Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தாயகக் கனவுடன்…

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தாயகக் கனவுடன்…

 
 

(அவள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தாள். குமர்ப்பிள்ளைகளோடு கண்டபடி பேசக்கூடாது என்ற அம்மாவின் அறிவுறுத்தல் ஒரு பக்கம் என்னைப் பின் வாங்க வைத்தது. நாங்கள் வெளியே ஓடியாடி விளையாடும்போதெல்லாம் அறையன்னலுக்கால் அவள் ஏக்கத்தோடு எட்டிப் பார்ப்பதை அவதானித்திருக்கிறேன்)

ஸ்டோர்ரூம் சுவரில் சாய்ந்தபடி நான் விம்மியழுததை சுவேதா கவனித்திருக்க வேண்டும்.

‘அப்பா, ஏன் அழுவுறீங்க?’ என்றாள்

‘இல்லை, ஒன்றுமில்லை.’ என்று தலையை அசைத்தபடி கண்களைத் துடைத்துக் கொண்டேன்.

‘அழாதீங்கப்பா, அத்தைப் பாட்டியோட வீடு மட்டுமல்ல, இங்கே எல்லா வீடும்தான் சிதைந்து போச்சு, மெல்ல மெல்லத் திருத்தியிடுவாங்க.’ ஏன்று தனது அறிவுக்கேற்ற அறிவுரை தந்தாள்.

யுத்தம் முடிந்தபின் நான் குடும்பத்தோடு விடுமுறைக்குச் சண்டிலிப்பாய் சென்றிருந்தேன். ஏனைய வீடுகள் போல அத்தையின் வீடும் யுத்தத்தின் அவலத்தை எடுத்துக் காட்டியது. செல் குண்டுகள் வந்து விழுந்ததில் கூரை முற்றாகவே தூர்ந்து போயிருந்தது. செடி கொடி பற்றைகளுக்கு நடுவே வீடு ஒன்று இருந்ததற்கு அடையாளமாய் ஆங்காங்கே இடிந்து போன சுவர்கள் தலை தூக்கி நின்றன.

நான் கண் கலங்கியதற்குக் காரணமிருந்தது. என்னை அழவைத்தது கூரையற்ற அந்த ஸ்டேர்ரூமில் முளைத்திருந்த பற்றைச் செடிகளுக்கு மத்தியில் முளைத்துப் பூத்திருந்த கார்த்திகைச் செடியின் பூதான் என்பது மகளுக்குத் தெரியாது. மஞ்சள் சிகப்பு நிறத்தில் பளீச்சென்று கண்ணில் பட்டது. பழைய நினைவுகள் எல்லாம் திடீரெனக் கண்முன்னால் வந்து நின்றன. என்னால் மறக்க முடியாத அந்த நிகழ்வு இங்கே, இந்த ஸ்டோர்ரூமில்தான் அன்று நடந்தது. ஒவ்வொரு விடுமுறையின்போதும் நாங்கள் ஓடியாடிக் கும்மாளம் போட்ட இந்த வீடு இன்று சீரழிந்து கேட்பாரற்றுக் கிடந்தது. குடியிருந்த அந்த வீட்டைப் பார்க்கவே எவருக்கும் அழுகை வரும், ஆனால் நான் அழுதது அதற்காக அல்ல, என் அத்தை மகள் பிரியாவுக்காகத்தான்.

மனதைவிட்டகலாத எவ்வளவு மகிழ்ச்சியான நாட்கள் அவை என்பதால் அந்த நாட்களை நினைத்துப் பார்த்தேன். எங்கள் இளமைக் கனவுகளைத் தின்றுவிட்ட யுத்தத்தை மனசுக்குள் திட்டித் தீர்ப்பதைத் தவிர வேறு என்னதான் செய்ய முடியும்.

