Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொரோனாச் சந்தைகளும் தமிழ் அரசியல்வாதிகளும்! நிலாந்தன்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனாச் சந்தைகளும் தமிழ் அரசியல்வாதிகளும்! நிலாந்தன்!

June 13, 2021

spacer.png

கிளிநொச்சியைச் சேர்ந்த ஓர் ஊடகவியலாளர் சொன்னார்.திரு நகரிலும் உதய நகரிலும் கொரோனாச் சந்தைகள் இயங்குவதாக.பிரதான சந்தைகள் மூடப்பட்ட காரணத்தால் தற்காலிக கள்ளச் சந்தைகளாக இவை இயங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.சிலசமயங்களில் உதயநகர் சந்தையில் படைத்தரப்பும் வாகனத்தை நிறுத்திவிட்டு பொருள் வாங்குவதை தான் கண்டதாகவும் சொன்னார்.

இதைப்போலவே யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒர் ஊடகவியலாளர் சொன்னார் கொக்குவில் இந்து பள்ளிக்கூடத்தின் மைதான வீதியில் காலை வேளைகளில் ஒரு மீன் சந்தை இயங்குவதாகவும் அது மிகவும் நெரிசலான ஒரு சந்தை என்றும்.யாழ்ப்பாணம் பாசையூர் சந்தையும் இயங்குகிறது. இடையில் போலீசாரோடு சில முரண்பாடுகள் வந்தன.வழமையான நாட்களோடு ஒப்பிடுகையில் சனத்தொகை குறைவு என்றாலும் அதுவும் ஒரு சனத்திரட்சிதான்.

இப்படித்தான் யாழ் திருநெல்வேலி சந்தையும் அயலில் இருக்கும் உள் வீதிகளில் சிதறி இயங்குகிறது. இடைக்கிடை போலீசார் பாய்வார்கள். எனினும் போலீசாரை கண்டதும் மூடி போலீசார் போனதும் திறந்து ஆங்காங்கே வீதியோரங்களிலும் வீடுகளுக்குள்ளேயே சிறு சிறு சந்தைகள் இயங்குகின்றன.

யாழ் பருத்தித்துறை வீதியிலும் தோட்டக் காணிகள் அதிகமுள்ள பகுதிகளில் குறிப்பாக புத்தூர் பகுதியில் வீடுகளுக்குள் சந்தைகள் இயங்குவதாக ஒரு செய்தியாளர் தெரிவித்தார்.

மேற்படி உத்தியோகப்பற்றற்ற சிறிய சந்தைகள் யாவும் அவற்றின் விளைவுகளை கருதிக் கூறின் மெய்யான பொருளில் கொரோனாத் தொற்றுச் சந்தைகளே என்று ஒரு நண்பர் கூறினார். ஏனெனில் இந்த சிறு சிறு சந்தைகள் யாவும் சில சமயங்களில் வைரஸ் தொற்றுக் கொத்தணிகளாக மாறக்கூடிய வாய்ப்பு உண்டு என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

கண்டி வீதியில் போய் நின்று பார்த்தால் தெரியும் டிப்பர்கள் வழமைபோல ஓடுகின்றன. இது இப்பொழுது மட்டுமல்ல உலகத்தொற்றுநோய் பீடித்த நாட்களிலிருந்து எல்லா தொற்றலைகளின் போதும் எல்லா சமூக முடக்கங்களின் போதும் கண்டி வீதி பெருமளவுக்கு பொது சன நடமாட்டம் இன்றி வெறிச்சோடிக் கிடந்த நாட்கள் எல்லாவற்றிலும் டிப்பர்கள் மட்டும் போவதையும் வருவதையும் காணலாம். பூநகரி வீதியிலும் அப்படித்தான். ஒரு பெரும் தொற்றுநோய் காலத்திலும் கிளிநொச்சியில் அக்கராயனில் மரங்களை வெட்டி மண் அகழப்படுவதாக கிளிநொச்சியை மையமாகக்கொண்ட முன் சொன்ன ஊடகவியலாளர் தெரிவித்தார்.

