Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நரபலி சர்ச்சை: தருமபுரி பெண் உள்பட இருவரை கொன்ற கேரள தம்பதி - என்ன நடந்தது?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நரபலி சர்ச்சை: தருமபுரி பெண் உள்பட இருவரை கொன்ற கேரள தம்பதி - என்ன நடந்தது?

11 அக்டோபர் 2022
 

கேரள கணவர் மனைவி

 

படக்குறிப்பு,

இரண்டு பெண்கள் நரபலி வழக்கில் கைதாகியுள்ள சந்தேக நபர்களான பகவல் சிங், லைலா

தமிழ்நாட்டின் தருமபுரியைச் சேர்ந்த பெண் உள்பட இருவரை கொன்றதாக கேரள மாநிலத்தின் எர்ணாகுளத்தில் ஒரு தம்பதி உள்பட மூன்று பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். பண ஆசையில் மந்திரவாதி என அறியப்பட்டவரின் யோசனையைக் கேட்டு இரண்டு பெண்களும் நரபலி கொடுக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

கேரள மாநிலம் பத்தனம்திட்டா திருவல்லாவைச் சேர்ந்தவர் பகவல் சிங். இவரது மனைவியின் பெயர் லைலா. பகவல்சிங் உள்ளூரில் பரம்பரை மருத்துவராக அறியப்படுகிறார்.

காலடியில் லாட்டரி சீட்டு விற்ற 49 வயது பெண் ரோசிலின். இவர் கடந்த ஜூன் மாதம் காணாமல் போனதாக அவரது உறவினர்கள் கூறி வந்தனர். இந்த நிலையில், உத்தர பிரதேசத்தில் வசிக்கும் இவரது மகள் கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதியன்று, தனது தாய் காணாமல் போய் விட்டதாக போலீஸில் புகார் அளித்திருந்தார்.

இந்த வழக்கு தொடர்பாக போலீஸார் புலனாய்வு செய்து வந்த நிலையில், செப்டம்பர் 27ஆம் தேதி எர்ணாகுளம் தெற்கு ரயில் நிலையத்தில் லாட்டரி சீட்டுகள் விற்ற தமிழகத்தின் தருமபுரியைச் சேர்ந்த பத்மா என்ற 52 வயது பெண் காணாமல் போனதாக போலீஸுக்கு தெரிய வந்தது. இதையடுத்து இந்த இரு பெண்கள் காணாமல் போன வழக்கை போலீஸார் விசாரித்து வந்தனர்.

 

இதைத்தொடர்ந்து வழக்கில் துப்பு துலங்கியது குறித்து கடவந்திரா போலீஸார் பிபிசி தமிழிடம் விவரித்தனர்.

"பத்மா என்ற பெண்ணை ஒரு நபர் அழைத்துச் சென்றது சிசிடிவி கேமரா காட்சிகள் உதவியுடன் கண்டறியப்பட்டது. விசாரணையில் அந்த நபர் ரஷித் என்ற முகமது ஷஃபி என்று தெரிய வந்தது. இந்த நபர், பத்தினம்திட்டாவின் திருவல்லாவில் வசித்து வரும் பரம்பரை மருத்துவரான பகவல் சிங், அவரது மனைவி லைலாவுக்காக அந்த பெண்ணை கடத்தி அழைத்து வந்ததாக அறிந்தோம். உள்ளூர்வாசியான இந்த தம்பதிக்கு பண கஷ்டம் இருந்துள்ளது. அந்த கஷ்டம் நீங்க நரபலி கொடுக்குமாறு முகமது ஷஃபி அறிவுரை வழங்கி சம்மதிக்கச் செய்துள்ளார். அதன் பேரில் தம்பதியின் வீட்டுக்கு நரபலி கொடுக்க பத்மா அழைத்து வரப்பட்டுள்ளார்," என்று போலீஸார் தெரிவித்தனர்.

