Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

உலகெங்கும் உள்ள ஈழத் தமிழ் உறவுகளே!

இது இரண்டு மாதங்கள் முன்பு வெளியான மிக மிக மிக முக்கியமான கட்டுரை! வெறும் அரசியல் அலசல் இல்லை இது. தமிழினப் படுகொலை தொடர்பாகப் பன்னாட்டளவில் இடைவிடாது செயல்பட்டு வரும் இயக்குநர் புகழேந்தி தங்கராசு அவர்கள் புலம்பெயர் தமிழர்கள் அனைவருக்கும் விடுத்துள்ள மிக முக்கியமான கடிதம்! புலம்பெயர் அமைப்புகளுக்கு ஒரு வரலாற்று முக்கியம் வாய்ந்த கோரிக்கை! படித்துப் பார்த்து இதில் உள்ள பரிந்துரையை உடனடியாக முன்னெடுக்க வேண்டுகிறேன்!🙏🏾 

* * * * *

spacer.png

மாலத் தீவு, சிங்கப்பூர், தாய்லாந்து… என்று கோட்டபாயவின் சுற்றுலா தொடர்ந்துகொண்டே இருக்கிறது. மத்திய கிழக்கு நாடுகளில் அடைக்கலம் தேட மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்துவிட்டன. விசாவை நீட்டிக்க முடியாதென்று சிங்கப்பூர் கைவிரித்துவிட்டது. 90 நாள் சுற்றுலா விசா தான் தரமுடியும் - என்கிற நிபந்தனையுடன், வேண்டாத விருந்தாளியாகத்தான் உள்ளே விடுகிறது தாய்லாந்து. 

தாய்லாந்துக்குப் பிறகு, எங்கே போவது? ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்கிற நிலை. வேறு வழியில்லாததால் நவம்பரில் இலங்கைக்கே திரும்ப வேண்டியிருக்கும் என்று உறுதியான தகவல். சப்ஸ்டியூட் ரணில் அதை விரும்பமாட்டார் என்று இன்னொரு தகவல். எது உண்மையென்று இன்னும் சில வாரங்களில் தெரியலாம்.

OZM8jARA0jl1xlGUTJE3.jpg

ஒன்றரை லட்சம் தமிழ் மக்களைக் கொன்று குவிக்க மூலகாரணமாக இருந்த ஒருவர், பல்லாயிரம் தமிழ்க் குழந்தைகளைப் பட்டினி போட்டுக் கொன்ற ஒருவர், இலங்கையின் போர்க் கதாநாயகன் என்று கூறிக்கொண்ட  ஒருவர், சிங்கள மக்களால் தான் அதிபரானேன் - என்று தம்பட்டமடித்த ஒருவர், அந்த மக்களாலேயே விரட்டியடிக்கப்பட்ட பிறகு, ஓடவும் முடியாமல் ஒளியவும் முடியாமல், திரிசங்கு நிலையில் கிடப்பதைப் பார்த்து, நாம் மகிழ்ச்சியடையவில்லை. நாம், இதையெல்லாம் சர்க்கரைப் பொங்கல் வைத்துக் கொண்டாடுகிற கோழைகளும் இல்லை.

SB75WBOA0d0vBxji8oNT.jpg

கோதா கோ ஹோம் என்கிற முழக்கத்தையே நாம் ஏற்கவில்லை. தூக்குமேடைக்கு அனுப்பப்பட வேண்டிய ஒரு கொடுங்குற்றவாளியை, பாதுகாப்பாக வீட்டுக்கு அனுப்பப் பார்க்கிறார்களே என்கிற வேதனையும் கவலையும்தான் வாட்டியது நம்மை!  நமக்கிருக்கிற கவலைகளும் அச்சங்களும் குன்றாமல் குறையாமல்  அப்படியே நீடிப்பதற்கு, குறைந்தது ஆயிரம் காரணமாவது சொல்லமுடியும். அவ்வளவு வலுவானது நமது குமுறல். எவ்வளவு காலம்தான் நாம் ஏமாற்றப்படுவோம் என்கிற குமுறல்.  இதை சிங்கள மக்களும் தலைவர்களும் புரிந்து கொள்ளவேயில்லையா, அல்லது புரியாததைப்போல நடிக்கிறார்களா - என்கிற கேள்வியைத்தான் எழுப்பியது கொழும்பில் நடந்த போராட்டம்.

