Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு தொடர்பில் ரணிலின் நழுவல் போக்கு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு தொடர்பில் ரணிலின் நழுவல் போக்கு

on August 8, 2022

03ranil-wickremesinghe1-e1659946289902.j

Photo, AP Photo/Eranga Jayawardena, CP24

ரணில் விக்கிரமசிங்க தனது 45 வருடகால நாடாளுமன்ற அரசியல் வாழ்வில் 6 தடவைகள் பிரதமராகவும் அதற்கு முன்னர் அமைச்சராகவும் பெருமளவு உரைகளை நிகழ்த்தியிருக்கிறார். ஆனால், இலங்கையின் புதிய ஜனாதிபதி என்ற வகையில் கடந்தவாரம் தற்போதைய நாடாளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடரை சம்பிரதாயபூர்வமாக தொடக்கிவைத்து நிகழ்த்திய நீண்ட கொள்கை விளக்கவுரை இதுகாலரையிலான அவரின் உரைகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. அது பரவலான வரவேற்பை பெற்றிருக்கிறது. உரை என்ற வகையில் அதற்கு இருக்கக்கூடிய முக்கியத்துவத்துக்கு நிகரான முறையில் அவரது அரசாங்கத்தின் செயற்பாடுகள் அமையவேண்டியது அவசியமாகும்.

நாட்டின் இன்றைய நெருக்கடி நிலையில் இருந்து மீட்பதற்கு சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு முன்வருமாறு சகல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி விக்கிரமசிங்க முன்னதாக கடிதங்களை எழுதியபோது அவரது யோசனைக்கு கிடைக்காத வரவேற்பு அதிகப்பெரும்பாலான கட்சிகளிடமிருந்து இந்தக் கொள்கை விளக்கவுரைக்கு பிறகு கிடைத்திருப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. ஒன்றிரண்டைத் தவிர நாடாளுமன்ற கட்சிகள் சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது குறித்து அவருடன் பேச்சுவார்த்தைகளை நடத்திக்கொண்டிருக்கின்றன.

நம்பிக்கை இழந்த நிலையில் இருந்து நாட்டை மீட்பதற்கான பரந்தளவிலான அரசியல் மற்றும் பொருளாதார திட்டங்களை தனதுரையில் ஜனாதிபதி அறிவித்தார்.

சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை உடனடியாக அமைப்பது, கொள்கைகள் தொடர்பில் அரசாங்கத்துக்கு ஆலோசனைகளை வழங்குவதற்கு நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளினதும் தலைவர்களை உள்ளடக்கிய தேசிய சபையையும் குடிமக்களின் பல்வேறு தரப்புகளையும் உள்ளடக்கிய மக்கள் சபையையும் அமைப்பது, ஜனாதிபதியின் அதிகாரங்களை மட்டுப்படுத்தி நாடாளுமன்றத்தின் அதிகாரங்களை அதிகரிப்பதற்கு அரசியலமைப்பில் திருத்தங்களைச் செய்வது  ஆகியவை ஜனாதிபதியின் திட்டங்களில் முக்கியமானவை.

தேசிய சபையின் முதலாவது பணி குறைந்தபட்ச பொதுவேலைத் திட்டத்தை வகுப்பதாகும் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி இன,மத அடிப்படையிலான பகைமைகள் இல்லாத இலங்கை ஐக்கியத்தை கட்டியெழுப்புவது அந்த சபையின் இலக்காக இருக்கும் என்று கூறினார்.

சகல தரப்பினரதும் அபிப்பிராயங்களையும் ஆலோசனைகளையும் கேட்டறிந்து வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட்டு சமூக, அரசியல் மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களுக்கான தேசிய திட்டமொன்றைத் தயாரிக்கும் பொறுப்பு மக்கள் சபையிடம் ஒப்படைக்கப்படும் என்று கூறிய விக்கிரமசிங்க அந்தச் சபையின் செயற்பாடுகள் மற்றும் தீர்மானங்கள் மீது அரசாங்கம் எந்தவிதமான செல்வாக்கையும் செலுத்தாத வகையில் அது சுதந்திரமான அமைப்பாக இருக்கும்; அரசாங்கம் அதற்குத் தேவையான வளங்களை மாத்திரமே வழங்கும் என்றும் ஒருங்கமைவு பல்வேறு கட்சிகளுடனும் கலந்தாலோசித்து தீர்மானிக்கப்படும் என்றும் கூறினார்.