 

கொலை வழக்கு

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்த வழக்கு தொடர்பாக கேரள காவல்துறையின் தென் மண்டல தலைவர் (ஐ.ஜி) பிரகாஷ் கூறும்போது, "எர்ணாகுளத்தில் இருந்து இரண்டு பெண்களை வெவ்வேறு காலகட்டங்களில் தம்பதியின் வீட்டுக்கு கொண்டு வர ரஷித் என்கிற முகமது ஷஃபி உதவியிருக்கிறார். ஆரம்பத்தில் அவர் ஒரு பெண்ணை அழைத்து நரபலி கொடுக்கும் விஷயத்தில் இடைத்தரகராக செயல்பட்டதாக சந்தேகம் இருந்தது. ஆனால், விசாரணையின் போக்கில்தான் பத்மா மட்டுமின்றி மேலும் ஒரு பெண்ணும் நரபலி கொடுத்ததாகவும் இந்த விவகாரத்துக்கே மூளையாக இருந்ததே முகமது ஷஃபிதான் என்றும் தெரிய வந்தது," என்று தெரிவித்தார்.

போலீஸ் விசாரணையில் அதிர்ச்சித் தகவல்

 

தருமபுரி

 

படக்குறிப்பு,

பத்மா

அதிர்ச்சிகரமான இந்த தகவல் குறித்த போலீஸாரின் புலனாய்வு குறித்து கொச்சி நகர காவல் ஆணையர் நாகராஜு சக்கிலம் பேசினார்.

"காணாமல் போனதாக கூறப்பட்ட பத்மா தொடர்பாக விசாரித்தபோது, அவரது செல்பேசியின் கடைசி தொலைத்தொடர்பு கோபுர இருப்பிட (டவர் லொகேஷன்) விவரத்தை வைத்து அவருடன் ஷஃபி தொடர்பில் இருந்ததை போலீஸார் உறுதிப்படுத்தினர். இதையடுத்து அவரை தடுத்து வைத்து விசாரித்ததில் திருவல்லாவில் உள்ள தம்பதியின் வீட்டில் மத சடங்கு என்ற பெயரில் இரு பெண்களை நரபலி கொடுத்ததாக ஷஃபி கூறினார். அதன் பேரில் சம்பந்தப்பட்ட தம்பதியை விசாரித்தோம். அப்போது பத்மா போலவே சில மாதங்களுக்கு முன்பு ரோசிலின் என்ற பெண்ணை கடத்தி வந்து நரபலி கொடுத்த தகவலை கைதான தம்பதி ஒப்புக் கொண்டனர்," என்று காவல் ஆணையர் கூறினார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

இந்த வழக்கில் அறிய வேண்டிய மேலும் சில தகவல்கள் இருப்பதாகவும் அவை சரிபார்க்கப்பட்ட பிறகே இரண்டு பெண்கள் கொல்லப்பட்டதற்கான முழுமையான பின்னணி புரிய வரும் என்றும் புலனாய்வாளர்கள் கூறுகின்றனர்.

கேரளாவுக்கு பத்மா சென்றது ஏன்?

 

தருமபுரி பெண் நரபலி

 

படக்குறிப்பு,

ரங்கன், பத்மாவின் கணவர்

நரபலி கொடுக்கப்பட்டதாக கூறப்படும் பத்மாவின் கணவர் ரங்கனிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.. மாநிலம் விட்டு மாநிலம் சென்று பிழைப்பு நடத்தலாம் என்பதற்காக என் மனைவியை கேரளாவுக்கு அனுப்பி வைத்தேன். ஆனால் இப்படி ஒரு நிலைமை அவளுக்கு வரும் என்று தெரிந்திருந்தால் நான் அவளை அந்த மாநிலத்திற்கு அனுப்பி வைத்திருக்கவே மாட்டேன் என்கிறார்.

"வயதாகி விட்டதால் என்னால் உழைக்க முடியவில்லை என்பதால் என் சார்பாக அவள் அங்கு சென்றாள். ஆனால் இப்படி ஒரு மரணம் அவர்களுக்கு வந்ததை என்னால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை வேறு. யாருக்கும் இப்படி ஒரு நிலைமை வரவே கூடாது," என்கிறார் ரங்கன்.

ஆரம்பநிலை விசாரணையில், இரு பெண்களின் கொலைக்கும் முகாந்திரம் நரபலி என்பது தெரிய வந்துள்ளது. திருவல்லாவில் உள்ள எலந்தூர் அருகே தம்பதியின் வீட்டு முற்றத்தில் இரண்டு பெண்களின் உடல் உறுப்புகள் புதைக்கப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். அங்கு தோண்டும் பணிக்கான சட்ட நடைமுறைகளை போலீஸார் மேற்கொண்டுள்ளனர்.

