Jump to content

டார்வினின் வால்


Recommended Posts

பதியப்பட்டது

டார்வினின் வால்

 

கிறிஸ்டி அவன் அருகே வந்து “ஒரு பெயர் வைக்கலாமா?” என்றபோது அவன் ஏதும் பேசாமல் அவள் கண்களையே பார்த்தான். அக்கண்களிலிருக்கும் குழந்தைமை அவனுக்கு எப்போதும் ஆசுவாசமளிக்கும். “சொல்லுங்க அங்கிள் என்ன பெயர்” என்றாள் மறுபடியும் அழுத்தமாக. பிறகு அவளே ஒருகணம் யோசிப்பது போல பாவனைக் காட்டி “டார்வின்” என்றாள். அவன் ஆச்சர்யமாக நிமிர்ந்தான். எதற்காக அப்பெயரை தேர்ந்தெடுத்தாளெனக் கேட்கத் தோன்றவில்லை. ஏதோவொரு வகையில் ஒரு அடையாளத்திற்கு அப்போதைக்கு அப்பெயர் தேவையாகத்தான் பட்டது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால் அக்கணத்திலிருந்து இருவருடைய பிரக்ஞையிலும் டார்வின் என்ற சொல் உச்சரிக்கத் துவங்கியது. இந்த பெயர் அவளின் வளர்ப்பு பூனைக்கோ நாய்க்கோ அல்ல அவா்கள் பிடிக்கப் போகும் எலிக்கு. ஆமாம் இந்தக் கதை ஒரு டார்வினைப் பற்றியதுதான்.


டார்வினுக்கும் அவனுக்குமான துவந்தம் அவ்வீட்டிற்கு குடிவந்த இரண்டொரு நாளிலேயே ஏற்பட்டுவிட்டது. எல்லோரையும் போல உலகில் எலிகளை வெறுக்க எவ்விதப் புதுக் காரணங்கள் அவனுக்கும் அமைந்துவிடவில்லைதான். சொல்லப்போனால் அது தன் இருப்புக்கான விஷேசத் தேவைகளைத் தான் தேடிக்கொண்டிருந்தது. (எல்லா உயிர்களின் நடத்தையும் பொருளியல் சக்திகளால் தீர்மானிக்கப்படுவது போல) வேலை நிமித்தமாக குன்னூருக்கு அவன் மாற்றதலாகி வந்ததும் முதலில் கிடைத்த எச்சரிக்கை ‘எலிப் பிடிக்கும் கூண்டு ஒன்று வைத்துக்கொள்’ என்றுதான். முதலில் அவன் இதை ஒன்றும் பெருட்டாக எண்ணவில்லை. எல்லா ஊர்களைப் போலத்தான் இருக்குமென விட்டுவிட்டான். பிறகு மெல்ல மெல்ல காய்கறி பழங்கள் தலையனை புத்தகம் சோப்பு துடைப்பம் காலி பிளாஸ்டிக் டப்பா டாய்லட் ப்ரஷ் என ஒவ்வொன்றையும் தின்று தீர்க்கத்துவங்கிய போதுதான் அதன் தீவிரம் அவனுக்கு உரைத்தது. தினம் காலையில் முதல் வேலை, வீடு முழுதும் டார்வின் கொரித்துப்போட்டவைகளை கூட்டி அள்ளுவதுதான். ஒரு கட்டத்தில் வீட்டையே கொஞ்சம் கொஞ்சமாக தின்றுகொண்டிருக்கிறதோவெனத் தோன்றியது. தினம் சாய்ந்தரம் வீடு திரும்புகையில் தாழ்ப்பாளைத் திறந்ததும் சட்டென ஓா் அசைவு வெளியேறி மறையும். அதுவரை அவ்வீடு முழுதும் நடந்துகொண்டிருந்த களேபரங்களை சிதறிக் கிடக்கும். ஸ்துாலமாக பின்தொடரும் பிறிதொன்றின் இருப்பிலிருந்த தன்னை விடுவித்துக்கொள்ள வழி தெரியாது அமர்ந்துவிடுவான். இரவில் அது எங்காவது கொரித்துக்கொண்டிருக்கும் சத்தம் வந்ததும் ஓசைபடாமல் எழுந்து வேட்டைநாயின் தந்திரத்துடன் இருளுக்குள் தேடியலைவான். ஆனால் டார்வின் அவன் அசைவை உணர்ந்ததும் கொரிப்பதை நிறுத்திவிடும். சட்டென்று அதன் தடம் மறைவது முதலில் அவனுக்குப் புரியவில்லை. ஆனால் மறைவது என்பது வெளியேறுவதல்ல மாறாக அவ்விடத்திலிருக்கும் ஏதோவொன்றுக்குள் மறைந்துகொள்வதுதானென பின்னால் தான் அவனால் கண்டுபிடிக்க முடிந்தது. கையில் சிக்காத ஆற்றாமையில் டார்ச்சுடன் வீடு முழுதும் குறுக்கும் நெடுக்குமாக ஓடத்துவங்குவான். ஒளி விழுமிடமெல்லாம் பொருட்கள் டார்வினின் நிழல் போலவே காட்டி அவனை அலைக்கழிக்கும். இப்படியான சூழலில்தான் புதிய திட்டமொன்று உதித்தது. அதாவது வீட்டிற்குள் நுழைந்ததும் டார்வின் மறைந்துவிடாதவாறு வீட்டிலுள்ள பொருள்களையெல்லாம் தரையிலிருந்து இரண்டு அடிக்கு மேல் வைப்பது என்ற யோசனை. கூடவே மூன்று அறைகளிலும் சீரோ வாட் பல்பையும் நிரந்தரமாக போட்டு வைத்தான்.


அதற்கு பிறகு தூக்கம் இரண்டு மூன்று நாட்களுக்கு நிம்மதியாகச் சென்றது. சமயங்களில் நடுயிரவு விழிக்கையில் வீடு, நிலத்திலிருந்து இரண்டடி மேலெழும்பிவிட்டது போலிருக்கும். அச்சமயம் பயத்துடன் கட்டிலிலிருந்து காலை நீட்டி தரையைத் தொட்டுப் பாhத்துக்கொள்வான். நான்கு நாட்கள் நிம்மதியாகச் சென்ற தூக்கம் ஐந்தாம் நாள் இரவு மறுபடியும் கலைந்தது. இப்போது டார்வினின் சப்தம் வீடு முழுதுமே எதிரோலித்தது. அதன் பாதை மிகத் தெளிவாக ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆராய்வதற்கோ கொரிப்பதற்கோ எதுவும் கை எட்டும் தூரத்திலில்லையென்பதால் இருளுக்குள் பொருட்களைத் தேடியபடி கீச் கீச் என வீட்டைச் சுற்றுவது போலிருந்தது. டார்ச்சைப் பிடித்தபடி மெல்ல எழுந்தான். அடுப்படி ஓரத்திலிருந்த தண்ணீர் சூடு படுத்தும் பானைக்கு பின்னாலிருந்த டார்வின், ஒருகணம் அவனைத் திரும்பிப் பார்த்துவிட்டு விறுவிறுவென கதவுகடியிலிருந்த ஓட்டைக்குள் ஓடி மறைந்துவிட்டது.  அன்றைக்குதான் அதன் மொத்த உருவத்தையும் பார்க்கிறான். கரிய காட்டு முயலையொத்த உருவம். அவன் நினைத்திருந்ததைவிட இரண்டு மடங்கு. ஒரே இரவில் ஒரு முழு உடலையும் தின்று விடக்கூடும்.. ஒருகணம் அவ்விருளும் தனிமையும் அவனை அச்சமூட்டின.


