Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு ஆபத்து" - காப்புக்காடு அருகே புதிய கல்குவாரிக்கு கிராம மக்கள் எதிர்ப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு ஆபத்து" - காப்புக்காடு அருகே புதிய கல்குவாரிக்கு கிராம மக்கள் எதிர்ப்பு

  • பிரசன்னா வெங்கடேஷ்
  • பிபிசி தமிழுக்காக
4 மணி நேரங்களுக்கு முன்னர்
 

காப்புக்காடு

இயற்கை வளங்களை சுரண்டுவதற்காக எடமச்சி காப்புக்காட்டில் தடையை மீறி புதிய கல்குவாரிக்கான சுரங்கப் பணிகள் நடைபெறுவதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சுற்றுவட்டார பகுதிகளில் பழையசீவரம், திருமுக்கூடல், அருங்குன்றம், பழவேலி, மதூர், பட்டா, சிறுமையூலூர் என பல கிராமங்களில் சுமார் 25-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் மற்றும் கிரஷர்கள் பல ஆண்டுகளாக இயங்கி வருகின்றன. உரிய அனுமதி இல்லாமலும் பல எண்ணிக்கையில் கிரஷர்களும் குவாரிகளும் செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு உள்ளது.

சுத்தமான காற்றை சுவாசிக்க முடியாத சூழ்நிலை

கல்குவாரிகள் மற்றும் கிரஷர்களில் இருந்து வெளிவரும் தூசு, கிராமப் பகுதியினர் இடையே பெரும் சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது. பொதுமக்கள் தூசு கலந்த காற்றை ஒவ்வொரு முறையும் சுவாசிப்பதால் சுவாசக் கோளாறு, தோல் நோய்கள், நுரையீரல் பாதிப்புகள் போன்ற பல பிரச்னைகளுக்கு ஆளாகி வருகின்றனர். வீடுகளில் மட்டுமல்லாமல் விவசாய நிலங்களிலும் தூசு படிந்து விவசாயம் முற்றிலும் பாதிப்பு அடைந்துள்ளது. அத்தோடு பல்வேறு கல்குவாரிகளில் பாறைகளை உடைப்பதற்கு தொடர்ச்சியாக வெடிகள் வைப்பதனால் அதிர்வு ஏற்பட்டு வீடுகள் இடிந்து போவதும், சுவர்களில் விரிசல் விடுவதும், முதியோர்கள் மற்றும் கர்ப்பிணிகள் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர்.

 

தூசு

காப்புக்காடு அருகேபுதிய கல் குவாரி?

நெற்குன்றம் கிராமத்தில் 5 ஏக்கரில் புதியதாக ஒரு கல்குவாரியும் அதன் அருகே மற்றொரு நான்கு கல்குவாரிகளும் அமையவுள்ளது. இந்த புதிய கல்குவாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்கெனவே காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் நேரடியாக சென்று பல முறை மனு கொடுத்துள்ளனர்.

ஏரிகள் நிறைந்த ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் மதுராந்தகம் ஏரிக்கு அடுத்தபடியாக எடமச்சி கிராமத்தில் உள்ள ஏரி மிகப்பெரிய ஏரி. இந்த ஏரியை நம்பி ஆனம்பாக்கம், நெற்குன்றம், எடமச்சி, கணபதிபுரம், பொற்பந்தல், மாமண்டூர், பாலேஸ்வரம், சின்னாலம்பாடி, மெய்யூர் ஓடை என 10-க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர்

இந்தப் பகுதியில் கல்குவாரிகள் அமைந்தால் ஏரி முழுவதுமாக சேதமடையும், மேலும் காப்புக் காடுகள் முழுமையாக அழிக்கப்படும் என கிராம மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக, வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் முற்றிலும் அழியக்கூடிய நிலை உருவாகும் என அப்பகுதி கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

 

