Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புதிர் 

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புதிர் 


 

புலம்பெயர் தேசத்திலிருந்து வந்து நாட்டில் கால் பதித்த வேளைமுதல் ஒரு கால் நூற்றாண்டுக் காலத்தின் மாற்றங்கள், அவன் பார்வையெங்கும் நிறைந்திருந்தன. தொலைக்காட்சிச் செய்திகள் வழி மனதில் விரிந்திருந்த கட்டமைப்புகள் காட்சி நிஜங்களுடன் மிக ஒத்துப்போனதில் அவன் பெரிய ஆச்சரியமெதனையும் அடைந்துவிடவில்லை. ஆனால் பிறந்து வளர்ந்து ஓடியாடி விளையாடிய தன்னூர் வந்தபோது…? பௌதீகத்தில் எந்த மாற்றமும் அற்றதாய் இன்னும் அது  பழைமையின் பிடியில் இருந்துகொண்டிருந்தது. அவனுக்கு அதிசயம் வந்தது.  இறுதி யுத்தத்தில் விழுந்த ஆழமான வடுக்கள் முற்றாகத் தீர்ந்ததாகவன்றி, யுத்தமே அந்த இடத்தைத் தாண்டிச் செல்லவில்லைப்போல, காலமே தன் தடம் பதிக்க அஞ்சி விலகிச் சென்றதான தோற்றங்கொண்டு இருந்தது.

செல்வராணியின் புளிமா வளவு இன்னும் வெட்டையாயே இருக்கச் செய்தது. அதனண்டைய வளவுகளிலும் இரண்டொரு ஓலைக் குடிசைகள் அப்போதும் இருந்துகொண்டிருந்தன. ஒருவேளை அவையேகூட  பழைமை மாறாத அந்த உணர்வைத் தன்னுள் தோற்றியிருக்கலாமென ரமணீதரன் சதாசிவம் எண்ணினான்.

செல்வராணியின் புளிமா வளவு பின்னால் அவனது குணநலன்களை  உருவாக்கிய வகையில் முக்கியமானது. அதுபோல அவளும் ஞாபகத்தில் விலக்கப்படமுடியாத பாதிப்பாய் இருந்தவள்.

செல்வராணியின் மாமர வளவென்பது அவளது என்றில்லை, சங்கரியின் வளவில் அனுமதிபெற்று அவள் குடிசை போட்டிருந்தது என்பதாகவேயாகும். வெம்பி விழும் வடுக்கள் போக, மரத்துக் காய்களைக் காக்க சங்கரி செய்த உபாயமது.

அந்த வளவில் அப்போது அந்தப் புளிமாகூட நின்றிருக்கவில்லை. இருந்தும் அந்த இடத்தில் அவன் பால்ய நினைவுகளைச் சுழித்தெழ வைத்த காலத்தின் பதிவுகள் இருந்தன.

செல்வராணி அவனுள் நிழலாகவென்றாலும் இன்னுமே நின்றிருக்கிறாள். அவனது பாலுணர்வின் முதல் வெடிப்புக் காட்டிய பத்து வயதுக்குள்ளான காலப் பகுதியின் ஆட்சியதிகாரி அவள். முறையற்ற ஒரு காமத்தின் எறியம் அங்கே இருக்கிறது. எந்தவொரு உடம்பும் தன் உறவு நிலைகள் கடந்த ஆதர்ஷத்தின் பொறியினைக் கொண்டிருக்க முடியுமெனின், அதை ஒழுக்கம் சார்ந்த விஷயமாய்க் கொண்டு குழம்பவேண்டியதில்லை. அவனறிந்தவரை அந்த அழகை ஆண்ட பேரரசன் அவனது தந்தையாகவிருந்தார்.

ஒரு சிறு சம்பவத் துணுக்கில் அந்த உறவின் ஆழத்தை விரித்துப் பார்க்க முடியும்.  

