Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்து மகளிர் கல்லூரியும் இஸ்லாமிய ஆசிரியையும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்து மகளிர் கல்லூரியும் இஸ்லாமிய ஆசிரியையும்
 

 

AVvXsEhP2V2KlT9Jn6jQKts4z8hrwiJ0PIToT6OoC1RhDI-bYUfDaZhYyS6eCiUyaq96038AHRYGfcPhhMmmtF73pfgzOp9Z6PBqG5OlYgXe0VjuONTV8Y-sdDZj7k-q7ljvQ6zPoSLnPX27fwpmBS_bE-BWJAkZKcZ4EFElDMxEsLpUqm9BjDCj4kRBSBRPbQ=w486-h375

 

திருகோணமலை சிறி சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் 2018 இல் அபாயா அணிந்து பாடசாலைக்குச் சென்றமையினால் பாடசாலை நிர்வாகத்தினால் திருப்பி அனுப்பப்பட்ட பாத்திமா பாமிதா ரமீஸ் என்ற இஸ்லாமிய ஆசிரியை நான்கு வருட இழுபறியின் பின்னர் நீதிமன்ற உத்தரவின்படி ஏற்படுத்தப்பட்ட உடன்பாட்டின் அடிப்படையில் இம்மாதம் இரண்டாம் திகதி திரும்பவும் அதே பாடசாலையில் கடமை ஏற்க சென்றார். அப்படி அவர் சென்ற போது அங்கு நடைபெற்ற சம்பவங்களால் மீண்டும் தமிழ் – இஸ்லாமிய சமூகங்களுக்கிடையில் கருத்து மோதலையும் உரசலையும் ஏற்படுத்துவதாக மாறியுள்ளது அல்லது மாற்றப்பட்டுள்ளது.

 

அதிபரை ஆசிரியர் தாக்கியதாகவும், ஆசிரியரை கூட்டத்தில் இருந்தவர்கள் தாக்கியதாகவும் இருவேறு கதைகள் பரவி, மறுபுறத்தில் பெற்றோரும் மாணவர்களும் போராட்டத்தில் குதித்து, இது சமூக வலைத்தளங்களில் பலருக்கும் தீனி போடும் விடயமாகிவிட்டது. அது போதாதென்று தமிழ் தேசிய ஊடகங்களும் சமூகப் பொறுப்பற்ற வகையில் செய்தி வெளியிட்டதாக இஸ்லாமிய சமூகம் குற்றம் சுமத்தியுள்ளது.  திருகோணமலையின் சில பகுதிகளில் வாழும் சக இஸ்லாமிய ஆசிரியர்கள் பாத்திமா ரமீஸ்க்கு ஆதரவாக அவர்களும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

 

பாடசாலை வரலாறு 

99 வருடங்களுக்கு முன்னர் 1923 இல் 23 மாணவர்களுடன் தங்கம்மா சண்முகம்பிள்ளை என்பவராலும் அவர் கணவராலும் ஆரம்பிக்கப்பட்ட இந்தப்  பாடசாலை அதன் வளர்ச்சிக் காலத்தில் 1951 இல் ஆங்கிலம், தமிழ் என இரண்டு பிரிவுகளைக் கொண்டிருந்தது. இந்தப் பாடசாலை 1996 இல் தேசிய பாடசாலை அந்தஸ்துப் பெற்றது. 2004 இல் ஆங்கில மொழிக் கற்பித்தலும் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் இந்தப் பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்கள் எவரும் கடமை புரியாத போதும் கணிசமான முஸ்லிம் மாணவிகள் இங்கு கல்வி கற்றார்கள். 

பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்கள் நியமனம் 

இந்தப் பாடசாலையில் 2012 இலிருந்து 2018 வரையான காலப்பகுதியில் ஐந்து முஸ்லிம் பெண் ஆசிரியர்கள், மூன்று முஸ்லிம் ஆண் ஆசிரியர்கள் இந்தப் பாடசாலையில் இணைந்து கொண்டார்கள். இக்காலப் பகுதியில் சுலோச்சனா ஜெயபாலன் பாடசாலை அதிபராக இருந்தார். 2013 இல் இணைந்து கொண்ட பாத்திமா அப்போது அபாயா அணிந்து வந்தாலும் அதிபரின் வற்புறுத்தலால் அதன்பின்னர் சேலை அணிந்தே பாடசாலைக்கு வந்ததாகச் சொல்லப்படுகிறது. இருப்பினும் அவர் தொடர்ச்சியாக அதிபரிடம் அபாயா அணிய அனுமதி கேட்டு வந்திருக்கிறார். ஆனால் கடைசிவரை நிர்வாகக் குழு அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. இது மனித உரிமைகள் ஆணைய விசாரணையின் போதும் அவரால் சாட்சியமாக சொல்லப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.  

