Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆப்பிள் நிறுவன 'ஏர்டேக்' சாதனம் நம்மை ரகசியமாக கண்காணிக்கிறதா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆப்பிள் நிறுவன 'ஏர்டேக்' சாதனம் நம்மை ரகசியமாக கண்காணிக்கிறதா?

  • ஜேம்ஸ் க்ளேடன் & ஜேஸ்மின் டையர்
  • பிபிசி செய்திகள்
30 நிமிடங்களுக்கு முன்னர்
 

நமக்கே தெரியாமல் நம்மைக் கண்காணிக்கும் ஏர்டேக் சாதனம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆம்பர் நார்ஸ்வொர்த்தி தனது நான்கு குழந்தைகளோடு மிஸிஸிப்பியில் வசித்து வருகிறார்.

டிசம்பர் 27ஆம் தேதியன்று அவர் வீட்டிற்கு வந்தபோது மாலை 3 மணி ஆகியிருந்தது. அப்போது அவருடைய ஃபோனில் ஓர் அறிவிப்பு ஒலி வந்தது.

"என்னுடைய கைபேசி நான் இதற்கு முன்னர் கேள்விப்படாத ஒலியை உருவாக்கியது," என்று அவர் கூறுகிறார்.

அறியப்படாத சாதனம் ஒன்று அவருடைய அசைவுகளைப் பின்தொடர்வதாக அந்த அறிவிப்பு கூறியது.

32 வயதான நார்ஸ்வொர்த்தி தனது ஐஃபோனில் 'ஃபைண்ட் மை' செயலிக்குச் சென்றார்.

"இது என்னுடைய முழு பாதையையும் எனக்குக் காட்டியது. அதில் 'உரிமையாளர் கடைசியாக உங்கள் இருப்பிடத்தைப் பார்த்தது 15:02 மணிக்கு' என்று கூறப்பட்டது. அப்போதுதான் நான் வீட்டிற்கு வந்திருந்தேன்," என்று அந்த அனுபவத்தைப் பற்றிக் கூறுகிறார்.

காவல்துறையை அழைத்தபோது, என்ன செய்வது என தெரியவில்லை என்று அவர்கள் கூறியுள்ளார்கள். அந்தச் சாதனம் தன்னுடைய காருக்குள் எங்கோ இருப்பதாக நம்பும் அவர், இன்னும் அதைக் கண்டுபிடிக்கவில்லை.

ஆப்பிள் சப்போர்ட்டின் உதவியோடு, அந்தச் சாதனம் ஏர்டேக் (Airtag) என்று தெரிந்துகொண்டதாகக் கூறியவர், "நான் இப்போது என் சுற்றுப்புறங்களை மிகவும் கவனமாகப் பார்க்கிறேன்," என்கிறார்.

அமெரிக்காவில் உள்ள 6 பெண்களிடம் பிபிசி பேசியது. அவர்கள் ஆப்பிள் ஏர்டேக்கை பயன்படுத்தித் தாங்கள் கண்காணிக்கப்பட்டதாகக் கூறினார்கள்.

ஒரு பட்டன் அளவுக்கு இருக்கும் இந்தச் சாதனங்கள், ஆப்பிளின் 'ஃபைண்ட் மை,' நெட்வொர்க்கோடு இணைந்து இயங்கி, தொலைந்துபோன பொருட்களைக் கண்டுபிடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆனால், இது தங்களைக் கண்காணிக்கப் பயன்படுத்தப்படுவதாக அமெரிக்காவில் பல புகார்கள் வந்துள்ளன.

பிபிசியிடம் ஆப்பிள் பேசியபோது, "நாங்கள் வாடிக்கையாளர் பாதுகாப்பை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம். மேலும் ஏர்டேக்கின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பிற்கு நாங்கள் பொறுப்பெடுத்துள்ளோம்," என்று கூறியது.

போட்டியாளர்களின் தயாரிப்புகளை விட, ஏர்டேக் சிறந்த பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது என்றும் ஆப்பிள் நிறுவனம் கூறுகிறது.

இருப்பினும், அவை அமெரிக்கா முழுவதும் குற்றச் செயல்களுக்காகப் பயன்படுத்தப்படுவதற்கான ஆதாரங்கள் அதிகரித்து வருகின்றன.

