Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆப்கானிஸ்தான்: ஒரு முடிவும் ஒரு தொடக்கமும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆப்கானிஸ்தான்: ஒரு முடிவும் ஒரு தொடக்கமும்

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

புதிய போர் ஒழுங்கின் முதலாம் அத்தியாயம் - 1

சில வாரங்களுக்கு முன்னர், ஆப்கானிஸ்தானில் அரங்கேறியவை பலர் எதிர்பாராதது. 20 ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்கானில் தொடங்கியது, ஒரு முழுச் சுழற்சியை நிறைவுசெய்து, தொடங்கிய இடத்தில் மீண்டும் ஆப்கானை நிறுத்தியுள்ளது. இந்த 20 ஆண்டுகளில் உலகம் மாறிவிட்டது. அரசியல்ரீதியாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் இந்த மாற்றங்கள் குறிப்பிடத்தக்கவை. இந்தப் பின்புலத்தில், இப்போதைய நிலைவரத்தை எவ்வாறு புரிந்துகொள்வது?  நீண்ட நெடிய போரில் இருந்தான அமெரிக்காவின் வெளியேற்றம் சொல்லுகின்ற செய்தி என்ன? 

இலங்கையில் குறிப்பாகத் தமிழர்களினதும் தாராண்மைவாதிகளினதும் மிகவும் நம்பிக்கைக்குரிய ‘சர்வதேச சமூகத்தின்’ நடத்தை எதை விளக்குகிறது?
 ஒடுக்கப்படும் சமூகங்களின் விடுதலைக்கான பாதையை, இந்தப் புதிய ஒழுங்கில் எவ்வாறு கட்டமைப்பது?

இக்கேள்விகள் அனைத்தினதும் அடிப்படையில் உருவாகின்ற புதிய திசைவழிகளும்  உருவாகும் அரங்குகளும் அதன் அரங்காடிகளும் ஏற்படுத்தப்போகும் புதிய ஒழுங்கின் முரண்பாடுகள் கட்டமைக்கும் போரொழுங்கின் முதலாவது அத்தியாயத்தை ஆப்கானிஸ்தான் பரிசளித்திருக்கிறது. 

இவை குறித்து, ஆழமான வரலாற்றுப்புலம், அரசறிவியல் கோட்பாட்டுருவாக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் நோக்கும் முயற்சியே இத்தொடர் ஆகும்.
2001ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 11ஆம் திகதி, அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் மீதான தாக்குதல் ஏற்படுத்திய அதிர்ச்சியின் எதிர்வினையே, ஆப்கான் மீதான அமெரிக்காவின் போர். 

இந்தத் தாக்குதல் இரண்டு விடயங்களைச் சாதித்தது. முதலாவது, கெடுபிடிப்போரின் பின்னரான உலக ஒழுங்கின் தனிப்பெரும் தலைவனாகவும் பாதுகாப்பு, உளவுபார்த்தல் ஆகியவற்றின் நாயனாகவும் தன்னை உருவகப்படுத்திக் கொண்டிருந்த அமெரிக்காவின் பிம்பத்தை உடைத்தது. 

இரண்டாவது, தன்னைத் தன்னிகரல்லாத தலைவனாகக் காட்டிக்கொள்ள ‘பயங்கரவாத்துக்கு எதிரான போர்’ என்ற ஒன்றைத் தொடங்கி, அச் செல்நெறியைப் பொதுமையாக்கியது. “நீங்கள் எங்களோடு இருக்கிறீர்கள்; அல்லது, பயங்கரவாதிகளோடு இருக்கிறீர்கள்” என்ற அன்றைய அமெரிக்க ஜனாதிபதியின் வார்த்தைகள், அமெரிக்காவுக்கு ஆதரவு தராதவர்கள் பயங்கரவாதிகள் என்ற கதையாடலை உருவாக்கியது. 

இரட்டைக் கோபுரத் தாக்குதல்கள் குறித்த பல கேள்விகளுக்கு இன்றுவரை பதில் கிடைக்கவில்லை. ஆனால், எழுப்பப்பட்ட சந்தேகங்கள் நியாயமானவை. அதில், சிலவற்றை இங்கே பார்க்கலாம். 

