Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நெடுமாறன் ஐயாவின் செவ்வி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நான் தமிழ் தேசியம் பேசுவது ஏன்? - பழ. நெடுமாறன்

செவ்வியின் ஒரு பகுதி மட்டுமே இங்குள்ளது.. குறிப்பாக ஈழப்பிரச்சனை தொடர்பானது..

எல்லோரும் காமராஜ் ஆட்சி அமைப்போம் என்கிறார்கள். இதில் யார் காமராஜ் ஆட்சி அமைப்பார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

காமராஜர் ஆட்சி என்றால் முதலமைச்சர் பதவியில் அமர்வது மட்டுமல்ல. தொலைநோக்குப் பார்வையுடனும் மக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்கிற உணர்வுடனும் செயல்படுவதற்குத்தான் காமராஜர் ஆட்சி என்று பெயரே தவிர, எப்படியாவது பதவியைப் பிடிப்பதற்குப் பெயர் காமராஜர் ஆட்சி அல்ல. காமராஜரைப் புரிந்து கொள்ளாமலே இவர்கள் காமராஜர் ஆட்சியைப் பற்றிப் பேசுவதுதான் வேடிக்கையாக இருக்கிறது.

ஒரு தேசியத் தலைவராக இருந்து, இப்போது தமிழ் தேசியம் என்கிற குறுகிய வட்டத்திற்குள் அடைந்து விட்டீர்களே, அதற்கு என்ன காரணம்?

இந்திய தேசியம் பேசியவர்கள் நடந்து கொள்ளும் விதம்தான் என்னைத் தமிழ் தேசியம் பேச வைத்திருக்கிறது. நீதிமன்றம் தீர்ப்பளித்தாலும், நடுவர் மன்றம் தீர்ப்பளித்தாலும் தமிழகத்திற்குத் தண்ணீர் தர மாட்டேன் என்று சொல்வதுதான் இந்திய தேசியமா? முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து ஓராண்டு கடந்துவிட்ட பிறகும் அதை நிறைவேற்றத் தயாராக இல்லை, இந்திய அரசாவது தலையிட்டு நீதிமன்றத் தீர்ப்பை நிறைவேற்றி வைப்பதுதானே நியாயம்? இந்திய தேசியம் பேசும் அவர்கள் குறுகிய வட்டத்திற்குள் அடைந்துவிட்டார்களா, இல்லை நான் குறுகிப் போய்விட்டேனா என்று நீங்களே சொல்லுங்கள். காவிரியில் தண்ணீரே வர வேண்டாம். ஆனால், கர்நாடக அரசு செய்வது தவறு, நீதிமன்றத் தீர்ப்பையும், நடுவர் மன்றத் தீர்ப்பையும் மதிக்க வேண்டும் என்று இந்திய தேசியம் பேசும் அகில இந்தியத் தலைவர் யாராவது ஒருவர் கண்டித்திருந்தாலோ, குரல் கொடுத்திருந்தாலோ, சற்று ஆறுதலாகவாவது இருந்திருக்கும். எல்லோரும் சேர்ந்து தமிழகத்தை வஞ்சிக்கும்போது, இந்திய தேசியம் பேசி நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதில் அர்த்தமே கிடையாது.

மாநிலக் கட்சிகள் மத்திய அரசில் பங்குபெறும் இன்றைய நிலையில், உங்கள் குற்றச்சாட்டில் நியாயம் இருக்கிறதா?

மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், மாநில மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கவும்தான் மாநிலக் கட்சிகள் தோன்றின. ஆனால், இந்த மாநிலக் கட்சிகள் ஏதாவது ஓர் அகில இந்தியக் கட்சியுடன் கூட்டு சேர்ந்து கொள்கிறார்கள். மத்திய அரசில் அங்கம் வகிக்க வேண்டும் என்பதற்காக, இவர்கள் எந்த நோக்கத்துக்காகக் கட்சி தொடங்கினார்களோ அந்தக் கோரிக்கைகள் எதையும் வலியுறுத்துவதும் இல்லை. மாநில சுயாட்சிக்கு சட்டப் பேரவையிலேயே கோரிக்கை போட்ட அதே கட்சி, மத்திய அரசில் அங்கம் வகிக்கத் தொடங்கியபின், அந்த மாநில சுயாட்சிக் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கான ஏதாவது நடவடிக்கையை எடுத்தார்களா என்றால் கிடையாது.

ஆட்சியிலேயே அங்கம் வகிக்கும்போது, மாநில சுயாட்சி என்கிற கோரிக்கை நிறைவேறிவிட்டது என்றுதானே அர்த்தம்?

அப்படிச் சொல்லித் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்பவர்களைப் பற்றி நான் எதுவும் கருத்துக்கூற விரும்பவில்லை. ரயில் நிலையங்களில் இருந்த பெயர்ப் பலகைகளில் இந்தி இருக்கக்கூடாது என்று இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடத்தி அறிவித்தார்கள். இப்போது, அந்தக் கட்சியின் பிரதிநிதி ஒருவர் மத்திய அரசில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருக்கிறார். அத்தனை நெடுஞ்சாலை மைல் கற்களிலும் இந்தி வந்திருக்கிறதே, அது அவருக்குத் தெரியாமலா நடந்தது? பதவிக்குப் போனபிறகு இந்த மாநிலக் கட்சியினர் கொள்கைகளைக் காற்றில் பறக்க விட்டுவிட்டனர். நீர்த்துப்போய் விட்டனர் என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்த மாநிலக் கட்சிகள் எப்படிச் செயல்பட்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

இவர்களது ஆதரவுக்கு விலையாக அமைச்சர் பதவிகளைக் கேட்டு வாங்குகிறார்களே தவிர மாநிலங்களுக்கான உரிமைகளைக் கேட்டு வாங்கியிருக்க வேண்டும். தேசியக் கட்சிகள் தலைமையில் ஆட்சி அமைப்பதற்குப் பதிலாக, இந்த மாநிலக் கட்சிகளின் கூட்டமைப்பைத் தேசியக் கட்சிகள் ஆதரிக்கும் நிலைமை ஏற்பட்டிருக்க வேண்டும். அந்தத் துணிவு இவர்களுக்கு ஏன் வரவில்லை? இவர்களுக்கு மாநிலங்களில் ஆட்சி வேண்டும். அதைத் தக்க வைத்துக் கொள்ள தில்லியில் செல்வாக்கு வேண்டும், அவ்வளவுதான்.

வீரப்பன் விஷயத்தில் நீங்கள் தலையிட்டிருக்க வேண்டிய அவசியம் இருந்ததா?

நடிகர் ராஜ்குமார் பணயக் கைதியாகி மூன்று மாதத்துக்கு மேலான பிறகு ஒருநாள் அப்போது முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி என்னைக் கூப்பிட்டனுப்பி, என்னைத் தூதுவராக அனுப்பும்படி வீரப்பனிடமிருந்து செய்தி வந்திருப்பதாகச் சொன்னார். எனக்கும் வீரப்பனுக்கும் எந்தவிதச் சம்பந்தமும் கிடையாது. அப்படி இருக்கும்போது, நான் எப்படிப் போவது என்று மறுத்தேன். கர்நாடகத் தமிழ்ச் சங்கங்களின் வற்புறுத்தலும், அன்றைய கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவின் தொடர்ந்த வேண்டுகோளும்தான் எனது முடிவை மாற்றிக் கொள்ள செய்தன. ஒரு மனிதநேய முயற்சியாக, ராஜ்குமாரைக் காப்பாற்றுவதன் மூலம் தமிழர்களுக்கும் கன்னடர்களுக்கும் இடையில் இனமோதல் ஏற்படாமல் தடுக்கும் முயற்சியாகத்தான் எனது பயணம் அமைந்தது.