 

சட்ட நடவடிக்கை 

தொடர்ந்து பாடசாலை நிர்வாகம் தனது கோரிக்கையை நிராகரித்து அபாயா அணியக் கூடாதென பாடசாலை நிர்வாகம் கொடுத்த நெருக்கடி இருந்த நிலையில் பாத்திமா ரமீஸ் 2018 ஏப்ரல் மாதத்தில் திரும்பவும் அபாயா அணிந்து சென்றபோது அவரும் மேலும் மூன்று ஆசிரியர்களும் திருப்பி அனுப்பப்பட்டதாக சொல்லப்படுகிறது. 

 

இதையடுத்து 2018 மே மாதம் பாத்திமா ரமீஸ் உட்பட நான்கு முஸ்லிம் ஆசிரியர்கள் மனித உரிமைகள் ஆணையத்திடம் முறைப்பாடு செய்தனர். பின்னர் வலயக் கல்வி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பாடசாலை நிர்வாகம் தமது நடவடிக்கை இஸ்லாமியர்களுக்கு எதிரானது இல்லை என்றும் தமது பாடசாலையின் பல தசாப்த கால இந்து பாரம்பரியத்தை காக்கவே அனைத்து பெண் ஆசிரியர்களையும் சேலை கட்டப் பணிப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள்.

 தற்காலிக இடமாற்றம்

அதன் பின்னர் இந்த விடயத்தில் கல்வி அமைச்சு ஒரு முடிவு எடுக்கும்வரை நான்கு ஆசிரியைகளையும் தற்காலிகமாக அதே வருடம் ஏப்ரல் மாதம் முதல் ஜூலை வரையான காலப்பகுதியில் சாஹிரா கல்லூரிக்கு இடமாற்ற சிபார்சு செய்யப்பட்டது. பின்னர் அது அக்டோபர் மாதம் வரை நீடிக்கப்பட்டது. அக்டோபர் மாத முடிவில் அவர்கள் நால்வரும் ஸ்ரீ ஷண்முகா இந்து பெண்கள் கல்லூரியில் பணிபுரிய அனுமதிக்க வேண்டும் என்று சிபார்சும் செய்யப்பட்டது. இருப்பினும் மாகாணப் பணிப்பாளரால் தற்காலிக இடமாற்றக் காலம் டிசம்பர் மாதம் வரை நீடிக்கப்பட்டது. 

 

இது தொடர்பில் நடைபெற்ற விசாரணையின் பின்னர், மனித உரிமைகள் ஆணையம் முஸ்லிம் ஆசிரியைகள் அவர்களின் கலாச்சார உடைகளில் பாடசாலைக்கு வரலாம் என்று சிபார்சு செய்தது. அவர்கள் கடமைக்குத் திரும்ப பாடசாலை நிர்வாகம் அனுமதிக்க வேண்டும் என்றும் கூறியது. எனினும் பாடசாலை நிர்வாகம் எந்த சிபார்சினையும் நடைமுறைப்படுத்த முன்வரவில்லை.

 சமரசமும் சச்சரவும்

இந்தக் காலப்பகுதியில் வழக்குத் தாக்கல் செய்த மூன்று ஆசிரியைகள் இடமாற்றம் பெற்றுச் சென்றுவிட பாத்திமா மனித உரிமைகள் ஆணையத்தின் சிபார்சுகளுடன் 2021 இல் நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டினார். இந்த வழக்குத் தொடர்பில் நவம்பர் 2021இல் இருதரப்புக்கும் இடையில் சமரசம் செய்யப்பட்டு  பாத்திமா இந்த வருடம் பெப்ரவரி இரண்டாம் திகதி பாடசாலையில் கடமை ஏற்கலாம் என்ற உடன்பாடு எட்டப்பட்டது. 

 

இந்த சூழ்நிலையில்தான் இம்மாதம் இரண்டாம் திகதி, பாடசாலையில் இந்த விரும்பத்தகாத விடயம் நடந்தேறியுள்ளது. தான் ஆசிரியரால் கீழே தள்ளி விழுத்தப்பட்டதாக அதிபரும் தனது கழுத்தை கூட்டத்தில் இருந்த  சிலர் நெரிக்க முயன்றதாக ஆசிரியரும் பொலிசாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர். அதேநேரம் குறித்த ஆசிரியர் அதிபரின் அலுவக அறையில் வீடியோ எடுத்ததைக் குற்றமாகச் சொல்லப்படுகிறது. ஆசிரியை தரப்பில் இருந்து,  அவர் கடமை ஏற்கச் சென்றபோது அங்கு பாடசாலை சாராத சிலர் தனக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக நடந்து கொண்டதாகச் சொல்லியிருக்கிறார். 

 

இப்போது இந்தப் புதிய விவகாரம் விசாரணையில் உள்ளது. அதன் போக்கு என்னவாகும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டியுள்ளது. அதேநேரம் இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பாடசாலைச் சூழலிலும் பொதுவெளியிலும் நடைபெற்ற விரும்பத்தகாத சம்பவங்கள் இலகுவாக தீர்க்கப்படவேண்டிய ஒரு விடயத்தை மெல்லும் சிக்கலாக்கி உள்ளது என்பது மட்டும் தெளிவாகிறது.

