Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பயங்கரவாத தடுப்புச் சட்டத்துக்கு எதிரான தென் இலங்கையின் விழிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாத தடுப்புச் சட்டத்துக்கு எதிரான தென் இலங்கையின் விழிப்பு 

என். கே அஷோக்பரன் 
Twitter: @nkashokbharan

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருப்பதன் காரணமாக, தென்இலங்கையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்கு எதிரான பிரக்ஞை அதிகரித்துள்ளது.

ஏறத்தாழ 44 வருடங்கள் அமலில் இருக்கும் ஒரு தற்காலிக சட்டம், இந்நாட்டின் நிறைவேற்றுத்துறையிடம், தான் நினைக்கும் எவரையும், பயங்கரவாதி என்ற சந்தேகத்தின் பெயரில், நீதித்துறையின் தலையீடின்றித் தடுத்து வைக்கக்கூடிய அதிகாரத்தை, ஒப்புக்கொடுத்திருந்தது. இதுகுறித்து, தென்இலங்கை 44 ஆண்டுகள் கழித்தாவது, ஓரளவு விழித்துக்கொள்ள முனைவது நல்ல விடயம்தான்.

தென்இலங்கை, இந்த விழிப்பை அடைய, 44 ஆண்டுகள் தேவைப்பட்டதற்குக் காரணம், இத்தனை காலமும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் எனும் வாள், குறிப்பிடத்தக்க அளவுக்கு, இலங்கையின் பெரும்பான்மை இனத்தவரை நோக்கி பயன்படுத்தப்படவில்லை. முதலில் தமிழர்கள்; பிறகு முஸ்லிம்கள்; இடையில் கொஞ்ச மாக்ஸிஸவாதிகள், ஊடகவியலாளர்கள், சிவில் செயற்பாட்டாளர்கள் என, பயங்கரவாத தடுப்புச் சட்டம் பெரும்பான்மை இனத்துக்கு ‘ஒவ்வாத’ நபர்களாக முன்னிறுத்தப்பட்டவர்களையே பதம்பார்த்தது.

இதனால், இலங்கையின் பெரும்பான்மையினம், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கோரமுகம் பற்றி, பெரிதும் அக்கறை கொண்டிருக்கவில்லை. ஆனால், இன்று, ‘கோட்டா கோ ஹோம்’ என்ற, இலங்கையின் பெரும்பான்மை இனத்தால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றியவர்களுக்கு எதிராக, பயங்கரவாத தடுப்புச் சட்டம் எனும் ‘கூர்வாள்’ திரும்பலாம் என்ற நிலையில், அதற்கு எதிரான விழிப்பு, தென்இலங்கையில் உருவாவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

இந்நிலையில், பயங்கரவாத தடுப்புச் சட்டம் பற்றிய ஒரு மீட்டல், மீள்பார்வை காலப்பொருத்தம் மிக்கதாகும்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் பிறப்பு

1977 - 1978 ஆம் ஆண்டு காலப்பகுதியில், தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் தாக்குதல் நடவடிக்கைகள் பரவலாக இடம்பெற்றன. இது, அன்றைய ஜே. ஆர் ஜெயவர்தன தலைமையிலான அரசாங்கத்துக்கு பெரும் சவாலாக மாறிக்கொண்டிருந்தது.

குறிப்பாக, வடக்கில் குற்றப் புலனாய்வுப் பொலிஸார் மீது, கொலைத் தாக்குதல்கள் தொடர்ந்து நடந்தேறின. இவற்றில், பல தாக்குதல்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் பகிரங்கமாகப் பொறுப்பேற்ற அறிக்கை, 1978 ஏப்ரல் 25 ஆம் திகதி வெளியானதன் பின்னர், ஜே. ஆர் ஜெயவர்தன தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம், தமிழீழ விடுதலைப் புலிகளையும் அதையொத்த ஆயுதக் குழுக்களையு,ம் தடை செய்யும் சட்டத்தை நாடாளுமன்றத்தில் 1978 மே மாதம் நிறைவேற்றியது.

