Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெரியார், அண்ணா உருவாக்கிய அரசியல் தத்துவ இரட்டைக் குழல் துப்பாக்கி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்


 

பெரியார், அண்ணா உருவாக்கிய அரசியல் தத்துவ இரட்டைக் குழல் துப்பாக்கி!

spacer.png

ராஜன் குறை 

ஆண்டுதோறும் தி.மு.க செப்டம்பர் 15, 17 ஆகிய இரு தினங்களை ஒட்டி முப்பெரும் விழா என விழா கொண்டாடுவது வழக்கம். அண்ணா பிறந்த தினம், பெரியார் பிறந்த தினம், தி.மு.க உருவான தினம் ஆகியவை இந்த தேதிகளில் அடங்குகின்றன. அண்ணா ஒருமுறை தி.க-வும், தி.மு.க-வும் இரட்டைக் குழல் துப்பாக்கி என்று கூறியது அனைவரும் அறிந்ததே. அந்தக் கூற்றினை அரசியல் தத்துவ அடிப்படையில் எப்படிப் புரிந்துகொள்ளலாம் என்பதை பரிசீலிப்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம். திராவிட இயக்கம் என்று பொதுவாக அறியப்படும் அரசியல் இயக்கங்களின் நோக்கம் திராவிட - தமிழ் அடையாளம் கொண்ட ஒரு மக்கள் தொகுதியினை கட்டமைப்பதே. அந்த வரலாற்று நோக்கம் வெற்றிகரமாக நிறைவேறியதன் அடையாளம்தான் ஐம்பது ஆண்டுகளைக் கடந்தும் தமிழகத்தில் தொடரும் திராவிட கட்சிகளின் ஆட்சி.

எம்.ஜி.ஆர் துவங்கிய அண்ணா தி.மு.க தனக்கு முன்னே “அகில இந்திய” என்ற அடைமொழியைச் சூட்டிக்கொண்டு அ.இ.அ.தி.மு.க-வாக மாறினாலும் திராவிட சிந்தனையினை தன் ஆட்சியிலும், செயல்களிலும் கைவிட முடியவில்லை. அதற்கு எதிர்க்கட்சியாக விளங்கிய தி.மு.க-வும், அதன் தலைவர் கலைஞரும் அனுமதிக்கவில்லை. அதனால் சமூக நீதி, மக்கள் நலன் சார்ந்த முன்னெடுப்புகளில் திராவிட அரசியலின் தாக்கம் அரசாட்சியில் தொடரவே செய்தது. அதனைத்தான் இன்று பொருளாதார வளர்ச்சியில் திராவிட மாடல் அதாவது திராவிட முன்மாதிரி என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். இந்திய மாநிலங்களுள் அனைத்து மக்களையும் உள்ளடக்கிய, மக்களின் வாழ்வை மேம்படுத்தக்கூடிய ஒரு பொருளாதார வளர்ச்சியை தமிழகம் சிறப்பாக உருவாக்கிக் காட்டியுள்ளது என்பதே வளர்ச்சி சார் பொருளாதார ஆய்வாளர்களின் ஒருமித்த கருத்து. அதற்கான அடித்தளம் பெரியாரும், அண்ணாவும் உருவாக்கிய அரசியல் சித்தாந்தமும், அதனை ஆட்சியில் நடைமுறைப்படுத்திய, தன் எதிர்க்கட்சியும் பின்தொடர வைத்த வரலாற்று நாயகர் கலைஞரும் என்பது மறுக்க முடியாத உண்மை.

இதன் விளைவாக இரண்டு முக்கியமான வரலாற்று அம்சங்களை தமிழ்நாட்டில் காண முடிகிறது. 1) வரலாற்று தன்னுணர்வு கொண்ட மக்கள் தொகுதியாக திராவிட-தமிழ் சமூகம் உருவாகியுள்ளது; 2) வளர்ச்சிக்கான விழைவு கொண்ட சமூகமாக, பொருளாதார வல்லுனர் ஜெயரஞ்சன் வார்த்தைகளில் Aspirational Society ஆக தமிழ் சமூகம் உள்ளது. இதனால் மக்களாட்சி முறையில் அரசும் மக்களின் எதிர்பார்ப்புக்கு ஈடுகொடுத்து செயல்படும் சூழலை உருவாக்குகிறது. தமிழக அரசியலின் விளைபொருளான மாநில அரசு அதனால் ஒன்றிய அரசிடமிருந்து அதிக உரிமைகளைப் பெறவேண்டிய சூழலும் தவிர்க்க முடியாததாகிறது. ஒன்றிய அரசின் மக்கள் விரோத சட்டங்களை பிற மாநிலங்கள் ஏற்றாலும் தமிழகம் ஏற்காது என்ற ஒரு வேறுபட்ட சூழ்நிலை தமிழக அரசியலில் சாத்தியமாகியுள்ளது எனலாம். இது இந்திய துணைக்கண்டத்தில் கூட்டாட்சி தத்துவத்தை வலுப்படுத்தும் என்பதே வரலாறு காட்டும் திசை. இது உருவாக முக்கிய காரணம் பெரியாரும் அண்ணாவும் அரசியல் இயக்கத்தின் இருவேறு கூறுகளை தங்கள் செயல்பாட்டின் அடித்தளமாகக் கொண்டதுதான்.