அத்தையின் குரல் கேட்டு வெளியே விளையாடிக் கொண்டிருந்த நாங்கள் சமையல் அறைக்கு ஓடிச் சென்றோம். சாப்பிட வரும்படி எல்லோரையும் அழைத்த அத்தையின் ‘கை அலம்பியாச்சா’ என்ற கேள்விக்குப் பதில் சொல்லாமல் கையலம்பக் கொல்லைப் பக்கத்தில் இருந்த கிணற்றடி நோக்கி ஓடினோம்.

கொழும்பு பட்டணத்தில் இருந்து நானும் தங்கையும் விடுமுறையைக் கழிக்க அத்தை வீட்டிற்கு வந்திருந்தோம். யாழ்ப்பாணத்தில் இருந்த சண்டிலிப்பாய் என்ற கிராமத்தில்தான் அத்தையின் வீடு இருந்தது. பட்டிணத்தில் வளர்ந்த எங்களுக்குக் கிராமத்து மருதநில சூழ்நிலை வித்தியாசமாக இருந்தது.

வயல் வரம்பு வழியே ஓடிப்பிடிப்பது, இலுப்பங்கொட்டை பொறுக்குவது, வானரப்படைகளோடு ஒல்லித்தேங்காய் கட்டிப் பூவல் குளத்திலே தாமரைக் கொடிகளில் சிக்காமல் நீச்சலடிப்பது, ஐயர் வீட்டு வளவிலே கொய்யாப்பழம் பறிப்பது, வேப்பமர நிழலில் மாங்கொட்டை அடிப்பது, மாட்டுவண்டில் சவாரி விடுவது இப்படிப் பொழுது போவதே தெரியாது. வேப்பமர நிழலில் விளையாடினாலும், வெய்யில் அதிகமாகையால் ஓடியாடி விளையாடியதில் உடம்பெல்லாம் வியர்த்து வழிந்தது. முகம் கைகால் அலம்பி ஒடிவந்த எல்லோரையும் உட்காரவைத்து அத்தை பிட்டு பரிமாறினாள். பிட்டுக்குத் தொட்டுக் கொள்ள மிளகாய்ச் சம்பல். வறுத்த மிளகாயை இடித்து தேங்காய்த் துருவலுடன் உப்பும் புளியும் கலந்து தயாரிப்பதுதான் சம்பல். நான் ஒரு கவளம் எடுத்து வாயில் வைத்துவிட்டு, சாப்பிடாமல் அத்தை முகத்தையே பார்த்தேன்.

‘என்ன அரிசிமாப்பிட்டு பிடிக்கலையா?’

‘பிட்டுப்பிடிச்சிருக்கு ஆனா..’

‘என்ன சம்பல் வேண்டாமா? உறைக்குதா?’

‘ஆமா உறைப்பாயிருக்கு, எனக்கு மாம்பழம் சீவித் தாறீங்களா?’

‘மாம்பழமா? ஓ அதுக்கா இந்தத் தயக்கம், சரி ஓடிப்போய் ஸ்டோர்ரூமில இருக்கு பழுத்ததாய் பார்த்து இரண்டு எடுத்துவா’ என்றாள் அத்தை.

நான் சந்தோஷமாய் எழுந்து ஓடிப்போனேன். ஓடி ஒளித்து கண்ணாமூச்சி விளையாடும் போதெல்லாம் இந்த ஸ்டோர் ரூமுக்குள் நாங்கள் ஓடிவந்து பதுங்கி இருந்திருக்கின்றோம். வீட்டின் கடைசியாக இருந்த சிறிய அறையைத்தான் ஸ்டோர் அறையாகப் பாவித்தனர். அந்த அறைக்குச் சிறிய யன்னல் ஒன்று தான் இருந்தது. அதுவும் அரைகுறையாக மூடியபடியிருந்தது. உள்ளே போதிய வெளிச்சம் இல்லாமல் இருட்டாய் இருப்பதால் என்ன உள்ளே இருக்கிறது என்று உடனே கண்டு கொள்வது கடினம். நேற்று இங்கேவந்து ஒளித்திருந்த போதுதான் மாம்பழ வாசம் குப்பென்று அடித்தது. அங்கே மாம்பழம் பழுக்க வைத்திருப்பதை அவதானித்தேன். அருகே சென்று பார்க்க முடியவில்லை, வாசத்திலிருந்து கறுத்த கொழும்பு மாம்பழமாய் இருக்கலாம் என்று ஊகித்தேன்.