அத்துடன், வேலுப்பிள்ளை பிரபாகரன் உள்ளிட்ட 38 பேரை, பொலிஸாரால் தேடப்படுவோர் பட்டியலில் வெளியிட்டிருந்தது. இதன் பின்னர், பொலிஸாரும் இராணுவத்தினரும் வடக்கு, கிழக்கில் குவிக்கப்பட்டபோதும், இந்த ஆயுதக் குழுக்களின் நடவடிக்கைகளைக் குறைக்க முடியவில்லை.

1978 செப்டெம்பர் ஏழாம் திகதி, இரத்மலானையில் உள்ள கொழும்பு விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த இலங்கையின் தேசிய விமானசேவையான ‘எயார் சிலோன்’ க்குச் சொந்தமான ‘அவ்ரோ’ விமானம், விடுதலைப் புலிகளால் வெடிக்க வைக்கப்பட்டது. இந்தத் தாக்குதல், அரசாங்கத்தைப் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியதுடன், ஆயுதக் குழுக்களுக்கு எதிராக, உடனடி அதிரடி நடவடிக்கையை எடுக்க வேண்டிய சூழலை ஏற்படுத்தியிருந்தது.

உடனடியாகப் பொலிஸ், இராணுவம் போன்ற படையணிகளின் கெடுபிடிகள், நாடு முழுவதும் பலப்படுத்தப்பட்டன. இதனால், தமிழ் மக்கள் பல இன்னல்களைச் சந்திக்க நேரிட்டது. இதன் தொடர்ச்சியாக, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைத் தடை செய்யும் சட்டத்துக்கு மாற்றாக, 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்புச் (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டம் 1979 ஜூலை மாதத்தில் நிறைவேற்றப்பட்டது.

பல இளைஞர்கள், சிவில் சமூக ஆர்வலர்கள், அரசியல் ஆர்வலர்கள், அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள் உட்பட்டப் பலரும், ‘சந்தேகம்’ என்ற ஒரே காரணத்தின் நிமித்தம், வேறு எந்த அடிப்படைச் சாட்சிகளினது தேவை இன்றி, கைது செய்யப்படவும் காலஎல்லை இன்றித் தடுத்து வைக்கப்படவும் இந்தப் பயங்கரவாத தடுப்புச் சட்டமும் அவசர காலச் சட்டமும் காணமாக இருந்தன.  ஏறத்தாழ மூன்று தசாப்த காலத்துக்கும் மேலாக, எதேச்சாதிகாரக் கைது, தடுத்து வைத்தல் போன்ற  எதேச்சாதிகாரத்தை, இலங்கை அரசாங்கத்துக்கு வழங்கியது.

1978ஆம் ஆண்டின், குடியரசின் இரண்டாவது யாப்பின் 13 ஆவது சரத்தானது, எதேச்சாதிகாரமான கைது, தடுத்துவைத்தல் மற்றும் தண்டனை என்பவற்றுக்கு எதிரான அடிப்படை உரிமையை உறுதி செய்கிறது. சுருங்கக் கூறின், ஒருவர் சட்டப்படியன்றி, வேறு எக்காரணத்தின் நிமித்தமும் கைது செய்யப்படவோ, தடுத்துவைக்கப்படவோ, தண்டனைக்கு உள்ளாக்கப்படவோ முடியாது. அப்படிச் செய்வதானது அந்நபரின் அடிப்படை உரிமையை மீறும் செயலாகும்.

