Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்நாடு தொல்லியல் துறை வெளிநாடுகளில், வெளி மாநிலங்களில் அகழாய்வு செய்ய விரும்புவது ஏன்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாடு தொல்லியல் துறை வெளிநாடுகளில், வெளி மாநிலங்களில் அகழாய்வு செய்ய விரும்புவது ஏன்?

  • முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பிபிசி தமிழ்
19 செப்டெம்பர் 2021, 03:03 GMT
தொல்லியல்

பட மூலாதாரம்,TN ARCHAEOLOGY

 
படக்குறிப்பு,

கொடுமணல் அகழ்வுப்பணி

தமிழ்நாடு தொல்லியல் துறை வேறு மாநிலங்களில் உள்ள பாலூர், வேங்கி, தலக்காடு போன்ற இடங்களிலும் தொல்லியல் ஆய்வுகளை நடத்தப்போவதாக தெரிவித்துள்ளது. இந்த இடங்களின் பின்னணி என்ன என்பதை இரு பாகங்களாகப் பார்க்கலாம். அதன் முதல் பாகம் இது.

தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை தமிழ்நாட்டின் பல இடங்களில் நடத்தப்பட்ட தொல்லியல் ஆய்வுகளின் முடிவுகளை சமீபத்தில் வெளியிட்டது. இந்த முடிவுகள், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் மாநில சட்டப்பேரவையில் வெளியிடப்பட்டன.

இது தொடர்பான அறிவிப்பில், தமிழ்நாட்டிற்குள்ளேயே நடக்கும் தொல்லியல் ஆய்வுகள் போக, வெளி மாநிலங்களிலும் வெளி நாடுகளிலும் தொல்லியல் ஆய்வுகளை நடத்தப்போவதாக கூறப்பட்டிருந்தது. வெளிமாநிலங்களைப் பொறுத்தவரை தற்போது கேரளாவில் பட்டணம் என்ற பெயரில் உள்ள முசிறி, ஆந்திர மாநிலத்தில் உள்ள வேங்கி, கர்நாடக மாநிலத்தில் உள்ள தலைக்காடு, ஒடிஷாவில் உள்ள பாலூர் ஆகிய இடங்களில் ஆய்வுகள் நடத்தப்படும்.

இந்த நான்கு இடங்களின் பின்னணி என்ன, இந்த இடங்களில் ஏன் மாநில தொல்லியல் துறை அகழாய்வுகளை நடத்தவுள்ளது என்பதை இப்போது பார்க்கலாம்.

ஓடிஷா மாநிலத்தில் உள்ள பாலூர்

தொல்லியல்

பட மூலாதாரம்,TN ARCHAEOLOGY

பாலூர் அல்லது பாலூரா என அழைக்கப்படும் இந்த இடம் ஒடிஷாவின் கஞ்சம் மாவட்டத்தில் சத்திராபூர் உட்பிரிவில் சிலிகா ஏரியின் தெற்கு முனையில் அமைந்திருக்கிறது. அதேபோல, சிலிகா ஏரியின் கரையில் அமைந்திருக்கும் மானிக்கப்பட்னாவும் பாலூரைப் போலவே மிக முக்கியமான தலமாகக் கருதப்படுகிறது. பண்டைய காலத்தில் பாலூர் முக்கிய துறைமுகமாகச் செயல்பட்டிருந்துள்ளது. தாலமி தன்னுடைய வரைபடத்தில் இந்த ஊரை பல்லுரா (Paloura) என்று குறிப்பிட்டுள்ளார்.

1984-85ல் பாலூரிலும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளிலும் இந்தியத் தொல்லியல் துறை அகவாய்வுகளை நடத்தியது. மணற் குன்றுகளுக்கு மத்தியில் சுமார் அரை சதுர கி.மீ. பரப்பில் நடத்தப்பட்ட இந்த அகழாய்வுகளில் துருத்திக்கொண்டிருக்கும் பகுதிகளைக் கொண்ட செந்நிற மட்பாண்டங்கள் கிடைத்தன. இவை 12 - 14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை எனக் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், ரோம் நாட்டைச் சார்ந்த ரெளலட்டட் பானை ஓடுகளும், ஆம்போரா மதுசாடிகளும் கிடைத்துள்ளன. அதுமட்டுமின்றி சீன நாட்டு பானை ஓடுகளும் கிடைத்துள்ளன. பாலூரில் உள்ள பல மத்திய காலக் கோவில்கள் அவற்றின் அடிமட்டம் வரை மணலில் புதைந்துள்ளன. அதேபோல, பாலூரில் ஒரு வீட்டில், அஸ்திவாரத்திற்காகத் தோண்டியபோது பெரிய அளவில் மட்பாண்டங்கள் கிடைத்தன.

