Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இரவு 7 மணிக்கு பின் மின்விநியோகத்தை துண்டிக்க வேண்டாம் - இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இரவு 7 மணிக்கு பின் மின்விநியோகத்தை துண்டிக்க வேண்டாம் - இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு 

By NANTHINI

22 JAN, 2023 | 04:03 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை இடம்பெறும் காலப்பகுதியில் இரவு 7 மணிக்கு  பின்னர் மின் விநியோகத்தை துண்டிக்க வேண்டாம் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு பரிந்துரை செய்துள்ளது.

பரீட்சை இடம்பெறும் காலப்பகுதியில் மின்விநியோக துண்டிப்பை அமுல்படுத்தாமல் இருப்பது சாத்தியமற்றது. 

குறித்த காலப்பகுதியில் மின்விநியோகத்தை துண்டிக்காமல் இருக்க வேண்டுமாயின், மேலதிகமாக 4 பில்லியன் ரூபாய் மின்னுற்பத்திக்காக செலவிட நேரிடும் என இலங்கை மின்சார சபை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளது.

உயர்தர பரீட்சை இடம்பெறும் காலப்பகுதியில் மின்விநியோக துண்டிப்பு தொடர்பில் இதுவரை எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை.

2022ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை நாளை (திங்கட்கிழமை) முதல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

பரீட்சை இடம்பெறும் காலப்பகுதியில் மின்விநியோக தடையை அமுல்படுத்தாமல் இருக்குமாறு இலங்கை பரீட்சைகள் திணைக்களம் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு பரிந்துரை செய்தது.

இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் பரிந்துரையை பரீசிலனை செய்து, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பரீட்சை இடம்பெறும் நாட்களில் மின்விநியோகத்தை துண்டிக்காமல் இருப்பது தொடர்பில் அவதானம் செலுத்துமாறும் அல்லது இரவு 7 மணிக்கு பிறகு நாடளாவிய ரீதியில் மின்விநியோக துண்டிப்பை அமுல்படுத்துவதை இடைநிறுத்துமாறு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு பரிந்துரை செய்துள்ளது.

உயர்தர பரீட்சை இடம்பெறும் காலப்பகுதியில் மின்சாரத்தை துண்டிக்காமல் இருக்க வேண்டுமாயின், மின்னுற்பத்திக்கு மேலதிகமாக 4 பில்லியன் ரூபாய் தேவைப்படும். இந்த நிதியை மேலதிகமாக திரட்டிக்கொள்ள எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.

பரீட்சை இடம்பெறும் காலப்பகுதியில் தடையின்றி மின்சாரத்தை விநியோகிக்க வேண்டுமாயின், அதற்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபானம் மேலதிகமாக எரிபொருளை விநியோகிக்க வேண்டும் என இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/146427

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உயர்தரப் பரீட்சை நிறைவடையும் வரை மின்சாரத்தை தடையின்றி வழங்குமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தல்

By T. SARANYA

23 JAN, 2023 | 04:54 PM
image

(எம்.மனோசித்ரா)

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் திங்கட்கிழமை (23) முதல் ஆரம்பமாகியுள்ள நிலையில், பரீட்சைகள் இடம்பெறும் காலப்பகுதியில் மாணவர்களின் நலன் கருதி தடையற்ற மின் விநியோகத்தை வழங்குமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு மின் அமைச்சு மற்றும் இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் வலியுறுத்தியுள்ளது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற நீதியரசர் றோகிணி மாரசிங்க , மின்சக்தி அமைச்சின் செயலாளர் மற்றும் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஆகியோருக்கு கடிதமொன்றை அனுப்பி இதனை வலியுறுத்தியுள்ளார். 

அந்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

'2022 ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சைகளுக்கு 331,709 பரீட்சாத்திகள் தோற்றவுள்ளனர். இந்த பரீட்சைகள் ஜனவரி 23 ஆரம்பமாகி பெப்ரவரி 17 வரை இடம்பெறவுள்ளது.