1978 ஆம் ஆண்டின், குடியரசின் இரண்டாவது யாப்பின் மனித உரிமைகள் பற்றிய அத்தியாயத்தில், இந்தச் சரத்து உள்ளடக்கப்பட்டுள்ள போதிலும், அதே அத்தியாயத்தின் 15(7) சரத்தானது தேசிய பாதுகாப்பு, பொது ஒழுங்கு, பொதுச் சுகாதாரம், ஒழுக்கம், மற்றவர்களது உரிமைகளையும் சுதந்திரத்தையும் பாதுகாத்தல், ஒரு ஜனநாயக சமூகத்தில் பொதுநலன் நோக்கிலான, நியாயமான தேவைப்பாடுகள் ஆகிய காரணங்களுக்காக 13 ஆம் சரத்து வழங்கிய அடிப்படை உரிமைகள் மட்டுப்படுத்தப்படலாம் என்கிறது. இந்தப் பின்னணியை அடிப்படையாகக் கொண்டுதான், நாம் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நோக்க வேண்டும்.

நிர்வாகத்துறையின் கையில் எதேச்சாதிகாரம்

இலங்கையின் குற்றவியல் நடைமுறைச் சட்டமானது, நபரொருவரைக் கைது செய்யும் நடைமுறை, கைது செய்த பின்னர் நீதிமன்றில் ஆஜர் செய்யவேண்டிய நடைமுறை என்பன பற்றிய சட்ட ஏற்பாடுகளைக் கொண்டுள்ளது.

இதன்படி, கைதுசெய்யப்படும் நபரொருவரை 24 மணி நேரத்துக்குள் பொலிஸார், நீதவான் முன்பு ஆஜர்படுத்த வேண்டும். மேலும், விசாரணை செய்யக் காலம் வேண்டுமெனில், நீதிவான் உத்தரவுக்கமைய மேலும், 24 மணிநேரம் தடுத்து வைக்கப்படலாம்.

ஆகவே, கைது செய்யப்படும் நபரொருவர், எக்காரணம் கொண்டும் எதுவித குற்றச்சாட்டக்களும் இன்றி, 48 மணிநேரத்துக்கு மேலாகத் தடுத்து வைக்கப்பட முடியாது.

 இதற்கு விலக்காக, குறித்த நபரொருவர் குற்றமொன்றோடு சம்பந்தப்பட்டுள்ளார் என்று சந்தேகிக்க அல்லது நம்ப, அமைச்சருக்கு உரிய காரணங்கள் உண்டெனின், அந்நபரைக் கைது செய்யவும் அமைச்சரின் உத்தரவுப்படி, ஒரு முறைக்கு அதிகபட்சம் மூன்று மாதம் என்ற அடிப்படையில், அதிக பட்சம் 18 மாதங்கள் வரை தொடர்ந்து தடுத்து வைக்க முடியும் என்று, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் ஒன்பதாவது சரத்து, அமைச்சருக்கு (அதாவது, நிர்வாகத்துறைக்கு) அதிகாரத்தை வழங்கியது.

அதுமட்டுமல்ல, அந்நபரை எங்கு, எந்தச் சூழலின் கீழ் தடுத்து வைப்பது என்று தீர்மானிக்கும் அதிகாரத்தையும் அமைச்சருக்கு, அதே சரத்து வழங்கியது. அத்தோடு, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் 10 ஆவது சரத்தானது, ஒன்பதாவது சரத்தின் கீழமைந்த அமைச்சரொருவரின் உத்தரவானது, எந்த நீதிமன்றத்தின் முன்பும் கேள்விக்கு உட்படுத்தப்பட முடியாது என்று குறிப்பிட்டது. ஆகவே, நீதித் துறையின் தலையீடின்றி, நபரொருவரை அமைச்சரின் எண்ணத்தின்படி கைது செய்யவும், அதிக பட்சம் 18 மாதங்கள் வரை அமைச்சர் எண்ணும் இடமொன்றில் தடுத்து வைக்கவும் கூடிய, பயங்கரமானதொரு எதேச்சாதிகாரத்தை நிர்வாகத்துறைக்கு, இந்தப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் வழங்கியது.

