Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் ஏன் உலகச் செம்மொழிகளில் ஒன்று? அதன் சிறப்பும் தொன்மையும் என்ன? #தமிழர்_பெருமை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் ஏன் உலகச் செம்மொழிகளில் ஒன்று? அதன் சிறப்பும் தொன்மையும் என்ன? #தமிழர்_பெருமை

  • அ.தா.பாலசுப்ரமணியன்
  • பிபிசி தமிழ்
14 ஆகஸ்ட் 2020
புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர்
ஓலைச்சுவடி

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

ஓலைச்சுவடி

(தமிழர் பெருமை என்ற தலைப்பில் பிபிசி தமிழ் ஒரு சிறப்புக் கட்டுரைத் தொடர் வெளியிடுகிறது. தமிழ் மற்றும் தமிழருக்குப் பெருமை சேர்க்கும் பொருள்கள் குறித்த ஆழமான அலசலாக, சுவை சேர்க்கும் தகவல் திரட்டாக இந்தத் தொடரில் வரும் கட்டுரைகள் அமைய வேண்டும் என்பதே நோக்கம். இது இந்தத் தொடரின் நான்காவது கட்டுரை இப்போது இந்தக் கட்டுரை #மறுபிரசுரம் செய்யப்படுகிறது.)

 

பெண் விளையாட்டு வீரர்களின் சக்திவாய்ந்த கதைகளைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

தமிழ் ஒரு செம்மொழி என்ற அதிகாரபூர்வ அறிவிப்பை 2004ம் ஆண்டு இந்திய அரசு வெளியிட்டபோது தமிழ் அறிஞர்களுக்கும், ஆர்வலர்களுக்கும் ஒரு நூற்றாண்டு காலக் கனவு நிறைவேறியது.

இந்தியாவில் சம்ஸ்கிருதம் செம்மொழியாக கருதப்பட்டு அரசின் பல சலுகைகளை அனுபவித்து வந்தாலும், இந்தியாவில் அதிகாரபூர்வமாக செம்மொழி என அறிவிக்கப்பட்ட முதல் மொழி தமிழ்தான்.

தமிழை செம்மொழியாக அறிவிக்கும் முடிவை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் அமைச்சரவை 2004 செப்டம்பர் 17ம் தேதி எடுத்தது. அந்த முடிவை மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி அறிவித்தார். இந்தக் கோரிக்கையை பலகாலம் வலியுறுத்தி வென்ற அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி, பல காலமாக இதற்காக வாதாடிய பரிதிமாற்கலைஞர் போன்ற அறிஞர்களுக்கு இந்த வெற்றியை அர்ப்பணிப்பதாக அறிவித்தார்.

 

அதாவது இந்தக் கோரிக்கை நூற்றாண்டு பழையது என்பதை அவர் சூசகமாக தெரியப்படுத்தினார்.

மு.கருணாநிதி

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

மு.கருணாநிதி

ஆனால், தமிழை செம்மொழி என்று அறிவித்த மத்திய அரசு, அத்தோடு நிற்கவில்லை. செம்மொழி எவை என்பதற்கான ஒரு இலக்கணத்தையும் வகுத்து, அதன்கீழ் தகுதி பெறும் மொழிகள் செம்மொழிப்பட்டியலில் சேர்க்கப்படும் என்றும் அறிவித்தது.

தமிழை செம்மொழி ஆக்கவேண்டும் என்பது திமுக இடம் பெற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் குறைந்தபட்ச செயல்திட்டத்திலேயே இருந்தது. அந்த அரசின் முதல் நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலேயே ஜூன் 6-ம் தேதி தமிழ் செம்மொழிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த நாள் செம்மொழி தினமாக கொண்டாடப்படுகிறது.

அதன் அடிப்படையில் அடுத்தடுத்த ஆண்டுகளில் சம்ஸ்கிருதம், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஒடியா ஆகிய மொழிகளும் செம்மொழிப் பட்டியலில் சேர்க்கப்பட்டன. மராத்தியை செம்மொழி என அறிவிப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.

