Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர் நாகரிகம்: இந்திய தொல்லியல் துறையில் வடக்கு - தெற்கு பேதம் உள்ளதா? : 'கீழடி' அமர்நாத் ராமகிருஷ்ணன் பேட்டி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் நாகரிகம்: இந்திய தொல்லியல் துறையில் வடக்கு - தெற்கு பேதம் உள்ளதா? : 'கீழடி' அமர்நாத் ராமகிருஷ்ணன் பேட்டி

  • முரளிதரன் காசி விஸ்வநாதன்
  • பிபிசி தமிழ்
2 மணி நேரங்களுக்கு முன்னர்
அமர்நாத் ராமகிருஷ்ணன்

மதுரைக்கு அருகில் உள்ள கீழடி தொல்லியல் மேட்டை முதன்முதலில் கண்டறிந்து இரண்டு கட்டங்களாக ஆய்வுகளை மேற்கொண்ட இந்தியத் தொல்லியல் துறையின் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன், திடீரென அங்கிருந்து இடமாற்றம் செய்யப்பட்டார். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது தென்னிந்திய கோயில் ஆய்வுத் திட்டத்தின் கண்காணிப்பாளராக தமிழ்நாட்டில் அவர் பொறுப்பேற்றுள்ளார். தனது இடமாற்றம் குறித்தும் ராக்கிகடியிலும் கீழடியிலும் அவர் மேற்கொண்ட ஆய்வுகள் குறித்தும் பிபிசி தமிழிடம் விரிவாகப் பேசினார். பேட்டியிலிருந்து:

கே. மத்தியத் தொல்லியல் துறையின் சார்பில் கீழடியில் அகழாய்வை மேற்கொண்டிருந்த நீங்கள் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டது மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. என்ன நடந்தது?

ப. இந்தியத் தொல்லியல் துறையை எடுத்துக்கொண்டால், ஒரு அகழாய்வு நடக்கிறதென்றால், அந்த அகழாய்வு முடியும்வரை அதன் தலைவர்கள் மாற்றப்படமாட்டார்கள். அப்போதுதான் அந்த ஆய்வில் ஒரு தொடர்ச்சி இருக்கும். முதல்முறையாக நான் ஆய்வின் இடையில் மாற்றப்பட்டேன். அது ஒரு வழக்கமான இடமாற்றம்தான்.

தொல்லியல் ஆய்வைப் பொறுத்தவரை, அதை யார் கண்டு பிடிக்கிறார்களோ அவர்களே தொடர்ந்து செய்தால்தான் அது முழுமையடையும். அந்த வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லையென்ற வருத்தம் இருக்கிறது.

என் தலைமையில் ஆராய்ச்சி மாணவர்கள் உட்பட ஆறு பேர் கொண்ட குழுதான் கீழடியைக் கண்டுபிடித்தோம். தமிழ்நாட்டில் அகழாய்வைப் பொறுத்தவரை மிகப் பெரிய வெற்றிடம் இருந்தது. ஆதிச்சநல்லூர், அரிக்கமேடு போன்ற சில இடங்களைத் தவிர பெரிய அளவிலான அகழாய்வு ஏதும் நடக்கவில்லை. அந்த இடைவெளியை நிரப்ப வேண்டுமென நினைத்தோம். அப்படித்தான் கீழடியை கண்டுபிடித்தோம். முடிவுகளும் மிகச் சிறப்பாக இருந்தன. தமிழ்நாட்டில் ஒரு நகர நாகரீகம் கண்டுபிடிக்கப்பட்டது.

கே. கீழடி தொல்லியல் தளம் என்பது மிகப் பெரிய ஒரு கண்டுபிடிப்பு. அவ்வளவு பெரிய பணியை நீங்கள் செய்த பிறகும் அங்கிருந்து மாற்றப்பட்டீர்கள். இதில் அரசியல் இருந்ததா?

கீழடி

பட மூலாதாரம்,TNARCH.GOV.IN

 
படக்குறிப்பு,

கோப்புப் படம்.