 

அதேநேரம் இந்த விடயம் தொடர்பாக பல தகவல்கள் பத்திரிகைகள், சமூக ஊடகங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகின்றன. ஆனால் அவையெல்லாமே உண்மையானவையல்ல. அதனால் அவர்கள் பேசும் விடயங்கள் தொடர்பாக சில தகவல்களைப் பகிர விரும்புகிறோம்.

 

அரச உத்தியோகத்தர் ஆடை விதிமுறை:

இன்னும் சிலர் ஆசிரியைகள் சேலை கட்டி வரவேண்டும் என்பதுதானே சட்டமென்று இலங்கையில் நடைமுறையில் உள்ள சட்டங்கள் பற்றிய எந்தப் புரிதலும் இல்லாதவர்களாக சமூக ஊடகங்களில் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். ஆனால் இலங்கையில் காலத்துக்குக் காலம் ஆடை விதிமுறைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டு வந்துள்ளன.

 

2014 இல் இலங்கை உச்சநீதி மன்றம் முஸ்லிம்கள் பொது இடங்களில் தமது கலாச்சார உடைகளை அணியலாம் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன் பின்னர், இலங்கை பொது நிர்வாக அலுவல்கள் அமைச்சு April 29, 2019 அன்று வெளியிட்ட 2021/1  இலக்க சுற்று நிரூபம் மற்றும் May 13, 2019 அன்று வெளியிட்ட 2123/4  இலக்க சுற்று நிரூபத்தின்படி சீருடை வழங்கப்பட்ட ஊழியர்கள் சீருடைகளையும் ஏனைய ஆண்கள் Shirt, trousers அல்லது தேசிய உடைகளையும், பெண்கள் சேலை அல்லது ஒசரிய எனப்படும் சிங்கள பாரம்பரிய முறையிலான சேலை அல்லது அவர்களின் கலாச்சார உடைகளையும் அணியலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் அந்த ஆடை அந்த நபரின் ஆளடையாளத்தை மறைப்பதாக இருக்கக்கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

 

AVvXsEje9YKxMZZPcdAJxtY-uDtkTIoC_Ep_yI77l3gs3tkErTePISVGRBlIGW7Lj5w38T4m6j-WbFxSqoNmu1UY7QnzJSXVS58p40fG55gOWOx5uI60NAQCEsE5x-dnwBNVmUCYOIA9ysx3k_IsOxtY9fXNMUYukpC_XzygK9TyoUWoM_wkdC6m9Apg0tlSMw=w367-h283

அபாயா என்னும் ஆடை

பொதுவெளியில் கருத்துப் பகிரும் பலரும் அபாயா என்பது முழுமையாக முகத்தை மூடும் ஆடைஎன்று தவறான புரிதலுடன் வன்மமான கருத்துக்களை வெளியிட்டு முஸ்லிம் பெண்கள் எப்படி ஆடை அணிய வேண்டும் என்று வகுப்பெடுக்கிறார்கள். உண்மையில் அபாயா முகத்தையும் மூடும் ஆடையல்ல. தலையில் இருந்து கால்வரை மூடும் கவுண் போன்ற ஆடையாகும். இதில் முகம் மூடப்படுவதில்லை. முகத்தை முழுமையாக மூடும் ஆடைக்கு புர்கா என்று சொல்வார்கள். (படங்களைப் பார்க்கவும்). ஆனால் சரியான புரிதல் இல்லாமல் சில தமிழ்த் தேசிய ஊடகங்கள் கூட இதனைத் தவறாகச் சித்தரித்து எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் வகையில் செயற்பட்டுள்ளது கண்டிக்கத் தக்கது.

 

இலங்கையில் இஸ்லாமியப் பெண்களின் கலாச்சார உடை/உடைகள்

சமூக வலைத் தளங்களில், “முஸ்லிம் பெண்கள் முன்பெல்லாம் சேலை அணிந்து முக்காடுதானே போட்டார்கள். அபாயா எப்போது அவர்களின் தேசிய உடையானது?” என்று சிலர் புத்திசாலித்தனமாக கேள்விகளை முன்வைக்கிறார்கள். அவர்கள் சொல்வதிலும் உண்மையில்லாமல் இல்லை. வடக்கு கிழக்கில் நான்கு அல்லது ஐந்து தசாப்தங்களுக்கு முன்னர் வரை இஸ்லாமியப் பெண்கள் பெரும்பாலும் சேலை அணிந்து முக்காடு போடுவதையே வழக்கமாக வைத்திருந்தனர். 

 

அதேநேரம் இலங்கையின் மேற்குப் பகுதியில் கொழும்பை அண்டிய பகுதிகளில் வாழ்ந்த சில இஸ்லாமிய சமூகங்களில் மிக நீண்ட காலமாகவே முகம் தவிர்த்து உடலின் ஏனைய பகுதிகளை முழுமையாக மறைக்கும் வகையில் ஆடை அணியும் வழக்கம் இருந்து வந்துள்ளது. 

