Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

1985: இலங்கையில் இந்திய கிரிக்கெட் அணி - ஜூட் பிரகாஷ்

Featured Replies

1985: இலங்கையில் இந்தியா

 

Sep 11….அமெரிக்காவிற்கு மட்டுமல்ல, இலங்கை கிரிக்கெட்டைப் பொறுத்தவரையிலும் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள்.

Sep 11, 1985ல் தான் இலங்கை கிரிக்கெட் அணி தனது முதலாவது டெஸ்ட் வெற்றியை பதிவு செய்தது. அந்த நேரத்தில் தமிழ் போராளிகளிற்கு ஆதரவும் அடைக்கலமும் பயிற்சியும் சுடுகலன்களும் கொடுத்து வந்த இந்தியாவிற்கு எதிராக ஈட்டப்பட்ட வெற்றி, கொழும்பு சரவணமுத்து விளையாட்டரங்கின் எல்லைக் கோட்டைத் தாண்டியும் எதிரொலித்தது.

2009 போர் வெற்றிக் கொண்டாட்டங்களிற்கு எல்லாம் முத்தாய்ப்பு வைத்த கொண்டாட்டமாக தென்னிலங்கையில் இந்தியாவிற்கு எதிரான இந்த கன்னி டெஸ்ட் வெற்றி கொண்டாடப்பட்டது. 

டெஸ்ட் ஆட்டம் முடிந்த அடுத்த நாளான வியாழக்கிழமையான Sep 12ம் திகதியை சிரிலங்காவின் அதியுத்தம ஜனாதிபதி JR ஜெயவர்தன பொது விடுமுறை நாளாக அறிவித்தது வெற்றிக் கொண்டாட்ங்களிற்கு மகுடம் சேர்த்தது.

ஜூலை 13, 1985ல் தாயகம், தேசியம், சுயநிர்ணயம், இந்திய வம்சாவளியினரின் குடியுரிமை ஆகிய கோட்பாடுகளடங்கிய திம்பு பிரகடனத்தை தமிழ் இயக்கங்கள் ஒற்றுமையாக வெளியிட, இலங்கை அரசிற்கும் தமிழர் தரப்பிற்கும் இடையில் இந்திய அணுசரணையுடன் நடைபெற்ற திம்பு பேச்சுவார்த்தை முறிகிறது.  

அதே காலப்பகுதியில் லண்டனில் நடந்த ICCயின் கூட்டத்தில், 1987 உலக கிரிக்கட் கோப்பை போட்டிகள் எங்கு நடைபெற வேண்டும் என்ற வாக்களிப்பில், இந்தியாவிற்கு ஆதரவாக இலங்கை வாக்களிக்கிறது.

இலங்கை அளித்த ஆதரவிற்கு பிரதியுபகாரமாக, இந்திய கிரிக்கட் அணியின் முதலாவது இலங்கை விஜயம் 1985 ஓகஸ்ட் இறுதியில் ஆரம்பமாகும் என்று BCCI வாக்குறுதியளிக்கிறது. இந்திய கிரிக்கெட் அணியின் இலங்கை விஜயத்தை பகீஷ்கரிக்க வேண்டும் என்று தமிழ்நாட்டில் போராட்டம் வெடிக்கிறது. 

முதலில் விஜயத்தை இரத்து செய்வதாக அறிவித்த இந்தியா, இலங்கையின் இராஜதந்திர அழுத்தங்களிற்கு அடிபணிந்து, ஓகஸ்ட் மாத ஆரம்பத்தில் பயணத்திற்கான தேதிகளை உறுதிப்படுத்துகிறது. 

இலங்கை விஜயம் நடைபெறாது என்று நம்பி இங்கிலாந்தில் county cricket விளையாட போன அமரநாத், வெங்சக்கார், சாஸ்திரி போன்ற இந்திய வீரர்கள் அவரச அவசரமாக நாடு திரும்புமாறு பணிக்கப்படுகிறார்கள். 