பொருளாதார ரீதியில் இன்று நாடு வங்குரோத்து நிலையை அடைந்தமைக்கு காரணமாயமைந்த கடந்த கால தவறுகள் குறித்து விளக்கிக்கூறிய ஜனாதிபதி அடுத்த 25 வருடங்களுக்கான தேசிய பொருளாதாரக் கொள்கையொன்று வகுக்கப்படும் என்றும் அந்தக் கொள்கை வறியவர்களுக்கும் வசதி குறைந்த பிரிவினருக்குமான அபிவிருத்தியை உறுதிசெய்வதற்கும் சிறிய மற்றும நடுத்தர தொழில்முனைவோரை ஊக்குவிப்பதற்குமான சமூக சந்தைப் பொருளாதார முறைமையொன்றுக்கான (Social market economic system) அத்திபாரத்தை அமைக்கும்; தேசிய பொருளாதார கொள்கையின் ஊடாக தேசத்தையும் பொருளாதாரத்தையும் கட்டியெழுப்பினால் இலங்கை சுதந்திரம் பெற்ற நூற்றாண்டு நிறைவைக் கொண்டாடும்போது 2048 ஆம் ஆண்டில் முழுமையான அபிவிருத்தியடைந்த நாடாக விளங்கும் என்றும் தெரிவித்தார். பொருளாதார முனையில் அது அவரது கனவாக இருக்கிறது.

தமிழச் சமூகம் நீண்டகாலமாக எதிர்நோக்கிவருகின்ற பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வொன்றைக் காணவேண்டிய அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தியிருப்பது கவனிக்கத்தக்கது. தென்னிலங்கை அரசியல் சமுதாயத்தின் பெரும்பகுதியும் தேசிய இனப்பிரச்சினை குறித்து எந்தவித அக்கறையும் இல்லாமல் இருக்கும் ஒரு நேரத்தில் அவரிடமிருந்து அரசியல் தீர்வின் அக்கறை வெளிப்பட்டிருக்கிறது.

போரின் காரணமாக தமிழ் மக்கள் பல சமூக மற்றும் பொருளாதார பிரச்சினைகளினால் இடர்பாடுகளை அனுபவித்துவருகிறார்கள். தீர்க்கப்படவேண்டிய நிலப்பிரச்சினைகளும் இருக்கின்றன. வடக்கின் அபிவிருத்திப் பணிகள் குறித்து புதிதாக சிந்திக்கவேண்டியிருக்கிறது. இலங்கையை மீளக்கட்டியெழுப்புவதில் வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுடன் நெருக்கமாக பணியாற்றுவதன் மூலம் அவர்களது ஆதரவைப் பெறலாம் என்று எதிர்பார்க்கிறோம். தாய்நாட்டுக்கு வந்து அவர்கள் முதலீடுகளை செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம் என்று தனதுரையில் கூறி நல்லிணக்கத்துக்கான தெளிவான சமிக்ஞையை ஜனாதிபதி காட்டியிருக்கிறார்.  தனது திட்டங்களுக்கு தமிழ் கட்சிகளின் ஒத்துழைப்பைப் பெறுவதும் அவரின் இந்த அறிவிப்பின் ஒரு நோக்கமாக இருக்கும். மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு பரிகாரம் காணவேண்டியதன் அவசியமும் அவரது உரையில் வலியுறுத்தப்பட்டது.

கடந்த நான்கு மாதங்களாக இடம்பெற்றுவந்த ‘அறகலய’ மக்கள் கிளர்ச்சி போராட்டங்களில் இனவாத அரசியலுக்கு எதிராக இளைஞர்களில் கணிசமான பிரிவினர் எழுப்பிய குரலை அங்கீகரிப்பவராகவும் ஜனாதிபதி கருத்துவெளியிட்டிருக்கிறார். “இன்று பெரும்பான்மையான இளைஞர்கள் இனவெறிக்கும் மதவெறிக்கும் எதிராக குரல் எழுப்புகிறார்கள். இனங்கள் மத்தியில் நல்லுறவும் சமாதானமும் நிலவவேண்டிய அவசியத்தை வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன. தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் உட்பட சகல இனக்குழுக்களும் சமத்துவமாக நடத்தப்படவேண்டும் என்று சிங்கள இளைஞர்கள் கூறுகிறார்கள்” என்று அவர் தனதுரையில் குறிப்பிட்டார்.