 

வடக்குக் கிழக்கில் காலபோக்கில் சமூகத்தில் கடந்த மூன்று/ நான்கு தசாப்தங்களில் ஏற்பட்ட சில மாற்றங்களால் சேலைக்குப் பதிலாக உடலை முழுமையாக மூடும் ஆடை வகைகள் அல்லது சேலைக்கு மேலாக கைகளையும், முகம் தவிர்த்து தலையையும் முழுதாக மூடும் வகையிலான ஆடைகளை அணியும் பழக்கம் அதிகரித்தது. இன்று இலங்கையின் வெவ்வேறு பகுதிகளில் அபாயா, ஹிஜாப், முகத்தில் பாதியையும் மூடும் நிகாப், முழுமையாக மூடும் புர்கா என்பவற்றை அணியும் பழக்கம் அதிகரித்துள்ளது. அதேநேரம் முக்காடு போடும் பழக்கமும் சில பகுதிகளில் இன்றும் இருக்கிறது. அதேநேரம் கடந்த வருடம் இலங்கை அரசு, எவரும் பொது இடங்களில் முகத்தையும் மூடும்  உடையான புர்கா அணிவதைத் தடை செய்தது.

 

இவ்வாறான மாற்றங்களுக்கு மதம் மட்டுமன்றி தனிப்பட்ட விருப்பு, குடும்பத்தில் உள்ளவரின் விருப்பம், உடைக்குத் தேவையான செலவு, பிற ஆண்கள் தமது உடல்பகுதிகளைப் பார்ப்பதை விரும்பாமை எனப் பல காரணிகள் செல்வாக்குச் செலுத்துவதாகச் சொல்லப்படுகிறது. அதேநேரம் சில முஸ்லிம் கிராமங்களில் மத அமைப்புகளின் அழுத்தங்கள் இருப்பதையும் மறுப்பதற்கில்லை. (அதை ஆராய்வது இந்தப் பதிவின் நோக்கமில்லை என்பதால் இந்த விடயத்தை மேலும் ஆராய வேண்டியதில்லை). 

 

ஆனாலும் எமது பார்வையில் ஒரு சமூகத்தின் கலாச்சார ஆடை எதுவென்பதை அந்த சமூகமே தீர்மானிக்க வேண்டும். (குறிப்பாகச் சொன்னால் அந்த பெண்ணே தீர்மானிக்க வேண்டும்). இன்னொரு சமூகம் அதில் மூக்கை நுழைத்து அவர்கள் என்ன உடை அணிய வேண்டும் என்று வகுப்பெடுப்பது ஆரோக்கியமான விடயமல்ல என்பதுடன் தனிமனிதச் சுதந்திரத்தில் தலையிடும் வேலையும் கூட.

 

உடலை முழுமையாக மூடும் ஏனைய சமூகங்கள்:

உண்மையில் முஸ்லிம்கள் மட்டும்தான் முகத்தை, உடலை முழுமையாக மூடுகிறார்களா என்றால் இல்லை என்பதுதான் பதில். கிறிஸ்தவ பெண் பாதிரிமார் முகம் தவிர்த்து உடலை முழுமையாக மூடுகிறார்கள், இந்தியாவில் வடக்கில் சில பகுதிகளில் இந்துப் பெண்களும் வேறு சமூகப் பெண்களும் முகத்தையும் மூடும் வகையில் ஆடை அணிகிறார்கள். உதாரணமாக, இந்தியாவில் ராஜஸ்தானில் இன்னமும் பல இந்து, முஸ்லிம் மற்றும் ஏனைய சமூகத்துப் பெண்கள் தமது முகங்களை முழுமையாக மூடியபடிதான் வீட்டுக்கு வெளியே வருகிறார்கள். (படத்தைப் பார்க்கவும்) இரண்டு வருடங்களுக்கு முன்னர் ராஜஸ்தான் மாநில அரசு இதனை மாற்ற பிரச்சாரத்தையும் மேற்கொண்டது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.  

  

அரசியல் மயமாக்கல் 

கடந்த காலங்களில் வடக்குக் கிழக்கில் இஸ்லாமியத் அல்லாத தமிழர்கள், இஸ்லாமியத் தமிழர்கள் ஆகிய இரு பெரும் சமூகங்களுக்கிடையில் பெரும் கசப்புணர்வையும் நம்பிக்கையீனத்தையும் ஏற்படுத்தும் பல சம்பவங்கள் நடந்தேறின என்பது உண்மைதான். அதிலும் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்களின் மனக் காயங்கள் மாறியிருக்காது என்பதும் உண்மை. ஆனால் கடந்த சில வருடங்களில் இரண்டு சமூகங்களும் நடந்தவற்றை மறந்து ஒற்றுமையாக இருப்பதற்கு சில முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த சூழலில் சில சுயநலவாதிகள் இந்த விடயத்திலும் அரசியல் செய்கிறார்கள்.