ஆப்பிள் நிறுவனம் ஏர் டேக்குகளை கடந்த ஏப்ரல் மாதத்தில் அறிமுகப்படுத்தியது. அவை சிறியவை, மென்மையாகவும் வட்ட வடிவத்திலும் இருக்கும். மேலும் டைல் போன்ற சந்தையிலுள்ள பிற கண்காணிப்பு சாதனங்களில் இருந்து உத்வேகம் பெற்று தயாரிக்கப்பட்டது.

 

நமக்கே தெரியாமல் நம்மைக் கண்காணிக்கும் ஏர்டேக் சாதனம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஒருவர் தொலைக்கக்கூடிய பொருட்களான சாவி, பெட்டி போன்றவற்றோடு இவற்றை இணைத்துக்கொள்ளலாம். ஒரு பொருளை 0.1 அடிக்குள் கண்காணிக்கலாம். ஆனால், தவறான கைகளில் இவை செல்லும்போது, அவை வேறு நோக்கத்திற்காகவும் பயன்படுத்தப்படலாம்.

மின்னணு சாதனங்களுக்கான முன்னணி அமைப்பின் (Electronic Frontier Foundation)சைபர் பாதுகாபு இயக்குநர் ஏவா கால்பெரின், "திருடப்பட்ட பொருட்களைக் கண்காணிப்பதற்குப் பயனுள்ள ஒரு பொருளை உருவாக்கினால், ஒருவருக்குத் தெரியாமலே அவரைப் பின்தொடர்வதற்குரிய சரியான கருவியும் உருவாக்கப்படுகிறது," என்கிறார்.

"ஏர்டேக் சாதனங்கள் தங்கள் வசம் இருப்பதைக் கண்டறிந்த பலருடன் நான் தனிப்பட்ட முறையில் பேசினேன்," என்றும் அவர் கூறுகிறார்.

ஏர்டேக்குகளை வெளியிடுவதற்கு நீண்ட காலத்திற்கும் முன்பே, அவை குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்தப்படலாம் என்பதை ஆப்பிள் அறிந்திருந்தது. அவற்றை வெளியிடும்போது, "ஏர் டேக்குகள் மனிதர்களை அல்ல, பொருட்களைக் கண்காணிக்க் வடிவமைக்கப்பட்டுள்ளன," என்று ஆப்பிள் நிறுவனம் கூறியது.

அவர்கள் தொடர்ச்சியான பாதுகாப்பு அமைப்புகளை உருவாக்கினார்கள். அவை மக்களைக் கண்காணிக்காமல் பாதுகாக்கும் என்றும் கூறினார்கள்.

ஐஃபோன் உள்ளவர்கள், பதிவு செய்யப்படாத ஏர்டேக் அவர்களுடன் நகர்ந்து வந்தால், எச்சரிக்கப்படுவார்கள். மேலும் ஏர்டேக்குகள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அதன் உரிமையாளரிடம் பிரிந்திருந்தால், பீப் ஒலியை எழுப்பும்.

டிசம்பரில் ஆன்ட்ராய்டு பயனர்களும் பதிவிறக்கம் செய்யக்கூடிய செயலியை ஆப்பிள் வெளியிட்டது. டிராக்கர் டிடெக்ட் என்ற அந்த செயலி, ஐஓஎஸ் இயக்க முறைமையில் இல்லாத பயனர்களுக்கு அவர்களைக் கண்காணிக்கும் ஏர்டேக் குறித்து தெரிவிக்க உதவுகிறது.

ஆனால் பல்வேறு காரணங்களால், இந்த பாதுகாப்புகள் போதுமான அளவுக்கு இல்லையென்று பலரும் நம்புகின்றனர்.

 

நமக்கே தெரியாமல் நம்மைக் கண்காணிக்கும் ஏர்டேக் சாதனம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஜோர்ஜாவைச் சேர்ந்த ஆன்னா மஹானே, ஷாப்பிங் மாலுக்குச் சென்ற பிறகு, அவருக்குத் தெரியாத ஒரு சாதனம் அவரை கண்காணிப்பது குறித்து அவருடைய கைபேசி எச்சரித்தது.

"நான் மிகவும் பயந்துபோயிருந்தேன். அதை செயலிழக்க வைக்க முயன்றேன். ஒவ்வொரு முறையும் நான் அதைச் செய்தபோது, அது சர்வரோடு இணைக்கமுடியாது என்று கூறியது," என்று கூறியவர், அவருடைய இருப்பிடம் குறித்து அறியும் அமைப்புகளைச் செயலிழக்க வைப்பதற்காக ஆப்பிள் ஸ்டோருக்குச் சென்றார்.

