Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

22வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு இன்று!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியல்

22வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு இன்று!

22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு இன்று பிற்பகல் நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.

நாடாளுமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது.

அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான 2ஆம் நாள் விவாதம் இன்று காலை 10.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறவுள்ளதுடன், விவாதத்தின் முடிவில் வாக்கெடுப்பும் நடத்தப்படவுள்ளது.

22வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு நிபந்தனைகளுடன் ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவு வழங்கும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

எவ்வாறாயினும் தேவையற்ற திருத்தங்களைச் சேர்க்கும் எந்தவொரு முயற்சியையும் ஆதரிக்கப் போவதில்லை என்றும் அவர் கூறினார்.

அதேபோன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் 22ஆவது திருத்தச் சட்டத்திற்கு தமது கட்சி ஆதரவளிக்கும் என நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார்.

இதேவேளை, திருத்தத்திற்கு பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சட்டமூலம் தொடர்பான இறுதிக் கருத்தினை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இன்று அறிவிக்கும் என அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர், நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1306185

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be a cartoon

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குறைபாடுகளை சுட்டிக்காட்டி 22ஆவது திருத்தத்துக்கு ஆதரவு வழங்க தயார் – சி.வி.

குறைபாடுகளை சுட்டிக்காட்டி 22ஆவது திருத்தத்துக்கு ஆதரவு வழங்க தயார் – சி.வி.

22ஆவது திருத்தத்துக்கு குறைபாடுகளை சுட்டிக்காட்டி ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

பொருளாதாரம் மற்றும் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணும் முதல் படியாக அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை கருதுவதாக அவர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் ஜனநாயக இலட்சினங்களை கொண்டிருந்தது என்றும் 22ஆவது திருத்தச் சட்டமூலம் முற்போக்கான விடயங்களை கொண்டுள்ளதை அவதானிக்க முடிகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

22ஆவது திருத்தத்தில் ஜனாதிபதியின் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்படவில்லை. என்பதோடு, அமைச்சரவை நியமனம்,அமைச்சின் செயலாளர் நியமனம் உள்ளிட்ட முக்கிய பல நியமனங்கள் ஜனாதிபதிக்கு பொறுப்பாக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டி்காட்டினார்.

மேலும் ஒருசிலரின் அபிலாசைகளையும் கோரிக்கைகளையும் நிறைவேற்றும் வகையில் 22ஆவது திருத்த வரைபு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நாடு பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் 22ஆவது திருத்தச் சட்ட நிறைவேற்றம் தற்போதைய நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு முதல் படியாக அமையும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

எனவே, 22ஆவது திருத்தத்தில் காணப்படும் ஒருசில குறைப்பாடுகளை சுட்டிக்காட்டி அதற்கு ஆதரவு வழங்க தீர்மானித்துளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்தார்.

https://athavannews.com/2022/1306211

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

22ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டுவந்து மக்களை ஏமாற்றுவதற்கு முயற்சி – சுமந்திரன்

22ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டுவந்து மக்களை ஏமாற்றுவதற்கு முயற்சி – சுமந்திரன்

மறுசீரமைப்பு என்ற பெயரில் 22ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டு வந்து மக்களை ஏமாற்றுவதற்கு ஆட்சியாளர்கள் முயற்சிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற 22ஆவது அரசியலமைப்பு திருத்தம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

22 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தை முக்கியமான மறுசீரமைப்பாக கருதப்படுகின்றது என்றும் ஆனால் உண்மையில் அவ்வாறு இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த திருத்தம் ஊடாக என்ன நடக்கப் போகின்றது என்றும் நாடாளுமன்றத்தில் 17ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு வாக்களித்தவர்களே 18 ஆவது திருத்தத்திற்கும் வாக்களித்தனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதேபோன்று அவர்கள் 19ஆவது திருத்தத்திற்கும் வாக்களித்ததுடன், பின்னர் 20ஆவது திருத்தத்திற்கு வாக்களித்துவிட்டு இப்போது 22ஆவது திருத்தத்திற்கு வாக்களிக்கவும் தயாராகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இவர்கள் ஓரிடத்தில் அல்லாது அங்கும் இங்குமாக ஊசலாடிக்கொண்டிருக்கின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது என்ன விதமான நாடாளுமன்றம் என கேள்வியெழுப்பிய அவர், மக்கள் மாற்றமொன்றையே கோருகின்றனர் என்றும் ஆனால் இந்த சபையில் இருக்கும் திருத்தம் நிறைவேற்றப்பட்டால் இதுவொரு மோசடியாகவே அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்றம் எங்களை தவறாக வழி நடத்தியுள்ளது என்று மக்கள் கூறும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மக்களுக்கு மாற்றங்களுக்கு முதலாவது படியென்று கூறி மக்களை ஏமாற்றுவதன் ஊடாக மக்கள் போராட்டம் வெடிக்கும் என்றும் எனவே, இந்த முயற்சியை தாங்கள் எதிர்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

https://athavannews.com/2022/1306221

  • கருத்துக்கள உறவுகள்

22ஆவது திருத்தத்துக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளேன் - சி.வி.விக்னேஸ்வரன்

By T. SARANYA

21 OCT, 2022 | 09:28 AM
image

(இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம்.வசீம்)

பொருளாதாரம் மற்றும் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணும் முதல் படியாக அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை கருதுகிறேன். ஆகவே குறைப்பாடுகளை சுட்டிக்காட்டி 22ஆவது திருத்தத்துக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளேன் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூல வரைபு மீதான விவாதத்தின் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூல வரைபு முற்போக்கான விடயங்களை கொண்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் ஜனநாயக இலட்சினங்களை கொண்டிருந்தது.

22ஆவது  திருத்தத்தில் ஜனாதிபதியின் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்படவில்லை. அமைச்சரவை நியமனம், அமைச்சின் செயலாளர் நியமனம் உள்ளிட்ட முக்கிய பல நியமனங்கள் ஜனாதிபதிக்கு பொறுப்பாக்கப்பட்டுள்ளது.

ஒருசிலரின் அபிலாசைகளையும், கோரிக்கைகளையும் நிறைவேற்றும் வகையில் 22ஆவது திருத்த வரைபு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

நாடு பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் 22ஆவது திருத்தச் சட்ட நிறைவேற்றம் தற்போதைய நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு முதல் படியாக அமையும்.

