமா, வர்த்தகம் நடக்குமா? ஜே.சி.குமரப்பா பேசினதை நான் பேசுறேன். ஆண்டொன்றுக்கு அம்பது லட்சம் கார் ஏற்றுமதி செய்றோம்கிறதை சாதனையா பேசுறோம். ஒரு டன் எடையுள்ள காரை உற்பத்திசெய்ய நாலரை லட்சம் லிட்டர் தண்ணீர் வேண்டும்; நீ காரை ஏற்றுமதி செஞ்சுட்டு வெங்காயம், பருப்பை இறக்குமதி செய்றே! கண்ணுக்குத் தெரியாத மறைநீரை நீ கணக்கிடவே இல்லை. அதனால, சந்தைப் பொருளாதாரத்தை ஏத்துக்கிட்ட ஒரு நாட்டின் தலைவன் உள்நாட்டு, வெளிநாட்டு முதலாளிகளுக்குத் தரகனாக இருந்து சேவைசெய்யும்போது அவன் வரையறைக்கு உட்பட்டு பேசலாம். நான் எல்லாத்தையும் மாத்தணும்னு நெனைக்கிறேன். மக்களும் முடிவெடுத்துட்டா எல்லாம் மாறிடும். இன்னைக்குத் தனியா கத்துறேன், இப்பவே சித்தராமையா நான் பேசுறதைப் பேசுறார். நாளைக்கு முதலமைச்சரா ஆயிட்டேன்னா, ஜெகன்மோகன் ரெட்டியும் பினராயி விஜயனும் என்னோட சேர்ந்துக்குவாங்க, அப்புறம் மம்தா, இப்படி வரிசையா எல்லாரையும் சேர்த்துக்கிட்டு சண்டை செய்வோம்; எல்லாத்தையும் மாத்த வேண்டியதுதான்.

தமிழ்த் தேசியம் பேசும் குழுக்கள் வெறும் அழுத்தக் குழுக்களாகவே சுருங்கிவிடுவதற்கான காரணம், எதார்த்தத்துக்கு அப்பாற்பட்ட அவற்றின் அணுகுமுறை. உங்கள் இயக்கமும் அதே திசை நோக்கித்தான் செல்கிறது என்பதை உணர்கிறீர்களா?

அதெல்லாம் இல்லை. சரியான காலத்துல சரியான ஆட்கள் சரியான இடத்துல இல்லாமப்போனதுதான் இதுவரைக்கும் தமிழ்த் தேசிய இயக்கங்கள் ஆட்சியதிகாரத்தில் அமராத நிலைக்குக் காரணம். இப்போ அது சரியா அமைஞ்சுருக்கு. என் ஆட்டத்தை நின்னு கவனிங்க. அப்புறம் தீர்ப்பு எழுதுங்க. எங்களோட கொள்கை ஜெயிக்கிறதைப் பேசுறது இல்லை; சரியானதைச் செய்றது! பெண்ணுரிமை பேசுற கட்சியில எதுவாச்சும் இங்கே சரிபாதி தொகுதிகளை இந்தத் தேர்தல்ல பெண்களுக்குக் கொடுத்திருக்கா? வேணாம், மூன்றுல ஒரு பங்கு தொகுதியையாவது கொடுத்திருக்கா? நான் சரிபாதி கொடுத்திருக்கேன். இப்படி சமூகரீதியா பிரதிநித்துவம் கொடுத்திருக்கிறதையும் நான் பட்டியலிட முடியும். புதிய யதார்த்தத்தை நீங்க பார்ப்பீங்க!

பலர் ‘பாஜகவின் பி டீம்’ என்று உங்கள் இயக்கத்தை வர்ணிக்கிறார்கள். அதாவது, திராவிட இயக்கத்தைப் பலவீனப்படுத்த வந்தவர் நீங்கள் என்கிறார்கள். இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

யாரு, திமுககாரன்தான் அப்படிச் சொல்றான். நான் சொல்றேன், எந்தக் காலத்துலேயும் என்னோட இயக்கம் எந்தத் தேசியக் கட்சியுடனும் கூட்டணி அமைக்காது. என்னைப் பொறுத்த அளவில் காங்கிரஸ் என் தமிழினத்தின் விரோதின்னா, பாஜக ஒட்டுமொத்த மனித குலத்துக்குமே விரோதி. இதைத் திமுகவால சொல்ல முடியுமா?

