Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நெல்லை கல்குவாரியில் பாறை சரிவு: சிக்கிய நால்வரின் கதி என்ன? மீட்புப் பணிக்கு விரைகிறது என்டிஆர்எஃப்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நெல்லை கல்குவாரியில் பாறை சரிவு: சிக்கிய நால்வரின் கதி என்ன? மீட்புப் பணிக்கு விரைகிறது என்டிஆர்எஃப்

15 மே 2022, 07:20 GMT
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 

நெல்லை - கல்குவாரி சம்பவம்

நெல்லை முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் சிக்கிய 6 பேரில் 2 பேர் மீட்பு எஞ்சியவர்களை மீட்கும் பணிக்கு இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டுள்ளது.

நெல்லை முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் சிக்கிய ஆறு பேரில் இருவர் நேற்றிரவு மீட்பு படையினரால் உயிருடன் மீட்கப்பட்டனர். இந்த நிலையில் எஞ்சியுள்ள செல்வகுமார், ராஜேந்திரன், செல்வம், முருகன் ஆகியோரை மீட்பதற்கான நடவடிக்கைகள் இன்று முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ளன.

விபத்து நடந்த குவாரியில் தொடர்ந்து மீட்பு பணியில் நடந்து வருகிறது. இதேவேளை அப்பகுதியில் மீண்டும் பாறை சரிவு ஏற்பட்டது. இதனால் மீட்கும் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே அடை மதிப்பான் குளம் கிராமத்தில் வெங்கடேஸ்வரா என்ற பெயரில் ஒரு கல்குவாரி இயங்கி வருகிறது. இங்கு வழக்கம்போல் நேற்றிரவு கற்களை ஏற்றும் பணிகள் நடைபெற்று வந்தன. நள்ளிரவு சுமார் 12 மணி அளவில் திடீரென மிகப்பெரிய பாறை உருண்டு கல் அள்ளும் பணி நடந்த பகுதியில் விழுந்தது.

 

நெல்லை கல் குவாரி

இதில் இரண்டு லாரிகள், 3 ஹிட்டாச்சி இயந்திர வாகனங்கள் மேலும் ஆழத்துக்குச் சென்றன. லாரி ஓட்டுநர்கள் செல்வகுமார், ராஜேந்திரன், கிட்டாச்சி ஆபரேட்டர்கள் செல்வம், முருகன், விஜய் ஆகியோர் கற்கள் சரிவுக்குள் சிக்கி உயிருக்குப் போராடினர்.

 

நெல்லை கல் குவாரி

தகவல் அறிந்து நாங்குநேரி பாளையங்கோட்டை ஆகிய பகுதிகளில் இருந்து மீட்பு பணிக்காக தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணனும் நேரில் சென்று மீட்புப் பணிகளை பார்வையிட்டார்.

 

கல் குவாரி

சுமார் 300 அடி பள்ளம் என்பதால் மீட்புப் பணியை மேற்கொள்வதில் நடைமுறை சிக்கல்கள் நிலவின. இந்த நிலையில், மீட்புப் படையினர் ஹிட்டாச்சி ஆப்பரேட்டர்கள் முருகன், விஜய் ஆகிய இருவரை உயிருடன் மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இருப்பினும் சம்பவ பகுதியில் தொடர்ந்து சரிவு ஏற்பட்டு வருகிறது. இதனால், கனரக வாகனங்களை இறக்கி இடிபாடுகளை அப்புறப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மாவட்ட நிர்வாகம் ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்புப் பணிகளை மேற்கொள்ள முயன்றுள்ளது. இந்த நிலையில் திடீரென பாறைச்சரிவு ஏற்பட்டது. இதையடுத்து ஹெலிகாப்டர் மூலம் 300 அடி ஆழத்துக்குள் இறங்க முயன்ற வீரர்கள் மீண்டும் மேலே வந்தனர்.

 

நெல்லை - கல்குவாரி சம்பவம்

இந்த நிலையில், திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டதன் பேரில் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படை ஆய்வாளர் விவேக் ஸ்ரீவாஸ்தவா தலைமையில் 30 பேர் கொண்ட வீரர்கள் குழு சாலை மார்க்கமாக நெல்லைக்கு விரைந்துள்ளனர்.

