Jump to content

காசி ஆனந்தன் கதைகள் : கிறுகிறுப்பும் -தலைச்சுற்றும்..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

காசி ஆனந்தன் கதைகள் : கிறுகிறுப்பும் -தலைச்சுற்றும்..! (மௌன உடைவுகள் -13)

காசி ஆனந்தன் கதைகள் : கிறுகிறுப்பும் -தலைச்சுற்றும்..! (மௌன உடைவுகள் -13)

      —- அழகு குணசீலன் —-

முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவுடன் பேசுவதற்கு  திகதி குறிக்கக்  கோரியும்  அவர்அதனைக் கிடப்பில் போட்டுவிட்டார் என்று புலம்பிய தமிழ்த்தேசிய அரசியல்வாதிகள் இந்தியா முதல் அமெரிக்கா வரை சென்று முறையிட்டார்கள். இறுதியில்  இலங்கை இனப்பிரச்சினையை இலங்கை அரசியலே தீர்க்கவேண்டும். என்ற “அட்டமெல்லாம் ஓடினாலும் இட்டது இட்டது தான்” என்றாகிவிட்டது. 

மறுபக்கத்தில் பேச்சுவார்த்தையில் பங்கு கொள்வதற்கான முன் நிபந்தனைகளை விதிப்பதற்கான பலம் தமிழ்தரப்பிடம் அறவே இல்லை. இதனால் பெரும்பாலான தமிழ்தேசிய அரசியல் கட்சிகள் பேச்சுக்களில் பங்கேற்கின்றன. சிங்கள தேசியக்கட்சிகளின் நிலையும் இதுதான். பலவீனமான இரு அரசியல் தரப்புக்களுக்கு இடையே நடக்கும் பேச்சுவார்த்தை இது. ரணில் பொதுஜன பெரமுனவிலும், தமிழ்த்தரப்பு எதிர்கட்சிளிலும் தங்கியிருக்கிறார்கள். எல்லாத் தரப்புக்கும் அடுத்த தேர்தலில் மக்களிடம் வாக்கு “உண்டியல்” குலுக்க இது அவசியம் என்பதுதான் இதன் பின்னணியில் உள்ள உண்மை.  இவர்கள்தான் உண்டியல் குலுக்குகிறார்கள் என்றால் காசி.ஆனந்தனும் தன்பாட்டுக்கு கதை சொல்லத் தொடங்கிவிட்டார்.

எல்லோரும் ஒரே உண்டியலைக் குலுக்கமுடியுமா…?என்ன…? கட்சிப் பெயர்கள் போன்று காங்கிரஸ், தமிழரசு, கூட்டமைப்பு, முன்னணி, கூட்டணி, பின்னணி, மையம் என்று ஏதாவது வித்தியாசம் தேவை. இல்லையா…? அப்படியே பேச்சுவார்த்தை மேசையில், ஊடகச் சந்திப்பில் வார்த்தையாடல்களால் ஒவ்வொரு தரப்பும் தம்மை வேறுபடுத்திக் காட்ட முண்டியடிக்கின்றனர். இந்த வார்த்தையாடல்களுக்குப் பெயர் “முன்நிபந்தனையாம்” என்கிறார்கள், “பொறிமுறை” என்கிறார்கள் மக்களுக்கோ கிறுகிறுப்பும், தலைச்சுற்றுமாக உள்ளது.

“ஒற்றையாட்சியைக் கைவிட்டு சமஷ்டி அடிப்படையில் பேச்சுவார்த்தை நடாத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளிக்காமல் பேச்சுவார்த்தைக்கு செல்லப்போவதில்லை….” இது கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அணியின் கூற்று. இத்தனைக்கும் அரசியல் அமைப்பின் ஆறாவது திருத்தத்தின் கீழ் இலங்கை ஒற்றையாட்சி அரசியலமைப்புக்கு விசுவாசமாக எம்.பி.யாக பதவி ஏற்றவர்கள் இந்த தமிழ்த்தேசிய அரசியல்வாதிகள்.

“ஒற்றையாட்சியின் கீழான எந்தத் தீர்வும் அர்த்தமுள்ள ஒரு தீர்வாக அமையாது என்பதே எமது கட்சியின் நிலைப்பாடு..” என்று கூறுகிறார் விக்கினேஸ்வரன்.

“இரண்டு இலட்சம் சிங்களப்படைகளை தமிழீழத்தில் இருந்து வெளியேற்றக் கோராமலும், மரபுவழித் தமிழர் தாயகத்தை அங்கீகரிக்கக் கோராமலும், சமஷ்டி கோருகிறீர்களே யாருக்குத் தேவை இந்த “வெங்காயச் சமஷ்டி” என்று கேட்கிறார் கவிஞர் காசி.ஆனந்தன். ஆக, காசி.ஆனந்தன் கோரும் கடுமையான முன்நிபந்தனைகள் இராணுவ, அரசியல் இலக்கான தமிழீழக் கோரிக்கைதான் .