உள்ளூர் காவல்துறையிடம் அவர் சென்றபோது, அவருடைய பகுதியில் இதேபோன்ற மற்றொரு புகாரும் இருப்பதாகக் கூறியுள்ளார்கள். இவரும் இந்தச் சாதனம் தன்னுடைய காரில் எங்கோ இருப்பதாக நம்புகிறார்.

ஏர்டேக் மூலம் கண்காணிக்கப்பட்டதாகக் கூறும் 6 பெண்களிடம் பிபிசி பேசியது. ஒரு பையின் உட்புறத்தில் ஏர்டேக் ஒட்டப்பட்டிருப்பதை கண்டுபிடித்ததாக, அவர்களில் ஒருவர் கூறினார். மற்றவர்களால் அத்தகைய சாதனத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

ஆப்பிள் தங்கள் தயாரிப்புகளை மக்களைக் கண்காணிக்க பயன்படுத்தப்படுவதைத் தடுக்கப் போதுமான அளவுக்குச் செயல்படுகிறதா என்பது குறித்த கேள்வி அவர்கள் அனைவருக்குமே உள்ளது.

அதோடு பதிவு செய்யப்படாத ஃபோன் உடனே ஏர்டேக் சாதனம் நகர்ந்து கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்ட 8 முதல் 24 மணி நேரங்களுக்குள் ஏர்டேக்குகள் பீப் ஒலியை உருவாக்கும் என்று ஆப்பிள் கூறுகிறது.

அதோடு, ஏடேக்கை பதிவு செய்து, பின்னர் அதை முடக்குவதும் எளிது. ஏர் டேக்கை கண்டுபிடிக்க முடியாமல் போனதற்கு இதுவே காரணம் என்று ஆப்பிள் சப்போர்ட் தன்னிடம் கூறியதாக ஆன்னா மஹானே கூறினார். மேலும், "என்னுடைய விஷயத்தில் , என்னைக் கண்காணித்த நபர், நான் வீட்டிற்கு வரும் வரை என்னைக் கண்காணித்து வந்துள்ளார். பிறகு அதை முடக்கிவிட்டார் என்பது போலத்தான் தெரிகிறது," என்கிறார்.

 

ஜார்ஜியாவை சேர்ந்த ஆன்னா மஹானே

 

படக்குறிப்பு,

ஜோர்ஜாவை சேர்ந்த ஆன்னா மஹானே

ஆப்பிளின் ஏர்டேக் பாதுகாப்புகளில் இருந்து தப்பிக்க இது மட்டுமே சாத்தியமான வழி இல்லை. தேவையற்ற ஏர் டேக்கை கண்டறிய ஆண்ட்ராய்டு பயனர்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஆப்பிள் செயலி, மிகச் சிறிய அளவிலான ஆண்ட்ராய்டு கைபேசிகள் மட்டுமே பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டின் செயலிகளுக்கான ஸ்டோரான கூகுள் ப்ளேயில் செயலிகள் எத்தனை முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளன என்ற புள்ளிவிவரங்களை பிபிசி ஆப்பிள் நிறுவனத்திடம் கேட்டது. அதை ஆப்பிள் தெரிவிக்கவில்லை. ஆனால், கூகுள் ப்ளே இந்த எண்ணிக்கையை சுமார் ஒரு லட்சம் பதிவிக்கங்கள் என்று வைத்துள்ளது. ஆனால், உலகம் முழுக்கச் சுமார் 3 பில்லியன் ஆன்ட்ராய்டு சாதனங்கள் உள்ளன.

தேவையற்ற ஏர்டேக் கண்டறியப்பட்ட பிறகு பீப் ஒலி ஒலிக்கும் என்ற மற்றொரு பாதுகாப்பு வசதி குறித்து ஐஃபோன் இல்லாதவர்களுக்கு தெரிவிக்கப்படும் என்று ஆப்பிள் கூறுகிறது. ஆனால், இதிலும் சிக்கல்கள் உள்ளன.

"ஏர்டேக் 60 டெசிபெல் பீப் ஒலியை வெளியிடுகிறது. மேலும் அதை முடக்குவது மிகவும் எளிதானது," என்கிறார் ஏவா கால்பெரின். அதுமட்டுமின்றி, "என்னால் அதை கைக்குள் வைத்து மூடுவதன் மூலமே செய்துவிடமுடியும். இரண்டு சோஃபா மெத்தைகளுக்கு இடையில் வைத்து அதை நான் அழுத்திவிட முடியும். கார் பம்பருக்கு கீழே அதை வைத்துவிட்டால், அந்த ஒலியைக் கேட்கமுடியாது" என்றும் கூறுகிறார்.