இந்தப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தோடு அவசரகாலச் சட்டமும் இணையும்போது, நிலைமை இன்னும் மோசமாகும். அவசர காலச் சட்டத்தின் கீழ், அவசர நிலை  பிரகடனப்படுத்தப்பட்டுள்ள போது, நபரொருவரைக் கைது செய்து எல்லையின்றிய காலம் தடுத்து வைக்கும் அதிகாரமானது, பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு வழங்கப்படுவதே இங்கு யதார்த்தமாகும். அத்தோடு அவசரகாலச் சட்ட ஒழுங்குகளின் கீழ் கைது செய்யப்படும் நபரொருவரைப் பொலிஸ் மா அதிபர் தீர்மானிக்கும் இடமொன்றில், அவரது வழிகாட்டலின் படி தடுத்து வைக்க முடியும் என்ற ஏற்பாடும் காணப்பட்டது.

ஆகவே, பயங்கரவாதத் தடைச் சட்டமும் அவசர காலச்சட்டமும் தனிநபர்களைக் கைது செய்து, தடுத்து வைக்கும் அதிகாரத்தை நிர்வாகத் துறைக்கு வழங்கியது. தடுத்து வைக்கும் இடங்களையும் தீர்மானிக்கும் பலம் அமைச்சருக்கு இருந்தமையால், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பலரும், தடுப்புக் காவல் சிறைகளில் அல்லாமல், இராணுவ முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டதாகப் பரவலான குற்றச்சாட்டுகள் இருக்கின்றன.

ஆகவே, பயங்கரவாதத் தடுப்புச்சட்டம், அரசியலமைப்பு ஒரு குடிமகனுக்கு வழங்கும் அடிப்படை பாதுகாப்பைக் கூட, இல்லாதொழிக்கத்தக்க பலத்தை, நிர்வாகத்துறையிடம் சரணடையச் செய்துள்ளது என்றால் மிகையல்ல.

(அடுத்த திங்கட்கிழமை தொடரும்)
 

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/பயங்கரவாத-தடுப்புச்-சட்டத்துக்கு-எதிரான-தென்-இலங்கையின்-விழிப்பு/91-303190

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாத தடுப்புச் சட்டத்துக்கு எதிரான தென்இலங்கையின் விழிப்பு

என். கே அஷோக்பரன்

Twitter:@nkashokbharan

(கடந்த வாரத் தொடர்ச்சி) 

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் அபாயம் என்பது, வெறுமனே ஒரு நபரை நீண்டகாலத்துக்கு, நீதிமன்றில் ஆஜர்படுத்த வேண்டிய அவசியமின்றி, தடுத்து வைக்கக்கூடிய அதிகாரத்தை, நிர்வாகத்துறையிடம் வழங்குவது என்பதோடு சுருங்கிவிடவில்லை. 

மாறாக, சான்றுக் கட்டளைச் சட்டம் வழங்குகிற மிக முக்கியமான பாதுகாப்புகளுள் ஒன்றையும், பயங்கரவாத தடுப்புச் சட்டம் மறுக்கும் வகையில் அமைகிறது என்பது, மிகவும் பிரச்சினைக்குரிய விடயமாகும்.

குற்றவியல் சட்டத்தின் அடிப்படையாக இருப்பது, ‘குற்றமற்றவர் என்ற எடுகோளாகும்’. அதாவது, எந்தவொரு குற்றத்திலும், குற்றம் சாட்டப்பட்ட ஒவ்வொரு நபரும், குற்றவாளி என்று நிரூபிக்கப்படும் வரை, நிரபராதி என்று கருதப்படுவார்கள். 

ஆகவே, குற்றம்சாட்டுவோர், அதனை சந்தேகத்திற்கப்பால் நிரூபிக்க வேண்டிய கடப்பாடு உடையவர்களாக இருக்கிறார்கள். அவ்வாறு நிரூபிக்கும்போதுதான், ஒருவர் குற்றவாளியாகக் காணப்படுவார்.