முன்னதாக, இந்த விவகாரத்தில் ரோசிலினின் மகள் மஞ்சு கடந்த ஆகஸ்ட் மாதம் தமது தாயைத் தேடி உத்தர பிரதேசத்தில் இருந்து கேரளாவுக்கு வந்துள்ளார். அப்போது தாயை காணாததால் அவரை கண்டுபிடித்துத் தருமாறு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த நிலையில், தனது தாயார் நரபலி கொடுக்கப்பட்டது தொடர்பான செய்திகள் ஊடகங்கள் மூலமாகவே தமக்கு தெரிய வந்ததாகவும் போலீஸார் இன்னும் அந்த தகவலை தம்மிடம் அதிகாரபூர்வமாக தெரிவிக்கவில்லை என்றும் மஞ்சு கூறுகிறார்.

https://www.bbc.com/tamil/india-63213757

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கேரள நரபலி: தோண்டப்பட்ட உடல்கள் - கைதான தம்பதி மனித மாமிசம் சாப்பிட்டார்களா?

2 மணி நேரங்களுக்கு முன்னர்
 

கேரள நரபலி

பட மூலாதாரம்,BBC/ARUN CHANDRA BOSE

 

படக்குறிப்பு,

கைதான மூன்று பேரில் ஒருவர் மாந்திரீகர் ஆக உள்ளூரில் அறியப்படுகிறார்

(எச்சரிக்கை: இந்த செய்தியில் உள்ள சில தகவல்கள் சில வாசகர்களுக்கு சங்கடத்தைத் தரலாம்.)

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள பெரும்பாவூரில் வசிக்கும் ரஷீத் என்கிற முகமது ஷாபி மற்றும் பத்தனம் திட்டாவில் உள்ள எலந்தூரைச் சேர்ந்த தம்பதி பகவல் சிங் மற்றும் லைலாவிடம் கொச்சி போலீஸார் நேற்றிரவு (அக்டோபர் 11) நடத்திய விசாரணையில் அவர்களால் நிகழ்த்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரட்டை கொலைகள் குறித்த சில தகவல்கள் தெரிய தெரியவந்துள்ளன.

பொன்னுருண்ணியைச் சேர்ந்த லாட்டரி விற்பனையாளரான பத்மா மற்றும் அங்கமாலி அருகே காலடியில் வசிக்கும் ரோஸ்லின் ஆகியோரின் பணத்தேவையை பயன்படுத்தி, இருவரையும் வெவ்வேறு மாதங்களில் கடத்தி வந்து நரபலி கொடுத்துள்ளதாக போலீஸ் நடத்திய ஆரம்பநிலை விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

பலியான இரு பெண்களும் காணாமல் போனதாக, கொச்சி நகரின் கடவந்திரா காவல் நிலையத்திலும், எர்ணாகுளம் கிராமத்தைச் சேர்ந்த காலடி காவல் காவல் நிலையத்திலும் ஏற்கெனவே போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

 

அவற்றின் மீதான விசாரணையில்தான் கேரள தம்பதி மற்றும் அவர்கள் கொடுத்ததாக சந்தேகிக்கப்படும் நரபலிக்கு மூளையாக செயல்பட்டதாக கருதப்படும் நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆரம்பத்தில் பத்மா என்ற தருமபுரியைச் சேர்ந்த பெண் காணாமல் போனது தொடர்பாகவே போலீஸார் விசாரித்து வந்தனர். அதில் ரஷீத் என்கிற முகமது ஷாஃபியை விசாரித்தபோது, எலந்தூர் தம்பதிக்காக கடந்த செப்டம்பர் 26ஆம் தேதி அவரை கடத்தி நரபலி கொடுத்ததாக தங்களிடம் கூறியதாக போலீஸார் தெரிவித்தனர். அத்துடன் கடந்த ஜூன் மாதம் 6ஆம் தேதி ரோஸ்லின் என்ற பெண்ணையும் இதேபோல கடத்தி வந்து நரபலி கொடுத்ததாக அவர் ஒப்புக்கொண்டதாக போலீசார் கூறுகின்றனர்.