இவ்வளவு நுட்பமாக ஒரு தாக்குதலை நடத்துவதற்கான திட்டமிடலும் அதை உலகின் தலைசிறந்த உளவு நிறுவனங்கள் உள்ள அமெரிக்காவில் செய்து முடிப்பதும், அமெரிக்காவுக்குள் எவருடைய உதவியும் இல்லாமல் நடந்திருக்க இயலுமா? 

அத்தாக்குதல், இஸ்லாமிய தீவிரவாதிகள் எவரும் இலக்கு வைக்க விரும்பக்கூடிய யூதப் பெருவணிகர்கள்,  கட்டடத்துக்குள் நுழைவதற்கு  முன்னரே ஏன் நடந்தது? 
இத்தாக்குதல், அமெரிக்கப் பொருளாதாரத்துக்குக் குறிப்பிடத்தக்க தீங்கு எதையும் செய்துள்ளதா? இதனால், உலகின் ஆயுதப் பெரு வல்லரசு என்ற அமெரிக்காவின் தகுதிக்கு, எவ்விதமான கேடும் நேர்ந் துள்ளதா? இவை நியாயமான கேள்விகளே! ஆனால், இதன் பொருள் இதை இஸ்லாமியத் தீவிரவாதிகள் செய்யவில்லை என்ற வாதமில்லை என்பதையும் அடிக்கோடிட வேண்டும். 

பல அமெரிக்க ஆய்வாளர்கள், மூன்று முக்கியமான விடயங்களைத் தொடர்ச்சியாகச் சுட்டிக்காட்டிய வண்ணம் உள்ளார்கள். 

முதலாவது, இரட்டைக் கோபுரத்தின் மீது நடந்த விமானத் தாக்குதல் பற்றிய பல உண்மைகள், இன்னமும் அமெரிக்க மக்களுக்குக் கூறப்படவில்லை. தகவல்கள் மறைக்கப்படுவது, சந்தேகங்களை அதிகரிக்கின்றதேயன்றி தீர்க்கவில்லை. 

இரண்டாவது, அமெரிக்க அரசின் உளவு நிறுவனம் ஒன்று, அமெரிக்க முதலாளி வர்க்கத்தில் எவருக்கும் உடல் சேதம் இல்லாமல் ஒரு பயங்கர படுகொலையை நடத்தியிருக்க இயலாதா என்பது, நாம் புறக்கணிக்கக்கூடிய வினாவல்ல. 

மூன்றாவது, இத்தாக்குதல் அமெரிக்க பொருளாதாரத்துக்குக் குறிப்பிடத்தக்க பாதிப்பையோ, பின்னடைவையோ ஏற்படுத்தவில்லை. 

இவ்விடத்தில், பேராசிரியர் மிசல் சவ்சிடொஸ்கி எழுதிய ‘America’s “War on Terrorism’ என்ற நூல் சில முக்கியமான வாதங்களை முன்வைக்கிறது. இதன்படி, அமெரிக்கா முன்னெடுத்த பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தமென்பது, ஆண்டொன்றுக்கு 40 பில்லியன் அமெரிக்க டொலர்  செலவழிக்கின்ற அமெரிக்க புலனாய்வு நிறுவனத்தை, ஒசாமா பின்லாடன் என்ற ஒரு தனிமனிதன் மிஞ்சினான் என்ற மாயையில் கட்டமைக்கப்பட்டது. அமெரிக்கப் பெரு நிறுவனங்களாலும், இராணுவ-வர்த்தகக் கூட்டாளிகளாலும் முன்னெடுக்கப்பட்ட உலகைச் சுரண்டுவதற்கான ஒரு முன்னேற்பாடே இது. இந்தப் புத்தகம், ஒசாமா பின்லாடன் இருந்த பாகிஸ்தான் வீட்டின் புத்தக அலுமாரியில் இருந்த புத்தகங்களில் ஒன்றாகும். 