spacer.png

அரசியல் தத்துவத்தின் இரண்டு பரிமாணங்கள்!

நீண்ட நெடுங்காலமாக அரசியலில் இரண்டு ஆதாரமான செயல்பாடுகள் நிகழ்கின்றன. ஒன்று ஒரு குறிப்பிட்ட அரசின் கீழ், இறைவனின் கீழ், மதகுருவின் கீழ் மக்களை ஒன்றுபடுத்தி, சமூக அமைப்பாக்கி, அரசாக, பேரரசாக உருவாக்குவது. இதை நாம் கருத்தொப்புமை அரசியல் என்று கூறலாம். அதாவது ஒரு சில கருத்துகளை, கருத்தியலை அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்வது. அதனை வெளிப்படுத்தும் விதமாக ஒரு குறிப்பிட்ட குறியீட்டை, அடையாளத்தை அனைவரும் ஏற்பது. இவ்வாறு பேரரசு உருவாவது, சிதைவது, அவற்றுக்கிடையேயான போர்கள் ஆகியவை எல்லாம் வரலாறு என்று எழுதப்படுவதும், ஆராயப்படுவதும் உண்டு.

இதற்கு இணையாக மற்றொரு அரசியல் செயல்பாடும் பலகாலமாக நிகழ்ந்தது உண்டு. அது ஆண்டான், அடிமை; மேலோர், கீழோர்; அதிகார வர்க்கம், உழைக்கும் வெகுமக்கள்; முதலாளிகள், தொழிலாளிகள் என்பதான ஏற்றத்தாழ்வான சமூக அங்கங்களுக்கிடையேயான முரண்கள், மோதல்களின் அரசியல். ரோமானிய அடிமைகளின் எழுச்சிக்கு தலைமை தாங்கிய ஸ்பார்ட்டகஸ் குறித்த கதையாடல்கள் பிரபலமானவை. ரோமப் பேரரசில் பாட்ரீஷியன்ஸ் என்ற அதிகாரம் படைத்த பிரபுக்களுக்கும், ப்ளீப்ஸ் (Plebes) என்ற வெகுமக்களுக்குமான பிறப்பின் அடிப்படையிலான பிரிவினையை ஒட்டியே பொது வாக்கெடுப்பை ஆங்கிலத்தில் பிளிபிசைட் (Plebiscite) என்று இன்றும் அழைக்கிறோம். அதாவது மக்கள் அனைவரும் வாக்களிப்பது. இப்படியான சமூக முரண்களிடையே ஒடுக்கப்படுவோரின் அரசியலை முன்னெடுப்பதை முரண் அரசியல் எனலாம். கார்ல் மார்க்ஸ் இதுவரையிலான வரலாறு வர்க்கப் போராட்டங்களின் வரலாறே என்று கூறியது இந்த முரண் அரசியல் பரிமாணத்தை வலியுறுத்துவது.

இதில் முக்கியமான ஒரு சவால் என்னவென்றால் முரண் அரசியலை முன்னெடுக்கவும் ஒடுக்கப்பட்டோரின் கருத்தொருமிப்பு வேண்டும். அதனால் கருத்தொப்புமை அரசியலை முற்றிலும் கைவிட முடியாது. அப்படிக் கைவிட்டால் அது முடிவற்ற வன்முறைக்கும், சமூக வாழ்க்கை சிதைவுக்கும் வழி வகுக்கலாம்.