ராஜ்குமார் விடுதலையில் மிகப்பெரிய பணப் பரிவர்த்தனை நடந்ததாகச் சொல்லப்படுகிறதே, அது எந்த அளவுக்கு உண்மை?

பண பேரம் நடந்தது என்று தெரிந்திருந்தால் நான் அந்த விஷயத்தில் தலையிட்டிருக்க மாட்டேன்.

உங்களது கணிப்பில் வீரப்பன் எப்படிப்பட்டவனாகத் தெரிந்தான்?

எனக்கு அவன் ஒரு கொடியவனாகத் தெரியவில்லை. அவன் நாகரிகமற்றவனாக இருந்தாலும்கூட, சத்தியத்துக்குக் கட்டுப்பட்டவனாக இருந்தான் என்பதுதான் நான் பார்த்த உண்மை. நாங்கள் காட்டுக்குள்ளே போனோமே, எங்களையும் பிடித்து வைத்திருந்தால் யார் என்ன செய்துவிட முடியும்? இந்த அரசாங்கம் எங்களைக் காப்பாற்றி இருக்காது என்பதும் எனக்குத் தெரியும். எங்களது பேச்சுவார்த்தையின்போது அவன் சில நிபந்தனைகளை முன்வைத்தான். அதிரடிப்படையின் அட்டூழியத்தால் பாதிக்கப்பட்டவர்களில் வீரப்பனின் குடும்பத்தினர் எவருடைய பெயரும் இல்லை. "அவர்கள் பெயரை நான் குறிப்பிட்டால் நான் சொன்னது அனைத்தும் எனது குடும்பத்தினருக்காகத்தான் என்கிற கெட்ட பெயர் வந்துவிடும். அதனால்தான் அவர்களைப் பற்றிக் குறிப்பிடவில்லை' என்று வீரப்பன் விளக்கியபோதுதான் அவனை முழுமையாகப் புரிந்துகொள்ள முடிந்தது.

நீங்கள் அவனைச் சரணடையச் செய்ய எந்தவித முயற்சியும் எடுக்கவில்லையா?

எங்களது பேச்சுவார்த்தைகள் முடிந்து ராஜ்குமாரை விடுதலை செய்வது என்று முடிவெடுத்த பிறகு, வீரப்பனைத் தனியாக அழைத்துப் பேசினேன். சரணடைந்து விடுங்கள் என்று அறிவுரை கூறினேன். ஒரு மாதம் கழித்து வீரப்பனிடமிருந்து சரணடைய விரும்புவதாகத் தகவல் வந்தது. அதை இரண்டு முதல்வர்களுக்கும் தெரிவித்தேன். ஆனால், அவர்கள் அதில் அக்கறை காட்டவில்லை. அதற்குக் காரணம், வீரப்பனை உயிரோடு பிடிப்பதில் நமது அதிகாரிகளுக்குச் சம்மதம் கிடையாது என்று கேள்விப்பட்டேன். மூன்று மாதம் கழித்துத் திடீரென்று தமிழக முதல்வரிடமிருந்து, வீரப்பனைச் சரணடையச் சொல்லலாம் என்று தகவல் வந்தது. அப்போது தேர்தல் வர இருந்த நேரம். ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் வீரப்பனின் கதி என்னவாகும் என்று எப்படிச் சொல்ல முடியும்? தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்படவும் செய்தது. வீரப்பனைச் சரணடையச் செய்து, தேர்தலில் அதைப் பிரச்சாரமாக்க நினைத்தார் கலைஞர் கருணாநிதி. அதற்கு நான் உடன்பட்டிருந்தால், வீரப்பன் என் மீது வைத்திருந்த மரியாதையை நான் இழந்திருப்பேன். அதனால்தான் அதற்கு நான் உடன்படவில்லை.