கறுத்தக் கொழும்பு மாம்பழம் என்றாலே எனக்கு வாய் ஊறும். அதற்கு ஒரு காரணமும் இருந்தது. மாம்பழங்களில் பலவகையாகன மாம்பழங்கள் யாழ்ப்பாண மண்ணிலே இருந்தன. ஒவ்வொரு வீட்டுக் காணியிலும் குறைந்தது இரண்டு மூன்று மாமரங்களாவது இருக்கும். முக்கனிகள் என்று சொல்லப்படுகின்ற கனிகளில் மாம்பழமும் ஒன்றாக இருந்தது. குறிப்பாக யாழ்ப்பாண நகரத்திற்கு வடக்கே காங்கேசந்துறைக்குத் தெற்கே இணுவில் என்ற ஊர் ஒட்டு மாம்பழக் கன்றுகளுக்குப் பிரபலமாக இருந்தது. பாண்டி, கொழும்பு, பச்சைதின்னி, மல்கோவா, விலாட், அம்பலவி, செம்பாட்டான், சேலம், என்று காங்கேயந்துறை வீதிவழியாக யாழ்ப்பாண நகரம் நோக்கிப் போகும்போது இந்த ஒட்டு மாங்கன்றுகளை விற்பனைக்காக வீதி ஓரங்களில் வைத்திருப்பதை அவதானிக்கலாம். கொழும்பு மாம்பழங்களில் இரண்டுவகை உண்டு. ஒன்று வெள்ளைக் கொழும்பு, மற்றது கறுத்தக் கொழும்பு. சற்றுக் கரும்பச்சை நிறம் கொண்டதால் கறுத்தக் கொழும்பு மாம்பழம் என்று பெயர்பெற்றது. பழுக்கும்போது காம்புப்பக்கம் மஞ்சளாக மாறும். இது சற்று நீண்ட சதைப்பிடிப்புள்ள மிகவும் ருசியானமாம்பழம்.

ஸ்டோர் ரூம் திறந்தேயிருந்தது. கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே சென்றேன். உள்ளே சற்று இருட்டாக இருந்தது. கண்களை இருட்டுக்குள் பழக்கப்படுத்திக் கொண்டு பார்த்தேன். ஒரு சாக்குப் பைமேலே வைக்கோல் பரப்பி அதன்மேல் மாம்பழங்களைப் பரப்பியிருந்தனர். பெரிய பெரிய கறுத்தக் கொழும்பு மாம்பழங்கள் கொழுகொழு என்றிருந்தது மட்டுமல்ல வாசமும் தூக்கியடித்தது. விரல்களால் மெதுவாக அமத்திப் பார்த்து பழுத்த பழங்களாக இரண்டு பழங்களை கையில் எடுத்து முகர்ந்து பார்த்தேன். திருப்திப் படாமல் போகவே அதை வைத்துவிட்டு சற்றுப் பெரிதான ஒன்றை எடுத்து முகர்ந்து பார்த்தேன்.

எனக்கருகே ‘க்ளுக்’ என்ற சிரிப்பொலி கேட்டது.

திடுக்கிட்ட நான், என்னை நானே சமாளித்துக் கொண்டு நிமிர்ந்த போது தான் அவள் கண்ணில் பட்டாள். கால்களை மடித்து முழங்கால்களைக் கைகளால் அணைத்தபடி ஸ்ரோர் ரூம் மூலையில் கிடந்த பலகைக் கட்டிலில் தலையைக் குனிந்தபடி உட்கார்ந்திருந்தாள். ஒரு நிமிடம் திகைத்துப்போய் நின்றேன். இவளேன் இங்கே மௌனமாய் உட்கார்ந்து இருக்கிறாள்.

