Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! இந்தச் சித்தர்கள் யார்?

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஒழுக்கக் கேடு இன்று நேற்றல்ல. அடிநாள் தொட்டு வந்து கொண்டிருகிறது.

பாரதம் ஐந்தாம் வேதம். கோயில்களில் படிக்கப்படும் புனித நூல். அதன் கதாநாயகர்களான பஞ்ச பாண்டவர்கள் மணவினைக்கு புறத்தே பிறந்தவர்கள். குந்தியும் பாண்டுவின் இன்னொரு மனைவியான மாத்திரியும் தேவர்களோடு கூடி அவர்களைப் பெற்றெடுத்தார்கள். குந்தி மணவினைக்கு முன்னர் சூரியனோடு கூடி கர்ணனனைப் பெற்றெடுத்தாள்.

பாஞ்சாலியைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. ஐவருக்கும் ஏக பத்தினி. இது போதாதென்று கர்ணனையும் காதலித்தவள்! அதனால் என்ன? அது ஆரியரது பண்பாட்டில் பெரிய தகுதியாகக் கருதப்பட்டது. அதனால் அவள் 'அம்மன்' ஆனாள்! புத்தி இல்லாத தமிழன் இந்த அம்மனை விழுந்து கும்பிட்டான்! இப்போதும் கும்பிடுகிறான்!

பரதன் என்ற பெயரில் இருந்துதான் பாரதம் என்ற சொல் பிறந்ததாம். இந்தப் பரதன் யார்? சகுந்தலைக்கும் துஷ்யந்தனுக்கும் மணவினைக்கு புறத்தே பிறந்தவன். அதற்கு இன்னொரு பெயர் கந்தர்வ விவாகம்!

இந்த சகுந்தலை எப்படிப் பிறந்தவள்? விசுவாமித்திரனுக்கும் இந்திரலோக மேனகைக்கும் மணவினைக்கு புறத்தே பிறந்தவள்!

இந்திரலோகம் என்றவுடன் இந்திரன் நினைவு வருகிறது. முப்பத்து முக்கோடி தேவர்களின் அரசன் இவன். கவுதமமுனிவரின் பத்தினி அகலிகையை ஏமாற்றிக் கற்பளித்தவன். அதனால் அவன் ஆணுறுப்பு அறவும் அவன் உடம்பு முழுதும் ஆயிரம் யோனி தோன்றவும் கவுதம முனிவரால் சபிக்கப்பட்ட சண்டாளன்!

இராமாயணம் எழுதிய வால்மீகி ஒரு வழிப்பறிக் கொள்ளைக்காரன்.

திருமங்கை ஆழ்வார் வழிப்பறி கொள்ளை நடத்தி ஸ்ரீரங்கநாதருக்கு திருப்பணி செய்தவர். இவரே நாகபட்டினம் பவுத்த விகாரையில் இருந்த புத்தரின் தங்கச் சிலையைத் திருடி விற்று அந்தப் பணத்தில் ஸ்ரீரங்கநாதருக்கு விமான திருப்பணி செய்தவர்.

திருவாசகம் பாடிய மாணிக்கவாசகர் அரிமர்த்தன பாண்டியனது அமைச்சர். குதிரைகள் வாங்க அரசன் கொடுத்த பணத்தை கோயில் கட்டச் செலவழித்தார்.

அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான இயற்பகை நாயனார் சோழநாட்டிலே காவிரிப்பூம் பட்டினத்தில் பிறந்தவர். அடியவர் எவராயினும் எதனை விரும்பிக் கேட்டாலும் கொடுத்துவிடுவார். சிவனடியார் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டிய மனைவியை அவர் பின் அனுப்பி வைத்தார்! எதிர்த்த ஊர் மக்களை வாள் கொண்டு வெட்டிச் சாய்த்தார்! இயற்பகை என்பது நல்ல பொருத்தமான பெயர்! நம்பியாண்டார் நம்பி இயற்றிய திருத்தொண்டர் திருவந்தாதி இந்த மூட பக்தரை இப்படிப் புகழ்கிறது.

செய்தவர் வேண்டியதி யாதுங் கொடுப்பர் சிவன்தவனாய்க்
கைத்தவம் பேசிநின் காதலி யைத்தரு கென்றலுமே
மைதிகழ் கண்ணியை ஈந்தவன் வாய்த்த பெரும்புகழ்வந்
செய்திய காவிரிப் பூம்பட் டினத்துள் இயற்பகையே.


இன்னொரு நாயனார். பெயர் விசாரதருமர். மாடு மேய்ப்பவர். மண்ணியாற்றின் கரையில் மணலில் சிவலிங்கம் செய்து மேய்த்த மாடுகளில் இருந்து பாலைக் கறந்து அதற்கு நீராட்டினார். இப்படி பால் வீணாகப் போவதை கண்டு விசாரதருமரின் தந்தை எச்சதத்தன் பிள்ளையைத் தண்டித்தான். அரனார் வழிபாட்டிற்கு பங்கம் விளைவித்த தந்தையை விசாரதருமர் மழுகொண்டு இரண்டு கால்களையும் வெட்டி வீழ்த்தினார்.

உடனே சிவபெருமான் 'எனக்காக நீ உன்னைப் பெற்ற தந்தையின் கால்களை வெட்டிக் கொன்றாய். யாமே உனக்கு இனித் தந்தையாக இருப்போம்' என்று திருவாய் மலர்ந்தருளி மறைந்தார். பக்தியின் பெயரில் தந்தையை வெட்டிக் கொல்வது பாபம் அல்ல இறைகைங்கரியம் என இக்கதை கூறுகிறது!

கருவூரில் உள்ள ஆனிலை என்ற ஊரில் திருக்கோயில் ஒன்று இருந்தது. திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள சிவபெருமானை வழிபடும் சிவனடியார்களுக்கு தீங்கு இழைப்பவர்களை எதிர்த்து வீழ்த்த மழுப்படை தாங்கிய ஒருவர் இருந்தார். அவர் பெயர் எறிபக்த நாயனார்.

ஒரு நாள் ஒரு சிவனடியார் பூக்குடலையோடு திருக்கோயிலுக்கு வழிபாடு செய்ய போய்க் கொண்டிருந்தார். வழியில் சோழ மன்னனின் பட்டத்து யானையை காவிரியில் குளிப்பாட்டிவிட்டு அந்த வழியாக பாகர்கள் நடத்தி வந்து கொண்டிருந்தார்கள். யானை சிவனடியாரின் பூக்கூடையைப் பிடுங்கி பூக்களை வீதியில் சிதறியது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அந்தச் சமயத்தில் எறிபக்த நாயனார் அந்தப் பக்கம் வந்தார். நடந்ததை அறிந்து காற்றென விரைந்து சென்று தனது மழுவால் யானையின் தும்பிக்கையை வெட்டி விழுத்தினார். அடுத்து குத்துக் கோற்காரர் மூவரையும் பாகர்கள் இருவரையும் கொன்றார். வழக்கம் போல சிவபெருமான் தோன்றி இறந்தவர்களை எழுப்புகிறார். எறிபக்த நாயனார் சிறிது காலம் வாழ்ந்து திருக்கயிலையில் சிவகணங்களுக்கு தலைவரானார். கொஞ்சப் பூக்கள் கொட்டப்பட்டதாற்காக ஆறு உயிர்களை கொன்றவர் நாயனார் என்று அழைக்கப்படுகிறார். பக்தர் என்று போற்றப்படுகிறார். சிவகணங்களுக்கு தலைவர் ஆக்கப்படுகிறார்.

சிறுத்தொண்டர் என்ற நாயனார். அவரது இயற்பெயர் பரஞ்சோதி. சோழ மன்னன் அவையில் அமைச்சராக இருந்தவர். பின்னர் சிவத்தொண்டில் ஈடுபடுகிறார். அவரது மனைவி பெயர் திருவெண்காட்டு சந்தன நங்கை. இவர்களுக்கு பிறந்த பிள்ளைக்கு சீராளதேவர் என்ற பெயர் சூட்டப்பட்டது.

