Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்: `1948 டு 2021’ ; ஜெருசலேம் புனிதத் தலத்தில் வெடித்த வன்முறை! - என்ன பிரச்னை?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்: `1948 டு 2021’ ; ஜெருசலேம் புனிதத் தலத்தில் வெடித்த வன்முறை! - என்ன பிரச்னை?

Today at 12 PM
இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்

இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்

கிழக்கு ஜெருசலேமின் அல் அக்‌ஷா மசூதிதான் இஸ்லாமியர்களுடைய மூன்றாவது பெரிய புனிதத் தலம். மசூதியைச் சுற்றியிருக்கும் `வெஸ்ட் வால்' என்ற ஒருபக்கச் சுவரான `டெம்பிள் மவுண்ட்' யூதர்களின் புனிதத் தலம்!

1948-ம் ஆண்டு ஒரு தேசம் இரண்டு பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டன. அதில் ஒரு பிரதேசம் பிரிக்கப்பட்ட தினம் முதலே தனி நாடாக அங்கீகரிக்கப்பட்டது. மற்றொரு பிரதேசம் இன்று வரை, தனி நாடு என்கிற அங்கீகாரத்திற்காகப் போராடி வருகிறது. இதில் அங்கீகரிக்கப்பட்ட நாடு இஸ்ரேல். அங்கீகாரத்திற்காகப் போராடி வருவது பாலஸ்தீனம்.

இஸ்ரேல் கொடி

 

இஸ்ரேல் கொடி

 

இஸ்ரேல். யூதர்கள் பெரும்பான்மையாக வாழும் ஒரு மத்திய கிழக்கு நாடு. இங்கு 70 சதவிகிதத்துக்கும் அதிகமான யூதர்கள் வாழ்ந்து வருகின்றனர். சுமார் 20 சதவிகித இஸ்லாமியர்களும், 10 சதவிகிதத்துக்கும் குறைவாகக் கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரும் வாழ்ந்து வருகின்றனர்.

பாலஸ்தீனக் கொடி

 

பாலஸ்தீனக் கொடி

 

மற்றொரு பிரதேசமான பாலஸ்தீனம் இன்று வரையில் ஆக்கிரமிக்கப்பட்ட ஒரு பகுதியாகத்தான் குறிப்பிடப்பட்டு வருகிறது. 2012-ம் ஆண்டுதான் பாலஸ்தீனம் ஐ.நாவில் `அப்சர்வர் ஸ்டேட்' என்கிற அந்தஸ்தைப் பெற்றது. இங்கு 90 சதவிகிதத்துக்கும் அதிகமாக இஸ்லாமிய மக்களே வாழ்ந்து வருகின்றனர். மேற்குக் கரை, காஸா எனப் பாலஸ்தீனம் இரண்டு பகுதிகளாகப் பிரிந்துள்ளன.

இஸ்ரேல் - இஸ்லாமிய நாடுகள் பிரச்னை!

இஸ்ரேலில், கணிசமான அளவில் வாழ்ந்து வரும் அரேபியர்கள் உள்ளிட்ட சிறுபான்மை இன மக்கள் இரண்டாம் தர குடிமக்களாகவே நடத்தப்பட்டு வருவதாகச் சொல்லப்படுகிறது. அரேபியர்கள் வாழ்கின்ற பகுதிகளில் இஸ்ரேல் சட்டவிரோதமாகக் குடியிருப்புகளை ஏற்படுத்தி வருகிறது. யூதர்களுக்கான தனி நாடாக இஸ்ரேலை மாற்றும் முயற்சியில் அங்குள்ள ஆட்சியாளர்கள் சில சட்டங்களையும் அமல்படுத்தி வந்தனர். பாலஸ்தீன நில அபகரிப்பு, இஸ்லாமிய மக்களை ஒடுக்குவது என்பது போன்ற நடவடிக்கைகளால் மத்திய கிழக்கில் உள்ள இஸ்லாமிய நாடுகள் அனைத்தும் இஸ்ரேலுக்கு எதிராகவே இருந்து வந்தன. 

இஸ்ரேலுக்கு அமெரிக்கா துணை போவதாகவும் இஸ்லாமிய நாடுகள் குற்றஞ்சாட்டி வந்தன. இதன் காரணமாக இஸ்லாமிய நாடுகள், போக்குவரத்து, ஏற்றுமதி, இறக்குமதி உள்ளிட்ட பொருளாதார உறவுகள் என எந்த உறவும் இஸ்ரேலுடன் வைத்துக் கொள்ளாமல் இருந்தன. முன்னாள் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் தலையீட்டால் சில இஸ்லாமிய நாடுகள் இஸ்ரேலுடன் நட்புறவை ஏற்படுத்திக் கொண்டன.