கருத்தொப்புமை அரசியல் முரண் அரசியலை கைவிட்டால் அது எதேச்சதிகாரமாக, சர்வாதிகாரமாக, பாசிசமாக மாறிவிடும். அதில் அரசுக்கு கீழ் படிதல் மட்டுமே வலியுறுத்தப்படும் நிலை உருவாகிவிடும். அதனால் இந்த இரண்டு விதமான அரசியல் தத்துவங்களும் இணைந்து பயணிப்பதே முழுமையான பலன் தரும். சமகால அரசியலில் முரண் அரசியலை முற்றிலும் ஒதுக்கும் பாசிஸ்டுகள் வர்க்க முரண் அரசியலைப் பேசும் கம்யூனிஸ்டுகளை கடுமையாக வெறுப்பதன் காரணத்தை நாம் இந்த வேறுபாட்டின் மூலம் புரிந்துகொள்ளலாம். அதே சமயம் கம்யூனிஸ்டுகள் கருத்தொருமிப்பு அரசியலை சரியான அரசியல் தருணத்தில் புரிந்துகொண்டால்தான் வெகுஜன அரசியலில் இணைய முடியும்.

spacer.png

தமிழக வரலாற்றில் உருவான அரசியல் பாதைகள்!

தமிழக வரலாற்றில் முரண் அரசியல் ஒரு முக்கியமான வடிவத்தைக் கண்டது. அது பார்ப்பனீய கருத்தியலின் காரணமாக நிலவும் ஜாதி சார்ந்த ஏற்றத்தாழ்வு மற்றும் பார்ப்பன சமூகத்தினர் பத்தொன்பதாம் நூற்றாண்டில் அடைந்த சமூக, அரசியல் ஆதிக்கம் ஆகியவற்றால் பார்ப்பனர்களுக்கும், பார்ப்பனரல்லாதோருக்கும் ஏற்பட்ட முரண் அரசியல் என்ற வடிவாகும். பார்ப்பனர்கள் பயிலும் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட ஜாதீய ஏற்றத்தாழ்வு கற்பிக்கும் தர்ம சாஸ்திரங்களை இந்துக்களின் சனாதன சட்டங்கள் என காலனீய ஆட்சியில் நீதிமன்றங்களும் பின்பற்றச் செய்தனர். அதன் மூலம் முன்னெப்போதும் இல்லாத அளவு பார்ப்பனீய கருத்தியலை ஆதிக்க கருத்தியலாக மாற்றினர். அதற்கான சமஸ்கிருத, ஆங்கிலக் கல்வியும் அவர்கள் உருவாக்கிய அமைப்பில் அவர்களுக்கு மட்டுமே சாத்தியமாக இருந்தது. ஏன் நவீன மருத்துவ படிப்பிற்குக்கூட சமஸ்கிருதப் பயிற்சி வேண்டும் என்று சொல்லி பார்ப்பனரல்லாதோரை விலக்கும் அளவு செல்வாக்கு பார்ப்பனீயத்துக்கு இருந்தது.

இப்படி பார்ப்பன அடையாளம் என்பது சமஸ்கிருத மொழி சாத்திரங்களுடன், சனாதன தர்மத்துடன் பிணைக்கப்பட்டிருந்ததால் அது ஆரியப் பண்பாடு என்று அறியப்பட்டது. அதற்கு மாறாக தமிழ்மொழியை மூலாதாரமாகக் கொண்ட தென்னிந்திய திராவிட பண்பாடு பார்ப்பனரல்லாதோரால் தங்கள் அடையாளமாக முன்வைக்கப்பட்டது. இந்தப் பண்பாட்டு முரணை, ஜாதீய ஏற்றத்தாழ்வு என்ற சமூக முரணை, “சூத்திரர்கள்” என்று பார்ப்பனர்களால் இழிவுபடுத்தி ஒடுக்கப்பட்டவர்களின் அரசியல் அணி சேர்க்கை உருவாக்கிய முரணையே திராவிட அரசியல் குறிப்பிடுகிறது. இந்தியாவின் பொதுமொழியாக இந்தி மொழியை உருவாக்க காங்கிரஸ் முனைந்தபோது இந்தி எதிர்ப்பின் தளத்தில் தமிழ் மொழி அடையாளம் என்பது கருத்தொருமிப்பின் சாத்தியத்தை உருவாக்கியது.

spacer.png

பெரியாரின் முரண் அரசியல்!