 

கல் குவாரி

கல் குவாரி உரிமம் பெற்றவர் கைது

இதற்கிடையே, இந்த சம்பவம் தொடர்பில் கல்குவாரி உரிமம் பெற்ற சங்கரலிங்கம் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் தலைமறைவாகியுள்ள கல்குவாரி உரிமையாளர் சேம்பர் செல்வராஜ் மற்றும் அவரது மகனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

 

நெல்லை கல் குவாரி

இந்த விபத்து குறித்து பிபிசி தமிழிடம் பேசிய நெல்லை மாவட்ட ஆட்சியா் விஷ்ணு, "நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை தாலுகா தருவை கிராமத்தில் உள்ள தனியார் குவாரியில் நிலச்சரிவு ஏற்பட்டு 6 தொழிலாளர்கள் சிக்கினர். அதில் இருவர் உயிருடன் மீட்கப்பட்டு உள்ளனர். 4 பேரை மீட்கும் பணி நடைபெறும் இந்திய கடலோர காவல் படையின் உதவி கோரப்பட்டு ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டுள்ளது," என்றார்.

இதேவேளை பாறை சரிவில் சிக்கியுள்ளவர்களுக்கு திரவ உணவு கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த குவாரியை இயக்குவதில் விதிகள் சரியாக பின்பற்றப்படாமல் இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் விஷ்ணு கூறியுள்ளார்.

https://www.bbc.com/tamil/india-61454908

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாடு கல் குவாரிகள்: கண்காணிக்கத் தவறுகிறதா அரசு, விதிமீறல்கள் நடப்பது உண்மையா?

  • விஜயானந்த்
  • பிபிசி தமிழ்
2 மணி நேரங்களுக்கு முன்னர்
 

நெல்லை கல்குவாரி விபத்து

திருநெல்வேலி மாவட்டத்தில் தனியாருக்கு சொந்தமான கல் குவாரியில் ஏற்பட்ட விபத்தில் இடிபாடுகளுக்குள் புதைந்தவர்களைத் தேடும் பணியில் பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். 'சுரங்கச் சட்ட விதிமுறைகளை குவாரி உரிமையாளர்கள் பின்பற்றுவதில்லை. அதனால் சுரங்கங்களை ட்ரோன் மூலம் கண்காணிக்க உள்ளதாக மாநில அரசு கூறுகிறது. ஆனால், அதுவும் முறையாகக் கண்காணிக்கப்படுவது இல்லை' என்கின்றனர், சுரங்கப் பணியாளர் சங்கத்தின் நிர்வாகிகள். ''வருவாய்த்துறை, கனிம வளத்துறை ஆகியவற்றுடன் இணைந்து அனைத்து குவாரிகளிலும் ஆய்வுகள் மேற்கொள்ளும் வகையில் குழுக்கள் அமைக்கப்படும்" என தமிழ்நாடு அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

நெல்லை சம்பவம்

திருநெல்வேலி மாவட்டம், முன்னீர்பள்ளம் அருகே அடைமிதிப்பான் குளம் என்ற கிராமத்தில் சங்கரநாராயணன் என்பவருக்குச் சொந்தமான கல் குவாரி ஒன்று இயங்கி வருகிறது. வெங்கடேஸ்வரா என்ற பெயரில் இயங்கி வந்த இந்தக் குவாரியை 'சேம்பர்' செல்வராஜ் என்பவரும் அவரது மகனும் குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்தனர். இந்நிலையில், கடந்த 15ஆம் தேதி அதிகாலையில் குவாரியில் ஊழியர்கள் வேலை செய்து கொண்டிருந்த போது ராட்சத பாறை ஒன்று திடீரென சரிந்து விழுந்தது. இதனால் குவாரியில் பணியாற்றி வந்த ஓட்டுநர்களான முருகன், விஜய், செல்வம், ராஜேந்திரன், செல்வகுமார், முருகன் ஆகியோர் பாறைகளுக்குள் சிக்கிக் கொண்டனர். இந்த விபத்தில் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட செல்வம், சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்துவிட்டார். முருகன், விஜய் ஆகியோர் மீட்கப்பட்டுவிட்டனர்.