அன்று ஒரு சனிக்கிழமை காலை. கொய்யாக்காடு கிராமம் பெரும் களேபரத்தைக் கண்டுகொண்டிருந்தது. ஊரின் ஆம்பிளைகள், இளந்தாரிகள், குஞ்சு குருமனுகளெல்லாம்  கடைக்காரர் வீட்டுக் கொண்டையறுந்த சேவலைப் பிடிக்க ஊர் முழுக்க கலைத்துத் திரிந்தார்கள். வீட்டுக் கூரைகளுக்கு மேலாகத் தாவியும், வேலிகளைத் தாண்டியும் கோழி அந்தரத்தில் திரிந்தது. நேரமாகவாக, பிடித்துவிடலாமென்ற நம்பிக்கை யாரிடத்திலும் இருக்கவில்லை. கடைசியில் கோழி காட்டுக்குள் ஓடி மறையத்தான் போகிறதென்று வேலிகளில் நின்று விடுப்புப் பார்த்த பெண்களே ஆத்தாக் கொடுமையில் புறுபுறுத்துக் கொண்டார்கள்.

ஆனால் எங்கும், எந்தக் கோழியாவது பிடிபடாதுபோன கதையும் இருக்கவில்லைத்தானே! கடைக்காரர் சதாசிவமும் பொறுமையாக, ‘ஒண்டும் யோசியாதயுங்கோ, கோழி களைக்க தன்பாட்டில பிடிபடும்; ஆனா ஆறி நிக்க விட்டிடக்குடா’ என்று அவர்களை உஷார்ப்படுத்திக்கொண்டிருந்தார்.  

கொண்டையறுந்த கோழியின் பசாரடி இதுவென்றால், ஏனைய கோழிகள் மறுபுறத்தில் தாங்களே கலைபட்டதுபோல்  தூள் பறத்திக்கொண்டிருந்தன. அது கண்ட நாய்கள் இறைச்சிப் பொச்சமெழுந்து அவற்றினைத் துரத்திக்கொண்டு திரிந்தன. நிலத்தில் ஒரு பெரும் யுத்தத்தின் புழுதி கிளம்பியிருந்தது.

அப்போது கோழியைத் துரத்திய கூட்டத்தின் பின்னால் ஓடிக் களைத்து ஒரு வீட்டுக் கடப்போடு நின்றிருந்த சின்ன ரமணீதரனை, ஒரு கையால் தன் கண்ணைப் பொத்திக்கொண்டு வந்த அவனது தந்தை மறுகையால் பிடித்துக்கொண்டு, அந்த புளிமா வளவுக்குள் நடந்தார்.

சேவல் கலைப்பின் களேபரத்தை கண்டு களித்துக்கொண்டிருந்த செல்வராணி, ரமணீதரன் சதாசிவத்தின் ஐயா வரக் கண்டதும், ’என்னவும், கண்ணிலயென்ன?’ என்றபடி அவசரமாய் வந்தாள்.

‘மரக்குழையோ என்னவோ அடிச்சிட்டுதுபோல’ என்றபடி கையை அவர் விலக்க, அவரின் கண் பழுத்த தக்காளிபோல் சிவந்து கிடக்கிறதைக் காண்கிறவள் பதறி, ‘ஐயய்யோ…!’ என்றலறினாள்.

அவளைக் கையமர்த்தி, ‘அதொண்டுமில்லை… வா… வந்து… கொஞ்சம் முலைப்பால் பிதுக்கிவிடு’ என்றுவிட்டு ரமணீதரனை அந்த இடத்திலேயே நிற்க கையுயர்த்திப் பணித்த அவனது ஐயா குடிசைக்குள் நுழைந்தார். முன்னால் ரமணீதரன் நிற்பதில் திகைத்து, சிறுவன்தானேயென பின் நெளிந்து வளைந்து சுதாரித்துக்கொண்டு அவரைப் பின்தொடர்ந்தாள் செல்வராணி. ‘ஆக்களாரும் வந்தாலும்’ என்றவாறான வார்த்தைகள் உள்ளுள்ளிருந்து உருண்டு வந்தன.

உள்ளே அடைந்த இருளில் நிலத்தில் வெளிர்ப்பாய்க் கிடந்த பனம்பாயும், கால்களை உதைக்கும் குழந்தையொன்றின் அடிப் பாதங்களும் தெரிந்தன. செல்வராணி பாயில் மெதுவாக அமர்வதும், பின்னால் தனது தந்தை மல்லாக்க அவளது மடியில் சாய்வதும் ரமணீதரன் சதாசிவம்  கண்டான்.   

