Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மியூனிக் ஒலிம்பிக் படுகொலை: பாலத்தீன இயக்கத்தைப் பழிவாங்கிய இஸ்ரேல் - விளையாட்டு வரலாறு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மியூனிக் ஒலிம்பிக் படுகொலை: பாலத்தீன இயக்கத்தைப் பழிவாங்கிய இஸ்ரேல் - விளையாட்டு வரலாறு

19 ஜூலை 2021
மியூனிக்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

1972இல் பாலத்தீன ஆயுதப்போராளிகளால் கொல்லப்பட்ட இஸ்ரேலிய வீரர்களுக்காக நியூயார்க்கில் 2012இல் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வைப் பார்வையிடும், அந்த படுகொலை சம்பவத்தில் இருந்து உயிர் பிழைத்த இஸ்ரேலிய ஒலிம்பிக் முன்னாள் வீரர் அவி மெலமெட்.

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி பெருமைக்குரியது. உலக ஒருங்கிணைப்பின் அடையாளம் அது. பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட்டிருக்கிறது. அரசியல் ஆதாயம் தேடுவதற்கும் பயன்பட்டிருக்கிறது. பகையையும், வெறுப்பையும் மறந்து ஒரே களத்துக்குள் நாடுகளை இழுத்து வந்திருக்கிறது. அப்படிப்பட்ட விளையாட்டுக்களம் போர்க்களமான ஆண்டு 1972.

1972 -ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியானது 1936-க்குப் பிறகு மேற்கு ஜெர்மனி நடத்திய மாபெரும் விளையாட்டுத் திருவிழா. தம்மை அரசியல் ரீதியாகக் கட்டமைத்துக் கொள்வதற்காக ஒலிம்பிக் போட்டிகளை ஹிட்லர் பயன்படுத்திக் கொண்டார் என்ற கறை அந்த நாட்டின் மீது இருந்தது. இந்தக் கறையைப் போக்கி நாட்டின் மரியாதையை மீண்டும் கட்டமைப்பதற்காக மியூனிக் நகரில் ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

ராணுவக் கட்டுப்பாடுகள் கொண்ட நாடு என்ற பெயரை மாற்ற வேண்டும். இனப் பாகுபாடுகள் இல்லாத தேசமாக அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும், யூதர்களின் எதிரி என்ற பொதுக்கருத்தை உடைக்க வேண்டும் என்பன போன்ற குறிக்கோள்கள் மேற்கு ஜெர்மனிக்கு இருந்தன.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, மேற்கு ஜெர்மனியின் ராணுவ பலமும் ஆயுத பலமும் பெருமளவு குறைக்கப்பட்டிருந்தன. காவல்துறையினருக்கு வழங்கப்பட்டிருந்த துப்பாக்கிகள் கூடப் பழையவை. ஜெர்மானிய ஆயுதப் படையினருக்கு நவீன காலப் பயிற்சிகள் எதுவும் கிடையாது. சிறப்புப்படையில் இருந்த பலருக்கு புதியவகை ஆயுதங்களைப் பயன்படுத்தவே தெரியாது.

 

இவ்வளவு குறைபாடுகளைக் கொண்டிருந்த மேற்கு ஜெர்மனி, தங்களால் முடிந்த அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தது. எந்தெந்த வழிகளில் எல்லாம் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படலாம் என்று ஊகிக்கப்பட்டு, அதை எப்படி முறியடிக்கலாம் என்பதற்குத் திட்டங்கள் வகுக்கப்பட்டிருந்தன. மேற்கு ஜெர்மனியின் குற்றவியில் நிபுணர் ஜார்ச் சீபர் 26 வழிகளில் பயங்கரவாதச் சதிச் செயல் அரங்கேற்றப்படுவதற்கு வாய்ப்பிருப்பதாகச் சொன்னார். அவற்றைத் தடுப்பதற்கான பாதுகாப்பு யோசனைகளையும் வழங்கியிருந்தார்.

மியூனிக் ஒலிம்பிக் பெருமைக்குரியதாக இருந்தது ஏன்?