ஒரு நாள் ஒரு சிவனடியார் சிறுத்தொண்டர் வீட்டுக்கு வருகிறார். 'நான் வடதேசத்தை சேர்ந்தவன். நாம் ஆறு மாதத்துக்கு ஒருமுறைதான் உணவு கொள்ளும் இயல்பினோம். அன்று பசுவைக் கொன்று சமைத்து உண்பது நமது வழக்கம். இஃது உமக்கு அருமையன்றோ?' எனக் கேட்கிறார்.

'சிக்கல் இல்லை. என்னிடம் பசுக்கள் இருக்கின்றன. அதில் ஒன்றை வெட்டி கறி சமைக்கலாம்' என விடை பகர்கிறார் சிறுத்தொண்டர்.

சிவனடியார் தாம் பசு என்று குறிப்பிட்டது நரபசு. அந்த 'மெனு' எப்படி தயார் செய்ய வேண்டும் என்று விளக்கம் கொடுக்கிறார். 'சமையலுக்கு வெட்டப்படும் அந்தச் சிறுவன் ஒரு குடிக்கு ஒருவனாய் இருத்தல் வேண்டும். அவனைத் தாய் உவந்து பிடிக்க தாதையும் உவந்தே அரிதல் வேண்டும். இவ்வாறு சமையல் செய்தால் நாம் உண்போம்' என்றார்.

உணவு தயார் ஆகிறது. தலை சமையலுக்கு உதவாது என்பதால் அது விலக்கப்படுகிறது. மற்ற உறுப்புக்கள் எல்லாம் சமைக்கப்பட்டன. சோறும் ஆக்கப்பட்டது.

'நம்முடன் உணவு கொள்வதற்கு பிள்ளை இல்லையோ? அவன் இல்லாமல் நாம் உண்ணோம். அவனைத் தேடி அழைத்து வாரும்"' எனக் கட்டளை இடுகிறார் சிவனடியார்.

சிறுத் தொண்டர் செய்வதறியாது திகைத்து பின்னர் 'சீராளா ஓடி வா!' எனக் கூவி அழைக்கிறார். பள்ளியில் இருந்து ஓடி வருபவனைப் போல் சீராளன் ஓடி வந்தான்.

வழக்கம் போல சிவனடியாராக வந்த சிவபெருமான் மறைந்தருளினார். கதை முடிகிறது.

இந்த அருவருக்கத்தக்க, குப்பைக் கதையெல்லாம் வன்தொண்டர் எழுதிய திருத்தொண்டர் தொகை, நம்பியாண்டார் நம்பி எழுதிய திருவந்தாதி, சேக்கிழார் எழுதிய பெரிய புராணத்தில் இவற்றில் இருந்து எடுக்கப்பட்டவை. இந்த வகைக் கதைகள் இன்னும் ஏராளம் இருக்கின்றன.

கடவுளர்களது மகத்துவத்தை கூற பாடப்பட்டவைதான் புராணங்கள். ஆனால் கடவுள் மகத்துவத்தை நாகரிகமான முறையில், நாலுபேர் மனம் கூசாமல் படிக்குமாறு எடுத்துச் சொல்லக் கூடாதா?

தெய்வீகம், பக்தி என்ற போர்வையில் தேவையற்ற, நாகரிக்கத்துக்கு புறம்பான செயல்களை நல்ல செயல்களாகக் காட்ட இப்படியான புராணக் கதைகளை எழுதுவது சரியா?

கடவுள் தனது பக்தனை சோதிப்பதை எடுத்துக்காட்ட பிள்ளைக் கறி சேட்கும் கதை மூலம் சொல்லப்பட வேண்டுமா? வேறு வழி இல்லையா? பிள்ளைக் கறி கேட்கும் கடவுளைப் பற்றி இந்தக் காலத்து இளைஞர்கள் என்ன நினைப்பார்கள்?

பெற்ற பிள்ளையை நேர்த்தியாக அரிந்து கறி சமைக்கும் சிறுத்தொண்டரது குருட்டு பக்தி பற்றியும் அவரது மனைவியின் பதிபக்தி பற்றியும் ஒழுக்கம் ஒழுக்கக்கேடு, நற்செயல் தீச்செயல் ஆகியவற்றைப் பிரித்துப் பார்க்கும் வல்லமை படைத்தவர்கள் என்ன நினைப்பார்கள்?

வீட்டைச் தூய்மையாக வைத்திருக்க ஒவ்வொரு நாளும் பெருக்குகிறோம். பெருக்குகிற குப்பையை வெளியில் தள்ளுகிறோம். ஒவ்வொரு நாளும் குளித்து உடலில் படிந்துள்ள அழுக்கை சோப் போட்டு அகற்றுகிறோம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் இப்படி இழிவான, காலத்துக்கு ஒவ்வாத குப்பைக் கதைகளை மட்டும் ஏன் வீச மறுக்கிறோம்?

இந்தப் புராணக் கதைகள் தவறானவை, பொருளற்றவை என்று கண்டிக்காமல் அவற்றுக்கு அசட்டுச் சமாதானங்களையும் அர்த்தமற்ற தத்துவப் பேச்சுக்களையும் முரட்டு வியாக்கியானங்களையும், முரண்பட்ட பேச்சுக்களையும் மதவாதிகள் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.

நாயன்மார்கள் பற்றிச் சொன்னேன். இதோ ஒரு வைணவ ஆழ்வார் பற்றிய கதை.

இன்றைய தஞ்சை, திருச்சி இணைந்த சோழவள நாட்டில் உள்ள திருமண்டங்குடி என்ற சிற்றூரில் அவதரித்தவர் தொண்டரடி பொடியாழ்வார். இவருக்கு பெற்றோர் விப்பிரநாராயணர்' எனப் பெயரிட்டனர். இந்தப் பெயரில் ஒரு திரைப்படம் கூட வெளிவந்தது.

திருமணத்தில் விருப்பமில்லாத இவர், ஸ்ரீரங்கம் இரங்கநாதப் பெருமானையும், இரங்கநாயகி தாயாரையும் நாளும் வழிபடும் பொருட்டு அத்தக் கோயிலிலேயே தங்கி விட்டார். நந்தவனம் அமைத்து, அன்று மலர்ந்த மலர்களால் மாலை தொடுத்து, பெருமாளுக்கு நாளும் சாத்தி இறைபணி செய்து வந்தார்.

ஸ்ரீரங்கம் அருகிலுள்ளது உத்தமர்கோவில். திருமால், பிரம்மா, சிவன் இணைந்திருக்கும் தலம.; இங்கே தேவதாசி குலத்தில் பிறந்த தேவதேவி என்பவள் தன் மூத்த உடன்பிறப்புடன் வாழ்ந்து வந்தாள். அவள் ஒருமுறை ஸ்ரீரங்கம் வந்த போது, விப்பிரநாராயணரின் நந்தவனத்தைப் பார்த்து அதன் அழகில் சொக்கிப் போனாள்.

இந்த நந்தவனமே இப்படி அழகு என்றால், நந்தவனத்து சொந்தக்காரன் எவ்வளவு அழகாயிருப்பான் என எண்ணிப் பார்த்தாள். அவள் நினைத்தது போலவே விப்பிரநாராயணரும் மிக அழகாக இருந்தார். அந்த இளைஞனை எப்படியும் அடைந்தே தீருவேன் என்று அவள் முடிவு செய்தாள்.

