Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாண பேச்சு வழக்கு

Featured Replies

#யாழ்ப்பாண பேச்சு வழக்கு

 

யாழ்ப்பாண பேச்சு வழக்கு என்பது இங்குள்ள மக்களால் அன்றாடம் பாவிக்கப்படும் சொற்பிரயோகங்களே.

மெய்யே!

இச் சொல் யாழ்ப்பாணப் பேச்சு வழக்கில் பலவிதமாகப் பயின்று வந்திருக்கிறது. உண்மையா? என்பது அதன் நேரடிக் கருத்தாக இருந்தாலும் ஒரு விடயத்தைச் சொல்ல ஆரம்பிப்பதற்கு இச் சொல் ஒரு தொடக்கமாக அமையப் பெறுதல் ஒரு யாழ்ப்பாண பேச்சு வழக்கு விஷேஷம்.

கணவன்மாரை மனைவிமார் பெயர் சொல்லி அழைக்காத பண்பாடு நிலவிய (2 சந்ததிக் காலத்துக்கு முன்னர் என்று சொல்லலாமோ?) காலத்தில் கணவர்மாரை அழைப்பதற்கும் பேச்சுவார்த்தை ஒன்றை ஆரம்பிப்பதற்கும் மெய்யே? / கேட்டீரே? என்ற இவ் விழிப்புச் சொற்கள் பயன்பாட்டில் இருந்தன. இன்றும் கூட கிராமங்களில் இது பாவனையில் உள்ளது.

இவர்கள் காணவர்மாரை இஞ்சரும்! இஞ்சருங்கோ! என்று அழைக்கும் வழக்கமும் இருந்து வந்திருக்கிறது. குழந்தைகள் பிறந்ததும் இஞ்சரும் அப்பா! இஞ்சருங்கோ அப்பா என அது பதவிப் பெயர் கொண்டழைக்கப்படும் வழக்கு இன்றும் இருக்கிறது.(இஞ்சருங்கோ, இஞ்சருங்கோ…. என்று ஒரு பாடலும் உள்ளது உங்களுக்கு நினைவுக்கு வரலாம்.)

அதற்கு, என்ன சங்கதி? என்றவாறு கணவர்மாரின் பதில் கேள்வி ஆரம்பமாக இப்படியாகச் அவர்களின் சம்பாஷனைகள் தொடரும். ஆனாலும் கணவர்மார் மனைவிமாரின் பெயரைச் சொல்லியோ அன்றேல் அவர்களின் செல்லப்பெயர் / வீட்டுப் பெயர்களைச் சொல்லியோ (பொதுவாக கிளி, ராசாத்தி, செல்லம், குட்டி, …இப்படியாகச் செல்லப் பெயர்கள் இருக்கும்)அழைக்கும் வழக்கு இருக்கிறது.

என்றாலும் இந்த மெய்யே என்ற சொல் வீச்சு நல்ல அர்த்தம் நயம் தோய்ந்த ஒன்றாகக் காணப்படுகிறது. மெய் என்பதற்கு உடல் என்றொரு அர்த்தமும் உண்டு. கணவன்மாரை மனைவிமார் மெய்யே! மெய்யே!! (உண்மையே! உண்மையே!)என்று கூப்பிட்டதனால் போலும் நீங்களும் நாங்களும் பிறந்திருக்கிறோம்!!

பறை

பறை எனும் சொல் ஒரு தூய தமிழ் சொல்லாகும். இச்சொல் “பறை” எனும் பெயரில் ஒரு இசைக் கருவிக்கான பெயர்ச்சொல்லாக பயன்பட்டாலும், வினைச்சொல்லின் பயன்பாடுகளும் உள்ளன. குறிப்பாக இச்சொல்லினதும், இச்சொல் தொடர்பான சொற்பிரயோகங்களும் யாழ்ப்பாணத் தமிழர் பேச்சு வழக்கில் இன்றும் உள்ளனவைகளாகும்.

பழங்காலத் தமிழர் வாழ்வியலில் செய்தியூடகம் என்று ஒன்று இல்லாதக் காலக்கட்டத்தில், ஒரு நாட்டில் நடக்கும் நிகழ்வுகளை, அறிவித்தல்களை, அரசக் கட்டளைகளை ஊர் ஊராகச் சென்று சொல்லுதல் “பறைதல்” என்றும், அவ்வாறு ஊர் ஊராகச் சென்று சொல்பவர் “பறையர்” என்பதும் காரணப்பெயர்களாகும். காலப்போக்கில் தமிழர் வாழ்வியலின் சாதிய வேறுப்பாடுகளின் அடிப்படையில் பறை, பறையர் எனும் சொற்கள் தொழில் நிலைப் பெயராக நிலைத்துவிட்டன அல்லது மாற்றம் பெற்றுவிட்டன.

அதேவேளை ஊரூராகச் சென்று செய்திகள், அறிவித்தல்கள், அரச மற்றும் நிர்வாகக் கட்டளைகள் போன்றவற்றை பறைபவர் (சொல்பவர்), தற்போதைய தற்கால ஒலிப்பெருக்கி போன்ற சாதனங்கள் இல்லாத நிலையில் பலத்தக் குரலில் சத்தமிட்டே பறைய வேண்டியக் கட்டாயச் சூழல் இருந்திருக்கும் என்பதை இன்றையச் சூழ்நிலையில் எளிதாகப் புரிந்துக்கொள்ளலாம். அத்துடன் பலத்தக் குரலில் சத்தமாகப் பறைபவர் மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக ஒரு கருவியின் துணைக்கொண்டு, அதனை ஓங்கி அடித்து ஒலியெழுப்பி, தான் கொண்டு வந்த செய்தியை, அல்லது அறிவித்தலை மக்களுக்குப் பறைவார்.