அரசாங்கம் அத்தியாவசிய தேவைகள் என்று சொல்லி ஒரு தொகுதி சேவைகளை பட்டியலிட்டிருக்கிறது.அதன் பிரகாரம் மீன் பிடிக்கலாம் வேளாண்மை செய்யலாம்.கட்டடம் கட்டலாம்.அப்படியென்றால் பிடித்த மீனை எங்கே எப்படி விற்பது?விவசாய விளைபொருட்களை எங்கு எப்படி விற்பது ?இது விடயத்தில் அரசாங்கம் நடமாடும் வியாபாரிகளை அனுமதித்திருக்கிறது. நடமாடும் வியாபாரிகள் ஆங்காங்கே உள்வீதிகளில் சில இடங்களில் வீதியோரங்களில் நின்று சிறு சந்தைகளை திறந்து விடுகிறார்கள்.

இதுதான் தமிழ் பகுதிகளில் பயணத் தடை அல்லது சமூகமுடக்கத்தின் தொகுக்கப்பட்ட சித்திரமாகும். அப்படியென்றால் பயணத்தடை அல்லது சமூகமுடக்கத்தின் நோக்கம் என்ன ?அல்லது இதை மாற்றியும் கேட்கலாம் அரசாங்கம் சமூகத்தை முழுமையாக முடக்கத் தயாரில்லையா? அதனால்தான் உத்தியோகப்பற்றற்ற விதங்களில் சிதறிப்போன சிறிய சந்தைகளை அல்லது கொரோனா சந்தைகளை கண்டும் காணாமல் விடுகிறதா?
ஆம்.அரசாங்கம்,பயணத்தடையையும் சமூகமுடக்கத்தையும் இறுக்கமாகக் கடைப்பிடிக்கத் தயங்குகின்றது.ஒருபுறம் பொருளாதார நெருக்கடிகள்;கடன் சுமை;பங்களாதேசிடமே கடன்வாங்க வேண்டிய ஒரு நிலை இன்னொருபுறம் வைரஸ்.போதாக்குறைக்கு கொழும்புத் துறைமுகத்தில் ரசாயனங்களுடன் ஒரு கப்பல் எரிந்து மூழ்கிவிட்டது.இது கடற்றொழில் வாணிபத்தைப் பாதிக்கும்.இப்படியாக பன்முக நெருக்கடிகளுக்குள் அரசாங்கம் ஒரு முழு முடக்கத்துகுப் போகத் தயங்குகிறது.

ஆனால் முழு முடக்கமோ அரை முடக்கமோ பாதிக்கப்படுவது அன்றாடம் காய்ச்சிகளும் கீழ் மத்தியதர வர்க்கத்தை சேர்ந்தவர்களும்தான். அவர்கள் பொருட்களைத் தேடி வீதிக்கு வருகிறார்கள்.பிரதான சாலைகளில் தடைகளை ஏற்படுத்தி படையினரும் போலீசாரும் நிற்கிறார்கள். சிலவேளைகளில் பயணத் தடையை மீறி வருகிறவர்களை அடிக்கவும் செய்கிறார்கள்.ஆனால் உட்தெருக்களில் வாழ்க்கை வழமைபோல இயங்குகிறது.

பெருநகரங்களில் இருப்பதைப்போல ஒண்லைன் வினியோகத்துக்கான வலைப்பின்னல்கள் தமிழ் மக்கள் மத்தியில் பலமாக இல்லை. இதனால் ஒண்லைன் வினியோகம் எனப்படுவது சீரானதாக இல்லை. அதிலும் குறிப்பாக சில பூட் சிற்றிகளின் இலக்கங்கள் மக்களுக்கு தரப்பட்டன. ஆனால் அந்த இலக்கங்களுக்கு அழைத்தால் பதில் கிடைப்பதில்லை என்று சனங்கள் முறையிடுகிறார்கள். எனவே ஒருபுறம் உற்பத்தியை அனுமதித்துவிட்டு இன்னொருபுறம் சந்தைகளை மூடுவதன் மூலம் அரசாங்கமே உத்தியோகப்பற்றற்ற விதமாக உள்ளூரில் சிதறிய சிறிய சந்தைகளை ஊக்குவிக்கின்றதா?