செல்வராணி தன் குறுக்குக் கட்டை அவிழ்த்து ஒரு தனத்தை வெளிப்படுத்தினாள். இருளிலும் கூடிய கருமையில் கனத்துத் தொங்கியது அது.

அதன்மேல் அவன் எதுவும் கண்டானில்லை. முன்பு கண்டனவற்றின் கற்பிதத்தில் உருவாகும்  மனக்காட்சிகளில் ஆழ்ந்துபோகிறான். அவனது உடம்பெங்கும் பரவசம் பற்றி ஏறியது.

இரண்டொரு வருஷங்களில் அவனது ஐயா மறைந்துபோனார். மேலும் சில வருஷங்களில் செல்வராணியும்  உழைப்புக் கிடைக்கும் இடமாக எங்கோ குடியேற்றப் பக்கமாய்ப் போய் ஒதுங்கிக்கொண்டாள். ஆனாலும் சிவப்பாய்க் கனிந்து கிடந்த ஐயாவின் பூவரசங் கொப்படித்த கண்ணினை ஒரு வாரத்துள் குணமாக்கிய செல்வராணி மருத்துவச்சியின் கருமுலை அவனில் என்றும் மறந்திருக்கவில்லை. அது பல அரியதுகளைச் செய்ய பதினெட்டு வயதிலிருந்தே அவனை முடுக்கிவிட்டது.

83இன் ஆடி இனக்கலவரத்தோடு இயக்கத்தில் சேர்ந்த ரமணீதரன் சதாசிவம் இந்தியாவிலிருந்து திடீரென எங்கோ காணாமல் போய்விட்டான். அவன் மீண்டும் வெளிநாடொன்றில் வெளிப்பட்டபோது காமத்தின் தேடல்களிலிருந்து பெருமளவு விடுபட்டிருந்தான். யுத்தம் முடிந்ததும் அவனுக்கும் வெளிநாட்டிலிருந்த இலங்கைத் தமிழர் பலருக்குப்போல் தன்னூர் பார்க்க ஆசை வந்தது. அப்போது அவனுக்கு முதல் ஞாபகமாகியது பெரியான் கந்தசாமிதான். ஒரு துக்கத்தோடேயே அவனை நினைவுகொள்ள முடிந்திருந்தது ரமணீதரன் சதாசிவத்துக்கு.

பெரியான் கந்தசாமியின் வீடு புளிமா வளவுக்குப் பின்னாலே இருந்தது. ஊரிலே பல கந்தசாமிகள் இருந்ததில் பெரியான் மகன் கந்தசாமி பள்ளியில் பெரியான் கந்தசாமி ஆகிப்போனான். அவனோடு அத்யந்த சிநேகிதமிருந்தது ரமணீதரன் சதாசிவத்துக்கு.

இருந்தும் புலம்பெயர் காலத்தில் பெரியான் கந்தசாமி அவன் மனத்தின் அடியில் இருந்திருக்கக் கூடுமாயினும், செல்வராணிபோல், குறிப்பாக அவளது கருமுலைகள்போல், அடிக்கடி ஞாபகத்தில் வந்துகொண்டிருக்கவில்லை. ஆனால் ஊர் வந்தபோது பெரியான் கந்தசாமியே எவரையும் எதனையும் மேவி அவன் நினைவில் வந்திருந்தான்.

பால்யத்து நினைவுகளின் பொதியல் அவன். அவனுக்காகவே, அவன் தோட்டத்தில் நிற்பதறிந்து ஒரு சிறுவன்மூலம் செய்தி  அனுப்பிவிட்டு அங்கே காத்து நின்றுகொண்டிருக்கிறான்.

அப்போதும் கல் ரோடாயிருக்கும் அந்த வீதியில் விறுக்கு விறுக்கென யாரோ வந்துகொண்டிருப்பதை ரமணீதரன் சதாசிவம் காண்கிறான். அதே விசுக்கு நடை; அதே நெஞ்சுயர்த்திய தோற்றம்; கருகருவென்ற வெறும் தேகம். பெரியான் கந்தசாமியேதான். இருபத்தைந்து வருஷ கால இடைவெளியைத் தாண்டியும் அந்த அடையாளங்கள் அவனில் மாறவேயில்லை.

வந்தவன் மூச்சுவாங்க அவனெதிரே குத்துக்கல்லாய் நின்றான். முகமெல்லாம் முறுவலாய்ப் பொழிந்தான்.