டார்வினைக் கொல்வதென முடிவானதும் கடைகளில் விற்கும் மருந்துகளின் மீதிருந்த நம்பிக்கையிலிருந்து முதலில் தன்னை விடுவித்தான். நானே ஒரு ஆயுதத்தைத் தயார் செய்ய வேண்டும். தோட்டத்திற்குச் சென்று மூங்கில் கம்புகளை வெட்டி, வில் ஒன்றை உருவாக்கினான். அம்பு பூட்டுமிடத்தில் டார்ச்சைக் கட்டி, கூரான அம்புகளை தேர்ந்தெடுத்து வைத்தான். கூடவே அம்பு நுனியில் விசத்தையும் தேய்த்துக்கொள்வதென்ற முடிவும்.  வில்லும் அம்பும் தயாராகயிருந்தன. ஆனால் அன்றைக்கு இரவு டார்வின் வரவில்லை. (புதிய ஆயுதங்கள் உபயோகத்திற்கு வரும்போதெல்லாம்  அது வருவதில்லை). மறுநாள் இரவு. சாப்பிட்டு முடித்து ஒரு பருக்கை விடாமல் துடைத்து கழுவிவிட்டு வந்து கட்டிலில் அமர்ந்தபோது அடுப்படியில் பாத்திரம் உருளும் சப்தம் எழுந்தது. வில் அம்புளுடன் டார்வினுக்காகக் காத்திருந்தான். டார்வின் ஹாலைத் தாண்டி அவனுடைய அறைக்கு நுழைவதற்குள் பதற்றத்தில் விரல்கள் டார்ச்சில் பட்டுவிட்டன, சட்டென பாய்ந்த வெளிச்சம், அவனுக்கு முன்னால் சில அடிகளில் டார்வின் இருப்பதைக் காட்டியது. ஒருகணம் அதன் கண்கள் மின்னி அடங்கின. ஒரு வேகத்தில் அம்பையும் அதை நோக்கி எய்துவிட்டான் (தோராயமாகத்தான்). டார்ச்சின் வெளிச்சமும் அம்பும் விழுந்ததில் எங்கு ஓடுவதென புரியாமல் வெடுக்கெனத் திரும்பி அவன் அமர்ந்திருந்த கட்டிலுக்கடியில் புகுந்துவிட்டது. கட்டிலின் எந்தக் காலைப் பிடித்து மேலெழுமென்ற பயம் வேறு. ஒருவிதமான அசூயையும் நடுக்கமும் கொண்ட அவ்வுணர்வு கணம் கணம் கூடிக்கொண்டே சென்றது. காலால் உதைத்து பயமுறுத்தினான். கீழே அசைவே இல்லை. கட்டிலின் விளிம்பில் எடையை அழுத்தாமல் அதே நேரம் திடமாகவும் அரைமணி நேரம் அப்படியே  நின்றுகொண்டிருந்தான். ஒருகணம் உலகம் இவ்வளவு சிறியதா என்ற எண்ணம் தோன்றிற்று.. டார்ச்சை எல்லா விளிம்புகளிலும் நீட்டிப் பார்த்தும் டார்வின் கீழே இருப்பதற்கான அறிகுறி எதுவுமில்லை. எப்படி மறைந்தது?
அன்றையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக இரவுகளில் விழிக்கவாரம்பித்தான். தூக்கம் என்பதே இல்லை. எந்நேரமும் டார்வின் பற்றியச் சிந்தனை. கால்களுக்குக் கீழே எதிரியின் போர்த்தளங்கள் இருப்பதாகவும் ஒருகணம் கவனம் பிசகினாலும் கன்னி வெடிக்கு பலிகொடுக்க நேரும் பயவுணர்விலே அமர்ந்திருந்தான். இப்படி ஒவ்வொரு முறையும் நிகழும்போதெல்லாம் வீட்டின் எல்லா பொருள்களின் மீதும் காரணமில்லாத அகங்காரம் எழும். அன்றைக்கு கல்லூரியிலும் அவ்வெண்ணம் தொடர்ந்தது. அதைக் கொல்வது அவ்வளவு சாத்தியமல்ல என்றானதும் கொஞ்ச நாட்களுக்கு டார்வின் பற்றியச் சிந்தனையிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்வதுதான் சரியெனத தோன்றிற்று.. பிரக்ஞாபூர்வமாக தன் ஒவ்வொரு தடத்தையும் அவனே நிர்வகித்தான். காலையில் எழுந்ததும் சுடு தண்ணீர் வைப்பது பின் காபி போட்டுக்கொண்டு மலைமீது அவிழும் வெண்பொழிவைப் பார்த்தவண்ணம் வந்தமர்வது, பிரட் சாப்பிட்டபடியே அன்றைய நாளுக்கான பாடங்களை யோசிப்பது கல்லூரிக்குச் செல்வது பிறகு வீடு வந்ததும் நாவல்களோ அல்லது தத்துவ புத்தகங்களையோ படிக்கத் துவங்குவது (எந்த சப்தத்திற்கும் செவி கொடுப்பதில்லை. எல்லாம் எங்கோ யாருக்கோ நிகழ்கிறது)  என ஒவ்வொன்றும் சாவி சுழற்றியது போல நடந்துகொண்டிருந்தது. நேரமிருக்கும் போதெல்லாம் ஊட்டியிலிருக்கும் பேராசிரியர் ரானா தாஸை பார்ப்பதற்கு கிளம்பிச் சென்றுவிடுவான். அவரின் அருகாமை அவனை முற்றிலும் பிரக்ஞையுலகிலிருந்து துண்டித்துக்கொள்ளும்.  ஊட்டியிலிருந்து மைசூா் செல்லும் சாலையில் மலைகள் சூழ நடுவில் கின்னம் வடிவத்திலிருக்கும் பள்ளத்தின் நடுவே காளான் முளைத்திருப்பது போல அச்சிறு குடில் இருந்தது.. சாலை முழுதும் துாறலாக விழும் குளிரிருக்கு உடலைச் சுருட்டிக்கொண்டு நுழைபவன் அவ்விடம் அடைந்ததும் குருதியில் கதகதப்பை உணா்வான். ரானாதாஸ் ஒரு ஞானி போல அங்கு வாழ்ந்துகொண்டிருந்தார். அவரை சந்தித்ததிலிருந்து ஒருமுறைகூட மலைவாழ் மக்களை அங்கு இல்லாமல் அவரைத் தனியே கண்டதில்லை. குடிலைச் சுற்றி மரங்களும் தோட்டமும் உண்டு. காய்கறிகள் பறிப்பதற்காக யாராவது கூடையுடன் நிற்பார்கள். எப்போதுமே ஏதாவது காய்கறிகளைப்பறித்தவாறு சால்வை சுற்றிக்கொண்டு நிற்கும் வயதானவுருவம்தான் அவன் கண் முன் தோன்றும். பேராசிரியா் டார்வினிடமிருந்து எப்படி இத்தனையும் தப்புவித்துக்கொள்கிறாரென்ற குழப்பமும் அவனுக்கு துருத்திக்கொண்டுதானிருந்தது. பேராசிரியா் எல்லாவற்றுக்குமே வெண்தாடி விரிய ஒரு மலா்ந்த புன்னகைத் தருவார். ”ஆமாம் இங்கு அதுவும் இருக்கிறது. நானும் இருக்கிறேன்” மீண்டும் சிரித்தார். ”உண்மையில் இங்கு மனிதா்களைவிட எலிகள்தான் அதிகம். வெஸ்டா்ன் பிலாசபியில் எலிக்கு முக்கிய பங்குண்டு.” என்று சொல்லிவிட்டு சிரித்தார். ”எலி பிறந்ததுமே அதுக்கு எது சாப்பிடனும் எது சாப்பிடக்கூடாதுனு தாயிடம் பால் குடிக்கும் போதே கத்துக்கிறது. அதனோட ஒவ்வொரு வளா்ச்சியும் மனிதனுக்கு ரொம்ப நெருக்கமா இருக்கு. சொல்லப்போனால் மனிதனை விட மிகச்சரியான விலங்கு”. அடுத்தநாள் காலையில்தான் அவன் வீடு திரும்பினான். அவருடனான உரையாடல் எப்போதுமே பட்டாம் புச்சியாக ஒவ்வொன்றாகத் தொட்டு அப்பால் சென்றுகொண்டே இருக்கும். வீடு திரும்பும்போது வழியில் கழைக் கூத்து நடப்பதை வேடிக்கைப் பார்த்தான். அவ்வளவாகக் கூட்டமில்லாததால் பொறுமையாக அதை கவனிக்க முடிந்தது. உண்மையில் கம்புதான் அவ்வித்தையை நிகழ்த்துகிறது, புவி ஈா்ப்பு விசையை ஸ்துாலமாகக் கம்பின் மேல் பிடித்து வைத்து அவள் சாதாரணமாகத்தான் நிற்கிறாளென்றதும் அங்கிருந்து கிளம்பி வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினான். இனி டார்வினைக் கொல்வதற்கான முயற்சிகளை கைக்கழுவிவிடவேண்டுமென்றும் அதைப் பிடிப்பதற்கு ஓா் எந்திரம்தான் சரியாக இருக்குமென்றும் முடிவெடுத்தான். அதாவது சாதாரண எலிக்கூண்டு போலில்லாமல் சற்றே பெரியதாக அது இருக்க வேண்டும். அப்படியொன்றை தானே உருவாக்குவதுதான் சரியென்று தோன்றியது அவனுக்கு.