ஈழத் தமிழர் பிரச்னையில் இந்தியா தலையிட வேண்டும் என்று நினைக்கிறீர்களா?

இந்தியா தவிர வேறு யாரும் தலையிட நாம் அனுமதிக்கக் கூடாது என்று நினைக்கிறேன். அப்படி அனுமதிப்பது இந்தியாவின் நலனுக்கு உகந்ததல்ல என்றும் நான் நினைக்கிறேன். இதை இந்திரா அம்மையார் புரிந்துகொண்டிருந்தார். இவர்கள் புரிந்துகொள்ளவில்லை.

இந்திரா காந்தியின் அணுகுமுறை இந்த விஷயத்தில் எப்படி இருந்தது?

1983 ஆம் ஆண்டு கொழும்பில் இனக்கலவரம் நடைபெற்று சுமார் 3,000 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அப்போது பிரதமராக இருந்த இந்திரா அம்மையார் அன்றைய வெளியுறவு ஆலோசகர் ஜி. பார்த்தசாரதியையும் வெளியுறவு அமைச்சர் நரசிம்மராவையும் கொழும்புக்கு அனுப்பி வைத்தார். இலங்கை ஒரு சிறிய நாடு, அங்கு நடக்கும் சிறிய பிரச்னைதானே என்று கருதாமல் இரண்டு சீனியர்களை அனுப்பி வைத்து, இலங்கை அதிபர் ஜெயவர்த்தனேவுக்கு ஒரு விஷயத்தை உணர்த்த விரும்பினார். அதாவது, "இந்தியா இந்த விஷயத்தை சாதாரண விஷயமாக எடுத்துக் கொள்ளாது, ஜாக்கிரதை' என்பதைத்தான் வெளியுறவுத் துறை அமைச்சரையும் அமைச்சர் அந்தஸ்திலுள்ள மூத்த வெளியுறவுத் துறை ஆலோசகரையும் அனுப்புவதன் மூலம் உணர்த்தினார் இந்திரா அம்மையார். உலக நாடுகளுக்கும் இந்த விஷயத்தில் யாரும் தலையிடுவதை இந்தியா விரும்பாது என்று மறைமுகமாக எச்சரிக்கும் செய்கை அது. இவ்வளவு செய்தும், ஜெயவர்த்தனா தனது வாக்குறுதியைக் காப்பாற்றாமல் மழுப்புகிறார் என்று தெரிந்ததும், போராளிக் குழுக்களை அழைத்து வந்து, நமது ராணுவத்தின் மூலம் அவர்களுக்குப் பயிற்சி அளித்தார். ஒருவேளை, இந்திரா அம்மையார் உயிரோடு இருந்திருந்தால், இலங்கைப் பிரச்னை எப்போதோ சுமுகமான ஒரு முடிவுக்கு வந்திருக்கும் என்பதுதான் எனது கருத்து.

தமிழ் ஈழத்தை இந்திரா காந்தி ஆதரித்திருப்பார் என்று நீங்கள் கருதுகிறீர்களா?

நான் அப்படிச் சொல்லவில்லை. ஆரம்பம் முதலே இந்திரா அம்மையார் தமிழ் ஈழத்தை ஆதரிக்கவில்லை. ஆனால், ஈழத் தமிழர்கள் இரண்டாந்தரக் குடிமக்களாக நடத்தப்படக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். அவர்களது உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதிலும் அதை இலங்கை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்பதிலும் இந்திரா அம்மையார் தீர்மானமாக இருந்தார்.

ராஜீவ் காந்தியின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட என்ன காரணம்?