இறைவனுக்கு சேவை செய்யும் ஒருவரை நம் போன்ற தாசிகள் தீண்டுதல் தகாது...' என்று அறிவுரை நல்கினாள் மூத்தவள். தேவதேவி அதைப் பொருட்படுத்தாமல் விப்பிரநாராயணரின் நந்தவனத்தின் நடுவேயிருந்த குடிலுக்கு காவி உடையுடன் பக்தை போல் சென்றாள். அந்த மலர் தோட்டத்தை பராமரிக்கும் பணி செய்ய அனுமதி வேண்டினாள்.

அவளது தோற்றம் கண்டு ஐயம் கொள்ளாத அப்பாவியான விப்பிரநாராயணரும் நந்தவனத்தில் தனியிடத்தில் தங்க அனுமதித்தார். அவள் செடிகளுக்கு ஒவ்வொரு நாளும் தண்ணீர் ஊற்றுதல், மலர் பறிப்பதில் உதவுதல் என விப்பிரரின் நம்பிக்கையைப் பெற்றாள். சில மாதங்கள் கடந்து விட்டன.

ஒருநாள் கடும் மழை மழையில் நனைந்தபடியே நந்தவனத்துக்குள் வந்தார் விப்பிரநாராயணர். தொப்பல், தொப்பலாக நனைந்திருந்த அவரது தலையைத் துவட்டுவது போல் நடித்து, தன்னழகால் மயக்கி வீழ்த்தினாள் தேவதேவி. இரங்கநாதர் மீது இருந்த காதல் தேவ தேவி மீதான காமம் ஆக மாறியது. அதன்பின் அவளே கதியெனக் கிடந்தார் விப்பிரநாராயணர். அவரிடமிருந்த பொருளைக் கவரும் வரை அங்கிருந்த தேவதேவி, காரியம் முடிந்ததும் உத்தமர் கோவிலுக்குப் போய்விட்டாள்.

விப்பிர நாராயணருக்கு அவளது பிரிவைத் தாங்க முடியவில்லை உத்தமர் கோயிலுக்கு அவளைத் தேடி வந்தார் ஆனால், பொருளின்றி அங்கு வர வேண்டாம் என அடித்துச் சொல்லி விட்டாள் தேவதேவி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாதி மத பேதங்களை எதிர்ப்பது நாத்திகம் அல்ல!

தன் அடியவனை மேலும் சோதிக்க விரும்பிய இரங்கநாதர் கோவிலில் உள்ள ஒரு தங்கப் பாத்திரத்தை எடுத்துக் கொண்டு தேவதேவியின் இல்லத்திற்கு ஒரு பணியாளன் வேடத்தில் சென்றார். தன் பெயர் அழகிய மணவாளன் என்றும், அதை விப்பிரநாராயணர் கொடுத்தனுப்பியதாகவும், அன்றிரவு அவர் அங்கு வருவதாகவும் கூறினார். விப்பிரரும் வழக்கம் போல் அங்கு செல்ல அவரை வரவேற்று உபசரித்தாள் தேவதேவி. அன்றிரவு அங்கே தங்க அனுமதித்தாள்.

மறுநாள் கோவிலில் தங்கப் பாத்திரம் காணாமல் போன தகவல் அர்ச்சகர்கள் மூலம் அரசனுக்கு சென்றது. ஏவலர்கள் வீடுகளைச் சோதனையிட்டனர். தேவதேவி வீட்டில் பாத்திரம் சிக்கியது. விசாரணையில் அதை அவளுக்கு விப்பிரநாராயணர் கொடுத்த தகவல் தெரிந்தது.

திருட்டுப் பாத்திரத்தை வாங்கிய குற்றத்துக்காக தேவதேவிக்கு வெறும் அபராதம் மட்டுமே விதிக்கப்பட்டது. ஆனால், திருட்டு வழக்கில் சந்தேகக் கைதியான விப்பிரநாராயணரை சிறையில் அடைத்தான் மன்னன்.

இரங்காநாதர் மன்னனின் கனவில் தோன்றி, நடந்த விபரங்களை எடுத்துரைத்தார். விப்பிரநாராயணரை விடுதலை செய்தான் மன்னன்.

அவர் மனம் திருந்தி, அடியவர்களின் பாதங்களைக் கழுவி, அத்தீர்த்தத்தைப் பருகி, இறைவனின் அருளை மீண்டும் பெற்றார். பக்தர்களுக்காக சிறிய பணிகளையும் சிரமேற்கொண்டு செய்தார். இதனால் "தொண்டரடிப் பொடியாழ்வார்' எனப் பெயர் பெற்று பல்லாண்டு வாழ்ந்து இறைவனோடு கலந்தார்.

இந்தக் கதை கற்பிக்கும் பாடம் என்ன? பக்தனின் தாசி மோகத்தை தீர்த்து வைக்க இரங்கநாதரே பணியாள் போல் வேடம் பூண்டு தங்கப் பாத்திரத்தை விப்பிரநாராயணர் கொடுத்ததாகக் தேவதேவியிடம் கொடுக்கிறார். காவி கட்டிய சந்நியாசி தாசி வீடே கதியெனக் கிடந்து உலைந்தாலும் பருவாயில்லை, அப்படிப்பட்ட ஒருவர் இரங்கநாதரிடம் பக்தி வைத்தால் போதும். அவருக்கு இந்த உலகில் சிற்றின்பமும் அடுத்த உலகில் பேரின்பமும் கிடைக்கும்.

பக்திக் கதைகளை மக்கள் படித்தால் அவர்களிடையே இறையுணர்வு பெருகும், அருள் கிடைக்கும், அன்பு மலரும், ஆணவம் ஒழியும், வீடுபேறு எளிதில் கிடைக்கும் என்கிறார்கள்.

ஆனால் எனக்கு இந்தக் கதைகளைப் படிக்க வயிற்றைக் குமட்டிக் கொண்டு வருகிறது! கடவுள் பக்தியை விளக்க வேறு கதைகள் கிடைக்கவில்லையா? நரமாமிசம் கேட்கும் கடவுள் அதனைச் சமையல் செய்து கொடுக்கும் பக்தர்; இவர்கள்தான் கிடைத்தார்களா?

இன்றைய தலைமுறையினருக்கு பக்தியின் பெயரால் இந்தக் கதைகளைச் சொல்லிக் கொடுத்தால் இந்து சமயம் காட்டுமிராண்டிகளின் சமயம் என நினைப்பார்கள். அப்படி நினைத்தால் அது அவர்கள் குற்றமல்ல.

இப்படி நான் எழுதினால் கைவிரல் விட்டு எண்ணக்கூடிய இந்து மதவாதிகள் புத்தியைத் தீட்டுவதற்குப் பதில் கத்தியைத் தீட்டுகிறார்கள். காஞ்சி சங்கராச்சாரியார் சங்கரராமனைத் தீர்த்துக் கட்டியது போல தீர்த்துக் கட்டிவிடுவோம் என மிரட்டுகிறார்கள்.

முழக்கம் நாத்திக ஏடு. நக்கீரன் நாத்திகன் என நாலாவது தமிழில் திட்டுகிறார்கள்.

எமது அக்கறை எல்லாம் எமது இனம், எமது மொழி, எமது பண்பாடு பற்றியது. எமது இனத்தை தாழ்த்த நினைப்பவர்கள், எமது மொழியை பழிப்பவர்கள், பண்பாட்டைப் இழித்துரைப்பவர்கள் எமது எதிரிகள்.

இப்படியான புராணக் கதைகள் மிகைப்படுத்தி புராணிகர்களால் எழுதப்பட்டவை. அவற்றை பெரிதுபடுத்த வேண்டியதில்லை என்று சிலர் சொல்லலாம். அது சரியாகவும் இருக்கலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

'நன்று புராணங்கள் செய்தார் - அதில்
நல்ல கவிதை பலப்பல தந்தார்
கவிதை மிகநல்ல தேனும் - அக்
கவிதைகள் பொய்யென்று தெளிவுறக் கண்டோம்
புவிதனில் வாழ்நெறி காட்டி - நன்மை
போதிக்கும் கட்டுக் கதைகள் அவைதாம்'


எனப் பாரதியார் புராணக் கதைகள் பொய்யென்று தெளிவாகச் சொல்கிறார்.