1978ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை தொடர்பில் சாதக மற்றும் பாதகமான விளைவுகள் குறிப்பிடப்படுகின்றன.

ஒட்டுமொத்த மக்களாலும் தெரிவு செய்யப்படும் ஜனாதிபதி நாட்டு மக்கள் அனைவருக்கும் பொறுப்பு கூற வேண்டும். அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்ட வகையில் ஜனாதிபதி செயற்படுவது அவசியமாகும்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை இந்த நாட்டில் சிறுபான்மை மக்களுக்கு எந்தளவுக்கு காப்பீடாக அமைந்தது என்பது கேள்விக்குறியானதே.

அரசியலமைப்பு திருத்தம் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ள பின்னிணியில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டால் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் முழுமையாக இரத்து செய்யப்படும். அவ்வாறு நீக்கப்பட்டால் 13ஆவது திருத்தம் ஊடாக தமிழர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வரையறுக்கப்பட்ட அதிகாரங்கள் கூட இல்லாமல் போகும்,ஆகவே 13ஆவது திருத்தம் குறித்து இந்தியா அவதானம் செலுத்த வேண்டும்.

பொருளாதார நெருக்கடிக்கு தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்வு காண்பார் என்ற நம்பிக்கை உள்ளது.வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்துக்கு முரண்பாடற்ற வகையில் தீர்வு வழங்கப்பட வேண்டும்.

ஆகவே 20ஆவது திருத்தத்தில் காணப்படும் ஒருசில குறைப்பாடுகளை சுட்டிக்காட்டி அதற்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளேன் என்றார்.

https://www.virakesari.lk/article/138115

  • கருத்துக்கள உறவுகள்

தனிப்பட்ட நலன் மற்றும் அரசியல் அதிகாரத்தை தக்கவைக்க அரசியலமைப்பு திருத்தம் செய்யப்படுகின்றது - டலஸ் அழகபெரும

By T. SARANYA

21 OCT, 2022 | 04:44 PM
image

(இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம்.வசீம்)

முன்னேற்றம் அடைந்துள்ள நாடுகள் தமது நாட்டின் நலனை மாத்திரம் இலக்காக கொண்டு அரசியலமைப்பை திருத்தம் செய்கின்றன. ஆனால் இங்கு தனிப்பட்ட நலன் மற்றும் அரசியல் அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக அரசியலமைப்பு திருத்தம் செய்யப்படுகின்றன.

மூன்று பிரதான நிபந்தனைகளின் அடிப்படையில் 22 ஆவது திருத்தத்திற்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளோம் என சுயாதீன பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகபெரும தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூல வரைபு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

புனர்வாழ்வு பணிய சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம் மதிக்கத்தக்கது. பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இச்சட்டமூலத்தை உயர்நீதிமன்றில் சவாலுக்குட்படுத்திய தரப்பினருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் மீதான விவாதம் அனுதாப பிரேரணை மீதான உரை போல் உள்ளது.

22 ஆவது திருத்தச் சட்டமூலம் குறித்து விசேட அவதானம் செலுத்த வேண்டும். தவறுகளை திருத்திக் கொள்வதற்காக 22 ஆவது திருத்தம் குறித்து அவதானம் செலுத்தப்படுகிறது.

1978ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இரண்டாம் குடியரசு யாப்பு இதுவரை 20 முறை திருத்தங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளமை குறித்து ஆராய வேண்டும். இதற்கான காரணத்தை தெரிந்து கொண்டால் அடுத்த முறை தவறை திருத்தி கொள்ளலாம்.

அரச தலைவர்,அரசியல் கட்சி மற்றும் குடும்பம் ஆகியவற்றை இலக்காக கொண்டு அரசியலமைப்பு திருத்தம் செய்யப்படுகிறது.

முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவுக்கு எதிராக முதலாவதாக அரசியலமைப்பு திருத்தம் செய்யப்பட்டது.தனது பிற தரப்பினரை இலக்காக கொண்டு பாராளுமன்றில் அரசியலமைப்பு திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

முன்னேற்றமடைந்த நாடுகள் தமது நாட்டின் நலனுக்காவே அரசியலமைப்பை உருவாக்கியுள்ளன.உலக மகா யுத்தத்துக்கு பின்னர் முன்னேற்றமடைந்த ஜப்பான் 5,000 சொற்களை கொண்ட அரசியலமைப்பை கொண்டுள்ளது.இதுவரை ஒருமுறை கூட திருத்தம் செய்யப்படவில்லை.

235 வருடகால பழமைவாய்ந்த அரசியலமைப்பை கொண்ட அமெரிக்கா இதுவரை 27 திருத்தங்களை மாத்திரம் அரசியலமைப்பிற்குள் உள்வாங்கியுள்ளது.

ஆனால் இங்கு தனிப்பட்ட நோக்கங்களை அடிப்படையாக கொண்டு அரசியலமைப்பு திருத்தம் செய்யப்படுகிறது. 1994 ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் இருந்த அரச தலைவர்கள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இரத்து செய்வதாக வாக்குறுதி வழங்குகிறார்கள். ஆனால் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் வழங்கிய வாக்குறுதியை மறந்து விடுகிறார்கள்.

பாராளுமன்றத்தில் இருந்து பறிக்கப்பட்ட அதிகாரம் மீண்டும் பாராளுமன்றத்துக்கு பொறுப்பாக்கப்பட வேண்டும். சுயாதீன ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட வேண்டும். அத்துடன் தனிப்பட்ட இலக்குகளை நோக்கமாக கொண்ட யோசனைகள் இரத்து செய்யப்பட வேண்டும் என்ற நிபந்தனைகளின் அடிப்படையில் 22 ஆவது திருத்தத்துக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளோம்.

https://www.virakesari.lk/article/138160

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியல்

22 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு பெரும்பான்மையான வாக்குகளால் நிறைவேற்றம்!

22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தின் மீதான வாக்கெடுப்பு இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது.

இதன்படி, 22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவாக 179 வாக்குகளும் எதிராக 01 வாக்குகளும் கிடைத்தன.

நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர மாத்திரம் சட்டமூலத்திற்கு எதிராக வாக்களித்திருந்தார்.

இதற்கமைய, சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் சபையில் அறிவித்தார்.

