Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சென்னை கனமழை: கடந்த 72 ஆண்டுகளில் இது மூன்றாவது முறை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை கனமழை: கடந்த 72 ஆண்டுகளில் இது மூன்றாவது முறை

1 நவம்பர் 2022, 07:17 GMT
புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்
 

சென்னை கனமழை

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

கோப்புப் படம்

சென்னையில் கடந்த 72 ஆண்டுகளில் நவம்பர் ஒன்றாம் தேதியன்று மூன்றாவது முறையாக கனமழை பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது.

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில், நேற்று மாலை முதல் தலைநகர் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்துவருகிறது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் மட்டும் 80.4 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது கடந்த 72 ஆண்டுகளில் நவம்பர் 1ஆம் தேதி சென்னையில் இந்த அளவுக்கு கனமழை பதிவாவது மூன்றாவது முறை ஆகும்.

தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் 13 சென்டி மீட்டர் மழையும் சென்னை பெரம்பூரில் 12 செ.மீ. மழையும் சென்னை ஆட்சியர் அலுவலகம், தண்டையார்பேட்டை, வில்லிவாக்கம், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி பகுதிகளில் 10 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

 
 

சிவப்புக் கோடு

 

சிவப்புக் கோடு

அடுத்த மூன்று மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் மிதமான மழை பெய்யுமென வானிலை ஆய்வுமையம் கூறியுள்ளது.

மேலும், நீலகிரி, கடலூர், மயிலாடுதுறை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கரூர், புதுச்சேரி ஆகிய இடங்களில் லேசானது முதல் மிதமானதுவரையிலான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் நேற்று மாலை முதல் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக சென்னையில் ஜி.பி. சாலை, புளியந்தோப்பு போன்ற இடங்களில் மழை நீர் தேங்கியிருக்கிறது. சென்னையில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற 420 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்துள்ளனர்.

 

சென்னை மழைப்பொழிவு

மீனவர்களுக்கு எச்சரிக்கை

சென்னையைப் பொறுத்தவரை, தென்மண்டல வானிலை ஆய்வு மைய தகவலின்படி, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய கன மழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22- 23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

மேலும், நவம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் மன்னார் வளைகுடா, தமிழகம் மற்றும் வடக்கு இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். ஆகவே அந்தத் தேதிகளில் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென்று வானிலை ஆய்வு மையம் வலியுறுத்தியுள்ளது.

 

சென்னை மழைப்பொழிவு

வானிலை ஆய்வு மையம் என்ன சொல்கிறது?

தென் மண்டல வானிலை ஆய்வு மைய தகவலின்படி, இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழை வரை பொழியும்.

நாளை, நவம்பர் 2ஆம் தேதியில் கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

நவம்பர் 3 மற்றும் 4ஆம் தேதி வரை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நவம்பர் 5ஆம் தேதியில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், இராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

https://www.bbc.com/tamil/india-63467506

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தின் பல மாவட்டங்களில் தொடரும் மழை - பள்ளிகளுக்கு விடுமுறை - படத்தொகுப்பு

23 நிமிடங்களுக்கு முன்னர்
காணொளிக் குறிப்பு,

சென்னையில் கனமழை: இன்னொரு வெள்ளத்தை தலைநகர் தாங்கத் தயாராக உள்ளதா?

தமிழ்நாட்டின் சென்னை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை மற்றும் பிற மாவட்டங்களில் இன்று ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்திருந்த நிலையில், எதிர்பார்த்தது போலவே பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. மழை மேலும் இரு தினங்களுக்கு தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இதேபோல, புதுச்சேரி, காரைக்கால் மற்றும் தமிழகத்தின் சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்பதால், சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய மழை நிலவரத்தை பிரதிபலிக்கும் சில புகைப்படங்களின் தொகுப்பை இங்கே வழங்குகிறோம்.

 

சென்னை மழை

பட மூலாதாரம்,@CHENNAIRAINS

 

படக்குறிப்பு,

சென்னை மாம்பலம் பகுதியில் உள்ள பிருந்தாவன் நகரில் தேங்கியுள்ள மழை நீர்

 

சென்னை மழை

 

படக்குறிப்பு,

சென்னை புதுப்பேட்டை குடியிருப்பு வளாகத்தில் தேங்கியுள்ள மழை நீர்

வடகிழக்கு பருவமழையையொட்டி அரக்கோணம், சென்னை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்புப்படையின் 15 அணிகள் மீட்பு நடவடிக்கைகளுக்காக நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

இதில் 13 அணிகள் அரக்கோணத்திலும் மற்ற இரு அணிகளில் தலா ஒன்று சென்னை மற்றும் நீலகிரியில் உள்ளதாகவும் என்டிஆர்எஃப் படையணியின் கமாண்டன்ட் அருண் தியோகம் தெரிவித்துள்ளார்.