 

உதாரணமாக, அதாவுல்லாவுக்கு நெருக்கமானவராக காட்டிக்கொள்ளும் ஒருவர் இந்த விடயத்தை வைத்து தமிழர்கள் மீது வெறுப்பை உமிழும் வகையிலும் இஸ்லாமியத் தமிழர்களைத் தூண்டிவிடும் வகையும் ஒரு நீண்ட பதிவை எழுதி பல்வேறு Facebook பக்கங்களில் பகிந்துள்ளார். அதே போல யாரோ ஒருவர், சாணக்கியன் குறித்த பாடசாலைக்கு ஆதரவாகவும் இஸ்லாமிய ஆசிரியைக்கு எதிராகவும் பேசியதாக ஒரு மீம் உருவாக்கி பதிவிட்டிருந்ததைப் பார்க்க முடிந்தது. 

 

அதேநேரம், சாணக்கியன் இந்தச் சம்பவம் நிகழ்ந்த பின்னர் அவரது பெயரில்  பொய்யான செய்திகள் பரவியநிலையில் மூன்று நாட்கள் கழித்து ஊடகங்கள் முன்னிலையில், அதனைத் தெளிவுபடுத்தியதுடன் இந்த விடயத்தில் முறையான விசாரணை செய்யவேண்டும் என்று கூறியுள்ளார். அதேநேரம், அவரை கடந்த காலங்களில் பாராட்டிய சிலரே, குறித்த பெண் அபாயா அணிந்து பாடசாலைக்கு வந்தது குற்றமில்லை என்று ஏன் சொல்லவில்லை என்று குறைபட்டுக் கொண்டதையும் அவதானிக்க முடிந்தது. தான் சார்ந்த சமூகத்தின் பக்கம் சாய்ந்து விட்டதாகவும் குற்றம் சாட்டுகிறார்கள்.

 

மறுபுறத்தில், ரவூப் ஹக்கீம் குறித்த இஸ்லாமிய ஆசிரியையின் பிடிவாத குணமே இந்த விடயம் பூதாகரமாக மாறியமைக்குக் காரணம் என்றும் அவர் சில விட்டுக்கொடுப்புகளைச் செய்திருக்கலாம் என்றும் கூறியதாகவும்,  மேலும் அவர் மூர்க்கமாக பாடசாலை அதிபரைத் தாக்குமளவிற்கு சென்றிருப்பது அவர் ஆசிரியத் தொழிலுக்குத் தகுதியானவரா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்றும் கூறினார் என்று ஒரு செய்தித் துணுக்கும் பகிரப்பட்டு வருகிறது. 

 

இரா. சம்பந்தன் அவர்களும் தன் பங்கிற்கு, இந்த விவகாரம் இனப்பிரச்சனைக்கு வழிவகுக்கக்கூடாது என்று சொல்லியிருக்கிறார். அத்துடன், அந்த ஆசிரியர் அதிபரைத் தாக்கியிருந்தால் அது தவறான விடயம். ஆனாலும் இதனை சமாதானமாகத் தீர்க்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.     

 

அதேநேரம் சமூக வலைத் தளங்களில் சில இஸ்லாமியர் அல்லாத தமிழர்கள்,இஸ்லாமியர் மீது வெறுப்பை உமிழும் வகையில் தொடர்ந்தும் கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள். மறுதலையாக சில இஸ்லாமியத் தமிழர்கள் மற்ற சமூகத்தின் மீது வெறுப்பைக் காட்டும் வகையில் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள். ஆனால் இவர்களில் பலர் Fake IDக்களாகவும் இருக்க அதிக சந்தர்ப்பம் இருக்கிறது.  

 

மொத்தத்தில், ஒருபுறம் நாட்டில் மக்கள் முகம் கொடுக்கும் உண்மையான பிரச்சனைகளில் இருந்து மக்களைத் திசை திருப்ப இந்த பிரச்சனை உதவியுள்ளது. அதே போல இஸ்லாமியத் தமிழர்களையும் ஏனைய தமிழ் சமூகத்தையும் பிளவுபடுத்தவும் இந்த விடயம் பயன்படுத்தப்படக்கூடிய சந்தர்ப்பமே அதிகரித்துள்ளது. மாகாண சபைத் தேர்தல் இந்த வருடம் நடாத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில் பல அரசியல் கட்சிகளுக்கும் வெறும் வாய்க்கு இந்த விடயம் அவலாக மாறியுள்ளது.

 

 இந்த விடயம் தொடர்பில் எமது அவதானிப்பும் கேள்விகளும்

 அந்த பெண் ஆசிரியரின் ஆடை விடயத்தில் மனித உரிமைகள் ஆணையம் தெளிவாக அறிவுறுத்தல்களை வழங்கிய நிலையில், இந்த விடயத்தில் பாடசாலை நிர்வாகத்தின் நடவடிக்கை தவறு என்று தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில் திரும்பவும் பெற்றோரும் சமூகமும் அவர் அணியும் ஆடைக்கு எதிராக போராட்டம் செய்வது எந்த வகையில் நியாயம்? அது சட்டத்தை மீறும் செயல் இல்லையா?