தொடர்ந்து, குழு கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.

https://athavannews.com/2022/1306399

  • கருத்துக்கள உறவுகள்

எந்தத் திருத்தம் நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்குத் தீர்வாக அமைந்தது – கோவிந்தன் கருணாகரம்

By VISHNU

21 OCT, 2022 | 07:42 PM
image

 

 

இதுவரை நடைபெற்றுள்ள 20 திருத்தங்களில் எந்தத் திருத்தம் நாட்டு மக்களின் நன்மைக்கானது. எந்தத் திருத்தம் ஆறு தசாப்தங்களுக்கு மேலாக நாட்டில் புரையோடிப்போன தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வானது.

இந்திய இலங்கை ஒப்பந்தப்படி அதன் நிர்ப்பந்தத்தினால் உருவான 13 வது திருத்தச் சட்டத்தினை இனப்பிரச்சினை தீர்வின் தொடக்கப்புள்ளியாக வைத்து முன்நோக்கிச் செல்லலாம் என்ற எமது எண்ணத்திலும் கூட அந்தச் சட்டத்தின் உள்ளடக்கத்தினை சிதைத்துச் சின்னாபின்னப்படுத்தி வலது குறைந்த நிலைக்குத் தள்ளி எமது எண்ணத்தில் மண்ணைத் தூவினீர்கள் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான  கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார். 

இன்றைய தினம் (21) வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் நடைபெற்ற அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டம் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர்,

இந்த உயரிய சபையில் இன்று நமது நாட்டின் அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டத்தை விவாதித்துக் கொண்டிருக்கின்றோம். இச் சந்தர்ப்பத்தில், எனது உரையினை சில வரலாற்றுக் கண்ணோட்டங்களோடு நோக்கிப் பார்க்கலாம் என எண்ணுகிறேன்.

அரசியலமைப்புச் சட்டம் ஒரு நாட்டின் அதியுயர் சட்டமாகும்.‘The constitution is the Supreme Law of the country’  என்பார்கள். அதிலிருந்துதான் நாட்டை ஆட்சி செய்வதற்கான அதிகாரத்தையும் வழிகாட்டலையும் ஆட்சியாளர்கள் பெறுகின்றார்கள்.

எமது நாடு வரலாற்றுக் காலம் முதல் 1833ல் கோல்புறுக் - கமரன், 1929ல் மனிங், 1924ல் மனிங் டெவன்சியர், 1931ல் டொனமுர், 1947ல் சோல்பரி என குடியரசாகும் வரை பல அரசியலமைப்புக்களைக் கண்டுள்ளது. 1972ல் டொமினியன் அந்தஸ்திலிருந்து குடியரசாக மாறியது. 1978ல் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு அரசியல் யாப்பு உருவாக்கப்பட்டது. இன்று இது 22வது திருத்தத்துக்கு உள்ளாக்கப்படுகிறது. இந்த அரசியலமைப்பின் வயது 44 வருடங்களாகும்.

ஒரு நாட்டின் அரசியலமைப்பு திருத்தம் செய்யப்பட முடியாததோ, திருத்தம் செய்யப்படக் கூடாததோ அல்ல. அத்திருத்தங்கள் நாட்டு நலனை, மக்கள் நலனை மட்டுமே கருத்தில் கொண்டதாக இருக்க வேண்டும். சுமார் 200 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாறு கொண்ட ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பு இதுவரை 27 திருத்தங்களைக் கண்டுள்ளது. 73 வருடங்களைக் கொண்ட இந்திய அரசியலமைப்பு இதுவரை 105 திருத்தங்களைக் கண்டுள்ளது.

இவற்றிலிருந்து நாம் தெரிந்து கொள்வது அரசியலமைப்பு ஒன்றும் கல்லில் பொழிந்த கல்வெட்டல்ல. தேவைக்கேற்ப திருத்தப்பட வேண்டியதே. இந்திய அரசிலமைப்பின் திருத்தங்கள் இந்திய பன்மைத்துவத்தின் ஊடாக இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டைப் பேணிப் பாதுகாக்க உதவியது. மொழி வாரி ரீதியாக இந்திய மானிலங்கள் உருவாக்கப்பட்டு, இந்திய சமஸ்ரி அரசியலமைப்பு உருவாக்கப்பட்டதே இன்றளவும் இந்தியா அகண்ட பாரதமாக பிரிவினையற்ற ஒரே தேசமாக உலகில் தலை நிமிர்ந்து நிற்பதற்கான காரணமாகும்.  ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பும் பல்வேறு தேசிய இனங்களினதும் சுய நிர்ணய உரிமையைக் கருத்தில் கொண்டு சமஸ்டி அரசியலமைப்பின் ஊடாக தனி ஒரு வல்லரசாக உலகில் உயர்ந்து நிற்கின்றது.

இத்தகைய அரசியலமைப்பு திருத்தங்களின் பின்னணியில் எமது நாட்டில் இதுவரை கொண்டு வந்த 20 திருத்தங்களும் நாட்டின் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க அல்லது நாட்டின் தேசியப் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்வதற்காக நாட்டின் பல்லின, இருமொழி சமத்துவத்தைப் பேணுவதற்காக இனங்களிடையே, மதங்களிடையே மொழிகளிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக கொண்டுவந்த ஒரு அரசியல் திட்டத் சீர்திருத்தத்தை உங்கள் மனச்சாட்சியின் படி தொட்டுக் காட்ட முடியுமா,?

திருத்தப்பட்ட அரசியலமைப்புத் திருத்தங்களின் வரலாறுகளைக் கூறினால் அது நீண்டுவிடும். அதற்காக ஒரு சில உதாரணங்களைக் கூறுகின்றேன்.

எமது அரசியலமைப்பின் 2வது திருத்தம் அப்போதைய தமிழர் விடுதலைக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்லையா இராசதுரை அவர்கள். தமிழர் விடுதலைக் கூட்டணியிலிருந்து தாவியதன் மூலம் அப்போதைய அரசியலமைப்புச் சட்டப்படி அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெறிதாகிவிடும் என்பதற்காக அவருடைய பாராளுமன்ற உறுப்பினர் பதவியைக் காப்பாற்றுவதற்காகக் கொண்டுவரப்பட்ட சீர்திருத்தம்.

3வது திருத்தம் 6 வருடங்களுக்கு ஒரு முறை ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற விதியினை முதல் தடவையாகத் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி ஒருவர் தனது பதவிக்காலத்தின் 4 ஆண்டினை முடித்த பின்னர் அடுத்த ஜனாதிபதித் தவணைக்குத் தேர்தலை நடத்தலாம் என்பது.