 
Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

மழை தொடர்ந்து பெய்த போதிலும் சென்னை நகரில் புறநகர் ரயில் சேவைகள் வழக்கம் போல் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Twitter பதிவை கடந்து செல்ல, 2

Twitter பதிவின் முடிவு, 2

முன்னதாக, வடகிழக்கு பருவ மழை ஆயத்தப்பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது. இதைத்தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் மழை வெள்ளம் தீவிரமாகும்போது அதன் தாக்கத்தை சமாளிக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை விவரித்தார். இது தொடர்பான காணொளியையும் அவர் தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 3

Twitter பதிவின் முடிவு, 3

இந்த கூட்டத்தைத்தொடர்ந்து அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் பிறப்பித்த உத்தரவில், "வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள அனைத்து அரசு அதிகாரிகளும் தயார்நிலையில் இருக்க வேண்டும், கடந்த காலங்களில் ஏற்பட்டது போன்ற பாதிப்புகள் நேராத வகையில் தடுக்க வேண்டும், மண்டல அளவில் பல்துறை அதிகாரிகள் அடங்கிய குழுக்களை அமைக்க வேண்டும், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்படும் மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுத்திட வேண்டும், நோய்கள் பரவாமல் தடுக்க வேண்டும், மின்சாரம் சார்ந்த விபத்துகளைத் தடுக்க வேண்டும்," என குறிப்பிடப்பட்டிருக்கிறது.

 

சென்னை மழை

 

படக்குறிப்பு,

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து காணொளி வாயிலாக சென்னை மற்றும் பிற மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார்.

சென்னை நகரில் மழை நீர் தேங்கிய சாலைகளில் சூப்பர் சக்கர் எனப்படும் தண்ணீர் உறிச்சி சாதனத்துடன் கூடிய லாரி உதவியுடன் தண்ணீரை உறிச்சி எடுக்கும் சென்னை குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள்.

 

சென்னை மழை

 

சென்னை மழை

இதேவேளை, தொடர் மழை காரணமாக சென்னை ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை சேறும் சகதியுமாக மாறியுள்ளது. அதனால் அந்த பாதையில் இரு சக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், சுரங்கப்பாதை வழியாக செல்லக்கூடிய வாகனங்களும் அதன் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அந்த வாகனங்கள் சுரங்கப்பாதையின் மேல் பகுதி வழியாக செல்லும் வகையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

 

சென்னை மழை

 

படக்குறிப்பு,

சென்னை பாரிமுனையில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றும் பணிகளை பார்வையிடும் அமைச்சர்கள் சேகர் பாபு, கே.என். நேரு, நகர மேயர் பிரியா மற்றும் அதிகாரிகள்

 

சென்னை மழை

 

படக்குறிப்பு,

சென்னை ராயபுரம் பகுதியில் தேங்கியுள்ள மழை நீர் வெளியேற்றும் பணி நடந்து வருகிறது.

சென்னை நகரில் மழை பாதிப்பு தொடர்பான தகவல்கள் மற்றும் புகார்களைத் தெரிவிக்க 044-25619206, 044-25619207, 044-25619208 ஆகிய தொலைபேசி உதவி எண்களை தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது. இத்துடன் 1913 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் பொதுமக்கள் தொடர்பு கொண்டு தகவல்களைத் தெரிவிக்கலாம் என்று அரசு கூறியிருக்கிறது.

https://www.bbc.com/tamil/india-63472449

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டில் நீடிக்கும் மழை: சென்னை, திருவள்ளூர் உள்பட பல மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

3 மணி நேரங்களுக்கு முன்னர்
 

மழை நீர்

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை நீடித்து வருவதால் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும், பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

அதிகமாக மழைபெய்திருக்கும் சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ஆவடியில் 17 செ.மீ. மழை பெய்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.

 

புதன்கிழமை காலையில் தொடர்ந்து 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.