மேலும் இந்த ஒலி எட்டு மணிநேரத்திற்குப் பிறகுதான் ஒலிக்கத் தொடங்கும். அதற்குள் அது மிகவும் தாமதமானது என்று விமர்சகர்கள் வாதிடுகின்றனர்.

ப்ளூமிங்டேல் இல்லினாயில், காவல்துறையின் ஒரு படை உள்ளூர்வாசிகளை ஏர்டேக்குகள் பற்றி எச்சரித்துள்ளது. "எங்கள் சமூகத்திலுள்ள மக்களுக்கு இதுவொரு பிரச்னைக்குரிய விஷயம் என்று அறிவிப்பது முக்கியம் என்று நாங்கள் நினைத்தோம்," என்கிறார் ப்ளூமிங்டேல் காவல்துறையின் பொது பாதுகாப்பு இயக்குநர் ஃப்ராங்க் ஜியாமரேஸ்.

"தொழில்நுட்பம் சிறந்தது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக சிலர் அதை தவறாகப் பயன்படுத்தியுள்ளார்கள்."

ஆப்பிள் நியாயாற்ற முறையில் குறிவைக்கப்படுகிறது என்றும் ஒரு வாதம் உள்ளது. இணையத்தில் கண்காணிப்பு சாதனங்களை வாங்குவது எளிது.

 

நமக்கே தெரியாமல் நம்மைக் கண்காணிக்கும் ஏர்டேக் சாதனம்

ஆப்பிளின் முக்கிய போட்டியாளரான டைலிடம் பிபிசி, அதன் சாதனங்கள் மூலம் பொதுமக்கள் கண்காணிக்கப்படுவதைப் பாதுகாக்க என்ன செய்கிறார்கள் எனக் கேட்டது. தங்களுக்குத் தெரியாத சாதனத்தை அடையாளம் காட்டிக் கொடுக்கக்கூடிய ஒரு "தீர்வை உருவாக்கி வருவதாக" டைல் பதிலளித்தது ஆனால், அதற்கான தீர்வு இன்னும் வெளியிடப்படவில்லை.

பதிவு செய்யப்பட்ட ஐஃபோன் மூலம் ஏர்டேக்குகள் இருப்பது மிகவும் நல்லது என்பது எதிர் வாதம். துல்லியமான மற்றும் நீண்ட தூர கண்காணிப்பை உருவாக்க 'ஃபைன் மை' நெட்வொர்க் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட ஒரு பில்லியன் ஆப்பிள் சாதனங்களையும் அவற்றின் ப்ளூடூத் இணைப்பையும் பயன்படுத்துகிறது.

"நீங்கள் பின்தொடர்வதற்கு முன், ஆப்பிள் இந்த சாதனங்களுக்கு அனுமதி கேட்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்," என்கிறார் ஆன்னா மஹானே.

"ஃபைண்ட் மை ஃப்ரெண்ட்ஸ்' மூலம், என் கணவருக்கு என்னை பின்தொடர அனுமதி தேவைப்பட்டால், நான் அதை அவருக்குக் கொடுக்கவேண்டும். ஓர் அந்நியன் என்னைப் பின்தொடர்வது மற்றும் அதற்கு நான் ஒப்புதல் அளிக்கத் தேவையில்லை என்பதை என்னால் நியாயப்படுத்த முடியாது."

ஆம்பர் நார்ஸ்வொர்த்தி, ஆப்பிள் எவ்வாறு மக்களை சிறப்பாக எச்சரிப்பது என்பதைக் கண்டுபிடிக்கும் வரை ஏர்டேக்குகள் விற்கப்படக்கூடாது என்கிறார். "சில பாதுகாப்பு எல்லைகளை உருவாக்கும் வரை அவர்கள் அவற்றை விற்பதை நிறுத்த வேண்டும்."

"ஐஃபோன்களில் ஏற்கெனவே உள்ளதைப் போல, பின்னணியில் தானாகவே கண்டறியும் வகையிலான வசதியை ஆண்ட்ராய்டில் வழங்க, கூகுள் உடன் அவர்கள் பணியாற்ற வேண்டும் என்று நான் விரும்புகிறேன்," என்கிறார் ஏவா கால்பெரின்.