இவ்வண்ணமேதான்…. இவ்வண்ணமேதான் முன்பும் இவன்….! ரமணீதரன் சதாசிவம் வேறு சிந்தனையுள் ஆழ்ந்துவிடாமல், ‘சாந்தன் சொல்லித்தான் தோட்டத்திலயிருந்து ஓடி வாறனும்’ என்று வார்த்தைகளை பெரியான் கந்தசாமி திணறினான். ‘எப்பிடி இருக்கிறிர்?’

‘நான் நல்லாயிருக்கிறன். நீ எப்பிடி இருக்கிறாய், கந்தசாமி?’

‘எனக்கென்ன குறையும்? சண்டைக் காலத்திலதான் கொஞ்சம் கஷ்ரப்பட்டுப் போனம். இப்ப பிரச்சினையில்லையும். இனி திரும்ப எப்பவும் பயணம்?’

‘கொஞ்ச நாள் நிண்டுதான் போவன்.’

‘வீட்டை வாருமன்.’

‘பேச எவ்வளவோ கிடக்கு, கந்தசாமி. இப்ப இதில நிண்டே பேசுவம். அதுக்காண்டித்தான உன்னைத் தேடிப் பிடிச்சதே. இன்னொரு நாளைக்கு வீட்டை வாறன்.’

‘இன்னொரு நாளைக்கும் வீட்டை வாரும். இண்டைக்கும் வாரும். வீட்டை போனா இருந்து வடிவாப் பேசலாமெல்லே. மோனையும் தாயையும் இறைப்பை கெதியில முடிச்சிட்டு வரச்சொல்லியிருக்கிறன். தோட்டத்திலயிருந்து இந்தாண்டு வந்திடுவின அவையையும் பாத்தமாதிரி இருக்கும், வாரும்.’

பெரியான் கந்தசாமி முந்தியும் அவ்வாறுதான் பிடிவாதமாய்ப் பேசுவான். லேசான கொன்னையும் அவனுக்கு இருந்தது. அவனது பேச்சு மொழியை ஊரின் மூத்த சமூகமொன்றின் இன்னும் எஞ்சியுள்ள அக அடையாளமாய் அவன் கண்டான்.  காலம் அவர்களை மாற்றியிருக்கக் கூடுமாயினும் அவ்வாறு பேச ஓரிருவர் இப்போதும் இருக்கக்கூடும்தான்.  பெரியான் கந்தசாமியும் மாறவில்லை. தோற்றம்போலவே அவனது அகமும் அப்படியே இன்னும் இருக்குமோ?

ரமணீதரன் சதாசிவத்தில் சட்டென பழைய நினைவின் அலைகள்.

0

அதுவொரு அற்புதமான காலம். அப்போது அவர்களிருவரும் ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தார்கள். 

பிள்ளைகளைவிட குரங்குகள் அதிகமாக வந்துபோவதில் அந்த பள்ளிக்குச் செல்ல சின்ன ரமணீதரனுக்குப் பயம். அதனால் காலையில் வீடு போய், அவன் முரண்டு பிடித்து சாப்பிட்டு வெளிக்கிட்டு புத்தகப் பையை எடுத்துக்கொண்டு வரும்வரை காத்திருந்து பெரியான் கந்தசாமிதான் பள்ளிக்குக் கூட்டிப்போய் வருவான். ஒரே வகுப்பிலே படிக்கிற இருவருக்கும் ஒரே வாங்கிலேதான் இருக்கைகளும்.

அவர்களுக்குள் எதுக்கென்று இல்லாமலே அவ்வப்போது சண்டைவரும். ஆக்ரோஷமாகக் கொதித்தெழுந்தாலும் அடங்கிப்போவது கடைசியில் பெரியான் கந்தசாமியாகவே இருப்பான். மிக எளிய காரணங்களில் தோன்றும் பூசல்கள் மிக எளிமையான வழிகளில் தீர்வும் கண்டுவிடும்.