சென்னையைப் பொறுத்தவரை நேற்று இரவு முழுவதும் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. சில இடங்களில் கனமழை பெய்தது. எனினும் பெரும்பாலான முக்கியச் சாலைகளில் மழைநீர் தேங்கவில்லை. அதே நேரத்தில் குறுக்குச் சாலைகள், சந்துகள் போன்றவற்றில் முழங்கால் அளவுவரை மழைநீர் தேங்கியிருக்கிறது.

புதுப்பேட்டையின் முக்கியச் சாலைகளில் நீர் தேங்கவில்லை என்றாலும் பக்கச் சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு நீர் தேங்கியிருக்கிறது.

சென்னை முகப்பேர் உள்ளிட்ட பகுதிகளில் மழையால் மழையால் மரங்கள் சாய்ந்தன. அவை இயந்திரங்கள் மூலம் அறுத்து அகற்றப்பட்டு வருகின்றன.

கனமழையால் குமரி மாவட்டத்தில் வெள்ள எச்சரிக்கை

குமரி மாவட்டத்தில் மலையோரபகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. இதனையடுத்து மாவட்டத்தின் முக்கிய அணைகளான பேச்சிப்பாறை,பெருஞ்சாணி ,சிற்றார் உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணபடுகிறது.48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 589 கன அடி நீர் வந்துகொண்டிருப்பதால் அணையின் நீர்மட்டம் 42அடியை எட்டியது. இதனால் அணையிலிருந்து 500கன அடி தண்ணீர் திறந்துவிடபட்டுவருகிறது. இந்நிலையில் மற்றொரு அணையான பெருஞ்சாணி அணையில் வினாடிக்கு 740கன அடி தண்ணீர் வந்துகொட்டிருப்பதால் 77அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் 73அடியை எட்டியுள்ளது. இதனையடுத்து அணையிலிருந்து 1000கன அடி தண்ணீர் திறந்துவிடபட்டது. இதனால் பரளியாறு தாமிரபரணியாற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடபட்டடுள்ளது. மேலும் ஆறுகளில் அதிகளவில் வெள்ளம் வருவதால் பாதுகாப்பு கருதி ஆறுகளில் குளிக்க வேண்டாம் எனவும் மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.

https://www.bbc.com/tamil/india-63481441

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நவம்பர் 1-ம் தேதியே இவ்வளவு பெரிய கனமழையா? இனி எங்கெல்லாம் மழை பெய்யும்? | Chennai Rains - Pressmeet

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டில் மழை: வாகனங்களை பாதிப்பில் இருந்து பராமரிப்பது எப்படி?

  • க. சுபகுணம்
  • பிபிசி தமிழ்
2 நவம்பர் 2022, 11:17 GMT
 

சென்னை மழை வாகன பராமரிப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

தமிழ்நாட்டில் தலைநகர் சென்னை, திருவள்ளூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் மழை மேலும் சில தினங்களுக்கு தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்திருக்கிறது. இந்த மழையின் தாக்கத்தை பல வடிவங்களில் மக்கள் எதிர்கொண்டு வருகிறார்கள். அதில் குறிப்பிடத்தக்கவர்கள் வாகன ஓட்டிகள்.

அனைவருக்குமே தத்தம் வாகனங்கள் மீது ஒரு தனி பிரியுமுண்டு. பலருக்கும் வாகனங்களை, அது இரு சக்கர வாகனமாக இருந்தாலும் சரி, நான்கு சக்கர வாகனமாக இருந்தாலும் சரி, குடும்பத்தில் ஒருவராக அதை கருதும் பழக்கம் கூட உண்டு.

இப்படி, வாழ்வின் முக்கியமானதோர் அங்கமாக மாறிவிட்ட வாகனங்களின் பராமரிப்புக்கு அதைப் பற்றிய புரிதலும் விழிப்பும் அதிகம் தேவைப்படுகிறது. குறிப்பாக பருவமழை காலங்களில் கன மழை மற்றும் சாலைகளில் மழை வெள்ளம் தேங்கும் நிலை நிலவும் சென்னை போன்ற பெருநகரங்களில் வாழ்பவர்களுக்கு, அந்த காலகட்டத்தில் ஒரு அடி வரைக்கும் தேங்கியிருக்கும் தண்ணீருக்குள் கூட சில நேரங்களில் வாகனம் ஓட்டவேண்டிய சூழல் ஏற்படுகிறது.