 

பலத்த எதிர்ப்புகளுக்கு பின்னர் சமரசம் ஏற்பட்ட நிலையில் பாடசாலைக்குச் சென்ற ஆசிரியர், அதிபரின் அலுவலகத்தில் ஒரு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டபோது அதனை வீடியோ எடுக்க முயற்சித்ததற்குப் பதிலாக வேறு சுமூகமான வகையில் இதைக் கையாண்டிருக்க முடியாதா? அல்லது உடனடியாகப் பாடசாலையை விட்டு வெளியேறி, மனித உரிமைகள் அமைப்பு/ வலயக் கல்விப் பணிப்பாளர் உதவியுடன் இதனைக் கையாண்டு இருக்க முடியாதா?

 

பாடசாலைக்கு ஆதரவாக ஒரு பதிவை வெளியிட்ட சங்கரானந்தா என்பவர், இந்த ஆசிரியை அன்று பொறுப்பு ஏற்க வருகிறார் என்று தெரிந்து பெற்றோர்கள் பாடசாலைக்கு உள்ளேயும் வெளியேயும் குழுமியதாகச் சொல்லியிருக்கிறார். அது உண்மையெனில் அந்த ஆசிரியை மீண்டும் பொறுப்பேற்க வருவது எப்படி பெற்றோருக்குத் தெரிய வந்தது? அவர்களுக்கு யார் எதற்காக அறிவித்தார்கள்?

 

பெற்றோர் குழுமியதால் யோசித்து முடிவெடுக்க வேண்டி அதிபர் அந்த ஆசிரியரை அலுவகத்திற்கு வெளியே காத்திருக்கச் சொன்னதாகவும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார். ஏற்கனவே நீதிமன்ற வழிகாட்டலில் மூன்று மாதங்களுக்கு முன்னர் சமரசம் எட்டப்பட்ட ஒரு விடயத்தில் அதிபர் மேலும் யோசிக்க என்ன இருந்தது? 

 

இந்த ஆசிரியை வந்துள்ளதை அறிந்து மாணவிகள் அங்கு ஒன்றுகூடத் தொடங்க, ஆசிரியை அவர்களை படமெடுக்கத் தொடங்கியதாக அந்தப் பதிவு சொல்கிறது. அது உண்மையெனில் அந்த ஒரு பாரம்பரியம் மிக்க ஒழுக்கம் கட்டுப்பாடு சொல்லி வளர்க்கப்படும் மாணவிகள் வகுப்பு நேரத்தில் எதற்காக யாருடைய அனுமதியுடன் வகுப்பறையை விட்டு அலுவலகத்தை நோக்கி அணி திரண்டார்கள்? 

 

2018 இலும் சரி இப்போதும் சரி இந்த விவகாரத்தில் பாடசாலை நிர்வாகத்திற்கும் ஆசிரியைகளுக்கும் இடையில் ஏற்பட்ட இந்தப் பிரச்சனையில் எதற்காக கல்வி கற்கும் மாணவர்களை வீதியில் இறக்கிப் போராட வைத்தனர்? யார் இதனைப் பின்னால் இருந்து செய்தனர்? இவ்வாறு மாணவர்கள் மனதில் இன்னொரு சமூகத்திற்கு எதிரான மனநிலையை வளர்ப்பது சரியானதா?

 

இந்தப் பாடசாலை கடந்த 25 வருடங்களாகத் தேசியப் பாடசாலையாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில் எந்த வித சட்டரீதியான ஆதராமும் அற்ற நிலையில், பாடசாலையில் இன்னார்தான் கற்பிக்க முடியும், இதுதான் ஆசிரியர்களுக்கான சீருடை என்ற அடம் பிடிப்பது சரியானதுதானா?

 

 இதில் சுவாரசியமான விடயம் என்னவெனில், தற்போது இஸ்லாமியர்களுக்கு அவர்களின் பாரம்பரிய ஆடைகள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் இஸ்லாமியர் அல்லாத தமிழர் பலர் தங்கள் ஆடை வகைகளில் ஏற்பட்ட மாற்றங்களை வசதியாக மறந்து விட்டார்கள். உதாரணமாக நாற்பது வருடங்களுக்கு முன்னர் நாங்கள் மாணவர்களாகப் பாடசாலைக்குச் செல்லும்போது அங்கு கற்பித்த ஆண் ஆசிரியர்களில் அதிகமானோர் வேட்டி அணிந்தே வந்தார்கள். ஆனால் இப்போது பெரும்பாலான ஆண்கள் மேற்கத்தைய பாணியில்தான் ஆடை அணிகிறார்கள். அப்படியெனில் நாங்களும் எமது பாரம்பரிய உடைகளை அணியாது புதிதாக வசதியாக இருக்கிறது என்று மேலைத்தேய பாணியில்தானே உடைகளை அணிகிறோம்?