மேலும் “பண்டா -செல்வா முதல், ஜே.ஆர் -அமிர்தலிங்கம் வரையான பேச்சுவார்த்தைகளைக் குறிப்பிட்டு ரணிலோடு சம்பந்தன் பேசி தீர்வுவரும் என்பது முட்டாள்தனம்” என்றும்  “உயிர் இழந்த தாயகத்திற்கு சமஷ்டி கேட்பது செத்த சடலத்திற்கு பூமாலை வாங்கும் உதவாத வேலை” என்றும் தமிழ்த்தேசிய பாராளுமன்ற அரசியலை கடுமையான வார்த்தைகளால் சாடுகிறார் காசி. 

காசி.ஆனந்தனின் வார்த்தைப் பிரயோகங்கள் உணர்ச்சிக் கவிஞரின் மொழிநடை வழக்கத்திற்கு மாறானவை இல்லைத்தான். ஆனால் இது பேச்சு வார்த்தை தொடர்பான இராஜதந்திர அணுகுமுறை அறிக்கையாக இருக்கவேண்டும் இல்லையா? அங்குதான் உதைக்கிறது. “வெங்காயச் சமஷ்டி”, “சவத்திற்கு பூமாலை”,  “மண்ணாங்கட்டி” என்றெல்லாம் பேசும் அளவுக்கு ஈழத்தமிழர் நட்புறவு மையத்திற்கு உள்ள ஆயுத, அரசியல் பலம் என்ன..? பலம் அறிந்து ஜதார்த்த பூகோள அரசியலைச் புரிந்த கதையா? இது. அல்லது வெறும் உணர்ச்சிக் கவிதையா…?

“மன்னிப்பு கிடைக்காத பாவத்தைச் செய்யாதீர்கள். மாவட்டசபை, அதிகாரசபை என்றோ, ஏதாவது ஒரு மண்ணாங்கட்டிக்கு நீங்கள் தலையசைப்பீர்கள் ஆனால் தமிழீழ மக்கள் உங்கள் முகத்தில் காறித்துப்புவார்கள்” என்ற இடத்தில் அவரின் சமஷ்டி ஒவ்வாமையின் உச்சம் தொடுகிறது. எது பாவம்..? எது மன்னிப்பு..? என்று புலிகளின் பாணியில் தானே நீதி வழங்குகிறார் காசி.ஆனந்தன்.

“புவியியல் அரசியல் சூழலில் இந்திய அரசின் தெற்கு எல்லைப் பாதுகாப்பும் பின்னிப்பிணைந்த நிலையில் காய்களை நகர்த்தி வருகிறோம் ”  . “காத்திருங்கள் தமிழீழம் கனவல்ல காலத்தின் கட்டாயம்” என்று அவரே செத்த சவத்திற்கு பூமாலை போடுகிறார். இதன் மூலம் இந்தியா தமிழீழத்தை சீனாவுக்கு எதிராகப் பெற்றுத்தரும் என்ற படம் காட்டப்படுகிறது. திம்பு பேச்சுக்கள் முதல் ராஜுவ்காந்தி கொலை வரையும், மற்றும் முள்ளிவாய்க்காலுக்கும் இந்திவைத் திட்டிய இவருக்கு இப்போது பூகோள அரசியல் முக்கியத்துவம் புரிந்திருக்கிறது. ஆனால் அது தமிழீழத்தை தரும் என்பதுதான் தேசிய விடுதலை குறித்த தவறான புரிதல்.

ஒருபுறம் பேச்சுக்களில் பங்குகொண்டும், பேச்சாளராக பவனிவந்தும், மறுபக்கத்தில் “இந்தப் பேச்சுக்களில் நம்பிக்கை இல்லை. ரணில் ஏமாற்றுவார். ஆனால் பங்கு கொள்கிறோம்” என்று தனது வழக்கமான பல்லவியை பாடுகிறார் சுமந்திரன். மக்களால் நிராகரிக்கப்பட்ட ரணில் ஜனாதிபதியா? ஏற்கமுடியாது! அவர் பதவிவிலக வேண்டும் என்று  நாடாளுமன்றத்தில் நாடகமாடிய சாணக்கியன் ஜனாதிபதியோடு பேசாமல் வேறு யாரோடு பேசுவது என்று தலைகீழாக நிற்கிறார்.