4வது திருத்தம் 1997ஆம் ஆண்டு தேர்தல் முடிந்து 6அண்டுகளில் அதாவது 1983ஆம் ஆண்டு கலைக்கப்பட வேண்டிய பாராளுமன்றத்தை 1989ஆம் ஆண்டுவரை நீடிப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட சீர்திருத்தம்.

6வது திருத்தம் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்களை இலக்கு வைத்து அவர்களுடைய பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளை இல்லாமல் செய்வதற்கும். தமிழர் ஒருவர் இனிமேல் எதிர்க்கட்சித் தலைவராக வர கூடாது என்பதற்காக கொண்டுவரப்பட்ட திருத்ததம்.

13வது திருத்தம் ஆட்சியாளர்களது விருப்பத்துக்கு மாறாக பெரும்பான்மை இன  பாராளுமன்ற உறுப்பினர்களது விருப்பத்துக்கு மாறாக இந்திய இலங்கை ஒப்பந்தத்தினால், பிரசவிக்கப்பட்ட குழந்தை.

18வது திருத்தம் மஹிந்தவினுடைய ஜனாதிபதி நிறைவேற்று அதிகாரங்களினை மேலும் வலுப்படுத்துவதற்காகக் கொண்டுவரப்பட்ட திருத்தம்.

19வது திருத்த் நல்லாட்சி அரசாங்கம் என்று கூறப்பட்ட நல்லாட்சி அரசினால், ஜனநாயகத்;தை மீளக் கொண்டுவருவதற்காக கொண்டுவரப்பட்ட திருத்தம் எனக் கூறப்பட்டாலும் அதன் அடிப்படை நோக்கம் ராஜபக்ச குடும்பத்தை மையப்படுத்தி அவர்களை இலங்கை அரசியலிலிருந்து ஒழித்துக் கட்டுவதற்காகக் கொண்டுவரப்பட்ட திருத்தமே ஆகும்.

20வது திருத்தம் கோட்டபாய ராஜபக்சவின் அதிகார வெறிக்கு தீனி போடுவதற்காக கொண்டுவரப்பட்ட திருத்தம்.

என்னால் உதாரணத்துக்காக எடுத்துக் காட்டப்பட்ட இந்தத் திருத்தங்களில் எந்தத் திருத்தம் நாட்டு நன்மைக்கானது எந்தத் திருத்தம் நாட்டு மக்களின் நன்மைக்கானது. எந்தத் திருத்தம் ஆறு தசாப்தங்களுக்கு மேலாக நாட்டில் புரையோடிப்போன தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வானது. இந்திய இலங்கை ஒப்பந்தப்படி அதன் நிர்ப்பந்தத்தினால் உருவான 13வது திருத்தச் சட்டத்தினை இனப்பிரச்சினை தீர்வின் தொடக்கப்புள்ளியாக வைத்து முன்நோக்கிச் செல்லலாம் என்ற எமது எண்ணத்திலும் கூட அந்தச் சட்டத்தின் உள்ளடக்கத்தினை சிதைத்துச் சின்னாபின்னப்படுத்தி வலது குறைந்த நிலைக்குத் தள்ளி எமது எண்ணத்தில் மண்ணைத் தூவினீர்கள்.

உங்களுடைய தேவைக்காக பேரினவாத நிகழ்ச்சி நிரலுக்கான அரசியலமைப்பின் 7வது திருத்தத்தின் மூலம் இலங்கையின் 24 நிருவாக மாவட்டங்களை 25 நிருவாக மாவட்டங்களாக மாற்றினீர்கள். உங்களுடைய தேவைக்காக மாகாணங்களின் எல்லைகளைப் பிரித்து அருகிலுள்ள மாகாணங்களுடன் இணைத்து தமிழர்களின் குடிப்பரம்பலைக்குறைத்து அந்தந்த மாகாணங்களில் தமிழர்களை சிறுபான்மையினராக்குவதற்காக காரியங்களைச் செய்தீர்கள்.

உங்களுக்குத் தேவையெனில் பிரதேச சபைகளை, பிரதேச செயலகப்பிரிவுகளை உருவாக்குவீர்கள். ஆனால், என்றோ உருவாக்கப்பட்டு இயங்கிக் கொண்டிருக்கும் எம் தமிழர்களுக்கான கல்முனை வடக்கு பிரதேச செலயகத்தினை தரமுயர்த்துவதற்கு உங்களுக்கு இனவாதமொன்றைத் தவிர எந்த அரசியலமைப்பின் உறுப்புரை தடை செய்கிறது.

1881ஆம் ஆண்டுக்குப் பின்னர் அடுத்தடுத்து எடுக்கப்பட்ட குடிசன மதிபபீட்டின் பரம்பலை உற்றுநோக்கும் எவரும் தமிழர்கள் தமது சொந்த மண்ணிலேயே சிறுபான்மையாக்கப்பட்ட உண்மைத் தன்மையினை மறுதலிக்க முடியாது.

வரலாறு முற்றும் கற்றுத் தெரிந்த முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர திருகோணமலைப் பெயருக்கு புதிய அர்த்தம் கற்பிக்கின்றார். திருகோணமலையில் அல்லை, கந்தளாய், சீனித் தொழிற்சாலை குடியேற்றங்கள் ஏற்படும் வரையும் 3 வீதத்துக்கும் குறைவான சிங்களவர்களே வாழ்ந்தார்கள் என்பதை அவர் அறிவாரா? மூன்று இனங்கள் வாழ்ந்ததனால் அல்ல மூன்று மலைகள் சூழ உள்ளதனால் திருகோணமலை என்ற பெயர் வந்ததென்பதை அவர் அறிவாரா?

இன்று ஒரு தொகுதியாக உருவாக்கப்பட்ட சேருவில அன்று தோப்பூர் கிராம சேவையாளர் பிரிவின் ஒரு பகுதியாகவே இருந்த உண்மையை சரத் வீரசேகர அறிவாரா? பேரினவாதத்தின் தேவைக்காக அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் ஒரு மாவட்டத்தைக் கூட்டுவீர்கள். ஒரு தேர்தல் தொகுதியை உருவாக்குவீர்கள்.

ஒரு மாகாணத்தின் ஒரு பிரிவினை இன்னொரு மாகாணத்தோடு இணைப்பீர்கள். ஆனால், தேசிய இனப்பிரச்சினைத் தீர்வுக்காக வடக்கு கிழக்கினை இணைத்து எமது பிரச்சினையினைத் தீர்ப்பது பயங்கரவாதமும் பிரிவினைவாதமுமென்பீர்கள். அரசியலமைப்புக்கு முரண் என்பீர்கள்.  