ப. அப்படியல்ல. அரசியலாகப் பார்த்தால் அரசியலாகத்தான் தெரியும். வழக்கமான இடமாற்றத்தைப் போலத்தான் இது நடந்தது. இருந்தாலும் இதற்கு நாங்கள் எதிர்ப்புத் தெரிவித்தோம். அரசின் வேறு துறைகளில் இதுபோல இடமாற்றங்களைச் செய்யலாம். ஆனால், இதுபோன்ற ஆய்வுத் துறைகளில் செய்யக்கூடாது.

நான் ஆய்வு ஏதும் மேற்கொள்ளாதபோது இம்மாதிரி இடமாற்றம் வந்தால் பரவாயில்லை. ஆனால், நான் ஒரு ஆய்வில் உள்ளபோது இடமாற்றம் செய்யப்பட்டதால் நீதி மீறப்பட்டுள்ளதாக தோன்றியது. அதை மறுப்பதற்கில்லை. அதனால்தான் இந்தப் பிரச்னை வந்ததோ எனத் தோன்றியது.

எனக்குப் பின்னால் என்னுடைய இடத்திற்கு வந்தவர் அந்த ஆய்வை தொடர்ந்து நடத்தியிருந்தால் பிரச்னை வந்திருக்காது. ஆனால், அவர் அதைச் செய்யவில்லை. பொதுவாக, ஒருவர் செய்த அகழாய்வை பெரும்பாலும் மற்றவர்கள் தொடர மாட்டார்கள்.

ஒரு அணி அகழாய்வு செய்துகொண்டிருக்கும்போது, அதிலிருப்பவர்களை மாற்றிவிட்டு இன்னொரு அணியைக் கொண்டுவந்தால், புதிய அணிக்கு அது பெரும் சிரமமாக இருக்கும். இந்தப் பிரச்னைகளால்தான் இது மிகப் பெரிய விவகாரமாகிவிட்டது.

கே. தற்போது தென்னிந்திய ஆலயத் திட்டத்தின் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கிறீர்கள். இந்தப் பணி எதைப் பற்றியது?

ப. இந்தத் திட்டம் 1956ல் துவங்கப்பட்டது. இந்தியாவில் தற்போது இரண்டு ஆலய திட்டப் பணிகள் இருக்கின்றன. வட இந்திய ஆலய திட்டப்பணி போபாலை தலைநகரமாகக் கொண்டு செயல்படுகிறது. தென்னிந்திய ஆலயத் திட்டப்பணி சென்னையைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படுகிறது.

இதன் முக்கிய நோக்கம், ஆலயங்களை ஆவணப்படுத்துவது. ஒவ்வொரு கோவிலும் கட்டப்பட்டவிதத்தில், கட்டிய மன்னர்களை அடிப்படையாக வைத்து வேறுபட்டவை. இவற்றை முறையாக ஆய்வுசெய்து, அவற்றின் காலத்தை வகைப்படுத்தி ஆராய்வதற்காக இந்த துறை ஏற்படுத்தப்பட்டது.

கே. கீழடியில் நீங்கள் செய்த ஆய்வுக்கான இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறீர்கள். முழுமையான அறிக்கையை எப்போது தாக்கல் செய்வீர்கள்?

ப. கீழடியில் இரண்டாண்டுகள் ஆய்வுசெய்வதற்கான வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இந்த இரண்டாண்டுகளில் செய்த ஆய்வுக்கான இடைக்கால அறிக்கையை 2017லேயே நான் தாக்கல் செய்துவிட்டேன். "இந்த ஆய்வுகள் போதாது. இது மிகப் பெரிய தொல்லியல் தளம். இரண்டாண்டுகளில் முடிக்க முடியாது. தொடர்ந்து நடத்த வேண்டும்" என அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தேன்.

கீழடி அகழாய்வில் தொழிற்கூட அமைப்பு
 
படக்குறிப்பு,

கோப்புப் படம்.

தொல்லியல் களத்தில் ஒரு நாளைக்கு 10 சென்டி மீட்டருக்கு மேல் தோண்ட முடியாது. இப்போது ஏழு கட்ட அகழாய்வு நடந்திருந்தாலும் கிட்டத்தட்ட 10 ஏக்கருக்குள்தான் அகழாய்வு நடந்திருக்கும். அதற்கு மேல் நடந்திருக்க வாய்ப்பில்லை.