ஜெருசலேம்

 

ஜெருசலேம்

 

ஜெருசலம் பிரச்னை!

1967-ல் மத்திய கிழக்குப் போர் நடைபெற்றபோது கிழக்கு ஜெருசலேமை இஸ்ரேல் கைப்பற்றியது. ஒருங்கிணைந்த ஜெருசலேமே தங்கள் தலைநகரம் என்று அந்நாடு அறிவித்தது. இதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வரும் பாலஸ்தீனர்கள், வருங்காலத்தில் கிழக்கு ஜெருசலேம் எங்கள் தலைநகராக இருக்கும் என்று கூறி வருகின்றனர். 

கிழக்கு ஜெருசலேமின் பழமையான பகுதியில் அமைந்திருக்கிறது அல் அக்‌ஷா மசூதி. இதுதான் இஸ்லாமியர்களுடைய மூன்றாவது பெரிய புனிதத் தலம். மசூதியைச் சுற்றியிருக்கும் `வெஸ்ட் வால்' என்ற ஒருபக்கச் சுவரை `டெம்பிள் மவுண்ட்' என்று அழைக்கிறார்கள் யூதர்கள். இதனை தங்களது புனிதத் தலமாகக் கருதுகிறார்கள் அவர்கள். எனவே, இஸ்ரேலும், பாலஸ்தீனமும் ஜெருசலேமை புனித நகராகக் கருதி வருகின்றன.

பெரும்பாலான உலக நாடுகள் ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக ஏற்கவில்லை. இந்த நிலையில், 2017-ம் ஆண்டு, ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே மோதல் மேலும் வலுப்பெறத் தொடங்கியது.

ஹமாஸ் அமைப்பு!

பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இயங்கி வருகிறது ஹமாஸ் போராளிகள் அமைப்பு. இஸ்ரேலை எதிர்த்துப் போராடி வருகிறது இந்த அமைப்பு. இஸ்ரேல் ராணுவத்தை எதிர்த்துப் பல முறைப் போர் செய்திருக்கிறது ஹமாஸ் அமைப்பு. `ஹமாஸ் படை ஒரு தீவிரவாத அமைப்பு' என நெடுங்காலமாகக் குற்றஞ்சாட்டி வருகிறது இஸ்ரேல்.

இஸ்ரேல் கொடிதின அணிவகுப்பு

 

இஸ்ரேல் கொடிதின அணிவகுப்பு  Ariel Schalit

 

இப்போது என்ன பிரச்னை?

நெடும் காலமாகவே கிழக்கு ஜெருசலேமில், அதிக அளவில் வாழும் இஸ்லாமியர்களை வெளியேற்றும் முயற்சியில் யூதர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு அடிக்கடி மதப் பிரச்னைகள் ஏற்பட்டு கலவரங்களாக மாறும். குறிப்பாக ரமலான் நெருங்கும் நேரத்தில் அங்கு வன்முறை வெடிப்பது வழக்கம். 

ஆண்டுதோறும் ரமலான் நெருங்கும் நேரத்தில் கிழக்கு ஜெருசலேமை கைப்பற்றியதைக் கொண்டாடும் வகையில் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் யூதர்கள் கொடியுடன் அணிவகுப்பு நடத்துவார்கள். இந்த அணிவகுப்பின்போது இரு தரப்பினருக்கும் இடையே மோதல்கள் உண்டாகும். இந்த ஆண்டு அணிவகுப்பு நடப்பதற்கு முன்பாகவே மோதல்கள் ஏறப்பட்டிருக்கின்றன.

பிரச்னை தொடங்கியது எப்போது?

ரமலான் மாதத்தில் கிழக்கு ஜெருசலேமிலுள்ள Damascus Gate Plaza எனும் இடத்தில் இஸ்லாமியர்கள் கூடுவது வழக்கம். கடந்த ஏப்ரல் 12-ம் தேதி இஸ்லாமியர்கள் அங்கு கூடுவதைத் தடுக்கும் வகையில் தடுப்புகளை அமைத்தது இஸ்ரேல் காவல்துறை. இதையடுத்து ஏப்ரல் 16-ம் தேதியன்று அல் அக்‌ஷா மசூதியில் தொழுகை நடத்துவதற்கும் சில கட்டுப்பாடுகளை விதித்தது இஸ்ரேல். இதையடுத்து கிழக்கு ஜெருசலேமில் பதற்றம் அதிகரிக்கத் தொடங்கியது. தொடர்ந்து பாலஸ்தீனியர்கள் சிலரை அவர்கள் வாழும் பகுதியிலிருந்து இஸ்ரேல் ராணுவம் வெளியேற்றியதாகவும் சொல்லப்படுகிறது.