நீங்கள் மேற்கொண்ட அத்தனை அரசியலமைப்பு திருத்தங்களும் அந்தந்த நேரத்தில் ஆட்சி செய்த கட்சியினுடைய நலனுக்காக ஆட்சித் தலைவருடைய நலனுக்காக அவர்களுடைய குடும்பத்தினருடைய நலனுக்காக அவர்களுடைய ஆதரவாளர்களுடைய நலனுக்காக மேற்கொள்ளப்பட்தேயொழிய நாட்டுக்காக மக்களின் நலனுக்காக மேற்கொள்ளப்பட்டவையல்ல.

இந்த நிலைமையில் நாம் 22ஆவது திருத்தத்தை நிறைவேற்றிக் காணப்போவது என்ன இன நல்லிணக்கமா, மத நல்லிணக்கமா, தேசிய ஒருமைப்பாடா அல்லது பொருளாதார மேம்பாடா, இதில் எதைக் குறிவைத்து இந்த 22ஆவது திருதத்தை நாம் விவாதித்துக் கொண்டிருக்கிறோம்.

உலகில் ஜனநாயகத்தை மதிக்கும் ஜனநாயகத்தைப் பேணும் ஜனநாயகத்தைப் போற்றும்  எந்த நாட்டிலும் எந்த ஒரு தலைவரும் மேற்கொள்ளாத அரசியலமைப்புத் திருத்தத்தங்களைச்  செய்து சாதனை படைத்தவர்கள் நீங்கள்.

மக்களால் தெரவு செய்யப்பட்ட ஜனாதிபதியும் பாராளுமன்றத்தால் தெரிவு செய்யப்பட்ட பிரதமரும் ஒருமித்துச் செயற்பட முடியாத வரலாற்றுச் சாதனைக்குரியவர்கள் நீங்கள். தேர்தல் முடிந்ததும் வாக்களித்த மக்களுக்கு நன்றியுரையாற்றுகையில் எந்த ஒரு ஜனநாயக நாட்டின் தலைவரும் உரையாற்றாத வகையில் தனக்கு வாக்களிக்காதவர்களின் முகத்தில் காறி உமிழ்வது போல பெரும்பான்மை மக்களின் பெரும்பான்மை வாக்குகளால் வெற்றி பெற்றவன் நான் என்று போதி மரத்தின் கீழ் நின்று உரையாற்றி மக்களது வாக்களிக்கும் ஜனநாயக உரிமையை மதிக்காது மமதை கொண்ட சாதனை படைத்தவர்கள் நீங்கள்.

பதவியேற்கும்போது இலங்கை அரசியலமைப்பைப் பேணிப்பாதுகாப்பேன் அதனை மீறாது அதன் வழிநடப்பேன் என சத்தியம் செய்து உறுதி மொழியெடுத்த நீங்கள் இலங்கை அரசியலமைப்பின் எத்தனை சரத்துக்களை மீறியுள்ளீர்கள். குறிப்பாக அரசியலமைப்பின் அங்கமான 13வது திருத்தத்தை அப்பட்டமாக மீறி, குறுக்கு வழியில் அதைச் சின்னாபின்னப்படுத்தி இந்த அரசியலமைப்பினையே மீறிச் சாதனை படைத்தவர்கள் நீங்கள்.

இந்தச் சபையின் ஊடாக நாட்டின் பெரும்பான்மைச் சிங்கள  பொளத்த மக்களிடம் சில கேள்விகளைக் கேட்க விரும்புகிறேன்.

ஆட்சியினைக் கைப்பற்றுவதற்காக, பதவியினைக் கைப்பற்றுவதற்காக, அதிகாரத்தினைக் கைப்பற்றுவதற்காக எந்த ஒரு தமிழ் அரசியல்வாதியாவது மதம் மாறியதுண்டா? ஏந்த ஒரு அரசியல்வாதியாவது, தான் வழமையாக அணிந்துவந்த ஆடையினை மாற்றியதுண்டா, தனது பெயரினை மாற்றியதுண்டா, உறவுகளை மாற்றியதுண்டா, கலப்பு மணம் புருpந்ததுண்டா, பெயரை மாற்றியதுண்டா, தன் வழமையான கையெழுத்தைத்தான் மாற்றியதுண்டா.

டொன் ஸ்ரீபன் சேநாயக்கா தொடக்கம் சொலமன் வில்லியம் றிஜ்வே டயஸ் பண்டாரநாயக்க, யூனியஸ் றிச்சட் ஜெயவர்த்தனா ஈறாக இன்றைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வரை இதில் அடக்கமானவர்களே.

ஆனால், நாடு கையறு நிலையில் இருந்த போது இந்த நாட்டின் ஜனநாயகப் பெருமைகளைக் காப்பாற்றுவதற்காக, பாராளுமன்றத்தின் மாண்பினைக் காப்பாற்றுவதற்காக, ஜனநாயக விரோத சட்டங்களினைத் தோலுரித்துக் காட்டுவதற்காக நடவடிக்கையெடுத்தவர்கள், தமிழர்களும் தமிழ்ப்பாராளுமன்ற உறுப்பினர்களுமே என்பதனை நான் இந்த உயரிய சபையில் உரத்துப் பதிவு செய்து கொள்ள விரும்புகிறேன.

மக்களின் அமோக ஆதரவு பெற்ற அரசுத் தலைவர் அதே மக்களினால் பதவியிலிருந்து துரத்தப்படுகிறார். தேசியப்பட்டியயல் ஊடாக பதவிக்கு வந்த  ஒரேயாரு பாராளுமன்ற உறுப்பினர் நாட்டின் அதியுயர் பதவிளை அலங்கரிக்கிறார். பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்ட கட்சியிலிருந்து ஜனநாயகத் தன்மைக்கு விரோதமாக சுயாதீன அணியென்று ஒரு குழு இயங்குகின்றது.

அவ்வாறு இயங்குபவர்கள் இனவாத அரசியல்வாதிகளை தமக்கு இடது புறத்திலும் வலது புறத்திதலும் வைத்துக் கொண்டு நாட்டை முன்னேற்ற முயல்கின்றார்கள். இதில் ஒரு முக்கியமென்னவென்றால் இவர்களில் ஒருவரைநம்பி கடந்த பாராளுமன்றத்தில் நடந்த ஜனாதிபதித் தெரிவில் நாமும் வாக்களிக்கவேண்டிய நிர்ப்பந்தம் கூட எமக்கு ஏற்பட்டது.