lNiYxuAJNnwPwICSlT8u.jpg

2015ல், ராஜபக்சக்கள் மீதான சர்வதேசத்தின் பிடி இறுகிய நிலையில், அதிபர் நாற்காலியில் அமர்ந்த மைத்திரிபால, புதிய அரசு, புதிய நிர்வாகம், நல்லிணக்கம்….. என்று சொல்லிச் சொல்லியே, இன அழிப்புக்கு சர்வதேச நீதி கிடைக்கிற வாய்ப்பைத் தள்ளிப்போட்டுக் கொண்டே போனார். ராஜபக்சக்களுக்கு வாய்தா வாங்குவது மட்டுமே, ஜெனிவாவில் அவரது வேலையாக இருந்தது. 

சர்வதேசப் பொறிமுறையுடன் கூடிய விசாரணை - என்பதை ஜெனிவாவில் ஆதரித்துவிட்டு, கொழும்பில் நிராகரித்தது இலங்கை. ‘பார்த்தீர்களா பார்த்தீர்களா இலங்கையையே சம்மதிக்க வைத்துவிட்டோம்’ என்று ஜெனிவாவில் பீற்றிய தமிழ் ஏமாளிகள் முகத்தில் கரிபூசியது. சர்வதேச விசாரணை என்கிற பேச்சுக்கே இடமில்லை என்றார் மைத்திரிபால.  ராஜபக்சக்களை அவர் கையாண்ட விதமும், அவரை ராஜபக்சக்கள் கையாண்ட விதமும் ஜாடிக்கு மூடி சரிபோயிந்தி என்கிற லட்சணத்தில்தான் இருந்தது. இந்தத் தமிழ் ஏமாளிகளை எப்படிக் கையாண்டார்கள் என்பதுதான்  தெரியவேயில்லை. 

ODO4KdaDbZwTyZHkfA4b.jpg

ரணில் விஷயம் வேறு! இவர், மைத்திரிபால மாதிரி கிராமசேவகர் கிடையாது. ஜெயவர்தன போலவே, நரி. ‘நாடு திரும்ப உகந்த நேரம் வரவில்லை….’ என்று கோட்டபாயவுக்கே புளுத்துப்போன புளிசாத பார்சலை  அனுப்ப முடிகிறது இவரால்! கோட்டாவின் ராணுவம் தன்னிடம்  வாலாட்டினால், மேற்கு நாடுகளும் இந்தியாவும் உதவக் கூடும்… வெளியார் தயவில் பதவிக் காலத்தை ஓட்டிவிடலாம் என்கிற ரணிலின் நம்பிக்கை இதற்குக் காரணமாக இருக்கலாம். 

ரணிலின் நம்பிக்கையைத் தகர்க்கிறவிதத்தில், சர்வதேச அளவில் ஒரு துல்லியத் தாக்குதல் நடந்து முடிந்திருக்கிறது. அதை நடத்தியிருப்பவர், ஐ.நா. மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் மிஷேல் பச்லெட் அம்மையார். 2009ல் நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பில், 58 இலங்கை ராணுவ அதிகாரிகள் கைது செய்யப்பட வேண்டுமென்கிற மிஷேலின் அறிவிப்பு, ரணிலுக்கு நிச்சயமாக அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும்.

ரோம் சாசனத்தில் நான் கையெழுத்திடாததால் தான் ராஜபக்சக்கள் மின்சார நாற்காலியிலிருந்து தப்பினர் - என்றெல்லாம் பேசி, ‘அவர்கள் போர்க்குற்றவாளிகள் தான்’ என்பதை உறுதிசெய்தவர் ரணில்.   இப்போது என்ன செய்யப் போகிறார்? மனித  உரிமைகள் பேரவை சொல்வதை அவர் ஏற்க மறுத்தால், வெளிநாட்டு உதவிகளை நம்பி உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு நிற்கிற ஒரு நாடு என்ன ஆகும்? எல்லா உதவிகளையும் பெற்றுத் தருவேன் - என்று பேசிக் கொண்டிருக்கிற அவரது நிலைதான்  என்னவாகும்?