அந்த வகையில் கீழடியை அகழாய்வு செய்ய இன்னும் காலம் தேவைப்படும். அந்த அளவுக்கு அந்த ஆய்வுகளில் தொல் பொருட்களும் கட்டடங்களும் வெளிப்பட்டன. தமிழ்நாட்டில் எத்தனையோ இடங்களில் ஆய்வுசெய்தபோதும், கட்டடங்கள் ஏதும் கிடைக்கவில்லையென்ற நிலைதான் இருந்தது. ஆனால், கீழடியில் முதல்முறையாக விரிவான கட்டடப் பகுதி கிடைத்தது. இதனால்தான் அதனை விரிவாக ஆய்வுசெய்ய நினைத்தோம். ஆனால், அந்த வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை. வாய்ப்புக் கிடைத்திருந்தால், நிறைய இடங்களை அகழாய்வு செய்திருப்போம். நம் வரலாற்றை மீட்டெடுத்திருப்போம்.

கே. கீழடியில் கிடைத்த கட்டடத் தொகுதிகள் மிகச் சிறியவை. வைகை போன்ற சிறிய நதியின் அருகில் பெரிய நாகரீகங்கள் கிடைக்க வாய்ப்பில்லை, ஆகவே அதை நாகரீகம் என்றே அழைக்கக்கூடாது என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

ப. எந்த நதிக் கரையில் வேண்டுமானாலும் நாகரீகம் அமையலாம். சிந்துச் சமவெளி நாகரீகம் மிகப் பெரியது. ஆனால், அதன் பரப்பு சிந்து நதியை மட்டும் சார்ந்ததல்ல. கிட்டத்தட்ட 13 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்புடையது. நாம் சொல்லும் வைகை நதி நாகரீகமும் அப்படித்தான். அது வெறும் வைகையை மட்டும் சார்ந்திருந்திருக்காது. தற்போதைய தமிழ்நாட்டையும் தாண்டி அது இருந்திருக்கும். இப்போது ஒரு இடம் அதில் கிடைத்திருக்கிறது.

சிந்து சமவெளி நாகரீகத்தை நாம் எப்படி அடையாளம் கண்டோம்? ஹரப்பா, மொஹஞ்சதாரோ கிடைத்தபிறகுதானே அதற்கு சிந்து சமவெளி என பெயர் வைத்தோம். அதுபோலத்தான் இப்போது கீழடி கிடைத்திருக்கிறது. மேலும் பல இடங்கள் தோண்டப்படும். அப்போது ஆதாரங்கள் கிடைக்கும். கீழடி என்பது ஒரு துவக்கம் மட்டுமே. முடிவு அல்ல. இதைவைத்து, பல இடங்களை ஒப்பிட்டு ஆய்வு செய்யும்போதுதான் நம் நாகரீகத்தின் பரப்பு தெரியும்.

கே. சமீபத்தில் தமிழக அரசு, சில அகழாய்வு முடிவுகளை பொருநை நதி நாகரீகம் என்ற தலைப்பில் வெளியிட்டது. ஆனால், ஒரு நெல் மணி கிடைத்ததை வைத்து, நாகரீகம் என்று சொல்வதெல்லாம் கேலிக்கூத்து என சிலர் விமர்சிக்கிறார்கள்..

ப. இறந்தோரைப் புதைத்த ஒரு குழியில், ஈமத் தாழியில் அந்த நெல் கிடைத்தது. அந்த நெல்லை அவர்கள் ஏதோ சடங்கிற்காக பயன்படுத்தியிருக்கிறார்கள். அந்த நெல் புதைப்பதற்கு ஒரு ஆறு மாதத்திற்கு முன்பாகவோ, ஒரு வருடத்திற்கு முன்பாகவோ விளைந்திருக்கலாம். ஆகவே அந்த நெல்லின் காலத்தை வைத்துத்தான் நாம் அந்த ஈமத்தாழியின் காலத்தை கணக்கிடுகிறோம். எதாவது ஒரு கரிமம் கிடைத்தால்தான் அதைவைத்து ஆய்வுசெய்ய முடியும். அப்படிக் கிடைக்கும் கரிமத்தின் காலத்தைக் கணித்து, அதன் அருகில் உள்ள பொருளுக்கும் அந்தக் காலத்தை அளிக்கிறோம். ஆகவே நெல்லின் காலம்தான் அந்த ஈமத்தாழியின் காலமும்.

