Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

1948 இலிருந்து தமிழர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் இனப்படுகொலையின் மற்றுமொரு பரிமாணமே 'ஒரே நாடு, ஒரே சட்டம்' - விசேட ஜனாதிபதி செயலணி - விக்னேஸ்வரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

1948 இலிருந்து தமிழர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் இனப்படுகொலையின் மற்றுமொரு பரிமாணமே 'ஒரே நாடு, ஒரே சட்டம்' - விசேட ஜனாதிபதி செயலணி - விக்னேஸ்வரன்

(நா.தனுஜா)

 

 

'ஒரே நாடு, ஒரே சட்டம்' என்ற கொள்கையின் பிரகாரம், தற்போது நடைமுறையில் உள்ள ரோம டச்சுச்சட்டம், ஆங்கிலச்சட்டம், கண்டியச்சட்டம், தேசவழமைச்சட்டம் மற்றும் முஸ்லிம் சட்டம் என்பவற்றைப் புறக்கணித்து இலங்கையைத் தனிச்சிங்கள பௌத்த நாடாகக் கணித்துத் தனியொரு சட்டத்தை உருவாக்கும் நோக்கிலேயே இந்தப் புதிய செயலணி நிறுவப்பட்டுள்ளது. 

தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் இது 1948 ஆம் ஆண்டிலிருந்து அவர்களுக்கு எதிராக நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் இனப்படுகொலையில் மற்றுமொரு பரிமாணமாகும் என்று தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் யாழ்மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் 33 ஆம் உறுப்புரையின் ஊடாக ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைய இலங்கைக்குள் 'ஒரே நாடு - ஒரே சட்டம்' என்ற கொள்கையை செயற்படுத்தும் வரைபைத் தயாரிப்பதற்கு பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் 13 பேர் அடங்கிய விசேட ஜனாதிபதி செயலணியொன்று உருவாக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இனங்களுக்கிடையில் முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் வகையிலான சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டுவந்தவரும் அதன் காரணமாகப் பல்வேறு தரப்பினரின் விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்தவருமான ஞானசார தேரரின் தலைமையில் மேற்படி புதிய செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளமை குறித்தும் 13 உறுப்பினர்களில் 4 முஸ்லிம்கள் உள்ளடங்குகின்ற போதிலும் தமிழர்கள் எவரும் உள்வாங்கப்படாமை குறித்தும் தற்போது பலதரப்பட்டவர்களாலும் விமர்சனங்களும் கண்டனங்களும் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன.

இதுபற்றி சி.வி.விக்னேஸ்வரனின் நிலைப்பாட்டைக்கோரியபோது, அதற்கு அவர் அனுப்பிவைத்துள்ள பதிலிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது,

இதுவரை ஜனாதிபதி தனது அதிகாரங்களைப் பயன்படுத்தி, பொதுமன்னிப்பு வழங்கி பல குற்றவாளிகளை சிறைகளிலிருந்து விடுவித்துள்ளார்.

உதாரணத்திற்கு இரண்டு நீதிமன்றங்களால் கொலைக்குற்றவாளியாக அடையாளங்காணப்பட்ட சுனில் ரத்நாயக்க மற்றும் மரணதண்டனை வழங்கப்பட்ட துமிந்த சில்வா ஆகியோருக்குப் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டமையைக் குறிப்பிடமுடியும். 

அதேபோன்று அண்மையில் முன்னாள் கடற்படைத்தளபதி வசந்த கரன்னாகொடவிற்கு எதிரான குற்றச்சாட்டுக்களிலிருந்து அவர் முழுமையாக விடுவிக்கப்பட்டிருக்கின்றார். போர்க்குற்றச்சாட்டுக்களுக்குள்ளான முன்னாள் இராணுவ அதிகாரிகள் பலருக்குத் தற்போது உயர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. 

இவ்வாறானதொரு பின்னணியில் நீதிமன்றத்தினால் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டு சிறையிலிருந்த ஞானசாரதேரர் புதிய ஜனாதிபதி செயலணிக்குத் தலைவராக்கப்பட்டமை எனக்கு எவ்வகையிலும் வியப்பேற்படுத்தவில்லை. அந்தச் செயலணியில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களில் பெரும்பான்மையானோர் சிங்களவர்களும் ஒருசிலர் முஸ்லிம்களுமாவர்.