மியூனிக் படுகொலை

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

மியூனிக் படுகொலை சம்பவத்தில் உயிர் இழந்த 11 இஸ்ரேலிய வீரர்கள் மற்றும் பயிற்சியாளரின் நினைவுப்படங்கள்

அது 1972 ஆகஸ்ட் மாதம் கடைசி வாரம். 122 நாடுகளின் வீரர்கள், பயிற்சியாளர்கள் என மியூனிக் நகரம் திருவிழாவுக்கத் தயாராக இருந்தது. சுற்றுலாத் துறை விரிவான ஏற்பாடுகளைச் செய்திருந்தது. உலகில் தங்களது பெருமையைப் பறைசாற்றிக் கொள்வதற்கான வாய்ப்பாக மேற்கு ஜெர்மனி மக்கள் ஒலிம்பிக் போட்டிகளைப் பார்த்தார்கள்.

ஆகஸ்ட் மாதம் 26-ஆம் தேதி பிரும்மாண்டமான வகையில் போட்டிகள் தொடங்கின. நீச்சல், பளுதூக்குதல், ஜிம்னாஸ்டிக் போன்ற விளையாட்டுகளுக்கான பதக்கப் போட்டிகள் இரண்டாம் நாளிலேயே நடந்தன. அமெரிக்காவைச் சேர்ந்த நீச்சல் வீரர், Mark Spitz ஏழு தங்கப் பதக்கங்களை வென்று உலக சாதனை படைத்தார். அவர் ஒரு யூதர். இதை இங்கு குறிப்பிடுவதற்கும் காரணம் உண்டு.

மியூனிக்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

மியூனிக் ஒலிம்பிக் கிராமம்

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, எந்த மண்ணில் யூதர்கள் சித்திரவதை செய்யப்பட்டார்களோ, அதே நாட்டில் யூதர் ஒருவர் தங்கப் பதக்கங்களைக் குவித்தார். மேற்கு ஜெர்மனி மீதான கறை துடைக்கப்பட்டதாகவே கருதப்பட்டது. ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் ஒல்கா கோர்புட் மூன்று தங்கப் பதக்கங்களை வென்றார். இவர் சோவியத் ஒன்றியத்தைச் சேர்ந்தவர்.

எந்த நாட்டுடன் மேற்கு ஜெர்மனி கடும்பகை கொண்டிருந்ததோ அந்த நாட்டு வீராங்கனை ஜெர்மானிய மண்ணில் கவுரவிக்கப்பட்டார். ஹிட்லரின் நாடு என்ற பெயர் மறக்கப்படும் என்று மக்கள் எண்ணியிருந்தார்கள். அவர்களது எண்ணத்தைப் போலவே முதல் வாரம் முழுவதும் போட்டிகள் விறுவிறுப்பாகச் சென்று கொண்டிருந்தன.

அதிகாலைப் பயங்கரம்

ஒலிம்பிக் கிராமத்தில் பல நாட்டு வீரர்களும் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த்து. இஸ்ரேலிய வீர்ர்களும் அவர்களில் அடங்குவார்கள். போட்டிகள் தொடங்கி ஒருவாரம் முடிந்து போயிருந்த நேரம். முந்தைய நாள் ஆட்டங்களுக்குப் பிறகு இஸ்ரேலிய வீர்ர்கள் தங்களது விடுதியில் களைப்பாகத் தூங்கிக் கொண்டிருந்தனர். இஸ்ரேலிய நடிகருடன் சேர்ந்து இரவு விருந்தை உண்ட மகிழ்ச்சி அவர்களுக்குள் இருந்தது.

மூனிக்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

பிணைக் கைதிகளைப் பிடித்து வைத்திருந்த ஆயுதக் குழுவைச் சேர்ந்த ஒருவர் சுற்றி என்ன நடக்கிறது எனப் பார்க்கிறார்

இந்தச் சம்பவங்களும், தொடர்ந்து வரும் நிகழ்வுகளும் பல்வேறு ஆவணப் படங்களிலும் விசாரணை அறிக்கைகளிலும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