இறுதியாக 22வது திருத்தம் குறித்து இரண்டு விடயங்களைக் கூற விரும்புகின்றேன். இதற்கு நாங்கள் இதற்கு வாக்களிகளிப்பதா இல்லையா என்பதைச் சிந்திப்பதற்காக, இந்த அரசாங்கம் 8 அரசியல் கைதிகளை விடுதலை செய்கின்றது. அதை விட இரட்டைப் பிரஜா உரிமையில் தனிப்பட்ட ரீதியில் பாதிக்கப்பட்டவன் நான். அதைக் கொண்டு வருவதை மீண்டும் வெறுக்கின்றேன்.

https://www.virakesari.lk/article/138166

  • கருத்துக்கள உறவுகள்

இரட்டை குடியுரிமையை கொண்ட தமது தலைவரை பாதுகாக்கவே ஆளும் தரப்பினர் 22 ஐ எதிர்த்தனர் - அநுரகுமார

By T. SARANYA

21 OCT, 2022 | 09:40 PM
image

(இராஜதுரை ஹஷான், எம்.ஆர்.எம்.வசீம்)

ஆளும் தரப்பின் பெரும்பாலான உறுப்பினர்கள் தமது பாராளுமன்ற பதவி காலம், ஓய்வூதியம் மற்றும் தமது இரட்டை குடியுரிமையை கொண்ட தலைவரை பாதுகாத்தல் உள்ளிட்ட காரணிகளை கொண்டு 22 ஆவது திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இவ்வாறானவர்களை கொண்டு எவ்வாறு நாடு என்ற ரீதியில் முன்னேற்றமடைய முடியும்.

1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பு யாப்பு நாட்டின் அடிப்படை பிரச்சனைகளை தீவிரப்படுத்தியதை எவராலும் மறுக்க முடியாது.

ஜனநாயகம்,தேசிய நல்லிணக்கததை உறுதிப்படுத்த வேண்டுமாயின் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூல வரைபு மீதான விவாதத்தின் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

1978ஆம் இரண்டாம் குடியரசு அரசியல் யாப்பு இந்த நாட்டின் அடிப்படை பிரச்சினைக்கு ஒருபோதும் தீர்வினை பெற்றுக்கொடுக்காது.

இனங்களுக்கிடையில் பிளவினை ஏற்படுத்தி நாட்டை மோசமான நிலைக்கு கொண்டு செல்லும் என்பது தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஜனநாயகத்தை பாதுகாக்கும் நோக்கில் 2001ஆம் ஆண்டு அரசியலமைப்பு திருத்தம் செய்யப்பட்டது.இத்திருத்தத்துக்கு ஒரு உறுப்பினரை தவிர ஏனைய சகல உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தார்கள்.

2010ஆம் ஆண்டு 17ஆம் திருத்தத்தை இரத்து செய்யும் வகையில் 18ஆவது திருத்தம் கொண்டு வரப்பட்டு எமது எதிர்ப்புக்கு மத்தியில் அது நிறைவேற்றப்பட்டது.

2015ஆம் ஆண்டு ஜனநாயகத்தை முன்னிலைப்படுத்தி அரசியலமைப்பின் 19அவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.19ஆவது திருத்தத்துக்கு எதிராக 2020ஆம் ஆண்டு அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டது.

தற்போது 20ஆவது திருத்தத்துக்கு எதிராக 22ஆவது திருத்தம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதுவரை திருத்தம் செய்யப்பட்ட அனைத்து திருத்தங்களுக்கும் தொடர்ந்து எவ்வித வேறுபாடுமின்றி ஆதரவாக வாக்களித்தவர்கள் இன்றும் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கிறார்கள்.

22ஆவது திருத்தச் சட்டமூல வரைபு மீதான விவாதத்தில் இரண்டாவதாக உரையாற்றிய அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா 2001ஆம்,2010ஆம் ஆண்டும்,2015 மற்றும் 2019ஆம் ஆண்டும் அமைச்சராக பதவி வகித்தார். 

அனைத்து அரசியல் திருத்தங்களுக்கும் ஆதரவாக வாக்களித்தார்.2019ஆம் ஆண்டு 19ஆவது திருத்தத்தை நீக்கவும், 2020ஆம் ஆண்டு 20ஆவது திருத்தத்தை நிறைவேற்றவும் ஆதரவாக வாக்களித்தார். தற்போது 22ஆவது திருத்தத்துக்கும் ஆதரவு வழங்கவுள்ளார்.தற்போதும் அவர் அமைச்சர்.

அரசியலமைப்பு திருத்தம் செய்யப்பட்டாலும்,அமைச்சு பதவிகளில் மாற்றம் ஏற்படவில்லை.ஒரு திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்து பிறகு அந்த திருத்தத்துக்கு எதிராக வாக்களிக்கும் விந்தையான மனிதர்கள் இந்த பாராளுமன்றத்தில் உள்ளார்கள். அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டால் நாடு எதிர்கொள்ளும் மோசமான நிலையை எடுத்துரைத்தோம்.

20ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்தவர்களில் பெரும்பாலான சிரேஷ்ட அரசியல்வாதிகள் தற்போது 22ஆவது திருத்தமே இறுதி தீர்வு என புகழ்பாடுகிறார்கள்.சரியோ,பிழையோ பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர ஒரே கொள்கையில் உள்ளமை மதிக்கத்தக்கது.தேவைக்கு ஏற்றாட் போல் மாறும் பாராளுமன்ற உறுப்பினர்களை மக்கள் வெறுப்பது ஒன்றும் வியப்புக்குரிய விடயமல்ல.

நாட்டின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தவும்,பொருளாதாரத்தை மேம்படுத்தவும்,இன பிரச்சினைக்கு தீர்வு வழங்கவும் நடைமுறையில் உள்ள அரசியலமைப்பின் இரண்டாவது யாப்பு பொருத்தமானதாக இல்லை என்பதை தொடர்ந்து குறிப்பிட்டு வருகிறோம்.

44 வருடகால பழமையான இந்த அரசியல் யாப்பு நாட்டின் அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் அமையவில்லை.மாறாக பிரச்சனைகளை தீவிரப்படுத்தியுள்ளது.நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை இரண்டாம் குடியரசு யாப்பின் பலவீனத்திற்கு பிரதான அம்சமாக உள்ளது.