உங்கள் பேச்சைக் கேட்க ஒரு பெரிய இளைஞர் கூட்டம் கூடுவதைக் காண முடிகிறது. தனிப்பட்ட முறையில் அவர்களோடு பேசுகிறீர்களா? என்ன எதிர்பார்க்கிறார்கள்?

பேசுறேன், அவங்க மாறுதல் வேணும்னு நெனைக்கிறாங்க. உலக நாடுகளோட தானும் தமிழ்நாடும் எங்கே இருக்கோம்னு ஒப்பிடறாங்க. தமிழனுக்கு அதிகாரம் வேணும்; அப்படின்னா டெல்லியில உள்ள அதிகாரமும் நிர்வாகமும் உடைஞ்சு பரவலாகணும்னு கருதுறாங்க. இதுக்கெல்லாம் நான் பேசுற அரசியல்தான் சரின்னு நம்புறாங்க. அடுத்த அஞ்சு வருஷத்துல பாருங்க, என்னோட படைதான் தமிழ்நாட்டுலேயே பெரிசா இருக்கும்!

 

https://www.hindutamil.in/news/opinion/columns/654004-seeman-interview-4.html

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் கருத்து: தனி நாடு, கூட்டாட்சி என்றெல்லாம் பேசப்போவதில்லை, யுனைட்டட் ஸ்டேட்ஸ் ஆஃப் இந்தியா என்பதே சரி

2 ஏப்ரல் 2021, 02:22 GMT
சீமான், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்

பட மூலாதாரம்,NAAM TAMILAR

(இன்று 02.04.2021 வெள்ளிக்கிழமை இந்தியாவில் உள்ள சில நாளிதழ்களிலும் அவற்றின் இணையதளங்களிலும் வெளியான செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்).

இந்திய ஐக்கிய அரசுகள் என்று பொருள்படும், யுனைட்டட் ஸ்டேட்ஸ் ஆஃப் இந்தியா என்ற மாதிரிதான் இந்தியாவுக்குத் தேவை என்று சீமான் கூறியுள்ளார்.

இந்து தமிழ்திசை நாளிதழ் அவரிடம் எடுத்த நேர்க்காணலில், உங்களுடைய 'நாம் தமிழர் கட்சி'யின் இலக்கு என்ன? அண்ணா விட்டுச்சென்ற கூட்டாட்சி எனும் புள்ளியின் தொடர்ச்சியா அல்லது தமிழ்த் தேசிய அரசியலின் தொடக்கப் புள்ளியான தனிநாடு கனவா? என்று கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு "தனி நாடு அல்லது கூட்டாட்சி அது இது என்றெல்லாம் நான் பேசப்போவதில்லை. என் இனத்துக்குத் தேவை அதிகாரம். பல்லாயிரம் ஆண்டுகளாக இது தமிழ் தேசம்தான்; இந்தியா என்கிற நாடு எழுபது ஆண்டுகளுக்கு முன்பு எழுந்து உருவாவதற்கு முன்பும் இது தமிழ் தேசம்தான்; இப்போதும் தமிழ் தேசம்தான். ஆட்சியாளர்கள் யார் என்பதை விடுங்கள்.

 

இந்தியா என்பதே பல நாடுகளின் ஒன்றியம் தானே! 'யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் அமெரிக்கா' மாதிரி 'யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் இந்தியா'. அப்படிச் செய்வோம்! 'மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் தன்னாட்சி' என்பது அண்ணா முன்வைத்த முழக்கம். எல்லா தேசிய இனங்களுக்கும் அதுதான் சரி. இப்போதுள்ள ஆட்சி முறையில் மாநில உரிமைகள் பறிபோய்க் கொண்டிருக்கின்றன. வட இந்தியர்கள்தான் நாட்டின் முதன்மை அமைச்சர்களாக ஆக முடியும் என்கிற சூழல் போதாதா, இங்குள்ள அக்கிரமச் சூழலைச் சொல்ல? இந்த நிலை மாற்றப்பட வேண்டும். என் மக்களுக்கும் அதிகாரம் வேண்டும். இதைத்தான் நான் பேசுறேன்" என விடையளித்தார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்.

https://www.bbc.com/tamil/india-56612137

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.