ராஜீவ் காந்தி வந்தவுடன், இலங்கைப் பிரச்னையைப் பற்றி நன்றாகத் தெரிந்திருந்த, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏ.பி. வெங்கடேஸ்வரனை ராஜிநாமா செய்யச் சொன்னதுதான், ஈழப் பிரச்னைக்கு ஏற்பட்ட மிகப்பெரிய பின்னடைவு. ஜி. பார்த்தசாரதியும் நரசிம்மராவும் கையாண்ட ஈழப் பிரச்னையை, ரமேஷ் பண்டாரியை அனுப்பிப் பேசச் சொன்னபோது, ராஜீவ் அரசு இந்தப் பிரச்னையை முக்கியமாகக் கருதவில்லை என்கிற தோற்றத்தை இலங்கைக்கும் உலக நாடுகளுக்கும் ஏற்படுத்தி விட்டார். அப்போது வெளியுறவுக் கொள்கையில் இலங்கைப் பிரச்னைக்கு ஏற்பட்ட பின்னடைவுதான் இன்றைய நிலைமைக்குக் காரணம்.

இலங்கைத் தமிழர் பிரச்னை தொடர்வது இந்தியாவின் நலனுக்கு உகந்ததல்ல என்று கூறினீர்கள். அது ஏன்?

இந்தியாவின் வடபகுதிதான் பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளின் தாக்குதலுக்கு உட்படும் பகுதியாக இருக்கிறதே தவிர, இந்தியாவின் தென்பகுதி அபாயம் இல்லாத பகுதியாக இருந்து வந்திருக்கிறது. இலங்கையைத் தவிர இங்கே வேறு அண்டை நாடு எதுவும் நமக்குக் கிடையாது. நமக்கு ஆபத்தே இல்லாமல் இருந்த தென்பகுதியில் இப்போது பாகிஸ்தான், இஸ்ரேல் என்று பல அந்நிய சக்திகள் காலூன்றத் தொடங்கிவிட்டன. இந்தியாவுக்குத் தலைவலி கொடுக்க இலங்கையைத் தளமாக்க நினைக்கின்றன நமக்கு விரோதமான சக்திகள்.

இந்திரா காந்தியின் காலத்தில் அந்நியத் தலையீடு இலங்கையில் இல்லவே இல்லை என்கிறீர்களா?

நிச்சயமாக இருக்கவில்லை. ஜெயவர்த்தனே அமெரிக்காவுடன் ராணுவத் தளம் அமைப்பது பற்றிப் பேச இருக்கிறார் என்பது தெரிந்ததும், இந்திரா அம்மையார் நாடாளுமன்றத்தில் ஓர் எச்சரிக்கை விடுத்தார். இந்து மகா சமுத்திரத்தில் எந்த அந்நிய சக்தி நுழைய முயற்சித்தாலும் அது எங்களுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கையாகத்தான் இந்தியா கருதும் என்று அவர் சொன்னதுதான் தாமதம், அந்த முயற்சி கைவிடப்பட்டது. இப்போது, இலங்கை ராணுவத்தின் விமானங்களையும் பாகிஸ்தானியர்கள்தான் ஓட்டுகிறார்கள். நாம் பயந்துபோய், சீனாவிடமும் பாகிஸ்தானிடமும் இலங்கை ஆயுதம் வாங்கிவிடக்கூடாது என்பதற்காக இந்தியா ஆயுதம் கொடுக்கிறது என்று நமது பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் கூறுகிறார். இந்தியாவிற்கு ஏற்பட்டிருக்கும் அபாயத்தை, தில்லியிலிருக்கும் நமது அரசு உணரவே இல்லை.

இந்திய அரசு விடுதலைப் புலிகளுக்கு நேரடி ஆதரவு கொடுக்க வேண்டும் என்பதுதான் உங்கள் கருத்தா?

நேரடி ஆதரவு தர வேண்டும் என்றெல்லாம் நான் சொல்லவில்லை. எங்கேயோ இருக்கும் நார்வே இந்தப் பிரச்னையில் பஞ்சாயத்து செய்யும்படி விட்டது இந்திய அரசு செய்த மிகப்பெரிய தவறு. இப்போது இந்தப் பிரச்னை தீர்ந்தாலும்கூட அதில் இந்தியாவின் பங்கு இல்லை என்றாகிவிடுகிறதே, அதுதான் தவறு என்கிறேன்.