சிவகளை அகழாய்வில் கிடைத்த முதுமக்கள் தாழி.

பட மூலாதாரம்,TAMIL NADU STATE ARCHEOLOGY DEPARTMENT

 
படக்குறிப்பு,

சிவகளை அகழாய்வில் கிடைத்த முதுமக்கள் தாழி.

அது கிராமமாக இருந்திருக்காது. இப்படி திட்டமிட்டு, பெரிய அளவில் ஈமத்தாழிகள் புதைக்கப்பட்டிருக்கிறதென்றால் அங்கு ஒரு பெரிய நகரம் இருந்திருக்க வேண்டும். ஒரு கிராமத்திற்கு இவ்வளவு பெரிய புதைக்குமிடம் தேவையில்லை. நகரம் இல்லையென்றால் இவ்வளவு பெரிய புதைப்பிடம் இருந்திருக்க வாய்ப்பேயில்லை. ஆனால், இங்கே புதைக்கப்பட்ட மக்கள் அருகில்தான் வாழ்ந்திருக்க வேண்டும். ஆனால், அந்தப் பகுதிகள் இன்னும் கிடைக்கவில்லை.

அதற்கு முக்கியக் காரணம், தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக மக்கள் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். அதனால், மக்கள் வாழ்ந்த பகுதிகளில் எந்தத் தொல்லியல் எச்சமும் கிடைக்கவில்லை. ஆதிச்சநல்லூர் மிகப் பெரிய புதைமேடு. இருந்தபோதும் அதற்கு அருகில் மக்கள் வாழ்ந்த இடத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஏனென்றால் அந்த இடம் தொடர்ச்சியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதனால்தான் வாழ்விடப்பகுதி கிடைக்கவில்லை.

பழங்காலத்தில் மக்கள் வாழ்ந்த பகுதி பெரும்பாலும் ஒரு வளமான இடத்திலும் புதைக்குமிடம் எதற்கும் பயன்படாத ஒரு இடமாகவும் இருந்திருக்கிறது. புதைமேடுகளைப் பொறுத்தவரை அவை எதற்கும் பயன்படாத இடங்களாக இருப்பதால், அப்படியே நமக்குக் கிடைக்கின்றன.

கீழடியும் இப்படி கைவிடப்பட்ட பகுதிதான். கி.பி. பத்தாம் நூற்றாண்டுக்குப் பிறகு அங்கு மக்கள் வாழ்ந்ததற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. அதற்கு முன்பாகத்தான் அங்கு வாழ்ந்திருக்கிறார்கள். அந்தப் பகுதி தென்னந்தோப்பாக இருப்பதால் நமக்கு அப்படியே அந்த இடம் கிடைத்திருக்கிறது. தொடர்ந்து மக்கள் வாழ்ந்திருந்தால் அது கிடைத்திருக்காது. கீழடியில் மக்கள் புதைக்கப்பட்ட இடம் அருகிலேயே கொந்தகையில் இருக்கிறது. இரண்டையும் இணைத்துப் பார்த்தால் இது ஒரு நாகரிகம் என்பது புரியும்.

கே. வைகைக்கும் தாமிரபரணிக்கும் இடையில் சுமார் 170 கி.மீ. தூரம்தான் இருக்கிறது.. இந்த குறுகிய தூரத்திற்குள் இரண்டு நாகரீகம் என்று குறிப்பிடுவதெல்லாம் சரியல்ல என்கிறார்களே..

ப. ஒரு காலத்தில் சிந்து நதிக் கரையில் ஒன்று கிடைத்தது, பிறகு யமுனை நதிக் கரையில் ஒன்று கிடைத்தது, பிறகு கக்கர் நதிக்கரையில் ஒன்று கிடைத்தது. ராவி நதிக் கரையில் ஒன்று கிடைத்தது. இவையெல்லாம் ஆரம்பத்தில் தனித்தனி நாகரீகங்களாகக் கருதப்பட்டன. ஆனால், இவற்றுக்கிடையே உள்ள ஒற்றுமையை வைத்து அவை சிந்துச் சமவெளி நாகரீகத்தின் பகுதிகளாக இப்போது கருதப்படுகின்றன. அதெல்லாம் இப்போதுதானே நடந்தது. கண்டுபிடிக்கப்பட்டபோது யாருக்காவது இது தெரியுமா?

