Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வலசை – கார்த்திக் பாலசுப்ரமணியன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வலசை – கார்த்திக் பாலசுப்ரமணியன்

வலசை – கார்த்திக் பாலசுப்ரமணியன்

நாங்கள் இந்த அப்பார்ட்மண்ட்டுக்கு குடிவந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. பூரணிக்கு ஃபிளைட் டிக்கெட் உறுதியானவுடன் முதல் காரியமாக வீடு பார்க்க ஆரம்பித்துவிட்டேன். சிட்னியில் நினைத்தவுடன் வீடு அமைவது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. அதுவும் ஹோம்புஷ் போன்று இந்தியர்கள் அதிகம் தங்கியிருக்கும் இடங்களில் கிடைப்பது இன்னுமே கடினம். இந்தப் பகுதியைச் சுற்றி ஈழத் தமிழர்களும் வசிக்கிறார்கள். இந்த அப்பார்ட்மண்ட்டிலிருந்து நடந்து போகும் தொலைவில் ஒரு இந்தியன் ஸ்டோர் இருக்கிறது. இந்தியச் சமையலுக்குஉகந்த அத்தனை மளிகைப் பொருட்களும் அங்கே கிடைக்கும். அரிசி, பருப்பு, சர்க்கரையிலிருந்து குங்கும்,சந்தனம் பத்தி முதலான பக்திப் பொருட்கள் உட்பட எல்லாமும் கிடைக்கும். விகடன், குமுதம் போன்ற வார இதழ்கள்கூட கொஞ்சம் தேதிப் பிந்தி வரும். அந்தக் கடையை ஒரு ஈழத்தமிழர் வைத்து நடத்துகிறார். அவருக்கும் ஐம்பத்தைந்திலிருந்து அறுபது வயதிருக்கும்.இருபது வருடங்களாக இங்கே வசிக்கிறார். அவர் அமர்ந்திருக்கும் கல்லாப்பெட்டி மேசையில் ஒரு சிறிய ஸ்பீக்கரில் எப்போதும் பி.பி.சீனிவாஸின் பாடல் ஒன்று ஒலித்துக்கொண்டிருக்கும்.

அந்தக் கடையிலிருந்து, இடப்பக்கத்தில் பத்து கடைகள்தள்ளி பஞ்சாபி கறிக்கடை ஒன்று இருக்கிறது. அங்கே சிக்கனும் மட்டனும் கிடைக்கும். அது ஹலால் என்பதால் பக்கத்துப் புறநகர்ப் பகுதிகளான ஸ்ட்ராத்ஃபீல்ட், ஆஸ்ஃபீல்ட், ஃபெளமிங்டன் போன்றவற்றிலிருந்துகூட ஆட்கள் வந்து வாங்கிப் போவார்கள். அதே கடைத் தெருவில் தாஜ் இண்டியன் மசாலா என்ற பெயரில் ஒரு இந்திய உணவகமும் சக்தி கேட்டரிங் என்ற பெயரில் இடியாப்பம், புட்டு, பரோட்டாபோன்றவற்றை பார்சல் மட்டும் வழங்கும் இலங்கை உணவகமும் உள்ளன. வார இறுதி நாட்களில் எங்குப்பார்த்தாலும் இந்தியத் தலைகளே தென்படும்.

இந்தப் பகுதிக்கு வந்த பிறகுதான், என்னுடைய பிராஜெக்ட்டின் தலைமை அதிகாரி ஜான் பிராண்டன் எங்களுடைய முதல் தனிச் சந்திப்பின்போது ஏன் அப்படிக் கேட்டார் என்பது புரிய வந்தது. 

“பயணமெல்லாம் சவுகரியமாக இருந்ததா ஹரி? ஹ..ரி..எவ்வளவு சுலபமா இருக்கிறது. ப..ர்..மே..ஸ்..வ..ர பி..ல்..லா.. ரொம்ப கஷ்டம் ரொம்பவே கஷ்டம்.” என்று அவரது கனத்த உடலைக் குலுக்கிச் சிரித்தார்.

அவர் எங்கள் அணித்தலைவரான பரமேஷ்வரன் பிள்ளையின் பெயரைத்தான் அப்படி உச்சரித்துப் பார்த்துச் சிரித்தார். நானும் அவருடன் மெதுவாகத் தலையாட்டிச் சிரித்தேன்.