ஜனநாயகத்தையும்,தமிழ,முஸ்லிம்,சிங்கள மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் பொருத்தமான அம்சங்களை உள்ளடக்கிய வகையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.1978ஆம் ஆண்டு யாப்புக்கு நாங்கள் உடன்படவில்லை,மாறாக கட்டுப்படுகிறோம்.ஆகவே நாட்டுக்கு பொருத்தமான வகையில் புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்பட வேண்டும்.

ராஜபக்ஷர்கள் 2005ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை நாட்டை ஆட்சி செய்தார்கள்.அவர்கள் அரசியலமைப்பு,சட்டம்,ஜனநாயகம் தொடர்பில் கவனம் செலுத்தவில்லை.2015ஆம் ஆண்டு பாராளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக உருவாக்க 86 கூட்டங்கள் இடம்பெற்ற போதும்,முன்னேற்றகரமான தீர்மானங்கள் எடுக்கப்படவில்லை.புதிய அரசியலமைப்பை உருவாக்கும் நோக்கம் நல்லாட்சி அரசாங்கத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் காணப்படவில்லை.

2020ஆம் ஆண்டு 20ஆம் திருத்தம் நிறைவேற்றப்பட்ட போது ஒருவருட காலத்திற்குள் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும்  என குறிப்பிடப்பட்டது.புதிய அரசியலமைப்புக்கான வரைபை தயாரிக்க ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தலைமையில் குழு நியமிக்கப்பட்டது,குழுவினர் அரசியலமைப்பு உருவாக்க வரைபை அரசாங்கத்திடம் சமர்ப்பித்துள்ளார்கள்.ஆனால் அந்த வரைபு தொடர்பில் எவ்வித பேச்சுமில்லை. மீண்டும் பழையதை புதுப்பிக்கவே முயற்சிக்கிப்படுகிறது.

அரசியலமைப்பின்  17,18,19,மற்றும் 20 ஆகிய திருத்தங்களுக்கு ஆதரவாக வாக்களித்தவர்களை கொண்டு ஒருபோதும் புதிய அரசியலமைப்பை உருவாக்க முடியாது. அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் அரசாங்கத்தின் அனுமதியுடன் சபைக்கு கொண்டு வரப்பட்டது என்பது தற்போது சந்தேகத்துக்குரியது.ஆகவே புதிய அரசியலமைப்பு இந்த நாட்டுக்கு முக்கியமானது.

பாராளுமன்றத்தின் பதவி காலத்தை கலைப்பது தொடர்பில் ஆளும் தரப்பினர் மத்தியில் அச்ச நிலை காணப்படுகிறது. இரண்டரை வருட காலத்துக்கு பிறகு பாராளுமன்றத்தை கலைக்க மாட்டேன்.

ஆகவே 22ஆவது திருத்தத்துக்கு ஆதரவு வழங்குங்கள் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுஜன பெரமுனவினருக்கு வாக்குறுதி வழங்கியுள்ளார்.

ஆளும் தரப்பினரது பாராளுமன்ற பதவி காலத்தை தக்கவைத்துக் கொள்ளவும்,ஓய்வூதியத்தை பெற்றுக்கொள்வதற்கும்,22ஆவது திருத்தம் கொண்டு வர அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இரட்டை குடியுரிமை கொண்ட நபர் அரசியலில் பங்குப்பற்றுவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. நாட்டுக்கு சேவையாற்ற வேண்டுமாயின் இரண்டு பக்கமும் கால் வைத்துக் கொண்டு கடல் கொள்ளையரை போல் செயற்பட வேண்டிய அவசியம் கிடையாது. நாட்டை கொள்ளையடித்து செல்லும் இரட்டை குடியுரிமையாளருக்காகவே ஆளும் தரப்பினர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள.

நாட்டு மக்கள் பாராளுமன்றத்தை விமர்சிக்காமல் இருந்தால் அது புதுமையானது.தமது ஓய்வூதியம்,தமது அரசியல் தலைவரிள் நலனை கருத்திற் கொண்டு ஆளும் தரப்பினர்கள் செயற்படுகிறார்கள்.

அரசியலமைப்பின் 4ஆம் அத்தியாயத்தின் பிரகாரம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி நிறைவேற்று அதிகாரத்தை செயற்படுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போதைய ஜனாதிபதி மக்களால் தெரிவு செய்யப்பட்டவர் அல்ல,அவர் வெற்றிடமான ஜனாதிபதி பதவிக்கு தெரிவு செய்யப்பட்டவர்.ஆகவே இவருக்கு எவ்வாறு நிறைவேற்று மற்றும் பாதுகாப்பு தொடர்பான அதிகாரம் கிடைக்கும்.

2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக வாக்குகளே கோட்டபய ராஜபக்ஷவை தெரிவு செய்தது,ஆகவே தற்போதைய ஜனாதிபதியால் எவ்வாறு முன்னாள் கோட்டபய ராஜபக்ஷவின் அதிகாரத்தை பயன்படுத்த முடியும்.

ஜனாதிபதி பதவி வெற்றிடமாகி 6மாத காலத்துக்குள் மக்கள் வாக்கெடுப்பு ஊடாக ஜனாதிபதியை தெரிவு செய்தல் வேண்டும்,சுய இலாபத்துக்காக அரசியல் கொள்கைகயை மாற்றியமைக்கும் அரசியல்வாதிகளுக்கு எதிரான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று யோசனை முன்வைத்துள்ளோம். இந்த திருத்தம் 19ஆவது திருத்தத்தில் கொண்டு வரப்பட்டது.அதற்கு தற்போதைய பிரதமர் எதிர்ப்பு தெரிவித்தார்.

தேசிய அரசாங்கம் என்ற பெயரில் உருவாக்கப்பட்ட ஏற்பாடுகள் இரத்து செய்யப்பட வேண்டும்.அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சுக்களை கட்டுப்படுத்தும் திருத்தங்கள் உள்வாங்கப்பட வேண்டும்.இந்த திருத்தங்கள் 22ஆவது திருத்தச் சட்டமூல வரைபில் உள்வாங்கப்படவில்லை என்றார்.

https://www.virakesari.lk/article/138150

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர மாத்திரம் சட்டமூலத்திற்கு எதிராக வாக்களித்திருந்தார்.