மைத்திரிபாலா மாதிரி, செய்வேன் ஆனால் செய்யமாட்டேன் என்று நாடகமாடுகிற காலச்சூழல் ரணிலுக்கு இல்லை. ஒன்று, அவர்களைக் கைது செய்யவேண்டும், அல்லது கைது செய்ய மாட்டேன் என்று அடம் பிடிக்க வேண்டும். இரண்டில் ஒன்றைத்தான் அவரால் செய்ய முடியும். ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது. 

தமிழின அழிப்பின் சூத்திரதாரிகளைக் காப்பாற்றத் தலைகீழாய் நின்றவர்கள் தமிழர் தரப்பிலும் இல்லாமலில்லை. இந்த உண்மையைத் தப்பித்தவறிக் கூட நாம் மறந்துவிடக் கூடாது. . இலங்கை அரசியல் இப்படியெல்லாம் தலைகீழாக மாறுமென்று அவர்கள் கனவிலும் நினைக்கவில்லை. தந்தை செல்வாவின் லட்சுமண ரேகை பற்றி கவலையேபடாமல், கொடியவர்களோடு கைகுலுக்கிக் கொடிவணக்கம் செய்தவர்கள் அவர்கள். ஸ்ரீலங்கா மாதோ நமோ நமோ என்று பாடியவர்கள். 58 பேரையும் கைது செய்தாக வேண்டுமென்று, அவர்களும் இப்போது குரல் கொடுத்தாக வேண்டும். ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது. தமிழீழ மண்ணில் அதற்கு வேறுமாதிரி மரியாதை தரப்படும். அது ஒன்றரை லட்சம் தமிழரின் ரத்தத்தால் சுத்திகரிக்கப்பட்டிருக்கும் மண்.

குற்றவாளிகள், குற்றவாளிகளுக்குத் துணை நின்றவர்கள், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியவர்கள் - என்று அத்தனைப்பேருக்கும் தப்பிக்கவே முடியாதபடி செக் வைத்திருக்கிறார் மிஷேல் பச்லெட். 

வேறொரு கோணத்தில் பார்த்தால், ரணிலுக்கு கிடைத்திருக்கிற நல்வாய்ப்பாகவும் இது மாறிவிடக் கூடும். அப்படியொரு வாய்ப்பு குறித்து ரணில் யோசிக்காமல் இருக்க மாட்டார். 

58 அதிகாரிகளைக் கைது செய்யாவிட்டால் சர்வதேச உதவிகள் கிடைக்காமல் போகலாம். அப்படியொரு நிலையில், 58 பேரையும் கைது செய் என்று ஒட்டுமொத்தத் தென்னிலங்கையும் முழங்கக் கூடும். 58 பேர் கைது செய்யப்படுவதன் மூலம், ரணிலுக்கு ராணுவத்தினரால் இருக்கிற ஆபத்தும்  ஓரளவு குறையலாம். 58 பேர் கைதானால், கோட்டபாயவும் கைது செய்யப்படுகிற நிலை நிச்சயமாக  உருவாகும். அப்படியொரு நிலையில், ரணில், அச்சமில்லாமல் பதவியில் தொடரலாம். என்றாலும், இந்த விஷயத்தில் ரணில் என்ன செய்வாரென்று இப்போது கணிக்க முடியவில்லை.

“தண்ணீர் கொதிக்கும் வரை, பாத்திரத்துக்குள் இருக்கிற நண்டு நடனமாடிக் கொண்டுதான் இருக்கும்” - என்பது ஒரு சிங்களப் பழமொழி. அப்படித்தான் ஆடிக் கொண்டிருக்கிறார் ரணில். மழையைப் பார்த்துப் பயப்படுபவர்களெல்லாம் என் குடைக்குக் கீழே வந்துவிடுங்கள் - என்று ஊரிலிருக்கிற அத்தனைக் கட்சியையும் அழைத்துக் கொண்டிருக்கிறார். கையில் ஒரு ஓட்டைக் குடையை வைத்துக் கொண்டு இப்படியெல்லாம் அழைப்பு விடுப்பது, அவருக்கு மட்டுமே சாத்தியம். இதெல்லாம் ஒரு பிழைப்பு - என்கிற விமர்சனத்தைக் காதில் போட்டுக் கொள்ளவே மாட்டார். 