இந்நிலையில் நாளாந்தம் 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்கள் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டால் அது மாணவர்கள் பரீட்சைக்கு தயாராவதற்கு தடையை ஏற்படுத்தும்.

அதற்கமைய அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள மாணவர்களின் அடிப்படை மனித உரிமைகள் கேள்விக்குள்ளாக்கப்படுகின்றன.

எனவே உயர்தர பரீட்சைகள் இடம்பெறும் காலப்பகுதியில் மின் துண்டிப்பை தவிர்ப்பதற்கு தகுந்த நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.' என்று தெரிவித்துக் கொள்கின்றோம்.

https://www.virakesari.lk/article/146521

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மின்சாரத்தை துண்டிக்க வேண்டாம் என ஆணைக்குழு முன்வைத்த பரிந்துரையை மின்சார சபை செயற்படுத்தவில்லை - பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு

By DIGITAL DESK 5

24 JAN, 2023 | 08:55 AM
image

(இராஜதுரை ஹஷான்)

பரீட்சை இடம்பெறும் காலப்பகுதியில் மின்சாரத்தை துண்டிக்க வேண்டாம் என ஆணைக்குழு முன்வைத்த பரிந்துரையை மின்சார சபை செயற்படுத்தவில்லை.

மாணவர்களின் நலனை கருத்திற் கொண்டு நாட்டு மக்கள் மின்பாவனையை இயலுமான அளவு குறைத்துக் கொள்ள வேண்டும்,அத்துடன் வீதி விளக்குகள் மாலை 06 மணிமுதல் இரவு 10 மணியரை அணைக்கப்பட வேண்டும் என இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது.

ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

உயர்தர பரீட்சை இடம்பெறும் காலப்பகுதியில் தடையின்றி மின்விநியோகத்தை வழங்க ஆணைக்குழு அனுமதி வழங்கியது.

இதற்கமைய பரீட்சை முடிவடைந்ததை தொடர்ந்து ஒரு மணித்திலாயத்திற்கு பின்னர் மின்விநியோகத்தை துண்டிக்க ஆணைக்குழு பரிந்துரைத்தது.பரீட்சை முடிவடைந்ததன் பின்னர் மாலை மற்றும் இரவு வேளையில் இரு கட்டமாக மின்துண்டிப்பை அமுல்படுத்த அனுமதி வழங்கப்பட்டது.

பரீட்சை இடம்பெறும் காலப்பகுதியில் மின்விநியோகத்தை துண்டிக்க வேண்டாம் என இலங்கை பொதுப்பயன்பாட்டுக்கு முன்வைத்த பரிந்துரைகளை மின்சார சபை அமுல்படுத்தாத காரணத்தினால் நேற்றைய தினம் பரீட்சை இடம்பெறும் காலப்பகுதியில் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.

பரீட்சை எதிர்வரும் மாதம் 17 ஆம் திகதி முடிவடையும் வரை மின்பாவனைக்கான கேள்வியை முகாமைத்துவம் செய்ய ஆணைக்குழு உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

அந்த செயற்திட்டத்திற்கு அமைய மாலை 06 மணிமுதல் இரவு 10 மணிவரையான காலப்பகுதியில் மின்பாவனைக்கான கேள்வியை குறைத்து 350 மெகாவாட் மின்சாரத்தை சேமிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

350 மெகாவாட் மின்சாரத்தை கொண்டு எதிர்வரும் மாதம் 17 ஆம் திகதி வரை இரவு வேளைகளில் மின்சாரத்தை துண்டிக்காமல் இருக்க ஆணைக்குழு விசேட அவதானம் செலுத்தியுள்ளது.பரீட்சாத்திகளின் நலனை கருத்திற் கொண்டு தடையின்றி மின்சாரத்தை விநியோகிக்க பொது மக்களும்,அரச மற்றும் தனியார் தரப்பினர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