"கலையுரைத்த கற்பனையே நிலையெனக் கொண்டாடும்
கண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப் போக'


என்று இராமலிங்க அடிகள் பாடுகிறார்.

புராணக் கதைகள் கட்டுக்கதைகளே. அல்லது சிறிய அளவிலான உண்மை வரலாற்று நிகழ்ச்சிள் பல மடங்கு மிகைப் படுத்திக் கூறப்பட்டவை ஆகும். குருட்டு நம்பிக்கைகளை மூடக் கொள்கைகளை பக்தி என்ற போர்வையில் நியாயப்படுத்துவதற்கு புனையப் பட்டவை.

எடுத்துக்காட்டாக ஆரியர்களது நளாயினி கதையைக் கூறலாம். நளாயினி தனது தொழுநோய் பிடித்த கணவனை ஒரு கூடையில் வைத்து தாசி வீட்டுக்குச் சுமந்து செல்கிறாள். இது அவள் ஒரு கற்புக்கரசி என சித்தரிப்பதற்காக கட்டப்பட்ட கதை.

இராமன் மனைவி இராவணனால் கவர்ந்து செல்லப்பட்டு பல ஆண்டுகள் அசோகவனத்தில் சிறை வைக்கப்பட்டவள். இராவணனைக் கொன்று சீதையை சிறை மீட்ட இராமன் அவளை படம் விரித்த ஒரு பாம்பு போலச் சீறி எழுந்து கோபத்தோடு பார்க்கிறான்.

'ஊண்திறம் உவந்தனை, ஒழுக்கம் பாழ்பட
மாண்டிலை, முறைதிறப்(பு) அரக்கன் மாநகர்
ஆண்டுறைந்(து) அடங்கினை, அச்சம் தீர்ந்(து) இவண்
மீண்ட(து) என் நினை(வு) எனை விரும்பும்! என்பதோ?

(கம்பராமாயணம்-யுத்தகாண்டம் 966)

இராவணனை அழித்ததெல்லாம் உன்னை மீட்கும் பொருட்டு அன்று. எனக்கு நேர்ந்த பழியைத் நீக்கிக் கொள்ளும் பொருட்டே ஆகும். நீ இறந்து படு. இன்றேல் எங்கேயாவது போய்விடு என்றெல்லாம் இராமன் பித்துப் பிடித்தவன் போல் பேசுகிறான். இராமன் இறந்து படு என்று சொன்னதால் சீதை தீக்குளித்து தன் கற்பை எண்பிக்கிறாள்.

ஆனால் இன்று கற்பைப் பற்றிய மதிப்பீடு மாறிவிட்டது. கற்பென்று சொல்ல வந்தால் அது ஆண் பெண் இருவருக்கும் பொதுவில் வைக்க வேண்டும் என்ற கருத்து வேரூறின்றி விட்டது.

இன்று சீதை உயிரோடு இருந்தால் இராமனுக்கு இன்னொரு குழி வெட்டுமாறு இலக்குவனிடம் சொல்லி அதில் இராமனைத் தீக் குளித்து அவனது கற்பை எண்பிக்குமாறு கேட்டிருப்பாள்!

இன்று அருந்ததி இருந்தால் பரத்தமைக்கு எதிரான சட்டம் அவள் மீது பாயும். இன்று சீதை இருந்தால் தற்கொலை செய்ய முயற்சித்த குற்றத்துக்காக கைது செய்யப் பட்டிருப்பாள். தற்கொலை செய்ய தூண்டிய குற்றத்தில் இராமனும் கைது செய்யப்பட்டிருப்பான்.

வேறு விதத்தில் சொன்னால் காலம் மாறும் போது கருத்தும் மாறுகிறது. பழையன கழிந்து புதியன புகுகிறது. அது வழுவல்ல. இன்று பெண் அடிமைத்தனம் முழுமையாக இல்லாவிட்டாலும் பெருமளவு ஒழிக்கப்பட்டு விட்டது. உடன்கட்டை ஏறல், இளம்பெண் திருமணம் சட்டப்படி தடை செய்யப்பட்டுவிட்டன.

இந்து மதம் கொடிய பாபங்கள் என்று சொல்லும் கள், களவு, புலால் உண்ணல் போன்றவற்றை விலக்கும் இந்துக்கள் குறைவு. பெரிய புராணத்தை படிக்கும் அல்லது படித்த இந்துக்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அதில் சொல்லப்பட்ட கதைகள் அவர்களுக்கு முழுமையாகத் தெரியாது.

ஆனால் பிள்ளைக் கறி சமைத்துக் கொடுத்த சிறுத்தொண்டரையும் கட்டிய மனைவியை சிவனடியாரோடு அனுப்பி வைத்த இயற்பகையையும் கோயிலில் வைத்து வழிபடுகிறார்கள்.

இரணியன் பிரகலாதன் கதை எல்லோருக்கும் தெரியும். கதையைப் படியாவிட்டாலும் அதுபற்றிக் கேள்விப்பட்டிருப்பார்கள். இதுவும் திரைப்படமாக பல ஆண்டுகளுக்கு முன் வெளிவந்தது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் புராணக் கதை ஆரிய வேதமத சாத்திரங்களையும், யாகம் வளர்த்து அதில் ஆடு மாடு போன்ற உயிர்கள் பலியிடப்படுவதையும் எதிர்த்த திராவிடர்களை நாத்திகர்கள் என்று காட்டுவதற்காக எழுதப்பட்டது.

பிறப்பில் வேற்றுமைகள். ஏற்றத் தாழ்வுகள். புரோகிதம் செய்ய உயர் சாதியினருக்கே உரிமை,

இன்ன சாதியினர்தான் கடவுளை பூசிக்கலாம், சோறு படைக்கலாம், குளிப்பாட்டலாம்,

சமஸ்கிருதம் தேவ மொழி! தமிழ் நீச மொழி! தமிழ் பைஸாச மொழி, தமிழில் வழிபாடு கூடாது, காரணம் கடவுளுக்குத் தமிழ் புரியாது, தெரியாது.

சூத்திரத் .தமிழன் கோயில் பூசை செய்யக்கூடாது, அவனுக்கு புசை செய்யும் அருகதை இல்லை.

தமிழன் கட்டிய கோயிலுக்குள்ளே அவன் நுளையக் கூடாது. அந்தத் தீட்டைப் போக்க குடமுழுக்கு (கும்பாபிசேகம் ) செய்ய வேண்டும். ஆனால் தமிழில் குடமுழுக்குச் செய்யக் கூடாது, அதனை ஆகமம் அனுமதிக்காது.

இவ்வாறெல்லாம் சாத்திரங்கள் சொல்லுமேயானால் மகாகவி பாரதியார் பாடியிருப்பதைப் போல் அவை சாத்திரங்கள் அல்ல தமிழினத்துக்கு எதிரான சதியென்று சொல்வேன்.

காஞ்சி காமகோடி பீட ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் தமிழ்நாட்டில் இருந்து கொண்டு, தமிழ்க் காற்றை சுவாசித்துக் கொண்டு, காவிரித் தண்ணீரைக் குடித்துக் கொண்டு தமிழ் நீச பாஷை எனப் பகிரங்கமாக மேடைகளில் பேசுகிறார். இந்துக் கடவுளர்க்கு தமிழ் தெரியாது என்று இறுமாப்போடு சொல்கிறார்.

சந்திரமவுலீஸ்வரருக்கு பூசை செய்யும் நேரம்வரை நீச பாஷையான தமிழில் பேச மாட்டார். தமிழில் பேசுவதைத் தவிர்ப்பதற்காக மவுன விரதம் இருக்கிறார்!