. தினம் கல்லுாரியிலிருந்து திரும்பியதும் கூண்டு பற்றிய வரைபடமொன்று அவன் கையில் இருக்கும். பிறகு கூண்டுக்கான வேலையை செய்யவாரம்பித்ததும் உதிக்கும் புதிய யோசனைகளுக்குத் தகுந்தளவில் கூண்டு உருமாறிக்கொண்டிருக்கும். எலிக்கூண்டை செய்யும் போதெல்லாம் பக்கத்துவிட்டில் நடக்கும் சண்டை சச்சரவுகள் அவன் காதில் விழுந்தபடியிருந்தன. அவர்கள் எப்போதுமே எதையோ கண்டுபிடித்தது போலவோ அல்லது நிலச்சரிவு நிகழந்தது போலவோ சந்தோசத்தையும் கூச்சலையும் ஒருசேர எழுப்புவார்கள். இரண்டு வீட்டிற்குமிடையே ஐம்பது மீட்டர் இடைவெளி இருக்கலாம். அவ்வீட்டில்தான் கிறிஸ்டி இருந்தாள். எட்டு வயது. அவா்களுக்கு ஒரே மகள். எப்போதாவது அவனை நோக்கி புன்னகைப்பது மட்டும்தான் அவளுக்கும் அவனுக்குமான பரிட்சயம். ஆனால் அவனுடைய ஒவ்வொரு அசைவும் அவளுக்குத் தெரியும். அதுவொரு வகை விளையாட்டு. மரக்கிளைக்குள் பறவை அமர்ந்து பார்த்துக்கொண்டிருப்பது போல.  உள்ளுர இதை அறிந்தும் அவனும் தன்னைப் பற்றி அவள் சேகரிப்பைப் பின் தொடர்வதில் ஆா்வம் கொண்டிருந்தான். இரவில் மரப்பலகைகளை வெட்டி ஆணி அடித்துக்கொண்டிருக்கும்போது சட்டென அப்படியே நிறுத்திவிட்டு வெளியே வந்து பார்ப்பான். இருளுக்குள் கிறிஸ்டி எங்கோ வேகமாக ஓடி ஒளியும் சப்தம் வரும்.  பிறகு அவனுக்குள்ளே சிரித்துகொண்டு சென்றுவிடுவான்.