“அதிலொன்றும் பிரச்சினையில்லை ஜான். நல்லபடியாக வந்து சேர்ந்தேன்.”

“அடுத்து என்ன? ஹோம்புஷில் வீடு பார்க்கப் போகிறாயா?”

இல்லையில்லை. அது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. ஆனால், ஏன் ஹோம்புஷ்?”

“ஓ.. உனக்கு உண்மையிலேயே தெரியாதா?” என்று சொல்லிச் சிரித்து மறுபடியும் குலுங்கினார். பின்னர் அவரே, “ஆங்கிலத்தில் ‘மர்மரேஸன்’  (murmuration) என்று ஒரு வார்த்தை உண்டு. உனக்குத் தெரியுமா?கேள்விப்பட்டிருக்கிறாயா?” என்றார்.

நான் தெரியாது என்பதாக உதட்டைப் பிதுக்கினேன். 
 

spacer.png

“இங்கே, ஸ்டார்லிங் என்ற ஒரு பறவையினம் இருக்கிறது. பார்ப்பதற்குக் குருவி போல இருக்கும். அதன் மேலெல்லாம் பச்சையும் கறுப்பும் சேர்ந்து பளபளப்பாய் பார்க்க ரொம்பவும்அழகாஇருக்கும். அதனுடைய மொத்த அளவே இதோ இவ்வளவுதான் இருக்கும்.” என்று சொல்லி தன் வலது உள்ளங்கையை நீரைத் தேக்கி வைக்க குவித்துப் பிடிப்பதைப் போல பிடித்துக் காட்டினார். “அதிக பட்சம் நூறு அல்லது நூற்றைம்பது கிராம் எடை இருக்கும். அவை கூட்டமாக ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு உணவுக்காகவும் இனப்பெருக்கத்துக்காவும் தூரமாய்ப்பறந்து போகும். தூரம் என்றால் பல்லாயிரக் கணக்கான மைல்கள் போகும். கூட்டமாக ஆயிரக்கணக்கான ஸ்டார்லிங்கள் ஒன்று சேர்ந்து பறந்து போகும். இளமாலை வெயிலில் அவை பறந்து போவதைப் பார்க்க நட்சத்திரத் திரளொன்று நகர்வதைப் போலிருக்கும்.அப்போது வை சேர்ந்து முணுமுணுவென்று சத்தம் எழுப்பும். அந்தச் சத்தத்துக்குப் பெயர்தான் ‘மர்மரேஸன்’.எப்போவாது வடக்கு ஆஸ்திரேலியா பக்கம் போக வாய்த்தால் கிளிகள்கூடஇப்படிப் போவதை நீ பார்க்கலாம். என்று சொல்லி என்னையே உற்றுப் பார்த்தார். 

பின்பு அவரே, “இப்போது ஏன் அதைப் பற்றி இங்கேசொல்கிறீர்கள் என்று நீ கேட்க வேண்டும்.”என்றார்.

நான் பதில் பேசாமல் புன்னகைத்தேன். நான் கேட்காவிடிணும் அவர் சொல்லாமல் விடப்போவதில்லை என்பது தெரிந்தது.