ஏட்டிக்குப் போட்டியான தேர்தலை மையப்படுத்திய இந்த “உண்டியல் குலுக்கல்” இவர்களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவதற்கு ஒரு வாய்ப்பாக அமைகிறது. இதனால்தான், இவற்றைக் கேட்கும்போது கிழக்காருக்கு “கிறுகிறுப்பும்” ,வடக்காருக்கு “தலைச்சுற்றும்” வருகிறது..

கவிஞர் காசி.ஆனந்தன் கடந்த காலங்களில் தான் தலைவராகவுள்ள  ஈழத்தமிழர் நட்புறவுமையத்தின் ஊடாக அறிக்கைகளை விட்டு தனது இருப்பை நினைவூட்டிவருகிறார். அந்த வரிசையில் வட்டுக்கோட்டை மாநாட்டு மீள் பிரகடனம், இந்தியப் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம், அண்மையில் புதுடெல்லியில் இடம்பெற்ற சந்திப்பு என்பனவற்றை அவதானிக்கும்போது அவரின்  “இந்திய உறவை”, “போலிப்புலிகள்”   கெடுத்து விடுவார்கள் என்று நினைக்கிறார் போலும்.

காசி. ஆனந்தன் உலகத்தமிழர் நன்கறிந்த உணர்ச்சிக் கவிஞர், தமிழ் ஈழ விடுதலைப்புலிகளின் ஆதரவாளர், ஆரம்பத்தில் இருந்தே ஈழப்போராட்ட வரலாற்றில் தடம்பதித்தவர், சிறிலங்கா தமிழ் அரச ஊழியர்கள் சிங்களம் படிக்கவேண்டும் என்பதை தனது பதவியைத் துறந்து எதிர்த்தவர், பலமுறை சிறை சென்று மீண்ட செம்மல் என்பதெல்லாம் பழைய பெருங்கதைகள். இந்தத் தகுதிகளைக்கடந்து அவரது அறிக்கையில் ஜதார்த்த அரசியல், இராஜதந்திர உள்ளடக்கத்தை தேடினால் அதுவும் ஒரு “வெங்காயம்” தான்.

கஜேந்திரகுமாருக்கு எதிராக, விக்கினேஸ்வரன், இவர்கள் இருவருக்கும் எதிராக சம்பந்தன் அன்கோ, எல்லோருக்குமே எதிராக காசி.ஆனந்தன் இப்படி அனைவரும் கனவு அரசியல் செய்கின்றனர். வெறும் கடிதத்தலைப்பு ஈழத்தமிழர் நட்புறவு மையத்தை வைத்துக்கொண்டு “நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்” என்று பாடுவது அவருக்கு பழக்கதோசமாகிவிட்டது.  2009 க்குப் பின்னரும் அவர் இதைப்பாடுவது அவரது அரசியல் வெறுமையை வெளிப்படுத்துகிறது. இதற்காக மக்கள் கொடுத்த விலை என்ன…? அதற்கு ஈடாக இதுவரை அவர்கள் பெற்ற அடைவுஎன்ன..?

 தமிழ்த்தேசிய தலைமைகளை நோக்கி “முன் நிபந்தனைகளோடு பேச்சுவார்த்தைக்கு ஏன் முகம்கொடுக்கவில்லை என்பதே என் முதல் கேள்வி” என்று கேட்கிறார் காசி.ஆனந்தன். எந்த ஒருபேச்சு வார்த்தைகளிலும்  முன் நிபந்தனைகளை விதிப்பதற்கு ஒரு பலம் தேவை. பேரம்பேசும் சக்தி தேவை. 2009 க்குப் பின்னர் தமிழ்த்தேசிய அரசியலில் அது இல்லை என்பதை காசி.ஆனந்தன் அறிவாரா? அல்லது தமிழர்கூட்டணி தமிழீழம் கேட்டதுபோல் வெறும் கையோடு “சும்மா” நிபந்தனைகளை முன்வைத்திருக்கலாம் என்று நினைக்கிறாரா?

காசி.ஆனந்தன் கூறும் ஒரு  முன்நிபந்தனை:  “வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் மரபுவழித் தாயகம் என்று அரசியலமைப்பில் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று கோரியிருக்கவேண்டும் என்பதாகும். 13 வது திருத்தம் இதை ஏற்றுக்கொண்டதாகத்தான் அமைகிறது. ஆனால் அது அவர் கூறுவது போன்று தமிழர்களை மட்டும் குறித்து நிற்கவில்லை. குறித்து நிற்கவும் முடியாது. அதேபோன்று தேசிய இனங்களின் மரபுவழி வாழ்விடம் இணைக்கப்பட்ட -ஒன்றிணைந்த பிரதேச நிர்வாக அலகாக இருக்கவேண்டும் என்பதும் அல்ல. ஒன்றுக்கு மேற்பட்ட பிரதேச நிர்வாக அதிகாரப்பகிர்வு அலகாக இருக்க முடியும். இப்படி ஒன்றிற்கும் அதிகமாக பிரிந்து இருப்பதால் அது மரபுவழி வாழ்விட அந்தஸ்த்தை இழப்பதும் இல்லை.