இதன் பின்னணியிலேயே, 9/11 தாக்குதலின் எதிர்வினைகளை நோக்க வேண்டியுள்ளது. அமெரிக்கா, சோவியத் ஒன்றியம் ஆகிய நாடுகளுக்கிடையிலான கெடுபிடிப்போர் முடிவடைந்து, ஒரு தசாப்தகாலம் நிறைவடைந்திருந்த நிலையில், அமெரிக்கா தனது ஆதிக்கத்தையும் செல்வாக்கையும் விரிவுபடுத்துவதற்கான ஒரு வாய்ப்பையும் அதற்கான தர்க்க நியாயத்தையும் எதிர்பார்த்துக் காத்திருந்தது.

இந்நிலையில், இத்தாக்குதல் அமெரிக்காவின் ஆதிக்க முனைப்பை நியாயப்படுத்துவதற்கான ஒரு வலிய கருவியாகியது. இதன் வழி, அமெரிக்காவால் ஒரு புதிய உலக ஆதிக்க வேலைத் திட்டத்தைத் தொடக்கி வைக்க முடிந்துள்ளது. அத்துடன், திருப்பித் தாக்கும் வலிமையற்ற எந்த நாட்டின் மீதும், எவ்வித நியாயமுமின்றி போர் தொடுக்க அதற்கு இயலுகிறது.

9/11 தாக்குதல்களில் சம்பந்தப்பட்டவர்களுக்கும் சவூதி அரேபியாவுக்கும் நெருங்கிய தொடர்புகள் இருந்தன. ஆனால், அதுகுறித்துப் பேசப்படவில்லை. ஆப்கானிஸ்தான் மீதே ஆக்கிரமிப்புப் போர் தொடுக்கப்பட்டது.

“தாக்குதலுக்குக் காரணமான ஒசாமா பின்லாடனும் அல்கைடாவும் ஆப்கானில் இருக்கிறார்கள். எனவே, அவர்களை அழித்து, அவர்களுக்கு ஆதரவான தலிபான்களை ஆட்சியில் இருந்து அகற்றவே போர்” என்று அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் கூறினார்கள். ஒரு தசாப்தற்கு முன்னர், ஆப்கானில் சோவியத் ஒன்றியத்தின் ஆதரவுடன் நிறுவப்பட்ட ஓர் ஆட்சியைக் கவிழ்க்க, அமெரிக்காவும் சவூதி அரேபியாவும் ஊட்டி வளர்த்த தலிபான்களையே, அமெரிக்கா எதிரியாக்கியது என்பது முரண்நகை. 

இன்று, 20 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், மேற்குலகில் அமெரிக்க இரட்டைக் கோபுரங்கள் மீதான தாக்குதலைத் தொடர்ந்த பயங்கரவாத்துக்கு  எதிரான யுத்தமும், அதைச் சூழந்து கட்டமைக்கப்பட்ட கதையாடல்களும் அமெரிக்க - ஐரோப்பிய சமூகங்களில் இரண்டு விடயங்களைச் சாதித்துள்ளன. 

முதலாவது, பொதுமையாக்கப்பட்டுள்ள ‘இஸ்லாமியப் பகைமை’. இரண்டாவது, முனைப்படைந்து முன்னிலைபெற்றுள்ள வெள்ளை நிறவாத அரசியலின் எழுச்சி. 

கடந்த இரண்டு தசாப்தகாலத்தில், இஸ்லாமியப் பகைமை மேற்குலகையும் தாண்டி உலகின் பலநாடுகளில் முக்கிய போக்காக உள்ளது. மறுபுறம், வெள்ளை நிறவாதம், அரசியலின் மைய நீரோட்டத்தின் பகுதியாகி உள்ளது. மேற்குலகம் கொண்டாடிய ‘பன்மைத்துவ சமூகத்துக்கு’ வேட்டு வைத்துள்ளது. 

கவனிப்புக்குரியது யாதெனில், இவ்விரண்டும் பாசிசத் தன்மைகளைக் கொண்டவை. அதனோடு சேர்ந்து, ஜனநாயக மறுப்பும் புதிய வடிவங்களில் நிறுவனமயமாகிறது. ஐரோப்பாவில், நவ பாசிசம் புதிய உத்வேகம் பெற்றுள்ளது. நிறவாதமும் அந்நிய குரோதமும் பொருளாதார நெருக்கடியாலும் பெருந்தொற்றாலும் வலுப்பெற்றுள்ளன.

பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் பங்காளியாவதன் மூலம், அரசுகள் தாம் எதிர்நோக்கும் நெருக்கடிகளை, சவால்களை பயங்கரவாதம் என முத்திரை குத்துவது நடந்துள்ளது. இது, பல விடுதலைப் போராட்டங்களுக்குப் பாரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. பல விடுதலைப் போராட்ட அமைப்புகள், இயக்கங்கள் பயங்கரவாதப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன. 

அமெரிக்காவுக்கு உவப்பற்ற நாடுகள், பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளாக அடையாளப்படுத்தப்பட்டன. ஆப்கானில் தொடங்கிய பயங்கரவாதத்துக்கு  எதிரான யுத்தம், மிகக்குறைவான காலத்தில், ‘பயங்கரவாத்துக்கு எதிரான உலகளாவிய போர்’ என்ற சொல்லாடலால் அழைக்கப்பட்டது. இதைப் பயன்படுத்தி, போர்களும் தாக்குதல்களும் ஆப்கானைத் தாண்டி அரங்கேறத் தொடங்கின. 

ஒருபுறம் ஈராக், லிபியா, சிரியா என்று ஆக்கிரமிப்புகள் தொடர்ந்தன. மறுபுறம், பல நாடுகளில் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கு நல்ல உதாரணம், சூடானில் ஒரு மருந்துப் பொருள் உற்பத்தி தொழிற்சாலை மீது நடத்தப்பட்ட விமானத் தாக்குதலும் தென் சூடானில் பிரிவினைவாத ஊக்குவிப்பும் அங்கும் ஓர் ஆட்சிக் கவிழ்ப்பை நோக்காக் கொண்டிருந்தன. 

(அடுத்த வௌ்ளிக்கிழமை தொடரும்) 
 

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ஆப்கானிஸ்தான்-ஒரு-முடிவும்-ஒரு-தொடக்கமும்/91-280045

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புதிய போரொழுங்கின் முதலாம் அத்தியாயம் - 02 9/11க்கு முன்: கதைச் சுருக்கம்

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

இதை எழுதத் தொடங்கும்போது, அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிவிட்டன என்ற செய்தியை காணக் கிடைத்தது. 21ஆம் நூற்றாண்டின் முதலாவது ஆக்கிரமிப்புப் போர், 20 ஆண்டுகளுக்குப் பிறகு முடிவுக்கு வருகிறது. 

இந்தக் கதை புதிதல்ல! இதேபோன்றதொரு கதை, கெடுபிடிப்போர் காலத்தில் வியட்நாமில் நடந்தேறியது. அமெரிக்கா, உலகப் பொலிஸ்காரனாகத் தன்னை நிலைநிறுத்திய பின்னர், இவ்வாறு ஆக்கிரமித்த பகுதியில் இருந்து வெளியேறுவது, இது இரண்டாவது தடவை ஆகும். 

பேர்லின் சுவரின் இடிப்பைத் தொடர்ந்து, முடிவுக்கு வந்த இருமைய உலகுக்கும், அமெரிக்காவின் வர்த்தக மையக் கட்டடங்களின் மீதான விமானத் தாக்குதல்களைத் தொடர்ந்த ‘பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்திற்கும்’ இடையே நிகழ்ந்தவொரு சம்பவம் முதன்மையானது. 

அந்த நிகழ்வுக்கும் இப்போதைய ஆப்கானிஸ்தான் நிலைமைக்கும் இடையே பல ஒற்றுமைகள் உண்டு. அந்த நிகழ்வையும் அதைத் தொடர்ந்த அமெரிக்கக் கொள்கை வகுப்பையும், கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம். 

1990களின் தொடக்கத்தில், சோவியத் ஒன்றியத்தின் உடைவைத் தொடர்ந்து, உலகின் முதன்மையான வல்லரசாக அமெரிக்கா தன்னை நிலைநிறுத்தத் தொடங்கியிருந்தது. சோமாலியாவில் 1991ஆம் ஆண்டு நிகழ்ந்த ஆட்சிக்கவிழ்ப்பைத் தொடர்ந்து, அங்கு  உச்சம் பெற்ற உள்நாட்டுப் போர், சர்வதேச கவனம் பெற்றது. 