வடமாகாணத் தமிழ் மக்களுக்கென தேசவழமை என்ற ஒரு சட்டம் டச்சுக் காலத்தில் இருந்து சட்ட ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

அவ்வாறிருக்கையில் 'ஒரே நாடு, ஒரே சட்டம்' என்ற கொள்கையின் பிரகாரம், தற்போது நடைமுறையில் உள்ள ரோம டச்சுச்சட்டம், ஆங்கிலச்சட்டம், கண்டியச்சட்டம், தேசவழமைச்சட்டம் மற்றும் முஸ்லிம் சட்டம் ஆகியவை புறக்கணிக்கப்பட்டு, இலங்கையைத் தனிச்சிங்கள பௌத்த நாடாகக் கணித்துத் தனியொரு சட்டத்தை உருவாக்கும் நோக்கிலேயே இந்தப் புதிய செயலணி நிறுவப்பட்டுள்ளது.

இந்த நாட்டில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வட, கிழக்கு மாகாணங்களைச் சிங்கள மாகாணங்களுடன் இணைத்து, அவை சிங்கள பௌத்தத்திற்கு அடங்கியவை என்று எடுத்துக்காட்டுவதே இந்த இனரீதியான செயலணியின் நோக்கமாக இருக்கக்கூடும் என்று நான் நம்புகின்றேன். 

கண்டியச்சட்டத்தின் பிரகாரம் பாரம்பரியமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட திருமணமுறைகளை எல்லாம் றுஹுணுரட்டவிலிருந்து வந்திருக்கும் கோட்டாபய ராஜபக்ஷ மாற்றியமைக்கப்போகின்றாரா? கண்டிய மக்கள் பிரதிநிதிகளிடம் கண்டியச்சட்டத்தை நீக்கப்போவதாகக்கூறி அவர்களின் அனுமதியைப் பெற்றுக்கொண்டிருக்கின்றாரா? இதுகுறித்து முஸ்லிம் மக்களுடன்பேசி முஸ்லிம் சட்டத்தைக் கைவிடுவதற்கு அவர்கள் தயாராக இருக்கின்றார்களா என்பது பற்றி அறிந்துகொண்டிருக்கின்றாரா?

தமிழ்மக்கள் என்ற முறையில் வட, கிழக்கு மாகாணங்களில் நடைமுறையிலுள்ள அவர்களுக்குரிய சட்டத்தை மாற்றுவதோ அல்லது அதனைத் தொடர்ந்து பேணுவதோ அவர்களின் பொறுப்பாகும். மாறாக அது மத்திய அரசாங்கத்தின் பொறுப்பல்ல. 'ஒரே நாடு, ஒரே சட்டம்' என்பதன் அர்த்தம் என்ன? இலங்கை என்பது ஒரு நாடு அல்ல. அது சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், மலையக மக்கள் உள்ளடங்கலாக பல்வேறு இனமக்கள் வாழும் நாடாகும். 

எனவே இவ்வாறானதொரு நாட்டில் 'ஒரு நாடு' பற்றி எவ்வாறு பிரஸ்தாபிக்கமுடியும்? அதுமாத்திரமன்றி ஐந்து வகையான சட்டங்கள் நடைமுறையிலுள்ள நாட்டில் எவ்வாறு 'ஒரு சட்டத்தை' அமுல்படுத்த முடியும்? இவையனைத்திற்கும் மேலாக சிறையிலிருந்து வெளிவந்த குற்றவாளியைத் தலைவராகக்கொண்ட செயலணி மூலம் இவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்ப்பது ஏற்புடையதா? அவருக்கு நாட்டின் வரலாறு மற்றும் சட்டம் தொடர்பில் எந்தளவிற்குத் தேர்ச்சியுள்ளது?

எனவே இவையனைத்திலும் இருந்து 'இது சிங்கள பௌத்த நாடு. அதன்பிரகாரம் இலங்கையை தனியொரு நாடாக அடையாளப்படுத்தவேண்டும்' என்ற ஜனாதிபதியின் குறிக்கோள் வெளிப்பட்டுள்ளது. அதுமாத்திரமன்றி சிங்கள பௌத்தத்தை அடிப்படையாகக்கொண்ட சட்டமொன்றை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே இந்தச் செயலணியின் பிரதான இலக்காகும். 

எனவே தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் 1948 ஆம் ஆண்டிலிருந்து அவர்களுக்கு எதிராக நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் இனப்படுகொலையில் மற்றுமொரு பரிமாணமே இந்தப் புதிய செயலணியாகும். 