அப்படியொரு நிலைப்பாடு எடுத்து நாம் அமைதிப்படையை அனுப்பி அவமானப்பட்டது போதாதா? இன்னொரு முறை இந்தியா இந்தப் பிரச்னையில் தலையிட்டு தலைகுனிந்து நிற்க வேண்டும் என்பதுதான் உங்கள் விருப்பமா?

தப்பான நிலைப்பாட்டை அப்போது எடுத்ததால்தானே அப்படியொரு நிலைமை ஏற்பட்டது. அமைதிப்படை ஆயுதம் தாங்க வேண்டிய அவசியம் என்ன? "நமது வீரர்கள் வாலிபால் விளையாடுகிறார்கள். இந்திய வீரர்கள்தான் செத்துக் கொண்டிருக்கிறார்கள்' என்று ஜெயவர்த்தனே சந்தோஷமாகச் சொன்னார். அந்த மோதலுக்குக் காரணம் விடுதலைப்புலிகள் அல்ல என்று இந்திய அமைதிப்படைக்குத் தலைமை தாங்கிய திபேந்தர் சிங் தான் எழுதிய புத்தகத்தில் தெளிவாகச் சொல்கிறார். மோதலுக்குக் காரணம் "ரா' உளவுத்துறை செய்த தவறு. இந்த மோதல் ஏற்பட வேண்டும் என்று ஜெயவர்த்தனே விரும்பினார். அது நடந்தது.

ராஜீவ் காந்தியைக் கொலை செய்தது மிகப்பெரிய தவறில்லையா? அதற்குப் பிறகும் நாம் எப்படி விடுதலைப்புலிகளை ஆதரிக்க முடியும் என்று நினைக்கிறீர்கள்?

யார் யாரைக் கொலை செய்தாலும் அது தவறு என்று சொல்பவன் நான். அதுமட்டுமல்ல, நேரு குடும்பத்துடன் மிகவும் நெருக்கமாகப் பழகியவன். ஏழாயிரம் ஈழத்தமிழர்களை இந்திய ராணுவம் படுகொலை செய்ததே என்று அவர்களும், ராஜீவ் காந்தியை விடுதலைப்புலிகள் கொன்று விட்டனர் என்று நாமும் சொல்லிக் கொண்டிருப்பதால் என்ன லாபம்? நமது நாட்டிற்குள் நுழைந்து நமது முன்னாள் பிரதமரை அவர்கள் கொன்றுவிட்டனர் என்கிறோம் நாம். எங்கள் நாட்டிற்குள் நுழைந்து எங்கள் அப்பாவி மக்களைக் கொன்று குவித்தது உங்கள் ராணுவம் என்கிறார்கள் அவர்கள். இது விடுதலைப் புலிகளின் பிரச்னையோ, ஈழத் தமிழர் பிரச்னையோ அல்ல. இந்தியாவுக்கே ஆபத்தை விளைவிக்கும் பிரச்னையாக மாறிவிட்டிருக்கும் நிலையில், நாம் மௌனம் சாதிப்பது விசித்திரமாக இருக்கிறது.

இந்தப் பிரச்னையில் திமுக மற்றும் அதிமுகவின் நிலைப்பாடு எப்படி இருப்பதாகக் கருதுகிறீர்கள்?