 

எமது பார்வையில், சகிப்புத் தன்மையுடன் அணுகியிருக்க வேண்டிய விடயத்தை இரண்டு தமிழ் பேசும் சமூகங்களில் உள்ள சிலர் சிக்கலாக்கி இருக்கிறார்கள் என்பது மட்டும் புரிகிறது. அதேநேரம், இந்த வருடம் மாகாணசபைத் தேர்தல் நடைபெறலாம் என்ற நிலையில் அரசியல்வாதிகள், குறிப்பாக தற்போது ஆட்சியில் உள்ள கட்சியும் அவர்களுக்கு ஆதரவான சிலர் உள்ளூர் அரசியல்வாதிகளும் நன்கு பயன்படுத்துவார்கள் என்பது மட்டும் தெளிவாகப் புரிகிறது.

 

எங்களில் சிலர் இலங்கையில் அண்மைக் காலமாக இஸ்லாமியர் மத்தியில் அடிப்படைவாதிகளின் செல்வாக்கு அதிகரித்து வருவதே இவ்வாறு  இஸ்லாமியப் பெண்கள் தேவையில்லாத பிரச்சனைகளை பெரிதாக்கக் காரணம் என்று சொல்வதையும் அவதானிக்க முடிகிறது. உண்மையில் இலங்கையில் கடந்த ஒரு தசாப்த காலத்தில் இந்துக்கள் மற்றும் சில கிறிஸ்தவ பிரிவினர் மத்தியிலும் அடிப்படைவாதம் அதிகரித்து வருகிறது என்பதே உண்மை. இதனைத் தூண்டிவிடுவதற்காகவே பல்வேறு சக்திகள் தொடர்ந்தும் வேலை செய்கின்றன என்பதையும் நாங்கள் மறந்து விடக்கூடாது. இந்த தீய சக்திகளில் பொறிகளில் விழாது கவனமாக இருப்பதே புத்திசாலித்தனமானது. 

 

வட கிழக்கில் நீண்ட காலம் விரிசல் காணப்பட்ட இரண்டு சமூகங்கள் மத்தியில் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மீள நெருங்கி வரும் நேரத்தில் இவ்வாறான கசப்புணர்வுகள், கீழ்த்தரமான வார்த்தையாடல்கள், வெறுப்பை உமிழும் பேச்சுகள், செயல்களால் அந்த உறவு பலவீனப்பட்டு விடக்கூடாது. ஒரு மொழி பேசும் இந்த இரண்டும் சமூகங்களும் தமக்கான உரிமைகளை தாமே பரஸ்பரம் மறுத்துக்கொள்வதன் மூலம் பேரினவாதத்தின் நிகழ்ச்சிநிரலை எம்மை அறியாமலே நிறைவேற்றிக் கொடுத்துவிடும் நிலைக்கு உட்பட்டுவிடுவோம் என்பதை நாங்கள் மறக்கக் கூடாது.

 

இறுதியாக, இலங்கையில் வாழும் அனைத்து தமிழ் சமூகங்களுக்கும் (இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய) ஒரு கேள்வி. ஏன் இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் எப்போதும் கலாச்சார அழுத்தங்களை எமது சமூகம் பெண்கள் மீதே திணிக்கிறது. ஏன் எப்போதும் ஆண் விதிவிலக்கைப் பெற்றுக் கொள்கிறான். இலங்கையில் அரச அலுவலகங்களில் ஏன் பெண்கள் மட்டும் சேலை அல்லது ஒசரிய கட்ட நிர்ப்பந்திக்கப்பட்டு ஆண்கள் மேற்கத்தைய உடைகள் அணிய சட்டமே அனுமதிக்கிறது? ஏன் பெண்களையும் உடலை முழுமையாக மூடும் வகையிலான மேற்கத்தைய பாணியிலான உடையணிய அனுமதிக்கக் கூடாது? 

 - வீமன் -

Ref: 

The Morning.lk, 

Colombo Telegraph, 

The Daily Mirror, 

Human Rights Commission of Sri Lanka Report – HRC/TCO/27/18
 

 

https://akkampakkam2.blogspot.com/2022/02/2018.html?fbclid=IwAR2cxKAb5kGbfXnzrm_M66wpep8OWqMMhWTgM_h7Oy0udGVt34AinfQftJk&m=1

 

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் ஒரு பத்து பதினைந்து வருடம் கணக்க  இல்லை மத்திய கிழக்கு எண்ணெய் இந்த உலகத்துக்கு அத்தியாவசியமற்றதாக போய் விடும் அனைத்து வாகனம்களும் மின்சார வாகனமாகிவிடும் அப்ப இதே பாத்திமா அபயாவை தூக்கி எறிந்துவிட்டு 400 வருடங்களுக்கு முன் அவரின் சொந்தங்கள் அணிந்த புடவையை அணிந்து கொண்டு வருவா .