பெரியான் கந்தசாமியிடம் பள்ளிக்கு அணிந்துசெல்;ல ஒரு காக்கிக் கழிசானும் ஒரு வெள்ளைச் சேர்ட்டும் இருந்தன. அவற்றை எக் காரணம்கொண்டும் அழுக்குப் பிரள  அவன் விட்டுவிடுவதில்லை. சிலவேளை ரமணீதரன் சதாசிவத்தினுடையதை விடவுமே அவனுடைய சேர்ட் வெளீரென்று இருக்கும். சமயங்கள் பலவற்றில் அவனது பிடிப்பின்மை வெளிப்பட்டிருக்கிறது. அழுக்குள்ள இடத்தில் அவன் சாய்ந்துவிடுவதுபோல் தள்ளிவிடுவான்; அல்லது அவன் கண்டுவிடாத அவதானத்துடன் தற்செயலாய்ப்போல் அவனது சீருடையில் மைத் துளிகளை பேனையிலிருந்து உதறுவான். அதை விளங்கிக்கொண்டாலும் பெரியான் கந்தசாமிக்கு அவனில் கோபம் பிறக்காது. ‘அது ஒண்டுமில்லையும்… சுண்ணாம்பு பிரட்டி உரஞ்சித் தோய்ச்சா டக்கெண்டு மைக் கறை போயிடும்’ என்பான். ஏனந்த இணக்கமென்று யாரும் அறிந்ததில்லை.

கணக்கு தமிழ் சமயம் என எந்தப் பாடமுமே சுயமாக பெரியான் கந்தசாமி எழுதியது கிடையாது. ரமணீதரன் சதாசிவத்தைப் பார்த்தே எழுதிவிடுவான். அப்படி எழுதாவிட்டாலும் வகுப்பில் எல்லாருக்கும் மூத்த அந்த மாணவனை எந்த உபாத்தியாயரும் கண்டித்துவிடுவதில்லை.

உபாத்தியாயர் பாடம் நடாத்துகிறவேளையிலும் கேள்விகளால் ரமணீதரன் சதாசிவத்தைத் துளைத்துக்கொண்டிருப்பான். படிப்பில் அவ்வளவு ஆர்வமிருந்ததாகச் சொல்லமுடியாத ரமணீதரன் சதாசிவத்தையே பெரியான் கந்தசாமிதான் படிக்க வைத்தானென்றாலும் பிழையில்லை. துரதிர்ஷ்டம் என்னவெனில் படிக்கும் பாடத்திலான கேள்விகாளாக பெரும்பாலும் அவை இருப்பதில்லை என்பதுதான்.

சித்திர வகுப்பு நேரத்தில் நீலத்தையும் மஞ்சளையும் காட்டி அவற்றில் எது பச்சை நிறமெனக் கேட்பான். இன்னொருபோது ஒரு நாளில எத்தினை மணத்தியாலமிருக்கு என்பான். இருபத்தி நாலு என்றால், எல்லா நாளிலயும் சரியா அந்தளவு இருக்குமோ என்ற கேள்வி வரும். கணித பாட நேரத்தில் சக, சய, தர, அரண ஆகியவற்றின் குறியீடுகளைக் காட்டி இதில எது அரண என்பான். அதைக் காட்டினால், அரண எண்டால் என்ன செய்யிறதென்பான்.

அவர்களுக்குள் ஒரு நெருக்கமிருந்தது. அது, குரங்குகளிடமிருந்தான பாதுகாப்புச் சம்பந்தமானதாக மட்டும் இருக்கவில்லை. காரணமற்ற ஒரு பிடிப்பு. அவர்களது அந்நியோன்யமான பேச்சுக்கள் சமூக நிலை கடந்த ஒரு நட்பு வட்டத்துள் அவர்களை வரச்செய்திருந்தன.

இத்தனைக்கு பெரியான் கந்தசாமிக்கு அவனைவிட நான்கு வயது அதிகமிருக்கும். ஏழு வயதில் பள்ளிக்குப் போக ஆரம்பித்து, ஆறாம் வகுப்புக்கிடையே இரண்டு தடவைகள் வகுப்பு சித்தியடையாதும் போயிருந்தான். ஏழிலோ எட்டிலோ அவன் படிப்பை நிறுத்திவிட்டு கிராஞ்சியில் வயல் வேலை செய்யப்போவதாகச் சொல்லிக்கொண்டு போனானென்று ஞாபகமிருந்தது ரமணீதரன் சதாசிவத்துக்கு.