1992ஆம் ஆண்டு ஏற்பட்ட மிகப்பெரிய பஞ்சத்தால், மூன்று இலட்சம் சோமாலியர்கள் பட்டினியால் இறந்தார்கள். இதைத் தொடர்ந்து, ஐக்கிய நாடுகள் சபை, உதவிகளை மேற்கொள்ள சோமாவில் களமிறங்கியது. ஒருபுறம் பஞ்சம், இன்னொருபுறம் போர் என இருமுனைகளில் சவால்களை எதிர்கொண்டது. 37,000 படைவீரர்களைக் கொண்ட ஐ.நா அமைதிகாக்கும் படைகள் களமிறங்கின. இதில் 25,000 பேர் அமெரிக்கப் படைவீரர்கள். இது குறித்துப் பேசிய அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ், “சோமாலியாவில் நடக்கும் கொடுமைகளைத் தடுத்து, அங்கு பாதுகாப்பை வழங்கக்கூடிய ஒரே நாடு அமெரிக்கா தான். அமெரிக்கா தன் கடமையைச் செய்யும்’ என்று சொன்னார். 1992 டிசெம்பரில் அமெரிக்கப் படைகள் சோமாலியாவில் களமிறங்கின. 

1993 மார்ச் மாதம், உள்நாட்டுப்போரில் ஈடுபட்டிருந்த 15 ஆயுதக்குழுக்களும் எதியோப்பியாவின் தலைநகர் அடிஸ் அபாபாவில் சந்தித்து அமைதியைக் கடைப்பிடிக்க உடன்பட்டன. ஆனால் கொஞ்சக்காலத்தில் முஹமட் அடீட் தலைமையிலான குழுவினர் அந்நியப் படைகளின் இருப்பை எதிர்த்தனர். 

புதிய அரசாக்க முயற்சிகளில், தானும் தனது குழுவினரும் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாகவும் ஐ.நா தன்னைத் திட்டமிட்டு ஒதுக்குவதாகவும்  குற்றஞ்சாட்டினார். அவர் சோமாலியாவின் தலைநகர் மொகடீசுவின் வானொலியில் ஐ.நாவுக்கு எதிராகப் பிரசாரம் செய்தார். 

சோமாலியாவில் நிலைகொண்டிருந்த ஐ.நா அமைதிகாக்கும் படைகள் அந்த வானொலி நிலையத்தை மூடுமாறு உத்தரவிட்டனர். அதை நடைமுறைப்படுத்த ஐ.நா படைகள் அனுப்பப்பட்டன. இது அடீட் அவர்களின் படைகளுக்கும் ஐ.நா படைகளுக்கும் இடையில் மோதலை உருவாக்க காரணமானது. இதைத் தொடர்ந்து அமெரிக்கப் படைகள், அடீட்டைக் கைது  செய்வதற்கான மொஹடீசுவில் பல தாக்குதல்களை மேற்கொண்டன. இது ஒருபுறம் அமெரிக்கப் படைகள் மீதான வெறுப்பையும், மறுபுறமும் அடீடுக்கான ஆதரவையும் சோமாலியர்கள் மத்தியில் உருவாக்கியது. 

அமைதிகாக்கும் படைகளாகக் களமிறங்கிய ஐ.நா படைகள், தாக்குதல்களில் ஈடுபட்டதன் மூலம், சோமாலியாவின் உள்நாட்டுப் போருக்குள் தம்மை இழுத்துக் கொண்டன. சோமாலிய உள்நாட்டுப் போரின் அரங்காடிகளாக இப்படைகள் மாறின. 

இது, ஐ.நா நடுநிலை நோக்கோடு இல்லை; போரிடுகின்ற தரப்புகளில், தனக்கு வாய்ப்பான தரப்புக்கு ஏற்ற வகையில் செயற்படுகின்றது என்ற குற்றச்சாட்டை, அடீடும் அவரது சகாக்களும் முன்வைத்தார்கள். இதே மனநிலை, மெதுமெதுவாக சோமாலியர்களிடம் உருவானது. 

