Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அதானி சாம்ராஜ்யத்தின் வேரை அசைத்த ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் கதை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அதானி சாம்ராஜ்யத்தின் வேரை அசைத்த ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் கதை

அதானி ஹிண்டன்பர்க்

பட மூலாதாரம்,GETTY IMAGES

4 பிப்ரவரி 2023, 15:06 GMT
புதுப்பிக்கப்பட்டது 59 நிமிடங்களுக்கு முன்னர்

24 ஜனவரி 2023. இந்தியாவின் முன்னணித் தொழிலதிபர் கௌதம் அதானியின் வாழ்க்கையையே புரட்டிப்போட்ட நாள் இது. அன்றுதான் அமெரிக்காவின் நிதி ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் அறிக்கை வெளிவந்தது.

இந்த அறிக்கையில், அதானி குழுமம் மீது கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இந்த அறிக்கையில் அதானி குழுமத்தின் முன் 88 கேள்விகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த அறிக்கையை அதானி குழுமம் நிராகரித்துள்ளது.

 

இந்த அறிக்கை வெளிவந்ததில் இருந்து பங்குச்சந்தையில் அதானி குழுமப் பங்குகள் விலை சரியத் தொடங்கியது. சில நாட்களுக்கு முன்பு வரை உலகின் மூன்றாவது பெரிய பணக்காரராக இருந்தவர் கெளதம் அதானி.

 

 

ஆனால், ஹிண்டன்பர்க் அறிக்கை வந்த 10 நாட்களுக்குள், முதல் 20 பணக்காரர்கள் பட்டியலில் கூட இவர் பெயர் இல்லை. இது தவிர ரூ.20,000 கோடி மதிப்பிலான எஃப்பிஓ பங்கு வெளியீட்டையும் கெளதம் அதானி ரத்து செய்தார். நிறுவனம் பெரும் நஷ்டத்தில் உள்ளது.

 

இத்தகைய சூழ்நிலையில், இந்த அறிக்கையை வெளியிட்ட ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனத்தின் கதை என்ன? ஹிண்டன்பர்க் ஆராய்ச்சியின் பின்னணியில் உள்ளவர் யார்? இந்தக் கேள்விகளுக்கான விடைகளைத் தேடலாம்.

ஹிண்டன்பர்க் - பெயர் காரணம்

அதானி ஹிண்டன்பர்க்

பட மூலாதாரம்,BRITISHPATHE

 
படக்குறிப்பு,

ஹிண்டன்பர்க் விபத்தின் படம்

1937 ஆம் ஆண்டு - ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சி செய்து கொண்டிருந்தார். அந்தக் காலத்தில் ஹிண்டன்பர்க் என்ற ஒரு விண்கலம் இருந்தது.

 

விண்கலத்தின் பின்புறம் நாஜி சகாப்தத்தை குறிக்கும் ஒரு ஸ்வஸ்திகா சின்னம் பொறிக்கப்பட்டது. அமெரிக்காவின் நியூஜெர்சியில், பூமியிலிருந்து இந்த விண்கலத்தை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அப்போதுதான் அசாதாரணமான காட்சி ஒன்றைக் கண்டனர்.

 

ஒரு பெரும் வெடி சத்தத்துடன் வானத்தில் ஹிண்டன்பர்க் விண்கலம் தீப்பிடித்தது. மக்களின் அலறல் சத்தம் கேட்டது. விண்கலம் தரையில் விழுந்தது. 30 வினாடிகளுக்குள் பெரும் அழிவு.

 

உள்ளூர் மக்கள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். சிலர் காப்பாற்றப்பட்டனர். சிலர் உயிரிழந்தனர்.

 

எரியும் விண்கலத்தின் புகை வானத்தை சூழ்ந்து, பகலில் இரவை உருவாக்கியது. இப்போது எஞ்சியிருப்பது விண்கலத்தின் எச்சங்கள் மட்டுமே.

 

இந்த விண்கலத்தில் 16 ஹைட்ரஜன் வாயு பலூன்கள் இருந்தன. விண்கலத்தில் ஏறக்குறைய 100 பேர் கட்டாயமாக உட்கார வைக்கப்பட்டனர். இந்த விபத்தில் 35 பேர் உயிரிழந்தனர்.

இதற்கு முன்பும் ஹைட்ரஜன் பலூன்களால் விபத்துகள் நடந்துள்ளன என்றும், அவற்றிலிருந்து பாடம் கற்றிருந்தால், இந்த விபத்தைத் தவிர்த்திருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.

பங்குச் சந்தை பாடம் கற்றதா?

அதானி ஹிண்டன்பர்க்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கௌதம் அதானி குறித்த அறிக்கையை வெளியிட்ட ஹிண்டன்பர்க் என்ற ஆராய்ச்சி நிறுவனத்தின் பெயரும் இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையது தான்.

 

“ஹிண்டன்பர்க் சம்பவத்தின் அடிப்படையில், பங்குச் சந்தையில் ஏற்படும் முறிவுகள் மற்றும் இடையூறுகளை நாங்கள் கண்காணிக்கிறோம். அவற்றை அம்பலப்படுத்தி உண்மையை வெளிக்கொணர்வதே எங்களின் நோக்கம்.

ஹிண்டன்பர்க் விபத்தில் மக்கள் பாதிக்கப்பட்டதால், இது போன்ற நிதி விபத்துகள் அல்லது பங்குச் சந்தையில் ஏற்படும் ஆபத்துகள் ஆகியவற்றில் இருந்து மக்களைக் காக்கச் செயல்படுகிறோம்” என்று ஹிண்டன்பர்க் நிறுவனம் கூறுகிறது.

 

அதானி மீதான அறிக்கை போன்ற ஓர் அறிக்கை ஹிண்டன்பர்க் நிறுவனத்தால் எப்படித் தயார் செய்யப்படுகிறது? இது குறித்த தகவல்கள் நிறுவனத்தின் இணையதளத்தில் உள்ளன. தனது முறைகளை இந்நிறுவனம் பின்வருமாறு விளக்குகிறது:

  • பகுப்பாய்வின் அடிப்படையில் முதலீட்டு முடிவுகள் வழங்கப்படுகின்றன
  • புலனாய்வு செய்யப்படுகிறது
  • பெறப்பட்ட ரகசியத் தகவல்கள் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது

 

ஹிண்டர்ன்பர்க் தனது நிறுவனம் குறித்துக் கூறுவது என்ன?

அதானி ஹிண்டன்பர்க்

பட மூலாதாரம்,NURPHOTO

தனக்குப் பல தசாப்தங்களாக முதலீட்டு அனுபவம் இருப்பதாக ஹிண்டன்பர்க் கூறுகிறது.

 

ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம், அதன் அறிக்கைகள் மற்றும் பிற வகை நடவடிக்கைகளின் மூலம் முன்னரும் பல நிறுவனங்களின் பங்கு விலைகளை விழச் செய்ததாகத் தனது இணையதளத்தில் கூறுகிறது.

 

அதானிக்கு முன், ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியிட்ட பெரிய நிறுவனம் டிரக் நிறுவனமான நிகோலா. இந்த விவகாரம் நீதிமன்றத்தை அடைந்தபோது, நிகோலா நிறுவனத்தின் நிறுவனர் குற்றவாளி என தீர்ப்பானது.

 

ஹிண்டன்பர்க், 2020 ஆம் ஆண்டு முதல் 30 நிறுவனங்களின் ஆய்வு அறிக்கைகளை அம்பலப்படுத்தியுள்ளது என்றும் அறிக்கை வெளியான அடுத்த நாளிலேயே அந்த நிறுவனங்களின் பங்குகள் சராசரியாக 15% சரிந்தன என்றும் ப்ளூம்பெர்க் அறிக்கை கூறுகிறது.

அடுத்த ஆறு மாதங்களில் இந்த நிறுவனங்களின் பங்குகள் சராசரியாக 26 சதவீதத்துக்கும் மேல் சரிவைப் பதிவு செய்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஹிண்டன்பர்க் தனது இணையதளத்தில் செப்டம்பர் 2020 முதலான தனது அறிக்கைகளின் பட்டியலையும் வழங்கியுள்ளது.