ஒருநாள் கிறிஸ்டி அவன் வீட்டிற்கே வந்து விட்டாள். சட்டென எல்லாவற்றையும் மறைத்துக் கொண்டான். அருகாமையில் வந்து நின்றவள் விழியைச் சுழற்றித் தேடினாள். பெரிய கண்கள். விழிகளாலே அனைத்தையும் அறிந்துவிடக் கூடிய கூர்மை. ஒருகணம் அக்கண்களில் துளிர்க்கும் ஏமாற்றத்தைக் கவனித்தான். கூடவே ஒரு புன்னகையுடன் அதை மறைக்கும் யத்தனமும் அதிலிருந்தது. குழந்தைகளுக்குரிய குட்டி கர்வம் அது.. சம்பந்தமில்லாமல் அவனிடம் பெயரைக் கேட்டாள். அவன் சொன்னான். என்ன வேலை பார்க்கிறீர்கள் என்றாள். சுருக்கமாகச் சொல்லிவிட்டு அடுத்த கேள்விக்காக அவளை நோக்கினான். அப்பார்வையைச் சந்திக்காமல் “என்ன டெய்லி பன்னிட்டு இருக்கிங்க” என்றவள், அவன் யோசிப்பதற்குள் கட்டிலுக்கடியில் குனிந்து ‘அது என்ன?’ என்று சுட்டிக்காட்டினாள். சில நிமிடங்கள் பேச்சற்று அப்படியே அடங்கிவிட்டான். ஒருகணம் தன் மீதே ஆத்திரம் பொங்கியது அவனுக்கு. ஆனால் அவள் முன்னால் தோற்பதை எண்ணி மறுகணமே அவ்வெண்ணத்தை மாற்றிக்கொண்டான். அதைப் பார்க்கலாமா? என்றாள். எடுத்துக் காட்டினான். (அப்போது கூண்டு முழுமையடையவில்லை.) சற்று குழப்பத்துடன் வாங்கிப் பார்த்தாள். கண்களில் புதியதொரு பொருளை -அதுவும் இதுவரை பார்த்ததில்லாதவொன்றை- எதிர்கொள்ளும் பரவசம். “இது மேஜிக் பாக்ஸ் மாதிரி இருக்கு” என்றாள். “எத்தனை எலி பிடிக்கலாம்?”. “ஒன்றுதான்”.  ‘ஒன்று’என்பதைப் புரிந்துகொண்டவளாக “அந்த பெரிய எலியா” என்றாள். ஆமாம் உனக்கு எப்படி தெரியும்? ஆச்சா்யமாகக் கேட்டான். எல்லாம் தெரியும் என்பது போல புன்னகைத்தாள். கூண்டை உயரே தூக்கி உள்ளே பார்த்தவள், புருவங்களைச் சுருக்கி ஏதோ புரியாமல் யோசித்தாள். பிறகு “உள்ளே என்ன” என்றவாறே கையை விட்டதும் சட்டென எடுத்துகொண்டு, கூண்டின் ஜன்னல் வழியே ஏதும் அடைத்திருக்கிறதா எனத் துழாவினாள். கூண்டின் இரண்டு ஜன்னல்களும் நேருக்கு நேராக இல்லாமல் தெற்குக் கிழக்காக ஒன்றுக்கொன்று பார்த்தவாறிருப்பதைக் கண்டுபிடித்தாள். அவள் கண்ணிமைகள் மூச்சுவிடுவது போல ஒருகணம் அவனை நோக்கி விரிந்தன. அவளின் ஆர்வம் அதிகரித்தது. சட்டென தன் பையிலிருந்த ரப்பரை எடுத்து கூண்டின் ஒரு பக்கம் போட்டு ஒவ்வொரு அறையாக (உள்ளே மொத்தம் மூன்று அறைகள்) அது உருள்வதை ஆர்வம் பொங்க அவனிடம் காட்டி “மேஜிக்” என்றாள் சப்தமாக. ஒருமுறை ஸ்கூலுக்கு எடுத்து போகட்டுமா என்றதும் அவன் பதறி வேண்டாம் என்றான். பின்பு நிதானமாக இது ரகசியாமக வைக்க வேண்டியது உனக்கு வேறொன்று செய்து தருகிறேன் என்றதும் “சரி இதுமாதிரி தர்மாகோலில் ஒன்னு செய்து கொடுங்க”எனச் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டாள். ஆனால் அன்றையிலிருந்து தினமும் எலிக்கூண்டு முடிந்து விட்டதா? எப்போது பிடிக்கப் போகிறீர்கள் என விசாரிக்க வரத்துவங்கினாள்.

கிறிஸ்டிக்கு தெரியாத, ஆனால் பேராசிரியா் ரானாதாஸிடம் மட்டுமே அவன் சொன்ன எலிக்கூண்டின் வடிவம்:
கூண்டின் உள்ளே மூன்று அறைகள் இருக்கின்றன. கூண்டின்  இரு பக்கமும் ஜன்னல் உண்டு (பொதுவாக எலிக்கூண்டுகளில் பின் பக்கத்தில் மட்டும் தான் கம்பி பொறுத்தப்படடிருக்கும்). வாசலும் பின் வாசலும் கனமான மரத்தில் கோட்டைக் கதவு போலில்லாமல் சன்னமாகவும், அதன் விளிம்பு கில்லட்டின் கூர்மையுடன் செய்யப்பட்டுள்ளது. என்னுடைய திட்டம் இதுதான்: கூண்டு மிக விசாலமானது. அதாவது கூண்டின் நுழைவாயில் இடது பக்கத்திலுள்ளது. முதல் அறையின் வலது மூலையில் இரண்டாவது அறைக்கு வாசலும் இரண்டவாது அறையின் இடது மூலையில் மூன்றாவது அறைக்கு வாசலும் என மூன்று அறைகள் s வடிவில் அடுத்தடுத்து அமைந்திருக்கும். முதல் அறைக்குள் நுழைந்ததும் உணவு இல்லாததைக் கண்டு, எலி சற்று குழப்பத்துடன் யோசனையில் நிற்கும். ((சன்னல் வழியே  பார்த்தேனே, ஆமாம், நீ பார்த்தது முதல் அறையின் சன்னல்)) ஆனால் உணவு இருப்பது மூன்றாவது அறையில். ஆக, எலி தன் உணவை அடையும் போது அதன் உடல் மூன்றாவது இரண்டாவது அறையிலும் வால் முதலறையுலுமாக நீண்டு நெளிந்து கிடக்கும்.  நான் வெட்டப் போவது எலியின் நீண்ட வாலைத்தானைத் தவிர எலியை அல்ல என்றபோது பேராசிரியா் திடுக்கிட்டு அவனைப் பார்த்தார். திட்டம் அவருக்குக் குழப்பதை ஏற்படுத்தியிருக்க வேண்டும். அவருக்கு விளக்குவதற்கு டார்வினின் கூற்று ஒன்றை எடுத்துக்கொண்டான். அதாவது, உயிரிகள் தங்கள் இயல்பூக்கங்களால் (instinct) செயல்படுகின்றன. தங்களைக் காத்துக் கொள்வதற்கும் தங்கள் இனத்தின் இருப்பிற்கும் இந்த இயல்பூக்கம் அனிச்சையாகவே அவற்றுக்கு உதவுகிறது என்கிறார் டார்வின். .இங்கிருந்துதான் நான் ஒரு விசயத்தை புரிந்துகொண்டேன். “எலியின் இயல்பூக்கம் மற்ற விலங்குகளை விட சற்று அதிகம்தான். அதன் இயல்பூக்கத்தை மிக உன்னிப்பாக நோக்கினால் ஒன்றை நீங்கள் அவதானிக்கலாம், அதாவது அதன் மொத்த சேகரிப்பும் வாலில்தான் இருக்கும்.


பேராசியர் புன்னைத்தார். ஒருகணம் அவரைப் பார்த்துவிட்டு தொடா்ந்தான் ”எலியைக் கொல்வதற்கென நிறைய வழிமுறைகள் புழக்கத்தில் இருக்கு. அவை எல்லாமே எலியைக் கொல்வதற்கானவைதானேயொழிய எலியின் அறிவை  அழிப்பவையல்ல. உலகில் ஓர் உயிரைக் கொல்வதென்பது எளிதானது மாறாக அதன் அறிவை அழிப்பதுதான் கடினம். ஆகவே எலியைக் கொல்லும் மிகச் சாதாரணமான முடிவைக் கைவிட்டு அது இதுவரை சேகரித்த மொத்த அறிவின் இருப்பை அகற்றுவதுதான் சரியென எனக்குத் தோன்றுகிறது.  அதற்கு முதலில் நான் எலியின் வாலை நறுக்க வேண்டும்.”
”வெறும் உடலின் வெப்பத்தைக் கட்டுபடுத்தும் வாலை நறுக்கி என்ன ஆகப் போகிறது?”
”இல்லை புரோபசா். இதுதான் தவறு. உடலின் மொத்த இயக்கமும் வெப்பத்தால்தான் நிர்ணயிக்கப்படுகிறது. வெப்பசமநிலைதான் சிந்தனைக்கான இருப்பை உருவாக்குகிறது, நனவிலியை சிருஷ்டிக்கிறது. வாலை நறுக்குவதிலிருந்து ஒற்றை நனவிலி கூட்டு நனவிலியிலிருந்து பிரிக்க முடியும். அதாவது அதன் சமூகத்திற்கான நனவிலியிலிருந்து தனித்துவிட முயற்சிக்கிறேன்.”