காணொளிக் குறிப்பு,

உலகின் பல நாடுகளில் உளவு பார்க்கும் செயலியை விற்பனை செய்திருக்கும் நிறுவனம்

இந்த விமர்சனங்களை ஆப்பிள் நிறுவனத்திடம் பிபிசி முன்வைத்தபோது, "வாடிக்கையாளர் பாதுகாப்பை நாங்கள் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம். ஏர்டேக்கின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பில் உறுதியாக இருக்கிறோம். பயனர்கள் எப்போதாவது தங்கள் பாதுகாப்பு ஆபத்தில் இருப்பதாக உணர்ந்தால், உள்ளூர் சட்ட அமலாக்கப் பிரிவைத் தொடர்புகொள்ள ஊக்குவிக்கப்படுகிறார்கள். தங்களுக்குத் தெரியாமல் இருக்கும் ஏர்டேக் பற்றி கிடைக்கக்கூடிய எந்தத் தகவலையும் ஆப்பிள் வழங்கும்," என்று கூறியது.

https://www.bbc.com/tamil/global-60084123

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆப்பிள் ஏர்டேக்: வேவு பார்க்க பயன்படுத்தப்படும் சின்னஞ்சிறு கருவி குறித்து அச்சம்

  • ஜேம்ஸ் க்ளேட்டன் & ஜேஸ்மின் டையர்
  • பிபிசி நியூஸ்
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 

Apple Airtag

பட மூலாதாரம்,APPLE

ஆப்பிள் நிறுவனத்தின் 'ஏர்டேக்' (AirTag) சாதனங்கள் வேவு பார்க்க பயன்படுத்தப்படுவது குறித்த அச்சங்கள் நிலவி வரும் நிலையில், புதுப்பிக்கப்பட்ட ஏர் டேக் பாதுகாப்பு வழிகாட்டியை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அந்நிறுவனம் திங்கள்கிழமையன்று தனது பயனர்களின் இணையப் பாதுகாப்பு குறித்த தளத்தை சத்தமில்லாமல் வெளியிட்டுள்ளது. மக்கள் தங்களையும் தங்களின் தரவுகளையும் எவ்வாறு பாதுகாப்பாக வைத்திருக்கலாம் என்பதற்கான ஆலோசனைகளை இந்த தனிப்பட்ட பயனர் பாதுகாப்பு வழிகாட்டி வழங்குகிறது.

ஆப்பிளின் நுட்பமான 'ஃபைண்ட் மை' (Find My) என்ற நெட்வொர்க்கைப் பயன்படுத்தி தொலைந்த பொருட்களைக் கண்டறிய ஏர் டேக்குகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

சிறிய பொத்தான் வடிவமாக உள்ள இந்த ஏர்டேக், சாவி அல்லது பணப்பை போன்ற பொருட்களில் பொருத்திக்கொள்ளலாம்.

இருப்பினும், இந்த ஏர்டேக்குகள் மக்களைக் கண்காணிக்க தவறாகப் பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்களை பிபிசியும் பிற ஊடகங்களும் கண்டறிந்துள்ளன.

 

"தொழில்நுட்பம் மூலம் நடக்கும் அல்லது நடக்க வாய்ப்புள்ள துன்புறுத்தல்கள், பின்தொடர்தல்கள் அல்லது வன்முறைகளை கருத்தில் கொண்டு, ஆப்பிளின் இந்த புதிய தனிப்பட்ட பயனர் பாதுகாப்பு வழிகாட்டி வழிமுறைகளை வழங்குகிறது.

பயனர்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்துக்கொள்ளலாம் என்பதற்கான "படிப்படியாக" வழிமுறைகளை இந்த வழிகாட்டி காட்டுகிறது.

பயனர்கள், தங்களுக்கு தொடர்பில்லாத ஏர்டேக் மூலம், ஐ-போன் திரையில் தோன்றும் அறிவிப்பாக எச்சரிக்கை வரும் போது, என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த ஏர்டேக் இணையப் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Apple Airtag

பட மூலாதாரம்,GETTY IMAGES

உங்களுக்கு சம்பந்தமில்லாத ஏர்டேக்கை கேட்டாலோ அல்லது கண்டாலோ என்ன செய்ய வேண்டும் என்பதையும் இது எடுத்துக்காட்டுகிறது. ஆண்ட்ராய்டு பயனர்கள் ஒரு செயலியை எவ்வாறு பதிவிறக்கலாம் என்பதை இந்த வழிகாட்டி காட்டுகிறது. இந்த செயலி, பயனர்களுக்கு சம்பந்தமில்லாத ஏர்டேக்குகள் குறித்து எச்சரிக்கை அளிக்க உதவும்.