இலங்கையின் சான்றுக் கட்டளைச் சட்டமானது, பிரித்தானியரால் இலங்கைக்கு வழங்கப்பட்ட முக்கிய சட்டங்களுள் குறிப்பிடத்தக்கதாகும். இன்றுவரை, சில புதிய சேர்க்கைகளுடனும் மாற்றங்களுடனும் ஆனால், அடிப்படைகளில் மாற்றமின்றி, சான்றுக் கட்டளைச் சட்டம் நடைமுறையில் இருக்கிறது. 

இந்தச் சான்றுக் கட்டளைச் சட்டத்தின் 25(1) சரத்தானது, ‘நபரொருவர் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு வழங்கிய ஒப்புதல் வாக்குமூலமொன்றை, அந்நபருக்கு எதிராகப் பயன்படுத்த முடியாது’ என்றும், 26ஆம் சரத்தானது, ‘பொலிஸாரின் காவலில் உள்ள நபரொருவர், நீதிவானின் முன்னிலையில் அன்றி, பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு வழங்கிய ஒப்புதல் வாக்குமூலமொன்றை அந்நபருக்கு எதிராகப் பயன்படுத்த முடியாது’ என்றும் வழங்குகிறது. 

இதன் சுருக்கம், நபரொருவர் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு வழங்கிய ஒப்புதல் வாக்குமூலத்தைப் பயன்படுத்தி, அவருக்கெதிரான குற்றச்சாட்டை நிரூபிக்க முடியாது. ஒப்புதல் வாக்குமூலமானது, நீதிவானின் முன்பு வழங்கப்படின் மட்டுமே, அதனை வழங்கிய நபருக்கு எதிராகப் பயன்படுத்த முடியும். 

பொலிஸார் முறையற்ற வழிகளில், ஒப்புதல் வாக்குமூலத்தைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்; அதனைப் பயன்படுத்தி, அந்த ஒப்புதல் வாக்குமூலம் அளித்தவரைக் குற்றவாளியாகக் காண்பது பாதுகாப்பானதல்ல என்பது, சான்றுக் கட்டளைச் சட்டத்தின், இந்த ஏற்பாடுகளுக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும். 

பயங்கரவாத தடுப்புச் சட்டமானது, சான்றுக் கட்டளைச் சட்டத்தின் இந்த ஏற்பாடுகளுக்கும், விதிவிலக்கை ஏற்படுத்தியது. பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் 17ஆம் சரத்து, சான்றுக் கட்டளைச் சட்டத்தின் 25, 26, 30ஆவது சரத்துகள் பயங்கரவாத தடுப்புச் சட்டம் பற்றிய விடயங்களில் செல்லுபடியாகாது என்று வழங்குவதுடன், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் 16ஆம் சரத்தானது, உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அல்லது, அதற்கு மேற்பட்ட தரமுடைய ஒரு பொலிஸ் அதிகாரியிடம், நபரொருவர் வழங்கிய ஒப்புதல் வாக்குமூலம் செல்லுபடியாகும் என்ற வகையிலான ஏற்பாட்டை வழங்குகிறது. 

இதையொத்த ஏற்பாடொன்று, அவசரகால சட்ட ஒழுங்குகளின் கீழும் பொதுவாகக் காணப்படுகிறது. ஆகவே, பயங்கரவாத தடைச் சட்டம், அவசரகால சட்டம் ஆகியவற்றின் ஒழுங்குகளின் கீழ், நபரொருவர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அல்லது அதற்கு மேற்பட்ட தரமுடைய பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு வழங்கிய ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில், குற்றவாளியாகக் காண முடியும். மேலும், குறித்த ஒப்புதல் வாக்குமூலமானது ஏதேனும் தூண்டுதல், அச்சுறுத்தல், வாக்குறுதியின் அடிப்படையில் வழங்கப்பட்டதெனில், பொதுவாகச் சான்று கட்டளைச் சட்டத்தின் 24ஆம் சரத்தின் கீழ், அத்தகைய ரீதியில் பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலம் செல்லுபடியாகாது. 