‘ஏய் பிரியா, ஏன் இங்கே தனியே உட்கார்திருக்கிறாய்?’ என்றேன்.

‘சும்மாதான்’ என்றாள் தலை குனிந்தபடி.

‘உனக்கு இங்கே இருட்டிலே இருக்கப் பயமேயில்லையா?’

‘இல்லையே’ என்று தலையசைத்தாள்.

‘நாங்க சாப்பிடப்போறோம். நீயும் வாவேன் சாப்பிட..’

‘நான் அங்கெல்லாம் வரக்கூடாது’

‘வரக்கூடாதா.. ஏன்? யார் சொன்னா?’

‘அம்மா!’

‘தண்டனையா, அப்போ மாம்பழம் சீவிக்கொண்டு வந்து தரட்டா’

‘ம்.. கூம்.. வேண்டாம். நான் சாப்பிடக்கூடாது’

‘ஏன் உனக்கு மாம்பழம் பிடிக்காதா?’

‘பிடிக்கும்!’

‘பிடிக்குமா, அப்போ ஏன்?’

‘அப்படித்தான்..!’

‘அப்போ எங்களோட விளையாட வரமாட்டியா?’

‘இனிமேல் வரமாட்டேன்!’

‘ஏன் என்னாச்சு உனக்கு? எங்களோட கோபமா? என்னைப்பார்த்துச் சொல்லு’ மெல்ல அருகே நகர்ந்தேன்.

‘கிட்ட வராதே வேணாம் கிட்ட வராதே’ கைகளை குறுக்கே அசைத்துத் தடுத்தாள்.

இவ்வளவு காலமும் இல்லாத பதட்டம் இவளுக்கு இப்போ ஏன் வந்தது?

அவளை முறைத்துப் பார்த்தேன், அவளது கண்கள் கலங்கியிருந்தன. அவளோ அழுதுவிடுவாள்போலக் கூனிக்குறுகி உட்கார்ந்திருந்தாள். எனக்கு எதுவும் புரியவில்லை. இருட்டறைக்குள் இப்படி ஏன் உட்கார்ந்திருக்கிறாள்?

‘வேண்டாம் என்றால் போ’ என்று சொல்லிவிட்டு பசி வயிற்றைக் குடையவே நான் மாம்பழங்களை எடுத்துக் கொண்டு வெளியே ஓடி வந்தேன்

‘ஏன்டா இவ்வளவு நேரம்?’ என்ற அத்தையிடம் மாம்பழங்களைக் கொடுத்துவிட்டுக் காத்திருந்தேன். அத்தை பழங்களின் தோலைச் சீவி, சிறுதுண்டுகளாக நறுக்கி எனது தட்டில் போட்டாள். ஒரு கவளம் பிட்டும், ஒரு கடி மாம்பழமும்.. ஆகா என்ன ருசி. மாங்கொட்டையைச் சூப்பிவிட்டு திருப்தியோடு எழுந்து கை அலம்பினேன்.

சாப்பிட்டு முடித்தாலும் சிந்தனை எல்லாம் ஸ்டோர் ரூமைச் சுற்றித்தான் இருந்தது. இருட்டறைக்குள் தனிமையில் பிரியா ஏன் உட்கார்ந்திருக்கிறாள்?

நேற்று நடந்ததை நினைத்துப் பார்த்தேன். கண்ணாமூச்சி விளையாடும் போது அவள் திடீரென அழுதது ஞாபகம் வந்தது. அந்த இருட்டறையில்தான் கட்டிலுக்குப் பின்னால் அவளுக்குப் பக்கத்தில் நானும் ஒளித்திருந்தேன். யாரோ உள்ளே தேடிவரும் காலடியோசை கேட்டது.