அது செப்டம்பர் 5-ம் தேதி. காலை 4.30 மணி. ஒலிம்பிக் கிராமத்தில் இருந்த இஸ்ரேலிய வீரர்கள் இருந்த விடுதிக்குள் விளையாட்டு வீரர்களுக்கான ஆடைகளை அணிந்த 8 பேர் நுழைந்தனர். விளையாட்டு உபகரணங்களைக் கொண்டு செல்லும் கைப் பைகள் அவர்களிடம் இருந்தன. தாமதமாக வந்த விளையாட்டு வீரர்களாக இருக்கலாம் என்று மற்றவர்கள் நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்கள் பயங்கரமான திட்டத்தோடு வந்திருந்தார்கள். அவர்களது கைகளில் இருந்தவை விளையாட்டு உபகரணங்கள் அல்ல. இயந்திரத் துப்பாக்கிகள், கையெறி குண்டுகள், வெடிபொருள்கள் போன்றவை. அவற்றைக் கொண்டு மிகப்பெரிய தாக்குதலுக்குத் தயாரானார்கள்.

மூனிக்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

யூசுப் கட்ஃப்ரென்ட்

அந்த நேரத்தில் கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டு, இஸ்ரேலியக் குழுவில் இருந்த மல்யுத்தப் போட்டிகளுக்கான நடுவர் யூசுப் கட்ஃப்ரென்ட் விழித்துக் கொண்டார். கதவுக்குப் பின்னால் துப்பாக்கி ஏந்திய ஆள்கள் இருப்பதைப் பார்த்த அவர், தனது 135 எடை கொண்ட உடலால் கதவைத் தாங்கிப் பிடித்துக் கொண்டு, மற்றவர்களை எழுப்பும் வகையில் உரக்கக் குரல் எழுப்பினார்.

குரல் கேட்டு அந்த அறையிலும் அருகிலிருந்த அறைகளிலும் இருந்த பலர் விழித்துக் கொண்டார்கள். சிலர் நிலைமையைப் புரிந்து கொண்டு ஜன்னலை உடைத்துத் தப்பித்தார்கள். ஆனால் பயங்கரத்தை தடுக்க முடியவில்லை. அறைக் கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்த ஆயுதமேந்திய நபர்களை மல்யுத்தப் பயிற்சியாளர் வெய்ன்பர்க் கடுமையாகத் தாக்கினார். சில நிமிடங்களில் அவரைத் துப்பாக்கிக் குண்டுகள் துளைத்தன. மற்றொரு பளு தூக்கும் வீரரையும் ஆயுதமேந்திய நபர்கள் சுட்டுக் கொன்றனர்.

இவர்களைத் தவிர மொத்தம் 9 பேர் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டனர். உடல் அளவில் மிகப் பெரியவரான யூசுப் கட்ஃப்ரென்ட் ஒரு நாற்காலியிலும் மற்றவர்கள் படுக்கைகளிலும் கட்டிப்போடப்பட்டனர். பயங்கரச் சத்தத்தால் விடுதியில் இருந்த ஹாங்காங், உருகுவே போன்ற நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பால்கனியில் இருந்து குதித்துத் தப்பித்தார்கள். தாக்குதல் செய்தி உலகமெங்கும் பரவியது. இஸ்ரேலிய பிரதமர் கோல்டா மேயர் பரபரப்பானார்.

மூனிக்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

இஸ்ரேலிய மல்யுத்தப் பயிற்சியாளர் மோஷே வெய்ன்பெர்க்

அதிகாரிகளும் பாதுகாப்புப் படையினரும் இஸ்ரேலிய வீர்ர்கள் தங்கியிருந்த விடுதியைச் சுற்றிக் குவிந்தனர். பிணைக் கைதிகளை விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தை தொடங்கியது. ஆயுதமேந்தி வந்தவர்கள், கறுப்பு செப்டம்பர் என்று அழைக்கப்படும் பாலத்தீன விடுதலை இயக்கத்தின் ஒரு பிரிவினர் என்பது தெரியவந்தது.