"விசாரணை முடிவிலேயே உறுதியான தகவல் தெரியும்"

 

நரபலி

இந்த இரண்டு பெண்களும் காணாமல் போன இரண்டு மணி நேரத்திற்குள்ளாகவே கொல்லப்பட்டதாக கொச்சி காவல் துறை ஆணையர் நாகராஜு தெரிவித்தார்.

போலீஸ் விசாரணையில் கிடைத்து வரும் தகவல்கள் அடிப்படையில் மட்டுமே விசாரணை நடந்து வருவதாகவும் கொலைக்கான உண்மையான நோக்கமும் அவை நடத்தப்பட்ட விதமும் விசாரணை முடிவிலேயே தெரிய வரும் என்றும் காவல் ஆணையர் கூறினார்.

பண ஆசையில் கேரள தம்பதி பகவல் சிங் மற்றும் அவரது மனைவி லைலா செல்வச்செழிப்போடு, வாழும் நோக்கத்துக்காக இந்த நரபலி நடத்தப்பட்டதாக விசாரணையில் தெரிய வந்ததாக போலீஸார் தெரிவித்தனர். இந்த தம்பதியில் பகவல் சிங் உள்ளூரில் ஆயுர்வேத பரம்பரை மருத்துவராகவும் மசாஜ் செய்யும் வேலையிலும் ஈடுபட்டு வந்துள்ளார். அவரது மனைவி அவருக்கு உதவி வந்துள்ளார். முகமது ஷாஃபி மாந்திரீகராக உள்ளூரில் அறியப்படுகிறார்.

"இப்படியொரு சம்பவம் கேரளாவில் அசாதாரணமாக நடந்துள்ளது," என்று பகவல் சிங்கின் வீடு அருகே வசிப்பவர்கள் பிபிசியிடம் கூறியுள்ளனர்.

இந்த நிலையில், பத்மா மற்றும் ரோஸ்லின் உடல் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. பத்மா தமது முடிக்கு அணியும் கிளிப்பை வைத்து, அது அவரது உடல்தான் என அவரது சகோதரி உறுதிப்படுத்தினார்.

இதற்கிடையே, ஷாஃபியிடமிருந்து தப்பிய பெண் என தன்னை அழைத்துக் கொள்ளும் ஒருவர், தன்னுடைய அடையாளத்தை மறைத்துக் கொண்டு அளித்த பேட்டியில், ஷாஃபி மீது கொச்சி களமசேரி காவல் நிலையத்தில் ஒரு பெண்ணை மிதித்துக்கொன்றதாக வழக்கு உள்ளது. நான் அதிர்ஷ்டவசமாக அவரிடம் இருந்து தப்பித்தேன்," என்று தெரிவித்தார்.

நரபலி கொடுப்பதற்காக ஒரு பெண்ணுக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் வரை பேரம் பேசப்பட்டுள்ளது. அதன்படி பத்மாவை ஒப்படைக்க முகவராக செயல்பட்ட முகமது ஷாஃபிக்கு அந்த பணம் தரப்பட்டுள்ளது. அதில், ரூ. 15 ஆயிரத்தை முன்பணமாக முகமது ஷாஃபி வாங்கியுள்ளார் என்று போலீஸார் தெரிவித்தனர்.

 

குற்றம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அதே நேரத்தில், ரோஸ்லினை அழைத்து வர எவ்வளவு ரூபாய் வாங்கப்பட்டது என்பதை முகமது ஷாபி குறிப்பிடவில்லை என தெரிகிறது.

முகமது ஷாஃபி தனது மனைவியின் செல்பேசியில் இருந்து சமூக வலைதளத்தில் 'ஸ்ரீதேவி' என்ற பெயரில் போலி கணக்கை உருவாக்கினார். அதில் இருந்து மருத்துவரிடம் நட்பை ஏற்படுத்திக் கொண்டதாக முகமது ஷாஃபி தெரிவித்துள்ளார்.

பகவால் சிங்கை சந்தித்து, நெருக்கத்தை ஏற்படுத்திய பிறகு ஸ்ரீதேவியின் சுயவிவரத்தை நீக்கியதாகவும், முகமது ஷாஃபி கூறியதாக போலீஸார் தெரிவித்தனர். சமூக ஊடக பக்கத்தில் பதிவான ஸ்ரீதேவி என்ற அழிக்கப்பட்ட கணக்கின் தகவல்களை மீட்க கேரள காவல்துறை சைபர் கிரைம் பிரிவின் உதவியை நாடியுள்ளது.