அமெரிக்காவில் புதிய ஜனாதிபதியாக பில் கிளின்டன் பதவியேற்றிருந்தார். ஐ.நாவுக்கான புதிய அமெரிக்கத் தூதுவராகப் பொறுப்பேற்ற மடலீனா ஆல்பிரைட், ஐ.நா பாதுகாப்புச் சபையில், ஐ.நா படைகளின் கொலைக்குக் காரணமானவர்கள் கைது செய்யப்பட்டுத் தண்டிக்கப்பட வேண்டும் என்ற ஒரு தீர்மானத்தைக் கொண்டுவந்து நிறைவேற்றினார். 

இதைத்தொடர்ந்து, ஐ.நா செயலாளர் நாயகத்தின் சோமாலியாவுக்கான சிறப்புப் பிரதிநிதியாகப் பதவியேற்றிருந்த அமெரிக்க கடற்படை அட்பிரல் ஜொனதான் கோவ், அடீட்டின் தலைக்கு 25,000 அமெரிக்க டாலர்களை வெகுமதியாக அறிவித்தார். ஐ.நாவின் அனைத்து முடிவுகளையும் பதவிகளையும், திட்டமிடும் செயற்படுத்தும் தன்னிகரற்ற அதிகாரத்தை அமெரிக்க அப்போது கொண்டிருந்தது. 

1993ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12ஆம் திகதி அடீட்டின் மறைவிடம் தொடர்பான புலனாய்வுத் தகவலின்படி, ஒரு வீட்டில் அடீட்டின் ஆட்கள் கூடியிருப்பது தெரியவந்தது. அமெரிக்கப் படைகள் அவ்வீட்டைக் குறிவைத்துக் களத்தில் இறங்கின. இதற்கு ‘ஒபரேசன் மிச்சிகன்’ எனப் பெயரிட்டனர். தாக்குதலில் 200க்கும் மேற்பட்ட சோமாலியப் பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள். அமெரிக்கப் படைகள் குறிவைத்துத் தாக்கிய வீட்டில் நடைபெற்றுக் கொண்டிருந்த கூட்டத்தில், சோமாலியாவின் முக்கியமான முதியவர்கள் ஒன்றுகூடி, போராளிக்குழுக்களுடன் சமாதானத்தை உருவாக்குவது பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள் என்பது, அமெரிக்கப் படைகளுக்குப் பின்பே தெரியவந்தது. 

குறித்த கூட்டம் தொடர்பிலான செய்தி, குறித்த திகதிக்கு முதல்நாள் பத்திரிகைளில் வெளிவந்திருந்தது. குறித்த சம்பவத்தைத் தொடர்ந்து, அங்கு செய்தி சேகரிக்கப் போன மேற்கத்திய ஊடகங்களைச் சேர்ந்த நான்கு ஊடகவியலாளர்கள், கோபத்தில் இருந்த பொதுமக்களால் கொல்லப்பட்டார்கள்.  

ஓகஸ்ட் எட்டாம் திகதி அடீடின் படைகள், அமெரிக்கப் படைகளைக் குறிவைத்த கண்ணிவெடித் தாக்குதலில், நான்கு அமெரிக்கப் படைவீரர்கள் கொல்லப்பட்டார்கள். இதனைத் தொடர்ந்து, சிறப்பு இராணுவத்தினரைக் கொண்ட படையணியல் 400 வீரர்களை, சோமாலியாவுக்கு அனுப்ப கிளின்டன் முடிவெடுத்தார். இதேவேளை, அடீடுடன் இரகசியமாகப் பேசுவதற்கும் அமெரிக்கா முடிவெடுத்தது. இதன்படி, முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி காட்டரின் தலைமையிலான குழு, இதில் ஈடுபட்டிருந்தது. 

இந்த நிகழ்வுகள், தலிபானுடனான அமெரிக்காவின் நடத்தையை ஒத்தன. ஒருபுறம், போர் புரிந்தபடி, இரகசியமாகப் பேச்சுக்களில் ஈடுபடுவதை அமெரிக்கா வழமையாகக் கொண்டிருந்தது. 2008ஆம் ஆண்டுமுதல் தலிபான்களுடன் அமெரிக்கா பேசுகிறது. மறுபுறம், அதிகமான படைகள் ஆப்கானுக்கு அனுப்பப்பட்ட ஆண்டாகவும் 2008ஆம் ஆண்டே இருக்கிறது என்பதையும் இங்கு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். 