“அந்த ஸ்டார்லிங்கைப் போலதான் இருக்கிறீர்கள்இந்தியர்கள் அனைவரும். ஓ! அப்படிச் சத்தம் எழுப்புகிறீர்கள் என்று சொல்ல வரவில்லை. அதில் கொஞ்சம் உண்மை இருந்தாலும் அதை அர்த்தப்படுத்த நான் இதைச் சொல்லவில்லை. தவறாக நினைக்காதே!” என்று சொல்லி கண்களைச் சிமிட்டிச் சிரித்தார். எங்கே போனாலும் கூட்டமாகக் கூடிக் கொள்வதைச் சொன்னேன். இங்கேகூட நன்றாக கவனித்துப் பார். ஒரு காபி பிரேக்கில்கூட யார் யாருடன் சேர்ந்துபோய்க்குடிக்கிறார்களென்று. மொத்தமாக இந்தியர்கள் மட்டும் என்று சொல்லிச் சுருக்கிவிட முடியாது. ஆசிய மக்களில் நிறையப் பேர் அப்படித்தான் இருக்கிறார்கள். அப்போது, நீங்கள் எல்லாம் அப்படி இல்லையா என்று நீகேட்கலாம். ஆமாம், நாங்கள் அப்படிச் செய்வதில்லை. அது ஏன் என்றுஇன்னொரு சந்தர்ப்பத்தில் சொல்கிறேன். ஆனால், அப்படிச் சேர்ந்து இருக்கக் கூடாதா? தவறா என்றால், அப்படியில்லை என்றுதான் சொல்வேன். அந்தப் பறவைகளேஏன் அப்படிச் சேர்ந்து போகிறன தெரியுமா? அப்படிச் சேர்ந்து பறப்பதன் வழியே பருந்து, வல்லூறு போன்ற பெரிய பறவைகளிடமிருந்து அவை தற்காத்துக்கொள்கின்றன. மேலும், நெருக்கமாகச் சேர்ந்து பறக்கையில் குளிர் காலங்களில் ஒன்றின் வெப்பம் மற்றொன்றுக்குப் படர்ந்துகடுங்குளிரைத் தாங்கவும் உதவுகின்றன. இங்கே அதுபோலத்தான் நீங்களும் சேர்ந்துகொள்கிறீர்கள். அதனால்தான் அப்படிச் சொன்னேன்.” என்றார்.

“ஸ்..டார்..லிங்”

“ஆமாம் ஸ்டார்லிங்”

அந்தக் கடைத் தெருவுக்கும் எங்கள் அப்பார்ட்மண்டுக்கும் சமதொலைவில்தான் ஹோம்புஷ்மெட்ரோ ரயில் நிலையம் உள்ளது. நான் வேலைபார்க்கும் பராமட்டாவுக்கும் அதற்கு நேர்எதிர்த்திசையிலிருக்கும் சிட்னியின் மையப் பகுதியான டவுன்ஹாலுக்குப் போவதற்கும் மணிக்கு நான்கு ரயில்கள் உண்டு. இதையெல்லாம் கருத்தில்கொண்டே இந்த அப்பார்ட்மண்ட்டை உறுதி செய்தேன்.

பூரணி வரும் வரையில் அலுவலகமிருக்கும் பராமட்டாபகுதியில் நண்பர்களுடன் அறையைப் பகிர்ந்துகொண்டிருந்தேன். அவள் வந்ததும் முதலில் தனி வீடு பார்க்கலாமா என்றுதான் யோசித்தேன். ஆனால், என்னுடைய பிராஜெக்ட் அடுத்த ஆறு மாதங்களுக்கு மட்டுமே உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. அதற்கு மேல்தொடர்வதற்கான வாய்ப்பு அதிகம் என்றாலும் எதையுமே நிச்சயமாகக் கூற முடியாது.  முதல் நாள் இரவு பதினொன்றுமணி வரை மொத்த அணியும் உயிரைக்கொடுத்து வேலைபார்த்து முடித்துக்கொடுத்துவிட்டு வீடு போய் திரும்பிவந்த மறுநாள் காலை, “துரதிர்ஷ்டவசமாக இந்தப் பிராஜெக்ட் நம்மிடம் இனி தொடர்வதில்லை. விரைவில் உங்களுக்கு புதிய பிராஜெக்ட் ஒதுக்கப்படும்.” என்ற மெயில் எங்கள் பாஸிடமிருந்து வந்ததைப்பார்த்த அனுபவம் உண்டு. அன்று காலை வரை அதற்கான எந்தச் சுவடும் வெளித் தெரியா வண்ணம் பார்த்துக்கொள்வார்கள். எனவே இந்த ஆறு மாதத்தை நம்பி ஒரு முடிவுக்கு வர முடியாது. ஒரு வேளை ஆறு மாதம்கூட நீடிக்காமல் இந்த பிராஜெக்ட் முடிந்து போனால் இங்கேயே இன்னொரு பிராஜெக்ட் உடனடியாகக் கிடைப்பதற்கான சாத்தியம் குறைவு. உடனே இந்தியாவுக்கு மூட்டை கட்டி அனுப்பிவிடுவார்கள். 

எல்லாவற்றுக்கும் மேல் தனியாக வீட்டை ஒத்திக்கு எடுத்துவிட்டு இடையில் கிளம்பினால், ஒரு நாள் இருந்துவிட்டாலும்கூட அந்த ஒப்பந்தத்தை மீறுவதற்காக ஒரு மாத வாடகையைத் தண்டமாக அழ வேண்டியிருக்கும். அதையும் இந்திய ரூபாயில் கணக்கிட இருக்கிற எரிச்சலோடு வயிற்றெரிச்சலும் சேர்ந்துகொள்ளும். 