வீட்டு மின்பாவனையாளர்கள் மாலை 06 மணிமுதல் 09 மணிவரையான காலப்பகுதியில் மின்பாவனைக்கான கேள்வியை 50 சதவீதத்தால் குறைத்துக் கொள்ள வேண்டும்,தனியார் நிறுவனங்கள் மாலை 06 மணிமுதல் இரவு 10 மணிவரையான காலப்பகுதியில் தமது சேவை நிறுவனங்களின் மின்பாவனையை இயலுமான அளவு குறைத்துக் கொள்ள வேண்டும்,

உள்ளுராட்சிமன்றங்களின் நிர்வாகத்தின் கீழ் உள்ள வீதி விளக்குகள் மாலை 06 மணிமுதல் இரவு 10 மணிவரையான காலப்பகுதியில் அணைக்க வேண்டும்,பரீட்சாத்திகளின் நலனை கருத்திற் கொண்டு நாட்டு மக்கள் அனைவரும் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை மின்பாவனையை இயலுமான அளவு குறைத்துக் கொள்ள வேண்டும்.

https://www.virakesari.lk/article/146532

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பரீட்சை நிறைவடையும் வரை மின்சாரத்தை துண்டிக்காமலிருக்க முடியாது ; அதற்கு மேலதிகமாக 5 பில்லியனை திரட்ட வேண்டும் : அரசாங்கம்

24 JAN, 2023 | 08:59 PM
image

(எம்.மனோசித்ரா)

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் நிறைவடையும் வரை தடையின்றி மின்சாரத்தை வழங்க வேண்டுமெனில் மேலதிகமாக 5 பில்லியன் தேவையாகும். தற்போதுள்ள நிதி நெருக்கடியில் இவ்வாறானதொரு பாரிய தொகையை திரட்ட முடியாது என்பதால் , நாளாந்தம் பரீட்சைகள் நிறைவடைந்த பின்னர் மாலை மற்றும் இரவில் மின்சாரத்தை துண்டிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

உயர்தர பரீட்சைகள் திங்கட்கிழமை (23) முதல் ஆரம்பமாகின. பரீட்சைக்கு தோற்றியுள்ள மாணவர்களின் நலன் கருதி குறித்த காலப்பகுதியில் மின்சாரத்தை துண்டிக்காமலிருக்குமாறு கல்வி அமைச்சு, பரீட்சை திணைக்களம் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு உள்ளிட்ட பல்வேறு தரப்புக்களினால் மின்சாரசபையிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. எவ்வாறிருப்பினும் கடந்த இரு தினங்களும் வழமை போன்று மின்சாரம் துண்டிக்கப்பட்டமையால் பல தரப்பினராலும் இதற்கு அதிருப்தியும் வெளியிடப்பட்டது.

இந்நிலையிலேயே செவ்வாய்க்கிழமை (24) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இவ்வாறு குறிப்பிட்டார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் தற்போது நிலவும் நிதி நெருக்கடிக்கு மத்தியில் மின் கட்டணத்தை அதிகரிக்காமலிருக்க முடியாது. அதே போன்று தடையற்ற மின் விநியோகத்தை வழங்கவும் முடியாது. அனல் மின் உற்பத்திக்கான நிலக்கரி இறக்குமதி தொடர்பில் கடும் நெருக்கடி நிலவுகின்றது.

நிலக்கரியுடன் நாட்டை வந்தடையும் கப்பல்களுக்குரிய கொடுப்பனவை செலுத்தி அவற்றைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலைமையும் காணப்படுகிறது.

கப்பல்களுக்கான கொடுப்பனவு மாத்திரமின்றி , உரிய நேரத்தில் கொடுப்பனவை செலுத்தாத காரணத்தினால் தாமதக் கட்டணத்தையும் செலுத்த வேண்டியுள்ளது.

இவ்வாறான நிலைமையில் உயர்தர பரீட்சைகள் இடம்பெறும் 14 நாட்களும் தடையின்றி மின்சாரத்தை வழங்க வேண்டுமெனில் மேலதிகமாக 5 பில்லியன் தேவைப்படும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர அமைச்சரவைக்கு தெளிவபடுத்தினார். தற்போதுள்ள நிதி நெருக்கடியில் இந்த 5 பில்லியன் ரூபாவைப் பெற்றுக் கொள்வது இயலாத காரியமாகும்.