ஹிண்டன்பர்க் எந்தெந்த சந்தர்ப்பங்களில் ஒரு நிறுவனத்தைப் பற்றி விசாரிக்கிறது:

  • கணக்கியலில் முறைகேடுகள்
  • முக்கியமான பதவிகளில் 'தகுதியற்ற' நபர்கள்
  • வெளிப்படுத்தப்படாத பரிவர்த்தனைகள்
  • சட்டவிரோத/ நெறிமுறையற்ற வணிகம் அல்லது நிதி அறிக்கையிடல் நடைமுறைகள்

 

ஹிண்டன்பர்கின் பின்னணியில் யார்?

அதானி ஹிண்டன்பர்க்

பட மூலாதாரம்,THE WASHINGTON POST/GETTY

 
படக்குறிப்பு,

நெட் ஆண்டர்சன்

ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் நேதன் எனப்படும் நெட் ஆண்டர்சன் ஆவார்.

ஆண்டர்சன் இந்த நிறுவனத்தை 2017 இல் நிறுவினார். அவர், அமெரிக்காவின் கனெக்டிகட் பல்கலைக்கழகத்தில் படித்தவர்.

ஆண்டர்சன் சர்வதேச வணிகம் பயின்று, ஃபேக்ட்-செட் ரிசர்ச் சிஸ்டம்ஸ் என்ற தரவு நிறுவனத்தில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். இந்த நிறுவனத்தில், ஆண்டர்சன் முதலீட்டு மேலாண்மை நிறுவனங்களுடன் பணிபுரிந்தார்.

2020 ஆம் ஆண்டில் வால் ஸ்ட்ரீட் ஜர்னலுக்கு அளித்த பேட்டியில், ஆண்டர்சன், "இவர்கள் மேலோட்டமான பகுப்பாய்வு செய்கிறார்கள் என்பதை நான் உணர்ந்தேன்." என்றார்.

ஆண்டர்சன் இஸ்ரேலில் சிறிது காலம் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக இருந்ததாக, செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் தெரிவிக்கிறது.

ஆண்டர்சனின் லிங்க்ட்இன் சுயவிவரத்தில், "ஆம்புலன்ஸ் டிரைவராகப் பணிபுரியும் போது, மிகுந்த அழுத்தத்தில் எப்படி வேலை செய்வது என்று கற்றுக்கொண்டேன்." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

அதே சுயவிவரத்தில் அவருக்கு 400 மணிநேர மருத்துவ அனுபவம் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

பல நேர்காணல்களில், ஆண்டர்சன் அமெரிக்க கணக்காளர் ஹாரி மோர்கோபௌலோஸை தனது முன்மாதிரியாகக் குறிப்பிடுகிறார்.

ஆண்டர்சனின் முன்மாதிரியான ஹாரி 2008 பெர்னார்ட் மடோஃப் போன்சி திட்டத்தின் ஊழலைப் பற்றி மக்களிடம் வெளிச்சம் போட்டுக் காட்டினார்.

சமீபத்தில், நெட்ஃபிளிக்ஸில் த மான்ஸ்டர் ஆஃப் வால் ஸ்ட்ரீட் என்ற தொடர் வெளியானது. இது இவரைப் பற்றிய கதை தான்.

ஆனால் தற்சமயம் இவரது சீடர் நெட் ஆண்டர்சனால், பங்குச் சந்தையில் சலசலப்பு ஏற்பட்டு, அது நேரடியாக கௌதம் அதானியை பாதிக்கிறது.

(எழுத்து - விகாஸ் த்ரிவேதி)

https://www.bbc.com/tamil/articles/cn05lg0wxz2o

  • கருத்துக்கள உறவுகள்

சரியும் அதானி சாம்ராஜ்ஜியம்... மோடியையும் பாதிக்குமா?

சரியும் அதானி சாம்ராஜ்ஜியம்...
பிரீமியம் ஸ்டோரி
News

சரியும் அதானி சாம்ராஜ்ஜியம்...

  • Share
  •  
  •  
  •  
  •  

பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் 75% வரை மட்டுமே அதன் உரிமையாளர்கள் பங்குகளை வைத்திருக்க முடியும்.

`நீங்கள் முதலீடு செய்யும் பணம், மூன்றே ஆண்டுகளில் 8 முதல் 13 மடங்காகத் திரும்பக் கிடைக்கும்...' இப்படி யாராவது சொன்னால், அவரை மோசடிப் பேர்வழி என்று போலீஸில் பிடித்துக் கொடுப்போம். ஆனால், ‘அதானி கடந்த மூன்று ஆண்டுகளாக இந்தியப் பங்குச்சந்தையில் இதைத்தான் செய்துகொண்டிருந்தார்' என்கிறது அந்த அறிக்கை.

அதானி குழுமத்தைப் பற்றி அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச் வெளியிட்டிருக்கும் ஓர் அறிக்கை, தேசம் முழுக்கக் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. அதானி குழுமத்தைச் சேர்ந்த பத்து நிறுவனங்களுடைய பங்குகளின் மதிப்பு பெருமளவு சரிந்திருக்கிறது. மூன்றே நாள்களில் 5.5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பைச் சந்தித்திருக்கிறார், அதானி குழும நிறுவனர் கௌதம் அதானி. உலகின் மூன்றாவது பணக்காரராக இருந்த அதானி, இதனால் ஏழாம் இடத்துக்கு இறங்கியுள்ளார்.

`அதானி குழுமம் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு தமது பங்கு விலைகளை மிக அதிக அளவுக்கு ஏற்றியுள்ளது. மொரீஷியஸ் உள்ளிட்ட பல நாடுகளில் போலியாக கம்பெனிகளை உருவாக்கி, அதன் பங்குகளை விலை ஏற்றியது. அந்த நிறுவனத்தின் உண்மையான மதிப்பிலிருந்து தற்போதைய பங்குகளின் விலை 85% அதிகமாக இருக்கிறது' என்கிறது இந்த 106 பக்க ஆய்வறிக்கை. அதானி நிறுவனம் வாங்கியுள்ள அதிகபட்ச கடன் பற்றியும், அது குறித்து கிரெடிட் சைட் நிறுவனம் முன்பு வெளியிட்ட ஆய்வறிக்கையை மேற்கோள் காட்டியும் பல்வேறு கேள்விகளை ஹிண்டன்பர்க் நிறுவனம் எழுப்பியுள்ளது. அதானி குழுமத்துக்கு 88 கேள்விகளையும் எழுப்பியிருக்கிறது அந்த அறிக்கை.

சரியும் அதானி சாம்ராஜ்ஜியம்... மோடியையும் பாதிக்குமா?
 
 

கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் உழைப்பில், பல்வேறு நாடுகளில் தகவல்களைத் திரட்டி இந்த அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது. அதானி குழுமத்தைப் பற்றி அதானியிடமே இவ்வளவு தகவல்கள் இருக்குமா என மலைக்க வைக்கிறது இந்த அறிக்கை. சிங்கப்பூர், மொரீஷியஸ், சுவிட்சர்லாந்து, இந்தியா எனப் பல நாடுகளில் நேரடியாக அலைந்து தகவல்களைத் திரட்டியிருக்கிறார்கள்.

ரூ.17,80,000 கோடி மதிப்புள்ள அதானி நிறுவனத்தின் நிகர சொத்து மதிப்பில், முக்கால்வாசிக்கும் மேலாக கடந்த மூன்று ஆண்டுகளில் ஏறியது. தங்கள் பங்குகளின் மதிப்பைச் செயற்கையாக ஏற்றிக் காட்டி, விலை உயர்ந்த அந்தப் பங்குகளை அடமானம் வைத்து புதுக்கடன் வாங்கி, இப்படியாக சொத்து மதிப்பை உயர்த்தினார் அதானி. குழுமத்தின் நிகர மதிப்பு உயர்ந்ததே தவிர, வருமானம் உயரவில்லை எனக் குற்றம் சாட்டுகிறது ஹிண்டன்பர்க் அறிக்கை.