பயங்கரவாத தடுப்புச் சட்டமானது, குறித்த ஒப்புதல் வாக்குமூலமானது தூண்டுதல் அல்லது அச்சுறுத்தல் அல்லது வாக்குறுதியின்படி பெறப்பட்டது என்பதை நிரூபிக்கும் பொறுப்பை, குறித்த நபரிடம் சாற்றுகிறது. ஆகவே, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ், குறித்த ஒப்புதல் வாக்குமூலமானது, தூண்டுதல்,  அச்சுறுத்தல், வாக்குறுதியின் படி பெறப்படவில்லை என நிரூபிக்கும் பொறுப்பு பொலிஸாருக்கில்லை. இது, மிக மிக ஆபத்தானது.

ஒட்டுமொத்தமாக, மாதக்கணக்கில் நீதித்துறையின் மேற்பார்வை, பாதுகாப்பு ஏதுமின்றி தடுத்துவைக்கப்பட்ட ஒரு நபர், பொலிஸாரிடம் வழங்கிய ஒப்புதல் வாக்குமூலமானது செல்லுபடியாகும் என்ற எடுகோளை, பயங்கரவாத தடுப்புச் சட்டம் தாபிக்கிறது. அத்துடன், தூண்டுதல், அச்சுறுத்தல், வாக்குறுதியின் அடிப்படையில் பெறப்பட்ட வாக்குமூலம் என்பதை நிரூபிக்க வேண்டிய கடப்பாடு, தடுப்பில் வைத்திருக்கப்பட்டு, பொலிஸாரிடம் ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியதாக, சொன்ன அந்த நபர் மீது திணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அதனை நிரூபித்தல் என்பது, சாத்தியம் மிகக்குறைந்த காரியம் என்பதற்கு வரலாறும், வழக்குகளுமே சாட்சி.

மிகக் கொடுமையான சட்டங்களைச் சுட்டிக்காட்ட, ஆங்கிலத்தின் ‘ட்ரேகோனியன் லோ’ (Draconian Law) என்ற சொற்றொடரைப் பயன்படுத்தப்படுவது வழமை. கிரேக்கத்தில் வாழ்ந்த ‘ட்ரேகோ’ என்ற நபர், எதென்ஸ் நகரின் சட்டங்களைக் கோவைப்படுத்தப் பணிக்கப்பட்டார். வழக்கத்தில் மட்டுமிருந்த பழைய சட்டங்களை எல்லாம் அவர் கோவைப்படுத்தியதில், மிகச் சிறு குற்றங்களுக்கு எல்லாம் கடும் தண்டனையான மரணதண்டனை விதிக்கப்பட்டது. 

உதாரணமாக, ஓர் அப்பிளைத் திருடியவனுக்கும் மரண தண்டனை என்றவாறு அமைந்தது. அவர் கோவைப்படுத்திய சட்டங்கள் மிகக் கடுமையாக, கொடுமையாக இருந்ததால், அதனை ‘இரத்தத்தில் எழுதிய சட்டங்கள்’ என்று குறிப்பிடுவதுமுண்டு. ஆகவே, கொடுமையான சட்டங்களை ‘ட்ரேகோனியன்’ சட்டங்கள் என விளிக்கும் வழக்கம் ஏற்பட்டது.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டமானது, சர்வ நிச்சயமாக ‘ட்ரேகோனியன்’ சட்டம் தான். அதனால்தான், கால தசாப்தங்களாகவே, சர்வதேச மன்னிப்புச் சபை உள்ளிட்ட பல சர்வதேச அமைப்புகளும் உள்நாட்டு, வெளிநாட்டுச் சிவில் ஆர்வலர்களும் புத்திசீவிகளும் இந்தக் கொடுமையான, பயங்கரவாதத் தடுப்புச் சட்டம், இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்று குரல் கொடுத்து வருகின்றனர். 