இதனால் காலப்போக்கில் “பறை” எனும் வினைச்சொல், பறையும் பொழுதும் மக்களை ஈர்ப்பதற்கு பயன்படுத்திய ஒலியெழுப்பிய கருவிக்கான பெயர் சொல்லாக நிலைத்துவிட்டது.

அத்துடன் தற்போதைய தற்கால ஒலிப்பெருக்கி போன்ற சாதனங்கள் இல்லாத நிலையில், பலத்தக் குரலில் சத்தமிடுவதால் அல்லது சத்தமிட்டு பறையும் தொழிலை கொண்டிருப்பவர் என்பதால், பறைபவர் ஏனைய தமிழ் சமுதாயக் கட்டமைப்பின் படி ஒரு தரக்குறைவான தொழில் நிலையாகத் தோற்றம் பெற்றது எனலாம். ஆகையால் இந்த பறை எனும் சொல் ஒரு இசைக்கருவிக்கான பெயராகவும், ஒரு சாதிய பெயராகவும் மட்டுமே பெரும்பாலும் நிலைத்துவிட்டன; குறிப்பாக தென்னிந்தியாவில். அதேவேளை பழந்தமிழ் தொட்டு இன்றுவரை பறை எனும் வேர்ச்சொல்லுடன் தொடர்புடைய பலசொற்கள் அல்லது பலச்சொல்லாடகள் இன்றும் யாழப்பாணத்தவர் பேச்சு வழக்கில் அழியாமல் இருப்பது யாழ்ப்பாணப் பேச்சு தமிழின் தனிச் சிறப்பாகும்.

அவற்றில் சில…

“பறை” எனும் சொல்லின் வினைப் பயன்பாடுகள்

பறை = சொல்

பறைதல் = சொல்லுதல்

பறைஞ்சன் = சொன்னேன்

பறைஞ்சவன் = சொன்னவன் (சொன்னான்)

பறையாதே = சொல்லாதே , பேசாதே

பறையிறான் = சொல்கிறான்

பொய் பறையாதே = பொய் சொல்லாதே

அவன் என்ன பறஞ்சவன்? = அவன் என்ன சொன்னான்?

அவனிட்ட பறையாதே = அவனிடம் சொல்லாதே

“பறைசாற்றுதல்” எனும் சொல்லும் “பறை” எனும் வினையை ஒட்டியெழுந்தப் பயன்பாடே ஆகும்.

இவ்வாறு பறை எனும் வேர்ச்சொல்லுடன் தொடர்புடைய பலசொற்கள் அல்லது பல சொல்லாடல்கள் உள்ளன. இவை இன்றும் யாழ்ப்பாணத்தவர் பேச்சு வழக்கில் அழியாமல் இருப்பது யாழ்ப்பாணப் பேச்சு தமிழின் தனிச் சிறப்பாகும். அதேபோன்று கிட்டத்தட்ட சில நூற்றாண்டுகளுக்கு முன் தமிழில் இருந்து கிளைத்த மொழியான மலையாளத்திலும் இந்த “பறை” எனும் சொல்லின் வினைப் பயன்பாடுகள் இன்றும் புழக்கத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு செய்தியை அல்லது ஒரு தகவலை ஒருவரிடம் கூறினால், அவர் அதனை இரகசியமாகப் பேணாமல் எல்லா இடங்களிலும் சொல்லித் திரிபவராகக் கருதப்பட்டால், அவரை “பறையன்”, “பறையன் போன்று” எனும் அடைமொழிகளுடன் பேசுவதும் மேற்குறித்த பறை எனும் வினைச்சொல்லின் பயன்பாட்டின் பின்னனியே அடிப்படைக் காரணங்கள் எனலாம்.

இலங்கை சிங்களவர் மத்தியில்

தமிழர் பேச்சு வழக்கில் புழக்கத்தில் உள்ள இந்த “பறை” எனும் சொல்லின் பயன்பாடு இலங்கை சிங்களவர் மத்தியிலும் சாதியப் பெயராகவும், இரகசியம் பேணாதவரை இடித்துரைக்கும் சொல்லாகவும் பயன்படுகிறது.

எடுத்துக்காட்டாக:

தமிழ் > சிங்களம்

பறையன் > பறையா

பறையர் > பறையோ

பறையன் போன்று > பறையா வகே

பறை > பறை > பெற (Bera)

இவ்வாறு இன்றைய தமிழர் மத்தியில் தற்போது பயன்படும் இச்சொல்லின் பெயர்ச்சொல் பயன்பாடுகள் அனைத்தும், இலங்கை, சிங்களவர் மத்தியில் பயன்பாட்டில் இருப்பது கவனிக்கத் தக்கது. குறிப்பாக தமிழர் பயன்பாட்டில் காணப்படும் பறை தொடர்பான அத்தனை இழிச்சொல் பயன்பாடுகளும் அதே பொருளில் சிங்களவர் பயன்பாட்டிலும் உள்ளன.