சென்னையில் நடைபெறவேண்டிய பயிற்சி பாசறை, தமிழ்நாட்டில் ஏற்பட்ட கொந்தளிப்பால் பம்பாய்க்கு மாற்றப்படுகிறது. இந்திய அணியின் விக்கெட் காப்பாளர் கிர்மானி நீக்கப்பட்டு சதானந் விஷ்வநாத் அணியில் இடம்பிடிக்கிறார். கிர்மானியோடு Madan Lalற்கும் Roger Binnyக்கும் அணியில் இடம் கிடைக்கவில்லை. இந்திய அணியில் இரு தமிழர்களிற்கும் இடம் கிடைக்கிறது, ஶ்ரீகாந்த் மற்றும் சிவராமகிருஷ்ணன். 

1983 ஜூனில் லண்டனில் வென்ற உலக கோப்பை, 1985 மார்ச்சில் மெல்பேர்ணில் வென்ற Benson & Hedges கோப்பை, 1985 ஏப்ரலில் ஷார்ஜாவில் வென்ற Rothmans கோப்பை என்று வெற்றி மமதையிலும், சரியாக திட்டமிடாமலும், முறையான தயார்படுத்தலில்லாமலும் இலங்கை மண்ணில் கால் பதித்த இந்திய கிரிக்கெட் அணியை எதிர்பார்த்து, பலமான தயார்படுத்தலுடனும் அதியுச்ச உத்வேகத்துடனும் இலங்கை கிரிக்கட் அணி காத்திருந்திருந்தது.

அன்றைய இலங்கையின் முன்னணி அம்பயர்களான, பொன்னுத்துரையும் KT ஃபிரான்ஸிஸும் தாங்கள் அரங்கேற்றப்போகும் வரலாற்று நிகழ்வை அறியாமல், வெள்ளவத்தை அலெக்ஸாண்ரா ரோட் கச்சான் கடையில் வாங்கிய உறைப்பு கடலையை கொரித்துக் கொண்டு வெள்ளவத்தை கடற்கரையை நோக்கி நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். 

------------------------------------------------------------------------------------------------------

ஓகஸ்ட் 25, 1985 அன்று SSC மைதானத்தில் முதலாவது ஒரு நாள் போட்டி இடம்பெறுகிறது. கொக்காவில் தொலைக்காட்சி டவர் அடிக்க முற்பட்ட காலமாகையால், யாழ்ப்பாணத்திலும் ரூபவாஹினியூடாக ஆர்வத்துடன் போட்டியை மக்கள் பார்க்கிறார்கள்.  

யாழ் குடாநாட்டில் ஆமிக்காரன்கள், கோட்டை, காரைநகர், பலாலி, வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, நாவற்குழி முகாம்களிற்குள் முடக்கப்பட்டிருந்த காலமது.

ஷியா மார்ஷெட்டியும் ஹெலியும் ஷெல்லும் சனத்தை பதம்பார்க்க, ஆனையிறவில் ஆமிக்காரன், போறவாற சனத்தை ஏற்றி இறக்கி, துலைத்தெடுத்து அலுப்பு கொடுத்துக்கொண்டிருந்த காலம். 

வவுனியாவிற்கு வடக்கே இலங்கை அரசு விதித்திருந்த பொருளாதாரத்தடை அமுலிலிருந்த காலகட்டம். "எங்களிற்கு வலி தந்த சிங்கள தேசத்திற்கு கிரிக்கெட் ஆடுகளத்தில் இந்தியா பதிலடி கொடுக்கும்" என்ற எண்ணமே யாழ்ப்பாணத்தில் பரவலாக உணரப்பட்டது.

முதலாவது ஒரு நாள் ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாட தொடங்கிய இலங்கை அணிக்கு அமால் சில்வாவும் ரவி ரட்ணாயக்காவும் ஒரு நல்ல ஆரம்பத்தை கொடுத்தார்கள். மொஹிந்தர் அமரநாத், ரவி சாஸ்திரி, ஷேதன் ஷர்மா இணைந்து விக்கெட்டுக்களை சாய்க்க, இலங்கை 82/3ல் தத்தளித்தது. 

ரோய் டயஸும் (80) அர்ஜுண ரணதுங்கவும் (64) இணைந்து நாலாவது விக்கெட்டுக்கிற்கு 110 ஓட்டங்களை சேர்த்து, இலங்கையை ஒரு பலமான நிலைக்கு இட்டுச்சென்றார்கள். நிர்ணயிக்கப்பட்ட 45 ஓவர் முடிவில் இலங்கை அணி 241/8 ஓட்டங்களை பெற்றது. இந்திய அணிக்கு ஷேதன் ஷர்மா 3/50 கைப்பெற்றினார்.