இந்தநிலையில் கடந்த மே 7-ம் தேதியன்று இஸ்ரேல் காவல்துறையினருக்கும், இஸ்லாமியர்களுக்கும் அல் அக்‌ஷா மசூதியில் மோதல் ஏற்பட்டது. இதில் 200-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் காயமடைந்தனர். தொடர்ந்து கடந்த திங்களன்று (மே 10) பாலஸ்தீனர்கள் அல் அக்‌ஷா மசூதியில் தொழுகையில் ஈடுபட்டிருந்த போது மசூதிக்குள் நுழைந்து சோதனை நடத்தியது இஸ்ரேல் ராணுவம். `யூதர்கள் நடத்தவிருக்கும் பேரணியில் கற்கள் வீசுவதற்கு இஸ்லாமியர்கள் திட்டமிட்டிருப்பதாக' கிடைத்த தகவலின் பேரில் இந்தச் சோதனை நடத்தப்பட்டதாகத் தெரிகிறது. இந்தச் சோதனையின்போது இஸ்ரேல் ராணுவம் அங்கிருந்த பாலஸ்தீனர்களை தாக்கியதாகவும் தகவல்கள் சொல்லப்படுகின்றன. இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்திருக்கிறது.

AL Asqua Mosque

 

AL Asqua Mosque Twitter

 

அல் அக்‌ஷாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலுக்குப் பதில் தாக்குதல் நடத்தியது ஹமாஸ் அமைப்பு. இதைத் தொடர்ந்து இஸ்ரேல் ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தியதில் 30-க்கும் மேற்பட்ட ஹமாஸ் அமைப்பினர் உயிரிழந்ததாகச் சொல்லப்படுகிறது. ஹமாஸ் அமைப்பின் தலைமை அலுவலகத்தின் மீது குண்டுகள் வீசி தரைமட்டமாக்கியிருக்கிறது இஸ்ரேல் ராணுவம். இந்தத் தாக்குதல்களில் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த குழந்தைகள் சிலரும் உயிரிழந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இஸ்ரேல் - பாலஸ்தீன மோதல்

 

இஸ்ரேல் - பாலஸ்தீன மோதல் 

 

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ராக்கெட் ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியது ஹமாஸ் அமைப்பு. ஹமாஸ் அமைப்பின் தாக்குதலால் உயிர்ச்சேதம் ஏற்பட்டிருப்பதாக இஸ்ரேல் தெரிவித்திருக்கிறது. இவ்வாறு இரு தரப்பும் மாறி மாறித் தாக்குதல்களில் ஈடுபட்டு வருவதால் ஜெருசலேமில் போர்ச்சூழல் நிலவி வருகிறது.

மற்ற நாடுகள் என்ன சொல்கின்றன?

இந்தியாவுக்கான ஐ.நா சபையின் நிரந்தரத் தூதர் திருமூர்த்தி, ``இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்னையில் இந்தியா ஆழ்ந்த அக்கறை கொண்டிருக்கிறது. காஸாவிலிருந்து ராக்கெட்டுகள் ஏவப்பட்டதற்கு கண்டனங்களைப் பதிவு செய்கிறோம். இரு தரப்புக்கும் இடையே நேரடிப் பேச்சு வார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும்'' என்று கூறியிருக்கிறார். 

அமெரிக்காவும் இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்னையில் ஆழ்ந்த அக்கறை கொண்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது. மேலும், ``பதற்றத்தைக் குறைக்க இரு நாடுகளும் இணைந்து ஓர் தீர்வை நிறுவ வேண்டும். பாலஸ்தீனியர்களும் இஸ்ரேலியர்களும் சுதந்திரம், பாதுகாப்பு, செழிப்பு உள்ளிட்ட அனைத்தையும் சமமாகப் பெறுவதற்குத் தகுதியானவர்கள் என்று நாங்கள் நம்புகிறோம்'' என்று தெரிவித்திருக்கிறது.