‘ஸ்.. யாரோ தேடி உள்ளே வர்றாங்க..!’ அந்தச் சிறிய இடத்தில் கட்டிலுக்குப் பின்னால் இடித்துக்கொண்டு இருட்டுக்குள் என்னோடு ஒளித்திருந்த அவளது காதுக்குள் கிசுகிசுத்தேன். சற்று நேரம் அறைமுழுவதும நிசப்தம் நிலவியது. தேடிப்பிடிக்க வந்தவன் இருட்டுக்குள் எங்களைக் கண்டு பிடிக்க முடியாமல் திரும்பிச் செல்லும் காலடி ஓசை காதில் மெல்ல விழுந்தது. அதையும் மீறி பிரியா மூச்சிரைக்கும்; சத்தம் கேட்டது.

‘ஏய்.. கையை எடுக்கிறியா?’

அவளது தோளில் மேல் எனது கை பட்டிருந்ததை அப்போதுதான் நானும் அவதானித்தேன்.

யாரும் உள்ளே இல்லை, ஆனாலும் காரணம் சொல்லாமல் திடிரென அவள் விம்மி அழுதது எனக்கு அச்சத்தை ஏற்படுத்தியது.

‘ஏய்,.. ஏன் அழுகிறாய்?’ என்று பதட்டத்துடன் கேட்டேன். அவள் எதுவும் சொல்லாமல் மிரண்டு போனவள்போல மீண்டும் ஓவென்று அழுதாள்.

‘வா, வெளியே போயிடுவோம்’ என்றேன்.

‘மாட்டேன்’ என்று அடம் பிடித்தவள் மீண்டும் விம்மினாள்.

பயந்துபோன நான் அத்தையிடம் ஓடிப்போய் முறையிட்டேன். அத்தை ஸ்டோர் ரூமுக்குள் வந்து அவளிடம் ஏதோ கேட்டுவிட்டு, தறதறவென்று அவளை இழுத்துச் சென்றாள். எனக்குப் பயமாக இருந்தது. அவள் அழுததற்குக் காரணம் நான்தான் என்று என்னை வம்பில் மாட்டி விடுவாளோ என்ற பயம் எனக்குள் இருந்தது.

அப்புறம் சற்று நேரம் கழித்து பக்கத்து வீட்டுப் மாமியை அவசரமாக அழைத்து வரச் சொன்னாள் அத்தை. நாங்கள் பீ..பீ என்று ஹார்ண் அடித்துக் கைகளால் கார்விட்டபடியே ஒடிப்போய் மாமியை அழைத்து வந்தோம். அத்தையும் மாமியும் ஏதோ கிசுகிசுத்தார்கள். எங்களை வெளியே போய் விளையாடச் சொல்லிவிட்டு அவளைக் கிணற்றடிக்குக் கொண்டு சென்று தலையிலே தோயவார்த்தனர். அப்புறம் என்ன நடந்தது என்று தெரியவில்லை. நாங்கள் விளையாடிவிட்டு வந்து அந்தக் களைப்பில் அப்படியே தூங்கிவிட்டோம்.

இன்று இவள் இந்த அறையில் தனிமைப்படுத்தப் பட்டிருந்தாள். கேட்டால் எதுவும் சொல்ல மறுக்கிறாள். அத்தை நல்லெண்ணையும், முட்டையும் எடுத்துக் கொண்டு ஸ்டோர் ரூமுக்குப் போவதை அவதானித்தேன்.

‘அத்தை, பிரியா எங்களோட விளையாட வரமாடேன் என்கிறாள்’ என்று முறைப்பாடு செய்தேன்.

‘இனிமே அவள் உங்களோட எல்லாம் விளையாட வரமாட்டாள்’ என்றாள் அத்தை.