0

அந்தக் கந்தசாமிதான் அப்போது வீட்டுக்கு வர அவனைக் கெஞ்சிக்கொண்டு நிற்கிறான். அவன் எப்போது கிராஞ்சியிலிருந்து ஊர் திரும்பினான், கல்யாணம் ஆகியிருப்பான் என்றாலும் பெண் ஊரிலா வெளியூரிலா, குழந்தைகள், அதில் ஆண் பெண் எத்தனை, பேரக் குழந்தைகள் எத்தனை என்பனபற்றியெல்லாம் கேட்க அவனுக்குள்ளும் ஆவல் வெகுத்திருந்ததோடு, அவனது மனைவியையும் மகனையும் காண்கிற அந்த வாய்ப்பையும் தவறவிட விரும்பாததில் ரமணீதரன் சதாசிவம் கூடிச் சென்றான்.

வேலிக் கடவை கடந்ததும் ஓட்டமாய் ஓடிப்போய் உள்ளேயிருந்த புட்டுவத்தை எடுத்துவந்து முற்றத்தில் வைத்தான் பெரியான் கந்தசாமி. ரமணீதரன் சதாசிவம் அமர குழந்தையொன்றின் அழுகுரல் குடிசைக்குள்ளிருந்து எழுந்தது. அதை உறக்கம் கலைந்தெழுந்த யாரோ ‘ஆரிரோ….  ஆரிரோ…’ எனத் தாலாட்டித் தூங்க வைக்க முயன்றார்கள். ரமணீதரன் சதாசிவத்தின் பார்வையின் பொருளைப் புரிந்துகொண்டு, ‘மருமோளும் பிள்ளையும். மோனாக்கள் இப்ப இஞ்சதான் வந்துநிக்கின’ என்றான்.

‘எத்தினை பிள்ளையள் உனக்கு?’

‘ஒரு பெடியன்தான்’ என்றுவிட்டு கொஞ்சம் வெட்கப்பட்டான். பின் தனது வெங்கிணாந்திச் சிரிப்பை வழியவிட்டான். ‘எங்க… கடைசிவரையில உம்மைக் காணாமல் போயிடுவனோவெண்டு சரியான கவலையாய்ப் போச்சுதும். ஏனிண்டு நினைப்பிர். நான் கிராஞ்சிக்கு போமுந்தி நீர் ஒரு விடுகதை சொன்னிர். அது ஞாபகமிருக்கெல்லோ உமக்கு? நானும் எத்தனையோ தரம் யோசிச்சு யோசிச்சுப் பாத்திட்டனும். எனக்கெண்டா ஒரு வழியும் சரியாய் வரேல்ல.’

‘என்ன சொல்லுறாய், கந்தசாமி? எனக்கெண்டா….  ஒண்டும் விளங்கேல்லை.’

‘அதொண்டுமில்லையும். நான் கிராஞ்சிக்குப் போறதுக்கு முந்தி நீர் ஒரு விடுகதை சொன்னீரெல்லோ, நானும் யோசி யோசியெண்டு யோசிச்சுப் பாத்திட்டன், பதில்  வரேல்லையும். எண்டைக்கெண்டான்ன உம்மைக் காணேக்க கேக்கவேணுமெண்டு இந்தளவு நாளாய்க் காத்திருக்கிறனும்.'

என்ன விடுகதையென்பதே தனக்கு ஞாபகத்திலில்லாதபோது, இவன் கதையை நினைவில் வைத்து இந்தளவு காலம் தனக்காகக் காத்திருக்கிறதாய்ச் சொல்கிறானேயென்று ரமணீதரன் சதாசிவம் உண்மையில் திகைத்துப்போனான். கால நீட்சி, இடைப்பட்ட வாழ்வியல் கடினங்கள்கூட அந்த விடுகதையை மறக்கடிக்க முடியாது போயிற்றோவென்று ஆச்சரியம் வெளிப்பட அவன் கேட்டான், ‘அது என்ன கதை, கந்தசாமி?’ என.