இங்கே “வகே” எனும் சொல்லும், தமிழரின் பேச்சு வழக்கில் புழங்கும் “வகை” எனும் சொல்லுடன் தொடர்புடையது. இவை மருவல் என்பதனை உணர்த்துகின்றன.

சிங்கள மருவல் பயன்பாடுகள்

அதேவேளை “பறை” எனும் இசைக்கருவியின் பெயர் பறை >பெறை >பெற” என்று மருவியுள்ளது. அதேபோன்றே சாதியப் பெயரான “பறையர்” எனும் தமிழ் சொல், சிங்களத்தில் “பெறவா” என்று அழைக்கப்படுகின்றது. அத்துடன் இந்த “பெறை” இசைக்கருவியை அடிப்பவர்களை “பெறக்காரயா” என்று அழைக்கின்றனர்.

தமிழ் > சிங்களம்

பறை > பறை > பெறை > பெற

பறையர் > பறையோ > பெறவா

பறை அடிப்பவர் > பெறக்காரயா

தமிழ் பேச்சு வழக்கில் உள்ள சொற்கள் சிங்களப் பேச்சு வழக்கில் மருவி பயன்படுபவைகளில் இந்த “பறை” எனும் வேர்ச்சொல்லும் அதனுடன் தொடர்புடையச் சொற்களும் அடங்கும்.

அத்துடன் சிங்களப் பேச்சு வழக்கில் “பெறக்காரயா” என்பதில் உள்ள “காரயா” எனும் பின்னொட்டும் தமிழர் வழக்கில் உள்ள “காரன்” எனும் பின்னொட்டின் மருவலே ஆகும்.

குறிப்பு: பழந்தமிழில் வினையாகப் பயன்பட்ட “பறை” எனும் சொல் இன்று ஒரு பெயர்ச்சொல்லாக உலகெங்கும் பல மொழிகளில் பயன்படுகிறது. ஆங்கிலம் தமிழில் இருந்து உள்வாங்கிக்கொண்ட (கடனாகப் பெற்ற) சொற்களில் இந்த “Pariah” வும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

குஞ்சு

குஞ்சு என்றால் “சிறிய” அல்லது “சிறியது” என்பதற்கு இணையான சொல்லாகும். பறவைகளின் குழந்தைப் பருவத்தை “குஞ்சு” என்பதன் பொருளும் சிறியது அல்லது சிறிய பருவத்தைக் கொண்டது என்பதே ஆகும்.

“குஞ்சு குருமன்கள்” என்பதும் “சின்னஞ் சிறிசுகள்” அல்லது “சின்னஞ் சிறியவர்கள்” எனப் பொருள் படுவதனையும் பார்க்கலாம்.

யாழ்ப்பாணப் பேச்சு வழக்கில்

யாழ்ப்பாணத்தில் பேச்சு வழக்கில் “என்ட செல்லம்“, “என்ட குஞ்சு” என பெரியர்வர்கள் சிறியக் குழந்தைகளை அன்பாகவும் செல்லமாகவும் அழைப்பதனைக் காணலாம். அத்துடன் இச்சொல் உறவுமுறைச்சொற்களாகவும் பயன்படுகின்றது.

உறவுமுறைச் சொற்கள்

யாழ்ப்பாணத் தமிழரிடையே “குஞ்சு” என்றச்சொல் பல்வேறு உறவுமுறைச் சொற்களாகப் பயன்படுகின்றது. தகப்பனை ஐயா என்று அழைப்பதனைப் போன்றே, தகப்பனின் தம்பியை “குஞ்சையா“, “குஞ்சியப்பு“, “குஞ்சையர்” போன்ற சொற்களால் அழைக்கும் வழக்கு அன்மைகாலம் வரை இருந்தது.

சிறிய தகப்பன் = குஞ்சையா, குஞ்சியப்பு, குஞ்சையர்

தாயின் தங்கையை, அதாவது சிறிய தாயை; “குஞ்சம்மா”, “குஞ்சாச்சி” என்றும் அழைக்கும் வழக்கு அன்மை காலம் வரை இருந்தது.

சிறிய தாய் = குஞ்சம்மா, குஞ்சியாச்சி

சகோதரிடையே இளையவரை, அதாவது வயதில் சிறிய தம்பியை; “குஞ்சித்தம்பி”, “சின்னக்குஞ்சு” என அழைக்கும் வழக்கும் உள்ளது.

சிறிய தம்பி = குஞ்சித்தம்பி, சின்னக்குஞ்சு

மேலே சொல்லப்பட்ட யாழ்ப்பாணத் தமிழரிடையே பயன்படும் உறவுமுறை குறித்த சொற்களிலும் “குஞ்சு” எனும் சொற்பதம் “சிறிய” எனும் பொருளையே தருவதனைக் காணலாம்.

துலைக்கோ, கனக்க, வயக்கெட்டுப் போனியள்!

* ”அண்ணை! துலைக்கோ போறியள்?”, “துலைக்கோ போட்டு வாறியள்”, இதில ‘துலை’ என்பது ‘தொலை தூரம்’ எண்டதில இருந்து வந்திருக்கும் என நினைக்கிறேன்.