இங்கு நடத்தப்பட்ட ஆரம்ப கால ஆய்வுகளின்படி, பாலூரில் ஒரு குறிப்பிட்ட இடம் மட்டுமல்ல, இந்தப் பிராந்தியமே தொல்லியல்தலமாக இருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. ஆனால், 80களுக்குப் பிறகு இங்கு தொல்லியல் அகழாய்வுகள் ஏதும் நடத்தப்படவில்லை. பாலூர் பிராந்தியத்தில் சரியான இடங்களைத் தேர்வுசெய்து, முறைப்படி அகழாய்வுகளை நடத்தினால் இந்தியாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியின் கடல் பயணங்களைப் பற்றிய தகவல்கள் தெரியவரலாம் என நம்பப்படுகிறது.

பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரம்மாண்ட புராணத்தில் சிலிக்கா ஏரி, மிக முக்கியமான வர்த்தக மையமாகக் குறிப்பிடப்படடுள்ளது. பல நூறு கப்பல்கள் இங்கு நின்று, புறப்பட்டுச் சென்றிருக்கின்றன. ஜாவா, மலேயா, இலங்கை முதலிய இடங்களுக்கு இங்கிருந்தே கப்பல்கள் புறப்பட்டுச் சென்றிருக்கின்றன. சோழமண்டலக் கடற்கரைப் பகுதியிலிருந்து மலேயா உள்ளிட்ட கிழக்குப் பிராந்தியங்களுக்குச் செல்ல இந்த பாலூர் மட்டுமே துறைமுகமாக இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. புத்தரின் புனிதப் பல் இங்கிருந்துதான் இலங்கைக்கு எடுத்துச் செல்லப்பட்டதாகக் கருதப்படுகிறது. யாத்ரீகரான தாலமியின் குறிப்புகளிலும் பாலூர் குறிப்பிடப்படுகிறது.

பூம்புகார் நகரம்

பட மூலாதாரம்,TN ARCHAEOLOGY

 
படக்குறிப்பு,

கடலுக்கடியில் பூம்புகார் நகரம் தொல்லியல் அகழ்வுப்பணி

கிறிஸ்தவ யுகத்தின் துவக்க காலத்தில், இலங்கையிலிருந்து வரும் கப்பல்கள் பாலூர் துறைமுகத்திற்கு வந்து, அதன் பிறகே தென்கிழக்குஆசிய நாடுகளுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளன. இப்போது இந்தப் பகுதி ஒரு கிராமமாக இருக்கிறது.

பூம்புகார் மற்றும் அரிக்கமேடு துறைமுகங்களிலிருந்து கீழை நாடுகளுடன் நேரடியாகவும், பாலூர் துறைமுகம் வழியாகவும் வணிகம் நடைபெற்றுள்ளதாக தமிழக தொல்லியல் துறை கருதுகிறது. இதற்கு வலுவூட்டும் வகையிலான ஆதாரங்களை கண்டடையும் வகையில் ஒதிஷா மாநில தொல்லியல் வல்லுநர்கள் உடன் ஆய்வு மேற்கொள்ளப்படும் என மாநிலத் தொல்லியல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இந்த அகழாய்வில் கிடைக்கும் தரவுகளை வசவசமுத்திரம், அரிக்கமேடு, பூம்புகார், அழகன்குளம், கொற்கை போன்ற பண்டைத் தமிழக துறைமுகங்களோடு ஒப்பாய்வு செய்து மேலை மற்றும் கீழை நாடுகளுடன் தமிழகம் கொண்டிருந்த வணிகத் தொடர்பினை உறுதிசெய்ய முடியுமென்றும் தொல்லியல் துறை நினைக்கிறது. இதன் காரணமாகவே இந்த இடம் தேர்வுசெய்யப்பட்டுள்ளது.

"தற்போதைய அரசு எல்லைகளை வைத்து பண்டைய காலத்தை முடிவுசெய்ய முடியாது. தமிழ்நாட்டிற்கும் சிந்து சமவெளிப் பகுதிகளுக்கும் தொடர்பு இருப்பதாகக் கருதுவதால், மேற்குக் கடற்கரைப் பகுதிகள், கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் செய்யப்படும் தொல்லியல் ஆய்வுகள் மிக முக்கியம்" என்கிறார் Journey of a Civilization: Indus toVaigai நூலின் ஆசிரியரான ஆர். பாலகிருஷ்ணன்.