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்

பட மூலாதாரம்,BABS PHOTOGRAPHY / GETTY IMAGES

உத்தரவை மீறி குவாரி அமைக்கும் பணி

மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை வழிகாட்டுதல்படி, வேடந்தாங்கல் மற்றும் கரிக்கிலி சரணாலய எல்லையில் இருந்து 5 கி.மீ. சுற்றளவு பகுதியிலிருந்து, 10 கி.மீ. சுற்றளவு வரை இயல்புநிலை 'சூழல் கூருணர்வு மண்டலமாக' உள்ளது. எனவே, வன உயிரின பாதுகாப்புச் சட்டம், 1972ன்படி, சரணாலயப்பகுதி மற்றும் 10 கி.மீ. என மொத்தம் 15 கி.மீ. சுற்றளவுப் பகுதியில், எவ்விதமான கல்குவாரி மற்றும் தொழிற்சாலைகள் இயங்க அனுமதி இல்லை என, சென்னை வன உயிரின கோட்டத்தின் வன உயிரின காப்பாளர் பிரசாந்த் காஞ்சிபுரம் கனிம வளத்துறைக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.

இந்த நிலையில், எடமச்சி காப்புக்காடு அருகே பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவையும் மீறி தற்பொழுது புதிதாக கல்குவாரி அமைக்கும் பணி நடைபெற்றதை அந்த கிராமப் பகுதி மக்கள் தடுத்து நிறுத்தி உள்ளனர்.

 

கல்குவாரி

94 வகையான உயிரினங்களுக்கு பேராபத்து

காப்புக் காடான எடமச்சி வனப்பகுதியில் 94 வகையான உயிரினங்கள் வாழ்கின்றன. காப்புக்காடு அருகே குவாரி அமைத்தால் அனைத்து உயிரினங்களுக்கும் கடுமையான பாதிப்பு ஏற்படும் என்கிறார், EMAI சுற்றுச்சூழல் கண்காணிப்பு மற்றும் செயல் துவக்கத்திற்கான அறக்கட்டளை திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் முருகவேல். மேலும் இவர் பிபிசி தமிழிடம் கூறியதாவது:

"வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் பல நாட்டில் இருந்து பறவைகள் வந்து இங்கு இனப்பெருக்கம் செய்து, சொந்த நாடு திரும்புவது வழக்கம். வேடந்தாங்கல் பறவைகள் சரணாலய ஏரிக்கு நீர் ஆதாரமே எடமச்சி ஏரி தான். இந்த ஏரி தண்ணீர் தான் வேடந்தாங்கல் செல்கின்றது. அதுமட்டும் இல்லாமல், நெற்குன்றத்தில் இருந்து 15 கிலோ மீட்டர் தூரத்தில் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் உள்ளது.

 

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்

பட மூலாதாரம்,SAIKAT MUKHOOPADHYAY / GETTY IMAGES

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு வலசை வரும் வெளிநாட்டுப் பறவைகளுக்கு உணவு எடமச்சி ஏரியும் அதன் அருகே உள்ள மலை மற்றும் காட்டுப் பகுதியிலிருந்துதான் கிடைக்கிறது. வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் இருந்து இரைக்காக காலையில் வந்து இரைகளை தேடிவிட்டு மாலை நேரத்தில் மீண்டும் வேடந்தாங்கல் திரும்பும். எனவே, இந்த நெற்குன்றம், பாலேஸ்வரம், ஆனம்பாக்கம், மாமண்டூர் பகுதிகளில் புதிதாக கல்குவாரிகள் அமைத்தால், வேடங்தாங்கல் பறவைகள் சரணாலயம் நிரந்தரமாக மூடக்கூடிய அபாயம் ஏற்படும். அதுமட்டுமல்லாது, கல்குவாரியை சுற்றியுள்ள அனைத்து கிராமங்களும் கடுமையாக பாதிக்கப்படும். இயற்கை வளங்களும் அழியக்கூடிய நிலை உருவாகும். எனவே, புதிய கல்குவாரிக்கு காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கக் கூடாது" என்றார்.