ஏர்டேக்குகள் அவர்களுக்கு தெரியாமல் அவர்களை கண்காணிப்பது குறித்து பல பெண்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து கடந்த வாரம் பிபிசி செய்தி வெளியிட்டது.

தனது பையின் உட்புறத்தில் ஏர் டேக் ஒன்று ஒட்டப்பட்டிருப்பதைக் கண்டதாக ஒரு பெண் கூறினார்.

எலக்ட்ரானிக் ஃபிரான்டியர் ஃபவுண்டேஷனின் சைபர்-செக்யூரிட்டியின் இயக்குநர் இவா கால்பெரின் பிபிசியிடம் இவ்வாறு கூறினார்: "திருடப்பட்ட பொருட்களைக் கண்காணிக்கப் பயன்படும் ஒரு பொருளை நீங்கள் உருவாக்கினால், பின்தொடர்வதற்கான சரியான கருவியையும் நீங்கள் உருவாக்கியுள்ளீர்கள்."

 

Airtag

பட மூலாதாரம்,GETTY IMAGES

மக்களைப் பாதுகாக்க பல பாதுகாப்புகளை தங்கள் நிறுவனம் உருவாக்கியது என்று ஆப்பிள் நிறுவனம் பிபிசியிடம் கூறுகிறது. ஆனால், தற்போது மேலும் ஏர்டேக்குகள் பாதுகாப்பதற்கான வழிகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறது என்றும் அந்நிறுவனம் தெரிவிக்கிறது.

ஏர்டேக்குகள் போன்ற கண்காணிப்பு சாதனங்களில் டைலும் (Tile) ஒன்று. இதுவும் மனிதர்களை கண்காணிப்பதற்கு எதிரான பாதுகாப்புகளுடன் வரவில்லை. ஆனால், தாங்கள் ஒரு புதுப்பிப்பில் பணியாற்றி வருவதாக டைல் நிறுவனம் பிபிசியிடம் தெரிவிக்கிறது.

2021ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம், ஆப்பிள் ஏர்டேக்கை அறிமுகப்படுத்தியபோது, அவை "பொருட்களைக் கண்காணிக்கவே" வடிவமைக்கப்பட்டுள்ளன என்றும் மக்களை கண்காணிக்கப்பதற்காக உருவாக்கப்படவில்லை எனவும் அந்நிறுவனம் தெளிவுப்படுத்தியது.

தனியுரிமை மற்றும் பாதுகாப்பை பலப்படுத்த ஆப்பிள் தயாரிப்புகளை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதையும் பயனர்களுக்குக் இந்த வழிகாட்டி காட்டுகிறது.

  • ஒருவருடன் முன்பு பகிரப்பட்ட இருப்பிடத் தரவை பயன்படுத்த அளிக்கும் அனுமதியை எவ்வாறு அகற்றுவது
  • நீங்கள் பாதுகாப்பாக வீட்டிற்கு வந்துவிட்டீர்கள் என்பதை தானாக ஒரு நண்பருக்கு தெரிவிப்பது எப்படி
  • அவசரகால உதவி கோரும் செய்திகளை எஸ்.ஒ.எஸ் (SOS) எப்படி அனுப்புவது

ஆப்பிள் செய்தித் தொடர்பாளர் பிபிசியிடம் இவ்வாறு கூறுகிறார்: "வாடிக்கையாளர் பாதுகாப்பை நாங்கள் மிகவும் முக்கியமாக எடுத்துக்கொள்கிறோம். மேலும் ஏர்டேக்கின் தனியுரிமையையும் பாதுகாப்பையும் நாங்கள் கவனத்தில் கொள்கிறோம்".

https://www.bbc.com/tamil/science-60176855

  • கருத்துக்கள உறவுகள்

தொழில் நுட்பத்தின் ஒவ்வொரு செயலும் சொல்லும்படியாக இல்லை, நாமே எம் அனுமதியின்றி எம்மை கண்காணிக்க ஒரு கருவியை கையில கொண்டு திரிகிறோம்......!   😢

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.