இப்படியாக, தனி வீடு பார்க்கும் முடிவைக் கைவிட்டுவிட்டு அப்பார்ட்மண்ட்டில் ஒரு வீட்டை இன்னொரு குடும்பத்துடன் பகிர்ந்துகொள்ளலாம் என்று முடிவெடுத்தேன். வருடத்துக்கு லட்சம் டாலர் சம்பளம் வாங்கும் எங்கள் போட்டி நிறுவனத்தைச் சேர்ந்த மானேஜர் ஒருவர் இதையே ஒரு பகுதி வேலையாகப் பார்க்கிறார். அவர், முதலில் ஒரு வீட்டைஅவருடைய பெயரில் ஒத்திக்கு எடுத்துவிடுவார். பின்னர், அதை இரண்டு குடும்பங்கள் சேர்ந்து வசிக்கும்படியாக வசதிகள் செய்துகொடுத்து உள் வாடகைக்கு விட்டுவிடுவார். இங்குள்ள சட்டப்படி இப்படியாக உள் வாடகைவிடுவது தவறு என்றாலும் பெரும்பாலும் இவர் ஒத்திக்கு எடுப்பது தெற்காசியர்களின் வீடுகளைத்தான். அவர்களும் அதிகமாகக் கிடைக்கும் ஒரு நூறு டாலருக்காக இதைப் பற்றிப் பெரிதாக அலட்டிக்கொள்வது இல்லை. அவருக்கோ இதில் கணிசமான தொகை லாபமாகக் கிடைக்கும். 

தனியாக அப்பார்ட்மண்ட் எடுத்தால் கொடுக்க வேண்டியதில் பாதியளவு வாடகை கொடுத்தால் போதும். மேலும் இங்கிருந்து காலி செய்வது என்றாலும் இரண்டு வாரங்களுக்கு முன்னர் தகவல் தந்தால் போதுமானது. ஒப்பந்த மீறல் அபராதம் போன்ற எந்தவித கட்டுப்பாட்டுக்குள்ளும் சிக்கிக்கொள்ளத் தேவையில்லை. இன்னும் கொஞ்சம் டாலர்களை மிச்சம் பிடித்து ரூபாயாக மாற்றிஇண்ஸ்டாரெம் வழியே இந்தியாவுக்கு அனுப்பிக்கொள்ளலாம். 

நாங்கள் அங்கே வந்து ஒரு வாரம் ஆகியும், அதுவரை யாரும் எங்களுடன் வீட்டைப் பகிர்ந்துகொள்ள வரவில்லை. நான் அலுவலகம் சென்று திரும்பி வருவது வரை பூரணிவீட்டில்தனியாகத்தான் இருக்க வேண்டும். புதிய இடம், புதிய மனிதர்கள் என்பதால் கொஞ்சம் பயந்துபோய் இருந்தாள். அவளுக்கு ப்பல் கார்ட் வாங்கிவைத்திருக்கிறேன். ரயில், பஸ் பயணங்களை மெதுவாகப் பழக்க வேண்டும்.

இடையில் ஒரு நாள், நான் அலுவலகம் சென்றிருந்த வேளையில் யாரோ கதவைத் தட்டியிருக்கிறார்கள். நீண்ட நேரமாகத் திறக்காமலே இருந்திருக்கிறாள். யார் என்று கேட்டதற்குக்கதவுக்கு மறுபக்கமிருந்தவர் சொன்ன பதிலும் விளங்கவில்லை போலும். பயந்துபோய் எனக்குஅழைத்தாள். பாதுகாப்பு கண்ணாடித் துவாரத்தின் வழியே வந்திருப்பவரைப் பார்க்கலாம் என்பதுகூட அவளுக்கு அந்நேரத்தில் தோன்றியிருக்கவில்லை.

கடைசியில் அது வாரம் ஒருமுறை வந்து வீட்டைச் சுத்தம் செய்துபோகும் மார்க் லியூ. 