‘புலி - ஆடு - கீரைக் கட்டு மூண்டையும்  ஆத்துக்கு அக்கரைக்கு எப்பிடிப் படகில கொண்டுபோறதெண்ட விடுகதை. தனித்தனியாக் கொண்டுபோகவேணும். ஆனா விட்டிட்டு வந்தாப்போல புலி ஆட்டையும், ஆடு கீரையையும் திண்டிடக்குடா. ஆட்டை முதல்ல கொண்டுபோய் அக்கரையில விட ஏலுதும்… ஆனா… புலி ஆடு எதையுமே கொண்டுபோய் பிறகு விட ஏலுதில்ல…’

ஒரு சிக்கலை நொடியில் அவிழ்க்கும் நொடிக் கதைகள்போன்று, ஒரு யுக்தியில் கழற்றிவிடும் சூட்சுமம்கொண்ட விடுகதைகள் அல்லது புதிர்க்கதைகள் சொல்லப்படுவது அக் காலத்திலொரு சொல்விளையாட்டாய் கிராமங்களிலிருந்தது. புதிரை விடுவிப்பதுவரை ஒரு விறுவிறுப்பும், விடுவித்துவிட்டால் ஒரு பரவசமும் விளைகிற விளையாட்டது. அப் பரவசத்தைக் கெஞ்சுகிற ஏக்கத்தில் அப்போது இருந்திருந்தான் கந்தசாமி.

அதைக் காண ரமணீதரன் சதாசிவத்துக்கே அவ் விடுகதை புதிராகி பின்னர் விடையாய் வெளிப்பட்டு பரவசம் உண்டாக்கியது. ‘இந்தச் சின்னப்பிள்ளைக் கதைக்குப் போய்…. இந்தளவு நாள் காத்திருந்திருக்கிறியே, கந்தசாமி!’

‘சின்னப்புள்ளைக் கதை இல்லயும், இது விடுகதையெண்டுதான் நீர் சொன்னனீர்.’

ரமணீதரன் சதாசிவம் புதிரை விடுவித்தான். ‘நீ சொன்னமாதிரித்தான் முதலில ஆட்டைக்கொண்டுபோய் விட்டிட்டு வரவேணும், கந்தசாமி. பிறகு வந்து கீரைப் புடியைக் கொண்டுபோகவேணும்….’

கந்தசாமி கூச்சலிட்டான்: ‘ஏலாதும்… ஏலாதும்… கீரையைக் கொண்டுபோய் வைச்சிட்டு வந்தா ஆடு திண்டிடும்.’

‘தின்னாது, கந்தசாமி. நீ கீரையைக் கொண்டுபோய் வைச்சிட்டு கையோட ஆட்டைக் திரும்பக் கொண்டுவரவேணும்.’

‘கொண்டுவந்து….?’

‘ஆட்டை விட்டிட்டு புலியைக் கொண்டுபோகவேணும். புலியையும் கீரையையும் ஒண்டாய் விட்டிட்டு திரும்பவந்து ஆட்டைக்கொண்டு போனா ஆட்டை புலியிட்டயிருந்தும், கீரையை ஆட்டிட்டயிருந்தும் காப்பாத்தியிடலாம்…’

வலு பரவசத்துடன் பெரியான் கந்தசாமியின் வார்த்தைகள் பிறந்தன. ‘இப்ப வலு சுகமாய்த் தெரியுதும்! ஆட்டையும் கீரையையும் காப்பாத்த நான் இந்தக் கரையிலயே கனகாலமாய் கண் முழிச்சு நிண்டிட்டனும்…’

எங்கேயோ ஓரிடத்தில் காத்திருந்த அலுப்பின் ஒரு தளும்பல் கிளர்ந்ததா பெரியான் கந்தசாமியின் குரலில்? அதில் சோகம் ஒரு துளியளவு வெடித்துப் பறந்ததா?

ரமணீதரன் சதாசிவம் நிமிர்ந்து பார்த்தான். ‘கந்தசாமி...! என்ன, என்னவோமாதிரிக் கதைக்கிறாய்?’

‘இல்லையும்… ஒண்டுமில்லையும்…. மோனும் தாயும் இந்தா…. இப்ப வந்திடுவின. பாத்திட்டு வெளிக்கிடுவம்….’

அப்போது கருமேகங்கள் அந்த வயற்கரைப் பிரதேசத்தை  வளைத்துப் போட்டன.  கொய்யாக்காடு இருளத் தொடங்கியது. மேல் வெளியில் ஏக தடல்புடல்கள். காகங்கள்… மைனாக்கள்… கொக்குகள்…. கொக்குறுப்பாச்சன்கள்… அவதியுடன் இருப்பிடம்நோக்கி கலகலத்து விரைந்தன.