அதேநேரம், மற்ற மூன்று பேரையும் தீயணைப்புத் துறையினர் மீட்கும் முயற்சியின்போது அடுத்தடுத்து பாறைகள் சரிந்ததால் தொய்வு ஏற்பட்டது. இதையடுத்து, ராமேஸ்வரம் ஐ.என்.எஸ் பருந்து தளத்தில் இருந்தும் கமாண்டோ வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அவர்களாலும் மீட்பு முயற்சிகளைத் தொடர முடியாததால், தேசிய மீட்புப் படையினர் விரைந்தனர். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகிறது.

மேலும் விபத்தை ஏற்படுத்திய குவாரியில் 300 அடி ஆழத்துக்கும் மேல் கனிமங்கள் வெட்டி எடுக்கப்பட்டதும் விபத்துக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. விபத்தைத் தொடர்ந்து சம்பவ இடத்தை அமைச்சர் ராஜ கண்ணப்பன், சபாநாயகர் அப்பாவு, வருவாய்த்துறை செயலாளர் குமார் ஜெயந்த், சுரங்கம் மற்றும் புவியியல் துறை இயக்குநர் நிர்மல்ராஜ் ஐஏஎஸ் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

'கல்குவாரியில் விதிமீறல் நடந்துள்ளதா?' என்பது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன், 'குவாரியில் விதிமீறல் நடந்திருந்தால் மாவட்டம் நிர்வாகம் உறுதியான நடவடிக்கை எடுக்கும்' என்றார். இந்தச் சம்பவம் தொடர்பாக குவாரியின் உரிமையாளர் சங்கரநாராயணன் கைது செய்யப்பட்டுள்ளார். குவாரியை ஒப்பந்தம் எடுத்து செய்து வந்த 'சேம்பர்' செல்வராஜ், அவரது மகன் குமார், குவாரி மேலாளர் செபாஸ்டியன் ஆகியோர் மீது போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கல்குவாரிகளில் என்ன நடக்கிறது?

கல்குவாரி விபத்து குறித்து தமிழ்நாடு கனிம நிறுவன ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளரும் சி.ஐ.டி.யு அமைப்பின் துணைத் தலைவருமான விஜயனிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம். ''கல்குவாரிகளில் விபத்துகள் நடப்பது என்பது தொடர்கதையாகி வருகிறது. செங்கல்பட்டில் உள்ள சிறுதாவூரில் உள்ள குவாரி ஒன்றில் இதேபோன்ற விபத்து ஏற்பட்டது. இதுதொடர்பாக ஊடகங்களில் செய்தி வெளியாகும்போது மட்டும் உரிமத்தை ரத்து செய்யும் பணிகளைச் செய்கின்றனர். அதன்பிறகு அரசுகள் இதனைக் கண்டுகொள்வதில்லை'' என்கிறார்.

 

கல்குவாரி விபத்து

பட மூலாதாரம்,FACEBOOK

 

படக்குறிப்பு,

சி.ஐ.டி.யு அமைப்பின் துணைத் தலைவர் விஜயன்

தொடர்ந்து பிபிசி தமிழிடம் பேசியவர், ''சிறு சுரங்க கனிமங்கள் எல்லாம் மாநில அரசின் கட்டுப்பாட்டின்கீழ் வருகிறது. பெரிய குவாரிகள் எல்லாம் மத்திய அரசின் புவியியல் மற்றும் சுரங்கத்துறையின் கீழ் வருகிறது. குவாரிக்கான உரிமம் கொடுப்பதற்கு முன்பாக SEIAA (State Environment Impact Assessment Authority) எனப்படும் மாநில அரசின் சுற்றுச்சூழல் தாக்க ஒருங்கமைவுக் குழு சான்று கொடுக்க வேண்டும். இதில் உள்ள பாதுகாப்பு முறைகள் சரியாகப் பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டியது, மத்திய சுரங்கத்துறை அதிகாரியின் (DGMS / Director general of mines safety) பணி.