அத்தகைய சூழ்நிலைகளில் நம் வாகனங்களை எப்படிப் பராமரிப்பது, அதில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டுள்ளதா என்பதை எப்படிக் கண்டறிவது என்பன போன்ற சந்தேகங்கள் நம்மில் பலருக்கும் உண்டு. அந்த சந்தேகங்களை நிவர்த்தி செய்துகொள்ளவே இந்தக் கட்டுரை.

 

வாகனத்தின் வேகத்தில் கவனம்

நான்கு சக்கர வாகனங்களை மழைக்காலங்களில் பராமரிப்பதில் கவனிக்க வேண்டிய அம்சங்களைத் தெரிந்து கொள்ள நான்கு சக்கர வாகனங்களுக்கான சர்வீஸ் தொழிலில் இருக்கும் டார்க் மேக்ஸ் ஆட்டோமோடிவ் நிறுவனத்தின் உரிமையாளர் அஷ்வின் ராஜ் வர்மாவிடம் பேசினோம். அவர் கூறிய தகவல்கள் இனி.

 

சிவப்புக் கோடு

 

சிவப்புக் கோடு

பொதுவாகவே, முன்பகுதியில் வைப்பரில் பயன்படுத்தப்படும் தண்ணீரைப் பொறுத்தவரை ஆர்.ஓ தண்ணீரை தான் பயன்படுத்த வேண்டும். அதோடு வைப்பர் சாம்பூ என விற்பதைத்தான் பயன்படுத்த வேண்டும் என்றில்லை.

சாதாரணமாக கடைகளில் கிடைக்கும் சன்சில்க், சிக் போன்றவற்றின் ஒரு ரூபாய் பாக்கெட்டுகளையே பயன்படுத்தலாம். ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு ரூபாய் பாக்கெட் ஒன்றை கலந்து பயன்படுத்தலாம். அப்படிப் பயன்படுத்தினால், மழை நேரத்தில் வாகனம் ஓட்டும்போது, அந்த சோப்பு நீர் கண்ணாடியில் மழைநீரை நிற்கவிடாது மற்றும் கண்ணாடியில் மழைநேரத்தில் மூடுபனி ஆவதும் தவிர்க்கப்படும்.

 

தமிழ்நாடு மழை

 

படக்குறிப்பு,

அஷ்வின் ராஜ் வர்மா

நான்கு சக்கர வாகனத்தை தண்ணீருக்குள் ஓட்டிச் செல்வதாக இருந்தால், எவ்வளவு ஆழமுள்ள தண்ணீருக்குள் ஓட்டுகிறோம் என்பதில் கவனம் வேண்டும். வாகனத்தின் சக்கரம் பாதி மூழ்கும் அளவுக்கு தண்ணீரில் செல்லலாம்.

ரெனால்ட் க்விட், மாருதி ஸ்விஃப்ட், வெர்னா, ஐ10 போன்ற செடான் வாகனங்களில் செல்வதாக இருந்தால் அரை அடி முதல் முக்கால் அடி ஆழம் வரை தண்ணீரில் செல்லலாம். அதுவே, எஸ்யூவி-களான ஹுண்டாய் கிரெட்டா, டாடா நெக்சான், ஸ்கார்பியோ, பொலேரோ போன்ற பெரிய வாகனம் என்றால் அதிகபட்சம் ஒரு அடி ஆழம் வரை செல்லலாம்.

அதிக மழை பெய்துள்ளது, ஆனால் வேறு வழியில்லை தண்ணீரில் ஓட்டியாக வேண்டும் என்னும்போது தற்காப்பு ஓட்டுதலைத்தான் மேற்கொள்ள வேண்டும். தண்ணீருக்குள் போகும்போது வேகத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

வேகம் கூட்டினால் சிக்குவது நிச்சயம்

மணிக்கு 10-20 கி.மீட்டருக்கு மிகாமல் செல்ல வேண்டும். தண்ணீரை குடைந்து கொண்டு வேகமாக செல்லக் கூடாது. அப்படி சென்றால், 'ஏர் ஃபில்டர்' வழியாக தண்ணீர் வாகன எஞ்சினுக்குள்ளே இழுத்துக் கொள்ளப்படும். ஆகவே வேகத்தை கட்டாயமாகத் தவிர்க்க வேண்டும்.