‘ஏன் அத்தை?’ என்றேன்.

‘அப்படித்தான்..!’ அத்தை ஒற்றைச் சொல்லில் பதில் சொல்லிவிட்டுப் போய்விட்டாள்.

அன்று ஞாயிற்றுக்கிழமை, அப்பா வந்து எங்களை அழைத்துப் போகப்போவதாக அத்தை சொன்னாள். நாங்க அப்பாவோட போயிடுவோம் என்பதால் நானும் தங்கையும் பிரியாவிடம் விடைபெறச் சென்றோம். நான் தயங்கித் தயங்கி நின்றேன். எத்தனை நாளைக்குத்தான் இவள் இந்த இருட்டறைக்குள் அடைந்து கிடக்கப் போகிறாளோ?

இருட்டறைக்குள் நிற்கப் பயந்த தங்கை அவளை அணைத்து முத்தம் கொடுத்து, அவளுக்கு பாய் சொல்லிவிட்டு சட்டென்று வெளியேறினாள். நானும் என் பங்குக்கு அருகே சென்று,

‘ஏய் பிரியா, நாங்க போயிட்டு வர்றோம்’ என்று கை அசைத்துக் காட்டிவிட்டுத் திரும்பினேன்.

சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் அவள் சட்டென்று என் கையை எட்டிப்பிடித்து இழுத்தாள். நான் தடுமாறித் திரும்பிபப் பார்த்தேன்.

என்னை நானே சுதாரித்துக் கொள்ளுமுன் என்னை அருகே இழுத்துக் கன்னத்தில் முத்தம் ஒன்று பதித்தாள்.

‘ஏய் என்ன செய்கிறாய்?’ நான் தடுமாறிப்போனேன்.

‘எனக்கு இந்த கறுத்த கொழும்புதான் பிடிக்கும்’ என்றாள் காதுக்குள் மெதுவாக. அவளது மூச்சுக் காற்று கன்னத்தில் சுட்டதில் உடம்பு சிலிர்த்தது.

உறைந்து போய் நின்ற நான், அத்தை அழைக்கும் குரல் கேட்கவே, கன்னத்தைத் தடவிக்கொண்டு மெல்ல வெளியேறினேன்.

சுகமான அந்த அனுபவம் மீண்டும் அவளைத் தேடிப் போக வைத்தது. அடுத்த விடுமுறைக்கு ஆவலோடு ஓடிவந்தபோது பிரியாவை எங்களோடு சேர்ந்து விளையாட அனுமதிக்கவில்லை. அத்தை சொன்னதுபோல பெரியபிள்ளையானதால் அவள் தனிமைப் படுத்தப்பட்டிருந்தாள். குமர்ப்பிள்ளைகளோடு கண்டபடி பேசக்கூடாது என்ற அம்மாவின் அறிவுறுத்தல் ஒரு பக்கம் என்னைப் பின்வாங்க வைத்தது. நாங்கள் வெளியே ஓடியாடி விளையாடும் போதெல்லாம் அறை யன்னலுக்கால் அவள் ஏக்கத்தோடு எட்டிப்பார்ப்பதை அவதானித்திருக்கிறேன். சமுதாயக் கட்டுப்பாடுகள் எங்கள் இருவரையும் நெருங்கவே விடவில்லை. அவள் வளர்ந்து அழகாய், கவர்ச்சியாய் இருந்தது மட்டுமல்ல, அவளிடம் சில மாற்றங்களையும் அவதானித்தேன்.