யாராவது இன்னொரு இந்தியக் குடும்பம் வந்தால் கொஞ்சம் ஆதரவாக இருக்கும் என்பதால் நாங்களே அப்படி வருபவர்களுக்காகக் காத்துக்கொண்டிருந்தோம். அதே நேரத்தில் அதில் வேறு சில சிக்கல்கள் இருந்தன. ஒரே கிச்சன். திருப்பிய ‘ப’ வடிவில் ஹாலுடன் கிச்சன் திறந்திருக்கும். அதில் ஆளுக்குப் பாதி. நான்கு பர்னர்கள் கொண்ட அடுப்பை ஆளுக்கு இரண்டாய் பகிர்ந்துகொள்ள வேண்டும். ஒரே ஒரு பாத்திரத் தொட்டி. வருபவர்கள் எங்களைப் போன்று மாமிசம் உண்பவர்களாக இருந்தால் பரவாயில்லை. இல்லாது போனால் இருவருக்கும் சங்கடம்.எல்லாவற்றுக்கும் மேல் வீட்டுப் பெண்களுக்குள் ஒத்துப்போக வேண்டும்.

அன்று இரவு மிக்ஸியில் அரைத்த மாவால் தோசை வார்த்துச் சாப்பிட்டுவிட்டு ஹாலிலிருந்த நான் டி.வி.யில் மாஸ்டர் செஃப் பார்த்துக்கொண்டிருந்தேன். பூரணி உள்ளே அறையில் தன் தங்கையுடன் தன்னுடைய ஒரு வாரக் கால சிட்னிஅனுபவத்தை ஒப்பித்துக்கொண்டிருந்தாள். 

வீட்டின் காலிங் பெல் அடித்தது.

மானேஜர் பிரகாஷ்தான் வெளியே நின்றுகொண்டிருந்தார்.காபி ஏதாவது போடவா என்று கேட்ட பூரணியை வேண்டாம் என்று மறுத்து உக்காரச் சொன்னார்.

“வீடெல்லாம் பரவால்லல? கார்பெட் மட்டும் கொஞ்சம் அழுக்கா இருந்தது. டீப் கிளினிங் பண்ணச்சொல்லி சரி பண்ணிட்டேன். வேற எதுவும் இருந்தாலும் சொல்லுங்க ஹரி.”

“பிரகாஷ் வீடு ரொம்ப நல்லாருக்கு. பால்கனிய திறந்துவிட்டா மொத்த ஹோம்புஷும் தெரியுது. இந்த பெரிய பிரஞ்ச் விண்டோ எங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு.”

“ஹா.. அப்போ சந்தோஷம். ஒரு பக்கம் பரமட்டா ரோடு மறுபக்கம் மெட்ரோ ரயில். ரொம்ப அமைப்பான வீடுதான் இது.பொதுவா பிரஞ்ச் விண்டோவ குளிர்காலத்துல எப்பவும் மூடி வச்சிருப்போம். ஆனாலும் பகல்ல மட்டும் அப்பப்போ காத்து வர்ற மாதிரி கொஞ்ச நேரம் திறந்துக்கணும். இல்லன்னா சுவர் முழுக்க மோல்ட் பிடிச்சுக்கும்.”

“ஓகே பிரகாஷ். தாங்க்ஸ். அப்புறம் மெயின் கதவு மட்டும் கொஞ்சம் டக்குன்னு பூட்ட முடியல. கொஞ்சம் திறந்துஇழுத்துத் தள்ளிச் சாத்த வேண்டியிருக்கு. அது மட்டும் கொஞ்சம் பார்த்துக்கொடுக்க முடியுமா?”

“நானே டூல் பாக்ஸ் எடுத்துட்டு வரேன் பிறகு. முடியல்லன்னா ஆள் வரச் சொல்லிக்கலாம். அப்புறம்.”

“சொல்லுங்க பிரகாஷ்!”

“இன்னொரு ஃபேமிலி  உங்களோட ஜாயிண்ட் பண்ணிப்பாங்கன்னு சொல்லிருந்தேன்ல.”

“ஆமாமா.”

“அநேகமா இன்னும் இரண்டு மூணு நாள்ல வந்துடுவாங்க. அவங்களும் தமிழ் ஃபேமிலிதான்.” என்று தயங்கினார்.