முகமது ஷாஃபி மீது 8 வழக்குகள்

 

கேரள நரபலி

பட மூலாதாரம்,BBC/ARUN CHANDRA BOSE

 

படக்குறிப்பு,

முகமது ஷாபி

இதற்கிடையே, கைதான முகமது ஷாஃபி மீது புதன்குரிஸ் காவல் நிலையத்தில் பாலியல் வன்புணர்வு வழக்கு மற்றும் ஒரு கொலை வழக்கு உள்ளிட்ட எட்டு வழக்குகள் உள்ளதாக தெரிய வந்துள்ளது. மேலும், கொச்சியில் இடைத்தரகராக முகமது ஷாஃபி செயலாற்றி வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ஷாஃபி கொடுத்த தகவலின் அடிப்படையில் கைதான தம்பதியிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அதில், இருவரும் தங்களுடைய குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

மேலும், ஷாஃபியின் அறிவுறுத்தலின்படியே, நரபலி கொடுக்கப்பட்ட பெண்களின் உடல் பாகங்களை வெட்டியதாக அந்த தம்பதி கூறியுள்ளனர்.

இந்த தம்பதி மனித மாமிசத்தை சமைத்து சாப்பிட்டார்களா என்பது தொடர்பாக விசாரித்து வருவதாகவும் போலீஸார் கூறினர்.

மத்திய அமைச்சரின் சர்ச்சை குற்றச்சாட்டு

இந்த நிலையில், கேரளவைச் சேர்ந்த இந்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.முரளீதரன் இரட்டை நரபலி சர்ச்சை தொடர்பாக கேரள அரசை விமர்சித்து கருத்து வெளியிட்டிருந்தார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

மாநில காவல்துறையின் "தாமதமான நடவடிக்கை இது" என்றும், இந்த சம்பவத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாகவும் முரளிதரன் குற்றம்சாட்டினார்.

இத்தகைய சூழலில் இரண்டு நாட்களாக நடந்த விசாரணையின் முடிவில் பகவல் சிங், லைலா, முகமது ஷாஃபி ஆகிய மூன்று பேர் எர்ணாகுளம் துணை நீதிமன்றம் மற்றும் உதவி அமர்வு நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் புதன்கிழமை ஆஜர்படுத்தப்பட்டனர். அதைத்தொடர்ந்து, வழக்கின் விசாரணை அறிக்கையை காவல் துறையினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

அவற்றை பதிவு செய்து கொண்ட நீதிபதி, மூவரையும் அக்டோபர் 26ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

இதையடுத்து குற்றம்சாட்டப்பட்டுள்ள முகமது ஷாஃபி மற்றும் பகவல் சிங் காக்கநாடு மாவட்ட சிறைக்கும் லைலா பெண்கள் சிறைக்கும் அழைத்துச் சென்று நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர்.

https://www.bbc.com/tamil/india-63228532

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கேரள நரபலி: தோட்டம் முழுவதும் 56 உடல் பாகங்கள், 5 எலும்புக்கூடு துண்டுகள் - பிபிசி தமிழ் கள நிலவரம்

  • பி. சுதாகர்
  • பிபிசி தமிழுக்காக
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 

கேரள நரபலி

பட மூலாதாரம்,PTI

(எச்சரிக்கை: இந்த செய்தியில் இடம்பெறும் சில தகவல்கள் வாசகர்களுக்கு சங்கடத்தைத் தரலாம்)

கேரள மாநிலத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர் உள்பட இரண்டு பெண்களை கடத்தி நரபலி கொடுத்த சம்பவத்தில் மேலும் அதிர்ச்சி தரக்கூடிய தகவல்கள் வெளி வந்து கொண்டிருக்கின்றன. தற்போது கண்டுபிடிக்கப்பட்ட இந்த இரண்டு பெண்கள் கொலை மட்டுமின்றி ஷாஃபி மேலும் பல கொலைகளை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் எலந்தூர் மக்களிடையே நிலவுகிறது. அங்குள்ள கள நிலவரத்தை வழங்குகிறது பிபிசி தமிழ்.

குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான பகவல் சிங்கின் வீடருகே நாம் முதலில் சந்தித்த பெயர் வெளியிட விரும்பாத திண்டுக்கல்லை சேர்ந்த ஒரு பெண்மணி தாமும் மாந்திரீகரான ஷாஃபியின் வலையில் சிக்கவிருந்ததாகவும் அதில் இருந்து கடைசியில் மீண்டதாகவும் கூறினார்.

"முதலில் ஷாஃபியின் வேண்டுகோளுக்கிணங்க சென்றிருக்க வேண்டியது நான் தான். என்னிடம் ஒரு லட்சம் ரூபாய் வரை தருவதாக அவர் சொன்னார். ஆனால், கடைசியில் மனம் மாறினேன். என்னால் வர முடியாது என்று சொல்லி விட்டேன். அதன் பிறகுதான் ரோஸிலினை ஷாஃபி அழைத்துச் சென்றார்," என்று அந்த பெண்மணி தெரிவித்தார்.

 

நரபலி விவகாரத்தில் ஷாஃபி, இப்படி ஒரு கொடூர செயலை செய்திருப்பார் என்பதை நம்ப முடியவில்லை என்கிறார் அவரது மனைவி.

நரபலி கொடுக்கப்பட்ட இரண்டு பெண்களின் 61 உடல் பாகங்கள் பகவல் சிங் வீட்டிலுள்ள தோட்டத்தில் பல்வேறு இடங்களில் புதைக்கப்பட்டுள்ளதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அவை கச்சிதமாக கூர்மையான ஆயுதத்தால் வெட்டப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவற்றில் 56 உடல் பாகங்கள் பத்மாவுடையது. 5 எலும்புக்கூடு துண்டுகள் ரோஸ்லினுடையது என தெரிய வந்துள்ளது. அவற்றில் நேற்று 35 பாகங்களும் எஞ்சிய 26 பாகங்கள் இன்றும் பிரேத பரிசோதனை மற்றும் அதைத்தொடர்ந்த ரசாயன ஆய்வுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.

பத்மா, ரோஸ்லின் ஆகிய இரண்டு பெண்களின் உடல் பாகங்களும் ஒன்றுக்கொன்று கலந்திருப்பதால், தனித்தனியாக அவற்றைப் பிரித்தெடுக்க இருவருடைய ரத்த சம்பந்தப்பட்ட உறவினர்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. அவை மரபணு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

 

சிவப்புக் கோடு

 

சிவப்புக் கோடு

பதற்றத்தில் உள்ளூர் மக்கள்

 

கேரள நரபலி

எலந்தூர் பகுதியை சேர்ந்த சஜி நம்மிடம் பேசுகையில், "கடந்த இரண்டு மூன்று நாட்களாக, மக்களை குலை நடுங்கச் செய்யும் தகவலை கேட்டதில் இருந்து உறைந்து போயிருக்கிறோம். நடந்த சம்பவம் எங்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை தந்துள்ளது. கல்வி, கலாசாரம் வளர்ந்ததாக சொல்லப்படும் இன்றைய காலகட்டத்தில் இப்படி ஒரு செயல் நடந்திருப்பது வேதனையையும், பயத்தையும் தருகிறது," என்கிறார்.

"பொருளாதார ரீதியாக பணக்காரர் ஆவதற்கும் , சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கும் என்பதற்காகவும் மனித பலி பூஜை நடந்துள்ளது. சமீபத்தில் கூடத்தாய் என்ற இடத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த ஏழு பேரை விஷம் வைத்து கொன்ற சம்பவத்தை விட இச்சம்பவம் கொடூரமானது," என்கிறார் சஜி.

 

கேரள நரபலி

 

படக்குறிப்பு,

வீட்டுத்தோட்டப் பகுதியில் புதைக்கப்பட்ட உடல் பாகங்களை தோண்டியெடுக்க போலீஸார் வந்தபோது அங்கு குழுமிய மக்கள்

உள்ளூர் வியாபாரியான ஜோஸ், பகவல் சிங் வீட்டருகே சொந்த வீடு கட்டி கடந்த இரண்டு ஆண்டுகளாக வசித்து வருகிறார்.

தான் வேலைக்கு சென்று விடுவதால், பகவல் சிங் மற்றும் அவரது கும்பத்தினரை பார்த்தால் சிரிப்பதோடு சரி, அதிக பழக்கம் கிடையாது என்கிறார்.அவர்.

