Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ரௌத்திரம் பழகுவேன் - சோம. அழகு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 எனது மகள் சோம. அழகு 2016ல் 'திண்ணை' இணைய வார இதழில் எழுதிய கட்டுரை . மேற்கூறிய சட்டம் தொடர்பான பகுதி எடுத்துக்காட்டப்பட்டுள்ளது :

 

 

                                         ரௌத்திரம்  பழகுவேன்

                                                                            - சோம. அழகு

           உறவினர்களுடன் ஒருமுறை உணவகத்திற்குச் செல்ல நேர்ந்தது. சர்வர் நிரம்பப் பணிவுடன் வந்து எங்களுக்கு வேண்டியதைக் கேட்டுச் சென்றார். சிறிது தாமதமாவதை உணர்ந்து அந்த சர்வரை அளவுக்கு அதிகமாகக் கடிந்து கொண்டார் உறவினர்களுள் ஒருவர். அதிகார வர்க்கத்தோடு தம்மை அடையாளப்படுத்திக் கொள்ள முனையும் சில பல அடிவருடிகளின் பிரதிநிதியாக இவரைக் கொள்ளலாம்.

 

           இந்த கடாஃபியின் அதட்டலுக்கு பயந்து உள்ளே சென்ற சர்வர் சொற்ப நேரத்தில் உணவுகளோடு வந்தார். நூடுல்ஸ் போன்ற சீன சைவ உணவுகளும், இன்ன பிற தந்தூரி உணவுகளும் , “தங்கள் யாக்கை எங்களைச் செரிப்பதற்கு மிகவும் திண்டாடும்” என எச்சரித்ததை நான் மட்டுமே கவனித்தேன். எனக்கான தட்டு வைக்கப்பட்டதும் சர்வருக்கு நன்றி கூறிவிட்டு சாப்பிடத் தொடங்கினேன். நிஃப்டி, பங்குச்சந்தை வீழ்ச்சி, அமெரிக்க நிறுவனங்கள், கட் ஆஃப், கோச்சிங் சென்டர் என இவர்கள் அறுத்துத் தள்ளியதை நான் காதில் வாங்கவில்லை ஆதலால், தயிர்சாதமும் ஊறுகாயும் பிரமாதமாக ரசித்தது. “தயிர் சாதத்தையும் ஒரு சாப்பாடுன்னு ஆர்டர் பண்ணியிருக்கா பாரு...” என என்னைக் கிண்டல் செய்தார் என் உறவினர். ( மறுநாள் காலை நம்ம ரவை உப்புமாவை படு ஸ்டைலாக ‘ஸூஜி உப்புமா’ என ஆர்டர் செய்தார் என்பது கூடுதல் செய்தி)

 

                        கடைசி இரண்டு கவளம் மட்டுமே மீதமிருக்க, மீதமிருந்த ஊறுகாய்த் துண்டைப் பிய்க்கும்போதுதான் அதில் ஏதோ கருப்பாக இருப்பதைப் பார்த்தேன். நான் ஊறுகாயை ஒதுக்கி வைத்ததை, என் எதிரில் அமர்ந்திருந்த ஹிட்லர் கவனித்ததை நான் கவனிக்கவில்லை. உடனே ‘இலக்கியத் தரம்’ வாய்ந்த அவர்களின் கலந்துரையாடல் முற்றுப்பெற்று, எனது ஊறுகாய் பேசுபொருளானது. நான் ‘என்ன நடக்கிறது?’ எனச் சுதாரிப்பதற்குள் அந்த சர்வர் வரவழைக்கப்பட்டு விசாரணை தொடங்கிற்று. கடாஃபி எகிற ஆரம்பிக்க, உடன் வந்திருந்த ஹிட்லர், முசோலினி, இடி அமின்........இன்ன பிற சர்வாதிகாரிகளும் சேர்ந்து கொண்டனர். சர்வர் மன்னிப்பு கேட்டதை யாரும் காதில் வாங்கத் தயாராய் இல்லை. அந்த இடத்தில் இவர்களது ஆக்கங்கெட்ட ஆளுமையை நிலைநாட்டுவதாக நினைப்பு ! அதிலும், முகத்தில் எவ்விதச் சலனமும் இல்லாமல் தடித்த வார்த்தைகளின் மூலம் மெதுவான குரலில் புகார் செய்வதனால் தங்களை நிதானமானவர்களாகவும் பக்குவப்பட்டவர்களாகவும் நினைத்துக் கொள்கிறார்கள்.