9 இஸ்ரேலிய வீர்ர்களைப் பிடித்து வைத்திருந்த பிளாக் செப்டம்பர் இயக்கத்தினர் இஸ்ரேலிய சிறைகளில் இருக்கும் 234 பாலத்தீனர்களையும் மேற்கு ஜெர்மனி வசமிருக்கும் ஜெர்மானியச் செம்படையைச் சேர்ந்த இருவரையும் விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இஸ்ரேலிய பிரதமர் கோல்டா மேயர் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. "பயங்கரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவது தற்கொலைக்கு ஒப்பானது" என்று கூறினார். இஸ்ரேலியச் சிறப்புப் படையினரைக் கொண்டு சில மணி நேரங்களில் பிணைக் கைதிகளை மீட்க முடியும் என்று இஸ்ரேல் நம்பியது. ஆனால் ஜெர்மனி இதை ஏற்கவில்லை.

மியூனிக் நகருக்கு அருகேதான் Dachu என்ற வதை முகாம் இருந்தது. ஜெர்மனியில் ஹிட்லர் உருவாக்கிய யூத வதை முகாம்களில் இது முதன்மையானது. சுமார் இரண்டு லட்சம் பேரை அடைத்து வைத்திருந்த இடம் இது. இரண்டாம் உலகப் போர் நடந்த காலத்தில் இங்கு சுமார் 32 ஆயிரம் பேர் கொல்லப்பட்டார்கள்.

மூனிக்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

ஆயுதக் குழுவைச் சேர்ந்த ஒருவர்

1972-ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் இந்தப் பழங்கதையை நினைவுபடுத்தின. ஏனெனில், பிளாக் செம்டம்பர் இயக்கத்தினர் பிடித்து வைத்திருந்த பிணைக் கைதிகள் அனைவரும் யூதர்கள். ஜெர்மனியில், அதுவும் யூத வதை முகாம் அமைந்திருந்த பகுதிக்கு அருகிலேயே மீண்டும் ஒரு முறை யூத ரத்தம் படிந்தது. 11 பேரில் இரண்டு பேரை பிளாக் செம்டம்பர் இயக்கத்தினர் ஏற்கெனவே கொன்றுவிட்டார்கள். மீதம் இருப்பவர்களைக் காப்பாற்றியாக வேண்டும் என்ற நெருக்கடி மேற்கு ஜெர்மனிக்கு ஏற்பட்டிருந்தது.

பிணைக் கைதிகளை விடுவிக்கப் பேச்சுவார்த்தை

ஆயுதமேந்திய குழுவினரை வழிநடத்தி வந்தவராகக் கருதப்படும் ஈஸாவுடன் காவல்துறையினர் நேரடியாகப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தனர். ஆனாலும் எந்தவிதமான முடிவையும் எட்டமுடியவில்லை. கடத்தல்காரர்களின் கோரிக்கையை நிறைவேற்ற முடியாது என்பது ஜெர்மனிக்குப் புரிந்தது.

தேவைப்பட்டால் எத்தனை கோடி பணம் வேண்டுமானாலும் தரத் தயாராக இருப்பதாக ஆயுதக் குழுவினரிடம் தெரிவிக்கப்பட்டது. அது முடியாவிட்டால், ஜெர்மானிய உயர் அதிகாரிகளைப் பிணைக் கைதிகளாகத் தருவதாகவும் கூறப்பட்டது. எப்படியாவது யூத விளையாட்டு வீரர்களை மீட்டு இஸ்ரேலிடம் ஒப்படைத்துவிட வேண்டும் என்ற முயற்சியில் மேற்கு ஜெர்மனி அரசு செயல்பட்டது. ஆனால் ஆயுதக் குழுவினர் எதற்கும் இசையவில்லை.

தாக்குதல் நடத்தி, பிணைக் கைதிகளை மீட்கும் அளவுக்கு மேற்கு ஜெர்மனியிடம் வசதியில்லை. தாக்குதல் நடந்த இடத்தில் குவிக்கப்பட்டிருந்தவர்கள் அனைவரும் சாதாரண காவல்துறையினர். தீவிரவாதிகளிடம் சண்டையிட்ட அனுபவமே இல்லாதவர்கள். துல்லியமாகச் சுட்டுப் பழக்கம் இல்லாதவர்கள். அவர்களிடம் மிகச் சாதாரணமான துப்பாக்கிகளே இருந்தன. இருப்பினும், தாக்குதல் நடத்துவது என ஜெர்மனி முடிவுக்கு வந்தது.