நாட்டுச் சூழ்நிலை காரணமாக மூன்றாம் வருடம் எங்களால் விடுமுறைக்குப் போகமுடியவில்லை. அதற்கு அடுத்த வருடம் போவதென்று முற்கூட்டியே ஆயத்தங்கள் செய்தபோதுதான் அந்தச் செய்தி வந்தது. பிரியா வீட்டைவிட்டுப் போய்விட்டதாகவும், விடுதலைப் போராட்டத்தில் அவளுக்கு இருந்த ஈடுபாடு காரணமாக அவள் இயக்கத்தில் சேர்ந்து விட்டதாகவும் செய்திகள் வந்தன. எனக்கு ஒரே அதிர்ச்சியாக இருந்தது. பிரியாவா.. எப்படி..? தாய்மண்ணை நேசித்த வயது வந்த ஒரு பெண் என்பதால் அவளது விருப்பத்தை யாராலும் தடுக்க முடியவில்லை.

ஆண்களைவிடப் பெண்களிடம்தான் இனவுணர்வு அதிகமாக இருக்கலாம் என நான் நினைத்தேன். மகளின் பிரிவால் மட்டுமல்ல, யுத்தம் காரணமாக அவர்களின் குடும்பமும் சொல்லெனாத் துன்பங்களைத் தாங்கிக் கொண்டு சொந்த வீட்டைவிட்டு இடம் பெயரவேண்டி வந்தது. யுத்தம் முடிந்து விட்டதாக அறிவிக்கப்பட்டாலும், இறுதி யுத்தத்தின் போது பிரியாவிற்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை. கால்களை மடித்து முழங்கால்களைக் கைகளால் அணைத்தபடி ஸ்ரோர் ரூம் மூலையில் கிடந்த பலகைக் கட்டிலில் தலையைக் குனிந்தபடி உட்கார்ந்திருந்த, கள்ளங்கபடமற்ற அவளின் சிரிப்புத்தான் என் மனதில் பதிந்து நின்றது. தங்களிடம் சரணடைந்தவர்களையே இல்லை என்று சொல்லும்போது, ஏமாற்றப்பட்ட இனத்தைச் சேர்ந்த இவள் இருக்கிறாளா இல்லையா என்பது கூட உறவுகளுக்குத் தெரியாத ஒரு அவலம்.

‘அம்மா, அத்தைப்பாட்டி வீடு எல்லாம் இடிஞ்சு போய்க்கிடக்குது. அதைப் பார்த்ததும் அப்பாவிற்கு அழுகையே வந்திடிச்சு’ என்றாள் என் மகள் சுவேதா தாயைப்பார்த்து.

எனது மனைவி சங்கீதம் கற்றவள். பாரதி பாடல்கள் என்றாள் அவளுக்கு மிகவும் பிடித்தமானவை. என் கண்கள் கலங்கியிருந்ததை அவளும் அவதானித்திருக்க வேண்டும்.

‘பின்னே இருக்காதா, இந்த அநியாயத்தைப் பார்த்தால் யாருக்குத்தான் அழுகை வராது. ‘எந்தையுந் தாயு மகிழ்ந்து குலாவி யிருந்தது மிவ்வீடே.. அதன் முந்தைய ராயிர மாண்டுகள் வாழ்ந்து முடிந்தது மிந்நாடே..’ என்ற பாரதி பாடலின் வரிகளைச் சற்று மாற்றி மெல்லிய குரலில் பாடியபடியே கலங்கிய கண்களோடு என் கைகளைப்பற்றிச் சமாதானப் படுத்தினாள்.

நான் ஏன் அழுதேன் என்பது, என்னைத் தவிர வேறு யாருக்கும் தெரிந்திருக்க நியாயமில்லை. கண்ணீரைத் தவிர வேறெதைத் தரமுடியும்? 

கதையாசிரியர்: குரு அரவிந்தன்

https://uthayannews.ca/2022/11/23/தாயகக்-கனவுடன்/

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, nunavilan said:

‘எந்தையுந் தாயு மகிழ்ந்து குலாவி யிருந்தது மிவ்வீடே.. அதன் முந்தைய ராயிர மாண்டுகள் வாழ்ந்து முடிந்தது மிந்நாடே..’  தாயகக் கனவுடன்…

இணைப்புக்கு நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.