 

சென்னை மழை வாகன பராமரிப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

தற்காப்பு ஓட்டுதலில் மற்றுமொரு அம்சமும் உண்டு. தண்ணீருக்குள் ஓட்டிச் செல்லும்போது, முன்னால் நடந்து செல்பவர்களையோ அல்லது வாகனங்களையோ கவனித்துக் கொண்டே செல்ல வேண்டும். அதன் மூலம் ஒருவேளை அவர்கள் ஏதேனும் ஓரிடத்தில் பள்ளத்தில் இறங்கி ஏறினால், அந்த ஆழத்திற்கு நம் வாகனம் செல்லுமா செல்லாதா என்பதைக் கணித்து ஓட்டிச் செல்ல முடியும்.

சக்கர உயரத்தில் பாதியளவு வரை மூழ்கி விடும் அளவுக்கான தண்ணீரில் சென்று வந்த பிறகு, பிரேக்குகளில் சேறு சகதிகள் சேர்ந்துவிடக்கூடும் என்பதால் முன், பின் என இரண்டு பக்கமும் பிரேக் சரியாக வேலை செய்கிறதா எனப் பார்க்க வேண்டும். அதோடு, நான்கு சக்கரங்களில் இருக்கும் பீயரிங் தேய்மானம் ஆகக்கூடும் என்பதால் அதுவும் சரியாக உள்ளதா எனப் பார்க்க வேண்டும்.

கனமழையில் தண்ணீர் நிரம்பி நிற்கும் சாலையில் சென்று வந்த பிறகு, அடுத்த நாளில் மீண்டும் வாகனத்தை எடுக்கும் முன்பாக கீழே குனிந்து பார்க்க வேண்டும். ஒருவேளை கூலன்ட் தண்ணீரோ, இன்ஜின் ஆயிலோ கசிந்திருந்தால் நிச்சயமாக அதைக் கவனிக்க வேண்டும்.

 

சென்னை மழை வாகன பராமரிப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

அதேபோல், போனெட்டை திறந்து, எஞ்சின் ஆயில் அளவை சோதிக்க வேண்டும். அதோடு தண்ணீர் கலந்திருந்தால், எஞ்சின் ஆயிலின் நிறம் பால் போன்ற வெள்ளை நிறத்திற்கு மாறியிருக்கும். அப்படி ஆகியிருந்தால், அதையும் கவனிக்க வேண்டும்.

மூன்றாவதாக, பிரேக்கில் அசாதாரணமான சத்தம் கேட்டாலும் வாகனத்தை பழுதுபார்க்க கொண்டு செல்ல வேண்டும். அதைத் தொடர்ந்து வாகனத்தை எடுக்கும்போது எந்த இடைஞ்சலும் இன்றி ஸ்டார்ட் ஆகிவிட்டால் எந்தப் பிரச்னையுமில்லை. அப்படியல்லாமல், இவற்றில் ஏதேனும் பிரச்னை இருந்தாலும் பழுது பார்த்தாக வேண்டும்.

சைலென்சர் ரொம்ப முக்கியம்

இரு சக்கர வாகனங்களை மழைக்காலத்தில் எப்படி பார்த்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து தனது கடந்த 50 ஆண்டுகளாக இந்தத் தொழிலில் ஈடுபட்டு வரும் மோட்டார் சைக்கிள் பழுது பார்ப்போர் நல சங்கத்தின் துணைத் தலைவர் ராசிக் அலியிடம் பேசினோம்.

 

தமிழ்நாடு மழை

 

படக்குறிப்பு,

ராசிக் அலி

மழை நேரங்களில் ஆக்டிவா, ஸ்கூட்டி போன்ற ஸ்கூட்டர் வகை வாகனங்களை எடுப்பதைத் தவிர்த்துவிட வேண்டும். வீட்டிற்கு அருகில், மிகச் சொற்ப தூரத்திற்குள் நீர் தேங்காமல் இருக்கும்போது ஓட்டிக் கொள்ளலாம். ஆனால், பள்ளங்கள், மேடுகளில் அதை ஓட்டுவது நல்லதல்ல. மேடுகளில் ஏற சிரமப்படும், சிறிய சக்கரத்தைக் கொண்டது என்பதால் சறுக்கிவிடக்கூடும்.

 

சென்னை மழை வாகன பராமரிப்பு

இரு சக்கர வாகனங்களில் தண்ணீர் தேங்கியிருக்கும் பகுதிகளில் சைலென்சர் நனையாத வகையில் செல்லும்போது வாகனத்திற்கு எந்த பாதிப்பும் கிடையாது. அது மூழ்கிவிட்டால், வண்டி எந்த நிலையில் சென்று கொண்டிருக்கிறதோ அதே நிலையில் ஆக்சிலேட்டரை சீராக கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.