சிந்துச் சமவெளி நாகரீகம் 13 லட்சம் கி.மீக்கு பரந்து விரிந்ததாக இருக்குமென அந்த அகழாய்வை 1924ல் மேற்கொண்ட ஜான் மார்ஷல் அறிந்திருப்பாரா? அதற்குப் பிறகு செய்யப்பட்ட அகழாய்வுகள்தான் அதன் பரப்பை விரிவுபடுத்தின. அப்படித்தான் இங்கேயும் பார்க்க வேண்டும்.

என்னைப் பொறுத்தவரை, தமிழ்நாட்டில் கிடைக்கும் நாகரீகங்கள் எல்லாம் சங்க காலத்தைச் சேர்ந்த நாகரீகங்கள். ஆங்காங்கே கிடைக்கும் தொல்லியல் களங்களின் தனித்தன்மைகளையும் ஒற்றுமைகளையும் அலசி ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும். அப்படிப் பார்த்தால், கீழடியும் பொருநையும் சங்க கால நாகரீகங்கள்தான்.

கே. வட இந்தியாவில் கிடைத்த அசோகனுடைய கல்வெட்டு மிகப் பெரியது. ஆனால், தமிழில் கிடைத்த ஒரே ஒரு கல்வெட்டு மற்றும் பானை ஓடுகளில் கிடைத்த சில எழுத்துகளை வைத்துக்கொண்டு எழுத்துகள் இங்கே கிடைத்ததாகச் சொல்ல முடியுமா?

ப. வட இந்தியாவில்தான் எழுத்துகள் தோன்றின என்றால் அதன் வளர்ச்சி நிலைகளைக் காட்டச் சொல்லுங்கள். அப்படி ஏதும் இதுவரை அங்கு கிடைக்கவில்லை. எந்த எழுத்தும் ஒரு நாளில் தோன்றிவிட முடியாது. மொழியும் அப்படித்தான். பல நூற்றாண்டுகள் ஆகும்.

கீழடியில் கண்டெடுக்கப்பட்ட, பெண்கள் பயன்படுத்திய ஏழு பொன்னாபரணங்கள்.

கீழடியில் கண்டெடுக்கப்பட்ட, பெண்கள் பயன்படுத்திய ஏழு பொன்னாபரணங்கள்.

பட மூலாதாரம்,TAMIL NADU STATE ARCHEOLOGY DEPARTMENT

 
படக்குறிப்பு,

கீழடியில் கண்டெடுக்கப்பட்ட, பெண்கள் பயன்படுத்திய ஏழு பொன்னாபரணங்கள்.

அங்கு எழுத்துகள் தோன்றி வளர்ந்ததற்கான எந்த ஆதாரமும் அங்கு கிடைக்கவில்லை. ஆனால், அசோகனுடைய கல்வெட்டுகளும் தூண் பொறிப்புகளும் கிடைக்கின்றன. இவை எல்லாம் முழுமை பெற்ற வடிவத்தில் கிடைக்கின்றன. எப்படி இவை திடீரென முழுமையான வடிவத்தில் தோன்றியிருக்க முடியும்? எப்போதுமே ஆரம்ப நிலையிலிருந்துதான் முழுமைபெற்ற நிலைக்குச் செல்ல முடியும். அப்படி ஆரம்ப நிலை எழுத்துகள் ஏதும் கிடைக்கவில்லை.

ஆனால், இங்கே கிறுக்கல்கள், குறியீடுகளில் துவங்கி எழுத்துகள் வரை கிடைக்கின்றன. எல்லாம் பானை ஓடுகளில் எழுதப்பட்டவை. அவற்றை அரசன் எழுதியிருக்க வாய்ப்பில்லை. சாதாரண மக்கள்தான் எழுதியிருப்பார்கள். சாதாரண மக்கள் எழுதியிருக்கிறார்கள், துவக்க நிலையிலிருந்து எழுத்துகள் கிடைக்கின்றன என்பதால், எழுத்துகள் இங்கேயிருந்து தோன்றியிருக்க வேண்டும் என்பதுதான் எங்கள் வாதம்.