அதானி என்டர்பிரைசஸ் நிறுவனம், தொடர் பங்கு வெளியீடு மூலம் ரூ.20,000 கோடி திரட்டுகிறது. சரியாக அந்த நேரத்தில் இந்த அறிக்கை வெளியாகவே, அந்தப் பங்கு வெளியீட்டுக்குப் போதுமான வரவேற்பு கிடைக்கவில்லை.

ஹிண்டன்பர்க் என்பது பங்குச்சந்தையில் ஷார்ட் செல்லிங் செய்யும் நிறுவனம். தங்களிடம் இல்லாத பங்குகளைக் கடன் வாங்கி விற்று, அவை விலை குறைந்ததும் வாங்கி அதிக லாபம் சம்பாதிப்பதே ஷார்ட் செல்லிங் எனப்படுகிறது. ஹிண்டன்பர்க் இதற்குமுன்பு இப்படிப் பல நிறுவனங்களைக் குறிவைத்து அறிக்கை வெளியிட்டு, அவற்றின் பங்குமதிப்பைச் சரியச் செய்திருக்கிறது. அதானி பங்குகளை வீழ்ச்சியடையச் செய்ததில், குறைந்த விலைக்குப் பங்குகளை வாங்கி லாபம் சம்பாதிக்கும் ஆசையும் அவர்களுக்கு இருந்திருக்கலாம். ஆனாலும், அவர்களின் ஆராய்ச்சியில் வெளியான தகவல்கள் அதிர வைக்கின்றன.

* 17 பில்லியன் அமெரிக்க டாலர் பணமோசடி தொடர்பாக ஏற்கெனவே நான்கு முறை அரசு விசாரணைகளைச் சந்தித்திருக்கிறது அதானி குழுமம். மொரீஷியஸ், கரீபியன் தீவுகள் போன்ற வரிச்சலுகை உள்ள நாடுகளில் நிழலான நிறுவனங்களை ஆரம்பித்து, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி ஆவணங்களைப் போலியாக உருவாக்கி, பணத்தை இந்தியாவுக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

சரியும் அதானி சாம்ராஜ்ஜியம்... மோடியையும் பாதிக்குமா?
 

* அதானியின் அண்ணன் வினோத் அதானி இதைச் செய்பவர்களில் முக்கியமானவர். வினோத்தும் அவருக்கு நெருக்கமானவர்களும் மொரீஷியஸில் 38 நிழல் நிறுவனங்களை நடத்துகிறார்கள். இதுதவிர சைப்ரஸ், அரபு எமிரேட்ஸ், சிங்கப்பூர் மற்றும் கரீபியன் தீவுகளில் இவருக்கு நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான நிறுவனங்களுக்கு முறையாக இணையதளம் இருக்காது, பணியாளர்கள் இருக்கமாட்டார்கள், அந்த நிறுவனம் என்ன தொழில் செய்கிறது என இருக்காது, ஒரே முகவரியில் பல நிறுவனங்கள் இயங்கும். ஆனால், இந்த நிறுவனங்கள் பல்லாயிரம் கோடி மதிப்புக்கு அதானி நிறுவனப் பங்குகளை வாங்கும்.

* பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் 75% வரை மட்டுமே அதன் உரிமையாளர்கள் பங்குகளை வைத்திருக்க முடியும். ஆனால், அதானி குழுமத்தில் நிழலான நிறுவனங்கள் மூலம் அதானி குடும்பத்தினரே அதிக பங்குகளை வெளிநாடுகளிலிருந்து வாங்குகிறார்கள். அதனால் பங்குகளின் விலையைச் செயற்கையாக ஏற்றி அவர்கள் மோசடி செய்ய முடிகிறது.

* மொரீஷியஸ் நாட்டிலிருந்து Ellara Capital Plc, Opal Investment Private Limited, சைப்ரஸ் நாட்டிலிருந்து New Leaina Investments, ஸ்விட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த Monterosa Investment Holdings போன்ற நிறுவனங்கள் அதானி பங்குகளைப் பல்லாயிரம் கோடிக்கு வாங்கியுள்ளன. இவற்றை நடத்தும் நபர்கள், அதானி குடும்பத்தினரின் நண்பர்கள், பங்குதாரர்கள். இதுபோன்ற நிழல் நிறுவனங்களின் நிதி ஆதாரம் எங்கிருந்து வந்தது என்ற கேள்வி எழுகிறது. இதில் தவறு நடந்தது கண்டறியப்பட்டால், அதானி நிறுவனங்களைப் பங்குச்சந்தையிலிருந்தே வெளியேற்ற முடியும்.

* அதானி என்டர்பிரைசஸ், அதானி டோட்டல் கேஸ், அதானி கிரீன் எனர்ஜி, அதானி டிரான்ஸ்மிஷன், அதானி பவர், அதானி வில்மார், அதானி போர்ட்ஸ், ஏ.சி.சி சிமென்ட், அம்புஜா சிமென்ட், என்.டி.டி.வி ஆகியவை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட 10 அதானி நிறுவனங்கள். இவை தவிரவும் ஏராளமான பிரைவேட் நிறுவனங்கள் அதானி வசம் உள்ளன. பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் நஷ்டம் குறைவாகவும், வருமானம் அதிகமாகவும் இருந்தால்தான், பங்குகளின் விலை உயரும். அதைக் காட்டி புதிதாகக் கடன் வாங்க முடியும். அதனால், இந்த நிறுவனங்களுக்கு ஏற்படும் நஷ்டத்தைத் தனது வேறு நிறுவனங்களின் கணக்கில் எழுதுகிறார் அதானி. இதற்கு நிழலான நிறுவனங்களிடம் கடன் பெறுகிறார். இப்படி நடைபெற்ற பல பரிவர்த்தனைகளை ஹிண்டன்பர்க் ரிசர்ச் பட்டியலிடுகிறது.

* உதாரணமாக, மொரீஷியஸில் ஒரு சிறிய அறையில் இயங்கும் வினோத் அதானியின் நிறுவனம், கௌதம் அதானியின் தனிப்பட்ட நிறுவனம் ஒன்றுக்கு ரூ.1,171 கோடி கடன் கொடுக்கிறது. உடனே அந்த நிறுவனம் அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்துக்கு 984 கோடி ரூபாய் கடன் கொடுக்கிறது. இதேபோல 7,400 கோடி ரூபாய், ஒரு பில்லியன் டாலர், 85 மில்லியன் டாலர் என வரிசையாகக் கடன்களை வாங்கி, பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களுக்கு மடை மாற்றி விடப்படுகிறது. இந்த எதையும், `உறவினர்களுடனான பரிவர்த்தனை' என்று குறிப்பிடவே இல்லை.

* வேடிக்கையான ஒரு விஷயம்: அகமதாபாத் நகரில் இருக்கும் Rehvar Infrastructure என்ற நிறுவனம் அதானி நிறுவனத்துக்கு 1,500 கோடி ரூபாய் கடன் கொடுக்கிறது. அந்த நிறுவனம், ஒரு பாழடைந்த ஷாப்பிங் காம்ப்ளக்ஸில் இருக்கிறது. வெள்ளிக்கட்டிகள் விற்பனை செய்யும் நிறுவனம் என்று அதைக் குறிப்பிட்டிருக்கிறார்கள். அந்த நிறுவனத்தை நடத்தி வருபவரின் மொபைல்போனுக்கு ஹிண்டன்பர்க் ரிசர்ச் அலுவலர்கள் தொடர்புகொண்டபோது, அவர் அதானி நிறுவனத்தில் மேனேஜராக இருக்கிறார் என்று தெரியவந்தது. Rehvar Infrastructure நிறுவனத்தின் இரண்டு இயக்குநர்களும் அதானி நிறுவனங்களில் இயக்குநர்களாக இருப்பவர்கள். அந்த நிறுவனம் வெள்ளி வியாபாரம் செய்யவே இல்லை.