* “கண்டு கனகாலம்”. இதுல ‘கனகாலம்’ என்பது அதிக காலம் என்பதைக் கூறிக்குது. ‘கனக்க’ நிறைய/அதிக என்றாகிறது. “இதையும் கொண்டு போங்கோ. இங்க கனக்கக் கிடக்கு”. ‘கனக்க’ என்பது ‘கனதியான’ எண்டதில இருந்து வந்திருக்குமோ?

* ”எப்ப கொழும்பாலை வந்தனீங்கள்? நல்லா வயக்கெட்டுப் போனியள்”. இதுல வயக்கெட்டு எண்டது, ‘மெலிந்து’ எண்டதைக் குறிக்குது. ‘வயக்கெட்டு’ எண்டது ‘வயசு கெட்டு’ எண்ட அர்த்ததில் வருமோ? வயசு போனால் மெலிந்து சோர்வது இயல்புதானே என்பதால் இருக்கலாம்.

இளந்தாரிப் பெடியள், குமர்ப் பெட்டையள்

“ஊரில் ஒரு குமர் தனியனாப் போக வழியில்லை, சந்தியிலை நிண்டு இளந்தாரிப் பெடியள் அவளவையை சைற் அடிக்கிறாங்கள்”

ஈழத்து ஊர்களில் மேற்கண்ட சம்பாஷணையை ஊர்ப் பெரியவர்கள் வாயிலிருந்து விழக் கேட்கலாம். அந்த வாக்கியத்தில் வந்த இளந்தாரி என்பது கட்டிளம் காளை என்ற சொற்பதத்திற்கு நிகரானது. காதல் வயப்படுகின்ற பருவம் என்பது இன்னும் நெருக்கமான அர்த்தம் கொள்ளத்தக்கதாக அமையும். பெடியள் என்பது தமிழகத்தில் பொடியன் என்று புழங்கும் சொல்லுக்கு நிகரான அர்த்தம் கொண்டு அமையும்.

இளவட்டப் பொண்ணு, குமரிப் பெண் என்று அர்த்தம் கொள்ளும் சொற்பதமே ஈழத்துப் பேச்சு வழக்கில் அர்த்தப்படும் “குமர்ப்பெட்டை“. பருவமடைந்த பெண்களை இங்கே அர்த்தப்படுத்தி அழைப்பதுண்டு. முன் சொன்ன இளந்தாரிக்கு பெண் பால் அர்த்தமாகவும் இது அமையும்.

ஆக்கினை விழுந்த வேலை

ஒரு வேலையை சும்மா முடிக்கவே ஏலாது பாருங்கோ, அதைவிட அதை எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் விதமாகவும் முடிக்க முடியாது எண்டால் அதிலை உண்மை இருக்குது பாருங்கோ, என்னதான் பெரிய திட்டம் போட்டு செய்தாலும் அதற்கு எதிரான கருத்துடையவர்கள் உருவாகுவது தவிர்க்க முடியாத விடயம். நிகழ்வுகள் முடிந்த பின் அப்படியாக நிகழ்வுகள் சம்பந்தமாக அதை நிராகரித்து கருத்துரைப்பவர்களும் இருக்கிறார்கள், அதேபோல ஆமோதித்து கருத்துரைபவர்களும் இருக்கிறார்கள், அவையெல்லாம் நிகழ்வு அமைப்பாளர்களுக்கு ஒரு சிறந்த அனுபவத்தை கொடுக்கும் என்பதோடு எதிர்காலத்தில் சிறந்த முறையில் ஒழுங்கமைக்க உறுதுணையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை,

இப்படியாக நிகழ்வினால் வரும் எதிர்பார்க்கமுடியாத கஷ்டங்களாலும் தடங்கல்களாலும் சிலர் நிகழ்வினை ஒழுங்கமைத்துக் கொண்டிருக்கும் போது ”என்ன ஆக்கினை பிடிச்ச வேலையில் தலை குடுத்தேனோ” என்று மனம் கசந்து கொள்வார்கள் சிலர்.

 

அதுமட்டுமில்லாமல் எந்த ஒரு செயற்பாட்டுக்கும் வெற்றியும் உண்டு, தோல்வியும் உண்டு பாருங்கோ, வெற்றிபெற்றால் ”ஆகோ ஓகோ எண்டு வேலை போகுது” எண்டு சொல்லும் எங்கடை சனம், தோல்வியிலை போனால் “ஐயோ ஆக்கினை பிடிச்ச வேலையிலை தலை வைச்சு படுக்கிறதேயில்லை எண்டு தலையிலை கை வைப்பினம்,

 

இப்படியாக “ஆக்கினை” என்பது ”கஷ்டம் கொடுத்தல்” என்பதாகவும் அதனுடன் சேர்ந்து வரும் ”விழுந்த வேலை” என்பதற்கு தனியாக கருத்துக்கொடுக்காமல் ஆக்கினையில் அதாவது கஷ்டம் கொடுக்கும் வேலையில் பங்கெடுத்துவிடல் அல்லது முற்றுமுழுதாக ஈடுபட்டுவிடல்” என்றவாறாக கருத்துக்கொடுக்க முடியும், அதை சிலர் “ஆக்கினை விழுந்த வேலை” என்பதை “ஆக்கினை பிடிச்ச வேலை” என்றும் சொல்லிக்கொள்வர்.