மூனிக்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

ஒலிம்பிக் கிராமத்தைச் சுற்றிக் குழுமியிருந்த ஊடகத்தினர்

இந்தக் காட்சிகள் அனைத்தையும் தொலைக்காட்சிகள் நேரலையாக ஒளிபரப்பிக் கொண்டிருந்தன. அதனால் காவல்துறையினர் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள், அவர்களது திட்டம் என்ன என்பதை ஆயுதக் குழுவினர் உடனுக்குடன் அறிந்து கொண்டிருந்தார்கள்.

காவல்துறையின் தாக்குதல் திட்டம் தெரிந்த ஆயுதக் குழுவினர், எச்சரிக்கும் விதமாக இரு பிணைக் கைதிகளைக் கொன்றுவீசப் போவதாக அறிவித்தார்கள். காவல்துறையினர் உடனடியாகப் பின் வாங்கினர்.

சோகத்தில் முடிந்த மீட்பு முயற்சி

மியூனிக் படுகொலை

பட மூலாதாரம்,DAVID RUBINGER

 
படக்குறிப்பு,

1972 ஒலிம்பிக் போட்டியில் பலியான மகனின் இறுதி நிகழ்வில் பங்கேற்ற வீரர் ஒருவரின் தாய்.

மாலை 6 மணி. இஸ்ரேலிய வீரர்கள் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டு 13 மணி நேரம் ஆகியிருந்தது. ஆயுதக் குழுவினரிடம் இருந்து இன்னொரு கோரிக்கை வந்தது. தங்களையும் பிணைக் கைதிகளையும் எகிப்து தலைநகர் கெய்ரோவுக்கு அனுப்பி வைக்கும்படி ஜெர்மானிய அதிகாரிகளுக்கு அவர்கள் கெடு விதித்தார்கள். உடனடியாக ஜெர்மனி, எகிப்துடன் பேசிப் பார்த்தது. எந்தப் பலனும் இல்லை. இருப்பினும் எகிப்து ஒப்புக் கொண்டுவிட்டதாக ஆயுதக் குழுவினரிடம் காவல்துறையினர் தெரிவித்தனர். அவர்களும் ஏற்றுக் கொண்டார்கள்

ஹெலிகாப்டர் மூலம் அருகில் உள்ள Fürstenfeldbruck விமான நிலையத்துக்குச் சென்று அங்கிருந்த கெய்ரோவுக்குச் செல்வது என ஆயுதக் குழுவிடம் தெரிவிக்கப்பட்டது. அதற்காக ஹெலிகாப்டர்கள் வரவழைக்கப்பட்டன. ஹெலிகாப்டருக்கு நடந்து செல்லும் வழியில் கடத்தல்காரர்களைச் சுற்றி வளைத்துக் கொன்றுவிட்டு, பிணைக் கைதிகளை மீட்கலாம் என ஜெர்மானிய அதிகாரிகள் திட்டமிட்டார்கள்.

இதைப் புரிந்து கொண்ட ஆயுதக் குழுவினர், உடனடியாக தங்களது திட்டத்தை மாற்றினார்கள். நடந்து செல்வதற்குப் பதிலாக பேருந்தில் செல்லப் போவதாகக் கூறினார்கள். பேருந்தும் வரவழைக்கப்பட்டது. பேருந்து மூலம் ஹெலிகாப்டருக்குச் சென்ற ஆயுதக் குழுவினர். அங்கிருந்து விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்தனர். ஜெர்மானிய அதிகாரிகளின் தாக்குதல் திட்டம் விமான நிலையத்தில் அரங்கேற்றப்பட இருந்தது.