தலித்துகளைக் கோயிலில் அனுமதிக்கக் கூடாது என்று சொல்கிற ஜெகத் குருவும் இந்த சங்கராச்சியார்தான்.

அறுபத்து மூன்று நாயன்மார்களை சாதிவாரியாக, அந்தந்த சாதியார் அந்தந்த நாயன்மாரை வழிபட வேண்டும் என்று கூறி வருணதர்மத்தின் வேருக்கு தண்ணீர் ஊற்றுகிறவரும் இவர்தான். அதற்கு சாமரம் வீசுபவரும் இவர்தான். சாதி பேதத்திற்கு புத்துயிர் ஊட்டுபவரும் இவர்தான்.

ஏனைய மதங்கள் மக்களை அணைத்து ஒன்றுபடுத்துகிறது. இந்து மதம் ஆயிரம் சாதிகளாக மக்களைக் கூறு போடுகிறது! தீண்டாமை பாராட்டுகிறது!

மேலே குறிப்பிட்ட சங்கராச்சாரியார் வேறு யாருமல்ல. காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமனைக் கொலை செய்தது, கொலை செய்ய சதி செய்தது போன்ற குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்டு இரண்டு மாதம் வேலூர் சிறையில் கம்பி எண்ணிய பின்னர் பிணையில் வெளிவந்துள்ள அதே காஞ்சி காமகோடி பீட ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சியார்தான்.

இறைவன் ஒரு மொழிக்கே உரியவன் என்பது இறைவனுடைய குறைவிலா நிறைவுத் தன்மைக்கு (எல்லாம் தெரிந்தவர்) குறை கற்பிப்பதாகும். இறைவனுக்கு விருப்பமான மொழி என்றும் விருப்பம் இல்லாத மொழி என்றும் ஒன்றும் இல்லை.

'நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும்' தமிழ் ஞானசம்பந்தர், 'தமிழோடு இசை பாடல் மறந்தறியாத' அப்பர், 'நீர் தமிழோடிசை கேட்கும் இச்சையால் காசு நித்தல் நல்கினீர்" என்று பாடிய சுந்தரர் இவர்களைவிட காஞ்சி சங்கராச்சாரியார் பக்தியில் உயர்ந்தவரா? அருளில் சிறந்தவரா? அறிவில் பெரியவரா? ஒழுக்கத்தில் சிறந்தவரா?

இந்து மதத்தில் காணப்படும் மூடபக்தி, சாதி, தீண்டாமை, பிராமணிய ஆதிக்கம், சமஸ்கிருத மேலாண்மை, காலத்துக்கு ஒவ்வாத சாத்திரங்கள், கோத்திரங்கள், சம்பிரதாயங்கள் ஆகியவற்றை எதிர்ப்பது நாத்திகம் என்றால் வள்ளுவர், சம்பந்தர், அப்பர், சுந்தரர், திருமூலர், தாயுமானவர், இராமலிங்க அடிகள், பாரதியார், சிவவாக்கியார் மற்றும் சித்தர்கள் எல்லோருமே நாத்திகர்கள்தான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் கால் பதித்த மதங்கள்

திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் தமிழர் பண்பாட்டுக்கு வேலி கட்டிய நூல். ஆரிய தர்மத்தையும் மனு தர்மத்தையும் அடியோடு கண்டித்தும் மறுத்தும் எழுதப்பட்ட ஒழுக்க நூல். நீதி நூல். சிந்திக்கச் சொல்லும் நூல். பகுத்தறிவு புகட்டும் நூல். பொது மறை. திருக்குறளை காய்தல் உவத்தல் இன்றி ஊன்றிப் படிப்பவர்கள் இந்த உண்மைகளை புரிந்து கொள்வார்கள்.

தொல்காப்பியத்தில் கடவுள் என்ற சொல் இரண்டோர் முறைதான் சொல்லப்பட்டிருக்கிறது. அப்படிப் சொல்லப்படும் போதும் அது தெய்வம் என்ற பொருளில்தான் சொல்லப்பட்டிருக்கிறது. இன்றைய எல்லாம் தெரிந்தவன், எல்லாம் வல்லவன், எங்கும் நிறைந்தவன், தோற்றமும் அழிவும் இன்றி என்றும் உள்ளவன் என்ற பொருளில் அது கூறப்படவில்லை.

கடவுளுக்கு கற்பிக்கப்படும் எண் குணங்களான -

1) தன் விருப்பம்போல் எதையும் செய்வோன்
2) ஒரே நேரத்தில் முக்காலத்தையும் அறிபவன்,
3) எல்லா அறிவையும் இயல்பாய் உடையோன்
4) அளவிலா ஆற்றல் பெற்றோன்
5) வரம்பிலா இன்பம் உடையவன்
6) பேரருளாளன்
7) பாசங்கள் சாராதவன்
😎 தூயவன்


பிற்காலத்தில் எழுந்தவையாகும்.

சங்க காலத்தின் முற்பகுதியில் மதம் இருக்கவில்லை. போரில் விழுப்புண் பட்டு வீரச் சாவு எய்திய படை வீரர்களுக்கு ஊர்ப்புறத்தில் நடுகல் நாட்டி படையல் படைத்து வழிபடும் வழக்கம் பரவலாக இருந்து வந்தது. சிறு தெய்வ வணக்கம் இருந்திருக்கிறது.

சங்க காலப் பிற்பகுதியிலும் ஒரு நிறுவன மதம் (ழசபயnணைநன) இருக்கவில்லை. ஆனால் ஆரியரரது சமயமான வைதீக நெறியும் ஆரியக் கடவுளரும் தமிழ் நாட்டில் மெல்ல மெல்ல கால் பதிக்கத் தொடங்கின. முதலில் நாடாளும் மன்னர்களே வேத நெறியைத் தழுவினார்கள்.

சிலப்பதிகாரம் (இரண்டாம் நூற்றாண்டு) இந்திர விழா எடுத்த காதையில் பிறவா யாக்கை பெரியோன் கோயில், ஆறுமுகத்தையுடைய செவ்வேள் கோயில், பலதேவன் கோயில், நீலமேனி நெடியோன் கோயில், இந்திரன் கோயில், நால்வகைத் தேவர் மூவாறு கணங்கள், பவுத்த பள்ளிகள், சமணப் பள்ளிகள், வேள்விச் சாலைகள் மற்றும் வேறு வேறு கடவுளர் பல்கிப் பெருகி இருந்ததைக் காண முடிகிறது.

எட்டுத்தொகை பத்துப்பாட்டு நூல்களுக்கு கடவுள் வாழ்த்துப் பாடப்படவில்லை. பிற்காலத்தில்தான் பாரதம் பாடிய பெருந்தேவனார் அவற்றுக்கு கடவுள் வாழ்த்துப் பாடினார்.

சிலப்பதிகாரத்துக்கு முந்திய திருவள்ளுவருடைய காலத்தில் சமணம், பவுத்தம், வைதீக மதமான ஆரிய தர்மமும் தமிழகத்தில் ஊடுருவிட்டன.

சமண, பவுத்த மதங்களே தமிழர்களிடையே துறவறத்தை முதன் முதலில் அறிமுகப்படுத்தின.

திருக்குறளில் சமண, பவுத்த கோட்பாட்டை ஒட்டிய கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன. கொல்;லாமை, புலால் மறுத்தல், கள் உண்ணாமை, நிலையாமை, பிறன் இல்விளையாமை, துறவு, வாய்மை, அழுக்காறாமை, வெஃகாமை, அவா அறுத்தல் இந்த இரு மதங்களது கோட்பாடுகளுக்கு இசைவானதாகும்.