இத்தகைய தான்தோன்றித்தனமான சிங்கள பௌத்தவாத செயற்பாடுகளுக்கு அனைத்து இனமக்களும் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாக இருக்கின்றது என்று குறிப்பிட்டுள்ளார். 

 

https://www.virakesari.lk/article/116134

  • கருத்துக்கள உறவுகள்

"கோட்டாபய ராஜபக்ஷவின் 'ஒரே நாடு ஒரே சட்டம்'; தமிழ் இனப் படுகொலையின் இன்னுமொரு பரிமாணம்": விக்னேஷ்வரன்

28 நிமிடங்களுக்கு முன்னர்
ராஜபக்ச

பட மூலாதாரம்,GETTY IMAGES

சிங்கள பௌத்தத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு சட்டத்தை, நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே, ஜனாபதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உருவாக்கியுள்ள 'ஒரே நாடு ஒரே சட்டம்' எனும் ஜனாதிபதி செயலணியின் குறிக்கோளாகும் என, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான முன்னாள் நீதியரசர் சி.வி. விக்னேஷ்வரன் தெரித்துள்ளார்.

"தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும், இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே இந்தச் செயலணி" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

'ஒரே நாடு ஒரே சட்டம்' எனும் செயலணியொன்றை நேற்று முன்தினம் உருவாக்கியுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ; அதற்குத் தலைவராக சர்ச்சைக்குரிய பௌத்த பிக்குவான பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை நியமித்துள்ளமை பாரிய சர்ச்சைகளைத் தோற்றுவித்துள்ளது.

இலங்கையினுள் 'ஒரே நாடு, ஒரே சட்டம்' என்பதைச் செயற்படுத்துதல் தொடர்பாகக் கற்றாராய்ந்து அதற்காகச் சட்டவரைவொன்றைத் தயாரித்தல் மற்றும் நீதி அமைச்சினால் இதுவரை இதற்குரியதாக தயாரிக்கப்பட்டுள்ள சட்ட வரைவுகள் மற்றும் திருத்தங்களைக் கற்றாராய்ந்து அவற்றின் பொருத்தம் மற்றும் தகுந்த திருத்தங்கள் இருப்பின் அதற்கான முன்மொழிவுகளைச் சமர்ப்பித்தலும் ஏற்றவாறு உரிய வரைவில் உள்ளடக்குதலும் இந்த செயலணியின் பிரதான பணிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

13 உறுப்பினர்களைக் கொண்ட இந்த செயலணியில் 09 சிங்களவர்களும், 04 முஸ்லிம்களும் உள்ளடக்கப்பட்டுள்ளனர். தமிழர்கள் எவரும் நியமிக்கப்படவில்லை.

இந்த செயலணி குறித்து விக்னேஷ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, மேற்படி விடயங்களை - அவர் குறிப்பிட்டுள்ளார்.

"குற்றவாளிகளுக்கு உயர் பதவிகள் வழக்கும் கோட்டாபய ராஜபக்ஷ"

கலகொடஅத்தே ஞானசார தேரர்
 
படக்குறிப்பு,

கலகொடஅத்தே ஞானசார தேரர்

குற்றவாளியாகக் கணிக்கப்பட்டு சிறையில் இருந்த ஞானசார தேரரை இந்த ஜனாதிபதி செயலணிக்கு தலைவராக்கியுள்ளமை தனக்கு வியப்பைத் ஏற்படுத்தவில்லை, எனக் குறிப்பிட்டுள்ள விக்னேஷ்வரன், "ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பல்வேறு குற்றவாளிகளை இதுவரை தனது அதிகாரங்களைப் பாவித்து சிறைகளில் இருந்து வெளிக்கொண்டு வந்து மன்னிப்பு அளித்துள்ளார்" என்றும் தெரிவித்துள்ளார்.

இதற்கு உதாரணமாக இரண்டு நீதிமன்றங்களால் கொலைக் குற்றவாளியாக காணப்பட்ட ராணுவ சார்ஜன்ட் மற்றும் கொலை குற்றவாளியாக காணப்பட்ட துமிந்த சில்வா ஆகிய இரண்டு மரண தண்டனைக் கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியமையை தனது அறிக்கையில் விக்னேஷ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

அண்மையில் கரன்ணாகொட என்ற முன்னாள் கடற்படை தளபதிக்கு எதிராக இருந்த குற்றச்சாட்டுக்கள் கைவாங்கப்பட்டு, அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளமையினையும் தனது அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

"போர்க்காலத்தின் போது பல குற்றங்களைப் புரிந்த ராணுவ அதிகாரிகள், ஓய்வு பெற்ற பின், அவர்களுக்கு அரசாங்க உயர் பதவிகளை ஜனாதிபதி கொடுத்துள்ளார்".