இந்த வாரம் சில தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சில விடயங்களை சுட்டிக்காட்டிப் பேசியிருகிறார்கள். இது தவிர தமிழ்க்கட்சிகளும் தன்னார்வலர்களும் ஆங்காங்கே நிவாரணம் வழங்குவதைக் காண முடிகிறது.எனினும் முன்னைய கொரோனா தொற்று அலைகளோடு ஒப்பிடுகையில் இம்முறை புலம்பெயர்ந்த தமிழ் தரப்பின் ஈடுபாடு குறைவாகவே காணப்படுகிறது.லண்டனைச் சேர்ந்த சில புலம்பெயந்த தமிழர்கள் தமிழ்ப்பகுதிகளுக்கு பி.சி.ஆர்.கருவிகளை வழங்க முன்வந்ததாக தெரிகிறது.ஆனால் அரசாங்கம் அதை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது.முதலாவது தொற்றலையின் போது பெருமளவுக்கு அள்ளிக்கொடுத்த புலம் பெயர்ந்த தமிழ்ச்சமூகம் பிந்திய அலைகளின் போது அந்தளவுக்கு உதவவில்லை என்று தெரிகிறது. அதுபோலவே கட்சிகளும் தன்னார்வ நிறுவனங்களும் முதலாவது அலையின்போது உதவிய அளவுக்கு பின்வந்த அலைகளில் உதவவில்லை. சமூகமுடக்கம் ஒரு பழகிப்போன விடயமாக மாறிவிட்டதே இதற்கொரு காரணம்.ஆனால் இதனால் பாதிக்கப்படுவது அன்றாடம் காய்ச்சிகள்தான்.

இதுதொடர்பில் அரசியல்வாதிகளும் கட்சிகளும் அரசியல் செயற்பாட்டாளர்களும் சமூக செயற்பாட்டாளர்களும் குறிப்பாக சிவில் சமூகங்களும் ஊடகங்களும் மத நிறுவனங்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய ஒரு தேவை இருக்கிறது. ஆனால் அவற்றை யார் ஒன்றிணைப்பது? அதைச் செய்யவேண்டியது தமிழ் கட்சிகள்தான்;தமிழ்மக்களுடைய பிரதிநிதிகள்தான்.ஆனால் அவர்களில் அனேகர் நாடாளுமன்றத்தில் உரையாற்றுவது அல்லது தெரிந்தெடுக்கப்பட்ட சில இடங்களுக்கு நிவாரணம் வழங்குவது என்பவற்றுக்கும் அப்பால் சமூகத்திற்கு வழிநடத்த வேண்டிய தமது பொறுப்புகளிலிருந்தும் தவறுகிறார்கள் என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.
சமூகமுடக்க காலத்தில் அரசாங்கத்தின் கைகளிலேயே எல்லாவற்றையும் கொடுத்துவிட்டு சாதாரண ஜனங்களோடு சேர்ந்து முடங்கிப் போவதற்கு மக்கள் பிரதிநிதிகள் தேவையில்லை. சமூகம் முடக்கப்பட்டிருக்கும் ஒரு காலகட்டத்தில் தெருவில் இறங்கி தமக்கு இருக்கக்கூடிய சிறப்புரிமையை பயன்படுத்தி ஏதோ ஒரு விதத்தில் சமூகத்துக்கு விழிப்பூட்ட வேண்டியது தமிழ் அரசியல்வாதிகளும் மக்கள் பிரதிநிதிகளும்தான். ஆனால் எத்தனை பேர் அதை செய்கிறார்கள்? அல்லது அவர்களால் ஏன் அப்படிச் செய்ய முடியவில்லை?


போரினால் சப்பித் துப்பிவிடப்பட்ட மக்களை வைரசுக்குப் பலி கொடுக்கக்கூடாது.அதாவது தொற்றுச் சங்கிலியை உடைக்க சமூக விழிப்பு அவசியம்.ஒருபுறம் வைரசுக்கு எதிராகாகவும் இன்னொருபுறம் சமூக முடக்கத்தை எதிர் கொள்ளவும் தமிழ்ப் பொதுஉளவியலைத் தயார்படுத்த வேண்டும்.தமிழ்க் கட்சிகளுக்கு இதில் பொறுப்பில்லையா?