ஆனால் போதிய ஒருங்கிணைப்பு இல்லாததால், தாக்குதல் திட்டம் பெருந் தோல்வியில் முடிந்தது. பயங்கரவாதிகளைக் கொல்வதற்கான வாய்ப்புகள் இருந்தும், போதிய திறன் இல்லாததால், ஜெர்மானிய வீரர்கள் அனைத்தையும் தவறவிட்டனர். துப்பாக்கிச் சண்டை தொடங்கியதுமே, பிணைக் கைதிகள் அனைவரையும் கொன்றுவிட ஆயுதக் குழுவினர் தீர்மானித்தார்கள். இயந்திரத் துப்பாக்கிகளால் சரமாரியாகச் சுட்டும், ஹெலிகாப்டரில் வெடிகுண்டுகளை வீசியும் பிணைக் கைதிகளைக் கொன்றனர். காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஆயுதக் குழுவின் 5 பேர் கொல்லப்பட்டனர். மூன்று பேர் உயிருடன் பிடிபட்டார்கள்.

சுமார் 21 மணி நேரம் நடந்த இந்தப் பயங்கர நிகழ்வால் நவீன ஒலிம்பிக் யுகத்தில் முதன் முறையாக போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன. செப்டம்பர் ஆறாம் தேதி நடந்த நினைவஞ்சலி நிகழ்ச்சியில் சுமார் 80 ஆயிரம் பேர் பங்கேற்றார்கள். அதிலும் ஒர சோகம். இஸ்ரேலிய வீரர் வெய்ன்பெர்க்கின் உறவினரான கார்மல் எலியாஷ் நினைவஞ்சலி நிகழ்ச்சியின்போது மயங்கி விழுந்து இறந்துபோனார். பெரும்பாலான நாடுகளின் கொடிகள் அரைக்கம்பத்தில் பறந்து கொண்டிருக்க. அரபு நாடுகள் மட்டும் தங்களுடைய கொடிகளை இறக்குவதற்கு அனுமதிக்கவில்லை.

போட்டிகள் தொடர்ந்தன. பெரும்பாலான யூத வீரர்கள் போட்டியின் பாதியிலேயே வெளியேறியிருந்தார்கள். பல வீரர்கள் போட்டியில் பங்கேற்க முடியாத அளவுக்கு மன அழுத்தத்தை உணர்ந்திருந்தார்கள். போட்டிகளின் முடிவில் சோவியத் ஒன்றியம் 50 தங்கப் பதக்கங்களும், அமெரிக்கா 33 தங்கப் பதக்கங்களும், கிழக்கு ஜெர்மனி 20 தங்கப் பதக்கங்களும் பெற்றன. போட்டியை நடத்திய மேற்கு ஜெர்மனி 13 தங்கப் பதக்கங்களையும் வென்றது.

இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடக்கின்றன.

பட மூலாதாரம்,PHILIP FONG VIA GETTY IMAGES

 
படக்குறிப்பு,

இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடக்கின்றன.

மியூனிக்கில் கைது பிடிபட்ட ஆயுதக் குழுவைச் சேர்ந்த 3 பேர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்கள். விசாரணையும் தொடங்கியது. ஆனால் இஸ்ரேல் நினைத்தது எதுவும் நடக்கவில்லை

மியூனிக் சம்பவம் நடந்த ஒரே மாதத்தில், சிரியாவில் இருந்து ஜெர்மனியின் பிராங்பர்ட் நகர் நோக்கிச் சென்ற விமானத்தை பிளாக் செம்டம்பர் இயக்கத்தினர் கடத்தினார்கள். மியூனிக்கில் பிடிபட்ட 3 பேரையும் விடுவிக்குமாறு மிரட்டினார்கள். வேறு வழியின்றி மியூனிக் ஒலிம்பிக் போட்டிகளின்போது, இஸ்ரேலிய வீரர்களைக் கொன்ற மூவரையும் ஜெர்மனி அரசு எந்த நிபந்தனையும் இன்றி விடுவித்தது.

"கடவுளின் கடுஞ்சினம்"

இந்த இழப்புகளுக்கு இஸ்ரேல் பழிவாங்கத் துடித்துக் கொண்டிருந்தது. அதற்காக இஸ்ரேலின் மொசாத் உளவு அமைப்பு நடத்திய ரகசிய நடவடிக்கைதான் OPERATION WRATH OF GOD. இதற்கு கடவுளின் கடுஞ்சினம் என்று பொருள். பெயருக்கு ஏற்றபடியே மொசாத்தின் இந்தப் பதிலடியும் அமைந்தது. இஸ்ரேலின் பிரதமர் கோல்டா மேயரின் உத்தரவுப்படி தாக்குதலுடன் தொடர்புடைய பாலத்தீன விடுதலை இயக்கத்தின் கறுப்பு செப்டம்பர் பிரிவைச் சேர்ந்தவர்களும். ஜெர்மானியர்களும் ஒவ்வொருவராகக் குறிவைத்து அழிக்கப்பட்டனர்.