இந்தியாவில் சம்ஸ்கிருதம் தவிர, மூலச் சிறப்புள்ள ஒரே மொழி மரபு, தமிழுடையதுதான் என்ற அடிப்படையில் செம்மொழித் தகுதியை கோரி வந்த அறிஞர்களுக்கு இப்படி செம்மொழிப் பட்டியல் பெருத்துவருவது ஏமாற்றத்தைத் தந்தது.

இந்திய அரசின் பட்டியல் எப்படி இருந்தாலும், லத்தீன், கீரேக்கம், ஹீப்ரூ, சம்ஸ்கிருதம், சீனம் ஆகிய உலகச் செம்மொழிகளின் வரிசையில் தமிழ் உள்ளது என்று அறிஞர்கள் பலர் வாதிட்டு வருகிறார்கள். உலகின் செம்மொழிகள் எவை என்பதற்கு இலக்கணம் என்ன? தமிழ் எப்படி அந்த வரிசையில் உள்ளது?

உலகச் செம்மொழிகளில் ஒன்று

உலகப் புகழ் பெற்ற மொழியியல் அறிஞரும், லத்தீன், கீரேக்கம், தமிழ், சம்ஸ்கிருதம், ரஷ்யன் உள்ளிட்ட பல உலக மொழிகளில் ஆழ்ந்த புலமை மிக்கவருமான ஜார்ஜ் எல். ஹார்ட் 2000-ம் ஆண்டு தமிழின் செம்மொழித் தகுதி பற்றி ஓர் அறிக்கை வெளியிட்டார். தமிழ் செம்மொழிக் கோரிக்கைக்கான உந்து விசையாக இருந்தது இந்த அறிக்கை.

தமிழ் உலகச் செம்மொழிகளின் வரிசையில் இருக்கும் ஒரு மொழி என அந்த அறிக்கையில் வாதிட்டார் ஹார்ட். இன்னொன்றையும் அவர் குறிப்பிட்டார். இந்தியாவில் தமிழுக்கு செம்மொழித் தகுதியை தர மறுப்பதற்கு அரசியல் காரணம் மட்டுமே இருக்க முடியும். தமிழுக்கு இந்த தகுதியை அளித்தால் பிற மொழிகளும் அதே கோரிக்கையை முன்வைக்கலாம் என்பதே அந்தக் காரணம் என்று அவர் தீர்க்க தரிசனத்தோடு குறிப்பிட்டிருந்தார். தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல இந்திய மொழிகள் பற்றி ஆழ்ந்த அறிவு மிக்கவரான ஹார்ட், இத்தகைய இந்திய மொழிகள் நிச்சயமாக வளம் மிக்க இலக்கியத்தைக் கொண்டிருப்பவை என்றாலும் அவற்றை செம்மொழி என்று கூற இயலாது என்று சொல்லியிருந்தார்.

உலகச் செம்மொழிகள் எவை?

"உலக அளவில் எவை எவை செம்மொழி என்பதற்கான அதிகாரபூர்வ பட்டியல் ஏதும் இல்லை. ஐ.நா. கல்வி, அறிவியல் பண்பாட்டு அமைப்பான யுனெஸ்கோ சில மொழிகளை செம்மொழிகளாக அங்கீகரித்திருப்பதாக அவ்வப்போது தவறாக குறிப்பிடப்படுகிறது. மறைந்த கல்வியாளர் வா.செ.குழந்தைசாமி தி ஹிந்துவில் 2010ல் எழுதிய கட்டுரை ஒன்றில் அப்படி ஒரு பட்டியல் இல்லை என யுனெஸ்கோ தமக்கு எழுதிய கடிதத்தில் உறுதி செய்திருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

செவ்வியல் இலக்கியங்களைக் கொண்டிருக்கிற மொழிகளே செம்மொழிகளாக அடையாளம் காணப்பட்டன என்று வா.செ.குழந்தைசாமி தம் கட்டுரையில் வாதிட்டார்.

உலகச் செம்மொழிகள் எவை என்பதற்கு அப்படி ஓர் அதிகாரபூர்வ பட்டியல் இல்லை என்பதை மொழியியல் அறிஞர் மறைமலை இலக்குவனார் பிபிசி தமிழிடம் உறுதிப்படுத்துகிறார்.