* இதேபோல Milestone Tradelinks என்ற இன்னொரு வெள்ளி வியாபார நிறுவனத்திடமிருந்து 750 கோடி ரூபாய் கடன் பெற்றார் அதானி. அந்த நிறுவனமும் அகமதாபாத் நகரில் Rehvar Infrastructure செயல்படும் அதே ஷாப்பிங் காம்ப்ளக்ஸில் இருக்கிறது. இதன் உரிமையாளரைத் தொடர்பு கொண்டால், அவர் அதானியின் சில நிறுவனங்களுக்கான ஆடிட்டர்.

* சரி, பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களுக்குள் கடன் தொகையைக் கொண்டுவந்தபிறகு அதை எப்படித் திருப்பிக் கொடுக்கிறார்கள்? அதானி நிறுவனத்தின் பங்குகளாக அவற்றைக் கொடுத்து ஈடு செய்கிறார்கள். கான்ட்ராக்ட்களைக் கொடுக்கிறார்கள்.

பங்குச்சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபி என்ன செய்கிறது, வெளிநாட்டு நிழல் நிறுவனங்களின் பணப்பரிவர்த்தனையைக் கண்காணிக்க வேண்டிய அமலாக்கத் துறை என்ன செய்கிறது என்றெல்லாம் வரிசையாகக் கேள்விகள் எழுகின்றன. நாடாளுமன்றத்தில் இந்த அத்தனை கேள்விகளும் பிரதமர் மோடியை நோக்கி எழுப்பப்படும். இந்தியாவின் வளர்ச்சிக்குப் பெருநிறுவனங்கள் தேவைதான். ஆனால் அவை செய்யும் மோசடிகள் எளிய முதலீட்டாளர்களை பாதிக்கும் என்றால், அதைத் தடுக்க வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உண்டு. அதிகாரத்தில் இருப்பவரின் நண்பராக இருந்தால் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற துணிச்சல் வரக்கூடாது.

இந்தியப் பங்குச்சந்தை இப்படிப்பட்ட மோசடிகளை ஏற்கெனவே சந்தித்திருக்கிறது. இதிலிருந்து பங்குச்சந்தை மீண்டு எழுந்துவிடும். ஆனால், அதானி நிறுவனம் என்ன ஆகும்? மில்லியன் டாலர் கேள்வி இது.

வங்கிகள் கொடுத்த கடன் எவ்வளவு?

அதானியின் பங்குகள் சரிந்தபோது கூடவே பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ) பங்குகளும் சரிந்தன. எஸ்.பி.ஐ-யின் நிதி நிறுவனங்கள் அதானி பங்குகளில் முதலீடு செய்ததும் ஒரு காரணம். எஸ்.பி.ஐ மட்டுமன்றி, பல்வேறு வங்கிகளும் அதானி நிறுவனங்களுக்குக் கடன் கொடுத்திருக்கின்றன. அதானியின் டாப் 5 நிறுவனங்கள் மட்டுமே இந்திய வங்கிகளில் பெற்றுள்ள கடன், ரூ.81,234.70 கோடி. ஒவ்வொரு வங்கியுமே, `ஒரு நிறுவனத்துக்கு எவ்வளவு கடன் தரலாம் என ரிசர்வ் வங்கி நிர்ணயித்த அளவுக்குள்தான் நாங்கள் கடன் தந்திருக்கிறோம்' என்கிறது. ஒவ்வொரு நிறுவனத்துக்கும் வெவ்வேறு வங்கிகளில் அதிகபட்ச கடன் வாங்கியிருக்கிறார் அதானி.

அதானி நிறுவனங்களின் ஒட்டுமொத்தக் கடன், ரூ.2,11,030 கோடி. இதில் 38% மட்டுமே இந்திய வங்கிகள் கொடுத்தவை. கடந்த மாதம் வரை முறையாக வட்டி வந்துகொண்டிருப்பதாகவும் வங்கிகள் சொல்கின்றன.

 
சரியும் அதானி சாம்ராஜ்ஜியம்... மோடியையும் பாதிக்குமா?
 

எல்.ஐ.சி-க்கு பாதிப்பு இல்லை!

அதானியின் வீழ்ச்சியில் கையோடு சேர்த்து பலர் எல்.ஐ.சி-க்கும் முடிவுரை எழுதிக்கொண்டிருக்கிறார்கள். அந்த அளவுக்கு எல்.ஐ.சி நிறுவனத்துக்கு பாதிப்பு இல்லை என்பதே உண்மை. கடந்த மூன்று ஆண்டுகளில் அதானி நிறுவனங்களில் எல்.ஐ.சி படிப்படியாக முதலீடு செய்திருக்கும் தொகை, ரூ.36,474 கோடி. அதானி பங்குகளின் மதிப்பு உயர்ந்தபோது, இது ரூ.72,200 கோடியாக ஆனது. ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கை வெளியான முதல் இரண்டு நாள்களில் ஏற்பட்ட இழப்பில், இது ரூ.55,700 கோடி ஆனது. எப்படிப் பார்த்தாலும் இது லாபத்தில் ஏற்பட்ட இழப்புதான். எல்.ஐ.சி கிட்டத்தட்ட 41 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கான முதலீட்டை நிர்வகிக்கிறது. அதில் அதானி முதலீடு சிறு துளியே!

இருந்தாலும், பல தனியார் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் அதானி பங்குகளிலிருந்து விலகி இருக்கும்போது எல்.ஐ.சி மட்டும் தொடர்ந்து ஏன் முதலீடு செய்கிறது, இப்போது இவ்வளவு சர்ச்சைகள் இருக்கும் நேரத்திலும் அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் தொடர் பங்கு வெளியீட்டில் பங்கேற்று ரூ.300 கோடியை ஏன் முதலீடு செய்கிறது என்ற கேள்விகளுக்கு எல்.ஐ.சி பதில் சொல்ல வேண்டும்.

 
சரியும் அதானி சாம்ராஜ்ஜியம்... மோடியையும் பாதிக்குமா?
 

அதானி அண்ணன் பின்னும் வளையம்!

அதானி குழுமத்தில் அவர் குடும்பத்தைச் சேர்ந்த அத்தனை பேருமே உயர் பதவிகளில் இருக்கிறார்கள். கௌதம் அதானி, அவர் மனைவி ப்ரீத்தி, மகன்கள் கரண், ஜீத் ஆகிய நால்வருமே நிர்வாகக் குழுவில் இருக்கிறார்கள்.

அதானியின் மனைவி ப்ரீத்தியின் சகோதரர் சமீர் வோரா, ஆஸ்திரேலியாவில் இருக்கும் அதானி நிறுவனங்களை கவனிக்கிறார். இவர் ஏற்கெனவே வைர இறக்குமதி வியாபாரத்தில் வரி மோசடி செய்து வருவாய் புலனாய்வுத் துறையின் விசாரணை வளையத்தில் இருந்தவர்.

கௌதம் அதானியின் அண்ணன் வினோத் அதானி, வெளியில் அதிகம் பேருக்குத் தெரியாத ஒரு மனிதர். இவர் இந்தியாவின் ஆறாவது பெரிய பணக்காரர். எண்ணெய், சர்க்கரை, இரும்புத்தாது என வியாபாரம் செய்வதற்காக சிங்கப்பூர் போன இவர், பிறகு துபாயில் செட்டில் ஆனார். சிங்கப்பூர், துபாய், மொரீஷியஸ், சுவிட்சர்லாந்து எனப் பறந்துகொண்டே இருக்கும் இவர்தான், பல நிழல் நிறுவனங்களை ஆரம்பித்து, அதானி நிறுவனங்களுக்கு முதலீட்டைக் கொண்டு வருகிறார். இவர் மகன் பிரணவ் அதானியும் நிறுவனங்களில் முக்கியப் பொறுப்பில் இருக்கிறார். இவர் மகள் கிருபாவைத் திருமணம் செய்திருப்பது சூரஜ். இவர், வங்கிகளில் கடன் வாங்கி பணமோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்குத் தப்பி ஓடிய வைர வியாபாரி ஜடின் மேத்தாவின் மகன்.