சிலருக்கு சிலர் எப்போதும் கஷ்டம் கொடுத்தபடியே இருப்பதாக அந்தச் சிலர் உணர்வார்கள்,அந்த வேளைகளிலும் கூட ”இவன் எப்பவும் ஒரே ஆக்கினை தான்”அல்லது ”ஒரே ஆக்கினை பிடிச்சவன்” எண்டு மனதோடு திட்டுவதும் உண்டு. எங்கடை சனம்.

அதைவிட அற்புதமாக ”ஆக்கினை விழுவானே” எண்டு முதியவர்கள் சிலர் கோவத்திலும் சிலர் நட்பிலும் மற்றவர்களை ஏசுவதுமுண்டு.

 

இப்படியாக ”ஆக்கினை” என்பது ஈழத்து வழக்கோடு ஒட்டிவிட்ட சொல். இது வயது வந்த எம் முதியோர்களால் இப்போதும் அடிக்கடி கேட்ககூடியதாக இருக்கும்.

என்றாலும் நடுத்தர வயதானவர்களாலும் இளையோர்களலும் இடையிடையே இக்காலங்களில் சொல்லப்பட்டாலும் சிறியவர்களால் அது சொல்வது மிகக்குறைவு என்று சொல்லலாம். என்றாலும் இந்த சொல் வழக்கொழியும் மற்றைய சொற்களைப்போல அல்லாமல் சிலகாலம் எம்மவர்கள் வாயில் நின்று நிலைக்கலாம் என்று எண்ணத்தோன்றுகிறது, இது சம்மந்தமான உங்கள் கருத்தையும் பகிர்ந்துகொள்ளுங்கோவன்.

குடுதேனோ– கொடுத்தேனோ எங்கடை– எங்களுடைய

நினைவுவரேக்கை– நினைவு வரும்பொழுது

தீர அயத்துப்போனன்

பொதுவாக அயத்துப்போனன் எண்டு இப்போதும் சில வயது வந்தவர்களால் தான் சொல்லப்படுவதை இன்றைய காலங்களில் அவதானிக்கமுடியும்,

“என்னணை அம்மா நேற்று உங்களை ரெலிபோன் (தொலைபேசி) கதைக்க வரச்சொன்னனான் எல்லோ ஏனெணை வர இல்லை?” எண்டு அடிக்கடி தன் தாயின் மீது அக்கறையாக வெளி நாட்டிலை இருந்து கதைக்கும் மகன் கேட்க

”அட ஒம் தம்பி நான் உன்ணாணை தீர அயத்துப்போனனெடா, என்னடா இங்கை வீட்டுவேலையும் முத்தம் வாசல் கூட்டி ஆட்டுக்கு குழையும் வெட்டிபோட்டு அந்த இந்த வேலையெல்லாம் பாத்துக்கொண்டிருந்ததாலை தீர அயத்துப்போனனெடா தம்பி” எண்டு அந்த வயது வந்த அம்மா சொல்கிறார்,

இந்த உரையாடல் மூலம் இப்போது அந்த “தீர அயத்துப்போதல்” என்பதன் அர்த்தம்

புரியாதவர்களுக்கு புரிந்திருக்கும். ”தீர” எனபது ”முழுவதும்” என்பதாகவும் ”அயத்துப்போதல்” என்பது ”மறந்துவிடுதல்” என்று பொருள் கொடுக்க முடியும், இதை பொதுவாக இந்தக்காலங்களில் பேச்சுவழக்கில் ”முழுக்க மறந்துபோச்சு” என்று சொல்லுவினம்.

பொதுவாக இந்த காலத்து இளம்பாரயம் மட்டுமல்ல அதைவிட கொஞ்சம் வயது கூடிய மட்டங்கள் கூட ”அயத்துப்போனன்” என்ற சொல்லை பாவிப்பதே இல்லை என்றுதான் சொல்லலாம். அப்படியிருக்கும்போது அது எப்படி அடுத்த பராயத்துக்கு எடுத்துச்செல்லப்படும் என்பது கேள்விதான், காலப்போக்கில் இந்த சொல்லை அயத்துப்போவார்களோ என்ற ஏக்கமும் இருக்கு,

இங்கு முத்தம்– முற்றம், உன்ணாணை-பொதுவாக சத்தியம் செய்யும் முறைகளில் இதுவும் ஒன்று,

ஒரு நாள் பொழுது

எணேய் அம்மா, இவன் தம்பி இன்னும் நித்திரையாலை எழும்பேலை.. பக்கத்து வீட்டில பொங்கும் பூம்புனல் கேட்குது… பள்ளிக்கூடத்துக்கு நேரம் போகுதணை…

நான் வாறன் இப்ப.. உவனுக்கு மோனை கொஞ்சம் தண்ணி, வாளியோடை கொண்டே ஊத்தினனெண்டா எல்லா நித்திரையும் இப்ப போகும்.. சரி மோனை கொப்பர் எங்கே போட்டார்?

அப்பு ஆலங்குச்சி எடுக்கவெண்டு சந்திக்குப் போனவர்.. இன்னும் காணேலை…

இண்டைக்கு பல்லு விளக்கின மாதிரித்தான். உந்த மனிசனுக்க கதை கண்ட இடம் கயிலாயம் தான்… அங்கை ஆரும் ஓசியிலை பேப்பர் பாக்க வந்திருப்பினம், பின்னை சமா வைக்கினமாக்கும் என்று புறுபுறுத்தாள்..