பெரியார் பார்ப்பனீயத்தை, ஜாதி படிநிலையை எதிர்ப்பதை முரண் அரசியலின் மையமாகக் கொண்டார். எல்லா ஒடுக்கப்பட்டவர்களுக்கான அரசியல் கருவியாக அவர் சுயமரியாதை என்ற கருத்தாக்கத்தை முன்வைத்தார். பெண் விடுதலைக்கும் அவர் அதையே வழியாகச் சொன்னார். இதனை தொடர்ந்து பிரச்சாரம் செய்வதன் மூலம், மக்கள் மனதில் பதியும்படி அமைதி வழியில் பல கிளர்ச்சிகளை செய்வதன் மூலம் மன மாற்றத்தை உருவாக்க முனைந்தார். அவர் வன்முறையை விரும்பவில்லை; வன்முறையால் நிலையான சமூக மாற்றத்தை உருவாக்க முடியாது என்பதை உணர்ந்திருந்தார். அதே சமயம் அவர் தேர்தல் பங்கேற்பு, ஆட்சி அதிகாரம் ஆகியவற்றையும் தவிர்க்க விரும்பினார். ஏனெனில் தேர்தல் பங்கேற்பு என்பது மக்களாட்சியில் கருத்தொருமிப்பு அரசியலுக்கே கொண்டு செல்லும், முரண் அரசியலை கூர்மழுங்கச் செய்யும் என்று நினைத்தார்.

முரண் அரசியல் பாதையில் பெரியார் சனாதன தர்மத்தை வீழ்த்த சாத்திரங்கள், வேத புராணங்கள் ஆகியவற்றை மட்டுமன்றி, இறை நம்பிக்கையையும் கேள்விக்கு உள்ளாக்குவது அவசியம் என்று நினைத்தார். அது காலப்போக்கில் தீவிரமான இறை மறுப்பாகவும் வடிவம் எடுத்தது. பொதுவாகவே எந்தக் குறியீட்டையும் புனிதப்படுத்துவதை அவர் ஏற்கவில்லை. தமிழ் மொழியை விமர்சனமின்றி கொண்டாடுவதையும் அவர் ஏற்க மறுத்தார். தமிழில், தமிழ் இலக்கியத்தில் புழங்கிய பிற்போக்கு கருத்துகளை விமர்சித்தார். சமரசமற்ற முரண் அரசியலை அவர் சுதந்திரவாத அரசியலுடன், சுயமரியாதை என்ற வகையில் தனியுரிமை கோட்பாட்டுடன் இணைத்து சட்டத்துக்கு உட்பட்ட தீவிரமான கிளர்ச்சி வடிவங்களை மேற்கொண்டார். சட்டம் அனுமதிக்காதபோது அமைதி வழியில் சிறை ஏகும் போராட்டங்களையும் நடத்தினார். தொடர்ந்து பார்ப்பனீய மேலாதிக்கம், அதனை அனுமதிக்கும் அரசியல் நிர்ணய சட்டம், இந்திய ஒன்றிய அரசின் மேலாதிக்கம் ஆகியவற்றுக்கு எதிராகப் போராடி வந்தார். அதே சமயம் காமராஜர் ஆட்சியின் மக்கள் நலத் திட்டங்களையும் ஆதரித்தார். தி.மு.க 1949ஆம் ஆண்டு தோன்றி 1967ஆம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றும்வரை அவர் முரண் அரசியலைத் தொடர்ந்து முன்னெடுத்து திராவிட கருத்தியலை தீவிரமாக நிலைகொள்ளச் செய்தார்.

spacer.png

அண்ணாவின் கருத்தொப்புமை அரசியல்!

பார்ப்பனரல்லாதோர், சாமானிய மக்கள் அரசியல் அதிகாரத்தைப் பெறும் வரை ஆதிக்க கருத்தியலை முறியடிப்பது என்பது கடினமானது. அரசியல் அதிகாரத்தை வன்முறை வழியாக கைப்பற்றலாம் அல்லது மக்களாட்சியில் தேர்தல் பங்கேற்பின் மூலம் கைப்பற்றலாம். பெரியாரைப் போலவே அண்ணாவும் வன்முறையில் சிறிதும் நம்பிக்கையில்லாதவர். போராட்டங்களில் சிறை செல்வதுகூட கட்சியினரின், எளிய மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் என்பதை உணர்ந்து எச்சரிக்கையுடன் யார் யார் சிறை செல்ல இயலும் என்பதை முன் கூட்டியே கேட்டறிந்து கிளர்ச்சிகளை அறிவித்தவர். அதனால் மக்களாட்சி சாத்தியமாக்கிய தேர்தல் பாதை மூலம் ஆட்சிக்கு வருவதே பார்ப்பனீய கருத்தியலின் பிடியைத் தளர்த்தி திராவிட கருத்தியலை வேரூன்றச் செய்ய அவசியமானது என்ற முடிவுக்கு வந்தார். அப்படித் தேர்தலில் பரவலான மக்களின் ஆதரவைப் பெற வேண்டுமானால் கருத்தொப்புமை அரசியலை உருவாக்குவது அவசியம் என்பதையும் உணர்ந்தார்.