வட இந்தியாவில் எழுத்துகள் தோன்றி, மிகச் சிறப்பாக அவர்கள் எழுத ஆரம்பித்த பிறகு அந்த எழுத்துகள் இங்கே வந்து, நாம் கிறுக்க ஆரம்பித்தோம் என்று சொல்ல முடியுமா? கிறுக்கல்களில் இருந்து மேம்பட்ட நிலைக்குச் செல்லுமா இல்லை மேம்பட்ட நிலையில் இருந்து கிறுக்கல் நிலைக்கு கீழிறங்குமா?

கே. ராக்கிகடியிலும் நீங்கள் பணியாற்றியிருக்கிறீர்கள். நீங்கள் அதில் பணியற்றியபோது நடந்தவற்றைப் பற்றிச் சொல்ல முடியுமா?

ப. ராக்கிகடி இந்தியாவில் மிக மிக முக்கியமான ஒரு தொல்லியல் தளம். சிந்து சமவெளி நாகரீகத்தின் பெருநகரம் எது என்றால், அது ஹரப்பாவோ, மொஹஞ்ச தாராவோ கிடையாது. அது ராக்கிகடியாகத்தான் இருக்க முடியும். இன்று சின்ன கிராமமாக இருக்கும் ராக்கிகடியில் எட்டு தொல்லியல் மேடுகள் இருக்கின்றன. தில்லியில் இருந்து 150 கி.மீயில் ஜிந்த் மாவட்டத்தில் இந்த இடம் இருக்கிறது.

பறவைப் பார்வையில் கீழடி அகழ்வாய்வுத் தலம்.

பட மூலாதாரம்,TAMIL NADU STATE ARCHEOLOGY DEPARTMENT

 
படக்குறிப்பு,

பறவைப் பார்வையில் கீழடி அகழ்வாய்வுத் தலம்.

இங்கு உள்ள எட்டு தொல்லியல் மேடுகளில் எட்டாவது மேட்டைத்தான் நாங்கள் கண்டுபிடித்தோம். அமரேந்திர நாத் என்பவர் 1997-2000 காலகட்டத்தில் அங்கு தொல்லியல் ஆய்வை நடத்தினார். அந்த மூன்று ஆண்டுகளில் முதல் முறையாக அவர் தோண்டும்போது RGR 1 என்ற இடத்தைத் தோண்டினார்கள். அந்த இடத்தைத் தோண்டி, புதைப்பிடம் கிடைத்ததும் அது ஹரப்பர் கால புதைப்பிடம் என நினைத்தார்கள்.

ஆனால், அங்கே அதற்கான ஆதாரம் ஏதும் கிடைக்கவில்லை. மேலும், கட்டடங்களை வெட்டி ஒரு புதைப்பிடத்தை ஏற்படுத்தியிருந்தார்கள். ஒரு நாகரீகத்தில், கட்டடங்களை வெட்டி புதைப்பிடம் செய்ய மாட்டார்கள். வாழ்விடமும் புதைப்பிடமும் தனித்தனியாகத்தான் இருக்கும். ஆகவே, இது ஹரப்பர் புதைப்பிடம் என கணித்தது தவறு என்பது பிறகு புலப்பட்டது.

இதன் பிறகு 2000ல் எனக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தது. நானும் அறவாழி என்ற நண்பர், எங்களுடைய சீனியர் சுனில் ஜா ஆகியோர் அந்த ஆய்வில் இறங்கினோம். அப்போது ஒரு கோதுமை வயலில் மிகப் பெரிய புதைவிடம் ஒன்றைக் கண்டுபிடித்தோம். அங்கிருந்து எங்களுக்கு ஒரு பெண்ணின் முழு எலும்புக்கூடு கிடைத்தது. அந்த பெண் தங்கச் சங்கிலியும் சங்கு வளையலும் அணிந்திருந்தாள். இப்போதும் அந்த எலும்புக்கூடு இந்தியாவின் தேசிய அருங்காட்சியகத்தில் உள்ளது. அந்த காலகட்டத்தில் டிஎன்ஏ ஆய்வுகளைச் செய்யும் வசதியில்லை. அதனால், அப்படியே காட்சிப் படுத்திவிட்டோம்.