UN

 

UN Image by Edgar Winkler from Pixabay 

 

இஸ்ரேலும், பாலஸ்தீனமும் தாக்குதல்களை நிறுத்திக் கொண்டு, அமைதி காக்க வேண்டும் என ஐக்கிய அரபு நாடுகள் கேட்டுக் கொண்டிருக்கிறது. மேலும், ``பாலஸ்தீனிய குடிமக்களுக்கு இஸ்ரேல் போதிய பாதுகாப்பை வழங்க வேண்டும். அதோடு அவர்களுடைய மதத்தை கடைபிடிப்பதற்கான உரிமையையும் வழங்க வேண்டும். அல் அக்‌ஷா மசூதியின் புனிதத்துக்கு கேடு விளைவிக்கும் நடவடிக்கைகளைத் தடுக்க வேண்டும்'' என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறது. 

ஐக்கிய நாடுகள் சபை, ``உடனடியாக மோதலை நிறுத்திக் கொள்ளுங்கள். முழு போரை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறீர்கள். அமைதியை மீட்டெடுக்க ஐ.நா அனைத்து முயற்சிகளையும் செய்கிறது'' என்று கூறியிருக்கிறது.

உலக நாடுகளைச் சேர்ந்த மக்கள் பலரும், ``ஜெருசலேமில் அமைதி திரும்ப வேண்டும்'' என சமூக வலைதளங்களில் பதிவிட்டுவருகின்றனர். இந்த விவகாரத்தில் விரைவில் ஓர் தீர்வு ஏற்பட்டு, அங்கு அமைதி திரும்பும் என நம்புவோம்!
 

 

https://www.vikatan.com/government-and-politics/international/what-is-going-on-israel-palestine-conflict

 

 

 

11 hours ago, கிருபன் said:

ஐக்கிய நாடுகள் சபை, ``உடனடியாக மோதலை நிறுத்திக் கொள்ளுங்கள். முழு போரை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறீர்கள். அமைதியை மீட்டெடுக்க ஐ.நா அனைத்து முயற்சிகளையும் செய்கிறது'' என்று கூறியிருக்கிறது.

ஒப்புக்கு சப்பாணி….😁😁😁😁

  • கருத்துக்கள உறவுகள்

காசா பாதுகாப்பற்ற இடமாகியுள்ளது – குழந்தைகள் உட்பட 67 பேர் இஸ்ரேல் தாக்குதலில் பலி

822632-israelattack-696x398.jpg
 13 Views

இஸ்ரேல் இராணுவத்தினர் நேற்று முன்தினம் பாலஸ்தீனத்தின் மீது நடத்திய வான்வழித் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 67 பேர் உயிரிழந்துள்ளனர்.

முன்னதாக அல் அக்சா மசூதியில் இஸ்ரேலின் காவல்துறையினர்  மசூதியில் தொழுகையில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் 100க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் காயமடைந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது   தாக்குதல் நடத்தினர்.

இதைத் தொடர்ந்து ஹமாஸ் அமைப்பின் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்திருந்த நிலையில்,  பாலஸ்தீனத்தில் உள்ள காசா பகுதியில் இஸ்ரேல் இராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் 16 குழந்தைகள் உட்பட 67 பேர் பலியாகியுள்ளதாகவும் 300க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதே நேரம் ஹமாஸ்  இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், மாகாணங்களுக்கான அமெரிக்க அரசின் செயலர் அந்தோணி பிளிங்கின், பதற்றமான சூழ்நிலையை முடிவுக்கு கொண்டு வர பாலஸ்தீனத் தலைவர் மஹ்-மௌத் அப்பாஸிடம் வலியுறுத்தியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் காசா பகுதியில் அமைதியை ஏற்படுத்தும் விதமாக ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்பு குழுவின் அவசரக் கூட்டம் வரும் மே 14ம் திகதி  அன்று நடத்தப்பட வேண்டும் ன துனிசியா,நோர்வே,சீனா ஆகிய நாடுகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

இந்த தாக்குதல் சம்பவம் குறித்து தனது ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள பிரித்தானிய பிரதமர் ஜான்சன், “வளர்ந்து வரும் வன்முறை மற்றும் பொது மக்களின் உயிரிழப்புக்கள் குறித்து பிரித்தானிய அரசு ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளது. மேலும் அதிகரிக்கும் பதட்டம் உடனடியாக தணிவதை காண விரும்புகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

https://www.ilakku.org/?p=49465

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.