'இது எழுதப்படாத சட்டம்' போன்றது என்கிறார் பேராசிரியர் மறைமலை.

ஐரோப்பியர்கள்தான் செம்மொழிகள் என சிலவற்றை அடையாளப்படுத்தினார்கள். லத்தீனும், கிரேக்கமுமே அவர்களுக்கு செம்மொழிகள். காரணம் லத்தீன் இல்லாமல் அவர்களால் தங்கள் பழைய சமய இலக்கியங்களைப் படிக்க முடியாது. நவீன அறிவியலில் நிறைய கிரேக்கச் சொற்கள் உண்டு. இதனால், ஐரோப்பியர்கள் முன்பெல்லாம் தங்கள் தாய்மொழி தவிர இந்த இரண்டு செம்மொழிகளைப் படிப்பார்கள்.

பிறகுதான் ஹீப்ருவும், சம்ஸ்கிருதமும், சீனமும் பலராலும் செம்மொழியாகப் பார்க்கப்பட்டன. இது அறிஞர்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதைப் பொறுத்ததுதான். ஜார்ஜ் எல்.ஹார்ட் போன்ற அறிஞர்கள் தமிழை இந்த வரிசையில் வைத்துப் பார்க்கிறார்கள். அதற்குக் காரணம், தமிழின் தொன்மையும், தனித்துவமான மரபும், இலக்கிய வளமும்தான் என்கிறார் மறைமலை.

தமிழ் ஏன் உலகச் செம்மொழி? ஜார்ஜ் எல்.ஹார்ட் என்ன சொல்கிறார்?

11.4.2000 அன்று ஹார்ட் தாம் எழுதிய அந்த அறிக்கையில் தமிழ் ஏன் செம்மொழி என்பதற்கான காரணங்களை இப்படி அடுக்குகிறார்:

"முதலாவதாக, தமிழ் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க பழமை உடையது. நவீன இந்திய மொழிகளின் இலக்கியங்களைவிட தமிழ் (இலக்கியம்) ஆயிரம் ஆண்டுகள் ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது. பழைய தமிழ் கல்வெட்டுகளைக் கொண்டு ஆராயும்போது, தமிழின் பழமையான நூலான தொல்காப்பியத்தின் பகுதிகள் கி.மு. 200-ம் ஆண்டினைச் சேர்ந்தவை என்பது தெரியவரும். தமிழின் மிகச் சிறந்த படைப்புகளான சங்கப் பாடல் தொகுப்புகள், பத்துப்பாட்டு போன்றவை கி.பி. முதல், இரண்டாம் நூற்றாண்டுகளைச் சேர்ந்தவை. இவைதான் இந்தியாவில் எழுதப்பட்ட மிகத் தொன்மையான மதச்சார்பற்ற கவிதைகள். காளிதாசரின் படைப்புகளைவிட இவை 200 ஆண்டுகள் மூத்தவை".

"இரண்டாவதாக, இந்தியாவை பூர்வீகமாக கொண்ட, ஆனால் சம்ஸ்கிருத்ததில் இருந்து தருவிக்கப்படாத ஒரே இலக்கிய மரபு தமிழினுடையதுதான். சம்ஸ்கிருதத்தின் செல்வாக்கு தெற்கில் வலிமையாக மாறும் முன்பே தமிழிலக்கியங்கள் எழுந்துவிட்டன. எனவே சம்ஸ்கிருதம் உள்ளிட்ட பிற இந்திய மொழிகளின் உள்ளடக்கத்தில் இருந்து பண்பில் வேறுபட்ட இலக்கியங்கள் இவை. இந்த தமிழ் இலக்கியங்களுக்கு சொந்தமாக கவிதைக் (செய்யுள்) கோட்பாடுகள், சொந்தமாக இலக்கண மரபு, சொந்தமாக அழகியல், எல்லாவற்றுக்கும் மேலாக மிகவும் தனித்துவமான மிகப்பெரிய இலக்கியத் தொகுப்பு உண்டு. சம்ஸ்கிருதம் மற்றும் பிற இந்திய மொழிகளில் இருப்பவற்றில் இருந்து முற்றிலும் வேறுபட்ட இந்திய உணர்வியலைக் காட்டுகிறவையாக இவை இருக்கின்றன. தமக்கென சொந்தமாக மிக வளமையான, பரந்த அறிவு மரபை இவை கொண்டிருக்கின்றன".