 

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்

பட மூலாதாரம்,HARIKESH PK/GETTY IMAGES

இயற்கை வளங்களை சுரண்டுவதற்கு காப்புக்காடு ஒன்று அப்பகுதியில் இருக்கிறது என்பதையே மறைத்து புதியதோர் கல்குவாரிக்கு அனுமதி வழங்கியிருந்தார்கள், இதை எதிர்த்து தற்போது பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்துத் தடை வாங்கி உள்ளோம் என்கிறார், ஓய்வு பெற்ற கர்னல் அர்ஜூன். மேலும் இவர் பிபிசி தமிழிடம் தெரிவித்ததாவது:

"எடமச்சி மலை மற்றும் அதன் ஏரியை நம்பி சுற்றுவட்டாரத்தில் பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்களின் வாழ்வாதாரம் உள்ளது. பெரும்பாலான கிராம மக்கள் இந்த ஏரியை நம்பித்தான் இருக்கிறார்கள். பெரும்பாலான வீடுகளில் கால்நடைகள் அதிகம் உள்ளன. தற்பொழுது கால்நடைகள் மேய்ச்சலுக்கு வரக்கூடிய இடத்தில்தான் புதிதாக கல்குவாரி அமைய இருக்கிறது. அதுவும் காப்புக்காட்டின் அடிவாரத்தில் அமையவுள்ளது. சட்டத்திற்கு எதிராக குவாரி அமைந்தால் மிகப்பெரிய சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதோடு பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களின் வாழ்வாதாரம் அடியோடு பாதிக்கப்படும்.

 

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்

பட மூலாதாரம்,JAYBEE/GETTY IMAGES

பசுமை தீர்ப்பாயத்தில் புதிதாக குவாரி அமைப்பதற்கு எதிராக வழக்குத் தொடர்ந்தேன். தற்பொழுது வழக்கு முடியும் வரை எந்தவிதமான சுரங்கப் பணிகளும் அங்கு மேற்கொள்ளக் கூடாது என பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டிருக்கிறது. இருப்பினும் மலை அடிவாரத்தில் சுரங்கப் பணிகளுக்கு தேவையான முதற்கட்ட பணிகளை தற்போது ஆரம்பித்திருக்கிறார்கள். இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தற்பொழுது பணியை நிறுத்தி இருக்கிறார்கள். மாவட்ட நிர்வாகம் இதில் சிறப்பு கவனம் செலுத்தி இயற்கையை அழிக்கத் துடிக்கும் நபர்களிடமிருந்து கிராம மக்களை காப்பாற்ற முன்வர வேண்டும்" என்றார்.

ஒருபோதும் மாவட்ட நிர்வாகம் காப்புக்காடு அருகே புதிய கல்குவாரி அமைப்பதற்கு அனுமதி வழங்காது என்கிறார், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி. மேலும் இவர் பிபிசி தமிழிடம் கூறியதாவது:

"சுரங்கத்திற்கு தேவையான அனுமதியை மாவட்ட நிர்வாகம் தான் வழங்க வேண்டும். அதேபோல், அங்கிருந்து கனிமங்களை எடுத்துச் செல்வதற்கும் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும். காப்புக்காடு அருகே சுரங்கத்திற்கு ஒருபோதும் மாவட்ட நிர்வாகம் அனுமதி நிச்சயம் வழங்காது. தற்பொழுது சம்பந்தப்பட்ட இடத்தில் கல்குவாரி அமைப்பதற்கு தடை உள்ளது. அவ்வாறு இருக்க அங்கே எப்படி குவாரி அமைக்க முடியும்? இந்தப் பகுதியில் குவாரி அமையாது என்பது குறித்து கனிமவளத் துறையும் மாவட்ட நிர்வாகமும் பலமுறை சம்பந்தப்பட்ட கிராம மக்களுக்கு எடுத்துச் சொல்லி உள்ளோம்" என்றார்.

https://www.bbc.com/tamil/india-62046251

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கு நாடுகளில்…. அரசாங்கம் இயற்கையை பாதுகாக்கும்.
இங்கு அரசிடம் இருந்து… இயற்கையை பாதுகாக்க, மக்கள் போராட வேண்டி இருக்கு. 
இதற்குத்தான் அந்தந்த நாட்டை, மண்ணின் மைந்தர்களே ஆள வேண்டும்.

பிறத்தியான் வந்தால்… கொள்ளை அடிப்பதிலேயே குறியாக இருப்பான்.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

மேற்கு நாடுகளில்…. அரசாங்கம் இயற்கையை பாதுகாக்கும்.
இங்கு அரசிடம் இருந்து… இயற்கையை பாதுகாக்க, மக்கள் போராட வேண்டி இருக்கு. 

இது வருத்தமான விடயம் தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.