"ஆகவே குற்றவாளியாகக் கணிக்கப்பட்டு சிறையில் இருந்த ஞானசார தேரரை, தற்போது ஜனாதிபதி செயலணிக்கு தலைவராக்கியமை எனக்கு வியப்பைத் தரவில்லை" என்றும் விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

சிங்கள பௌத்த சட்டத்தை கொண்டு வரும் திட்டம்

"வடக்கு மாகாணத் தமிழ் மக்களுக்கு என்று 'தேச வழமை' என்ற ஒரு சட்டம், டச்சுக் காலத்தில் இருந்து சட்ட ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகின்றது."

புத்தர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

´ஒரு நாடு ஒரு சட்டம்´ என்று கூறும் பொழுது தற்போது வலுவில் இருக்கும் 'றோம டச்சுச் சட்டம்', 'ஆங்கிலச் சட்டம்', 'கண்டியச் சட்டம்', 'தேசவழமைச் சட்டம்', 'முஸ்லிம் சட்டம்' ஆகியவற்றைப் புறக்கணித்து இந்த நாட்டை சிங்கள பௌத்த நாடாகக் கணித்து, ஒற்றைச் சட்டத்தைக் கொண்டு வரவே இந்த செயலணி உருவாக்கப்பட்டுள்ளது.

´ஒரு நாடு ஒரு சட்டம்´ என்று கூறும் பொழுது - இந்த நாட்டில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை சிங்கள மாகாணங்களுடன் சேர்த்து, அவை சிங்கள பௌத்தத்துக்குள் அடங்கியவை என்று எடுத்துக் காட்டவே, இந்த இன ரீதியான செயலணி உருவாக்கப்பட்டுள்ளது என்று நான் நம்புகின்றேன்".

கண்டியத் திருமணங்களில் 'பின்ன', 'தீக' என்ற இரு விதமான திருமணங்கள் இருக்கின்றன. ஒன்றில் கணவனுடன் போய் மனைவி வாழ்வது மற்றையது மனைவியின் வீட்டுக்குச் சென்று கணவன் வாழ்வது.

"இவையெல்லாம் பாரம்பரியமாக கண்டிய மக்கள் ஏற்றுக்கொண்ட திருமண முறைகள். இவற்றையெல்லாம் 'ருகுணரட்ட'வில் (தென் மாகாணம்) இருந்து வரும் கோட்டாபய மாற்றியமைக்க இருக்கின்றாரா?"

"கண்டிய மக்களின் தலைவர்களுடன் கண்டிய சட்டத்தை நீக்கப் போவதாகக் கூறி அவர்களின் சம்மதத்தை ஏற்றுக் கொண்டுள்ளாரா? முஸ்லிம் மக்களுடன் இதுபற்றிப் பேசி 'முஸ்லிம் சட்டத்தை'க் கைவிட முஸ்லிம் மக்கள் ஆயத்தமா என்று அவர்களுடன் கலந்துரையாடியிருக்கின்றாரா? தமிழ்ப் பேசும் மக்கள் என்ற முறையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இருக்கும் அவர்களுக்குரிய சட்டத்தை மாற்றுவதோ தொடர்ந்து வைத்திருப்பதோ என்பது அவர்களின் பொறுப்பு. அது மத்திய அரசாங்கத்தின் பொறுப்பல்ல."

விக்னேஷ்வரன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

"வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் பேசும் மக்கள்தான் பெரும்பான்மையாக இருக்கின்றார்கள். 1833ல் வெள்ளையர்கள் (பிரித்தானியர்) இலங்கை முழுவதையும் நிர்வாக ரீதியாக ஒன்றிணைக்கும் வரையில், வட கிழக்கு தமிழ் அரசர்களாலும் தமிழ் சிற்றரசர்களாலும் ஆளப்பட்டு வந்தன."

"தமிழ் மொழியே அவர்களின் மொழியாகவும் இருந்தது. கண்டிய மன்னன் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனும் இன்னும் சில கண்டியத் தலைவர்களும் பிரித்தானியர்களுடன் 1815ல் செய்து கொண்ட உடன்படிக்கையில் தமிழிலேயே கையெழுத்து இட்டார்கள்."