ஒஸ்ரேலியாவில் கலக்கிய இந்தியாவின் நட்சத்திர ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் கிருஷ்ணமாச்சாரி ஶ்ரீகாந்தும் ரவி சாஸ்திரியும் களமிறங்க, யாழ்ப்பாணம் உற்சாகமாகியது. வழமைக்கு மாறாக ஶ்ரீகாந்த் நிதானமாக ஆட, சாஸ்திரி வழமை போல் பசைஞ்சு நொட்டி நொட்டி ஆடினார். இந்திய அணி 69 ஓட்டங்கள் எடுத்திருந்த போது, ரொஜர் விஜயசூரியவின் பந்துவீச்சில் ஶ்ரீகாந்த் (29) ஆட்டமிழக்கிறார். 

அடுத்தது அஸாருதீன், போன வருஷம் இந்திய அணியில் நுழைந்து, தானாடிய முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் இங்கிலாந்திற்கெதிராக சதங்கள் அடித்த அஸார்தீன் (8), இந்திய அணி 81 ஓட்டங்கள் எடுத்த வேளை ஆட்டமிழக்க, சிரிலங்கா அணியின் கை மேலோங்குகிறது.

டுலீப் வெங்சக்கார் மடமடவென ரன்களை குவிக்க இந்திய அணியின் run chase வேகம் பிடிக்கிறது. அணியின் எண்ணிக்கை 135ல் சாஸ்திரி ஆட்டமிழக்க, Batஜ சுழற்றிக்கொண்டு கபில்தேவ் களமிறங்குகிறார். "இனித் தான் விளாயாட்டு இருக்கு" முன் கதிரையிலிருந்த பழசு, சாரத்தை அட்ஜஸ்ட் பண்ணி விட்டு சாய்ந்து உட்காருது. 

வெங்சக்காரும் கபிலும் அடித்து ஆட, அணியின் ஓட்ட எண்ணிக்கை 185ஜ சொற்ப நேரத்தில் தொடுகிறது. அந்த இடத்தில் கபில் (24) ருமேஷ் ரட்னாயக்கவின் பந்தில் பலியாக, பசையல் மன்னன் கவாஸ்கர் களமிறங்கினார்.

196ல் கவாஸ்கர் (0) ரன் அவுட்டாக களமிறங்கிய இந்தியாவின் உலக கோப்பை நாயகன் மொஹிந்தர் அமரநாத்தும் (2), அணியின் எண்ணிக்கை 200ல் ஆட்டமிழக்க, இந்திய அணியில் டென்ஷன் எட்டிப்பார்க்க தொடங்கியது. 

“நாசமா போவார், தோக்க போறாங்கள், உதுக்குத் தான் வடக்கத்தியாரை நம்பக் கூடாது என்றுறது" பக்கத்து வீட்டு அன்டி உணர்ச்சிவசப்பட்டார்.

200/6ல், சேடம் இழுக்கத் தொடங்கியிருந்த இந்திய அணிக்கு ஷேதன் ஷர்மாவாலும் (8) உயிர் கொடுக்க முடியவில்லை. டுலிப் வெங்சக்கார் மட்டும் மற்றப் பக்கத்தில் நம்பிக்கையின் உருவமாய் ஆடிக்கொண்டிருந்தார். 

அம்பாந்தோட்டை அப்புஹாமி திருப்பதி வெங்கட்டிற்கு நேர்த்தி வைக்க, RJ ரட்னாயக்கா வீசிய பந்தை, DB வெங்சக்கார் (89) ஓங்கி அடிக்க, JR ரட்னாயக்க ஓடிப்போய் catch பிடிக்க, 234/8. 

யாழ்ப்பாணம் தலையில் கைவைத்து விட்டது. 

பத்தொன்பது வயதேயான தமிழ்நாட்டு அம்பி சிவராமகிருஷ்ணன், அடுத்து வந்த 44வது ஓவரில் முதல் மூன்று பந்துகளை வீணடிக்க, டென்ஷன் ஈஸி சேயரில் சம்மணமிட்டு குந்தியது. நாலாவது பந்தை தட்டிவிட்டு சிவராமகிருஷ்ண அம்பி அங்கால ஓட, ஜந்தாவது பந்தை விஷ்வநாத் பவுண்டரிக்கு அனுப்பினார், 239/8. 