பேராசிரியா் அந்த யோசனையை முதலில் வரவேற்பதுபோலிருந்தாலும் பிறகு அதை எதிர்க்கவே செய்தார். ”மனித மனங்களின் கற்பனைகள் சாத்தியங்களுக்குட்பட்ட கற்பனைகள் மட்டுமே. அவை ஓா் எல்லையைத் தாண்டி தன்னை விரிவுபடுத்த முடியாது.” என்றார். ”மனிதனைத் தவிர மற்ற உயிரிகளிடமுள்ள சிந்தனையை ஒருபோதும் மனிதனால் அடைந்துவிட முடியாது.”
”அப்போ இது விஞ்ஞானத்தின் தோல்வி இல்லையா?”
”நிச்சயமாக.. ஹெப்போத்திஸிஸ் இஸ் த கீ ஆஃப் தி வே. அவா்கள் ஊகிக்கிறார்கள் அவ்வளவுதான்.”
”ஹெப்போதிஸிஸின் பாசிப்ளிடிதான் விஞ்ஞானமா?”
”கண்டிப்பாக.  நியுட்டன் இதைச் சொன்னபோதுதானே அவா்கள் மறுத்தார்கள்”
”இருக்கலாம். ஆனால். நியுட்டனோ டார்வினோ. அவா்கள் சொன்னவற்றை அதன் உளவியலுடன் தொடா்புபடுத்திப் பார்த்தால்தான் அதன் சாரம்சத்தைப் புரிந்துகொள்ளமுடியும். அவா்கள் பௌதிக உடலின் பரிணாமத்தை அளவீடும்போது மனதின் ஒவ்வொரு அடுக்குகளைப் பற்றிய உரையாடலை விட்டுச் செல்கிறார்கள். அதற்குதான் நமக்கு ப்ராய்டு தேவைப்படுகிறார்” பேராசிரியா் அவனை அமைதியாகப் பார்த்தார். ”உயிரின் பரிணாமத்தை நிர்ணயிக்கும் சூழல்தான் அதன் சிந்தனையையும் நிர்ணயிக்கிறது. எனவே சிந்தனைக்கு அப்பாலிருக்கும் சூழலின் நிகழ்வை மூளையால் உணரமுடியாது. நான் மாற்றியமைக்க நினைப்பது சூழலைத்தான்”
”நீங்கள் பிராய்டிய வழியில் சிந்திக்கிறீா்கள் என்று தோன்றுகிறது”
”இல்லை புரபோசா்.  பிராய்டிய வழியில் டார்வினை அனுகுகிறேன்”
அவன் எலிக்கூண்டை கிறிஸ்டிக்குக் காட்டிய இரண்டாவது நாள் அவள் சில காகிதங்களுடன் வீட்டுக்கு வந்தாள். அதில் எலிக்கூண்டின் உத்தேச வடிவங்கள்  சில இருந்தன. இப்படி இருக்கலாமென அவளாகவே கற்பனையில் வரைந்தவை. அவன் அவற்றைப் பார்த்துவிட்டு எதுவும் பொருந்தவில்லையென உதட்டைச் சுழித்தான். கிறிஸ்டிக்கு சட்டென முகம் மாறிவிட்டது. காகிதங்களைப் பிடுங்கிக்கொண்டு வீட்டு கதவை படாரெனச் சாத்திவிட்டு கோபமாக வெளியேறிவிட்டாள்.
0
எல்லாம் சரியாகத்தான் நடந்தது. கூண்டை தயாரித்துமுடித்து அன்று டார்வின், கூண்டின் அருகே வந்ததும் வலமும் இடமுமாக இரு முறையும் பின்பு  மேலே ஏறி இடப்புறம் இறங்கி மீண்டும் மேலே என நான்கு முறை கூண்டைச் சுற்றி வந்து அதன் அமைப்பை தீரா ஆராய்ந்தது. அதற்குத் தெரியும் இது தன்னைப் பிடிக்க வைக்கப்பட்டதுதான் என்று.  உண்மையில் டார்வின் அவனை நன்கு அறிந்திருந்தது. அவன் உருவாக்கும் ஒவ்வொரு சுழற்சியிலும் அதன் இன்னொரு பக்கத்தையும் அது நன்கு தெரிந்து வைத்திருந்தது. (எல்லா அறுங்கோண வடிவமும் ஒரு புள்ளியிலிருந்தே தொடங்கப் படுகிறது) இக்கூண்டு செய்யும்போது கூட எங்கிருந்தோ மூக்கை அசைத்து பார்த்துக்கொண்டிருப்பதாக அவன் கற்பனை செய்திருக்கிறான்.
அன்றைக்கிரவு சரியாக பன்னிரெண்டு மணிக்கு வீட்டிற்குள் டார்வினின் நடமாட்டத்தை உற்று கவனித்தான். எழுந்து பார்த்தபோது அது, கூண்டின் உள்ளே நுழையத் தயக்கம் காட்டி வாசலிலே சற்று நேரம் நின்று கொண்டிருந்தது. மனித மனங்களுக்குரிய அவசரம் சில சமயம் இக்கணங்களில் வெளிப்படக்கூடும். ஆனால் அவன் பொறுமை காத்தான். பிரபஞ்சத்தின் ஒட்டுமொத்த சக்தியையும் திரட்டி வைத்த பொறுமை.  டார்வின் முதல் அறையை எட்டிப் பார்த்ததும் பிறகு  முழுமையாக உள்ளே தன்னை நுழைத்தது. அதன் வால் வெளியே பாம்பு போல தனித்து கிடந்தது. உள்ளே கூண்டு ஏற்படுத்தும் பதற்றத்தையும் அச்சத்தையும் டார்வின் தன்னுடைய வாலின் வழியே வெளியேற்றுவதை அதன் அசைவில் புலப்பட்டது.. கிட்டத்தட்ட கால் மணி நேரம் அப்படியே காத்திருந்தபோது சட்டென்று கூண்டை விட்டு வெளியே வந்திறங்கி,  பின் இரண்டு முறை கூண்டைச் சுற்றிவிட்டு விருவிருவென தன் பொந்தை நோக்கி வேகமாக ஓடியது. அவன் அதன் மறுபிரவேசித்திற்காக அங்கேயே நின்றான். இது அவைகளுக்கேயுரிய பாவனைதான். அவை எப்போதுமே புதியப் பொருட்களை உடனே நம்பிவிடுவதில்லை. தன் இருப்பிடத்திற்குச் சென்று அமர்ந்துகொண்டு வாலின் சமிக்ஞைகளைப் பெற்று உறுதிப்படுத்தியப் பின்புதான் அடுத்த அசைவைத் துவக்கும். ஒவ்வொரு முறையும்  கூண்டு வைக்கும்போதெல்லாம் இது போல நிகழ்ந்திருப்பதால் அச்சம்பவத்தை அவன் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. டார்வின் இரண்டாவது முறை எப்படியும் வரும். இது அதன் பரிணாம விதியல்லவா? (உயிரிகள் உலகை தம் வாலால் அறிந்திருக்கின்றன. இல்லையா டார்வின்?). இரவு முழுதும் எலிப்பொந்தை நோக்கியவாறு பொறுமையாகக் காத்திருந்தான். பூமிக்குள் யாரோ இறங்கி நடப்பது போல கடிகாரத்தின் நகர்வு, அறை முழுதும் எதிரொலித்தது. ஒவ்வொரு கணமும் காத்திருப்பு ஊதிப் பெருத்து அலுப்பை வெறிப்படுத்துவதை உணா்ந்தான். இறுதியில் சோப்புநுரையின் மேல் அமர்ந்திருக்குமளவுக்கு உடல் மிதக்கவாரம்பித்தது. டார்வின் வரவேயில்லை. அவனால் அது ஏற்படுத்திவிட்டுச் சென்ற குழப்பத்திலிருந்து மீள முடியவில்லை.  அதன் பொந்தை நோக்கி நிலைக்குத்தியிருந்த கண்களில் வலியெடுக்க ஆரம்பித்தன. பொந்தின் வாசலில் டார்வின் இருப்பது போன்ற பிரமை வேறு பார்வையை விட்டு விலகாமல் துன்புறுத்தியது. டார்வின் தன்னையும் கூண்டையும் எங்கோ அமர்ந்து பார்த்துக்கொண்டிருக்கக்கூடுமென ஓர் எண்ணம் உதித்தபோது மணி இரண்டாம் ஜாமத்தைத் தாண்டிவிட்டிருந்தது. காலை விழிக்கும்போது மூளைக்குள் கார்ட்டூன் படங்களின் இசைக்கோர்வை ஓடிக்கொண்டிருந்தன. தண்ணீரில் முகத்தைக் கழுவியபோது தீயை அள்ளிக் கொட்டிக்கொண்டது போலிருந்தது. தூங்கியச் சொற்ப நேரத்தில் மிகப் பெரியதொரு வேட்டையை கனவு கண்டிருந்தான். பெருந்தனிமைச் சிறைக்குள் சிக்கிவிட்டதுபோலவும் அத்தோல்வியை யாரிடமாவது கால் தொழுது சமர்ப்பித்து சரிய வேண்டும் போலிருந்தது அவனுக்கு. கிறிஸ்டியின் அருகாமை,  குலையும் தன் பிரக்ஞையை ஏந்தி நிறுத்தும் என உணர்ந்தான். சட்டென ஒரு கூரான விழிப்பு அவனை மீட்டியது.