ஆனால், எந்நபரையும் நீதிமன்றின் தலையீடின்றியே பலகாலம் தடுத்து வைக்கக்கூடிய பெரும்பலத்தைத் தரும் இச்சட்டத்தை, இல்லாதொழிக்கும் விருப்பம், இதுவரை எந்த அரசாங்கத்துக்கும் ஏற்படவில்லை என்பதுதான் உண்மை.
இந்தப் பயங்கரவாத தடுப்புச் சட்டம், தமிழ் மக்களின் போராட்டத்தை ஒடுக்கக் கொண்டுவரப்பட்ட சட்டம் என்பதில் மாற்றுக்கருத்துகள் இருக்க முடியாது. பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கோரப்பிடியில் அதிகமாகச் சிக்கியதும் தமிழ் மக்களே! குறிப்பாக, தமிழ் இளைஞர்கள் ஆவார். 

இந்தப் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில் குறிப்பிடத்தக்க இன்னோர் அம்சம் உண்டு. அதாவது, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட நபரொருவருக்கு, குற்றவியல் சட்டத்தின் கீழ் மரண  தண்டனைதான் வழங்கப்பட வேண்டுமெனினும், அவருக்கு ஆயுள் தண்டனையே பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் என்று பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் மூன்றாம் சரத்து குறிப்பிடுகிறது. 

அதாவது, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ், எத்தகைய பாரிய குற்றத்துக்கும் மரண தண்டனை கிடையாது; உச்சபட்ச தண்டனை ஆயுள் தண்டனையாகும். இதன் கீழ் தண்டனை பெறும் யாரும், அரசியல் ரீதியாகத் ‘தியாகி’களாகக் காணப்பட்டு விடக்கூடாது என்பதே, இந்த ஏற்பாட்டுக்குக் காரணமாக இருக்கலாம் என, சர்வதேச மன்னிப்புச் சபையின் சர்வதேச நிறைவேற்றுக் குழுவின் தவிசாளராக இருந்த சூரிய விக்கிரமசிங்க, தன்னுடைய கட்டுரையொன்றில் குறிப்பிடுகிறார். 

தமிழ் மக்களைத் தாண்டி, ஜே.வி.பி. ஆயுதக் கிளர்ச்சியின் போதும் (1988-1989) பயங்கரவாத தடுப்புச் சட்டம் பயன்படுத்தப்பட்டது. இந்த இரண்டு தரப்பும், இலங்கையின் அந்தந்தந்த காலத்தில் பெரும்பான்மை மக்கள் வெறுக்கும் தரப்புகளாகவே இருந்தமையால், இந்தக் கொடூரச் சட்டத்துக்கு எதிரான குரல்கள் எழவேயில்லை. மாறாக, இதன் அவசியத்தன்மை பற்றிய அரசாங்கத்தின் நியாயப்பாடுகளாகச் சொல்லப்பட்டவை, பெரும்பான்மை மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 

இன்று, 2022இல், கோட்டாபய ராஜபக்‌ஷ மக்கள் எழுச்சிக்கு பயந்து, ஜனாதிபதி பதவியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து, அவசரகாலச் சட்டம், பயங்கரவாத தடுப்புச் சட்டம் பற்றிய உண்மையானதொரு புரிதல், தென்இலங்கையில் ஏற்படுவதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. 

இந்த விழிப்பு, ஏறத்தாழ 42 வருடங்கள் கடந்தாவது ஏற்பட்டிருப்பது நல்லதுதான். இந்த விழிப்பு, இந்த ‘ட்ரேகோனியன்’ சட்டங்கள் இல்லாது ஒழிக்கப்படுவதை உறுதிப்படுத்துமா என்பதை காலம்தான் சொல்லும்!

 

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/பயங்கரவாத-தடுப்புச்-சட்டத்துக்கு-எதிரான-தென்இலங்கையின்-விழிப்பு/91-303586

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.