தம்பி அப்பத்தான் நித்திரையால எழும்பி வாறான்.. எட தம்பி கொப்பர் ஆலங்குச்சி எடுக்க போனவர். சீமான் வரக் காணேலை. ஒருக்கா உந்த சின்னக் காலாலை ஓடிப்போய் குச்சியை கொப்பரிட்டை வாங்கி பல்லை மினிக்கிக் கொண்டு தோட்டத்திலை மிஸின் றைக்குது. அதிலை குளிச்சிட்டுவா பவுண்.

வந்த மணியிடம், கொப்பருக்கு கொஞ்சம் பழஞ்சோறு கிடக்கு… உனக்கு கொஞ்சம் ஒடியல் புட்டு அவிச்சனான் .. மாங்காயும், நேற்று அவிச்சு வைச்ச நெத்தலி மீனும் போட்டனான். கெதிபண்ணி சாப்பிட்டுட்டு பள்ளிக்கூடத்துக்கு ஓடு மோனை. உன்ரை கூட்டாளி நீ குளிக்கப் போனாப்போலை வந்தவன். மினைக்கெட்டால் வாத்தியிட்டை இண்டைக்கு பூசை தான் எண்டிட்டு போட்டான்.

அம்மா நாலுறூள் கொப்பி வேண்டி வரச் சொல்லி ஆங்கிலப்பாட வாத்தி சொன்னவர். காசு தாவணெணை. அடுப்படி மட்டை வரிக்கடிலிலை ஒரு தகரப்பேணி கிடக்கு.. அதுக்கை சின்ன மடிலேங்சிக்கை சீட்டுக்காசு கிடக்கு.. அதிலை 2ருபாயை எடன் முருங்கையில கொஞ்ச காய் ஆயலாம் . தேசிக்காயும் கிடக்கு… சந்தையிலை குடுத்திட்டு எடுத்த காசை வைப்பம்.

பள்ளிக்கூடத்தில்

டேய் மணி நேற்று தந்த வீட்டுப்பாடம் செய்து போட்டியே?

இல்லயடா.. நேற்று ரா தோட்டவெளியில அரிச்சந்திரன் கூத்து ஆடினவங்கள் அதுதான் பார்க்கப் போனன். அயத்துப்போனனடா.

சரியடா நான் செய்தனான். கெதியா பார்த்து எழுது.

வாத்தியார் வாரார். வணக்கம் ஐயா. எல்லாரும் இருங்கோ. ஏன் வகுப்புக் கூட்டேலை. கூட்டு முறையாள் வரேலை ஐயா. நல்ல சாட்டு.. சரி எல்லாரும் முழங்காலிலை வெளியிலை நில்லுங்கோ. இண்டைக்கு இந்தப்பாடம் நடத்தேலாது.

வெளில வந்த அதிபர், ஏன் வெளியிலை நிக்கிறியள் என்று கேட்க கணக்கு வாத்தியார் நிப்பாட்டிப் போட்டார் ஐயா.. வகுப்புக் கூட்டேல எண்டு..

சரி.. சரி.. வகுப்பைக் கூட்டிப்போட்டு இருங்கோ. இனிமேல் உப்பிடிச் செய்யக்கூடாது.

மூன்றரை மணியளவில்… பள்ளிக்கூட மணி அடிக்க தேவாரம் பாடி முடிச்சு பொடியள் வெளியே வருகினம். மணி இண்டைக்கு தோட்ட வேலிக்கு கதியால் போடவேணும். வீட்டை வாறியே?. போடா நான் எங்கடை தோட்டத்துக்கு வெருளி கட்டவேணும். கிளியள் எல்லாம் தோட்டத்திலை காய்களை எல்லாம் சிதிலப்படுத்துதுகள்.

வீட்டை வந்தான் மணி..

தம்பி டேய்.. இதிலை புசல்மா வைச்சனான் கண்டனியே? என்ற அக்காவிடம் எனக்குத் தெரியா.. நான் என்ன பெட்டையே? அவவின்ரை கேள்வியெண்டால்…

சரி சரி.. சாப்பாட்டை போட்டுத் தா கெதியா.. விளையாடப் போக வேணும்…

நீயே போட்டுச் சாப்பிடு… அம்மா வரட்டும். அவாட்டை ரண்டு வக்கணை வேண்டித் தாரன். அப்ப சரிவரும் உன்ர வாய்க்கு,.

கண்ணன் வாறான். டேய் மணி.. நாளைக்க திருவிழாவிலை பொம்மலாட்டம் வருகுதாம். நான் போகப்போறன்.

ஏன்டா சின்ன மேளம் இல்லையே?

சின்ன மேளம் வர 3மணியாய் போம். வாணவெடியும் அப்பத்தானே போடுவங்கள். 3மணிக்குப் பிறகு சின்னண்ணணோடையும், பெடியளோடையும் போவம்.

அப்பத்தான் அங்க வந்த அம்மா.. கண்ணனைக் கண்டிட்டு, மருமேன் ஒருக்கா மறக்காமல் கொப்பரட்டைச் சொல்லு வீட்டை வரட்டாம் எண்டு. கனக்க கதைகிடக்கு.