எவ்வாறிருப்பினும் உயர்தர பரீட்சைக்கு தோற்றியுள்ள மாணவர்களின் நலன் தொடர்பிலும் அக்கறை காண்பிக்க வேண்டியுள்ளது.

எனவே நாளாந்தம் பரீட்சைகள் நிறைவடைந்ததன் பின்னர் அதாவது மாலை 5 மணிக்கு பின்னரும் , இரவிலும் தலா ஒவ்வொரு மணித்தியாலங்கள் என இரண்டு மணித்தியாலங்கள் மின்சாரத்தை துண்டிப்பதற்கான செயற்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. எனவே இதற்காக ஆர்ப்பாட்டங்களிலோ அல்லது எதிர்ப்பு நடவடிக்கைகளிலோ ஈடுபட வேண்டிய தேவை கிடையாது என்றார்.

https://www.virakesari.lk/article/146605

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மின் விநியோகத்தை தடையின்றி வழங்குவது தொடர்பில் கலந்துரையாடல்

 

PUCSL-1.jpg

உயர் தரப் பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் தடையின்றி மின் விநியோகத்தை முன்னெடுப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்று வருகின்றது.

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

இதற்காக, இலங்கை மத்திய வங்கி, இலங்கை வங்கி, கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம் என்பனவற்றின் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

அனைத்து தரப்பினரும் இன்றைய கலந்துரையாடலில் பங்கேற்பதன் மூலம் தீர்க்கமான முடிவொன்றை எட்ட முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/235801

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பரீட்சை காலத்தில் மின்சாரத்தை துண்டிக்காமலிருக்க இணக்கம்

By T. SARANYA

26 JAN, 2023 | 12:31 PM
image

(எம்.மனோசித்ரா)

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் கடந்த 23 ஆம் திகதி முதல் ஆரம்பமாகி பெப்ரவரி 17 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன. இந்தக் காலப்பகுதியில் தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு சம்பந்தப்பட்ட தரப்பினர் இணக்கம் தெரிவித்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உயர்தர பரீட்சைகள் நிறைவடையும் வரை மின் துண்டிப்பை நடைமுறைப்படுத்தாதிருக்குமாறு வலியுறுத்தப்பட்ட விடயம் தொடர்பில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாமையின் காரணமாக அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக மின்சக்தி அமைச்சின் செயலாளர்மற்றும் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஆகியோரை நேற்று புதன்கிழமை முற்பகல் 10.30 க்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.

அதற்கமைய பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க மற்றும் மின் சக்தி அமைச்சின் மேலதிக செயலாளர் மற்றும் இலங்கை மின்சாரசபையின் உயர் அதிகாரியொருவர் ஆகியோர் ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தனர். இதன் போது பரீட்சை நிறைவடையும் வரை எவ்வாறு மின் விநியோகத்தை துண்டிக்காமலிருப்பது என்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

எனினும் இந்த பிரச்சினை தொடர்பில் தீர்க்கமான முடிவொன்றை எடுப்பதற்காக நேற்றுமுன்தினம் புதன்கிழமை மாலை மீண்டும் மின் சக்தி அமைச்சின் செயலாளருக்கும் , பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

இவர்களுக்கு மேலதிகமாக இலங்கை மின்சாரசபை தலைவர் , பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் , இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி என்பவற்றின் தலைவர்களுக்கும் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததது.

இதன் போது பரீட்சை காலத்தில் தடையின்றி மின்சாரத்தை வழங்குவதற்கு தேவையான எரிபொருளை வழங்குவதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு என்பன பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு யோசனையொன்றை முன்வைத்துள்ளன.