கௌதம் அதானியின் தம்பி ராஜேஷ் அதானியும் குழுமத்தில் முக்கியமான பொறுப்பில் இருக்கிறார். சுங்கவரி மோசடி செய்ததற்காகவும், போலி ஆவணங்களைத் தயாரித்ததற்காகவும் 1999 மற்றும் 2010-ல் இருமுறை கைதானவர் இவர். ராஜேஷின் மகன் சாகர் அதானியும் அதானி குழும நிர்வாகக்குழுவில் முக்கிய அங்கம்.

இது இந்தியாவின் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.இந்த இலட்சணத்தில் இலங்கையின் பொருளாதாரத்தை உயர்த்தப் போறாங்களாம்.  இலங்கை>பாகிஸ்தான்  வரிசையில் அடுத்தது இந்தியாவா?

  • கருத்துக்கள உறவுகள்
On 5/2/2023 at 03:40, ஏராளன் said:

ஹிண்டன்பர்க், 2020 ஆம் ஆண்டு முதல் 30 நிறுவனங்களின் ஆய்வு அறிக்கைகளை அம்பலப்படுத்தியுள்ளது என்றும் அறிக்கை வெளியான அடுத்த நாளிலேயே அந்த நிறுவனங்களின் பங்குகள் சராசரியாக 15% சரிந்தன என்றும் ப்ளூம்பெர்க் அறிக்கை கூறுகிறது.

அடுத்த ஆறு மாதங்களில் இந்த நிறுவனங்களின் பங்குகள் சராசரியாக 26 சதவீதத்துக்கும் மேல் சரிவைப் பதிவு செய்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆறு நாதளில் என்பதனை ஆறு மாதங்கள் என தவறாக பதிந்துள்ளார்கள் நினைக்கிறேன்.

இந்த மோசடிகளால் பொது மக்கள்  நேரடியாக பாதிப்புள்ளாகியுள்ளார்கள்.

ஏற்கனவே உலகளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியான தருணத்தில் இந்த செய்தி இந்தியாவின் பொருளாதாரத்தின் முதுகெலும்பை உடைக்கும் எனவே கருதுகிறேன்.

வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கையினை இந்திய பங்கு சந்தை இழந்துள்ளது,  இதனால் எதிர்காலத்தில் முதலீட்டு சுருக்கம் ஏற்பட்டு பொருளாதாரம் சரிவடையலாம்.

ஆனாலும் தற்சமயம் வரை குறித்த பங்குகளை தவிர  இந்திய பங்கு சந்தையில் பெரிதாக எந்த தாக்கமும் தெரியவில்லை, 

வங்கிகள் காப்புறுதி நிறுவனங்களில் ஆரம்ப கட்ட பாதிப்பு தெரிகிறது, வெகு விரைவில் மற்ற துறைகளுக்கும் இதன் பாதிப்பு தெரியலாம் ஆனாலும் இந்தியா விவசாய பொருளாதார நாடென்பதால் பெரிய தாகம் ஏற்படாது என கூறுகிறார்கள்.

எனது அபிப்பிராயம் இந்தியா மிக பெரிய பொருளாதார சரிவு காணும் நிலை வரும், அதனால் பெருமளவிலான  ஏழை மக்களே பாதிப்படைவார்கள் என கருதுகிறேன்.

மேற்கு நாடுகளை போல  நீர்குமிழி உடையும் போது பொருளாதாரம் பாதிப்படைவது போல இந்திய பொருளாதாரம் பாதிப்படையுமா?

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதானிக்கு செக் வைத்த ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனர் ஆண்டர்சன் நாயகனா? வில்லனா?

  • வினீத் கரே
  • பிபிசி செய்தியாளர், டெல்லி
4 மணி நேரங்களுக்கு முன்னர்
நாட் ஆண்டர்சன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

நாட் ஆண்டர்சன்

 

பெண் விளையாட்டு வீரர்களின் சக்திவாய்ந்த கதைகளைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

பிபிசி தமிழ்
  • 2017ம் ஆண்டு ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனத்தை ஆண்டர்சன் நிறுவினார்
  • அமெரிக்க நிறுவனங்கள் பலவற்றை ஹிண்டன்பர்க் குறி வைத்திருக்கிறது
  • நாஜி ஜெர்மனியின் தோல்வியடைந்த விண்வெளித் திட்டத்தின் பெயரை இந்நிறுவனம் கொண்டுள்ளது
  • அதானி ஆய்வறிக்கை ஹிண்டன்பர்க் வெளியிட்ட 19வது அறிக்கையாகும்
  • அதானி குழுமம் தங்களது 88 கேள்விகளில் 62 கேள்விகளுக்கு பதில் அளிக்கவில்லை என்று ஹிண்டன்பர்க் கூறுகிறது
பிபிசி தமிழ்

ஹிண்டன்பர்க் போன்ற ஷார்ட் செல்லிங் நிறுவனங்கள் அவை கூறுவது போல, தங்களது ஆய்வறிக்கைகள் மூலம் முதலீட்டாளர்கள் நஷ்டமடையாமல் காக்கின்றனவா? அல்லது பங்கு சந்தையில் மாற்றங்களை செய்து அதன் மூலம் தங்களது பாக்கெட்டை நிரப்பிக் கொள்கின்றனவா?

ஹிண்டன்பர்க் போன்ற நிறுவனங்கள் சட்டப்படி செயல்படக் கூடிய அமெரிக்காவில் இந்த விவாதம் பல ஆண்டுகளாக இருந்து கொண்டிருக்கிறது. அவரை விரும்புபவர்களும் உண்டு. அதேவேளையில், எதிரிகளுக்கு பஞ்சமில்லை.

அதானி குழுமம் குறித்த ஆய்வறிக்கைக்கு, "கார்பரேட் வரலாற்றில் மிகப்பெரிய மோசடி" என்று மிகவும் பரபரப்பான தலைப்பை ஹிண்டன்பர்க் கொடுத்தது. இதனை அதானி குழுமம் பொய் என்று கூறுகிறது.

ஹிண்டன்பர்க்கை விமர்சிப்போர், அதன் அறிக்கை 'வேகமாக முன்னேறும் இந்தியாவை கீழே இழுக்கும் முயற்சி' என்று குற்றம்சாட்டுகின்றனர்.

 

பங்குச்சந்தையில் பொதுவாக பங்குகளின் மதிப்பு உயரும் போது முதலீட்டாளர்களுக்கு லாபம் கிடைக்கும். ஆனால், ஷார்ட் செல்லிங்கைப் பொருத்தவரை, பங்குகளின் மதிப்பு சரியும் போதுதான் லாபம் கிடைக்கும். ஒரு குறிப்பிட்ட பங்கின் மதிப்பு வீழும் என்ற கணிப்பின் அடிப்படையில் கட்டப்படும் பந்தயம் இது.

உண்மையில், ஹிண்டன்பர்க் போன்ற ஷார்ட் செல்லிங் நிறுவனங்கள் குறிப்பிட்ட நிறுவனத்தின் பங்குகள் வீழும் என்று பந்தயம் கட்டுகின்றன. பின்னர், அந்நிறுவனங்களை குறிவைத்து ஆய்வறிக்கைகளை வெளியிடுகின்றன.

எந்த நிறுவனத்தின் பங்குகள் உண்மையான மதிப்பை விட மிக அதிகமாக இருப்பதாக அவர்கள் நினைக்கிறார்களோ அந்த நிறுவனத்தையே இதற்காக அவர்கள் தேர்வு செய்கிறார்கள். முதலீட்டாளர்களை ஏமாற்றுவதாக கருதும் நிறுவனங்களையும் அவர்கள் குறிவைக்கிறார்கள்.