அதனை செயல்படுத்த அவர் திராவிட என்ற சொல் பண்பாட்டை, நிலப்பகுதியைச் சார்ந்த அனைவரையும் குறிப்பதாகவும் தமிழ் என்பதை அனைத்து தமிழ்நாட்டு மக்களை உள்ளடக்கிய மொழி அடையாளமாகவும் கொண்டு திராவிட-தமிழ் அடையாளத்துக்கான கருத்தொப்புமையை உருவாக்க முனைந்தார். உதாரணமாக கடவுள் மறுப்பு என்பதற்கு பதிலாக திருமூலரின் “ஒன்றே குலம், ஒருவனே தேவன்” என்ற அனைத்து நம்பிக்கையாளர்களையும் உள்ளடக்கும் அருவமான பொதுமைக் குறியீட்டை முன்வைத்தார். “ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்” என இறைமைக்கு ஒரு புது வரையறை சொன்னார். இதற்கு இணையாக கலைஞர் “கோயில்கள் கூடாது என்பதல்ல; அது கொடியவர்களின் கூடாரமாக ஆகிவிடக் கூடாது” என்று பராசக்தி பட வசனத்தின் மூலம் கருத்தொருமிப்பு அரசியலை முன்னெடுத்ததாக பேராசிரியர் எம்.எஸ்.எஸ்.பாண்டியன் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்மொழி மாண்பு, அதன் தொன்மை ஆகியவற்றை அண்ணாவும், கலைஞரும், பிற தி.மு.க தலைவர்களும் கருத்தொப்புமைக்கான சொல்லாடலாக மாற்றினர். அதனால் திராவிட - தமிழ் பண்பாட்டு அடையாளத்தை ஏற்பவர்களையெல்லாம் கருத்தொப்புமை வளையத்திற்குள் கொண்டுவந்தனர். அதே சமயம் திராவிட கருத்தியலையும், ஆரிய சனாதன எதிர்ப்பையும் மறவாமல் கைக்கொண்டு வந்தனர். இந்தி மொழியை இணைப்பு மொழியாக, ஒற்றை ஆட்சி மொழியாக மாற்றுவதையும் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். அதன் காரணமாக 1965ஆம் ஆண்டு தன்னெழுச்சியாக வெடித்தெழுந்த இந்தி எதிர்ப்பு போர் பல மொழிப்போர் தியாகிகளையும், வரலாற்றுத் தன்னுணர்வையும் உருவாக்கியது. அது தமிழகப் பள்ளிகளில் மும்மொழித் திட்டத்தை முற்றிலும் அகற்றியது. தமிழகத்தைப் பொறுத்தவரை பிற இந்தியப் பகுதிகள், உலக நாடுகள் அனைத்துடனும் தொடர்பு மொழி என்பது ஆங்கிலம் மட்டுமே என்றானது.

இதற்கெல்லாம் உச்சமாக 1967 தேர்தலில் தி.மு.க வெற்றி பெற்ற பிறகு திருச்சிக்குச் சென்று அண்ணா வெற்றியை, பெரியாருக்கு காணிக்கையாக்கியது கருத்தொருப்புமை அரசியல் ஒருபோதும் முரண் அரசியலை, சமூக முரண்களை, சாமானியர்கள் நலன்களை, சமூக நீதி லட்சியத்தை மறக்கக் கூடாது என்பதை உணர்த்துவதாகவே அமைந்தது. அதன் தொடர்ச்சியாகவே இன்று பெரியார் பிறந்த தினத்தை சமூக நீதி தினமாக மு.க.ஸ்டாலின் அரசு அறிவித்துள்ளது. சமூக நீதிக்காக, சமத்துவத்துக்காக இந்த அரசியல் தத்துவ இரட்டைக் குழல் துப்பாக்கி என்றும் போராடும் என்பது உறுதிப்பட்டுள்ளது.

கட்டுரையாளர் குறிப்பு:

 

ராஜன் குறை கிருஷ்ணன் - பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி

 

https://minnambalam.com/politics/2021/09/15/7/Periyar-and-Anna-political-double-barrel-gun

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.