அதற்கான செலவுகளை உத்தேச மின் கட்டண அதிகரிப்பின் ஊடாக பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது. அதற்கமைய இதற்காக செலவை முதல் 60 நாட்களுக்குள் செலுத்துவதற்கு அனைத்து தரப்பினரும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

மின்சக்தி மற்றும் வலு சக்தி அமைச்சு இதனை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான ஒருங்கிணைப்புக்கள் மற்றும் வசதிகளை வழங்குவற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கமைய உயர்தர பரீட்சைகள் இடம்பெறும் காலத்தில் மின் துண்டிப்பை மேற்கொள்ளாதிருக்க இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

இதனை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு நிபந்தனையாக முன்வைத்துள்ளன. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இந்த நிபந்தனையை நடைமுறைப்படுத்துவதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இணக்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/146739

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை மின்சார சபைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறது பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு!

By T. SARANYA

27 JAN, 2023 | 11:57 AM
image

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்டை நடைபெறும் நிலையில்,  எவ்வித தடையுமின்றி  தொடர்ச்சியாக மின்சாரத்தை விநியோகிக்குமாறு  மனித உரிமைகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு  விடுத்துள்ள உத்தரவை நிறைவேற்றத் தவறும் பட்சத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என  மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு  நேற்று (ஜன 26) எழுத்துமூல அறிவித்தல் விடுத்துள்ளது. 

இது தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுத்து மூலம் நேற்று  அறிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/146817

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மின் துண்டிப்பு விவகாரம் : இணக்கப்பாட்டை நடைமுறைப்படுத்த தவறியமையால் உயர் நீதிமன்றத்தை நாடியது மனித உரிமைகள் ஆணைக்குழு

27 JAN, 2023 | 07:49 PM
image

 

(எம்.மனோசித்ரா)

மின் துண்டிப்பு  விவகாரத்தில் எட்டப்பட்ட இணக்கப்பாட்டுக்கு முரணாக செயற்பட்டமையின் காரணமாக, இணக்கப்பாட்டை தெரிவித்த நபர்களுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உயர்தர பரீட்சை நிறைவடையும் வரை மின் துண்டிப்பை நடைமுறைப்படுத்தாமலிருப்பதற்கு இலங்கை மின்சாரசபை, பெற்றோலிய கூட்டுத்தாபனம், பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் அரச வங்கிகள் என்பன இணக்கம் தெரிவித்துள்ளதாக கடந்த புதன்கிழமை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்தது.

எவ்வாறிருப்பினும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இந்த அறிவிப்பின் பின்னரும் வழமை போன்று மின் துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்பட்டது.

இந்நிலையிலேயே 1996 இல 21 மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டத்திற்கு அமைய , மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் எட்டப்பட்ட இணக்கப்பாட்டை செயற்படுத்த தவறியமை மற்றும் ஆணைக்குழுவிற்கு பதிலளித்தலை உதாசீனப்படுத்தியமை என்பன ஆணைக்குழுவை அவமதிக்கும் குற்றமாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதற்கமைய இது தொடர்பில் வழக்கு தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளில் மின் சக்தி அமைச்சின் செயலாளர் எம்.பி.டீ.யு.கே.மாபா பதிரண மற்றும் இலங்கை மின்சாரசபையின் தலைவர் எம்.எஸ்.இளங்ககோன் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

எனினும் உயர்தர பரீட்சைகள் நிறைவடையும் வரை தடையற்ற மின் விநியோகத்திற்கான எரிபொருளை வழங்குவதற்கு , தமது அதிகாரிகளின் நிலைப்பாட்டை கவனத்தில் கொள்ளாது இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கையெழுத்தினைப் பெற்றுள்ளதாக மின்சக்தி மற்றும் வலு சக்தி அமைச்சின் செயலாளர் குற்றஞ்சுமத்தியுள்ளார்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவர் இவ்வாறு குற்றஞ்சுமத்தியுள்ளார்.

ஆணைக்குழுக்கள் , நிறுவனங்களுக்கிடையிலான வேறுபட்ட நிலைப்பாடுகளுக்கு மத்தியில் வழமையான மின் துண்டிப்பின் காரணமாக பரீட்சைக்கு தோற்றியுள்ள மாணவர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.