பங்குச்சந்தை

பட மூலாதாரம்,FANATIC STUDIO

சம்பந்தப்பட்டவர்கள் என்ன செய்கிறார்கள்?

2017-ம் ஆண்டு ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனத்தை ஆண்டர்சன் நிறுவினார்.

அமெரிக்காவைச் சேர்ந்த மற்றொரு ஷார்ட் செல்லிங் நிறுவனமான ஸ்கார்பியன் கேபிட்டலின் தலைமை முதலீட்டு அதிகாரி கெய்ர் கேலன் கூற்றுப்படி, ஹிண்டன்பர்க் ரிசர்ச் நம்பகத்தன்மை வாய்ந்தது, அதன் ஆய்வு முடிவுகள் நம்பத்தகுந்தவை. அமெரிக்காவில் பல தருணங்களில் மோசடி செய்த நிறுவனங்கள் மீது ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கைகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நியூயார்க்கில் இருந்து செயல்படும் எட்வின் டோர்சி, "தி பியர் கேவ்" என்ற தலைப்பில் ஷார்ட் செல்லிங் குறித்து எழுதியுள்ளார். ஹிண்டன்பர்க் போன்ற ஷார்ட் செல்லிங் நிறுவனங்கள் ஆய்வறிக்கைகளை வெளியிட 2 முக்கிய காரணங்கள் இருப்பதாக அவர் கூறுகிறார். முதலாவதாக, தவறுகளை வெளிக்கொணர்வதன் மூலம் பலனடைவது; இரண்டாவதாக நீதியையும், பொறுப்புணர்வையும் உறுதிப்படுத்துவது.

"பங்குதாரர்களின் இழப்பில் சிலர் பணக்காரர்களாவதையும், மோசடி செய்வதையும் பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது. ஷார்ட் செல்லிங் நிறுவனங்களின் ஆய்வறிக்கைகள் புலனாய்வு பத்திரிகையியல் வகையைச் சேர்ந்தது. அதில் இருககும் லாப நோக்கம் சற்று மாறுபட்டது. நெட் மற்றும் ஹிண்டன்பர்க் ஆகியோரை நான் உயர்வாக மதிக்கிறேன்," என்கிறார் எட்வின் டார்சி.

பங்குச்சந்தையை தீர்மானிப்பதில் ஷார்ட் செல்லர் ஆய்வறிக்கைகளும், சமூக ஊடகங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால், சாதாரண முதலீட்டாளர்கள் ஷார்ட் செல்லிங் நிறுவனங்களை விரும்புவதில்லை. ஏனெனில், அவை அவர்களின் முதலீடு மீது மோசமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

பல நிறுவனங்களும் கூட ஷார்ட் செல்லிங் நிறுவனங்களை விரும்புவதில்லை என்பதில் ஆச்சர்யம் இல்லை. 2021ம் ஆண்டு, ஷார்ட் செல்லிங் என்பதே ஒரு மோசடி என்று உலகின் முதல் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் விமர்சித்தார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

ஸ்கார்பியன் கேபிட்டல் ஷார்ட் செல்லிங் நிறுவனத்தின் தலைமை முதலீட்டு அதிகாரி கெய்ர் கேலன், அதானி விவகாரத்தை இந்தியாவின் 'என்ரான் தருணம்' என்று வர்ணிக்கிறார்.

"அதானி, என்ரான் ஆகிய இரண்டுமே உள்கட்டமைப்பு நிறுவனங்கள் என்பதோடு வலுவான அரசியல் தொடர்புகளைக் கொண்டிருந்தன என்பது கவனம் ஈர்க்கும் விஷயம்," என்கிறார் அவர்.

பெரும் நிதி இழப்புகளை மறைத்து வந்த என்ரான் நிறுவனம் 2001-ம் ஆண்டில் திவாலானது, அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், என்ரான் தலைவர் கென் லே மற்றும் நிறுவன நிர்வாகிகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார்.

அதானி குழுமத்தின் நிதிநிலை என்ரானைப் போல இல்லை என்றாலும் கென் லேவைப் போல அதானியும் அரசு நிர்வாகத்துடன் மிக நெருக்கமாக இருப்பதாக குற்றம்சாட்டப்படுகிறார்.

"ஸ்திரமான, நேர்மையான நிறுவனங்கள் ஷார்ட் செல்லிங் ஆய்வறிக்கைகள் குறித்து கவலைப்படாது. கூகுள், பேஸ்புக், மைக்ரோசாஃப்ட் குறித்து யாரும் இதுபோன்று எழுதினால் மக்கள் சிரிப்பார்கள். அந்நிறுவனங்களின் பங்குகளுக்கு எந்த பாதிப்பும் இருக்காது" என்பது கெய்ர் கேலன் கூற்று.

ஹிண்டன்பர்க் நிறுவனர் ஆண்டர்சன் பற்றிக் குறிப்பிடுகையில், "அவரது செயல்பாடுகளுக்கு நற்சான்றுகள் உள்ளன. அவரது ஆராய்ச்சியில் நம்பகத்தன்மை உள்ளது. அவர் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார்," என்கிறார் கெய்ர் கேலன்.

கொலம்பியா சட்டப் பள்ளி பேராசிரியர் ஜோஷூவா மிட்ஸ் பிரபல 'Short and Distord' இதழில் ஷார்ட் செல்லிங் நிறுவனங்கள் குறித்து விமர்சித்துள்ளார்.

"ஆண்டர்சன் அவரைப் பற்றி மிகவும் வெளிப்படையாக பேசுகிறார் என்பதே வால் ஸ்ட்ரீட்டில் பலரும் அவரை மதிக்கக் காரணம். வெளிப்படையாக பேசுவோர் உண்மையை பேசுகிறார்கள் என்று அர்த்தம் கிடையாது. சிலர் அவரை விமர்சித்துளளனர், கேள்வி எழுப்பியுள்ளனர். அமெரிக்காவின் மிகப்பெரிய வதந்திகளுள் ஒன்றை அண்மையில் அம்பலப்படுத்தியுள்ளது"என்று ஜோஷூவா கூறுகிறார்.

"முதலீட்டாளர்களின் பணத்தை என்ன செய்கிறார்கள் என்பதில் நிறுவனங்கள் வெளிப்படையாக, நேர்மையாக இருக்க வேண்டும் என்று கூறுகிறோம். அதேபோல், ஷார்ட் செல்லிங் செய்வோரும் வெளிப்படையாகவும், நேரடியாக பேசுபவராகவும் இருக்க வேண்டும் என்று கூற வேண்டும்" என்று அமெரிக்க நீதித்துறைக்கு ஜோஷூவா மிட்ஸ் அறிவுறுத்துகிறார்.

हिंडनबर्ग रिसर्च

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஹிண்டன்பர்க்கின் மிகவும் பிரபலமான ஆய்வறிக்கை

ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை வெளியிடப்பட்ட நேரம், அவர்களுக்கு கிடைத்த பலன் ஆகியவை குறித்தும் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். இதுகுறித்து ஆண்டர்சனை தொடர்பு கொண்டோம். ஆனால் அவர் பதில் அளிக்கவில்லை.

ஹிண்டன்பர்க் இணையதளத்தின்படி, அதானி ஆய்வறிக்கை உள்பட மொத்தம் 19 அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், மிகவும் பிரபலமான அறிக்கை கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பரில் வெளியிடப்பட்டுள்ளது. அதன் மூலம், அமெரிக்க எலக்ட்ரிக் வாகன நிறுவனமான நிகோலாவின் மோசடிகள் அம்பலமாயின.

2015-ம் ஆண்டு உருவான நிகோலா நிறுவனம் 30 பில்லியன் டாலர் சந்தை மூலதன மதிப்பைக் கொண்டிருந்தது. 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் நெடுஞ்சாலை ஒன்றில் பேட்டரியில் இயங்கும் 'நிகோலா ஒன் செமி-டிரக்' ஓடும் வீடியோவை வெளியிட்டதன் மூலம் கார்பன் உமிழ்வே இல்லாத எதிர்காலம் குறித்த கற்பனையை அந்நிறுவனம் விதைத்தது.