 

                        அந்த சர்வரின் சுயமரியாதையைக் காப்பாற்றும் நல்லெண்ணத்தில், “அதெல்லாம் ஒண்ணும் இல்ல. சில நார்த்தங்காயில சில இடம் கருப்பா இருக்குமில்ல....அதான்....ஒண்ணும் பிரச்சினை இல்ல” என நான் சமாளிக்க, கடாஃபிக்கோ நுகர்வோர் உரிமைகளைப் பற்றி கரைத்துக் குடித்ததைப் போல அதைப் பாதுகாக்கும் எண்ணம் தலைதூக்கியது. இன்னொரு தயிர் சாதம் கொண்டு வரச் சொன்னார். “அதெல்லாம் வேண்டாம். இன்னும் ஒரு வாய்தான் இருக்கு....முடிச்சுருவேன்” என நான் பின்வாங்க, “நீ சும்மா இரு....உனக்கு ஒண்ணும் தெரியாது...” என்று எனது வாயை அடைப்பதிலேயே குறியாய் இருந்தனர். நான்தான் அந்தக் கூட்டத்திலேயே இளையவள் என்பதால் வேறு வழியில்லாது வாயில் குருணையைப் போட்டுக் கொள்ள வேண்டியதாயிற்று.

 

                        எனது தட்டு எடுத்துச் செல்லப்பட்டு புதிய தட்டில் மீண்டும் தயிர்சாதமும் ஊறுகாயும் வந்திறங்கியது. சர்வர் கொண்டு வரவும், உணவகத்தின் மேலாளர் அந்தப் பக்கம் வரவும் சரியாக இருந்தது. அதான் வேற தயிர்சாதம் வந்துட்டுல்ல....விட்டுத்தொலைக்க வேண்டியதுதானே ! மேலாளரிடமும் புகார்ப் பட்டியல் வாசிக்கப் பட்டது. அவர் சர்வரைப்  பார்க்க, மீண்டும் மன்னிப்புப் படலம். பிறகு ஒரு வழியாக அனைவரும் உண்ணத் தொடங்கினர். எனது வயிறு நிரம்பிவிட்டதால் உண்ண இயலாது விழிபிதுங்கி அமர்ந்திருந்ததை, எல்லோரும் கவனிக்காதது போல் நடித்தது இவர்கள் மீது மேலும் எனக்குக் கோபத்தை உண்டாக்கியது. “நாந்தான் சாப்பிட்டு முடிச்சிட்டேன்னு சொன்னேன்ல....இத என்னால சாப்பிட முடியாது” என்றேன். உடனே கடாஃபியும் அவரது மனைவியும் சேர்ந்து ஒருமித்த குரலில், “உனக்கு வேண்டான்னா வச்சிடு...நாங்க சாப்பிட்டுக்குறோம்....அதுக்காக அவங்க தப்பைச் சொல்லாம இருக்க முடியுமா?” என்று ஒன்றுமே நடக்காதது போல் சிரித்துக்கொண்டே கூறினர்.

 

                        அந்த நொடி, “இனி இந்த அற்பப் பதர்களுடன் எங்கும் செல்வதில்லை” என மனதினுள் உறுதி எடுத்தேன். ஒரு ஊறுகாய்த் துண்டின் ஓரத்தில் இருந்த கருப்புக்காக இவ்வளவு அடாவடித்தனமா ? ஏன், கடாஃபியின் மனைவி சமைக்கும் போது உணவு கரிந்தோ தீய்ந்தோ போகாதா ? அல்லது லேசாகக் கரிந்ததற்காக எல்லா உணவையும் அப்படியே குப்பையில் கொட்டிவிடுவார்களா ?