“தமிழ் ஃபேமிலின்னா ரொம்ப சந்தோஷம். நான்கூட யாராவது நார்த் இந்தியன் மாதிரி வந்திட்டா இங்கயும் இங்கிலிஷ்லயே பேசணுமேன்னு யோசிச்சுட்டு இருந்தேன். நம்மவங்கன்னா பிரச்சினையே இல்லை.” இதைச் சொல்லும்போது அவர் எதையோ சொல்வதற்காகத் வார்த்தைகளைப் பொறுக்கிக்கொண்டிருந்தார் என்பது புரிந்தது. 

“ஏன் அவங்க வெஜிடேரியனா?”

“அய்யே அதெல்லாம் இல்ல. அவங்களும் நான் வெஜிடேரியன்தான்.”

“அப்புறம் என்ன?”

“இல்ல.. அவங்க முஸ்லீம். அதுல உங்களுக்கு ஒண்ணும் பிரச்சினை இல்லையே.” என்றார்.

என்னுடன் வேலை பார்க்கும் இந்தியர்களில் பலரும் சைவ உணவுப் பழக்கம் கொண்டவர்கள். பீரையும் பிராந்தியையும் பழகியவர்களுக்குக்கூட அசைவ உணவுகள் ஒப்புக்கொள்வதில்லை. அப்படியானவர்கள் யாருமென்றால் எப்படிச் சமாளிப்பது என்றெல்லாம் யோசித்து வைத்திருந்தோம். இதை யோசிக்கக்கூட இல்லை. ஆனால்,அவர் ஏன் இதைக் கேட்க இவ்வளவு மென்று விழுங்குகிறார் என்பது முதலில் புரியவில்லை. 

“அட! அதெல்லாம் ஒன்னுமில்லே பிரகாஷ். தாராளமா வரட்டும். எங்களுக்கு ஒரு பிரச்சினையுமில்ல. உண்மையிலே சைவம்ன்னு யாரும் வந்தா தான் சிரமம்.”

அவர் சற்று உற்சாகமாகிவிட்டார். “அப்பச் சரி ஹரி. நான் அவங்ககிட்ட பேசிடுறேன். நாளைக்கு அவங்க எப்போ இங்க வருவாங்கன்னு கேட்டு சொல்லிடுறேன்.” என்று சொல்லிவிட்டு இருவரிடமும் விடைபெற்றுக்கொண்டார்.

“என்ன டக்குன்னு ஓ.கே. சொல்லிட்டீங்க?”

“ஏன் வேறென்ன சொல்லணும்?”

“அதுக்கு இல்ல. நாம கலந்து பேசிட்டு சிவா அண்ணாகிட்டயும் ஒரு வார்த்தை கேட்டுட்டு முடிவை நாளைக்கு சொல்லிருக்கலாம்.”

“இதுல சிவாகிட்ட கேட்க என்ன இருக்குன்னு எனக்குப் புரியல.”

“அவங்க இங்கயே ரெண்டு வருசமா இருக்காங்கல்ல. அதுக்காகச் சொன்னேன்.” என்று சமாளித்தாள்.

“இதோ பாரு. நீ எதுக்குச் சொல்றன்னு எனக்குத் தெரியும். கொஞ்சமாவது படிச்ச பொண்ணு மாதிரி நடந்துக்கோ. ஊர்க்காரப் பொண்ணு மாதிரி இல்லாததையும் பொல்லாததையும் யோசனைபண்ணிட்டு இருக்காத.”

“அப்படி சொல்லல. யாரு என்னன்னு தெரியாதவங்க இல்ல.”

“உனக்கு அவங்க யாருன்னு தெரியாதது இல்ல பிரச்சினை. யாருன்னு தெரிஞ்சதுதான் பிரச்சனை.”

“எனக்கு என்னமோ மனசுல பட்டத சொன்னேன். அப்புறம் உங்க இஷ்டம்.” சொல்லிவிட்டு விடுவிடுவென்று உள்ளுக்குச் சென்றுவிட்டாள்.

எந்த ஒரு விவாதத்திலும் பூரணி கைக்கொள்ளும் கடைசி ஆயுதம் இது. அவளுக்கு உவப்பில்லாத ஒரு முடிவின் மொத்தப் பொறுப்பையும் என் தலையில் போட்டுவிடுவாள். பின் அடுத்து வரும் நாட்களில் அதைப் பற்றி எதிலும் கலந்துகொள்ள மாட்டாள். அந்த முடிவின் விளைவாக வரும் சிறு சிறு பிரச்சனைகளுக்கும் என் மேல் குற்றம் சாட்டி தன்னுடைய முடிவே சரியானது என்பதை நிறுவிக்கொள்வதில் அவளுக்கு அப்படி ஒரு ஆனந்தம். 