 மின் துண்டிப்பினால் முதல் நாள் இரவு பரீட்சைக்கு தயாராவதில் தாம் கடும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் , விரைவில் இதற்கான தீர்வினை உரிய தரப்பினரிடமிருந்து எதிர்பார்ப்பதாகவும் மாணவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்நிலையிலேயே பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் செயலாளர் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் , 'பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் சபையின் அனுமதியின்றி எரிபொருளை வழங்க முடியாது என்றும் , மனித உரிமைகள் ஆணைக்குழு தன்னிச்சையாக இதற்கு இணப்பாட்டைப் பெற்றுக் கொண்டுள்ளதாகவும் கலந்துரையாடல்களில் பங்குபற்றிய தமது அதிகாரிகள் தம்மிடம் தெரிவித்ததாகவும்' தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/146865

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மின் துண்டிக்கப்பட்டால் முறைப்பாடளிக்குமாறு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு

By T. SARANYA

28 JAN, 2023 | 02:01 PM
image

(எம்.மனோசித்ரா)

உயர்தரப் பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் இலங்கையின் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவால் மின்வெட்டுக்கான ஒப்புதல் வழங்கவில்லை. அவ்வாறு ஒப்புதல் வழங்காத மின்வெட்டுக்கு பாவனையாளர்கள் முகம் கொடுத்தால், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு எழுத்துப்பூர்வமாக முறைப்பாடுகளை சமர்ப்பிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

0775687387 என்ற வட்ஸ்அப் இலக்கத்திற்கும் , consumers@pucsl.gov.lk  என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் ,  0112392641 என்ற தொலைநகல் இலக்கத்திற்கும் முறைப்பாடுகளை அனுப்பி வைக்க முடியும் என்று இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

உயர்தர பரீட்சை காலத்தில் மின்சாரத்தை துண்டிக்காமல் இருக்குமாறு கடந்த 25 ஆம் திகதி முதல் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்து வருகிறது. அதற்கான பல தரப்பு பேச்சுவார்த்தைகளையும் ஆணைக்குழு முன்னெடுத்துள்ளது. எவ்வாறிருப்பினும் அவை தொடர்பில் கவனத்தில் கொள்ளாமல் மின்சாரசபை தொடர்ந்தும் மின் துண்டிப்பை நடைமுறைப்படுத்தி வருகிறது.

மின் துண்டிப்பை நடைமுறைப்படுத்தாமலிருப்பதற்கு இணக்கம் தெரிவித்துள்ள போதிலும் , அதனை மீறி மின்சாரம் துண்டிக்கப்பட்டமையால் மனித உரிமைகள் ஆணைக்குழு உரிய தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது.  

மின் துண்டிப்பு  விவகாரத்தில் எட்டப்பட்ட இணக்கப்பாட்டுக்கு முரணாக செயற்பட்டமையின் காரணமாக , இணக்கப்பாட்டை தெரிவித்த நபர்களுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதற்கமைய இது தொடர்பில் வழக்கு தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளில் மின் சக்தி அமைச்சின் செயலாளர் எம்.பி.டீ.யு.கே.மாபா பதிரண மற்றும் இலங்கை மின்சாரசபையின் தலைவர் எம்.எஸ்.இளங்ககோன் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது. 

https://www.virakesari.lk/article/146929

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் கதைத்து முடிவதற்கிடையில் உயர்தரப் பரீட்சை நிறைவடைந்து விடும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை மின்சார சபை மூன்று மாதங்களில் 108 பில்லியன் ரூபாவை ஈட்டியுள்ளது -சம்பிக்க

 

மின்சாரக் கட்டணங்கள் திருத்தப்பட்ட மூன்று மாதங்களில் இலங்கை மின்சார சபை 108 பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஒகஸ்ட் மாதம் அதிக உற்பத்தி செலவை காரணம் காட்டி இலங்கை மின்சார சபை கட்டணங்களை கணிசமாக அதிகரித்தது.