அந்த இரண்டு கட்சிகளுமே, சாப்பாட்டிற்கு ஊறுகாய் தொட்டுக் கொள்வதுபோலத்தான் ஈழத் தமிழர் பிரச்னையை அணுகுகிறார்கள். நியாயமாக இந்தப் பிரச்னையில், மத்திய அரசு எப்படிச் செயல்பட வேண்டும் என்று சொல்ல வேண்டிய பொறுப்பு இங்கே தமிழகத்தில் ஆட்சி செய்யும் கட்சியிடம் தானே இருக்கிறது? ஆனால், முதல்வர் கருணாநிதி திரும்பத் திரும்ப "மத்திய அரசின் முடிவுதான் எங்கள் முடிவு' என்றல்லவா சொல்கிறார். மேற்கு வங்கத்தில் ஃபராக்கா அணைப் பிரச்னை வந்தபோது, அன்றைய முதல்வர் ஜோதிபாசு வங்காளதேச அதிபருடன் பேசி எடுத்த முடிவைத் தானே மத்திய அரசு அங்கீகரித்து ஒப்பந்தம் போட்டது. ஜோதிபாசுவுக்கு இருந்த துணிவும் தமிழர்களின் நலனைப் பாதுகாக்க வேண்டும் என்கிற உள்ளார்ந்த உணர்வும் முதல்வர் கருணாநிதிக்கு இல்லையே ஏன்?

தமிழ் ஈழம் அமையுமேயானால் அது இந்தியாவுக்கு ஆபத்தாக இருக்காதா? நாளைக்கே தமிழகம் பிரிந்து போக அது வழிகோலாதா?

அது தவறான கண்ணோட்டம். கிழக்கு பாகிஸ்தான் பிரிந்து வங்காளதேசம் உருவானதற்கு இந்தியா துணைபுரிந்தது. ஒருகாலத்தில் ஒன்றாகத்தான் வங்காளம் இருந்தது. இரண்டு பகுதிகளுமே

வங்காள மொழி பேசும் பகுதிகள்தான். மேற்கு வங்கம் பிரிவினை கேட்கிறதா என்ன? தமிழ்நாடும், யாழ்ப்பாணமும் ஒரு காலத்திலும் ஒரே நாடாக இருந்ததில்லை. வங்காளி மீது ஏற்படாத சந்தேகம் தமிழன் மீது மட்டும் ஏன் வருகிறது என்பதுதான் எனது கேள்வி. ஆகவே, இந்த வாதத்திற்கு அர்த்தமில்லை.

நிறைவாக, ஒரு கேள்வி. தமிழகத்தின் இன்றைய அரசியல் நிலைமை பற்றி நீங்கள் என்னதான் நினைக்கிறீர்கள்?

மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். ஆட்சியும் அதிகாரமும் சுயநலத்துக்காக மட்டும் பயன்படுத்தப்படுகிறது என்பதையும் புரிந்து கொண்டிருக்கிறார்கள். சரியான மாற்றுக்காக மக்கள் காத்திருக்கிறார்கள் என்றுதான் நான் நினைக்கிறேன். அந்த மாற்றம் ஏற்படும் நாள் வெகுதூரத்தில் இல்லை.

தினமணி

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

"இந்தப் பிரச்னையில் திமுக மற்றும் அதிமுகவின் நிலைப்பாடு எப்படி இருப்பதாகக் கருதுகிறீர்கள்?

அந்த இரண்டு கட்சிகளுமே, சாப்பாட்டிற்கு ஊறுகாய் தொட்டுக் கொள்வதுபோலத்தான் ஈழத் தமிழர் பிரச்னையை அணுகுகிறார்கள். நியாயமாக இந்தப் பிரச்னையில், மத்திய அரசு எப்படிச் செயல்பட வேண்டும் என்று சொல்ல வேண்டிய பொறுப்பு இங்கே தமிழகத்தில் ஆட்சி செய்யும் கட்சியிடம் தானே இருக்கிறது? ஆனால், முதல்வர் கருணாநிதி திரும்பத் திரும்ப "மத்திய அரசின் முடிவுதான் எங்கள் முடிவு' என்றல்லவா சொல்கிறார். மேற்கு வங்கத்தில் ஃபராக்கா அணைப் பிரச்னை வந்தபோது, அன்றைய முதல்வர் ஜோதிபாசு வங்காளதேச அதிபருடன் பேசி எடுத்த முடிவைத் தானே மத்திய அரசு அங்கீகரித்து ஒப்பந்தம் போட்டது. ஜோதிபாசுவுக்கு இருந்த துணிவும் தமிழர்களின் நலனைப் பாதுகாக்க வேண்டும் என்கிற உள்ளார்ந்த உணர்வும் முதல்வர் கருணாநிதிக்கு இல்லையே ஏன்? "