சங்க காலத் தமிழரிடையே நிலவி வந்த புலால் உண்ணல், கள் உண்ணல், பரத்தையர் உறவு திருக்குறளில் மிகவும் கண்டிக்கப்படுகிறது.

திருவள்ளுவர் மனுதர்ம கொள்கையை மறுத்து உரைக்கிறார். மனுதர்மம் பிறவியினாலே பார்ப்பான் உயர்ந்த சாதி என்கிறது. திருக்குறள் 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற குறள் மூலம் மனித குலம் ஒன்று அதில் உயர்வு தாழ்வு இல்லை என ஆணித்தரமாக நிலை நாட்டுகிறார்.

மனுதர்மம் ஆரியன் (பார்ப்பான்) தொழிலைச் செய்கிற அனாரியன் (தமிழன்) ஆரியன் ஆக மாட்டான், அனாரியன் தொழிலைச் செய்கிற ஆரியன் அனாரியனுமாக மாட்டான் என்கிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏகமேவது சூத்ரஸ்ய ப்ரபு: கர்மஸமாதிசத்?
எதேஸாமேவ வர்ணானாம் கஸ்ரூஷா மனஸ_யயா
(மனுதர்மம்)

திருக்குறள் பிறப்பின் அடிப்படையில் அல்லாது ஒழுக்கத்தின் அடிப்படையில் மட்டும் பார்ப்பனன் தன்னை உயர்ந்தவன் என்று சொல்லிக் கொள்ளலாம். ஒழுக்கமற்றவன் பார்ப்பானாயினும் கெட்டவன்தான் என்கிறது.

மறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்.
(குறள் - 134)

பார்ப்பான் கற்ற மறைகளை மறந்தாலும் மீண்டும் அவற்றைக் கற்றுக் கொள்ளலாம். ஆனால் மக்கட் பிறப்புக்குரிய ஒழுக்கத்தில் இருந்து குறைந்து விடுவானேயானால் அவனுடை குடிப்பிறப்பு கெட்டுவிடும்.

தமிழர்கள் தங்கள் பண்பாடு, நாகரிகம் பற்றி பெருமைப்பட வைக்கும் ஒரே நூல் திருக்குறள்தான்;! தமிழர்கள் உலகுக்குத் தந்த அரிய கொடை திருக்குறள்தான்;! திருக்குறள் உலகப் பொதுமறை என்பது உண்மைதான்!

அதனால்தான் மகாகவி பாரதியார் 'வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு' எனப் போற்றினார்.

மக்கள் அனைவரும் ஒரே குலம் என்பதை இன, மொழி, தத்துவம், சமயம் இவற்றுக்கு அப்பால் நின்று உலக மக்கள் அனைவருக்கும் பொதுவான விழுமியங்களை இந்த நூல் மூலம் அறிவியல் தளத்தில் இருந்து திருவள்ளுவர் அறிவுறுத்துகிறார்.

அடுத்த உலகில் அல்ல இந்த உலகில் வாழ்வாங்கு வாழ வழி காட்டுகிறார். அவரிடம் தெய்வன்தன்மையோ அருளோ இல்லை.

வாழ்க்கை என்ற ஓடத்தை செலுத்த வழியை மட்டும் காட்டுகிறார். அவர் காட்டிய வழியில் செல்ல வேண்டிய பொறுப்பு மனிதர்களைச் சார்ந்தது.

பிற்காலத்தில் வாழ்ந்த புலவர்கள் திருவள்ளுவரை புலவர்க்கு அரசன் எனப் போற்றியும் திருக்குறளை வேதம் என ஏற்றியும் பாராட்டியுள்ளனர்.

தண்ணிய தமிழில் பாடிய திருவள்ளுவ மாலை என்ற நூலில் கீழ் வரும் பாடல் இடம் பெற்றுள்ளது. பாடலைப் பாடியவர் கல்லாடனார் என்ற புலவர்-

ஒன்றே பொருள் எனின்வேறு என்ப, வேறு எனின்
அன்று என்ப ஆறு சமயத்தார்- நன்றென
எப்பலா லவரும் இயையவே, வள்ளுவனார்
முப்பால் மொழிந்த மொழி.
(திருவள்ளுவ மாலை 9)

அறுவகை சமயத்தோரும் ஒரு சமயத்தோர் தமது நூலிலே உலகமும் உயிரும் கடவுளுமாகிய பொருள்கள் ஒன்றே என்று நாட்டுவார்கள்.

மற்றொரு சமயத்தார் தம் நூலிலே அதனை மறுத்து அவை வேறாம் என்று நாட்டுவர்.

அப்படி வேறென்று நாட்டின், பின்னொரு மதத்தார் அதனை அன்றென்று மறுப்பர்.

இவ்வாறு சமய நூல்கள் எல்லாம் முரண்படுகின்றன.

திருவள்ளுவராலே முப்பாலாகச் சொல்லப்பட்ட குறளை நன்றென்று கொள்ளுதற்கு எவ்வகைப் பட்டோரும் உடன்படுவர்.

ஒவ்வொரு சமயத்திலும் அந்த சமயத்துக்குரிய நூல் அல்லது நூல்கள் மனிதர்களால் தங்கள் புத்திக்கெட்டியபடி எழுதப் பட்டவையே. அதனாலேயே அவற்றில் முரண்பாடுகள் காணப்படுகின்றன.

சமணமும் பவுத்தமும் வைதீக நெறிகளையும், வேள்விச் சடங்குகளையும், கடவுட் கொள்கைகளையும் மறுத்துக் கூறின. எதிர்த்து வாதிட்டன.

துவைத வேதாந்தக் கோட்பாட்டை அத்வைத வேதாந்திகள் ஒத்துக் கொள்வதில்லை. இரண்டும் நேர் எதிரானவை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இறைவனே உயிர் என்பது வேதாந்தக் கொள்கை. பொருட் தன்மையில் உயிர் வேறு இறைவன் வேறு. உயிர் இறைவனல்ல என்பதை சித்தாந்திகள் ஒத்துக் கொள்வதில்லை.

சங்கரரின் (கிபி 788-820) அத்வைதத்தை (ஆன்மாவே இறைவன்) இராமனுசர் (கிபி 1012-1137) ஏற்க மறுத்து விசிட்டாத்துவைத கோட்பாட்டை உருவாக்கினார்.

பிரமம் நிர்க்குணமா? அல்லது சகுணமா? என்ற கேள்விக்கு பிரம்மம் சகுணம் என்ற கொள்கையை இராமனுசர் கொண்டிருந்தார்.

சிவனை முழுமுதற் கடவுளாகக் கொண்ட சைவம் திருமாலை முழுமுதற் கடவுளாகக் கொண்ட வைணவமும் நீண்ட காலமாக சண்டையிட்டு வந்திருக்கின்றன.

இந்த வைதீக, வேத, சைவ கோட்பாடுகளை கிறித்துவ, இஸ்லாமிய சமயக் கணக்கர்கள் ஒத்துக் கொள்வதில்லை!

கிறித்துவ மதக் கோட்பாட்டை முற்றாக இஸ்லாம் ஏற்றுக் கொள்வதில்லை. யேசு கடவுளின் மகன் என்பதை இஸ்லாம் ஏற்றுக் கொள்வதில்லை.

இடைக் காலத்தில் வைணவமும் சைவமும் ஒன்றோடு ஒன்று போரிட்டு வந்திருக்கின்றன.

மேலே கூறியது போல் மனிதர்கள் தங்கள் தங்கள் அறிவுக்கு எட்டியபடி, தங்கள் தங்கள் பட்டறிவுக்கு எட்டியபடி கோட்பாடுகளை உருவாக்கியதால் அவை ஒன்றுக்கு ஒன்று முரண் பட்டன.