ஆடீடையும் அவரது தளபதிகளையும் எப்படியாவது கைதுசெய்வது என்று அமெரிக்கா முடிவெடுத்திருந்தது. 1993ஆம் ஆண்டு ஓக்டோபரில், அடீட்டின் இருப்பிடம் குறித்த இரகசியத் தகவல் கிடைத்தது. தாக்குதலில் அமெரிக்கப் படைகள் இறங்கின. அமெரிக்கா எதிர்பார்த்ததற்கு மாறாக நிலைமைகள் மாறின. இரண்டு வானூர்திகள் சுட்டு விழுத்தப்பட்டதுடன், துப்பாக்கிச்சண்டையில் 19 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர். ஒரு படைவீரர் உயிரோடு பிடிக்கப்பட்டார். ஏராளமான சோமாலியப் பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள். 

உலகின் வல்லரசாகத் தன்னை நிலைநிறுத்தியிருந்த அமெரிக்கா, சோமாலியாவில் ஒரு மோசமான தோல்வியைச் சந்தித்தது. அமெரிக்கப் படைவீரர்களின் உடலை, சோமாலியர்கள் தெருவில் கட்டி இழுத்துச் செல்லும் காட்சிகள் அதிர்ச்சி தருவனவாக இருந்தன. 

இதன் விளைவாக, சோமாலியாவில் அமெரிக்கப் படைகளின் தாக்குதல் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த, கிளின்டன் உத்தரவிட்டார். 1994 மார்ச் 21ம் திகதிக்குள், அமெரிக்கப் படைகள் சோமாலியாவில் இருந்து முழுமையாக வெளியேறும் என அறிவித்தார். 

1995 மார்ச்சில் அமெரிக்கப் படைகள் முழுமையாக வெளியேறின. இந்தத் தோல்வி அமெரிக்காவின் ‘சர்வ வல்லமை வாய்ந்த வல்லரசு’ என்ற அமெரிக்காவின் நிலைக்கு பெருத்த அடியாகியது. 

தனது தொழில்நுட்ப இராணுவ வலிமையால், சாதாரண சிறுரக ஆயுதங்களை மட்டும் கொண்டிருந்த, முறையாகப் பயிற்றப்படாத போராளிகளிடம், அமெரிக்கா தோல்வியைச் சந்தித்திருந்தது. மரபார்ந்த பண்டைய தொடர்பாடல் முறைகள், கொண்டிருந்த சோமாலியப் போராளிகளின் தகவல் பரிமாற்றங்களை இடையீடு செய்யவோ, ஒட்டுக்கேட்கவோ அமெரிக்கப் புலனாய்வால் முடியவில்லை. 

அதேவேளை, இதேபோன்ற முரண்பாடுகளில் தலையிடக்கூடாது என்ற நிலைப்பாட்டை கிளின்டன் எடுத்தார். அது, நீண்டகாலம் நிலைக்கவில்லை. ஆனால், சிலவற்றில் தலையிடாமல் இருப்பதற்கான வாய்ப்பை இது கொடுத்தது. குறிப்பாக, ருவாண்டாவில் மூன்று இலட்சம் பேர் கொல்லப்பட்டபோது, ஐ.நா அமைதிப்படைகள் அமைதியாக இருந்தது முதல், மேற்குலகம் தலையிடாமைக்கு மொகடீசு அனுபவம் முக்கிய காரணமானது. 

மொகடீசு அனுபவம் பல புதிய திசைவழிகளை நோக்கி அமெரிக்காவை நகர்த்தியது. அதுவே, அடுத்த இருபதாண்டுகளுக்கு அமெரிக்க வெளியுறவுக் கொள்கை வகுப்பில் செல்வாக்குச் செலுத்தியது. அதுகுறித்து அடுத்தவாரம் பார்க்கலாம். 

(தொடரும்)    

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/புதிய-போரொழுங்கின்-முதலாம்-அத்தியாயம்-02-9-11க்கு-முன்-கதைச்-சுருக்கம்/91-280288

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.