இனவாதத்தையே தங்களது பிரதான அரசியல் தளமாகக் கொண்டு செயற்பட்ட ராஜபக்‌ஷர்களின் ஆட்சியின் வீழ்ச்சிக்குப் பிறகு அதிகாரத்துக்கு வந்திருக்கும் ஜனாதிபதி விக்கிரமசிங்க இனவாத அரசியலின் பாதகங்கள் குறித்து தனது கொள்கை விளக்கவுரையில் குறிப்பிட்டது மிகவும் கவனிக்கத்தக்கது.

இது இவ்வாறிருக்க, சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதில் ஜனாதிபதியினால் எந்தளவுக்கு வெற்றிபெறக்கூடியதாக இருக்கும் என்ற கேள்வி எழுகிறது. நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் பல்வேறு கட்சிகளும் அவருடன் பேச்சுவார்த்தைகளை நடத்திக்கொண்டிருக்கின்றன. அது சர்வகட்சி அரசாங்கமாக இருக்குமா அல்லது பலகட்சி அரசாங்கமாக இருக்குமா என்று யோசிக்கவேண்டியிருக்கிறது. பரவலாக ஒத்துழைப்பு கிடைத்தாலும் சகல கட்சிகளும் அரசாங்கத்தில் இணைவதற்கான சாத்தியம் இல்லை என்றே தெரிகிறது.

இங்கு நாம் ஒரு முக்கிய விடயத்தை கவனிக்கவேண்டும். சர்வகட்சி அரசாங்கம் என்ற யோசனை விக்கிரமசிங்க ஜனாதிபதியாக வந்த பிறகு முன்வைக்கின்ற ஒரு யோசனையல்ல. கோட்டபா ராஜபக்‌ஷ ஜனாதிபதியாக இருந்தபோது சில மாதங்களுக்கு முன்னரே சர்வகட்சி அரசாங்கம் குறித்து பேசப்பட்டது.  அதாவது ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்கு (ஒரு 6 மாதங்களுக்கு அல்லது சற்றும் கூடுதலான காலத்துக்கு) இடைக்கால சர்வகட்சி அரசாங்கத்தை அமைத்து நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை சாத்தியமானளவு விரைவாக ஒழிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்வதும் தேர்தல்களுக்கு போவதுமே அப்போது முன்வைக்கப்பட்ட யோசனையின் அடிப்படையாக இருந்தது. ஆனால், விக்கிரமசிங்க அத்தகைய காலவரையறை பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. அதையே காரணம் காட்டி ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) சர்வகட்சி அரசாங்கத்தில் இணையமுடியாது என்று அறிவித்திருக்கிறது.

அரசியலமைப்புக்கான 22ஆவது திருத்தவரைவு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. 2015ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்க காலத்தில் நிறைவேற்றப்பட்ட 19ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் முக்கியமான ஏற்பாடுகளை புதிய திருத்தவரைவு கொண்டிருப்பதாக ஜனாதிபதியே நாடாளுமன்றத்தில் கூறினார். அவரைப்பொறுத்தவரை இந்தத் திருத்தத்தை நிறைவேற்றுவதில்தான் கவனத்தைச் செலுத்துகிறார். 19ஆவது திருத்தத்தில் குறைபாடுகள் இருந்தாலும் ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைப்பது தொடர்பில் அதில் இருந்த முக்கியமான ஏற்பாடுகள் எல்லாம் புதிய வரைவில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றனவா என்பது தெரியவில்லை.

22ஆவது திருத்தத்தின் மூலமாக சகலவற்றையும் சாதித்துவிடமுடியாது. தொடர்ச்சியான பல சீர்திருத்தங்களுக்கு இது ஒரு அடிப்படையே என்றும் ஜனாதிபதி கூறுகிறார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பது தொடர்பில் கொள்கை விளக்கவுரையில் துல்லியமில்லாத கருத்தையே அவர் வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஜனாதிபதி ஆட்சிமுறை தொடரவேண்டுமா? எமது நாட்டுக்கு எத்தகைய ஆட்சிமுறை பொருத்தமானது? ஆட்சிமுறை எவ்வாறு சீர்திருத்தப்படவேண்டும்? என்ற விவகாரங்களை ஆராயும் பொறுப்பை உத்தேச மக்கள் சபையிடமே ஜனாதிபதி விட்டுவிடுகிறார்.