நெடுமாறன் ஐயா கூறியது முற்றிலும் உண்மை. ஏனெனில் தமிழ் நாட்டரசு ஈழதமிழர் பிரச்சனையில் ஏனோ தானோ என இருக்கும் போது மத்திய அரசு எம்மாத்திரம்?

  • கருத்துக்கள உறவுகள்

படகு பயணம் ஏன்? : பழ. நெடுமாறன் விளக்கம்

[சனிக்கிழமை, 1 செப்ரெம்பர் 2007, 17:46 ஈழம்] [புதினம் நிருபர்]

ஈழத் தமிழர்களுக்கான உணவு மற்றும் மருந்துப் பொருட்களுடன் படகுப் பயணம் மேற்கொள்வது ஏன் என்பது குறித்து "ஆனந்த விகடன்" வார இதழுக்கு தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் விளக்கம் அளித்துள்ளார்.

அவரது நேர்காணலில் இது தொடர்பில் கூறியுள்ளதாவது:

யாழ்ப்பாணத்தில் ஐந்து லட்சம் தமிழர்களைப் பட்டினி போட்டுப் பணிய வைக்கும் கீழ்த்தரமான போர்த் தந்திரத்தை சிங்கள அரசு செயற்படுத்துகிறது. அதன் விளைவாக, ஈழத்தில் பட்டினிச் சாவுகள் அதிகரித்துள்ளன.

இந்திய அரசோ, தமிழக அரசோ இதில் நியாயமாக நடந்து கொள்ளவில்லை. எனவே, ஈழத்தில் வாடும் எங்கள் சகோதரர்களுக்காக தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் எண்பதுக்கும் மேற்பட்ட அமைப்புக்களை ஒருங்கிணைத்து, தமிழகம் முழுக்கச் சென்று, மக்களிடம் இரண்டே மாதத்தில் ஒரு கோடி ரூபாய் பெறுமானமுள்ள அரிசி, மருந்து போன்ற அத்தியாவசியப் பொருட்களைத் திரட்டினோம்.

அதை ஈழத்துக்கு அனுப்ப, இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியை நாடினோம். அவர்களும் மகிழ்வுடன் ஒப்புக்கொண்டு மத்திய அரசிடம் அனுமதி கேட்டுக் கடிதம் எழுதினார்கள். வைகோ, ராமதாஸ், ஜார்ஜ் பெர்னாண்டஸ் உள்பட பல தலைவர்கள் நேரிலும் கடிதம் மூலமாகவும் மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்தும், அது கண்டு கொள்ளப்படவே இல்லை.

ஜெனீவாவில் இருக்கிற அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம்கூட இது சம்பந்தமாக இந்திய அரசுக்குக் கடிதம் எழுதியது.

சட்ட ரீதியாக நாங்கள் எடுத்த முயற்சிக்கு, மத்திய அரசு கடந்த ஏழு மாதங்களாக மௌனம் சாதிக்கிறது. இனியும் தாமதித்தால், உணவுப் பொருள்கள் கெட்டுப்போய்விடும்.

மருந்துப் பொருள்கள் காலாவதியாகி, யாருக்கும் பயன்படாமல் போய்விடும்.

எனவேதான், அவற்றை நாங்கள் படகுகள் மூலம் அனுப்பி வைப்பது என்கிற போராட்டத்தை நடத்தத் துணிந்தோம்.

இதன் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பது எனக்குத் தெரியும். அது பற்றிக் கவலை இல்லை என்றார் அவர்.

puthinam

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.