மதக் கோட்பாடுகள் போலவே சமயக் கடவுளரும் மனிதர்களால் உண்டாக்கப்பட்டவையே. ஒவ்வொரு சமயமும் தங்கள் கடவுளே மெய்யான கடவுள் என்றும் ஏனைய மதக் கடவுளர் பொய்யான கடவுளர் என்றும் சண்டை பிடிக்கின்றன.

திருக்குறளின் பெருமைக்கு பல காரணம் இருக்கலாம். ஆயினும் இரண்டு காரணங்கள் அதன் அத்தனை மாண்புக்கும் அடிப்படையாக இருக்கின்றன. ஒன்று திருக்குறள் மட்டும் -

சமயக் கணக்கர் மதிவழி கூறாது
உலகியல் கூறிப். பொருள் இது என்ற வள்ளுவன்'
(கல்லாடம்-172)

இன்றுள்ள கல்லாடம் என்ற நூல் சிவனுடைய பெருமையைப் பற்றியும், திருவிளையாடல்கள் பற்றியும் போற்றிப் பேசும் நூல்.

சுமய நூல்களில் இதுவொன்றே திருவள்ளுவரை இவ்வண்ணம் போற்றுகிறது. சுமயங்கள் உறுதிப் பொருள் நான்கில் வீடு பேற்றையே வற்புறுத்துகின்றன. திருக்குறள் அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று உறுதிப் பொருள்களைப் பற்றி மட்டும் பேசுகிறது. தமிழ்ப் பண்பாட்டுக்கு பிறிதான விடு விடப்பட்டு விட்டது.

மேலே கல்லாடனார் என்ற புலவர் திருவள்ளுவ மாலையில் சொல்லியிருக்கும் அதே கருத்தை சமய நூலான கல்லாடம் தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திருவள்ளுவர் கடவுள் வாழ்த்துப் பாடினாரா?

திருக்குறள் சமயவாதிகள் கூறும் கடவுள், இந்து, பிரார்த்தனை, தியானம், அர்ச்சனை, அபிசேகம், தீர்த்தம், யாத்திரை, பக்தி, பாவம், புண்ணியம், மோட்சம், பிராமணன், சூத்திரன், சாதி, இவைபற்றி எதுவுமே சொல்லவில்லை! இந்தச் சொற்களே திருக்குறளில் இல்லை!

திருவள்ளுவர் சமயவாதிகளைப் பின்பற்றி அறநெறிகளைக் கூறவில்லை. நாம் வாழும் இந்த உலகத்தோடு ஒட்டி வாழ்வாங்கு வாழ்வதற்குரிய அறநெறிகள் பற்றியும், பொருள் பற்றியும், இன்பம் பற்றியும் மட்டுமே அறிவுரை சொல்கிறார்.

திருக்குறளில் உள்ள பொருட்பால் இன்று பொருளியல் (Economics) வணிகவியல் (Commerce) முகாமைத்துவம் (Managaement) ஆளுமையியல் (Administration) அரசியல் (Politics) ஆட்சியியல் (Political
Science
) ஆகிய சமுதாயக் கலைகளை உள்ளடக்கி உள்ளது. அதாவது அன்று பொருள் என்ற ஒரே சொல்லில் சொல்லப்பட்ட இயலில் இருந்து இவ்வியல்கள், கலைகள் பிரிந்தன.

கிரேக்கத்திலும் பல இயல்கள் தத்துவம் என்ற ஒரே சொல்லில் அடக்கப்பட்டன. அவற்றை எடுத்துச் சொன்ன அறிஞர்கள் தத்துவவாதிகள் என்ற ஒரே சொல்லால் குறிக்கப்பட்டனர்.

திருவள்ளுவர் அறிவியலுக்கே முதன்மை இடம் கொடுக்கிறார். 'எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும், அப்பொருள் மெய்ப் பொருள் காண்பது அறிவு” என்றும் 'எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும், அப்பொருள் மெய்பொருள் காண்பது அறிவு” எனத் தமிழில் பகுத்தறிவுக்கு இலக்கணம் சொல்லிய முதல் புலவர் அவர்தான்.

அதற்கு முன்னர் கவுதம புத்தர் (கிமு 563-483) அவ்வாறான கருத்தை வெளியிட்டுள்ளார். 'மற்ற ஆதாரங்கள் பழக்கவழக்கங்கள் என்பவைகள் எப்படியிருந்தாலும் உன் அறிவைப் பயன்படுத்திக் கொள்! எந்தச் செயலையும் பட்டறிவின்படி ஆராய்ந்து பார்! முன்னாள் பழக்க வழக்கங்கள், பெரியவர்கள் மனிதத் தன்மைக்கு மேற்பட்டவர்கள் சொன்னது, நீண்ட நாளாக இருந்துவருவது என்பதற்காக எதையும் எடுத்துக் கொள்ளாதே” எனப் புத்தர் தனது சீடர்களுக்கு அறிவுறுத்தினார்.

கிரேக்க தத்துவவாதியான சோக்கிரடீஸ் (கிமு 469-399) 'எதனையும் கேள்விகளை எழுப்பி நுணுக்கமாக ஆராய்ந்து சான்றுகளின் அடிப்படையில் உண்மையை அறிந்து கொள். அதிகாரத்தைக் கையில் வைத்துக் கொண்டு உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள் சொல்கிறார்களே என்பதற்காக எதையும் உண்மை என்று எடுத்துக்கொள்ள வேண்டாம். காரணம் அப்படிப்பட்டவர்கள் குழப்பவாதிகளாகவும் பகுத்தறிவு அற்றவர்களாகவும் இருக்கக்கூடும்” என்றார்.

கடவுள் பற்றிய ஆராய்ச்சியில் இறங்காத தத்துவவாதிகள் புத்தர், மகாவீரர் (கிமு 540-468) ஆகிய இருவரே! ஏனையோர் ஆராய்ச்சி செய்வதன் மூலம் நித்தியப் பொருளை அறிந்து எண்பிக்க முயன்றனர்.

ஆராய்ச்சி எதுவுமின்றி நம்பிக்கையின் அடிப்படையில் மட்டும் பரம்பொருளை உணர்ந்தவர்கள் பக்தி நெறியை மேற்கொண்டனர். பக்திநெறி பாமரமக்களுக்காக உருவாக்கப்பட்ட நெறியாகும்.

புத்தர், மகாவீரர் இருவரது கோட்பாடுகள் திருவள்ளுவர் மீது செல்வாக்குச் செலுத்தி இருக்கும் என எண்ணுவதில் தவறில்லை.

புத்தரின் கருத்தையொட்டி 'எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும், அப்பொருள் மெய்பொருள் காண்பது அறிவு” என மெய்யுணர்த்தல் (36) என்ற அதிகாரத்தில் வரும் குறள் (355) மூலம் திருவள்ளுவர் கூறியிருயிக்கிறார்.

எந்தப் பொருள் எத்தன்மை உடையதாகத் தோன்றினாலும் அத்தோற்றத்தின் படியே கண்டறியாமல் அப்பொருளினுள் நின்று உண்மையாகிய பொருளைக் காண்பதே அறிவாகும்.

மேலும், அறிவுடமை (43) என்ற அதிகாரத்தில் 'எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு” என்ற குறள் (423) மூலம் சொல்கிறார்.

எந்த ஒரு பொருளைப் பற்றியும் யார் யார் சொல்லக் கேட்டாலும் அப்பொருளினுடைய உண்மையைக் காண்பதே அறிவாகும்.