இல்லையென்றால், சைலென்சர் வழியாக தண்ணீர் புகுந்து இன்ஜினுக்குள் சென்றுவிடும். எஞ்சினுக்குள் சென்றுவிட்டால், வாகனம் மொத்தமாக நின்றுவிடும். சராசரியாக ஒரு அடிக்கு மேல் தண்ணீர் இருந்தாலே சைலென்சருக்குள் போய்விடும். ஆகவே ஓட்டும்போதும் நிறுத்தி வைக்கும்போதும் தண்ணீரின் அளவு சைலென்சரை எட்டுகிறதா என்பதைக் கவனிக்க வேண்டும்.

ஒருவேளை தண்ணீர் உள்ளே புகுந்து வாகனம் நின்றுவிட்டால், உடனே அதை ஸ்டார்ட் செய்யக் கூடாது. மெக்கானிக் கடைக்கு கொண்டு சென்று, சைலென்சர் போன்ற பாகங்களை கழட்டி காய வைக்க வேண்டும்.

தண்ணீர் உள்ளே சென்ற பிறகு ஸ்டார்ட் செய்துவிட்டால், ஆயிலோடு தண்ணீர் கலந்துவிடும். அது இன்ஜினில் இருக்கும் பிஸ்டன் வரைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். ஏர் ஃபில்டரில் காற்று புக முடியாமல் கார்பரேட்டர் அடைத்துவிடும். ஆகவே, வண்டி நின்றுவிட்டால், இயன்றவரை அதை ஸ்டார்ட் செய்யாமல் இருப்பதே நல்லது.

மழை நேரத்தில் வாகனத்தை உயரமான இடத்தில் நிறுத்துவது நல்லது. வாகனம் ஒருவாரத்திற்கு மழைநீரில் நின்றுவிட்டது என்றால், சக்கரங்களைக் கழட்டி சுத்தம் செய்ய வேண்டும். பிரேக் ஷூ தண்ணீரில் ஊறிவிடுவதால், சறுக்கிவிட வாய்ப்புள்ளது. அதைக் கவனிக்க வேண்டும்.

 

சென்னை மழை வாகன பராமரிப்பு

தண்ணீரில் நீண்ட நாட்கள் நின்றாலும் இதைச் செய்தால் போதும். அதோடு, தண்ணீர் வடிந்த பிறகு சைலென்சர், ஏர் ஃபில்டருக்குள் தண்ணீர் புகுந்துள்ளதா என்று பார்க்க வேண்டும். அப்படி போயிருந்தால், அதைக் கழட்டி சுத்தம் செய்து பொருத்த வேண்டும். மற்றபடி எந்தப் பிரச்னையும் வராது.

வாகனம் மழையிலேயே நீண்ட நாள் நின்றாலும், தினமும் 30 நிமிடமாவது ஸ்டார்ட் செய்து நின்ற இடத்திலேயே ஓடவிடுவது நல்லது. அப்படிச் செய்தால், வண்டி பாகங்கள் சூடாகிக் கொள்ளும், பெரிய பிரச்னைகள் எதுவும் இருக்காது. இருப்பினும், தண்ணீர் வடிந்து வண்டியை எடுக்கும்போது ஒரு மெக்கானிக்கிடம் வண்டியை விட்டு ஒரு பரிசோதனையைச் செய்துகொள்வது நல்லது.

வாகன பேட்டரியை பொறுத்தவரை, இப்போதுள்ள வாகனங்களில் வண்டியை ஸ்டார்ட் செய்து ஓடவிட்டாலே தானாக சார்ஜ் ஆகிக் கொள்ளும் வகையில் தான் பொருத்தப்பட்டுள்ளன. ஆகவே, குளிர்ச்சி காரணமாக எந்த பாதிப்பும் பேட்டரிக்கு வராது.

https://www.bbc.com/tamil/india-63484091

  • கருத்துக்கள உறவுகள்

May be a meme of 9 people and text that says 'கொஞ்சம் ஓவரா தான் மரம் நட்டுட்டோமோ... மழை இப்படி நிக்காம பேஞ்சிட்டே இருக்கே'

அளவுக்கு அதிகமாக.. மரம் நட்டாலும்... மழை  ஓயாமல் பெய்யும்.   🤣

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.