கடந்த சில மாதங்களில் இலங்கை மின்சார சபை தனது வருவாயை கணிசமான அளவு அதிகரித்துள்ளமை புலனாகிறது எனவும் அவர் தெரிவித்தார்.

எனவே நிதிப் பிரச்சினைகள் மற்றும் சபைக்கு ஏற்பட்டுள்ள நஷ்டம் காரணமாக மின்சார சபைக்கு தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதிப்படுத்த முடியவில்லை என்ற கூற்றை ஏற்றுக்கொள்ள முடியாது.

ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/236175

பொதுப்பயன்பாடு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்னாயக்கவை பதவி நீக்க தீர்மானம்

பொதுப்பயன்பாடு ஆணைக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து ஜனக்க ரத்னநாயக்கவை நீக்குவதற்கு அரசாங்கத்தின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒப்புதல் வழங்கியுள்ளனர். மின்சக்தி, வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன், பொதுப்பயன்பாடு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்னாயக்கவுக்கு எதிராக குற்றப்பத்திரம் ஒன்றும் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

https://thinakkural.lk/article/236361

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தொடர் மின்சாரம் குறித்து அமைச்சர் காஞ்சன கருத்து

 

புதிய மின் கட்டண திருத்தத்திற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கினால், அன்றைய தினம் முதல் இலங்கை மின்சார சபை தொடர்ந்து மின்சாரத்தை வழங்கும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இன்று (29) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

“ஜனவரி 1 முதல் தொடர் மின்சாரம் வழங்குவதற்கான திட்டங்களை சமர்ப்பித்தோம். பொதுப் பயன்பாட்டு ஆணையம் தரவில்லை. அனுமதி கிடைத்தால், நாளை முதல் தொடர்ந்து மின்சாரம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தலாம்.” என்றார்.

https://thinakkural.lk/article/236372

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மின்சார சபைக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல்

By DIGITAL DESK 5

02 FEB, 2023 | 02:53 PM
image

(எம்.மனோசித்ரா)

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு , இலங்கை மின்சார சபைக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளது.

தற்போது நடைபெற்று வரும் 2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகளைக் கருத்திற் கொண்டு மின் துண்டிப்புக்களை தடுக்கும் வகையில் இந்த ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

331,000 க்கும் மேற்பட்ட மாணவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக பெப்ரவரி 17 ஆம் திகதி வரை திட்டமிடப்பட்ட மின்வெட்டை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதிக்கவில்லை.

இந்த காலகட்டத்தில் இதுபோன்ற மின்வெட்டுகள் அங்கீகரிக்கப்படாத மற்றும் சட்டவிரோதமானதாக கருதப்படும் என்றும் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வாரம் பல சந்தர்ப்பங்களில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, பெப்ரவரி 17 ஆம் திகதி வரை மின்வெட்டை அமுல்படுத்தாமலிருப்பதற்கு இலங்கை மின்சாரசபை, மின்சக்தி அமைச்சு உள்ளிட்ட தரப்பினர் இணக்கப்பாட்டை தெரிவித்திருந்தனர்.

எவ்வாறாயினும், மின்வெட்டை அமுல்படுத்த மாட்டோம் என்று ஒப்புக்கொண்ட போதிலும் அடுத்த இரண்டு நாட்களில் பல பகுதிகளில் மின் துண்டிக்கப்பட்டது.