அன்றைக்கு கல்லூரி நுாலகத்தில் டார்வினின் புத்தகம் ஒன்று கண்ணில் பட்டது. ஆா்வமாக எடுத்துப் புரட்டினான். முதல் பக்கத்தில் டார்வின் மேசை மீது குனிந்தவாறு எதையோ கொரிப்பது போல குறிப்புகளை எழுதிக்கெண்டிருக்கிறார். அடுத்த படம், பீகிளில் அவா் சென்ற நாடுகளில் பயணத்தடங்கள் வளைந்து வளைந்து செல்கின்றன. கீழே வரிசையாக டார்வினுடைய பிள்ளைகளின் பெயர்கள். இன்னொன்றில் டார்வின் எழுதிவைத்தக் குறிப்புகளின் சேகரிப்பு. முதல் புகைப்படத்தை உற்று நோக்கினான். டார்வின் மிகச் சாதுவானவராகத்தான் தோன்றினார். அன்று கல்லுாரியிலிருந்து சீக்கிரமாகவே வீடு திரும்பியவன் கிறிஸ்டியின் ஸ்கூல் பஸ்ஸிற்காக ஜன்னல் பக்கம் வந்து நின்றுகொண்டு ரோட்டை வெறித்து பார்த்துக்கொண்டிருந்தான். கடுமையான மழை வேறு. ஸ்கூல் பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டியிருக்க வேண்டும். கிறிஸ்டி மிகத் தாமதமாகத்தான் வந்திறங்கினாள். முகம் சோர்வாக இருந்தது.  அவனருகே வந்தவள் மூக்கைத் தூக்கி கண்ணாடியை ஏற்றிவிட்டுக்கொண்டு “உங்க மேஜிக் பாக்ஸ் ஒன்னும் ஒர்க் அவுட் ஆகலயா?” என்றாள். அவள் குரலின் தொனி அவனைச் சீண்டியது.  குட்டியானை வந்து மோதிவிட்டு நிற்பது  போலிருந்தது அப்பார்வை. அவன் புன்னகைத்தான். “வாழ்வில் நடக்கும் தற்செயல்கள் எல்லாமே மேஜிக் தான் கிறிஸ்டி. அவள் புரியாமல் பார்த்தாள். “கண் முன்னே ஒன்று நடக்கிறது பிறகு பார்வையிலிருந்து மறைகிறது அல்லது விலகிவிடுகிறது. இந்த நிகழ்தலுக்கும் விலகுதலுக்கும் இடைப்பட்ட காலம் தான் மேஜிக் நிகழும் இடம்”
0
அன்றிரவு அவனிடம் இருவிதமான ஊகங்கள் இருந்தன. ஒன்று, கூண்டை வேறு இடத்துக்கு மாற்றுவது (அப்படி மாற்றுவதென்றால் எங்கு?) இரண்டாவது, கூண்டை நெருங்காமல் ( டார்வினுக்கு என்னுடைய வாசனை நன்றாகத் தெரியும்) அப்படியே விட்டுவிட்டு கிட்டத்தட்ட பிரக்ஞையின்றி இருப்பது.
முதல் ஊகத்தை எடுப்பது டார்வினின் கணிப்பிற்குள்  சிக்கிவிடுவது போலாகிவிடும். மாறாக கூண்டு சீந்தாமல் அப்படியே இருந்தால் அது டார்வினுடைய அவதானிப்பில் சற்று குழப்பத்தையும் ஏற்படுத்தும். எனவே இரண்டாவது ஊகத்தை எடுப்பது தான் சரியென முடிவெடுத்தான்.