கடந்த காலத்தில் பல ஜனாதிபதித் தேர்தல்களில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு பற்றி வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. ஆனால், அவ்வாறு வாக்குறுதியளித்து பதவிக்கு வந்த எந்த ஜனாதிபதியும் அந்த ஆட்சிமுறையை ஒழிக்கவில்லை. எவராவது அந்த ஆட்சிமுறையை ஒழித்தாலும் கூட பின்னர் அதிகாரத்துக்கு வரக்கூடியவர்கள் அதே ஆட்சிமுறையை மீண்டும் கொண்டுவரமாட்டார்கள் என்பதற்கு உத்தரவாதமில்லை என்ற வாதத்தை முன்வைக்கும் விக்கிரமசிங்க தேசிய கருத்தொருமிப்பின் அடிப்படையில் ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதே பொருத்தமானது என்கிறார். அந்த தேசிய கருத்தொருமிப்பை காணும் பொறுப்பை அவர் உத்தேச மக்கள் சபையிடம் ஒப்படைக்கப்பார்க்கிறார். அதனால் ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு தொடர்பில் முன்னெடுக்கப்படவேண்டிய ஏற்பாடுகளில் இருந்து தனது தலைமையில் அமையக்கூடிய அரசாங்கத்தை அவர் விலக்கிவைக்க முற்படுகிறார் என்றே தோன்றுகிறது.

கடந்த 44 வருடங்களாக நடைமுறையில் இருந்து வரும் ஜனாதிபதி ஆட்சி முன்னென்றும் இல்லாத வகையில் மக்களின் வெறுப்புக்கு ஆளாகியிருக்கிறது. எவ்வளவுதான் ஜனாதிபதியிடம் அதிகாரங்கள் குவிந்திருந்தாலும் தவறான ஆட்சிமுறைக்கு எதிராக கிளர்ந்தெழுந்த மக்கள் ஜனாதிபதி மாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகத்தின் வாசற்படிவரை வந்து அந்த அதிகாரங்களை உலுக்கிய பிறகு அந்தப் பதவிக்கு இருக்கக்கூடிய ‘மதிப்பின்’ அளவை ஜனாதிபதி விக்கிரமசிங்க உணர்ந்திருக்கிறார் போலும்.

அதனால்தான் மக்களுக்கு மேலாக போற்றக்கூடிய ஒரு மன்னராகவோ அல்லது கடவுளாகவோ நாட்டின் ஜனாதிபதி இருக்கவேண்டியதில்லை. அவரும் குடிமக்களில் ஒருவரே. அதனால் ஜனாதிபதிக்கு என்று தனியான கொடி, தனியான இலச்சினை, தனியான கௌரவ பட்டங்கள் எல்லாம் தேவையில்லை என்று அவர் அறிவித்தார். எல்லாவற்றுக்கும் மேலாக பதில் ஜனாதிபதியாக கோட்டபாயவினால் நியமிக்கப்பட்ட உடனடியாகவே விக்கிரமசிங்க ஜனாதிபதியை ‘அதிமேதகு’ என்று இனிமேல் அழைக்கத்தேவையில்லை என்று முடிவெடுத்தார். நாடாளுமன்ற உறுப்பினர்களை ‘கௌரவ’ என்று அழைக்கவேண்டுமா இல்லையா என்பதையும் அவர் கூறியிருக்கலாம்.

என்னதான் இருந்தாலும், ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பை மானசீகமாக விரும்புகின்ற ஒருவராக விக்கிரமசிங்க ஒருபோதும் அடையாளம் காணப்பட்டவர் அல்ல. அது விடயத்தில் இன்னமும் அவர் நழுவல் போக்கையே வெளிப்படுத்துகிறார். ஜனாதிபதி ஆட்சிமுறைக்கு எதிராக நாட்டு மக்கள் கிளர்ந்தெழுந்திருக்கும் இன்றைய சூழ்நிலை அதை ஒழிப்பதற்கான ஏற்பாடுகளை முன்னெடுப்பதற்கு மிகவும் வாய்ப்பானதாகும். முன்னென்றும் கிடைத்திராத இந்த அரிய வாய்ப்பும் அரசியல் வர்க்கத்தினால்  தவறவிடப்படக்கூடிய ஆபத்தே இருக்கிறது.

Thanabalasingam-e1653297290887.jpeg?resiவீரகத்தி தனபாலசிங்கம்

 

https://maatram.org/?p=10269

 

  • கருத்துக்கள உறவுகள்

அதி கார ஆசை!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.