சரி மாமி… சொல்லி விடுறன்.. நாங்கள் திருவிழாக்கு போட்டு வாறம்…

பொருள் விளக்கம்:

எணேய் – வயது கூடியவர்களை மரியாதையாக (பெரும்பாலும் ஒருவித சலிப்புடன்) அழைப்பது

மோனை – வயதானவர்கள் சிறியவர்களை , பிள்ளைகளை அழைப்பது

கொப்பர் -முன்னால் நிற்பவரின் தகப்பனை அழைப்பது

சமா – நிறைய நபர்கள் சேர்ந்து கதைப்பது

புறுபுறுத்தல் – வாய்க்குள் சத்தம் வராமல் தானே ஏசுவது.

சீமான் – மரியாதைக்கும், நக்கலுக்குத் அதை சொல்வார்கள். செல்வந்தர் என்பது பொருள்.

மினைக்கெட்டால் – நேரத்தை விரயம் செய்தால்

பூசை – அடிப்பது

மடிலேஞ்சி – பணம் வைக்கும் சிறிய கை பை(Purse)

ரா -இரவு

அயத்துப்போனனடா – மறந்துபோதல்

கெதியா – விரைவாக

பொடியள் -பிள்ளைகள்.

கதியால் – மரத்தில் இருந்து வெட்டிய கிளைகள்

சிதிலப்படுத்துதுகள். – பழுதுபடுத்துவது.

புசல்மா – முகத்திற்கு போடும் பவுடர். குட்டிகுரோப் அப்போது பிரபலமானது.

சின்ன மேளம் – கோவிலில் குழுவாக நடனமாடும் பெண்கள். சினிமா பாட்டுக்கு ஆடுவார்கள்.

கனக்க – நிறைய

செட்டாக – நேர்த்தியாக,சச்சிதமாக,அழகு இறுக்கம் செறிவு கொண்ட

சாம்பிராணி – அகில்

பொறுக்கி – கைகளால் ஒன்றொன்றாக எடுத்தல்

அம்மான் – மாமா

பொடியன் – பையன், அதன் பெண்பால் பொடிச்சி/பெட்டை

சொல் வழி – புத்திமதி

கேளான் – கேட்க மாட்டான்

சொச்சமாக – கிட்டத்தட்ட

கொட்டுண்டு – சிந்துப் பட்டு

ஆய்ந்து – பிடுங்கி

காணன் – காணவில்லை

வீபூதி – திருநீறு

பள்ளி – பாட சாலை

சர்வகலாசாலை – பல்கலைக் கழகம்

குருத்துகள் – இளம் பிள்ளைகள்

புலவு – தோட்டம்

முதுசம் – பாரம்பரியமாக கை மாறப் பட்டு வரும் சொத்து

சங்கதி – புதினம், செய்தி,விடயம்

அசண்டையீனம் – கவலையீனம்

கதியால் – வேலி

காம்புக் சத்தகம் – ஓலை வார, வார்ந்த ஓலையை பெட்டி இழைக்கும் போது பின்னலுக்குள் சொருக உதவும் கூர்மையான நீண்ட பின்புறத்தைக் கொண்ட மிகச் சிறிய வளைந்த கத்தி.

உழவாரம் – குந்தியிருந்து கைகளால் புற்களைச் செருக்க உதவும் மண்வெட்டியைப் போன்றதான ஒரு சிறு கருவி

அலுவாங்கு – ஈட்டி போல நீளமாகவும் நுனிப் பக்கம் தட்டையாகவும் கூர்மையாகவும் இருக்கும்

பிரயாசை – முயற்சி

புளுக்கொடியல் – பனங் கிழங்கைக் அவித்துக் காய வைத்து சேகரித்து வைத்துக் கொள்வார்கள்.தேங்காய்ச் சொட்டோடு சாப்பிடச் சுவையாக இருக்கும்

பாக்கு வெட்டி – பாக்கு வெட்ட உதவும் சிறு உபகரணம்.கலைத்துவமான வடிவங்களில் கிடைக்கும்

வெத்திலைத் தட்டம் – வெத்திலைகள் வைப்பதற்கென்று இருக்கின்ற தட்டம்.பீடத்தோடு கூடியது.

பாக்குரல், சாவி – பல் இல்லாதவர்கள் பாக்கு இடித்து உண்ண உதவும் சிறு உரலும் உலக்கையும்

பிலாக்கணம் – புறுபுறுத்தல்

பூராடம் – விடுப்பு,விண்ணாணம்

கோடி – கொல்லைப் புறம்

பொட்டு – வேலிக்கிடையிலான சிறு சந்து

உண்ணாணை – உன் மீது ஆணையாக

எப்பன் – கொஞ்சம்

வளவு – காணி

சவர் – உப்பு

எல்லே – அல்லவா

ஏலாது – முடியாது

மே(மோ)ள் – மகள்

பாவாடை – முழங்கால் அளவுக்குத் தைக்கப் படும் பெண்களுக்கான கீழ் பாதி ஆடை

எக்கணம் – இக்கணம், இப்ப

துள்ளப் போறாள்/குதிக்கப் போறாள் – கோவிக்கப் போகிறாள்

போகேக்க – போகும் போது

களு நீர் – சோறு வடித்த கஞ்சி,மரக்கறித் தண்டுகள்,மாட்டுணவு, தண்ணீர் எல்லாம் போட்டுக் கக்கிய கலவை(கால் நடைகளுக்குரியவை)

மாத்திக் கட்டுதல் – வேறொரு மேச்சல் நிலத்திற்கு மாற்றுதல்

சருவம் -அகன்ற பாத்திரம்

மூக்குப் பேணி – பித்தளையில் செய்யப் பட்ட ஒரு முனை வெளிப் புறம் கூராக நீண்டிருக்கும் தேநீர் குடிக்கும் பாத்திரம் (குவளை)

அண்ணாந்து – மேலே பார்த்தவாறு வாயில் படாமல் வாய்க்குள் ஊற்றுவது.