இந்த லட்சணத்தில், கொள்கைப் பிரகடன உரை வேறு தேவைப்படுகிறது ரணிலுக்கு! இவரது பிரகடனமும், கோதபாயவின் பிரகடனத்தைப் போல்,  பௌத்த சாசனத்துக்கான முக்கியத்துவம் மற்றும் முதலிடம் குறித்து  அழுத்தந்திருத்தமாகப் பேசுகிறது.  சிங்கள பௌத்த வெறி - என்கிற பொறியை வைத்துத்தான் ராஜபக்ச பரிவாரம்  நாட்டைத் திவாலாக்கியது. கஜானாவைக் காலி செய்தது. நாக்கு வழிப்பதற்குக் கூட எதுவுமில்லை என்கிற நிலையை உருவாக்கியது. அதையேதான் பேசுகிறார்  ரணிலும்! கோவிட் போய் ஒமிக்ரான் வந்ததைப் போல, கோதா போய் ரணில் வந்திருக்கிறார்… அவ்வளவுதான்! 

ரணிலின் பிரகடனம் முழுக்கவே கேலிக்கூத்துதான் என்றாலும், அதிலிருக்கிற குரூர நகைச்சுவை, ‘இலங்கையை மீளக் கட்டியெழுப்ப புலம்பெயர் தமிழ் உறவுகள்  உதவ வேன்டும்’ என்பது. கொழுப்பில் தோய்த்தெடுத்த இந்தத்  தடித்த வார்த்தைகள், பௌத்த சிங்கள ஆதிக்கத் திமிரை உணர்த்துகின்றன. நாம் கொஞ்சம் அசந்தால், ‘வாகரை முதல் முள்ளிவாய்க்கால் வரை வேட்டையாடப்பட்ட ஒன்றரை லட்சம் தமிழர்களின் உறவுகளும் இலங்கையை மீளக் கட்டியெழுப்புவதில் துணை நிற்கவேண்டும்’ என்று கூட இந்த மனிதர் பேசக் கூடும். 

2015ல் மைத்திரிபாலவைப் பயன்படுத்தி ஆட்சியைப் பிடித்ததும், அவரை முந்திக்கொண்டு, சர்வதேச விசாரணை என்கிற பேச்சுக்கே இடமில்லை என்று சொன்ன பிரகஸ்பதி, இதே ரணில்தான்! அத்துடன் நில்லாமல், ராணுவத்தின் மீதான குற்றச்சாட்டுகளை நாமே விசாரித்து, அவர்கள் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிப்போம் என்று பொறுப்பேயில்லாமல் பேசியவர். அதிலிருந்து, அவர்களை அவர்களே விசாரித்தால் என்ன நடக்குமென்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. 

ரணில் இப்போது பேசுவதிலும், எதுவும் புதிதல்ல! ஏழு ஆண்டுகளுக்கு முன்பு பேசியதுதான்! எல்லாமே வெல்லப்பாகில் ஊறவைத்த பூச்சிமருந்து. . “புதிய இலங்கையை உருவாக்க அனைத்துத் தரப்பினரும் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும், தங்கள் தாயகத்தின் புதல்வியாக / புதல்வராக இலங்கையைச் சேர்ந்த ஒவ்வொருவரும் திகழவேண்டும்” என்பதெல்லாம் ரணிலின் நிரந்தர போதனைகள்.  

கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், யதார்த்தம் இடிக்கிறது.  ராஜபக்சவின் ராணுவத்தால் விரட்டி விரட்டிக் கொல்லப்பட்ட ஒன்றரை லட்சம் தமிழர்கள் யார்? அவர்கள்  அதே தாயகத்தின் புதல்வர்களும் புதல்விகளும் கிடையாதா? வேற்றுக் கிரகத்திலிருந்து வந்தவர்களா? சிங்கள ராணுவ மிருகங்களால் வயது வித்தியாசமில்லாமல் சீரழிக்கப்பட்ட எங்கள் சகோதரிகளை மறந்துவிட்டு, அதைக்கொண்டாட பால்சோறு பொங்கிய சமூகத்துடன் இணைந்து புதிய நாட்டை உருவாக்கப் பாடுபட வேண்டும் என்கிறாரா? 

தமிழருக்கு அநீதி இழைத்த ராணுவத்தைக் கூண்டில் ஏற்றாமல், இலங்கையின் பேரினவாத வெறிக்கு முடிவுகட்ட முடியாது. அதுவரை இலங்கை புதிய இலங்கையாக மாற வாய்ப்பேயில்லை. இதை ரணிலும் ஏனைய சிங்களத் தலைவர்களும் உணர்ந்துகொள்ளாவிட்டால் அந்த நாடு திருந்த வாய்ப்பேயில்லை.

தாயகத்திலிருக்கும் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கும், இந்த 58 பேர் கைது விவகாரம் ஓர் அரிய வாய்ப்புதான்! தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒருங்கிணைந்து  செயல்படவேண்டும் - என்கிற எண்ணம் வலுத்துவருகிற தருணத்தில், அவர்கள் ஒருங்கிணைந்து செயல்பட, இதைக்காட்டிலும் அருமையான  வாய்ப்பு கிடைத்துவிடப் போவதில்லை. சர்வதேசமும், உலகெங்கும் சிதறிக் கிடக்கிற லட்சக்கணக்கான தமிழ் மக்களும் தங்களை உன்னிப்பாகக் கவனிப்பதைத் தமிழ்த் தேசியக் கட்சிகள் புரிந்துகொள்ள வேண்டும். 

தமிழர் பகுதிகள் அனைத்திலும், தமிழர் வாழும் நாடுகள் அனைத்திலும், தமிழ்நாட்டிலும், இந்த 58 பேர் மீதான கைது நடவடிக்கையை வலியுறுத்தும் நிகழ்வுகள் அவசியம், அவசரம். இன்னும் ஒருபடி மேலே போய், ‘சர்வதேச விசாரணையை முறைப்படி அனுமதித்தால், பொருளாதார ரீதியாக இலங்கைக்கு உதவத் தயார்’ என்றுகூட புலம்பெயர் அமைப்புகள் அறிவிக்கலாம். ரணிலுக்கும் சிங்கள மக்களுக்கும் அது உறைக்கிறதா என்று பார்ப்போம். 

இந்த 58 என்பது வெறும் எண் அல்ல! குற்றவாளிகளின் எண்ணிக்கை. இது,  இன அழிப்பில் ஈடுபட்ட மற்ற குற்றவாளிகளுக்கான வலை. சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் விரிக்கப்பட்டிருக்கிற இந்த வலை எவ்வளவு வலுவானது என்பதை காலம் உணர்த்தும். அதற்கு முன்பாக, தமிழினத்தின் ஒற்றுமையையும் வேதனையையும் வலியையும் ஒன்றுபட்டு நின்று  சர்வதேசத்துக்கு நாம் உணர்த்தியாக வேண்டும். ஈழ மக்களை நேசிக்கும் அத்தனைப்பேரும் ஒற்றுமையுடன் இந்தக் களத்தில் இறங்குவது முக்கியம். . இதில் தனிப்பட்ட எவருக்கும் பெயர் கிடைத்துவிடப் போவதில்லை. எல்லாப் புகழும் மிஷேலுக்கே - என்பதால் அந்தப் பிரச்சினையே எழாது. இந்த விஷயத்தில் கூட நம்மால் ஒரே குரலில் பேச முடியாதென்றால், நாளைய தலைமுறையின் நக்கல் பார்வையிலிருந்து நாம் ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது. 

- புகழேந்தி தங்கராஜ்

நன்றி: தாரகம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.