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை.

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை.

"மூன்றாவதாக, சம்ஸ்கிருதம், கிரேக்கம், லத்தீன், சீனம், பாரசீகம், அரபி மொழிகளின் மாபெரும் இலக்கியங்களின் வரிசையில் வைக்கத்தக்கவை தமிழின் செவ்வியல் இலக்கியங்கள். இந்த இலக்கியங்களின் நுட்பமும், ஆழமும், விதவிதமான செயற்பரப்பும், உலகு தழுவிய தன்மையும், உலகின் மாபெரும் செவ்வியல் மரபுகள், இலக்கியங்களில் ஒன்றாக தமிழை ஆக்குகின்றன. (நவீனத்துக்கு முந்திய இந்திய இலக்கியங்களில் விளிம்பு நிலையை விரிவாக கையாள்கிற ஒரே இலக்கியம் தமிழிலக்கியமே).

உலகின் மிகச்சிறந்த அறநெறி இலக்கியங்களில் ஒன்று திருக்குறள் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால், பலதரப்பட்ட, பெரும் தமிழ் செவ்வியல் இலக்கியங்களில் திருக்குறளும் ஒன்று, அவ்வளவுதான். இந்த மாபெரும் இலக்கியத்தால் கண்டெடுக்கப்படாத, ஒளி பாய்ச்சப்படாத மனித இருத்தலின் பக்கம் எதுவுமே இல்லை".

"கடைசியாக, நவீன இந்தியப் பண்பாடு, மரபு குறித்த முதன்மையான, தன்னிச்சையான தரவு மூலங்களில் தமிழும் ஒன்று. சம்ஸ்கிருத கவிதை மரபின் மீது தெற்கத்திய மரபின் செல்வாக்கு குறித்து நான் விரிவாக எழுதியிருக்கிறேன்.

சங்கப்பாடல்களில் தொடங்கி புனித தமிழ் இந்துவிய இலக்கியங்கள் நவீன இந்துவியத்தின் வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைந்தன என்பதும் முக்கியமானது.

அவற்றின் கருத்துகள் பாகவத புராணத்திலும், தெலுங்கு, கன்னடம், சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளின் பிற பிரதிகளிலும் எடுத்துக்கொள்ளப்பட்டன.

வேதங்களைப் போலவே புனிதமாக கருதப்படும், திருப்பதி போன்ற தென்னிந்திய வைணவக் கோயில்களில் வேதங்களோடு சேர்த்து ஓதப்படும் தமிழ்ப் பாடல்கள் உள்ளன. நவீன இந்தோ ஆரிய மொழிகளுக்கு சம்ஸ்கிருதம் மூலமாக இருப்பதைப் போலவே நவீன தமிழுக்கும், மலையாளத்துக்கும் செவ்வியல் தமிழே மூல மொழி" என்று குறிப்பிடுகிறார் ஹார்ட்.

தஞ்சை பெருவுடையார் கோயில் கல்வெட்டு.

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

தஞ்சை பெருவுடையார் கோயில் கல்வெட்டு.

அத்துடன் செவ்வியல் மொழிகளுக்கான இலக்கணம் ஒன்றை வரையறுத்து அதனுடன் தமிழைப் பொருத்திப் பார்க்கிறார் ஹார்ட்.