 

அந்த மண்ணில் இருந்து ஒரு முகனூல் பதிவு

------

இந்து அல்லாத ஒருவர் இந்துக்கல்லூரிக்கு அதிபராக இருந்ததில்லை. கிரிஸ்தவர் அல்லாதவர் சூசையப்பர் கல்லூரிக்கும், இஸ்லாமியர் இல்லாதவர் ஸாகிராகல்லூரிக்கும் அதிபராக இருந்ததில்லை. இதுவரை அப்படியான நியமனத்தை கல்வியமைச்சு வழங்கியதில்லை. ஐம்பது வருடங்களில் ஒருமுறையாது மாற்று நியமனம் வந்திருக்க நிகழ்தகவு சமனிலையிலாவது வாய்ப்பில்லையா? ஒரு தகுதியான மாற்று மதத்தவராவது இருந்திருக்கமாட்டார்களா? ஏன் கல்வியமைச்சு அப்படியான நியமனத்தை வழங்கவில்லை? அவை அரசதாபனங்கள் இல்லையா? அரசியலமைப்பின் உறுப்புரை 12 இனை மீறி இருப்பதாக தெரியவில்லையா?

இதனைத்தான் பாரம்பரியம் மற்றும் சம்பிரதாயம் என்கின்றோம். எல்லா மாவட்டத்திலும் இப்படியான பாடசாலைகள் உள்ளன. அங்கே இறுக்கமான முறையினை நியமனத்திலும், சில நெகிழ்வான பாடசாலைகளில் (உதாரணம்- புனித பிரான்சிஸ் மவி) தளர்ந்த முறையினையும் கல்வியமைச்சு கடைப்பிடித்து வந்திருக்கிறது. கொழும்பு முஸ்லிம் மகளிர் கல்லூரியில் பர்தா இல்லாமல் யாரும் கல்வி கற்க முடியாது. சிங்கள கல்லூரிகளில் யாரும் பர்தாவோடு கல்வி கற்க முடியாது (ஏராளமான இஸ்லாமியர் சிங்கள மொழியில் கற்கிறார்கள்). நாம் உணர்ந்து கொள்ளவேண்டிய விடயம் பாரம்பரியம், சம்பிரதாயம், தனித்துவம் என்பவையே. இதனையும் மீறி சட்டப்படி செய்வதாக இருந்தால், கொரோணா காலங்களில் இறந்த உடல்களை எரிப்பதற்கு எதிப்பு காட்டியிராமல், புர்காவினை தடை செய்தபோது எதிர்ப்பு காட்டாமல், மூதூர் மலையில் புத்தபெருமானை பிரதிஷ்டை செய்தபோது எதிர்ப்பு காட்டாமல் இருந்திருக்கவேண்டும். காளிகோயிலுக்கு முன்பு மாட்டிறைச்சியை சாப்பட்டுக்கொண்டு நடந்து செல்லவும், பள்ளிவாயலுக்கு முன்பு பன்றியிறைச்சி பற்றீசை சுவைத்துக்கொண்டு நடக்கவும் உரிமை இருக்கின்றது. ஆனால் யாரும் அதனை செய்வதில்லை. சட்டப்படி அபாயா அணிந்து வர உரிமை இருக்கின்றது. தகுதியான யாரும் சண்முகாவிற்கு மதபேதமின்றி அதிபராக, கொரோணா நேரத்தில் உடலை எரிக்க, மாட்டிறைச்சி சாப்பிட, பன்றிஇறைச்சி சாப்பிட உரிமை இருக்கிறது. ஆனால் மேலே சொன்ன எதுவும் சம்பிரதாயப்படி யாரும் செய்வதில்லை. அதனை மீறி செய்யும் போது இனமுறுகல் உருவாகுவது இயற்கை. ஆகவே இனமுறுகலை தவிர்க்க அதைச் செய்திருக்கலாம், இதைச்செய்திருக்கலாம் என பாரம்பரிய கல்லூரிக்கு அறிவுரை வழங்குவதை விடுத்து, சகோதரியே எமது கலாசாரத்திற்கு ஒத்து வராத இடம் எமக்கு வேண்டாம் என்ற ஒற்றை சொல்லில் இனமுறுகலை தடுத்திருக்கமுடியாதா?

இதேபோன்று பாதிக்கப்பட்ட ஏனைய இரண்டு ஆசிரியப்பெருந்தகைகள் இந்த முடிவினை ஏற்று மாற்றல் பெற்றிருந்தனர். அவர்கள் போற்றப்பட வேண்டியவர்கள் இல்லையா? மற்றய சமுகத்தின் சம்பிரதாயத்தை மதிக்கச்சொல்லிக்கொடுத்த அவர்களது பெற்றார், கணவர், சகோதரர்கள், அவர்களுக்கு கற்றுத்தந்த ஆசான்கள் அனைவரும் போற்றப்படவேண்டியவர்களே!

https://m.facebook.com/story.php?story_fbid=10227727983047350&id=1301311583

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி சரியான இடத்தில் சரியான தகவலை பதிவிட்டுள்ளீர்கள்....இதே மாதிரியான இனமுறுகலுக்கு இன்னொரு தளம் இடுகிறார்கள் ... அது சாட்டிக் கடற்கரை பள்ளிவாசல் விடையம்....இதில் எம்மவர் முன் நடவடிக்கை எடுக்காவிடின் ...கல்முனைதான்  சாட்டிக் கடலும்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.