எதிர்பார்த்தது போலவே அவள் அடுத்த இரண்டு நாட்களும் எங்களோடு தங்க வருபவர்களைப் பற்றி ஒரு வார்த்தை பேசவில்லை. பிரகாஷ் பேசிவிட்டுப் போய் அது மூன்றாவது நாள். அவரிடமிருந்தும் தகவல் இல்லை. நான் இல்லாத நேரத்தில் அவர்கள் வந்து, முதல்முறையே இவள் ஏதாவது முகத்தைத் திருப்பிக்கொண்டாள் என்றால் தர்ம சங்கடமாகிவிடும். அவரிடம் ஓ.கே. சொல்லும் முன் பேருக்காவது இவளிடம் ஒரு வார்த்தை கேட்டுவிட்டு முடிவு சொல்லியிருக்கலாம். அதுவும் அவர் முன்னால் கேட்டிருந்தால் இவளே சரியென்பதாகத்தான் தலையாட்டியிருப்பாள். இப்போதுகூட அவர்கள் வருவதற்காக கிச்சனைத் துடைப்பது, பரத்தியிருந்த பொருட்களை எடுத்து ஒதுக்குவது, ஃஃப்ரிட்ஜின் ஒரு கீழ் இரண்டு அடுக்குகளை சுத்தம் செய்வது என்று எல்லாவற்றையும் அவளேதான் செய்துவைத்தாள். அதே நேரத்தில், பாத்திரத் தொட்டி இருக்கும் கிச்சன்குதியைஎடுத்துக்கொள்வது, ஃப்ரிட்ஜில் மேல் அடுக்குகள் என்று நைச்சியமாக சில சவுகரியங்களைச் சொந்தமாக்கிக்கொண்டாள்.  

அடுத்த ஞாயிற்றுக் கிழமை, நானே பிரகாஷுக்கு அழைத்தேன். 

“பிரகாஷ், அவங்க வரதைப் பத்தி தகவல் சொல்றேன்னு சொல்லிருந்தீங்க. ஒன்னும் சொல்லல. அதான் எப்ப வருவாங்கன்னு கேட்டுக்கலாம்ன்னு கால் பண்ணேன்.”

“வீட்லயா இருக்கீங்க?”

“ஆமா பிரகாஷ்.”

“இருங்க. பத்து நிமிசத்துல நானே மேல வரேன்.” என்றார். 

அவரும் ந்த அப்பார்ட்மண்ட்டின் முதல் தளத்தில்தான்குடியிருக்கிறார். எங்களுடையதுமூன்றாவது தளம். அவர் என் கல்லூரித் தோழன் சிவாவுக்கு மானேஜர். அவரே இங்கு தங்கியிருப்பதால் அப்பார்ட்மண்ட்டின் வசதிகளைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. ஊர் பழகும் வரை அவசர உதவிக்கும் ஆகும் என்று சொல்லி அவன்தான் இவரைத் தொடர்பு செய்யச் சொல்லி பரிந்துரைத்தான்.

பூரணி தலைவலி என்று சொல்லிவிட்டுப் உள்ளறையில்படுத்திருந்தாள். காலிங் பெல் அடிக்கத் தேவையில்லாத படி,வீட்டுக் கதவைத் திறந்து வைத்து சோபாவில் அமர்ந்திருந்தேன்.

பிரகாஷ் கதவை நடுவிரலால் இரண்டு முறை மெதுவாகத் தட்டினார்.

“வாங்க பிரகாஷ்.”

“அதொண்ணுமில்ல ஹரி. அவங்க இப்போ இங்க வரல. எங்க பிராஜெக்ட்ல ஒருத்தர் அடுத்த வாரம் இந்தியாலருந்து தன் ஃபேமிலியைக் கூட்டிட்டு வரார். அவர் இங்கே ஜாயின்பண்ணிப்பார். சென்னைக்காரர்தான். முத்துச்சாமின்னு சிவாவுக்கும்கூட பிரண்டுதான். சிவா உங்ககிட்ட சொல்லலியா?” என்றார்.