நாடாளுமன்றத்தில் உரையாற்றுவது நல்லதுதான்.நிவாரணம் வழங்குவதும் தேவைதான்.ஆனால் அதற்குமப்பால் தமிழ்ப்பொது உளவியலைக் கட்டியெழுப்ப வேண்டும்.அதை சுகாதாரத்துறையும் தமிழ் அரசியல்வாதிகளும் அரசியல் செயற்பாட்டாளர்களும் சிவில் சமூகங்களும் மத நிறுவனங்களும் ஊடகங்களும் ஒன்றிணைந்து செய்ய வேண்டும். அப்படி ஒரு ஒன்றிணைவை சமூகத்தில் காணமுடியவில்லை.


ஒரு சமூகமுடக்க காலத்தில் மக்களுக்கு எப்படி விழிப்பூட்டுவது என்று கேட்கலாம்.இங்கேதான் ஒரு முக்கியமான விடயத்தை சுட்டிக்காட்ட வேண்டும். கட்சிகளுக்கு உள்ளூர் வலையமைப்புகள் பலமாக இருந்தால் அதன் மூலம் அந்த விழிப்புணர்வைச் செய்யலாம். உள்ளூர் சந்தைகள் இயங்கலாம் என்றால் உள்ளூர் கடைகளைத் திறக்கலாம் என்றால் உள்ளூரில் வாழ்க்கை வழமைபோல இயங்கலாம் என்றால் ஏன் உள்ளூர் வலையமைப்புக்கள் ஊடாக மக்களுக்கு விழிப்பூட்டக்கூடாது?

ஆனால் இங்குள்ள பாரதூரமான வெற்றிடம் என்னவென்றால் கட்சிகளிடம் அப்படிப்பட்ட உள்ளூர் வலையமைப்புகள் பலமாக இல்லை என்பதோடு கட்சித் தலைவர்களிடமும் இது தொடர்பில் தெளிவான தரிசனம் இல்லை என்பதுதான். அவர்கள் தமிழ் அரசியல் என்று விளங்கி வைத்திருப்பது நாடாளுமன்றத்தில் முழங்குவது அல்லது அனர்த்த காலத்தில் நிவாரணம் வழங்குவது. இவற்றுக்கும் அப்பால் ஒரு சமூகத்தின் பொது உளவியலைக் கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பை குறிப்பாக சமூகத்திற்கு வழிகாட்ட வேண்டிய பொறுப்பை எத்தனை தலைவர்கள் உணர்ந்து வைத்திருக்கிறார்கள்?

தமிழ்ச் சமூகத்தை உள்ளூர் உற்பத்திகளை நோக்கியும் வீட்டுத் தோட்டங்களை நோக்கியும் சுத்தமான காற்று சுத்தமான மரக்கறி உடற்பயிற்சி போன்றவற்றை நோக்கியும் தொடர்ச்சியறாத கற்றல் கற்பித்தலை நோக்கியும் ஊக்குவித்து வழிநடத்தி ஒருங்கிணைக்க வேண்டிய ஒரு பொறுப்பு தமிழ் அரசியல்வாதிகளுக்கு இல்லையா?மிகக்குறிப்பாக நோய்த்தொற்றுச் சங்கிலியை உடைக்கும் விதத்தில் சமூக நெருக்கத்தை சமூகத்திரட்சியை உள்ளூர்ச் சந்தைகளை எப்படித் தற்காப்புணர்வோடு திட்டமிடுவது ? என்பதை குறித்து மக்களுக்கு விழிப்பூட்ட வேண்டியது உள்ளூர் தலைவர்கள்தான்;உள்ளூர் தொண்டர்கள்தான்.மேலும் தடுப்பூசி தொடர்பாக தமிழ் மக்கள் மத்தியில் ஒருவித தயக்கம் உண்டு. அந்த தயக்கத்தை நீக்கி தடுப்பூசியை ஏற்றுக்கொள்ளும் ஒரு கூட்டு உளவியலை உருவாக்க வேண்டிய பொறுப்பு தமிழ் அரசியல்வாதிகளுக்கு உண்டு.