தமிழ்நாட்டில் உள்ள குவாரிகளில் சுரங்கச் சட்ட விதிமுறைகள் முறையாகக் கடைபிடிக்கப்படுவதில்லை. குவாரிகளில் உள்ள நிலத்தில் இருந்து கல்லை வெட்டியெடுப்பது, மண்ணை சரித்து அதில் இருந்து கற்களை வெட்டியெடுப்பது என குவாரி உரிமையாளர்கள் செயல்படுகின்றனர். இந்தப் பணியின்போது எடுக்கப்படும் மண்ணை 300 மீட்டருக்கு அப்பால் சென்று கொட்ட வேண்டும். காரணம், கனிமங்களை வெட்டியெடுப்பதால் பள்ளம் அதிகமாகும்போது குவிக்கப்பட்டுள்ள மண்ணால் இடையூறு ஏற்படும். சுரங்கச் சட்டப்படி இது தவறானது. இதனை அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை'' என்கிறார்.

மேலும், ''வெட்டியெடுக்கப்படும் கழிவு கற்களை குறிப்பிட்ட தொலைவுக்கு அப்பால் கொட்ட வேண்டும். குவாரி உரிமையாளர்களுக்கு நிலம் இல்லாததால், அந்தக் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்துவதில்லை. அவற்றை குவாரிக்குள்ளேயே கொட்டுவதால் விபத்து ஏற்படுகிறது'' என்கிறார்.

விதிகளை மீறும் சட்டவிரோத குவாரிகள்

''குவாரிகளில் வெடிமருந்துகளைக் கையாள்வதிலும் பல்வேறு விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு தொடர்கிறதே?'' என்றோம். ''ஆமாம். கற்களை வெட்டியெடுக்க வெடி வைப்பதாக இருந்தால் அதற்கென பயிற்சி பெற்ற நபர்தான் வெடி மருந்துகளைக் கையாள வேண்டும். மனிதர்கள் மற்றும் விலங்குகள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வெடிமருந்தை பாதுகாப்பாக வைக்க வேண்டும். வெடிமருந்துகளின் வீரியம் தெரியாமல் பயிற்சியில்லாத நபர்களைப் பயன்படுத்துகின்றனர். இதனால்தான் பாதிப்பு ஏற்படுகிறது,'' என்கிறார்.

''நிலத்தடியில் உள்ள சுரங்கங்களுக்கு சில விதிமுறைகள் உள்ளன. அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்புகள் இருப்பதில்லை. மாலை ஆறு மணிக்கு மேல் குவாரிகள் இயங்கக் கூடாது. ஆனால், விளக்குகளை எரியவிட்டு வேலை செய்கின்றனர். குவாரிகளில் மண் தூசிகள் வராமல் இருக்க தொடர்ச்சியாக தண்ணீர் தெளிக்க வேண்டும். அதையும் பலர் பின்பற்றுவதில்லை. பொதுவாக, கிராமங்களில் குவாரிகள் இயங்குவதால் அதிகாரிகள் பெரும்பாலும் சோதனை நடத்துவதில்லை,'' என்கிறார் விஜயன்.

 

நெல்லை கல்குவாரி விபத்து

ரூ. 20,000 கோடி எங்கே?

''இதுவரையில் சட்டவிரோத குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா?'' என்றோம். ''வெடிவிபத்து, மண்சரிவு போன்றவற்றால் உயிரிழப்புகள் ஏற்பட்டால் மட்டுமே அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள். 1952 ஆம் ஆண்டு சுரங்க விதிகளை மாற்றி தற்போதைய காலத்துக்கு ஏற்றார்போல 2016 ஆம் ஆண்டு புதிய சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தனர். அதில், யாருக்குக் குத்தகை விடவேண்டும், பாதுகாப்பு நடைமுறைகள், சுற்றுப்புறச்சூழல் எனப் பல புதிய விதிகளைக் கொண்டு வந்தனர். அவற்றை முறையாகக் கடைபிடித்தால் இதுபோன்ற விபத்துகள் நடப்பதற்கு வாய்ப்பில்லை'' என்கிறார்.