ஹிண்டன்பர்க் தனது புலனாய்வின் முடிவில், அந்த செமி-டிரக் உண்மையில் மலை உச்சிக்கு இழுத்துச் செல்லப்பட்டு சரிவான பாதையில் விடப்பட்டு படம் பிடிக்கப்பட்டது என்று கூறியது.

அந்த குற்றச்சாட்டுகளை நிகோலா நிறுவனம் மறுத்தது. ஆனால், பின்னர் அதன் தலைவர் டிரெவார் மில்டன் பதவி விலக நேரிட்டது. ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை வெளிவந்ததுமே நிகோலா நிறுவன பங்குகள் 24 சதவீதம் வீழ்ந்தன. நிகோலா நிறுவனத்திற்கு 120 மில்லியன் டாலர் அபராதமும் விதிக்கப்பட்டது.

2021-ம் ஆண்டு மில்டன் மீதான மோசடிப் புகார்கள் நிரூபிக்கப்பட்டன.

அதானி குழுமத்தைப் பொருத்தவரை, அதுவும் ஹிண்டன்பர்க் முன்வைக்கும் அனைத்து குற்றச்சாட்டுகளையும் நிராகரிக்கிறது. தங்களது 88 கேள்விகளில் 62-க்கு பதில் தரவில்லை என்ற ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டிற்கு அதானி குழுமத்தின் பதில் இதுவே.

ப்ளூம்பெர்க் அறிக்கைப்படி, ஹிண்டன்பர்க் உள்பட சுமார் 30 ஷார்ட் செல்லிங் நிறுவனங்கள் முறைகேடான வர்த்தக செயல்பாடுகளில் ஈடுபட்டதற்கான தகவல்களை அமெரிக்க நீதித்துறை சேகரித்தது. என்றாலும், அmந்நிறுவனங்கள் அல்லது அவற்றின் கூட்டாளிகள் மீது எந்தவொரு குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படவில்லை.

அதானி

பட மூலாதாரம்,ANI

 
படக்குறிப்பு,

கெளதம் அதானி

அதானி குழுமத்தை ஹிண்டன்பர்க் தேர்ந்தெடுத்தது ஏன்?

ஹிண்டன்பர்க் அறிக்கை வந்தபோது ஆச்சரியமாக இருந்ததாக நியூயார்க் பல்கலைக் கழக பேராசிரியர் அஸ்வத் தாமோதரன் ஒரு வலைப்பதிவில் எழுதினார். ஏனெனில் ஹிண்டன்பர்க் கடந்த காலங்களில் சிறிய அல்லது அதிக தகவல்கள் கிடைக்காத நிறுவனங்களையே குறிவைத்திருந்தது. ஆனால் அதானி குழுமமோ, ஒரு பெரிய இந்திய நிறுவனம். எப்போதும் பேசப்படக் கூடிய இடத்தில் இருப்பது.

ஹிண்டன்பர்க்கின் பழைய அறிக்கைகள் அமெரிக்க மற்றும் சீன நிறுவனங்களைப் பற்றியவை. அப்படியானால், தனது 19வது அறிக்கைக்கு அதானி குழுமத்தை ஹிண்டன்பர்க் தேர்வு செய்தது ஏன்?

நியூயார்க்கில் தி பியர் கேவ் என்ற ஷார்ட் செல்லிங் இதழை நடத்தும் எட்வின் டோர்சி, "ஹிண்டன்பர்க் ஏன் அதானியை குறி வைத்தார் என்பது தெரியவில்லை, ஆனால். ஷார்ட் செல்லிங் செயல்பாட்டாளர்களுக்கு எங்கிருந்தோ, பெயர் குறிப்பிட விரும்பாத நபர்களிடம் இருந்து வரும் இமெயில்கள் மூலம் குறிப்புகள் கிடைக்கின்றன. அதனால் அவர்கள் அந்த நிறுவனத்தை உற்றுநோக்கத் தொடங்குகிறார்கள்." என்கிறார்.

"நிறுவனத்தின் பங்கு மதிப்பு மிக விரைவாக உயரும் போது, ஷார்ட் செல்லிங் செயல்பாட்டாளரின் கவனம் அதை நோக்கி செல்கிறது." என்று அவர் கூறுகிறார்.

2022ம் ஆண்டு ஏப்ரலில் ஒரு ஊடக அறிக்கைப்படி, கொரோனா பேரிடருக்கு நடுவேயும் அதற்கு முந்தைய 2 ஆண்டுகளில் அதானி குழு பங்குகள் 18-20 மடங்கு அதிகரித்திருந்தன.

"அதானி ஒரு தெளிவான இலக்காக இருந்தார். அதானி நிறுவனங்கள் பல ஆண்டுகளாக மோசடி செய்து வருவதாக இந்தியாவில் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. அவை சரியா ஆராய்ந்து பார்த்தோம். அப்புறம் இதில் சொல்லும்படி எதுவும் இல்லை, எல்லாம் நன்றாகத் தெரியும் என்று நினைத்துக் கொண்டு கிளம்பினோம்." என்று கார்பியன் கேபிட்டலின் தலைமை முதலீட்டு அதிகாரி கெய்ர் கேலன் கூறுகிறார்.

அதானி

பட மூலாதாரம்,GETTY IMAGES

அமெரிக்காவில் விசாரணை

அதானி குழுமம் தன் மீதான அனைத்து மோசடிப் புகார்களையும் எப்போதுமே மறுத்து வருகிறது.

கொலம்பியா சட்டப் பள்ளி பேராசிரியர் ஜோஷூவா மிட்ஸ் கூற்றுப்படி, அமெரிக்காவில் ஷார்ட் செல்லிங் நிறுவனங்கள் ஒழுங்குமுறை அமைப்புகளின் கூடுதல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருப்பதால் அவர்கள் வளர்ச்சியடையாத நாடுகளின் சந்தைகளுக்கு திரும்பியுள்ளனர்.

"சந்தை ஒழுங்குமுறை அமைப்பு அமெரிக்காவை விட 5 அல்லது 10 ஆண்டுகள் பின்தங்கியிருந்தால் அல்லது அந்த அமைப்பு மிகவும் புத்திசாலி இல்லை என்றால் ஷார்ட் செல்லிங் நிறுவனங்களின் சுரண்டல்கள் மிகவும் சுவாரஸ்யமாகின்றன. கடந்த பத்தாண்டுகளில், ஷார்ட் செல்லிங் செயல்பாட்டாளர்கள் மேலும் மேலும் அதிகரித்து உலகளாவியதாக மாற வருகிறது என்பது உண்மைதான்" என்று அவர் கூறுகிறார்.

"தி பியர் கேவ்" இதழை வெளியிடும் எட்வின் டோர்சியின் கூற்றுப்படி, அமெரிக்காவில் ஷார்ட் செல்லிங்கில் முதல் பெரிய நிறுவனம் ஆண்ட்ரூ லெஃப்டால் நிறுவப்பட்ட சிட்ரான் ரிசர்ச் நிறுவனமே.

வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தரவுகளின்படி, 2001 மற்றும் 2014ம் ஆண்டுகளுக்கு இடையில் சிட்ரான் நிறுவனம் 111 ஆய்வறிக்கைகளை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு சிட்ரான் அறிக்கையும் வெளியிடப்பட்ட பிறகு, அது குறிவைத்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு சராசரியாக 42 சதவீதம் குறைந்துள்ளது.

2013-ம் ஆண்டு டெஸ்லா நிறுவனத்தின் பங்கு விலை சற்று அதிகம் என்றும், எலக்ட்ரிக் கார் ஒரு ஃபேஷன் என்றும் ஆண்ட்ரூ கூறியிருந்தார். ஆனாலும், அதன் பிறகு டெஸ்லா பங்கு மதிப்பும், கார் விற்பனையும் அதிகரித்தது.