ஆந்திர பிரதேசத்தில் உள்ள 'வேங்கி'

கலிங்கா

பட மூலாதாரம்,KALINGA

ஆந்திர மாநிலத்தில் கிருஷ்ணா மற்றும் கோதாவரி ஆகிய இரண்டு பேராறுகளுக்கும் இடையில் அமைந்திருந்த பிரதேசத்தில் இருந்த ஒரு ராஜ்ஜியமே வேங்கை நாடாக அழைக்கப்பட்டது. வேங்கை நாட்டின் தலைநகரம் தற்போதைய எலூருக்கு அருகில் பெடவாகியில் அமைந்திருந்தது. கிட்டத்தட்ட ஏழு நூற்றாண்டுகளுக்கு வேங்கை மிக முக்கியமான நாடாக இருந்தது.

கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் அசோகரின் மௌரியப் பேரரசின் ஒரு பகுதியாக வேங்கை இருந்தது. அதற்குப் பிறகு, அதற்குப் பிறகு, சாதவாகனர்கள், இஷ்வாகுகள் ஆட்சி செய்தனர். இதன் பின்னர் சாலங்காயனர்கள், விஷ்ணுகுந்தினர்கள் ஆட்சி செய்தனர். ஏழாம் நூற்றாண்டில் விஷ்ணுகுந்தினர்களிடமிருந்து இரண்டாம் புலிகேசி இந்த நாட்டைக் கைப்பற்றினார். இதிலிருந்து கீழைச் சாளுக்கிய வம்சம் துவங்கியது.

இந்த நாட்டை கீழைச் சாளுக்கியர் ஆட்சிசெய்தனர். கீழைச் சாளுக்கிய இளவரசர்கள் தங்கள் நாட்டினை தெலுங்குச் சோழன் ஜடா சோழ வீமனிடம் இழந்து முதலாம் ராஜராஜனிடம் அடைக்கலம் புகுந்தனர்.

முதலாம் ராஜராஜன் நாட்டை மீட்டு கீழைச் சாளுக்கிய இளவரசன் சக்திவர்மனுக்கும் அளித்தனர். அவனும் அவனுக்குப் பிறகு அவனுடைய தம்பி விமலாதித்தனும் அந்த நாட்டை ஆட்சி செய்தனர். விமலாதித்தனுக்கு ராஜராஜன் தன்னுடைய மகள் குந்தவையை திருமணம் செய்து வைத்தான். வேங்கை நாட்டிற்கும் சோழ நாட்டிற்கும் இடையில் ஏற்பட்ட இந்த திருமண உறவால் வேங்கை நாட்டில் அமைதி நிலவியது. இவர்கள் ராஜராஜசோழனை தங்கள் பேரரசனாக ஏற்றனர்.

சோழப் பேரரசைப் பொறுத்தவரை, ராஜேந்திரச் சோழனுக்குப் பிறகு பின்னர் அவனது மகன்கள் ஆட்சி செய்தனர். ஆனால் இவர்களுக்குப் பிறகு சோழப்பேரரசை நிர்வகிக்க வாரிசு இல்லாததால், ராஜேந்திரச் சோழனின் மகளான அம்மங்கை தேவியாருக்கும் கீழைச் சாளுக்கிய மன்னன் ராஜராஜ நரேந்திரனுக்கும் பிறந்த முதலாம் குலோத்துங்கச் சோழன் சோழநாட்டின் சக்கரவர்த்தி ஆக முடிசூட்டப்பட்டான். 12ஆம் நூற்றாண்டில் இருந்து சோழப் பேரரசின் ஒரு பகுதியாக வேங்கை இருந்தது. பிற்காலத்தில் வேங்கை நாடு விஜயநகரப் பேரரசின் ஒரு பகுதியாக மாறியது.

இப்படியாக, சோழப் பேரரசுக்கும் கீழைச் சாளுக்கிய பேரரசுக்கும் இடையில் நீடித்த தொடர்புகள் இருந்துவந்தன. ஆகவே, வேங்கி பிரதேசத்தில் அகழாய்வு செய்வதன் மூலம், இந்த வரலாறு குறித்து கூடுதல் தகவல்களைத் திரட்ட மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

முசிறி, தலக்காடு ஆகியவற்றிலும் தமிழக தொல்லியல் துறை ஆய்வுகளை நடத்தவுள்ளது. அவற்றின் பின்னணி, தலக்காடு பற்றிய தொன்மக் கதைகள் ஆகியவற்றை அடுத்த பாகத்தில் பார்க்கலாம்.

https://www.bbc.com/tamil/india-58611589

  • கருத்துக்கள உறவுகள்

அனுமதி கொடுக்க  மாட்டார்கள் அநேகமா !.....................

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.