"செவ்வியல் மொழி என்று அழைக்கப்பட வேண்டுமானால் ஒரு மொழி பல கூறுகளைக் கொண்டிருக்கவேண்டும். அது பழமையானதாக இருக்கவேண்டும். ஒரு தனித்துவமான மரபைக் கொண்டிருக்கவேண்டும். அது தானே எழுந்த மரபாக இருக்கவேண்டும், வேறு மரபில் இருந்து கிளைத்திருக்கக்கூடாது. பெரிய, வளமான பண்டைய இலக்கியத் திரட்சியைக் கொண்டிருக்கவேண்டும். இந்தியாவின் பிற நவீன மொழிகளைப் போல இல்லாமல் தமிழ் இந்த எல்லா கூறுகளையும் கொண்டுள்ளது. தமிழ் மிகப் பழமையானது. (லத்தீன் அளவுக்கு இது பழமையானது. அரபியைவிட பழமையானது. முழுவதும் தன்னிச்சையான மரபாக எழுந்தது. சம்ஸ்கிருதத்தில் இருந்தோ, பிற மொழிகளில் இருந்தோ கிட்டத்தட்ட எந்த செல்வாக்கும் இல்லாமலே இது உருவானது. தமிழின் பண்டைய இலக்கியங்கள் விவரிக்க முடியாத அளவுக்கு பரந்தவை, வளமானவை.

தமிழ் செம்மொழி என்று கூறுவதற்கு நான் இது போன்ற கட்டுரையை எழுத வேண்டியிருப்பதே விந்தையானது" என்று குறிப்பிடும் ஹார்ட் உலகின் தலைசிறந்த செவ்வியல் மொழிகளில் ஒன்று தமிழ் என்பது, இந்த துறையைத் தெரிந்தவர்களுக்கு மிக வெளிப்படையாகத் தெரியும் என்றும் கூறுகிறார்.

பேராசிரியர் மறைமலை கேட்டுக்கொண்டதற்கு இணங்கவே இந்தக் கட்டுரையை எழுதியதாக தமது கட்டுரையை தொடங்கியிருப்பார் ஹார்ட்.

இதன் பின்னணியை மறைமலையிடமே கேட்டோம்.

ஹார்ட் ஏன் இந்தக் கட்டுரையை எழுதினார்?

"பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் திமுக இடம் பெற்றிருந்தபோதே தமிழை செம்மொழியாக அறிவிக்கவேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது. ஆனால், வழக்கொழிந்த மொழிகளைத்தான் செம்மொழி என்பார்கள், எனவே தமிழ் செம்மொழி அல்ல என்று கூறி இந்தக் கோரிக்கையை மத்திய அமைச்சர் முரளி மனோஹர் ஜோஷி நிராகரித்தார்" என்று குறிப்பிட்டார் மறைமலை.

அப்போது தமிழ்நாடு அரசின், தமிழ் வளர்ச்சித் துறையின் செயலாளராக இருந்த அவ்வை நடராசனும், செத்த மொழியைத்தான் செம்மொழி என்பார்கள் என்று குறிப்பிட்டு இந்த கோப்பை மூடினார் என்று தமிழறிஞர்கள் பலர் குறிப்பிடுகிறார்கள்.

மறைமலை இலக்குவனார்.

பட மூலாதாரம்,மறைமலை இலக்குவனார்/FB

 
படக்குறிப்பு,

மறைமலை இலக்குவனார்.

தமிழறிஞர் அவ்வை துரைசாமிப்பிள்ளை மகனான நடராசன் இப்படிச் செய்தது பலருக்கும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது என்று குறிப்புகள் உள்ளன.

இதைக் குறிப்பிட்டு கேட்டபோது, "முதல்வர் கருணாநிதியிடம் இந்த பிரச்சனையை கொண்டு சென்றபோது அவர் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் ம.ராசேந்திரனை அழைத்து இதற்கொரு வழிகாணும்படி கேட்டுக்கொண்டார். ம.ராசேந்திரன் என்னிடம் விவாதித்தார். வெளிநாட்டு மொழியியல் அறிஞர்கள் யாராவது இதைப் பற்றி எழுதினால் மட்டுமே இந்த வாதத்தை உடைக்க முடியும் என்று நான் வலியுறுத்தினேன்" என்கிறார் மறைமலை.

கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியரான ஹார்ட் விடுப்பில் சென்றிருந்தபோது 1997-98 காலகட்டத்தில் ஓராண்டு தமிழியல் துறையில் சிறப்பு வருகைதரு பேராசிரியராகப் பணி புரிந்தேன். ஹார்ட் உலகின் மிகப்பெரிய பன்மொழி அறிஞர். லத்தீன், கிரேக்கம், சம்ஸ்கிருதம் போன்ற பல செம்மொழிகளில் புலமை மிக்கவர். சம்ஸ்கிருத அறிஞராகத் தொடங்கி பிறகு தமிழறிஞர் ஆனவர். எனவே அவர் இது குறித்துப் பேசினால் நடுநிலையாக இருக்கும் என்று கருதி அவரிடம் தமிழின் செம்மொழித் தகுதி பற்றி கட்டுரை எழுதும்படி கேட்டுக்கொண்டேன்" என்று ஹார்ட் கடிதத்தின் பின்னணியை விளக்கினார் மறைமலை.

தமிழின் தொன்மை

தமிழ்நாட்டில், 12ம் வகுப்பு ஆங்கிலப் பாடநூலில் ஹார்ட்டின் கடிதம் ஒரு பாடமாக இடம் பெற்றிருந்தது. ஆனால், அந்தக் கடிதத்தோடு சேர்த்து அப்பாடத்தில் இடம் பெற்றிருந்த ஒரு குறிப்பில் தமிழின் தொன்மை கிமு 300 என்றும், சஸ்கிருதத்தின் தொன்மை கிமு 2000 என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது தமிழ்நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்தப் பாடம் மொத்தமும் நீக்கப்பட்டது. இது பற்றிக் குறிப்பிட்ட மறைமலை, ஹார்ட் தமது கடிதத்தில் தமிழ் மொழியின் தொன்மைக்கு காலம் எதையும் நிர்ணயிக்கவில்லை. அவர் குறிப்பிட்டதெல்லாம் இலக்கியத் தொன்மை பற்றிதான் என்றார்.

பறையும் நடனமும்

பட மூலாதாரம்,GETTY IMAGES

தமிழ் மொழியின் தொன்மை பற்றி அவரிடம் கேட்டபோது, தமிழ் நிச்சயமாக சமஸ்கிருதத்தை விட தொன்மையானது. சமரசத்துக்கு வருவதென்றால்கூட அது நிச்சயம் சம்ஸ்கிருதம் அளவுக்கு தொன்மையானது என்று குறிப்பிட்ட மறைமலை, ரிக்வேதத்தில் தமிழ்ச் சொற்கள் இருப்பதை சுனிதி குமார் சாட்டர்ஜி, டி. பர்ரோ & எம்.பி.எமனோ போன்ற பல அறிஞர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள் என்கிறார் அவர்.

தமிழின் தனித்தன்மை

உலகின் எந்த தொன்மையான மொழியிலும் இல்லாதபடி தமிழின் பண்டைய செவ்வியல் இலக்கியங்கள் மதம் சாராதவை, கடவுளைப் பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளாதவை, வாழ்க்கையைப் பேசுகிறவை என்கிறார் செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் தொல்லியல் துறைத் தலைவராக இருந்த ஆய்வாளர் மே.து.ராசுக்குமார்.

மே.து.ரா.

பட மூலாதாரம்,RAJUKUMAR METTUR DURAISAMY/FB

 
படக்குறிப்பு,

மே.து.ராசுக்குமார்

தொன்மையைப் பொருத்தவரை, கீழடி தமிழின் தொன்மையை பின்னோக்கி கொண்டு செல்கிறது என்று கூறும் ராசுக்குமார், பழனி அருகே உள்ள பொருந்தல் அகழ்வாய்வில் தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்ட மட்பாண்டத்தில், விளைவிக்கப்பட்ட நெல்லும் கண்டெடுக்கப்பட்டதை முக்கியமானதாக கருதுகிறார். இந்த மட்பாண்டத்தின், நெல்லின் காலம் 2,450 ஆண்டுகள் முந்தியது என்று தற்போது வரையறுக்கப்பட்டுள்ளது.