அப்போது திடீரென பெரியான் கந்தசாமியின் மகனும் மனைவியும் விரைந்து வந்து முற்றத்தில் ஏறினர்.

‘மழை வரப்போகுது’ என முனங்கினான் பெரியான் கந்தசாமியின் மகன். ‘வராது. காத்து கிளம்பியிட்டுது. அது முகிலை அடிச்சுக்கொண்டு கடலுக்குக் கொண்டுபோடும்’ என்றாள் தாய்.

அப்போதுதான் ரமணீதரன் சதாசிவம் நிமிர்ந்து அவளைப் பார்த்தான். அந்த வெள்ளைத் தோலின் அதி சுந்தர ரூபத்தினைக் கண்டவன் சலனமறுந்தான்; பார்வை குத்திட பிரக்ஞை மறந்தான். சற்றுநேரத்துக்கு முன் கண் காண வானத்தில் பறந்துகொண்டிருந்த கிக்கீ கிளிகள் ஆயிரமும் ஒவ்வொன்றாய்ச் செத்து வீழ்வனபோல் மனத்துள் காட்சி விரிந்தது.

அவளோ அவனைப் பார்த்தாள். பார்த்தபடி நின்றிருந்தாள். பின் சிரிக்க முயன்றாள். அதில் சிரமத்தின் துளியொன்று வெடித்துப் பறந்தது. ஆயினும் சிரிப்பென்று சொல்லக்கூடியதாய் அது மேனிலை அடைந்தது. ‘சிவத்தார்கடை ராசா எண்டிருந்தா ஆரெண்டு எனக்குத் தெரிஞ்சிருக்கும். இவர்… ராசாவெண்டு சொன்னார்… எனக்கென்ன தெரியும், எந்த ராசாவெண்டு?’

‘அதாலயென்ன? நீங்கள் வரமுந்தி அவரென்ன போயிடவேபோறார்?’ என்றான் பெரியான் கந்தசாமி.

‘பாக்காமப் போயிருந்தா துக்கம்தான். இனி எப்பெப்ப பாக்கக் கிடைக்குமோ? எதுக்கெண்டா… அவரிட்டக் கேக்கிறதுக்கு ஒரு விஷயம் கனகாலமாய் என்னிட்ட இருக்கு….’

இருள் விழுந்ததுபோல் சூழ ஒரு மௌனம் திடீரென விழுந்தது. எதிர்பாரா மௌனத்தின் அக் கனதி காற்றில் வெகுநேரமாய் மிதந்துகொண்டிருந்தது. அதை பெரியான் கந்தசாமி உடைத்தான். ‘என்ன விஷயம் கேக்கவிருந்தனி…?’

‘இல்லை…. சண்டை துவங்கி இவர் வெளிநாடு போறதுக்கு முந்தி ஒருநாள் விடுகதையொண்டு சொன்னார்….’ என்றவள் திடுமென ரமணீதரன் சதாசிவம் பக்கமாய்த் திரும்பினாள். ‘உமக்கு ஞாபகமில்லையோ…. அடை மழை பிடிச்சு குளக்கரை மருதமரம் பாறிவிழுந்த அண்டைய பின்னேரம்போல சொன்னிரே… அந்த புலியும் ஆடும் புல்லுக்கட்டும் கதை… சொல்லும், ராசா…. எப்பிடி ஒவ்வொண்டாய் அதுகளை ஆத்தைக் கடந்து கொண்டுபோய்ச் சேர்க்கிறது?’

ரமணீதரன் சதாசிவம் திரும்பி பெரியான் கந்தசாமியைப் பார்த்தான்.

ஓர் அந்தரங்கத்தின் கதவு உடைபட்டதான மிரட்சியில் அவனது தேகம் நடுங்கிக்கொண்டிருந்தது. அது புதிரின் விடையால் இளகியவன், தான் வினவாத இன்னொரு புதிரின் விடையால் இறுகிக்கொண்டிருப்பதை ரமணீதரன் சதாசிவத்துக்கு பிழையற உணர்த்தியது.

0

 

நடு இணைய இதழ், ஒக்.2021

(புதிரெடுத்தல் என்ற தலைப்பில் வந்தது)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.