ஷார்ட் செல்லிங்கில் அடிபடும் மற்றொரு பெரிய பெயர் கார்சன் பிளாக் என்பதாகும். ஒழுங்குமுறை அமைப்புகளைக் காட்டிலும், கார்சன் பிளாக்கே மோசடிகளை அதிக அளவில் அம்பலமாக்கி முதலீட்டாளர்களின் பணத்தை மிச்சப்படுத்தியதாக அமெரிக்க சந்தைகளைக் கட்டுப்படுத்தும் SEC என்ற அமைப்பின் அதிகாரி ஒருவர் கூறினார்.

ஷார்ட் செல்லிங்கில் அசத்தும் புதிய நட்சத்திரமான ஆண்டர்சனும் இஸ்ரேலில் சிறிது காலத்தை செலவிட்டார். அமெரிக்க ஊடகங்களால் 'ராட்சதன்களை வீழ்த்துபவர்' என்று அவர் அழைக்கப்படுகிறார்.

அதானி

பட மூலாதாரம்,GETTY IMAGES

எட்வின் டோர்சி கூற்றுப்படி, ஷார்ட் செல்லிங் என்பது அமெரிக்காவில் 20-25 ஆண்டுகள் பழமையானது, அங்கு சுமார் 20 பெரிய நிறுவனங்கள் உள்ளன.

ஷார்ட் செல்லிங் பற்றிய அறிக்கைப்படி, 2022-ம் ஆண்டில் 113 புதிய மற்றும் பெரிய ஷார்ட் செல்லிங் நிறுவனங்கள் இருந்தன. அவற்றுள், ஹிண்டன்பர்க் மிகவும் வெற்றிகரமான ஷார்ட் செல்லிங் நிறுவனமாக திகழ்ந்தது.

பெரிய நிறுவனங்களைத் தரைமட்டமாக்கும் ஷார்ட் செல்லிங் நிறுவனங்களை அமெரிக்கச் சட்டமும் கண்காணித்து வருவதாக அமெரிக்க ஊடகங்கள் கூறுவது வேடிக்கையான ஒன்று.

2018 ஆம் ஆண்டில், அமெரிக்க சந்தைகளை கட்டுப்படுத்தும் SEC, ஒரு ஹெட்ஜ் நிதி நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை எடுத்தது. இதனால், அந்நிறுவனம் நஷ்ட ஈடு செலுத்த வேண்டியிருந்தது.

கொலம்பியா சட்டப் பள்ளி பேராசிரியர் ஜோஷூவா மிட்ஸ் கூறுகையில், "சில தரப்பினர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டால், ஒட்டுமொத்த தொழில்துறை அல்லது ஒவ்வொரு தொழிலில் பங்கேற்பவர்களும் விசாரிக்கப்படுகிறார்கள் என்று அர்த்தம் இல்லை." என்றார்.

"இந்திய ஒழுங்குமுறை அமைப்புகள் இதைப் பற்றி கவலைப்பட்டால், அமெரிக்கா என்ன செய்கிறது என்பதை அவர்கள் பார்க்கலாம். அமெரிக்காவில் அரசாங்கத்தின் பல நடவடிக்கைகள் உள்ளன." என்று அவர் மேலும் கூறுகிறார்.

அதானி

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஹிண்டன்பர்க்கிற்கு எதிரான அதானியின் சவால் தாக்குப் பிடிக்குமா?

ஃபைனான்சியல் டைம்ஸ் அறிக்கையின்படி, ஹிண்டன்பர்க்கிற்கு எதிரான சட்டப் போராட்டத்திற்கு ஒரு பெரிய, அதிக செலவு பிடிக்கக் கூடிய அமெரிக்க சட்ட நிறுவனத்தை கௌதம் அதானி தேர்ந்தெடுத்துள்ளார்.

சட்டத்தின் வழியைப் பின்பற்றுவது பற்றி முன்னதாக ஒரு அறிக்கையில் அதானி குறிப்பிட்டிருந்தார். அதே நேரத்தில் அமெரிக்காவில் சட்டச் செயல்பாட்டின் போது நிறைய ஆவணங்களைக் கோரப் போவதாக ஹிண்டன்பர்க் கூறியிருந்தது.

நிபுணர்களின் கூற்றுப்படி, ஷார்ட் செல்லிங்கால் குறிவைக்கப்பட்ட நிறுவனங்கள், நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடுக்கின்றன, ஆனால் அங்கு வழக்கை நிரூபிப்பது சவாலானதாக இருக்கும்.

அமெரிக்காவில் சுதந்திரமாக பேசும் உரிமைக்கு அளிக்கப்பட்டுள்ள சட்டப் பாதுகாப்பே அதற்குக் காரணம்.

"அமெரிக்க நீதிமன்றங்கள் பேச்சு சுதந்திரம் பற்றி அதிக அக்கறை எடுத்துக்கொள்கின்றன, பல ஷார்ட் செல்லிங் நிறுவனங்கள் தங்கள் பேச்சு சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கூறி வழக்குகளை வென்றுள்ளனர். அவர்கள் தங்களது கருத்தை வெளிப்படுத்தியிருந்தாலும், பேச்சு சுதந்திரம் ஷார்ட் செல்லிங் நிறுவனங்களை கவசமாக காக்கிறது. அவர்களது அறிக்கை துல்லியமானது அல்ல என்று பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் நம்பினாலும் கூட இந்த முடிவு தவிர்க்க இயலாததாகி விடுகிறது" என்று கொலம்பியா சட்டப் பள்ளி பேராசிரியர் ஜோஷூவா மிட்ஸ் கூறுகிறார்.

" ஒரு ஷார்ட் செல்லிங் நிறுவனம் தனது செயல்பாடுகள் குறித்து வெளிப்படையாக இருக்காவிட்டால் அது நிச்சயமாக அந்நிறுவனத்திற்கு ஒரு சட்ட ரீதியான சுமையாக மாறக் கூடும்." என்றும் அவர் கூறுகிறார்.

அதானி

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தியாவில் ஷார்ட் செல்லிங் நிலை என்ன?

அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் குர்பச்சன் சிங்கின் கூற்றுப்படி, இந்தியாவில் ஷார்ட் செல்லிங் நடந்தாலும், பெரிய அளவில் இல்லை. செபியின் சிறு அறிக்கை, ஷார்ட் செல்லிங்கில் சாத்தியமுள்ள மோசடி வாய்ப்புகள் குறித்தும், இந்தியா அதை முறியடிப்பது குறித்தும் கூறுகிறது. 1998 மற்றும் 2011ம் ஆண்டுகளில் ஷார்ட் செல்லிங் தடை செய்யப்பட்டது.

ஹிண்டன்பர்க்கைப் போல இந்தியாவில் ஆய்வறிக்கைகளை தயாரிப்பது சவாலான காரியம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

செபியில் பதிவு செய்யப்பட்ட ஆய்வாளர் நிதின் மங்கல் கூறுகையில், "விமர்சனங்களை எதிர்கொள்வது எங்களுக்கு மிகவும் கடினம். விமர்சனத்தை நாங்கள் நேர்மறையாக எடுத்துக்கொள்வதில்லை. மக்கள் எனது ஆராய்ச்சியை அதிகம் விமர்சிக்கிறார்கள், ஆனால் நான் அதைப் பொருட்படுத்தவில்லை." என்கிறார்.

சட்ட ரீதியான காரணங்களால்தான் இந்தியாவில் அத்தகைய ஆராய்ச்சி நிறுவனங்கள் இல்லை என்று நிதின் மங்கல் கூறுகிறார்.

"இந்தியாவில் உள்ள நிறுவனங்கள் உங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கலாம். உங்களுக்கு எதிராக அவர்கள் குற்ற வழக்குகளை பதிவு செய்யலாம். ஆனால், அமெரிக்காவில் செயல்முறை மிகவும் வித்தியாசமானது." என்று அவர் மேலும் கூறுகிறார்.

https://www.bbc.com/tamil/india-64681269

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.