“ஓ அப்படியா, இல்லையே பிரகாஷ். நடுவுல அவன்கிட்ட பேசவேயில்ல.”

“இவங்க கன்பார்ம்டுதான்.”

ஓ.. இல்ல அவங்க ஏன் வரலயாம்?”

“அவங்க ன்கிட்ட இருந்த வேற ஒரு வீட்டுலசேர்ந்துகிட்டாங்க.”

“ஓ, அப்போ அதுவும் ஜாயிண்ட் வீடுதானா?” என்றேன்.

“ஆமாமா” என்று சொல்லி எழுந்துவிட்டார். எனக்கு அவர்கள் ஏன் இந்த வீட்டைத் தேர்வு செய்யவில்லை என்பதைத்தெரிந்துகொள்ள வேண்டும். அதை நேரடியாகக் கேட்பது சரியாக இருக்காது. அது குறித்துப் பேச வாயெடுப்பதும் தவிர்ப்பதுமாய் இருந்தேன். பிரகாஷ் அதைக் கண்டுபிடித்துவிட்டார் என்பது அவருடைய முகக்குறிப்பில் தெரிந்தது. 

“வேற ஏதாவது சொல்லணுமா ஹரி?”

“இல்ல.. ஒன்னுமில்ல. தாங்க்ஸ்!”

“சரி வரேன் ஹரி. பை!” என்று சொல்லி வெளியேறி கதவைச் சாத்தினார். அது சரியாகச் சாத்தவில்லை. திரும்பவும் திறந்துநன்றாக இழுத்துச் சாத்த வேண்டும். அதற்காகக் கதவைத் திறந்தவர், எட்டிப் பார்த்தபடி, ஸாரி ஹரி, நாளைக்கு டூல்ஸ் எடுத்துட்டு வரேன். இதைக் கையோடு சரி பண்ணிடலாம்நிச்சயமா. ஐயம் ஸாரி!” என்றார். 

இழுத்துச் சாத்துவதற்கு முன்னர் என்னைப்பார்த்தபடி, “அந்த வீட்டுலயும் ஏற்கனவே ஒரு முஸ்லிம் ஃபேமிலி இருக்காங்க. அவங்களுக்குள்ள பேசிட்டு இவங்களே அங்க போறதா எங்கிட்ட சொன்னாங்க. சும்மா உங்க தகவலுக்குச் சொல்றேன். சரி, நீங்க பாருங்க. பை!” என்று சொல்லிவிட்டு கதவை இழுத்துச் சாத்தினார். 

அதைக் கேட்டதும் உண்மையில் சற்று ஏமாற்றமாக இருந்தது. 

அவர் சென்றதும் பால்கனிப் பகுதியிலிருந்த அந்த பிரஞ்ச் மாடல் பெரிய ஜன்னலைத் திறந்தேன். எங்கிருந்தோ கிளம்பிச்சில பறவைகள் சேர்ந்து பறந்துகொண்டிருந்தன. பெரிய கூட்டம் இல்லை. ஆயிரமோ நூறோ இல்லை. பத்து இருபதுஇருக்கும். அவ்வளவுதான்.

***

– கார்த்திக் பாலசுப்ரமணியன்
 

https://vanemmagazine.com/வலசை-கார்த்திக்-பாலசுப/

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வலசை நல்ல கதை......!

நான் லிபியாவில் வேலை செய்யும்போது இந்தப் பறவைகளின் சர்க்கஸ் போன்ற பறத்தலைப் பார்த்து ரசித்திருக்கிறேன்.......மிகவும் தாழ்வாகவும் பறந்து செல்லும்.....இந்தப் பறவைகள் பெரும் கூடமாகப் பறக்கும்போதே ஒரு ஓசை கேட்க்கும் அது அவைகளின் சிறகுகளின் அசைவில் இருந்து கூட வரலாம்......எமக்கு ஒரு மானேஜர் (சைபிரஸ்காரர்) இருந்தவர்......அவர் வாய்க்குள் சில இரும்பு குண்டுகளை வைத்துக் கொண்டு ஊதுகுழல் போன்ற ஒரு நீளமான பைப்பை வாயில் வைத்து இந்தப் பறவைகளை நோக்கி ஊதுவார், எப்படியும் இரண்டு மூன்று ஒருமுறையில் விழும்.......!  😁 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.