"நல்லூரானே இந்தியா எப்படியாவது வெல்லோணும், ரெண்டு தேங்காய் அடிப்பன்" அப்புஹாமிகு எதிராக கந்தசாமி அண்ணன் போராட்டத்தில் குதித்தார். 

கடைசி பந்தை விஷ்வநாத் அடித்து விட்டு ஓட, சிவராமகிருஷ்ணன் மற்றப்பக்கம் நோக்கி பறந்தார். 

கடைசி ஓவர், இந்திய அணி வெற்றி பெற மூன்று ஓட்டங்கள் தேவை. டுலீப் மென்டீஸ் உட்பட இலங்கை அணியின் அனைத்து வீரர்களும் கூடி கதைத்து அஷந்தா டீ மெல்லிடம் பந்தை கொடுக்கிறார்கள். 

அஷந்தா டீ மெல், ஒரு ஸ்டைலிஷ் bowler. முதலாவது பந்தை போட அஷந்தா ஓடி வருகிறார்... "முருகா முருகா முருகா"... கந்தசாமி அண்ணன் முணுமுணுப்பது ஊருக்கே கேட்கிறது. 

முதலாவது பந்தை விஸ்வநாத் அழகாக ஒரு cover drive அடிக்க, தலை தெறிக்க இரு ஓட்டங்களிற்கு ஓடிய அம்பி சி.ரா.கிருஷ்ணனிற்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது, யாழ்ப்பாணத்தாருக்கோ அப்பத்தான் மூச்சு திரும்ப வந்தது, 241/8. 

இரண்டாவது பந்து outside the off stump விழ, விஸ்வநாதன் துலாவ, வந்த மூச்சு திரும்ப போனது, நல்ல காலம் batல் படவில்லை. 

மூன்றாவது பந்திற்கு மென்டீஸ் எல்லா fieldersஜயும் கிட்ட கொண்டுவர, விஸ்வநாத் மீண்டும் ஒருக்கா guard எடுத்தார். "Padல மட்டும் பட விட்டுடாதேடா, அம்பயர் அவங்கட ஆள், கள்ளப்பயல், தூக்கி குடுத்திடுவான்" கந்தசாமியர் tips கொடுத்தார். 

Leg stumpல் விழுந்த பந்தை விஷ்வநாத் glance பண்ண, சி.ரா.கி பறந்து வர, அரவிந்தா பந்தை பிடித்து ஸ்டம்ஸை நோக்கி எறிய, நாங்கள் எம்பி எழும்ப...

மூன்றே மூன்று பந்துகள் மீதமிருக்கையில், இரண்டு விக்கெட்டுக்களால் இந்திய அணி வெற்றி பெற்றது.

"நல்லூரானே ரெண்டு தேங்காயை நாலா தாறன், அடுத்த மேட்சையும் வெல்லப் பண்ணு" கந்தசாமி அண்ணன் வாக்குறுதியை நிறைவேற்றுவதை பின் தள்ளினார்.

அடுத்த மேட்ச்.. 

இலங்கை அணி வெற்றி பெற்ற டெஸ்ட் மேட்ச் ! அன்றைக்கு மட்டும் கந்தசாமி அண்ணன் அந்த ரெண்டு தேங்காயை நல்லூரானுக்கு அடித்திருந்தால்.. ச்சா.. அடுத்த மேட்சில் அந்த துன்பியல் சம்பவம் நடந்திராது.

ஜூட் பிரகாஷ்

மெல்பேர்ண்

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்சிஸ், ஆனந்தப்பா, பொன்னுத்துரை, குரே. இவர்களில் ஓரளவு நடுநிலையானவர் பிரான்சிஸ். மிச்சம் எல்லாரும் 12 வது இலங்கை வீரர்தான்🤣.

இந்த தொடரில் சிறீகாந்த் ரொம்பவே பாதிக்கப்பட்டார். தமிழர் என்பதால் என அவரே பின்னாளில் சொன்னதாக நியாபகம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.