"பகவல் சிங் ஒரு ஆயுர்வேத வைத்தியர் என்பதால் சிகிச்சைக்காக அவரிடம் பலரும் செல்வர். பகவல் சிங்கும் அவரது மனைவி லைலாவும் அக்கம்பக்கத்தினரிடம் நன்றாகவே பழகினர். ஆரம்பத்தில் பகவல் சிங்கும் அவரது மனைவியும் கைதானபோது அப்பாவிகளை ஏன் போலீஸார் கைது செய்கிறார்கள் என்றே நினைத்தோம். அதற்கு பிறகு அவர்களின் செயல்கள் வெளிச்சத்துக்கு வரவே அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக இருக்கிறது," என்கிறார் ஜோஸ்.

இது போன்ற கொலைகள் மேலும் நடந்திருக்க வாய்ப்பு இருப்பதாக உள்ளூர்வாசிகள் சந்தேகப்படுவதால் காவல் துறை உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் ஜோஸ் கேட்டுக் கொண்டார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

போலீஸ் விசாரணை

 

கேரள நரபலி

 

படக்குறிப்பு,

உள்ளூர்வாசிகளிடம் விசாரணை நடத்தும் போலீஸார்

இதற்கிடையே, கடவந்திரா காவல் நிலையத்தில் இருந்து பகவல் சிங்கின் வீடருகே வசிப்பவர்களிடம் அவரை முன்பின் தெரியுமா என்ற கோணத்தில் போலீஸார் விசாரிக்கத் தொடங்கியுள்ளனர்.

பகவல் சிங் வைத்தியரை தெரியுமா? அவர் புகழ்பெற்றவரா என்று போலீஸார் கேட்டதாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர்.

இரண்டு பெண்களின் உடல் பாகங்கள் தோண்டி எடுக்கப்பட்டபோது, அரசு தரப்பு சாட்சியாக வட்டார பஞ்சாயத்து தலைவர் சாலி லாலு இருந்திருக்கிறார்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "வீட்டுத்தோட்டத்தில் குற்றம்சாட்டப்பவட்டர்கள் சொன்ன இடங்களில் எல்லாம் போலீஸார் தோண்ட நடவடிக்கை எடுத்தனர். நான் சாட்சியாக இருந்தேன். விவசாய நிலத்தில் சேனை கிழங்கு தோண்டுவதைப்போல, கொலை செய்யப்பட்ட பெண்களின் உடல் உறுப்புகள் கச்சிதமாக வெட்டப்பட்ட நிலையில் ஒவ்வொன்றாக கிடைத்தன. தோட்டத்தில் மழை பெய்ததால் உடல் பாகங்கள் சேறும் சகதியுமாக இருந்தன. பாகங்கள் எடுக்கப்பட்டபோது,புதைக்கப்பட்ட இடத்தில் அழுகிப்போன நாற்றம் அதிகமாக வீசியது," என்று கூறினார்.

உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக வெளியே எடுக்கப்பட்டபோது அவை இருந்த நிலையை வார்த்தைகளில் விவரிக்க முடியாது என்கிறார் சாலி லாலு.

பிற்பகலில் ஆரம்பித்து இரவு 10 மணிவரை புதைக்கப்பட்ட இடங்களில் உடல் பாகங்கள் தோண்டி எடுக்கப்பட்டன. கொலை செய்யப்பட்ட பெண்கள் உபயோகப்படுத்திய லிப்ஸ்டிக், கண்ணாடி, பர்ஸ், சாவி உள்ளிட்ட பொருட்களும் அங்கு கிடைத்தன.

"முதலில் பெண்களின் தலைகள் கிடைத்தன. இரண்டாவதாக கைப்பகுதி கிடைத்தன. மற்ற உறுப்புகள் எங்கே என்று கேட்ட போது, குற்றம்சாட்டப்பட்டவர்கள் வேறு குழிகளை காண்பித்தனர். அவர்கள் சொன்னபடியே மற்ற இடங்களில் வேறு உடல் உறுப்புகள் தோண்டி எடுக்கப்பட்டன.இதுபோல வேறு நரபலிகள் நடந்தனவா என்பது குறித்து போலீஸார் தான் விசாரிக்க வேண்டும்," என்கிறார் சாலி லாலு.