நன்செய் சாகுபடியின் காலமே இதுவென்றால், புன்செய் பயிர்கள் தோன்றி வளர்ந்த பிறகே நன்செய் தோன்றியிருக்கும். எனவே, இந்த வேளாண்மையோடு சேர்த்து தமிழின் காலத்தை பின்னோக்கி நகர்த்தினால் தமிழின் காலம் மேலும் ஒரு ஆயிரம் ஆண்டுகள் பின்னோக்கிச் செல்லும் என்கிறார் ராசுக்குமார். அதாவது, குறைந்தது 3,500 ஆண்டுகள் என்பது இவர் கருத்து.

தமிழில் உலகை அறிய முயலும் தத்துவங்கள் இல்லை. அடிமைப்படுத்தல் இருந்த இடங்களில்தான் இந்த சமூக ஏற்பாட்டை விதியாக கட்டமைக்க தத்துவங்கள் தேவைப்பட்டன. ஆனால், தமிழ்ச் சமூகத்தில் இப்படிப்பட்ட அடிமைப்படுத்தல் இல்லாததால் தத்துவங்களும் தேவைப்படாமல் போயிருக்கலாம் என்கிறார் ராசுக்குமார்.

தமிழகத்தில் அடிமை முறை இருந்ததைப் பற்றிய குறிப்புகளை பலர் எடுத்துக்காட்டியுள்ளார்களே என்று கேட்டபோது, ஒருவருக்கு ஒருவர் தனிப்பட்ட முறையில் அடிமைகளாக ஏதோ ஒரு காரணத்தால் இருந்திருக்கலாம். ஆனால், மேற்கத்திய நாடுகளில் இருந்ததைப் போல அடிமை உற்பத்தி முறை இங்கே இருந்ததில்லை என்கிறார் அவர்.

அறிவைப் பெறுதல் பற்றியும், அறநெறிகளைப் பற்றியும் திருக்குறள் விரிவாகப் பேசுகிறதே இதெல்லாம் தத்துவத்தின் கூறு இல்லையா என்று கேட்டபோது, "வேட்டையாடி, காய் கனி திரட்டி வாழ்ந்த சமூகம், வேளாண் சமூகமாக நிலைபெறும்போது பழைய நெறிகளுக்கும், புதிய நெறிகளுக்கும் இடையில் முரண்பாடு தோன்றியிருக்கும். அந்தப் புதிய நெறிகளை கோட்பாடு ஆக்கியதே திருக்குறள் போன்ற அற நூல்களின் பணியாக இருந்தது" என்கிறார் ராசுக்குமார். இந்த இலக்கியங்களின் நோக்கம் இவ்வுலக வாழ்வை மேம்படுத்துவதே நோக்கமாக மட்டுமே இருந்தது என்பது தமிழின் தனித்துவமான மரபு என்கிறார் ராசுக்குமார்.

வள்ளுவர் குறிப்பிடுகிற வரைவின் மகளிர் என்ற தொடரை பலரும் பரத்தையர் என்று புரிந்துகொள்வது தவறானது. வேட்டையாடி, காய்கனி திரட்டி வாழ்ந்த சமூகத்தில் திருமணம் என்ற நிறுவனமயப்பட்ட ஏற்பாடு இல்லை. வேளாண்மை உருவான நிலையில் திருமணம் என்ற நிறுவன ஏற்பாடு உருவாகிறது. இந்நிலையில், புதிதாக உருவான திருமணம் என்ற நிறுவப்பட்ட வரைமுறைக்குள் வராமல், கூடி வாழும் பழைய முறையிலேயே இருந்த பெண்களைத்தான் வள்ளுவர் அப்படிக் குறிப்பிடுகிறார். அவர்கள் பரத்தையர் இல்லை என்று கூறும் ராசுக்குமார், சிலப்பதிகாரம் வரையில் தமிழில் நால்வருண முறையும் இல்லை என்கிறார்.

https://www.bbc.com/tamil/india-53771932

  • 3 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட முதல் மொழி தமிழ் மொழிதான். 2004ஆம் ஆண்டு ஜூன் 6 ஆம் தேதி இந்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டது. இந்த நாள் செம்மொழி தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த அறிவிப்பு தமிழ் அறிஞர்களுக்கும், ஆர்வலர்களுக்கும் கிடைத்த மிகப்பெரும் வெற்றியாக அப்போது கருதப்பட்டது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.