இதுவிடயத்தில் சில கிழமைகளுக்கு முன் விக்னேஸ்வரன் ஓர் அறிக்கை விட்டிருந்தார்.அதிலவர் வடக்கு கிழக்கிற்கு தடுப்பூசிகளை வழங்குமாறு இந்தியாவிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.அது ஒரு வேண்டுகோள் மட்டுமே. அதற்குமப்பால் தடுப்பூசி ஒரு பொருத்தமான தற்காப்பு நடைமுறை என்பதனை மக்களுக்கு தெரியப்படுத்தி மக்களுக்கு விழிப்பூட்ட வேண்டிய பொறுப்பு அரசியல்வாதிகளுக்கு இல்லையா? நாடாளுமன்ற உரைகள்,நிவாரணம் போன்றவற்றிற்குமப்பால் ஓரனர்த்த காலத்தில் தமது மக்களின் கூட்டு உளவியலைக் கட்டியெழுப்ப உழைக்காத அரசியல்வாதிகள் எப்படித் தேசத்தைக் கட்டியெழுப்புவார்கள் என்று நம்புவது?

 

https://globaltamilnews.net/2021/162239/

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கிருபன் said:

முதலாவது தொற்றலையின் போது பெருமளவுக்கு அள்ளிக்கொடுத்த புலம் பெயர்ந்த தமிழ்ச்சமூகம் பிந்திய அலைகளின் போது அந்தளவுக்கு உதவவில்லை என்று தெரிகிறது. அதுபோலவே கட்சிகளும் தன்னார்வ நிறுவனங்களும் முதலாவது அலையின்போது உதவிய அளவுக்கு பின்வந்த அலைகளில் உதவவில்லை. சமூகமுடக்கம் ஒரு பழகிப்போன விடயமாக மாறிவிட்டதே இதற்கொரு காரணம்.ஆனால் இதனால் பாதிக்கப்படுவது அன்றாடம் காய்ச்சிகள்தான்.

அன்றாடம் காய்ச்சிகளும் பின்தங்கிய உட்கிராமங்களில் இருப்பவர்களும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். 

மட்டக்களப்பில் அக்குரணை எனும் கிராமத்தில் வாழ்பவர்கள் எதுவித உதவிகளும் இன்றி இருப்பதாகவும், அவசர உலர் உணவு விநியோகத்திற்கு உதவுமாறு வாட்ஸப் குறூப் ஒன்றில் வேண்டுகோள் வந்தது. இயன்ற சிறு பங்களிப்பைச் செய்தேன்.

ஆனாலும், கட்சிகளும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இன்னும் அதிகமாக சேவை செய்யவேண்டிய காலம் இது. இல்லாவிட்டால் மக்கள் பப்பாசிக் காய்களையே சாப்பிடும் நிலை (சிங்கள ஊர் ஒன்றில் இருக்கும் வேடுவ இனத்தினர் பப்பாசிக் காய்களை சாப்பிடுவதாக செய்தி பார்த்தேன்) தொடர்கதையாகிவிடும்.

  • கருத்துக்கள உறவுகள்

எனது மற்றும் அயற்கிராமங்கள் சிலவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாற்றுதிறனாளிகள், பெண்தலைமைத்துவ சிறுவர்களை அதிகமாக கொண்ட குடும்பங்கள், வருமானம் ஈட்டமுடியாத ஆதரவற்ற முதியோர் அண்ணளவாக 50 பேருக்கு 5000 ரூபா வீதம் கனடாவில் உள்ள நண்பர் வழங்க தொடங்கியுள்ளார். பயணத்தடை நீடிக்கப்பட்டுள்ள இந்நேரத்தில் இப்பணம் மிகுந்த உதவியாக இருப்பதாக பயன்பெற்றோர் தெரிவித்தனர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.