மேலும், ''திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு டாமின் நிறுவனத்துக்கு ரூ. 20,000 கோடி அளவுக்கு வருமானம் வருவதற்கான வாய்ப்பு உள்ளது என ஸ்டாலின் தெரிவித்தார். ஆனால், அதற்கான முயற்சிகளை எடுக்கவில்லை. இதனால் அரசுக்கு வரவேண்டிய வருமானமும் வருவதில்லை. குவாரிகளை நடத்துகிறவர்களும், சட்டவிரோதமாக செயல்படும்போக்கு என்பது அதிகரித்தபடியே உள்ளது'' என்கிறார்.

கேரளாவுக்குக் கடத்துவது அதிகமா?

குவாரிகளில் அளவுக்கு அதிகமாக கனிமங்கள் வெட்டியெடுப்பது தொடர்பாக, தொடர்ந்து போராடி வரும் தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் யுவராஜிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம்.

''கடந்த பத்தாண்டுகளாக கல்குவாரிகள் முறைகேடாக செயல்பட்டு வந்தன. திருநெல்வேலி, தேனி, கோவை ஆகிய மாவட்டங்களில் இருந்து கேரளாவுக்கு கனிமவளங்களை கொண்டு செல்கின்றனர். கனிமங்களை வேறு மாநிலங்களுக்கு எடுத்துச் செல்லக் கூடாதென நீதியரசர் கிருபாகரன் உத்தரவே பிறப்பித்தார். அதையும் மீறி கடத்தப்படுகிறது. இதைத் தடுக்குமாறு நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு கொடுத்துள்ளேன். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடமும் புகார் மனு கொடுத்துள்ளேன்'' என்கிறார்.

 

நெல்லை கல்குவாரி விபத்து

பட மூலாதாரம்,FACEBOOK

''கடந்த அதிமுக அரசு செய்த அதே தவறை இந்த அரசும் செய்கிறது. இதைப் பற்றிக் கேட்டால் உரிய அனுமதியோடு குவாரிகள் செயல்படுவதாகக் கூறுகின்றனர். லாரிகளில் அதிகப்படியான கனிமங்களை ஏற்றிச் செல்வது தொடர்பாக ஆர்.டி.ஓ அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. இதுதொடர்பாக திண்டிவனம் ஆர்.டி.ஓ மீது புகார் கொடுத்துள்ளேன். வட்டார போக்குவரத்து அலுவலர்கள், தங்களின் கடமையைச் செய்யத் தவறுவதால்தான் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. லாரியில் அதிக பாரம் ஏற்றி விபத்து நடந்து உயிரிழப்பு ஏற்பட்டால் ஆர்.டி.ஓ மீதும் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். இதுதொடர்பாக, தேனி மாவட்டத்தில் பெரியகுளத்தில் மிகப் பெரிய போராட்டம் ஒன்றையும் நடத்த உள்ளோம்'' என்கிறார்.

அதிகாரிகள் சொல்வது என்ன?

அதேநேரம், அதிகளவில் கனிமங்கள் வெட்டியெடுக்கப்பட்டதே நெல்லை விபத்துக்குக் காரணம் எனக் கூறப்படுவது தொடர்பாக செய்தியாளர்களிடம் விளக்கமளித்த அம்மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, ''கல்குவாரியில் அளவுக்கு அதிகமான ஆழம் தோண்டப்பட்டுள்ளதா என்பதையும் விதிமீறல் நடந்துள்ளதா என்பதையும் உறுதியாக ஆய்வு செய்வோம். அவ்வாறு விதிமீறல் நடந்திருந்தால் பாரபட்சம் காட்டாமல் நடவடிக்கை எடுப்போம்'' என்றார்.