அவருக்கு தெரியும் அடுத்த ஆட்சி மாறும்போது இந்த அரசியலமைப்பும் மாறும், அப்போ இதை எதிர்த்து வாக்களிக்காமல் இப்போதே ஆதரித்து வாக்களித்துள்ளார். அவர் தமிழரை அழிப்பதில் மட்டும் மாறாத தனித்துவமானவர்.  சரியான தகவலை இவரோடு  மற்றவர்கள்   பரிமாறுவதில் தாமதங்கூட ஏற்பட்டிருக்கலாம்.

6 hours ago, ஏராளன் said:

ராஜபக்ஷர்கள் 2005ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை நாட்டை ஆட்சி செய்தார்கள்.அவர்கள் அரசியலமைப்பு,சட்டம்,ஜனநாயகம் தொடர்பில் கவனம் செலுத்தவில்லை.2015ஆம் ஆண்டு பாராளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக உருவாக்க 86 கூட்டங்கள் இடம்பெற்ற போதும்,முன்னேற்றகரமான தீர்மானங்கள் எடுக்கப்படவில்லை.புதிய அரசியலமைப்பை உருவாக்கும் நோக்கம் நல்லாட்சி அரசாங்கத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் காணப்படவில்லை.

ஒவ்வொருவரும் ஆட்சிக்கதிரை ஏறும்போது தம்மை பாதுகாக்கவும், எதிர்க்கட்சியை பழிவாங்கவும், தாமே நிரந்தரமாக ஆட்சிபுரியவும் அதற்கு ஏதுவாக தமிழரை அடக்கி பலிக்கடாவாக்குவதும் என்றே அரசியலமைப்பில் திருத்துகிறார்களேயொழிய நாட்டைப்பற்றி யாரும் கவலை கொள்வதில்லை. எங்களவரும் எந்த காரணத்திற்காக  என்று தெரியாமலேயேமாறி மாறி வாக்களிக்கிறார்கள். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொலன்னறுவை, அநுராதபுரத்தில் இந்து ஸ்தாபனம் அமைக்க நிலம் தருவீர்களா? – கோவிந்தன் கேள்வி

இனப்பிரச்சினைக்குத் தீர்வாக எந்த திருத்தங்களும் அமையவில்லை – கோவிந்தன் கருணாகரம்

நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப் பிரச்சினைக்கு இதுவரை கொண்டுவரப்பட்டுள்ள 20 திருத்தங்களும் தீர்வாக அமையவில்லை என கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.

22வது திருத்தச் சட்டம் தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

13 வது திருத்தச் சட்டத்தினை இனப்பிரச்சினை தீர்வின் தொடக்கப் புள்ளியாக வைத்து முன்நோக்கி செல்ல வேண்டும் என்றும் கோவிந்தன் கருணாகரம் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் இதுவரை கொண்டுவரப்பட்ட திருத்தங்களினால் நாட்டில் இனங்களிடையே, மதங்களிடையே மொழிகளிடையே நல்லிணக்கம் ஏற்படவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

திருகோணமலையில் அல்லை, கந்தளாய், சீனித் தொழிற்சாலை குடியேற்றங்கள் ஏற்படும் வரையும் 3 வீதத்துக்கும் குறைவான சிங்களவர்களே அங்கு வாழ்ந்தார்கள் என்பதை சரத் வீரசேகர நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

https://athavannews.com/2022/1306470

  • கருத்துக்கள உறவுகள்

எமது அரசியலமைப்புகள் கேலிக்குரியவையாகியுள்ளன - இம்தியாஸ் பாக்கீர் மாக்கார்

By DIGITAL DESK 5

22 OCT, 2022 | 11:09 AM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி, பாதுகாப்பு வலயங்களை உருவாக்கி, புனர்வாழ்வு பணியகத்தை உருவாக்குவது  ஜனநாயகம் அல்ல. அது மக்கள் எதிர்பார்ப்பும் அல்ல  என எதிர்க்கட்சி உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார்  தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (21) இரண்டாவது நாளாக இடம்பெற்ற அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

அரசியலமைப்பின் 22 திருத்தத்திற்கு ஆதரவளிக்க எமது கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. அவ்வாறு நாம் அதனை ஆதரிப்பதால் இந்த திருத்தம் மக்கள் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்காக கொண்டுவரப்படுகிறது என்று நாங்கள் கூறப்போவதில்லை.

தொடர்ச்சியாக எமது அரசியலமைப்புகள் கேலிக்குரியவையாகியுள்ளன.  அவைகள் வர்ணம் பூசப்பட்டதாகவே தொடர்ந்து திருத்தப்பட்டு வந்துள்ளன.

அந்த வகையில் 18 ஆவது அரசியலமைப்பு திருத்தம் ஒருவர் இரண்டு முறை ஜனாதிபதியாக வர வேண்டும் என்பதற்காக தனிப்பட்ட அரசியல் நோக்கங்களுக்காக  கொண்டுவரப்பட்டது.

அதேபோன்று பாராளுமன்றத்தில் பெரும்பாலான உறுப்பினர்கள் அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தில் கொண்டிருந்த நிலைப்பாட்டையே இருபதிலும் கொண்டிருந்தனர்.

அந்த வகையில் ஒன்றுக்கொன்று அவை முரண்பாடானவை. இதனால் எமது பாராளுமன்றத்தின் மீது மக்களுக்குள்ள நம்பிக்கை தொடர்பில் நாம் வியப்படைவதற்கு ஒன்றும் இல்லை.

காலத்துக்குக் காலம் அரசியல் கட்சிகள் தமது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காகவே  அரசியலமைப்பு திருத்தங்களை மேற்கொள்கின்றன.ஆனால்  அவை மக்கள் எதிர்பார்ப்பல்ல.

எனவே பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி, பாதுகாப்பு வலயங்களை உருவாக்கி, புனர்வாழ்வு பணியகத்தை உருவாக்குவது  ஜனநாயகம் அல்ல.

அது மக்கள் எதிர்பார்ப்பும் அல்ல. அதனால் தூரதரிசனத்துடன் மக்கள் எதிர்பார்க்கும் பாராளுமன்றத்தை உருவாக்க வேண்டிய காலம் உருவாகியுள்ளது, அத்துடன் 22 ஆவது அரசியலமைப்பை நாம் ஆதரிப்பதன் மூலம் அதனை மக்கள் எதிர்பார்ப்பு என கூற முடியாதுஎன்றார்.

https://www.virakesari.lk/article/138182

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.