'அறிவுடையார் எல்லாம் உடையார், அறிவிலார் என்னுடைய ரேனும் இலர்” என்ற குறளும் (430) அறிவுடமை என்ற அதிகாரத்தில்தான்; ( 43) வருகிறது. அறிவுடமை என்றால் கல்வி கேள்வி இரண்டாலும் வருகிற அறிவோடு உண்மை அறிவைத் தெரிந்து கொள்ளல். இந்த உண்மை அறிவை எல்லோரும், குறிப்பாக இளைய தலைமுறையினர் தேடவேண்டும். உண்மை அறிவு கைகூடினால் எதையும் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திருவள்ளுவர் பகுத்தறிவை வற்புறுத்தியதன் விளைவாகவே திருக்குறள் வேத சமயத்தவர்களால் இருட்டடிப்புச் செய்யப்பட்டு வந்துள்ளது. வேத சமய சேற்றில் புதைந்து போன சேரர், சோழர், பாண்டியர், பல்லவர், ஆரியச் சக்கரவர்த்திகள் அதனைப் போற்றாது விட்டார்கள்.

நாம் பெருமை பேசும் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் சதுர்வேதி மங்கலங்கள், எண்ணாயிரம், திருபுவனை போன்ற ஊர்களை இறையிலி நிலங்களாக நிவந்தம் செய்தும் வேதம் படிக்க வேத பாடசாலைகள் நிறுவியும் அந்தணர்கள் தாள் பணிந்து ஆண்டனரே தவிர அவர்கள் தமிழ்ப் பள்ளிகள் நிறுவி திருக்குறள் சொல்லிக் கொடுத்தார்கள் என்று வரலாறு இல்லை.

அவர்களது அரசாட்சியில் மனு, மிடாக்சாரம், ஹேமாத்ரி, ஜுமுக வாதனா எழுதிய தயாபாக (தர்மரத்னா என்ற நீதி நூலின் ஒரு பகுதி) ஆகிய நான்கு சாத்திரங்களின்மேல் சோழர்களுடைய நீதி நிருவாகத்தின் அடித்தளம் அமைக்கப்பட்டது.

அர்த்த சாத்திரம் அரசியல் நூல் என்ற அளவில் ஸ்மிருதிகளின் நீதியினின்று ஒரு சிறிது மாறுபட்டுக் காணப்பட்டது.

“இவ்வாறாக அரசியல் தத்துவத்திற்கு அர்த்தசாத்திரமும், நீதித்தத்துவத்திற்கு மேற்சொன்ன நான்கு சாத்திரங்களும் சோழர் காலத்து அந்தணர்களால் ஊர் நீதிமன்றங்களிலும் அரச நீதி வழங்கு மன்றங்களிலும் எடுத்து ஓதப்பட்டு விளக்கவுரை சொல்லப்பட்டன" என்று சோழர்களின் அரசியல், கலாச்சார வரலாறு - பாகம் 2 -பக்கம் 95) எனும் நூலில் வரலாற்றாசிரியர் திரு.மா. பாலசுப்பிரமணியன் குறித்துள்ளார்.

ஆபாச நூல்களான பாரதம், இராமாயணம், கந்தபுராணம், பெரியபுராணம், பகவத் கீதை போன்ற நூல்களுக்குக் கொடுக்கப்பட்ட பெருமையில் நூற்றில் ஒரு பங்கு கூட அரசர்கள் மற்றம் சமயவாதிகளால் திருக்குறளுக்குக் கொடுக்கப்படவில்லை. இது ஓர் கசப்பான உண்மை.

ஒரு குலத்துக்கு ஒரு நீதி சொல்லும் பகவத் கீதையை திருக்குறளோடு ஒப்பிட்டால் முன்னது உறை போடக்கூடக் காணாது.

ஆகவேதான் பெரியார், அறிஞர் அண்ணா தலைமையில் திராவிடர் இயக்கத்தவர் தமிழர்களை இழிவு செய்து ஆரியக் கருத்துக்களை பரப்பும் இராமாயணத்தையும் பெரியபுராணத்தையும் தீயிட்டு கொளுத்த வேண்டும் என்று கூறினார்கள். (மேலும் இது பற்றி அறிய விரும்புவர்கள் அண்ணாவின் தீ பரவட்டும் ஆரியமாயை மற்றும் கம்பரசம் ஆகிய நூல்களை வாங்கிப் படிக்கவும்.)

திருவள்ளுவர் ஆதி என்ற புலைச்சிக்கும் பகவன் என்ற பார்ப்பனனுக்கும் பிறந்தவர் என்று கதை எழுதி வைத்திருக்கிறார்கள். இந்தக் கதை வள்ளுவரை இழிவு படுத்த இட்டுக்கட்டி எழுதப்பட்ட புனைந்துரை. வரலாறு என்ற பெயரில் எழுதப்பட்ட கற்பனைக் கதை.

அப்படிக் கதை புனைந்ததின் நோக்கம் கல்வி பார்ப்பனனுக்கு மட்டும் சொந்தமானது. பார்ப்பனன் மட்டுமே அறிவாளி, பறைச்சி வயிற்றில் அறிவாளியான பிள்ளை பிறந்திருக்க முடியாது. பிறந்திருந்தால் பார்ப்பன விந்து சம்பந்தம் ஏதாவது இருந்திருக்க வேண்டும் என்பதை நிலை நாட்டவே தங்களை உயர் சாதியினர், பூதேவர்கள் என்று சொல்லிக்கொண்டவர்கள் அந்தக் காலத்தில் அப்படி எழுதி வைத்துள்ளார்கள்.

திருவள்ளுவர் ஏனைய புலவர்களைப் போல கடவுள் வாழ்த்துப் பாடியிருக்கிறாரே என்று சிலர் கேட்கலாம்.

கடவுள் என்ற சொல் திருக்குறளின் முதல் அதிகாரத்திற்கு கொடுக்கப்பட்ட தலைப்பில் மட்டுமே காணப்படுகிறது.

திருக்குறள் அதிகாரங்களுக்கு அந்த அதிகாரத்தில் காணப்படும் சொற்களைக் கொண்டே தலைப்புக் குறிக்கப்படுவது பெருவழக்காகக் காணப்படுகிறது.

திருக்குறள் 5வது அதிகாரத் தலைப்பு புதல்வரைப் பெறுதல் என்பது தவறானதாகும். மக்கள் பற்றிய ஆரியர்களது கருத்தினை வலிந்து புகுத்தவே பிற்காலத்தவர் அவ்வாறு தலைப்பிட்டுள்ளார்கள். புதல்வரைப் பெறுதல் என்ற சொல் அந்த அதிகாரத்தில் வரும் 10 குறள் ஒன்றிலேனும் இடம் பெறவில்லை. மக்கட் பேறு என்று இருப்பதே பொருத்தமானது. அதுவே வள்ளுவரது உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தி நிற்கும் சொற்களாகும். இந்த அதிகாரத்தில் வரும் முதற் குறளிலேயே வள்ளுவர் 'பெறுமவற்றுள் யாமறிவது இல்லை, அறிவிறிந்த மக்கட்பேறு அல்ல பிற' எனத் தெளிவாகக் குறிப்பிடுகிறார். பேறு என்றால் செல்வம் என்று பொருள்.

தற்கால உரை ஆசிரியர்கள் புதல்வரைப் பெறுதல் என்பதற்குப் பதில் மக்கட் பேறு என்றே தலைப்பிட்டுள்ளார்கள்.

எனவே கடவுள் வாழ்த்து என்ற அதிகாரத் தலைப்பு இடைச் செருக்கலாக இருக்கவேண்டும். இன்னும் சொல்லப் போனால் வ. உ. .சிதம்பரனார் போன்ற தமிழ் அறிஞர்; திருக்குறளில் உள்ள முதல் மூன்று அதிகாரங்களும் இடைச் செருக்கல் என வாதிடுகிறார்.

திருக்குறளில் 133 அதிகாரங்கள் உள்ளன. அதில் இந்த 3 அதிகாரங்களையும் நீக்கி விட்டு 130 அதிகாரங்களை வைத்துக் கொண்டால் போதுமானது என்கிறார். வ.உ.சி. தம் கோள் நிறுவப் பல தருக்க நெறிப்பட்ட கருத்துக்களை முன்வைக்கிறார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.