இதையடுத்து குவாரிகளின் சட்டவிரோத செயல்பாடுகள் குறித்து தமிழ்நாடு அரசின் புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநர் நிர்மல்ராஜிடம் பேசுவதற்காக அவரது அலுவலகத்தைத் தொடர்பு கொண்டபோது, ''ஆய்வுப் பணியில் இயக்குநர் இருக்கிறார்'' என்ற தகவல் கிடைத்தது. இந்த விவகாரம் தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய சுரங்கத்துறையின் உயர் அதிகாரி ஒருவர், ''அரசின் உரிய அனுமதியில்லாமல் செயல்படும் குவாரிகளைக் கண்டறிந்து உடனே நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். கனிமவள திருட்டினைத் தடுத்து அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் மண்டல பறக்கும் படை அதிகாரிகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது'' என்கிறார்.

மேலும், ''ஒவ்வொரு பகுதியிலும் சட்டவிரோத குவாரிகள் தொடர்பான தகவல் வந்தால் அதுதொடர்பான புகாரின் பேரில் கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அங்கு எந்தளவுக்கு கனிமங்கள் வெட்டியெடுக்கப்பட்டுள்ளன என்பதை ஆளில்லா விமான தொழில்நுட்பத்தின் மூலம் அளந்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடுமையான நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது'' என்கிறார்.

மேலும், அமைச்சர் ராஜகண்ணப்பன், வருவாய்த்துறை செயலாளர் குமார் ஜெயந்த் மற்றும் கனிமவளத்துறை இயக்குநர் நிர்மல்ராஜ் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களிடம் பேசுகையில், ''வருவாய்த்துறை மற்றும் கனிமவளத்துறை ஆகியவற்றுடன் இணைந்து அனைத்து குவாரிகளிலும் ஆய்வுகள் மேற்கொள்ளும் வகையில் குழுக்கள் அமைக்கப்படும். நெல்லை கல்குவாரியில் சுரங்கம் அமைப்பதற்கு கனிமவளத்துறை தடை விதித்திருந்த நிலையில் இப்படிப்பட்ட விபத்து நடைபெற்றுள்ளது. நெல்லை மாவட்டத்தில் மட்டும் 52 குவாரிகளில் கடந்த ஆறு மாதங்களாக நடைபெற்ற ஆய்வின் காரணமாக ஆறு குவாரிகள் மூடப்பட்டுவிட்டன. இந்த விவகாரத்தில் முறைகேடு செய்த குவாரிகள் மீது அபராதம் விதிக்கப்படும்'' என்றார். மேலும், கேரள மாநிலத்துக்கு கனிம வளங்கள் எடுத்துச் செல்வது தொடர்பாக பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன், ''இதற்குத் தடை விதிப்பது தொடர்பாக முதலமைச்சரிடம் பேசி முடிவெடுப்போம். அடுத்து வரக்கூடிய அறுபது நாள்களில் நெல்லையில் உள்ள அனைத்து குவாரிகளிலும் ட்ரோன்கள் மூலமாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளன,'' என்றார்.

https://www.bbc.com/tamil/india-61504165

  • கருத்துக்கள உறவுகள்

கல்குவாரி விபத்தில் சிக்கியுள்ள ஆறாவது நபரை மீட்கும் பணி தற்காலிகமாக நிறுத்தம்.!

கல்குவாரி விபத்தில் சிக்கியுள்ள... ஆறாவது நபரை, மீட்கும் பணி தற்காலிகமாக நிறுத்தம்.!

நெல்லை கல்குவாரி விபத்தில் சிக்கியுள்ள ஆறாவது நபரை மீட்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

கடந்த 14ஆம் திகதி அடைமிதிப்பான் குளத்தில் உள்ள கல்குவாரியில் பாறைச்சரிவினால் ஏற்பட்ட விபத்தில் 6 பேர் சிக்கினர்.

இதில் இருவர் உயிருடனும் மூவர் சடலமாகவும் மீட்கப்பட்ட நிலையில் ஆறாவது நபரை மீட்கும் பணி கடந்த ஆறு நாட்களாக நடைபெற்று வருகிறது.

ஆறாவது நபர் சிக்கியிருப்பதாக கருதப்படும் லொறிக்கு மேல் பாறைகள் இருப்பதால் மீட்புப் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் ஆறாவது நபரை மீட்க விரைவில் மீட்புப்பணி ஆரம்பிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

https://athavannews.com/2022/1283195

  • கருத்துக்கள உறவுகள்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.