இவை அனைத்தும் தமிழ்த்தரப்பு பேச்சுவார்த்தை உள்ளடக்கம் என்றால் மறுபக்கத்தில் சிங்களத்தரப்பின் பேச்சுவார்த்தை உள்ளடக்கத்தையும் நோக்கவேண்டியதாகிறது. சிங்களத்தரப்பானது உண்மையில் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கு விரைவாக தீர்வுகளைக் காண்பதைவிரும்புகிறது. பேச்சுவார்த்தைக்கான ரணிலின் அழைப்பின் பின்னணியும் இதுதான். ஆனால் தமிழ்த்தேசிய அரசியல் தமிழீழம் வரை கேட்டு வாங்க பேச்சுவார்த்தையை நம்பியிருப்பதுபோல் தெரிகிறது. இந்த முரண்பாட்டு அணுகுமுறை இனப்பிரச்சினைக்கான தீர்வு நோக்கிய வரலாற்று நகர்வில் மீண்டும் வேதாளம் முருங்கையில் ஏறி முறிந்து வீழ்ந்த கதையாகிவிடும். அப்போது மக்களின் நிலை மாடேறிமிதித்த கதையாகும்.

முக்கிய சிங்கள தேசியக்கட்சிகள் அனைத்தும் ஏறக்குறைய ஒரே நிலைப்பாட்டையே சர்வகட்சி மாநாட்டில் முன்வைத்துள்ளன. இனப்பிரச்சினைக்கான தீர்வு அதிகாரப்பகிர்வினூடாக அமையவேண்டும். அந்த அதிகாரப்பகிர்வு ஒன்றிணைந்த இலங்கைக்குள் ஒற்றையாட்சியின் கீழ்இடம்பெறவேண்டும். தமிழ்த்தரப்பு ஒற்றையாட்சிக்கு வெளியே தீர்வைக்தேட சிங்களத்தரப்பு ஒற்றையாட்சிக்குள் தீர்வைத்தேடுகிறது. 

இந்த இருதரப்பு கொடுக்கல் வாங்கல்களுக்கான இடைவெளி மிக, மிக அதிகமானது. அந்த இடைவெளியைக் குறைப்பதும் அவ்வளவு இலகுவானதல்ல. கஜேந்திரகுமார் அணியை தேர்தலில் சமாளிக்க வேண்டுமானால் சம்பந்தன் அன் கோ கோரிக்கையில் இருந்து இறங்கிவருவது அரசியல் நட்டத்தை ஏற்படுத்தும். 

அதே போன்று சிங்களத்தரப்பு 13,13+ க்கு மேலதிகமாகப் போனால், ஒற்றையாட்சிக்கு அப்பால் பரிசீலனை செய்யத்தயாரானால் சிங்கள தேசியவாதிகளின் எதிர்ப்பை சந்திக்கவேண்டிவரும். இது அடுத்த தேர்தலில் அவர்களின் தலைவிதியை நிர்ணயிப்பதாக அமையும். காசி.ஆனந்தனின் இந்தியாவுக்கான மறைமுக அழைப்பு சிங்கள தேசியவாதிகளை தட்டி எழுப்புவதாக உள்ளது.

தமிழ்த்தேசிய தரப்பு தமது கட்சிகளின் அடிப்படைக் கொள்கைகள் , நிலைப்பாடுகள் பற்றியே பேசுகிறது. ஆனால் இந்த நிலைப்பாடு பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டையாகும். ஆனால் பேச்சுவார்த்தையின் வெற்றி, தோல்வியை சமகால அரசியல் இராஜதந்திர நகர்வுகளே தீர்மானிக்கும்.  

இதுவரையான எந்த ஒரு பேச்சு வார்த்தைகளிலும் தமிழ்தரப்பு மக்கள் நலன்சார்ந்த இராஜதந்திர நகர்வுகளை முழுமையாக மேற்கொண்டதில்லை. இயக்க, கட்சி நலன் சார்ந்த அரசியலுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது, கொடுக்கப்படுகிறது. கட்சிகள் மக்களைச் சுத்துகின்றன…! 

 ஆக, பேச்சுவார்த்தையில் மிச்சம் “கிறுகிறுப்பும்”.!  “தலைச்சுற்றும்”…!! தான்.

 

 

https://arangamnews.com/?p=8394

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.