"இவ்வாறு தமிழுக்கும் தமிழருக்கும் என ஒரு அடையாளம் இலங்கையில் பண்டைக்காலம் தொட்டு இருந்து வருகையில், 'ஒரு நாடு ஒரு சட்டம்' என்பதின் அர்த்தம் என்ன? இலங்கை ஒரு நாடு அல்ல. அது சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், மலையக மக்கள் மேலும் பல சிறிய இன மக்கள் வாழும் நாடு. அதுவும் தமிழ் பேசும் முஸ்லிம் மக்களும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழ்ந்து வருகின்றனர். அரேபியாவில் இருந்தும் தென்னிந்தியாவில் இருந்தும் வந்து கிழக்கு மாகாணத்தில் குடியேறிய பின், தமிழ் மொழியையே அவர்கள் தம் தாய் மொழியாக ஏற்றுக் கொண்டார்கள்."

"இவ்வாறு இருக்கையில் இலங்கையானது ஒரு நாடாக இல்லாது பல நாடுகளைக் கொண்டிருக்கும் போது, ஜனாதிபதி எவ்வாறு 'ஒரு நாடு' பற்றி அறிவிக்கலாம்? ஐந்து சட்டங்கள் நடைமுறையில் இருக்கும் போது, இந் நாட்டில் எவ்வாறு ஒரு சட்டத்தை அமல்படுத்த எண்ணலாம்?" என்று சி.வி. விக்னேஷ்வரன் கேள்வி எழுப்புகிறார்.

"அதுவும் இவை யாவற்றையும் சிறையில் இருந்து வந்த ஒரு குற்றவாளியைத் தலைவராகக் கொண்ட ஒரு செயலணியைக் கொண்டு எவ்வாறு நடைமுறைப்படுத்த இருக்கின்றார்? தேரருக்கு எந்தளவுக்கு சரித்திரம் தெரியும், சட்டம் தெரியும்? "ஜனாதிபதியின் போக்கு ஒன்றையே வலியுறுத்துகின்றது. இந்த நாடு சிங்கள, பௌத்த நாடு என்றும், அதன் அடிப்படையில் இந்த நாட்டை ஒரு நாடாக அடையாளப்படுத்த வேண்டும் என்பதே அவரின் குறிக்கோள்."

"சிங்கள பௌத்தத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு சட்டத்தை, நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே - இந்த செயலணியின் குறிக்கோளாகும். தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே இந்தச் செயலணி.

சகல இன மக்களும் இவ்வாறான தான்தோன்றித்தனமான சிங்கள பௌத்த வெறி கொண்ட நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு". என, விக்னேஷ்வரன் எம்.பி தெரிவித்துள்ளார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-59074089

  • கருத்துக்கள உறவுகள்
On 28/10/2021 at 20:00, ஏராளன் said:

இவை யாவற்றையும் சிறையில் இருந்து வந்த ஒரு குற்றவாளியைத் தலைவராகக் கொண்ட ஒரு செயலணியைக் கொண்டு எவ்வாறு நடைமுறைப்படுத்த இருக்கின்றார்? தேரருக்கு எந்தளவுக்கு சரித்திரம் தெரியும், சட்டம் தெரியும்? "ஜனாதிபதியின் போக்கு ஒன்றையே வலியுறுத்துகின்றது.

தேரர் சிறையிலிருந்தவர், ஜனாதிபதி சிறையில் இருக்க வேண்டியவர். தேரர் அம்பு, அவரை எய்தவர் ஜனாதிபதி. உங்கள் இந்த கேள்விகளை  ஜனாதிபதியை நோக்கி கேட்டால்; அவரால் அதற்கு  பதிலளிக்க முடியுமா? இவர் நாட்டை ஆள்வதற்க்கு தகுதியானவரா? குறைந்தது சட்டத்தையாவது மதித்து நடக்க தெரிந்தவரா? கோத்தா தான் செய்ய இருக்கும் பழிவாங்கல்களை, அழிவுகளை, பழியை சுமக்கப்போவது இந்த துப்புக்கெட்ட தேரர். விகாரையிலிருந்து போதிக்க வேண்டியது கத்தியும், கம்புமாய் அலையப்போகுது. சிங்கள மக்களே புத்தரை நாட்டை விட்டு துரத்தியடிக்கபோகினம், இந்த தேரரின் செயற்பாட்டால் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.