1972-ஆம் ஆண்டு தொடங்கி இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நடவடிக்கையை மொசாத் நடத்தி வந்தது. மொசாத்தின் இந்த இந்த நடவடிக்கைக்கு முதலில் இரையானவர் WAEL ZWAITER என்ற பாலத்தீனர். ரோம் நகரில் பதுங்கியிருந்தபோது இவரைத் தேடிப்பிடித்து மொசாத் உளவாளிகள் கொன்றனர். இதேபோல் பிரான்ஸ், சைப்ரஸ், சிரியா, லெபனான், நார்வே என பல நாடுகளிலும் இந்த நடவடிக்கை பரந்து விரிந்திருந்தது. தொலைபேசி, படுக்கை, கார் என்ற எதிர்பாராத இடங்களில் எல்லாம் குண்டுகள் வைக்கப்பட்டு தொடர்புடையவர்கள் கொல்லப்பட்டனர். சிலர் நேருக்கு நேர் துப்பாக்கியால் சுடப்பட்டனர்.

மியூனிக்கில் யூத வீரர்கள் அரை நூற்றாண்டு ஆகிறது. படுகொலைகளுக்காக இஸ்ரேல் முழுமையாகப் பழிதீர்த்து முடித்துவிட்டது. ஆயினும் ஒலிம்பிக் போட்டிகளுக்கான பாதுகாப்பு என்றால், மியூனிக் நகரின் மோசமான சம்பவங்களையே இன்றும் நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறது.

https://www.bbc.com/tamil/global-57885445

போற போக்கை பாத்தா அவங்களுக்கு எதிரா சிந்திக்க வெளிக்கிட்டாலே ஆப்பு வைப்பாங்கள் போல!

  • கருத்துக்கள உறவுகள்
On 28/7/2021 at 02:30, ஏராளன் said:

போற போக்கை பாத்தா அவங்களுக்கு எதிரா சிந்திக்க வெளிக்கிட்டாலே ஆப்பு வைப்பாங்கள் போல!


இப்பொழுது அப்படி சிந்திக்கமாட்டார்கள் என நம்புவோமாக.. ஆனால் இம்முறையும் ஒலிம்பிக்கில் அல்ஜீரியா(Fethi Nourine ) மற்றும் சூடானை(  Mohamed Abdalrasool ) சேர்ந்த இரு Judo வீரர்கள், இஸ்ரேலிய Judo வீரரை எதிர்த்து போட்டியிட மறுத்து வெளியேறியதாக செய்தி உள்ளது.. 

 

https://www.google.com.au/amp/s/amp.theguardian.com/sport/2021/jul/24/algerian-judoka-sent-home-from-olympics-after-refusing-to-compete-against-israeli

 

https://www.google.com.au/amp/s/amp.theguardian.com/sport/2021/jul/26/judo-athlete-sudan-withdraws-before-israel

 

 

  • கருத்துக்கள உறவுகள்
On 27/7/2021 at 12:30, ஏராளன் said:

1972இல் பாலத்தீன ஆயுதப்போராளிகளால் கொல்லப்பட்ட இஸ்ரேலிய வீரர்களுக்காக நியூயார்க்கில் 2012இல் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வைப் பார்வையிடும், அந்த படுகொலை சம்பவத்தில் இருந்து உயிர் பிழைத்த இஸ்ரேலிய ஒலிம்பிக் முன்னாள் வீரர் அவி மெலமெட்.

பாலஸ்தீன ஆயுதப்போராளிகள் அல்ல பாலஸ்தீன பயங்கரவாதிகள். விளையாட்டு வீரர்கள் மீது கோழைத்தனமான பயங்கரவாதத் தாக்குதல் இது!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.