காலையில் ஸ்கூலுக்கு கிளம்பிய நிலையில் கிறிஸ்டி நேராக அவனைத் தேடி வந்தாள். (டார்வின் பெயரிட்டதற்கு நான்காம் நாள்) கையில் சில வரைபடங்கள் இருந்தன. ஒவ்வொன்றாகப் புரட்டினான். அதில் கடைசி வரைபடம் அப்படியே கூண்டின் வடிவத்தை நகலெடுத்தது போல ஒத்திருந்தது. மனம் திக்கென்றானது. அவளை ஏறிட்டுப் பார்த்தான். “இட் இஸ் கரக்ட்?” என்றாள். அவன் தலையாட்டியதும் சிரித்தாள். கனமானவொரு மௌனத்திற்குள்ளிருந்து வெளிப்படும் புன்னகை அது. “எப்படி?”  நிறைய முறை முயற்சித்ததாகச் சொன்னவள் சட்டென நிறுத்தி  “இது உங்க வீடு அங்கிள்?” என்று சொல்லிவிட்டு சிரித்தாள். அவன் திடுக்கிட்டுச் சரிந்தான். பிரக்ஞை தன் வசமிழந்து நழுவுவது போலிருந்தது. அவள் மீண்டும் சிரித்தாள். ஆமாம் அது என் வீட்டின் வடிவம் தான். எப்படி என்னையறியாமல் கூண்டின் வடிவத்தில் வந்து சிக்கியது? கிறிஸ்டி எப்படி இதைக் கண்டுபிடித்தாள்?  குழம்பிவிட்டிருந்தான். கிறிஸ்டி அவனிடம் “வாழ்வில் நடக்கும் தற்செயல்கள் எல்லாமே மேஜிக் தான் அங்கிள்” என்று ஆங்கிலத்தில் திருப்பிச் சொன்னாள். அன்று முழுதும் அவன் துாங்கவில்லை. குழப்பம் அவனை புதியத் தடங்களை அழித்து பின்னோக்கி வந்த பாதைக்கே கொண்டு வந்து சோ்த்திடும் என பயந்தான். ஆனால் அடுத்தநாள் அவனுக்கு இன்னொரு அதிர்ச்சியும் காத்திருந்தது. வீட்டைச் சுற்றி எலி செத்த நாற்றம் வீசத் துவங்கியது. பதறியடித்து எழுந்தவன் வெளியே வந்து பாரத்தான். காம்பவுன்டு அருகே கிறிஸ்டியின் குடும்பம் மூக்கைப் பொத்தியபடி நின்று கொண்டிருந்தார்கள். அவனைப் பார்த்ததும் கிறிஸ்டி ”டார்வின் தான்” என்றாள் சைகையில். அவள் அம்மா ” யாருடீ டார்வின்?” என்று தலையில் தட்டி அதட்டினாள். அவனும் கிறிஸ்டியின் அப்பாவும்  கார் ஷெட், மோட்டார் அறை, தண்ணீர் தொட்டி என ஒவ்வொரு இடமாகத் தேடினார்கள். கிறிஸ்டி மெல்ல அவனருகே வந்து “அது டார்வின் தான் அங்கிள். கொன்னுடீங்களா?” என்றாள். அவன் அவள் அம்மாவைப் பார்த்தான். புதிய ஆள் போல முறைத்தாள். நாற்றம் வீசும் இடத்தை அவர்களால் சரியாகக் கணிக்க முடியவில்லை. ஒருமுறை பாத்ரூமிலிருந்தும் இன்னொருமுறை அவன் வீட்டு அடுப்படியிலிருந்தும் என மாறி மாறி வீசி அவா்களை அலைக்கழித்தது. மூன்று பேருமாக சேர்ந்து பாத்ரூமிலிருந்து டிரைனேஜ் செல்லும் குழாய்க்குள் கம்பி விட்டு குத்தியதும் கருப்பு பந்துகளாக முடிக்கற்றைகளும் ஷாம்பு பாக்கெட்டுகளும் பிய்ந்து விழுந்தன. அதன்பின் இரண்டு நாட்கள் கிறிஸ்டி அவனைச் சந்திக்கும்போதெல்லாம் குழப்பத்துடன் பார்த்துக்கொள்வதும் சாவு பற்றிய நம்பிக்கையற்று பேசாமல் அப்படியே செல்வதுமாக இருந்தாள். மூன்றாம் நாள் நாற்றம் மெல்லத் தனியவாரம்பித்தது. நான்காம் நாள் சுத்தமாக இல்லை. ஆறாம் நாள் இரவு மறுபடியும் சப்தம் எழுந்தது. அது டார்வினின் அசைவு போலிருந்தது. ஆனால் இப்போது சப்தம் வெளியிலிருந்து வந்தது. பதறியெழுந்து டாச்சுடன் வெளியே வந்தான். காம்பவுண்ட் ஓரமாக அது (டார்வின் தான்) ஓடுக்கொண்டிருந்தது. டார்வின் உயிரோடிருப்பது சந்தோஷத்தை அளித்தது. அன்றிரவே மறுபடியும் கூண்டை செய்ய உட்கார்ந்துவிட்டான். (இம்முறை சிறு மாறுதல் மட்டும்).
காலையில் ஸ்கூல் வேனுக்கு நின்றுகொண்டிருந்த கிறிஸ்டியிடம் டார்வின் உயிரோடிருப்பதை சைகை செய்ததும் அவள் புரிந்து கொண்டு விரலை உயர்த்திக் காட்டினாள்.  ஏழாம் நாள் இரவு டார்வின் வீட்டிற்குள் வராமல் போக்கு காட்டிவிட்டு சென்றது. இரண்டு நாட்கள் இப்படியே சென்ற பிறகு அடுத்தநாள் காலையில் எழுந்து பார்த்தபோது கூண்டுக்கருகே தக்காளியும் பிரித்த பிஸ்கெட் பாக்கெட்டும் கிடக்க எந்த அசைவும் இல்லாமல் கூண்டும் சோளமும் வைத்தபடி அப்படியே இருந்தன. அதாவது டார்வின் அவற்றை நெருக்கும்போது அதன் வால் கூண்டின் மேலோ அல்லது கூண்டுக்குள்ளோ (ஜன்னல் வழியாக) கிடந்திருக்கலாம். தன் வாலால் கூண்டை மிகச் சரியாக அளந்தும் முகர்ந்தும் வைத்துக்கொண்டு கிளம்பிவிட்டிருக்க வேண்டும். என்னுடைய கணிப்பு சரியாக போய்க்கொண்டிருக்கிறது. வால் இருக்கும் வரை டார்வினை மட்டுமல்ல எந்த உயிரியையும் பிடிப்பது லேசானதல்ல. காலையில் விசாரிக்க வந்த கிறிஸ்டியிடம் இதைத்தான் சொன்னான். (அப்போதும் கிறிஸ்டியிடம் வாலை வெட்டப்போவது பற்றி கூறவில்லை) அவள் மறுப்பும் ஏற்பும் இல்லாமல் அசைவின்றி ஒருகணம் அவனைப் பார்த்தாள்.