இதற்கிடையே, சம்பவ பகுதிக்கு வந்த ரோஸ்லினின் மகள் மஞ்சு வர்க்கீஸ் பிபிசி தமிழிடம் பேசினார். 2015ஆம் ஆண்டு முதல் இந்த ஆண்டு ஜனவரி மாதம்வரை உத்தர பிரதேசத்தில் இவர் ஆசிரியராக பணிபுரிந்துள்ளார்.

கேரளாவின் காலடிக்கு கடந்த ஜனவரி மாதம் வந்த அவர், தனது அம்மாவுடன் ஜனவரி பிப்ரவரி 18ஆம் தேதி வரை இருந்துள்ளார். மறுதினம் வடக்காஞ்சேரி ஓட்டுப்பாற என்ற இடத்தில் அறக்கட்டளையில் பணியில் சேர்ந்துள்ளார்.

"என் அம்மா லாட்டரி விற்கவில்லை"

தனது அம்மா ஜூன் 6 ஆம் தேதி முதல் காணவில்லை என்று காலடி காவல் நிலையத்தில் அவர் தகவல் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி முறைப்படி புகார் கொடுத்துள்ளார்.

"தம்பதி உள்பட மூவர் கடந்த செவ்வாய்கிழமை கைதான பிறகு ஊடகங்களில் செய்தி வெளிவந்தது.ஆனால், கொல்லப்பட்டது எனது அம்மாதான் என்பதை இன்னும் போலீஸார் என்னிடம் உறுதிப்படுத்தவில்லை," என்கிறார் மஞ்சு.

 

கேரள நரபலி

 

படக்குறிப்பு,

ரோஸிலின் (இடது), பத்மா (வலது)

தனது அம்மா ரோஸ்லின் காலடியில் வசித்து வந்ததாகவும், தன்னுடைய சகோதரன் இடுக்கி மாவட்டத்திலும், தான் வடக்காஞ்சேரியில் வசித்து வந்ததாகவும் ரோஸ்லின் தெரிவித்தார்.

தன்னுடைய அம்மாவை வட இந்தியாவிலேயே தன்னுடன் இருக்கச் சொன்னபோது, நிறைய பொருட்கள் வீட்டில் இருப்பதால், அதை எடுத்து வர முடியாது என அவர் கூறியதாக ரோஸ்லின் கூறினார்.

மேலும், சில ஊடகங்களில் குறிப்பிடப்படுவது போல தனது அம்மா லாட்டரி டிக்கெட் விற்பனை செய்யவில்லை என்றும் அவர் ஆயுர்வேத பொருட்களை விற்பனை செய்யும் பிரதிநிதியாக இருந்தார் என்றும் மஞ்சு கூறினார்.

இந்த நிலையில் ரோஸ்லின் பயன்படுத்திய மேக் அப் சாதனங்கள், குடை, பை ஆகியவற்றை மஞ்சுவிடம் காண்பித்து அவை அவருடைய தாயாருடையதுதான் என்பதை போலீஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

டிஎன்ஏ பரிசோதனைக்கு நடவடிக்கை

இந்த நிலையில், ரோஸ்லினின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் டிஎன்ஏ பரிசோதனைக்காக, அவரது மகள் மஞ்சுவின் மாதிரியை தடயவியல் துறையினர் பெற்று திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அதை அனுப்பி வைத்துள்ளனர்

ஷாஃபி பற்றி ஏதாவது தெரியுமா என மஞ்சுவிடம் நாம் கேட்டபோது, அவர் பற்றிய எந்த விவரமும் தனக்குத் தெரியாது என்றும் மஞ்சு கூறினார்.

இந்த விவகாரத்தில் வியாழக்கிழமை கடைசியாக வந்த தகவலின்படி ஷாஃபி, பகவல் சிங், லைலா ஆகிய 3 பேரை 12 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க எர்ணாகுளம் நீதிமன்றம் வியாழக்கிழமை அனுமதி அளித்துள்ளது.

https://www.bbc.com/tamil/india-63244782

  • கருத்துக்கள உறவுகள்

நரபலிக்கும் தமிழ் பெண்கள் தான் தேவைப்படுகிறார்கள்.😡

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.