 

                         இந்த கடாஃபிக்களின் அட்டூழியம் இருக்கிறதே....”உளுந்த வடையில் ஓட்டை சரியாக நடுவில் இல்லை”, ”ஏ.சி எங்களுக்கு நேராக இல்லை”, “பூரி புஸ்ஸென்று இல்லை”, “சப்பாத்தி சப்பென்று இருக்கிறது”, “ஆரஞ்சு ஜூஸில் ஆனை இல்லை”, “பூண்டு பாலில் பூனை இல்லை”, “சாத்துக்குடி ஜூஸில் சாத்தான் இல்லை” (“அதான் நீங்க இருக்கீங்களே” என்று சொல்லத் தோன்றும்) எனக் கருணை இல்லாமல் அடுக்குவார்கள். இவ்வளவு அலப்பறைகளுக்கும் நடுவில், சுய நிழற்படம் ஒன்றை, தான் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் தட்டோடு எடுத்து முகநூலில் இட்டு, ”Having lunch at Saravana Bhava, New York. Tasty! Yummy!” எனப் பதிவேற்றுவார்கள். சிலர் இன்னும் ஒரு படி மேலே போய், ”அநியாயம்...அக்கிரமம்....கொள்ளை!!! 2 பூரிக்கு 25 கிராமுக்கு மேல் கிழங்கு தர மறுக்கிறார்கள்”என்று கொந்தளிப்பதோடு (புரட்சியாம்!) “நானெல்லாம் சின்ன பையனா இருந்தப்போ....” என ஒரு நோஸ்டால்ஜிக் நோட் வேறு !

 

                          ஜவுளி கடை ஊழியர்களின் நிலைமை அந்தோ பரிதாபம்! மாதம் 3000 முதல் 5000 வரையிலான சம்பளத்திற்கு நாள் முழுக்கக் கால் கடுக்க நின்று வேலை செய்யும் இவர்களை ஒரே பொழுதில் 20,000 ரூபாய்க்கு வேலை வாங்கும் திறன் உடையவர்கள் இந்த கடாஃபிக்கள். ஒரு துணி அடுக்கின் அருகில் சென்று அங்கு நிற்கும் ஊழியரை அனைத்துத் துணிகளையும் விரித்துக் காட்டச் சொல்லி, “ஒன்றும் பிடிக்கவில்லை” என்று கூறி, எடுத்துக் காண்பித்தவருக்கு நன்றி கூட சொல்லாது அடுத்த அடுக்கை நோக்கி நகர்வதைப் போன்ற மனிதாபிமானமற்ற செயலை எப்போது நிறுத்துவார்கள்? இவர்கள் நகர்ந்து சென்றதும் ஆடைகள் தானாக எழுந்து போய் அதன் இடங்களில் அமர்ந்து கொள்ளுமா? அந்த ஒரு ஆள், மலை போல் இவர்கள் குவித்துப் போட்ட துணிகளை மடித்து, கவரில் போட்டு, வரிசையாக அடுக்கி.....ஸ்ஸ்ஸ்...எழுதும்போதே கை வலிக்கிறது. “அவர்களின் வேலையே அதுதானே...அதற்காகத்தானே அவர்களுக்குச் சம்பளம் கொடுக்கப்படுகிறது” என்று சிலர் ஓட்டை வாதத்தை வைக்கும்போதும், ஊழியர்களைப் பற்றி (அநியாயமாக) உயரதிகாரிகளிடம் போட்டுக் கொடுக்காததினால் அந்த ஊழியருக்குப் பேருதவி செய்துவிட்டதைப் போல் பீற்றும்போதும், இந்த சர்வாதிகாரிகளை மண்ணில் கழுத்தளவு புதைத்து ஒவ்வொரு காதிலும் 5 சிவப்புக் கட்டெறும்புகளை பாவம் பார்க்காமல் விடத் தோன்றுகிறது. வாழ்க்கை முழுக்க அவ்வப்போது சென்று துணி எடுத்துக் கொண்டேதான் இருக்கப் போகிறோம் என்ற உணர்வே இல்லாமல் ஏதோ அடுத்த வாரம் உலகம் அழிந்து விடப்போவது போலவும் மறுநாள் அனைத்துத் துணி கடைகளுக்கும் சீல் வைக்கப்படப்போவது போலவும், ஒவ்வொரு முறை கடைக்குச் செல்லும்போதும் அதுதான் கடைசி முறை என்பது போல் கடையையே தலைகீழாக உருட்டிப் போடும் அபத்தத்தை என்னவென்று சொல்வது?