இந்நிலையிலேயே நடைபெற்றுக் கொண்டிருக்கும் உயர்தரப் பரீட்சைகளின் போது மின்வெட்டைத் தடுக்கத் தவறியதற்காக பிரதிவாதிகளுக்கு எதிராக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ரிட் மனுவை தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

https://www.virakesari.lk/article/147254

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மனுவை மறுபரிசீலனைக்குட்படுத்தப்படும் வரை மின் துண்டிப்பு இல்லை - மின்சாரசபை உயர் நீதிமன்றத்திற்கு அறிவிப்பு

By DIGITAL DESK 5

02 FEB, 2023 | 09:21 PM
image

(எம்.மனோசித்ரா)

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவை அவமதித்ததாகக் குறிப்பிட்டு, இலங்கை மின்சார சபை, மின்சக்தி அமைச்சின் செயலாளர் உள்ளிட்டோருக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை வெள்ளிக்கிழமை (03) மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்படும் வரை மின் துண்டிப்பை நடைமுறைப்படுத்தாமலிருப்பதாக இலங்கை மின்சாரசபை உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

நடைபெற்றுக் கொண்டிருக்கும் கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் நிறைவடையும் வரை மின் துண்டிப்பை நடைமுறைப்படுத்தாமலிருக்குமாறு தம்மால் வழங்கப்பட்ட அறிவிப்பை மீறி , இலங்கை மின்சாரசபை அதிகாரிகள் செயற்பட்டமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கடந்த வாரம் உயர் நீதிமன்றத்தில் இந்த மனுவை தாக்கல் செய்தது.

குறித்த மனு வியாழக்கிழமை (02) பி.பத்மன் சூரசேன, யசந்த கோதாகொட மற்றும் ஷிரான் குனரத்ன ஆகிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன் போது , மின்சாரசபையின் சார்பில் முன்னிலையாகியிருந்த ஜனாதிபதி சட்டத்தரணி உதித்த இகலகேவா இந்த உத்தரவாதத்தை நீதிமன்றத்திற்கு வழங்கியதோடு , திட்டமிடல்களுக்கு அப்பால் குறித்த காலப்பகுதியில் இதுவரையில் மின்சாரசபை மின் துண்டிப்பை நடைமுறைப்படுத்தவில்லை என்பதையும் மன்றுக்கு தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/147297

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மின் உற்பத்திக்கு மேலதிக நீரை வழங்க முடியாது - மகாவலி அதிகாரசபை

By VISHNU

03 FEB, 2023 | 04:41 PM
image

(எம்.மனோசித்ரா)

மின் உற்பத்திக்காக வழமையாக வழங்கப்படும் நீரை மாத்திரம் வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக மகாவலி அதிகாரசபை , மின்சக்தி அமைச்சிற்கு அறிவித்துள்ளது.

எதிர்பார்த்தளவிற்கு மழை வீழ்ச்சி கிடைக்கப் பெறாமையின் காரணமாக கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் இடம்பெறும் காலப்பகுதியில் தொடர்ச்சியான மின் உற்பத்திக்கு தேவையான மேலதிக நீரை வழங்க முடியாது என்றும் மகாவலி அதிகாரசபை அறிவித்துள்ளது.

மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மகாவலி அதிகாரசபை இதனைக் குறிப்பிட்டுள்ளது. அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

உயர்தர பரீட்சைகள் நிறைவடையும் வரை தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்குவதற்காக , மேலதிகமாக நீரை வழங்குவது தொடர்பில் நீர் முகாமைத்துவ குழுவில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.

எவ்வாறிருப்பினும் எதிர்பார்த்தளவிற்கு மழை வீழ்ச்சி கிடைக்கப் பெறாமை மற்றும் விவசாயம் , குடிநீர் தேவைகளைக் கருத்திற் கொண்டு வழமையைப் போன்று நீர் மின் உற்பத்திக்கான நீரை வழங்க இதன் போது தீர்மானிக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/147371

இன்று 03/02/2023 இரவு 6.10 - 7.10 வரை மின்தடை அமுலாகியது. வடமாகாண மின்சாரசபை 0212024444 முறைப்பாட்டு இலக்கத்திற்கு அழைத்த பின்னர் தான் மின்வெட்டுப் பற்றி தெரியவந்தது. அட்டவணை மாலை 5.45 இற்கு தான் தங்களுக்கு வந்ததாக கூறினார்கள்.
நீதிமன்றத்தில் 2 நாட்களுக்கு மின்வெட்டு இல்லை என்று உறுதி கூறியது பொய்யானது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.