அந்த இடத்தில்தான் 2014ஆம் ஆண்டு டெக்கான் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வசந்த் ஷிண்டே ஆய்வை மேற்கொண்டு, அங்கு வாழ்ந்தவர்கள் தென்னிந்தியப் பழங்குடிகள் என உறுதிசெய்தார். அதிலிருந்துதான் சிந்து சமவெளி நாகரீகத்தைக் கட்டமைத்தவர்கள் தென்னிந்திய பழங்குடிகள் அல்லது திராவிட மக்கள் என்ற கருதுகோள் வருகிறது.

கே. ராகிகடி எலும்புக்கூடுகளை ஆய்வுசெய்யும்போது அவை தொல் இரானியர் மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் வேட்டையாடிகளுடையவை எனத் தெரிகிறது. ஆனால், நீங்கள் ஏன் தொல் தென்னிந்தியன் என்கிறீர்கள் என்ற கேள்வி எழுகிறது...

ப. பழங்கால மூதாதை தென்னிந்தியனும் மூதாதை தென்னிந்தியனும் கலந்த மரபணுதான் ராகிகடியில் கிடைத்திருக்கிறது. அப்படியென்றால் பழங்கால மூதாதை தென்னிந்தியர்கள் அங்கே ஏற்கனவே இருந்திருக்கிறார்கள். அவர்களுடன் இரானிய கலப்பு ஏற்பட்டு அந்த நாகரிகம் ஏற்பட்டது.

ராகிகடி எலும்புக்கூடு

பட மூலாதாரம்,MANOJ DHAKA

 
படக்குறிப்பு,

ராகிகடி எலும்புக்கூடு (கோப்புப்படம்)

கே. ராகிகடியில் இவ்வளவு பெரிய முடிவுகள் கிடைக்கும்போது தொல்லியல் துறை ஏன் தொடர்ந்து இம்மாதிரி ஆய்வுகளில் ஆர்வம் காட்டுவதில்லை... முடிவுகள் சங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக கருதுகிறார்களா?

ப. அப்படியல்ல. எல்லாமே ஆய்வு நடத்தும் அறிஞர்களை வைத்துத்தான் இருக்கும். தொல்லியல் ஆய்வுகளைப் பொறுத்தவரை அந்தந்த ஆய்வாளர்களின் முன்முயற்சி, விருப்பம், தீவிரம் ஆகியவற்றைப் பொருத்தே அமையும். ஆர்வம் இல்லாதவர்களை நியமித்தால் முடிவுகள் வராது.

கீழடியில் அதுதான் நடந்தது. எனக்கு அங்கே இரண்டாண்டுகள் கொடுத்தார்கள். மேலும் ஒரு ஆண்டு கொடுத்திருந்தால், நான் முழுமையாக அதை முடித்திருப்பேன். பிறகு வேறொருவர் அங்கு நியமிக்கப்பட்டார். அவர் அதே ஆர்வத்தில் அந்த வேலையைச் செய்திருப்பாரா என்றால் சந்தேகம்தான். ஒவ்வொருவருடைய அணுகுமுறையைப் பொறுத்து ஆய்வுகள் அமையும்.

கே. இந்தியத் தொல்லியல் துறையில் வடக்கு - தெற்கு என்ற பேதம் இருக்கிறதா?

ப. இதற்கு எப்படி பதில் சொல்லுவதெனத் தெரியவில்லை. நாம் நிறைய ஆய்வுகளைச் செய்ய வேண்டும். வடக்கில் நிறைய ஆய்வுகள் நடந்திருக்கின்றன. அதற்கு மிக முக்கியக் காரணம், சுதந்திரத்திற்குப் பிறகு ஹரப்பா, மொஹஞ்சதாரோ ஆகிய இரு இடங்களும் பாகிஸ்தானுக்குச் சென்றுவிட்டன. அதனால், ஒரு உந்துதல் ஏற்பட்டு வட இந்தியாவில் பெரும் எண்ணிக்கையில் ஆய்வுகள் செய்யப்பட்டன. தென்னிந்தியாவில் அப்படி காரணம் ஏதும் இல்லை. ஆகவேதான் பெரிய அளவில் ஆய்வுகள் இங்கே நடக்கவில்லை. ஆனால், இப்போது அம்மாதிரி சூழல் ஏற்பட்டிருக்கிறது.

https://www.bbc.com/tamil/arts-and-culture-58840582

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.