கிறிஸ்டி, வீட்டின் வடிவத்தில் செய்த சில மாறுதல்களும் கடைசி இரவும் :
ஒன்று, டார்வின் வீட்டுக்குள் வந்ததும் கூண்டுக்குள்ளிருக்கும் சோளத்தைத் தவிர எந்த உணவையும் அதன் கண்ணில் படும் வகையில் வைக்கக்கூடாது. இரண்டாவது, கூண்டுக்கு வெளியே ஒரு பெரிய சோளத்தையும் சிறிய சோளங்களை கூண்டின் இரண்டாவது மூன்றாவது அறையில் உடைத்து வைப்பது. இந்த இரு யோசனைகளும் ஐந்தாம் நாள் நடைமுறைப்படுத்தியபோது கிறிஸ்டி சொன்னது போலவே டார்வின், வெளியே கிடந்த சோளத்தை எடுத்துக்கொண்டும் கூண்டுக்குள்ளிருப்பதை அப்படியே விட்டுவிட்டும் சென்றுவிட்டிருந்தது. ஓரளவு நினைத்தது போல நடந்ததால் கிறிஸ்டி அவனிடம் கூண்டின் வடிவம் சரிதானா என்று கேட்டாள். அவளுக்கு அதன் மீது சந்தேகம். தன் கையிலிருந்த கூண்டின் வரைபடத்தை உற்று பார்த்தவள் மனதிற்குள் ஏதோ கற்பனை செய்துகொண்டாள். ” அங்கிள் இரவு டார்வின் நுழைந்ததும் வீட்டின் எல்லா கதவுகளையும் திறந்து விடுங்கள் அதுதான் அதை கூண்டுக்குள் செலுத்த ஒரே வழி” அவன் சற்று குழம்பி போனான். “ஆமாம் அங்கிள். வீடு திறந்துகிடந்தால் டார்வின் வீட்டை ஒருமுறை சுற்றிவிட்டு மறுபடியும் வந்த இடத்திற்கே திரும்பி, மீண்டும் மூடியிருக்கும் இந்த கூண்டிற்குள் நுழைந்து பார்க்கலாமென யோசிக்கும்”. வீட்டின் எல்லா அறைக்கதவுகளும் திறந்து, கூண்டின் கதவை சற்று சாத்தி வைப்பதில் என்ன யுத்தி இருக்கப் போகிறதென அவனுக்குப் புரியவில்லை. (முன்பு வீட்டின் கதவுகள் சாத்தப்பட்டு கூண்டு திறந்திருந்தது). எனினும் கிறிஸ்டியின் யோசனை சிக்கலான கணக்கிற்கு புதிய சூத்திரம் கிடைத்து போலத் தோன்றியதால் உபயோகிக்கச் சம்மதித்தான்.


ஆறாவது நாள் இரவு தூங்குவதற்கு முன் கிறிஸ்டி அவன் வீட்டிற்கு வந்து எல்லாம் சரியாக இருக்கிறதாவெனப் பார்த்துவிட்டு தன் யோசனையை மறுமுறை நினைவூட்டிவிட்டிவிட்டும் சென்றாள். உண்மையில் இந்த விளையாட்டைத் திறக்கச் செய்யும் சாவி இப்போது தன்வசமிருந்து அவளிடம் சென்றுவிட்டதென நினைத்துக்கொண்டான். ஆறாம் நாள் இரவு விழித்தபடி குளிருக்கு கம்பளி சுற்றிக்கொண்டு ஜானசெக்கின் இசையையும் துணைக்கழைத்துக்கொண்டு அமர்ந்திருந்தான்.  இரவு சரியாக இரண்டு மணிக்கு டார்வின் வீட்டுக்குள் வந்தது. ஜானசெக்கின் வயலின் அவனை அப்படியே ஹெட்போனுடன் துாங்கச் செய்துவிட்டிருந்ததால் டார்வினின் நடமாட்டம் அவனை எழுப்பவில்லை.. (நாற்பது நிமிட இசை). அடுப்படியிலிருந்து பாத்திரம் விழுந்த சப்தத்தில்தான் திடுக்கிட்டு விழித்தான். மூளைக்குள் துண்டுத் துண்டாகக் கிடந்த ஜானசெக்கின் இசையும் பாரத்திரம் உருளும் சப்தமும் மாறி மாறி கேட்டன. இருளுக்குள் அடுப்படியை நோக்கி நடந்தான். காலடியோசைக் கேட்டதும் டார்வின் அடுப்படியின் மூலையில் மறைந்துவிட்டது. பதற்றத்தில் டார்ச்சை தடுமாறி எடுப்பதற்குள் அது, கதவுக்குள்ளும் அலமாரிக்கடியிலுமாக நுழைந்து ஹாலுக்கு வந்து விட்டது. டார்ச்சை இறுகப் பிடித்தபடி டார்வினைப் பின்தொடர்ந்தான். அக்கணம் அவனிடம் எந்தவித யோசனையும் இல்லை. எந்த சாத்தியங்களையும் இனி பயன்படுத்திவிட முடியாது இன்றுடன் இந்த விளையாட்டு முடிந்துவிட வேண்டும். டார்வின் அவனுக்கு முன்னால் ஓடுகையில் மீண்டும் மீண்டும் அதையே திரும்பச் சொன்னான். அதன் வால் நீண்டு நெளிந்து குட்டி பாம்புகாக பின்தொடர்ந்தது. கதவுகள் எல்லாம் திறந்து கிடந்தும் டார்வின் வெளியே செல்ல முயற்சிக்காதது ஆச்சர்யமளித்தது. கிறிஸ்டி சரியாகச் சொல்லியிருக்கிறாள் என்று எண்ணிக்கொண்டான். டார்வின்  அவனது படிப்பறையின் மேசையினடியில் புகுந்து தன்னுடலை பாதியாகக் குறுக்கி அமா்ந்துகொண்டது. குனிந்து டார்ச்சை அடித்தான். வெளிச்சம் பாய்ந்ததும் விறுவிறுவென அவனை நோக்கித் திரும்பி, மீண்டும் அடுப்படிக்குள் ஓடியது. அது வெளியே சென்றுவிடுமென்கிற பயம் வேறு. வயலின் கம்பிகள் அதிர்வு அறை முழுதும் எழ இருவரும் ஒருவரையொருவர் மீட்டிக்கொண்டிருந்தார்கள். சட்டென நிற்பதும் பின் நடப்பதும் அதிர்வதும் அடங்குவதுமாக இருந்த ஓட்டம் சரியாக கூண்டிற்குள் சென்று முடிந்தது. அடுத்த கணம் கூண்டின் கதவுகள் படாரென அடித்துச் சாத்தின. தடுமாறி சுவரைப் பிடித்தபடி கூண்டை நோக்கி குனிந்தவன், உள்ளே அகப்பட்டுவிட்டதா? என துழாவினான். எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. தன் பார்வையை ஏதும் மறைக்கிறதா? நடுக்கத்துடன் கூண்டை எடுத்து முன்னும் பின்னும் பார்த்தான். உள்ளே சிறு அசைவும் ஏதோ இருப்பது போல கனமாகவும் இருந்தது (கூண்டு செய்ததற்கு பிறகு அன்றுதான் மறுபடியும் எடுக்கிறான்). ஆமாம், கூண்டின் முதல் அறையில் வாலின் நீண்ட துண்டு கிடந்தது. மூன்றாவது அறையில் பயத்துடன் டார்வின் பதுங்கியிருப்பதைக் கண்டான். அதன் கண்களை உற்றுப் பார்த்தான். அடுத்த நொடி அவன் வீட்டின் அனைத்து கதவுகளும் சாத்தப்பட்டன. வெளியிலிருந்து யாரும் அப்படி எல்லா கதவுகளையும் சாத்த முடியாதே? இப்போது மறுபடியும் கூண்டை நோக்கித் திரும்பினான். உள்ளே டார்வின் மிகச் சிறியதாக சுருங்கிவிட்டது போலிருந்தது. வெளியே யாரோ சிரிப்பது கேட்டதும் ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தான். அப்போது அங்கிருந்த புதர்க்குள்ளிருந்து பொந்தை நோக்கி நீண்ட வாலுடன் எலி ஒன்று ஓடிக்கொண்டிருந்தது.

https://thuyan.in/டார்வினின்-வால்/

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.