ஆரவாரம் – ஆர்ப்பரிப்பு

மணிக்காய் – குணத்தில் நல்ல பெடியனாக இருந்தால், நல்லவனாக இருந்தால் “அவன் மணிக்காய் மச்சான்” என்று கூறுவோம்.

பேய்க்காய் – கடுங்கெட்டிக்காரனாக இருந்தால் “அவன் பேய்க்காய்” என்றும் கூறுவோம். அட உந்தக் கடுங்கெட்டிக்காரன் என்பதும் எமது பேச்சுவழக்கல்லே!

கடுங்கெட்டிக்காரன் – மறந்தே போனன், திறமைசாலி என்பதற்கு வழக்கில் இருக்கும் சொல் கடுங்கெட்டிக்காரன். இச் சொல் பொதுவாக எல்லோரிடமும் பயன்படும் சொல்.

உந்த –இஞ்சப்பாரடப்பா! உந்தப் பேச்செல்லாம் என்னிட்ட வச்சுக்காதேயும். இதில் உந்த என்பது “அந்த” என்பதற்கு இணையானச் சொல்.

அப்பு – “அப்பு” எனும் சொல் குறிப்பாக வயதில் முதிர்ந்தவர்களை பேச்சு வழக்கில் அழைக்கப் பயன்படுகின்றது. இது தாத்தா என்பதற்கு இணையானச் சொல். பாட்டி என்பதற்கு இணையானச் சொல்லாக “ஆச்சி” பயன்படுகின்றது.

எண்ரையப்பு, என்ரை செல்லையப்பு என்று தமது குழந்தைகளை கொஞ்சுவதற்கான சொல்லாகவும், வயதில் குறைந்தோரை பெரியோர் அழைக்கும் சொல்லாகவும் இந்த “அப்பு” எனும் சொல் வழக்கில் உள்ளது.

1. இல்லுபோலை/ எல்லுபோலை: இதிலை எது சரியான உச்சரிப்பெண்டு எனக்குதெரியா

இந்த சொல்லு கொஞ்சம், சிறிதளவு எனும் சொற்களுக்கு சமனா ஆச்சி பாவிப்பா. ஒரு எல்லுபோலை குழம்பு விட்ட காணும்.

2. எப்பன், ஒரெப்பன் : சிறிதளவு – இந்தசொல்லு இப்பவும் சிலவேளை பாவிக்கிறனாங்கள் எண்டு நினைக்கிறன். உ+ம், எப்பன் இடம் குடுத்தா காணும் தலையிலை ஏறியிருந்திடுவாங்கள்.

3. பறையிற: கதைக்கிற, பெசுகிற ( பேசுதல் எனும் சொல் ஈழத்தை பொறுத்தவரை வைதல் எனும் கருத்தில் தான் அதிகம் பாவிக்கபடுகிரது என நினைக்கிறேன்)

4. தீய சட்டி: பொதுவா இது மச்சம் சாப்பிடுற ஆக்கள் வீடுகளிலை புழக்கத்தில் இருக்கிற சொல். பொதுவா மச்சம் சாப்பிடுற ஆக்கள் வீட்டிலை இரண்டு தொகுதி சமையல் பாத்திரங்கள் இருக்கும் ஒண்டு நாளாந்தம் சமைக்க, அதிலை அசைவ உணவுகள் எல்லாம் சமைப்பினம். இன்னும் ஒரு தொகுதி சமையல் பாத்திரங்கள் இருக்கும் அதில் மரக்கறி மட்டும் சமைப்பினம். குறிப்பா விரத காலங்களிலை, திவச நாட்களிலை சமைக்க பாவிப்பினம்.

5. மச்சம்: மச்சம் எண்டிற சொல்லு மீனை குறிச்சாலும், பேச்சு வழக்கில் அசைவ உணவுகள் அனைத்தையும் குறிக்கும். உ + ம்: இண்டைக்கு வெள்ளி கிழமை நான் மச்சம் சாப்பிடுறேல்லை.

6. அரக்கி (வினை சொல்லாய்??): ஒரு பொருளை சிறிது இடம்மாற்றி வைக்க/ ஒருவர் இருக்கும் போது புதிதாக வந்தவர் இருக்க (உட்கார) சிறிது இடம் தேவைப்படும் போது,

அந்த மேசையை கொஞ்சம் அரக்கி வைக்க வேணும். டேய் கொஞ்சம் அரக்கி இரு.

7. இயத்து: சமையல் பாத்திரங்கள்

8. ஏதனம்: சமையல்- பாத்திரங்கள்

https://www.facebook.com/598886596981412/posts/1065744730295594/

நம்ம Jaffna

Edited by நிழலி
முகனூல் இணைப்பை சரியாக வழங்க

  • கருத்துக்கள உறவுகள்

ச் சா அப்படியே அச்சொட்டாய் எழுதி இருக்கிறீங்கள்.........!   👍

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.