 

                        “காசை விட்டெறிவதனால் எவ்வளவு வேண்டுமானாலும் வேலை வாங்கலாம். உலகில் எல்லோரும் எனக்குப் பணிவிடை செய்து என்னை மகிழ்விக்கவும் திருப்திபடுத்தவுமே பிறப்பெடுத்திருக்கிறார்கள். அவர்களை எவ்வளவு கீழ்த்தரமாகவும் நடத்தி அசிங்கப்படுத்தலாம்” என்று ஆழ்மனதில் உருவான எண்ணத்தின் வெளிப்பாடே இந்த அபத்தங்கள். இந்த ஊழியர்களுக்கெல்லாம் இப்படி வாங்கிக் கட்ட வேண்டும் என்ற தலையெழுத்தா என்ன? ஒருவரால் திருப்பி அடிக்க இயலாது எனத் தெரிந்து கொண்டு அவரை ஏறி மிதிக்கும் இது போன்ற கடாஃபிக்களும் யாரிடமோ மிதி வாங்கிக் கொண்டிருப்பதுதான் நகைமுரண். கடாஃபிக்கள் தங்கள் உயரதிகாரிகளின் முன் முதுகு வளைந்து நிற்கும் போது உண்டாகும் கோணத்தைக் காட்டிலும் இந்தப் பாவப்பட்ட ஊழியர்கள் அதிகக் கோணத்தில் தன் முன் வளைய வேண்டும் என எதிர்ப்பார்க்கிறார்கள். ‘அடிமை அடிமையை விரும்பும்’ என தொ.ப. கூறுவது நினைவிற்கு வருகிறது. தம் அதிகாரம் எங்கெல்லாம் செல்லுமோ அங்கெல்லாம் அதை நிலைநாட்ட முற்படும் இந்த கடாஃபிகளிடம், ஓடப்பர் உதையப்பரானால், இந்த உயரப்பரெல்லாம் என்ன ஆவர் என்பதை பாரதிதாசன் இவர்களின் மண்டையில் ஆணியடித்துச் சொன்னால் தேவலை. சோர்வும் சோகமுமாய் தினமும் 10 மணி நேரம் ஜவுளிக் கடைகளிலும் பல்பொருள் அங்காடிகளிலும் நின்றே varicoseஐ வரவேற்கும் பணியாளர்களைப் பார்க்கையில், கொஞ்சம் எழுத்து நாகரிகத்தைத் தூக்கிக் கடாசிவிட்டு, முதலாளி வர்க்கத்தைப் பார்த்தும் ஒன்று சொல்லத் தோன்றுகிறது – “இந்த ஊழியர்கள் இடையிடையே உட்கார ஸ்டூலைத்தான் போட்டுத் தொலைங்களேன்டா......வாடிக்கையாளர்கள் இல்லாத நேரத்திலும் அவங்க ஏன் நிக்கணும் ? நீங்களோ உங்கள் பிள்ளைகளோ நாள் முழுக்க நிப்பீங்களாடா ?”

 

                         அன்று அந்த சர்வரை மன்னிப்புக் கேட்க வைத்ததற்கு நானும் ஒரு வகையில் காரணம் என எண்ணும் போது என் மீதே எனக்குக் கோபமும், குற்றவுணர்ச்சியும் உண்டாவதைத் தவிர்க்க இயலவில்லை. என்னுடன் வந்த சர்வாதிகாரிகளின் உறவு அறுபட்டு இருந்தாலும் பரவாயில்லை (இந்த மாதிரியான உறவுகள் இருந்தால் என்ன? போனால் என்ன?) என நான் அவரிடம் மன்னிப்புக் கோரியிருக்க வேண்டும். அவருக்கு இதெல்லாம் மறந்தே போயிருக்கும். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி என் வாழ்க்கையின் இறுதி வரை மறக்க இயலாமல் மனதில் ஏற்பட்ட ஆறாத வடுவிற்கு மன்னிப்புக் கோருவதன் மூலம் ஓரளவு மருந்திட முயல்கிறேன்..... “அண்ணா......மன்னிச்சிடுங்க அண்ணா...நீங்கள் என் உறவினர் இல்லை. ஆனால் என்னைச் சார்ந்தோரால் – என் உறவினரால் – என்னை மையப்படுத்தி உங்களுக்கு நேர்ந்த அவமானத்தைத் தட்டிக் கேட்காத என் இயலாமையை எண்ணித் தலைகுனிகிறேன். ஓடப்பராய் வாழ்ந்து பழக வேண்டிய சூழ்நிலை உங்களுக்கு. இந்த உயரப்பரை எதிர்த்து உதையப்பராகிட.............

                                              ரௌத்திரம் பழகுவேன்.”

 

                                                                                                                      - சோம. அழகு

 

நன்றி, திண்ணை

Edited by சுப.சோமசுந்தரம்

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, சுப.சோமசுந்தரம் said:

அந்த சர்வர் வரவழைக்கப்பட்டு விசாரணை தொடங்கிற்று. கடாஃபி எகிற ஆரம்பிக்க, உடன் வந்திருந்த ஹிட்லர், முசோலினி, இடி அமின்........இன்ன பிற சர்வாதிகாரிகளும் சேர்ந்து கொண்டனர்.

உணவகங்களில் உள்ளே நுழைந்த நேரத்தில் இருந்து அங்கு வேலை செய்யும் ஊழியர்களுடன் எல்லாம் மிகவும் நட்பாகவும், மரியாதையாகவும்தான் கதைப்பேன். அவர்கள் மகிழ்வாக இருந்தால்தான் உணவை ருசித்துச் சாப்பிட முடியும். சாப்பாட்டைத் திருப்பி அனுப்பி, புதிதாக கொண்டுவரவேண்டும் என்றெல்லாம் கேட்பதில்லை. அப்படிக் கேட்டால், கிச்சினுக்குள் வேலை செய்பவர்கள் எல்லோரும் மட்டுமில்லாமல், அந்தப் பக்கம் போகிறவர்கள் எல்லோரும் சேர்ந்து எச்சில் துப்பி நல்ல வடிவாக “சேர்வ்” பண்ணுவார்கள்!😮 

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

உணவகங்களில் உள்ளே நுழைந்த நேரத்தில் இருந்து அங்கு வேலை செய்யும் ஊழியர்களுடன் எல்லாம் மிகவும் நட்பாகவும், மரியாதையாகவும்தான் கதைப்பேன். அவர்கள் மகிழ்வாக இருந்தால்தான் உணவை ருசித்துச் சாப்பிட முடியும். சாப்பாட்டைத் திருப்பி அனுப்பி, புதிதாக கொண்டுவரவேண்டும் என்றெல்லாம் கேட்பதில்லை. அப்படிக் கேட்டால், கிச்சினுக்குள் வேலை செய்பவர்கள் எல்லோரும் மட்டுமில்லாமல், அந்தப் பக்கம் போகிறவர்கள் எல்லோரும் சேர்ந்து எச்சில் துப்பி நல்ல வடிவாக “சேர்வ்” பண்ணுவார்கள்!😮 

 

ஓம். நானும்தான். கூட வந்த ஆராவது கேமை கேட்க வெளிகிட்டாலும், அடக்கி போடுவன் - உந்த எச்சில் கதையை சொல்லி🤣.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.